Pages

சனி, அக்டோபர் 14, 2023

உதவி செய்வது உடன் பிறந்தது


 

தொடர் 26

அடிப்படையில் முகமது அலி ஒரு மனிதாபிமானி. அவருடைய பன்முகத்  தன்மை வாய்ந்த வாழ்க்கையில் அவர் செய்த உதவிகள் குறிப்பிடத்தக்கது. துன்பப்படுபவர்களை கண்டு அவர் மனம் கலங்கினார். அவரது வார்த்தைகளில் குறிப்பிட்டால் "ஒரு பிரச்சனை இருப்பதாக யாராவது என்னிடம் கூறினால், என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்" என்று தன்னடக்கத்துடன் கூறியுள்ளார். ஏழைகளின் துன்பங்களுக்கு யார் காரணம் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்காவிட்டாலும் ஏழைகளைக் கண்டு மனம் இரங்கி நிறைய உதவிகளை செய்துள்ளார்.

முகமது அலியின் மகள் ஹானா பெல்லட்டர். அவர் ஒரு குத்துச்சண்டை வீரரை மணந்து கொண்டவர். தன் தந்தை முகமது அலியைப் பற்றி அவர் பதிவு செய்துள்ளார்.  "ஏழை எளிய மக்கள் மீதான அவரது அன்பு அசாதாரணமானது. வீடற்ற குடும்பங்கள் எங்கள் வீட்டு விருந்தினர் அறையில் தூங்குவதை நான் பள்ளியில் இருந்து வரும் பொழுதெல்லாம் காண்பேன். தெருவில் அவர்களைப் பார்த்தவுடன் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அள்ளிப்போட்டு வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார். அவர்களுக்கு ஆடைகளை வாங்கித் தருவார். ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தருவார். அவர்கள் பல நாட்கள் உணவு அருந்துவதற்கான கட்டணத்தையும் ஓட்டலில் செலுத்தி விடுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முகமது அலி 1996 மற்றும் 98 ஆண்டுகளில் கியூபா நாட்டிற்கு பயணம் செய்தார். இரண்டு முறையும் கியூப மக்களுக்கான மருத்துவ உதவி உபகரணங்களை வழங்குவதற்காக அவர் சென்றார். 1996ம் ஆண்டு, ஹவானா மருத்துவமனைக்கு 20,000 கண் கண்ணாடிகளை வழங்கினார். பழுது நீங்கி தெளிவான பார்வை பெற்று மகிழ்ந்த மக்களுடன் முகமது அலியும் கலந்துரையாடி மகிழ்ந்தார். ஹவானா  மருத்துவமனைக்கு 1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகளை கொடுத்தார். அவர் மேற்கொண்ட 2 பயணங் களின்போதும் சுமார் 5 லட்சம்டாலர் மதிப்புள்ள மருத்துவ உதவிகளை கியூபாவுக்கு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கியூப அரசின் உயர்நிலை அதிகாரி பாப் ஸ்வார்ட்ஸ் கூறுகையில், ‘‘முகமது அலி வழங்கிய மருத்துவ உதவி என்பது கியூபா மீதான அமெரிக்க பொருளாதார தடையை எதிர்ப்பதற்கும், அதன் பொருளாதார நெருக்கடியை தளர்த்துவதற்கும் ஒரு வழியாகும்" என்று கூறினார். இரண்டாவது பயணத்தின் போது முகமது அலி கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசினார். அமெரிக்கா கியூபாவை தனது ஜென்ம விரோதியாக கருதி பொருளாதாரத் தடைகளை விதித்து, கியூபாவுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று உலக நாடுகளை அச்சுறுத்தும் நிலைமை இருந்த போதும் முகமது அலி கியூபாவுக்கு மருத்துவ உதவிகள் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1963டிசம்பர்6ம் தேதி பென்சில்வேனியா ரோபெனா நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன்வாயு கசிவுஏற்பட்டு 84 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 37 தொழிலாளர்கள் இறந்து விட்டனர். முகமது அலி அப்போது சார்லி பாவெல் என்பவருடன் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கிடைத்த தொகையில் ஒரு பகுதியை இறந்த 37 தொழிலாளர் களின் குடும்பங்களுக்கும் கொடுத்தார்.   

முகமது அலி ஆரம்ப காலத்தில் இளைஞர்களுக்கான கல்வியில் கவனம் செலுத்தினார். கருப்பின கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசியிருக்கிறார். கருப்பின மாணவர்களுக்காக உதவி செய்வதற்கு என்று ஒருங்கிணைந்த நீக்ரோ கல்லூரி நிதி என்ற அமைப்பு உள்ளது. அந்த அமைப்பிற்கு 1967ஆம் ஆண்டு 10,000 டாலர் நன்கொடையாக கொடுத்தார். அதுவரை அளிக்கப்பட்ட தனிநபர் நன்கொடையில் இதுவே மிக அதிகமாக இருந்தது. இதுபோன்று யுனிசெப்க்கு பல நிதி உதவிகளை செய்திருக்கிறார். இந்த நன்கொடைகள் பற்றி விளம்பரம் செய்யக்கூடாது என்று அவர் நிபந்தனையும் விதித்துள்ளார்.

1975 மார்ச் 24 மேற்கு ஆப்பிரிக்காவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சஹெல் பகுதிக்கு ஒரு குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த மொத்த தொகையும் வழங்கினார். 1975 டிசம்பர் 2 நியூயார்க் நகரில் ஹில் சைட் ஏஜ்டு சென்டர் என்ற முதியோர் இல்லம் பணம் இல்லாமல் இருந்த பொழுது அதைக் கேள்விப்பட்ட முகமது அலி உடனடியாக நேராக சென்று ஒரு லட்சம் டாலர் நன்கொடை கொடுத்து அங்கிருந்து முதியவர்களுக்கு நம்பிக்கையூட்டி பேசினார்.

இதை அறிந்த பத்திரிகையாளர்கள் அங்கு கூடி விட்டார்கள். முகமது அலியை மொய்த்துக் கொண்டார்கள். அவர்களிடம் ஒரு விஷயத்தை மட்டும் கூறிவிட்டு முகமது அலி விடைபெற்றுக் கொண்டார். ‘‘இது போன்ற விஷயங்களை நீங்கள் வெளியிட வேண்டாம். இவை விளம்பரத்திற்காக அல்ல. மற்றவர்களுக்கு சேவை செய்வது என்பது இந்த பூமியில் நான் வாழ்வதற்காக கொடுக்கப்படும் வாடகை என்று வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார். இயலாதவர்களுக்கு உதவி செய்வதை அவர் தன் கடமையாக கருதினார்.

1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் வடகிழக்கு இங்கிலாந்துக்குச் சென்று சிறுவர்களுக்கான குத்துச்சண்டை பள்ளிகளுக்கு  நிதி  திரட்டினார். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பள்ளிக்குச் சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயணிப்பதற்கான பேருந்துகளை வழங்கினார். கென்யாவிற்கு சென்ற பொழுது அங்குள்ள ஏழை குழந்தைகள், அனாதை குழந்தைகள், வீடற்ற சிறுவர்களுக்கான பள்ளிகளை நடத்துவதற்கு ஒரு கண்காட்சி குத்துச்சண்டை போட்டி நடத்தி ஏராளமான நிதி உதவிகளை செய்தார். 1988 ஆகஸ்ட்  மாதம் சூடான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம்,போர் ஆகியவற்றால் இடம்பெயர்ந்த அகதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முகாம்களுக்குச் சென்று நேரடியாக உதவிகளை செய்தார்; நிதி வழங்கினார். அன்றைய சூடான் பிரதமர் சாதிக் அல் மஹதி, முகமது அலியை நாட்டு மக்கள் சார்பாக மனதார வாழ்த்தினார்.

1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஆப்பிரிக்காவின் லைப்ரிய நாட்டில் அகதிகளுக்கு மருந்து, உடைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், ஊனமுற்றவர்களுக்கான கருவிகளை வழங்கினார். சகோதரி பெல்ட்ரான் மிஷனரி முகாமில் இருந்த 105 லைப்ரியா குழந்தைகளையும், அங்கு போதுமான நிதி உதவி இல்லாமல் தங்கி இருந்த 400 பேர்களையும் முகமது அலி பராமரித்துக் கொள்வதற்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். இந்த இடத்தில்தான் அவர், ‘‘ஒரு பிரச்சனை இருப்பதாக என்னிடம் கூறப்பட்டால் என்னால் முடிந்த உதவியை நான் செய்கிறேன்’’ என்ற வாசகத்தை கூறினார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...