Pages

புதன், ஆகஸ்ட் 23, 2023

ஆளுமைகளின் அடிப்படை வேறுபாடுகள்

 

தொடர்: 19

அ.பாக்கியம்



மால்கம் எக்ஸ் 1946 முதல் 52 வரை சிறையில் இருந்தார். 1952 ம் ஆண்டு அவர் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் எலிஜா முகமதுவின் சந்திப்பு அவரை இஸ்லாம் தேசத்தில் இணைய வைத்தது. அதன் பிறகு தன் இயற்பெயரான மால்கம் லிட்டில் என்ற அடிமை வம்சாவளி பெயரை மால்கம் எக்ஸ் என்று மாற்றிக் கொண்டார். அவரது அறியப்படாத ஆப்பிரிக்க மூதாதையர் குடும்பப் பெயரை அடையாளப் படுத்துவதற்காக எக்ஸ் என்ற குறியீட்டை இணைத்துக் கொண்டார். மால்கம் எக்ஸ் இஸ்லாமிய தேசத்தில் இணைந்த பிறகு அதன் செய்தி தொடர்பாளராக மாறி இஸ்லாம் தேசத்தின் முகமாகவே மாறிவிட்டார். அவருடைய களப்பணியும், எழுத்து வன்மையும், சொல்லாடலும் வெகுவிரைவில் இஸ்லாம் தேசத்தையும் அவரையும் புகழடையச் செய்தது. இஸ்லாம் தேசத்தின் பத்திரிகையை நிறுவினார். வானொலி தொலைக்காட்சிகளில் தோன்றி பிரச்சாரம் செய்தார். அகிம்சை, புரட்சி என்று எதுவும் இல்லை. வெள்ளை இன வெறியை எந்த வகையிலாவது அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மால்கம் எக்ஸின் வளர்ச்சி எலிஜாமுகமதுக்கு அச்சத்தை உருவாக்கியது. காவல் நிலையத்தில் கருப்பின மக்களை கொடுமைப் படுத்திய பொழுது மால்கம் எக்ஸ், இஸ்லாம் தேச உறுப்பினர்களை திரட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். இதை எலிஜாமுகமது விரும்பவில்லை. மேலும், மற்ற சிவில் உரிமைப் போராளிகளுடன் இணைந்து கருப்பின மக்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் என்று மால்கம் எக்ஸ் முடிவு எடுத்தார். ஆனால், எலிஜா முகமது அவரை தடுத்தார்.  எலிஜா முகமது உருவாக்கி, அமல்படுத்திய தார்மீக நெறிமுறைகளை அவரே மீறியதைக் கண்டு மால்கம் எக்ஸ் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் எலிஜா முகமதுக்கு இருப்பதை மால்கம் எக்ஸால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எலிஜா முகமது மீது இஸ்லாம் தேசத்தின் 8 பெண்கள் புகார் அளித்ததை தொடர்ந்து மால்கம் எக்ஸ், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் மால்கம் எக்ஸ் பற்றிய செய்திகள் இஸ்லாமிய தேசத்தின் பத்திரிகைகளில் வராமல் தடுக்கப்பட்டது.

மால்கம் எக்ஸின் களப்பணிகளும் மக்கள் செல்வாக்கும் அவரது திறமைகளும் தன் தலைமைக்கு ஆபத்தாக முடியும் என்று எலிஜா முகமது நினைத்தார். அதனால் ஜான் எஃப் கென்னடியின் படுகொலையின் போது மால்கம் எக்ஸ் கூறிய கருத்துக்களுக்காக இஸ்லாம் தேசத்தில் இருந்து அவரை மூன்று மாதங்கள் இடைநீக்கம் செய்தனர். பின்னர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். பின்னர் 1964 ம் ஆண்டு மெக்காவிற்கு புனித யாத்திரை சென்ற மால்கம் எக்ஸ் அங்கு பாரம்பரிய இஸ்லாத்திற்கு மாறினார்.  ஆப்ரோ அமெரிக்க அமைப்பை உருவாக்கி கருப்பின மக்களுக்கான மதசார்பற்ற அமைப்பாக அது செயல்படும் என்று அறிவித்தார். சிவில் உரிமை இயக்கத்துடன் இணைந்து கருப்பின மக்களுக்கான போராட்டங்களில் அவர் ஈடுபட்டு வந்தார். 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி ஒரு கூட்டத்தில் மால்கம் எக்ஸ் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இஸ்லாம் தேசத்தின் உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்..

மார்டின் லூதர் கிங் ஜூனியர், மால்கம் எக்ஸ் இருவரும் அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தில் இரு முக்கிய தலைவர்களாக இருந்தனர். இருவரும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான இன பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வந்து இன சுதந்திரத்தை அடைவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்கள். இந்த இருவருக்கும் தங்கள் சித்தாந்தம் மற்றும் தந்திரோபாயங்களில் பெருமளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. சிவில் உரிமை இயக்கத்தில் முன்னணியில் இருந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர், கருப்பர் வெள்ளையர்களை ஒன்றிணைத்தல், அகிம்சாவழி போராட்டங்களை முன்னெடுத்தார். மால்கம் எக்ஸ் கருப்பின மக்கள்  தாக்கப்படும் பொழுது அதே வடிவில் எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று வாதிட்டார். ஒட்டு மொத்த வெள்ளையர்களுக்கு எதிராக மால்கம் எக்ஸின் செயல்பாடு இல்லை. கருப்பின மக்கள் ஒடுக்கப்படுகிறபோது, தாக்கப்படுகிறபோது அவர்கள் அகிம்சையை கடைப்பிடிப்பது பொருத்தமற்றது; அர்த்தமற்றது என்று அவர் கருதினார். கருப்பின தேசியவாதம், ஒன்றிணைதல் ஆகிய இரு நிலைப்பாடுகளையும் ஒருங்கிணைத்து வரலாற்றில் முன்னெப்பொழுதும் கண்டிராத கருப்பின மக்களின் ஒரு மாபெரும் விரிவான கூட்டமைப்பை உருவாக்க மால்கம் எக்ஸ் முயன்றார்.

மால்கம் எக்ஸை இஸ்லாம் தேசத்திலிருந்து வெளியேற்றிய பொழுது முகமது அலி அவருடன் இருக்கவில்லை. அவர் எலிஜா முகமதுக்கு ஆதரவாக நின்று மால்கம் எக்ஸை புறக்கணித்தார். இருவரும் ஒன்றாக சேர்ந்து பூர்வீகமான கானாவிற்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டதை தவிர்த்து முகமது அலி மட்டும் தனியாக சென்றார். ஆனால் பிற்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுத்ததற்காக முகமது அலி மிகவும் மன வேதனை அடைந்தார். மால்கம் எக்ஸின் மரணம் முகமது அலியை உலுக்கி விட்டது. காலப்போக்கில் மால்கம் எக்ஸின் நியாயங்களை அலி, உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்தார்.

எலிஜா முகமதுவின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் வாலஸ் டி முகமது தலைமைப் பொறுப்பை ஏற்றார். இஸ்லாம் தேசத்தின் அடிப்படை கோட்பாடுகளை மாற்றி சன்னி பிரிவுடன் இஸ்லாம் தேசம் நெருக்கமானது. மதத்தின் இனமற்ற பார்வை வெளிப்பட்டது. வெள்ளையர்களைப் பற்றி குரோதமாக பேசுவது நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முகமது அலி, எலிஜா முகமதுவின் கோட்பாட்டை மாற்றாமல் இருந்த பிரிவுக்கு செல்லாமல் அவரது மகன் வாலஸ் தலைமையேற்ற சன்னி பிரிவுடன் இணைந்தார். "வாலஸ் தனது படிப்பிலிருந்து தனது தந்தை உண்மையான இஸ்லாத்தை போதிக்கவில்லை என்று அறிந்து கொண்டார். வாலஸ் குர்ஆனின் உண்மையான அர்த்தத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். எனக்கு இது சரியாக தோன்றியது. அதனால் நான் வாலசை பின் தொடர்ந்தேன். நான் எலிஜா முகமதுவின் கோட்பாட்டை நம்புவதை மாற்றிக் கொண்டேன். இப்போது நான் நம்புவது உண்மையான இஸ்லாம்" என்று முகமது அலி கூறினார். முகமதுஅலி 1972ல் மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டார். மால்கம் எக்ஸ் உத்வேகம் அடைந்தது போலவே இவரும் மெக்கா பயணத்தின் பொழுது உத்வேகம் அடைந்தார். பல வண்ண மக்களை ஒன்றாகக் கண்ட பொழுது அவரது இன சமத்துவ கருத்துக்கள் வலுப்பட்டது.

முகமது அலியின் குத்துச்சண்டை வாழ்க்கையில் மதமும், பெயர் மாற்றமும் முக்கிய பங்காற்றியது. அவரது வியட்நாம் போர் எதிர்ப்பு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இருந்ததோ அதேபோன்று வேறொரு தளத்தில் மத நம்பிக்கை முக்கியத்துவம் உடையதாக இருந்தது. எனவேதான் அன்றைய காலகட்டத்தில் முகமது அலியை சுற்றி இருந்த மத நம்பிக்கை, சிவில் உரிமை இயக்கம், இஸ்லாம் தேசம், மால்கம் எக்ஸ் போன்றவர்களின் ஒற்றுமை வேற்றுமைகளை புரிந்து கொண்டு முகமது அலியை மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதற்காகத்தான் மேற்கண்ட பின்னணிகள் இங்கு மிக மிக சுருக்கமாக  சொல்லப்பட்டுள்ளது.

அ.பாக்கியம்

 


சனி, ஆகஸ்ட் 19, 2023

இன மேலாதிக்கம் -இன சமத்துவம்

 

தொடர்: 18

அ.பாக்கியம்

முகமது அலி நிறவெறியை அவருடைய ஆரம்ப காலத்தில் தன் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து எதிர்த்தார். 1960 ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தான் பெற்ற தங்கப் பதக்கத்தின் மூலம் கருப்பர்களுக்கான மரியாதை உயரும். நிறவெறி ரீதியிலான பார்வைகள் மேம்படும் என்று கருதினார். ஆனால் நடைமுறையோ, அவ்வாறு நடைபெற வாய்ப்பே இல்லை என்று நிரூபித்தது. நிறவெறிக்கு எதிர்வினையாற்றுவதற்காக அவர், பெயர் மாற்றத்துடன் இஸ்லாம் தேசம் என்ற அமைப்பில் மால்கம் எக்ஸ் வழிகாட்டலுடன் இணைந்தார்.

அதன் பிறகு அவரது நிறவெறி அணுகுமுறையில் இஸ்லாம் தேசத்தின் கொள்கைகள் செல்வாக்கு செலுத்தியது. காலப்போக்கில் இதிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. முகமது அலியின் இனக் கொள்கை சம்பந்தமாக சரியான மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால் அக்காலத்தில் இஸ்லாம் தேசம் பற்றியும், அதன் தலைவர் எலிஜா முகமது, மால்கம் எக்ஸ் மற்றும் சிவில் உரிமை போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியவர்களுக்கு இடையிலான நுண்ணிய வேறுபாடுகளை மிகச் சுருக்கமாக கோடிட்டு காட்டுவது அவசியம். அப்போதுதான் முகமது அலியின் எதிர்வினைகளின் நியாயத்தை அறிந்து கொள்ள முடியும்.

முகமது அலியை இஸ்லாம் தேசம் என்ற அமைப்பில் இணைத்தவர் மால்கம் எக்ஸ். இருவருமே மிகவும் நட்போடு பழகியது மட்டுமல்ல குடும்ப ரீதியிலான நட்பையும் உறவுகளையும் மேம்படுத்திக் கொண்டனர். இருவருமே எலிஜா முகமதுவை வழிகாட்டியாக கொண்டனர். தன்னை ஒரு போராளியாக செதுக்கியதில் எலிஜா முகமது முக்கிய பங்காற்றினார் என்பதை அழுத்தம் திருத்தமாக தனது சுயசரிதையில் மால்கம் எக்ஸ் பதிவு செய்துள்ளார். முகமது அலியும் இஸ்லாம் தேச அமைப்பின் தலைவர் எலிஜா முகமதுவை தனது வழிகாட்டியாக, ஆலோசகராக, தந்தைக்கு சமமானவராக ஏற்றுக் கொண்டார்.

இஸ்லாம் தேசம் என்பது 1930 ஆம் ஆண்டு வாலஸ் டி ஃபார்ட்  என்ற சவுதி அரேபியாவை சேர்ந்தவரால் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. அவர் ஒரு மசூதி,  இஸ்லாமிய பல்கலைக்கழகத்தையும் இஸ்லாமியர்களுக்கான ஒரு படையையும் நிறுவினார். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மூன்று நூற்றாண்டு களாக அடிமைகளாக இருந்தனர் என்றார். இவர்களை விடுதலை செய்து ஏற்கனவே இருந்தது போல் உயர்ந்த கலாச்சாரம் மற்றும் நாகரீகத்துடன் வைப்பது தனது நோக்கம் என்று வாலஸ் டி ஃபார்ட்   அறிவித்தார். அவரது அமைப்பில் இணைந்தவர்கள் இஸ்லாத்தில் நம்பிக்கை வைத்து, அல்லாவை தங்கள் கடவுளாக வணங்கி, குர்ஆன் படித்து முகமதுவை தங்களது தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டனர். கருப்புதேசியவாத ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இனப்போருக்கு தயாராக வேண்டும் என்றும், கிறிஸ்துவம் அடிமை உரிமையாளர்களுக்கான மதம் என்றும் வாலஸ் டி ஃபார்ட்   நம்பினார்.  எனவே இஸ்லாம் தேசத்தில் இணைந்தவர்களை பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தினார். 1934 இல் வாலஸ் டி ஃபார்ட்  திடீரென காணாமல் போனார். காடுகளில் அவர் மாயமானதாக கூறப்பட்டது.

இதன் பிறகு இந்த அமைப்பிற்கு எலிஜா முகமது தலைமை ஏற்றார். இவர் தீவிரப் போக்கை கடைபிடித்தார். அமெரிக்க கருப்பர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று பிரசங்கம் செய்தார். வெள்ளையர்களுக்கு எதிரான இறையியலை ஆதரித்தார். இஸ்லாம் தேசத்து உறுப்பினர்கள் கடுமையான தார்மீக நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கருப்பர்-வெள்ளையர் ஒருங்கிணைப்பு என்பது பாசாங்குத்தனமானது. சுதந்திரம், நீதி, சமத்துவம் ஆகியவற்றின் 400 ஆண்டுகால வெளிப்படையான எதிரிகள் வெள்ளையர்கள். அவர்களை திடீரென்று நண்பர்கள் என்று சொன்னால் அதை எவ்வாறு நம்புவது? கருப்பின மக்களை ஏமாற்றவே இதுபோல் கூறப்படுகிறது என்று எலிஜா முகமது எழுதினார். அமெரிக்கா எங்களுக்கு தேவையான பிரதேசத்தை வழங்க ஒப்புக் கொள்ளும் வரை, அமெரிக்கா நடத்துகின்ற மனித உயிர்களின் பறிக்கக்கூடிய போர்களில் இஸ்லாம் தேசத்தவர்கள் பங்கேற்க கூடாது என்று கட்டளையிட்டார்.

 ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வெள்ளையர்களை விட உயர்வானவர்கள். வெள்ளையர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினார்கள். இதற்கு முன்பே கருப்பினத்தவர்கள் தோன்றி விட்டார்கள் என்று எலிஜா முகமது பிரச்சாரம் செய்தார்.

இஸ்லாம் தேசத்தின் தலைவர்கள் கருப்பின மேலாதிக்கத்தை போதித்தனர். அதற்கேற்ற முறையில் நடவடிக்கைகளில் இறங்கினர். முகமது அலி இந்த அமைப்பில் சேர்ந்தவுடன் அதன் கூட்டங்களில் இஸ்லாம் தேசத்தின் குறிப்பாக எலிஜா முகமதுவின் கருத்துக்களை பிரதிபலித்தார். ஆரம்பத்தில் நிறவெறியை மட்டும் பேசிய முகமது அலி அமைப்பில் சேர்ந்தவுடன் கருப்பினத்தவர்களின் தோற்றம் அவர்களின் மேன்மையைப் பற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் அவரின் அணுகு முறையில் இன சமத்துவத்துக்கான தன்மைகள் நிறைந்து இருந்தது. இஸ்லாம் தேசத்தின் இந்த இனவாத மேலாதிக்க சிந்தனை விஞ்ஞானத்திற்கு, வரலாற்றுக்கு, மானுடவியலுக்கு புறம்பான மூடநம்பிக்கையாக இருந்தது. இருப்பினும் நிறவெறி தாக்குதல்களை எதிர்கொள்கிற பொழுது அதற்கான எதிர்வினை யாற்றுகிற பொழுதும் கடந்த காலத்தை நிகழ்கால நிலையிலிருந்து அணுகும் தன்மை மேலோங்கி விடுகிறது.

 

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2023

வனத்தின் இடி முழக்கம்

 

தொடர்:17

அ.பாக்கியம்

முகமது அலியின் அப்பீல் மனுமீது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப்பின்  1971 ஜூன் மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த மனுவை 9 நீதிபதிகள் குழு விசாரித்தது. அதில் ஒருவர் ஏற்கனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்தியவர் என்ற காரணத்தினால் நீதிபதிகள் குழுவிலிருந்து விலகிக் கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் 8 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "போருக்கு தார்மீக மற்றும் நெறிமுறை ஆட்சேப னைகள் மத ஆட்சேபனையைப் போலவே செல்லுபடியாகும்" என்று கூறி முகமது அலியின் தண்டனையை ரத்து செய்தனர். மேலும், முகமது அலி கீழ் நீதி மன்றத்தின் தண்டனையை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். யுத்தம் தன் மனசாட்சிக்கும், மதத்துக்கும் எதிரானது என்று கூறி, யுத்தத்தில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு  வேண்டும் என்று கேட்டதை மாவட்ட நீதிமன்றம்  தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், அதற்கான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று 8 நீதிபதிகளும் தங்களது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருந்தனர்.

மூன்றரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தடை நீங்கியதும், மீண்டும் வளையத்துக்கு வந்த அலி 1981 ம் ஆண்டு ஓய்வு பெறும் காலம் வரை 31 போட்டிகளில் பங்கேற்றார். அவற்றில் 5 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்தார். தடை செய்யப்படுவதற்கு முன்னால் அவர் பங்கேற்ற 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தார். குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த  மூன்றாண்டு காலத்தில் அவர் அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக குத்துச்சண்டையில் மறு பிரவேசம் செய்த பொழுது இயல்பாகவே பரபரப்பு பற்றிக் கொண்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ம்தேதி அட்லாண்டா நகர தடகள ஆணையத்தால் முகமது அலிக்கு போட்டியில் பங்கேற்பதற்கான உரிமம் வழங்கப்பட்டது. உள்ளூரில் செல்வாக்கு மிகுந்த பலர், ‘‘ஹவுஸ் ஆப் ஸ்போர்ட்ஸ்’’ என்ற அமைப்பை உருவாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார்கள். ஜார்ஜியா பகுதியில் கருப்பின மக்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கை இந்த போட்டி ஏற்பாட்டுக்கான நடவடிக்கைகள் காட்டுகின்றன. அதன்படி 1970ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி நடந்த போட்டியில் ஜெர்ரி குவாரி என்பவரை வீழ்த்தி முகமது அலி வெற்றி பெற்றார். அதே ஆண்டு டிசம்பர் 7ம் தேதி நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்கார் போனோ வேணா என்பவருடன் முகமது அலி களம் கண்டு வாகை சூடினார்.

இதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் 3 போட்டிகளை முக்கியமான போட்டிகள் என்று வரலாறு வடித்து வைத்திருக்கிறது.  நியுயார்க் நகரில்  ஜோ பிரேசியருடன் நடந்த போட்டி. 1974 ஜயர் நாட்டில் ஜார்ஜ் போர்மனுடன் நடந்த போட்டி, 1975ல் பிலிப்பைன்ஸ் நடைபெற்ற மணிலா திரில்லர் என மூன்றையும் காவிய போட்டிகள் என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1971ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி நியூயார்க் நகரத்தில் ஜோ பிரேசியர் என்பருடன் முகமது அலி மோதிய போட்டி நூற்றாண்டின் சண்டை’ என்று அழைக்கப்படுகிறது. அது தோல்வியே கண்டிராத இரண்டு குத்துச் சண்டை வீரர்கள் பங்கேற்ற போட்டியாகும்.

அமெரிக்காவில் குத்துச்சண்டைப் போட்டியைக்காண ஆர்வம் இல்லாதவர்களையும் இந்தப் போட்டி கவர்ந்திழுத்தது. காரணம் முகமதுஅலி அமெரிக்காவின் யுத்த அழைப்பை எதிர்த்தவர். ஜோ பிரேசியரோ அதற்கு மாறாக அமெரிக்காவின் யுத்த ஈடுபாட்டை ஆதரித்து செயல்பட்டவர். இதன் காரணமாக போட்டியில் மிகுந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முகமது அலி 15 வது சுற்றில் தோல்வியைத் தழுவினார். 36 நாடுகளில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் போட்டியை அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மக்கள் பார்த்தார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு அடுத்தடுத்து நடைபெற்ற 12 போட்டிகளில் முகமது அலி 11 போட்டிகளில் வெற்றி பெற்று மீண்டும் 1974 ம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி ஜோ பிரேசியருடன் இரண்டாவது முறையாக முகமது அலி மோதினார்.  ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக சண்டையிட்டு முகமது அலி வெற்றி பெற்றார். ‘‘மணிலா திரில்லர்’’ என்ற பெயரில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 1975 ஆம் அக்டோபர் 1 ஆம் தேதி அன்று ஜோ பிரேசியருக்கும் , முகமது அலிக்குமான முன்றாவது போட்டி நடைபெற்றது. ஏற்கனவே ஆளுக்கு ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருப்பதால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.

களத்தில் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். 14வது சுற்றில் முகமது அலியின் கை ஓங்கியது. ஜோ பிரேசியரை வீழ்த்தி முகமது அலி வாகை சூடினார்.  குத்துச்சண்டை வரலாற்றில் மிகச்சிறந்த அதே நேரத்தில் அதிகம் சேதாரத்தை உருவாக்கிய சண்டையாக இது இருந்தது என்று இந்தப் போட்டியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். பல லட்சம் பேர் பார்த்த இந்தப் போட்டிக்குப் பிறகு மணிலாவில் முகமது அலி பெரும் புகழ் பெற்றார்.

பிலிப்பைன்சில் அப்போதைய சர்வாதிகாரி மார்கோஸ் இந்தப் போட்டியை நடத்த பெரிதும் ஆர்வமாக இருந்தார். அதற்கு காரணம் இருந்தது. பொதுவாக ஆளுவோர், தங்களது ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியை திசை திருப்புவதற்கு பிரபலங்களை இது போன்று பயன்படுத்திக் கொள்வது ஒரு வழிமுறையாகவே வரலாற்றில் கடைபிடிக் கப்பட்டு வருகிறது. அப்போது, தனது ஆட்சி மீது இருந்த அதிருப்தியை திருப்புவதற்கான ஒரு வழியாகத்தான் மார்கோஸ் இந்தப் போட்டியைக் கையாண்டார். அதற்காக பெரு முயற்சி செய்து இந்தப் போட்டியை ‘‘மணிலா திரில்லர்’’ என்ற பெயர் சூட்டி பெரும் விளம்பரம் செய்து நடத்தினார்.  

இந்தப் போட்டிக்கு முன்பாக முகமது அலிக்கும் ஜார்ஜ் போர்மன் என்பவருக்கும் இடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இருவரும் பங்கேற்ற போட்டிக்கு ‘‘வனத்தின் இடி முழக்கம்’’ (the rumble in the jungle) என்று பெயர் சூட்டப்பட்டது. 1974 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ஆப்பிரிக்காவின் ஜயர் (இப்போது காங்கோ) நாட்டில் கின்ஷாசா தலைநகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை மக்களிடம் கெட்ட பெயர் எடுத்த அந்த நாட்டின் ஜனாதிபதி மொபுடு செசே சேகோ நடத்தினார். இவர் துரோகத்தின் மறு வடிவம். கூட இருந்தே குழி பறித்து, கொலையும் செய்தவர்.

பேட்டரிஸ் லுமும்பா - காங்கோ விடுதலைப் போராளி. பெல்ஜிய படைகளுக்கு எதிராக தீவிரமாக போராடியவர்.  தேர்தல் மூலமாக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறியவர். கூடவே இருந்து சதி செய்து லுமும்பாவை படுகொலை செய்து,  ஆட்சியைக் கைப்பற்றியவர் மொபுடு செசே சேகோ. இவருக்கு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரட்வெய்மர் ஆலோசகராக இருந்தார். மொபுடு தன் மீதான மக்களின் அதிருப்தியை திசை திருப்புவதற்காகவே ‘‘வனத்தின் இடி முழக்கம்’’ என்ற போட்டியை செலவு செய்து நடத்தினார்.

போட்டிக்கு முன்னதாக அந்த நாட்டில் பயணம் செய்த இடங்களில் எல்லாம் முகமது அலிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தான் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன் என்று சொல்லிக் கொள்வதில் அவர் பெருமை அடைந்தார்.

போட்டிக்கு முன்னதாக எதிர் போட்டியாளரை உளரீதியில் பலவீனமடைய செய்வதும் தன் நம்பிக்கையை திடப்படுத்திக் கொள்ளும் செயலை முகமது அலி செய்தார்.  எதிர் போட்டியாளர் ஜார்ஜ் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்று சகட்டுமேனிக்கு அவரை சாடினார்.

‘‘ஜார்ஜ் நினைக்கிறான் வெல்வேன் என்று

எனக்குத் தெரியும் அவனால் முடியாது

நான் முதலைகளைப் பிடித்து

சிலுவையில் அறையக்கூடியவன்

திமிங்கலத்துடன் மோதி வீழ்த்துவேன்

கடந்த வாரம் நான் ஒரு பாறையை

படுகொலை செய்தேன்

 ஒரு கல்லை காயப்படுத்தினேன்

செங்கல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்

நான் என்றால் நிரந்தரமாக காயப்படுத்துபவன்

என்று அறைகூவல் விட்டு ஜார்ஜ் போர்மனை பயமுறுத்தினார்.

போட்டியை காண்பதற்கு 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடினார்கள். முதல் சுற்றில் இருந்தே போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. எட்டாவது சுற்றில் முகமது அலி, ஜார்ஜ் போர்மனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். இந்தப் போட்டியில் தான் ‘‘ரோப் டோப்’’ ( Rope-a-dope) என்ற புதிய உத்தியை முகமது அலி அறிமுகப்படுத்தினார். எதிரி தன்னை தாக்கும்போது, அதிலிருந்து தப்பித்துக்கொண்டே எதிரியை களைப்படைய செய்வது. அதன்பிறகு அதிரடி தாக்குதல் என்ற உத்தியை கையாண்டார். அந்த உத்திக்குத்தான் ‘‘ரோப்--டோப்’’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் போட்டியில் வழக்கம் போலவே முகமது அலியின் வேகம் மற்றும் புதிய உத்திக்காக அவருக்கு பேரும் புகழும் கிடைத்தது.

குத்துச்சண்டையில் முகமது அலியின் பாணி வழக்கத்திற்கு மாறாக இருந்தது. ‘‘ஒரு பட்டாம்பூச்சியை போல காற்றில் மிதந்து தேனீயை போல் கொட்டு’’  என்ற அவரது வார்த்தைகள் அடிக்கடி உருவகப்படுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் தனது கை வேகத்தாலும் அபாரமான அனிச்சை செயல்களாலும், தொடர்ந்து நடன பாணியிலான அசைவுகளை ஏற்படுத்திக் கொண்டும் எதிரிகளை தாக்கும் முறைகளை கையாண்டார்.

முகமது அலியின் மிகப்பெரிய தந்திரங்களில் ஒன்று குத்துக்களில் இருந்து நேராக எதிரியை பின்னோக்கி இழுத்து சோர்வடையச் செய்வது. அவர், ஒரு வகையான சென்டர் ரிங் ஜிங் நடனம் ஆடுவதன் மூலம் தனது இயக்கத்தை வெளிப்படுத்துவார். இதை "அலி ஷிப்ட்" என்று அழைத்தார்கள். இதுகுறித்து பிரபல குத்துச்சண்டை வீரரான பிலாயிட் பேட்டர்சன் கூறும் பொழுது, ‘‘முகமது அலியின் நகரும் இலக்கை தாக்குவது மிகவும் கடினம்’’ என்றார். தனக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கிய பிறகு 1974 ஆம் ஆண்டுகளில் அவர், குத்துச்சண்டை களத்தில், வேகத்தை குறைத்து ரோப்--டோப் நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். முகமது அலியின் குத்துக்கள் தோராயமாக 1000 பவுண்டு சக்தி கொண்டது..

1981ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தனது 39 ஆவது வயதில் குத்துச்சண்டை போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதை முகமது அலி அறிவித்தார். அதன் பிறகு நூற்றுக்கணக்கான காட்சிப் போட்டிகளில் அவர் கலந்து கொண்டார். தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் 37 போட்டிகளில் நாக்அவுட் முறையில் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 1984ம் ஆண்டு அவர் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்டார். ஆனாலும் முகமது அலியின் குத்துச்சண்டை வெற்றிகளும், மதமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செயல்களும், கருப்பின மக்களின் விடுதலைக்காக அவரின் போராட்டமும்,, அமெரிக்காவின் யுத்த வெறிக்கு எதிராக அவர் களமாடியதும் அமெரிக்க மக்களிடமும் உலக மக்களிடமும் ஆழப் பதிந்து விட்டது. எத்தனை முயற்சி செய்தாலும் அதை அழிக்க முடியாது என்று ஆளும் வர்க்கம் உணர்ந்து கொண்டது. வரலாற்றில் புகழ்பெற்ற கலகக்காரனை இணைத்து செயல்பட வேண்டிய தேவை அமெரிக்க அரசியலுக்கு தேவைப்பட்டது. முகமது அலி அமெரிக்க அரசுடன் சிலவற்றில் இணைந்தும் சிலவற்றில் வேறுபட்டும் தன் பயணத்தை தொடர்ந்தார். ஆனாலும், இனவெறிக்கு எதிரான கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார்.

அ.பாக்கியம்

 

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...