Pages

சனி, ஜூன் 17, 2023

இந்தியா ஜனநாயகத்தின் தாயகமா?

.பாக்கியம்

எழுத்தாளர்


இந்தியா ஜனநாயகத்தின் தாயகம் என்று பிரதமர் மோடி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முழங்கி வருகிறார். இந்திய ஜனநாயகம் 2000 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது என்கிறார்மேற்கண்ட இரு விஷயங்களிலும் இவர்கள் (சங்கிகள்) பெருமை கொள்வதற்கு எந்த வரலாற்று உண்மையையும் இல்லை. 2000 ஆண்டுகளாக உலகத்தில் அனைத்து நாடுகளிலும் என்ன அரசமைப்பு முறைகள் இருந்ததோ அதுதான் இந்தியாவிலும் சில  மாற்றங்களோடு இருந்தது. மன்னர்கள் யாரும் ஜனநாயகவாதிகள் இல்லை. இந்தியாவை கைப்பற்றிய பிரிட்டிஷாரின் ஆட்சி காலம் அடக்குமுறைகளின்காலம்.

1947 சுதந்திரத்திற்கு பிறகு 2014 வரை அண்டை நாடுகள் போல் ராணுவபிடியின் கைக்கு அதிகாரம் செல்லாமல் பாதுகாக்கப் பட்டதற்கு, மக்களின் சுதந்திரப் போராட்ட அனுபவமும், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசும், இடதுசாரிகளும் முக்கிய காரணமாகும். முதல் அம்சம் ஜவஹர்லால் நேரு ராணுவத்தை குடிமைச் சமூகத்திலிருந்து பிரித்தெடுத்தார். ராணுவ தளபதியை அமைச்சரவையிலிருந்து வெளியே நிறுத்தி, ராணுவ அமைச்சகத்தை உருவாக்கி அதற்கான அமைச்சரை நியமித்து அவருக்கு கீழ் ராணுவத்தை கொண்டு வந்ததும், முப்படைகளாக பிரித்ததும், உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு போன்றவற்றிற்கு  CISF, BSF தனி பிரிவுகளை உருவாக்கி அவற்றை உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தது மிக முக்கியமான செயல். இவற்றுடன் கூட்டு சேரா கொள்கை, பஞ்சசீலக் கொள்கை, கலப்பு பொருளாதாரம் போன்ற பார்வைகளும் கிடைத்த ஜனநாயகத்தை  பாதுகாப்பதற்கு உதவியது.

2014-ல் இந்துத்துவா கார்ப்பரேட் நலன்களை பாதுகாக்க கூடிய அரசு அமைந்த பிறகு இந்திய ஜனநாயகம் பேரழிவை சந்தித்து வருகிறது. ஜனநாயகத்தை அழிப்பவர்கள்தான்  அதிகமாக ஜனநாயகத்தைப் பற்றி பேசுவார்கள். உலகில் உள்ள பல அமைப்புகள் இந்தியா தற்பொழுது தேர்தல் முறையிலான சர்வாதிகார அமைப்பை கொண்ட நாடு என்று மதிப்பீடு செய்துள்ளனர். சில இஸ்லாமிய நாடுகளைப் போல் மதத்திற்கு கீழ் அரசியலை கொண்டுவரக்கூடிய செயல்பாடுகளில் இந்துத்துவா கார்ப்பரேட் ஆட்சி சுமார் 60 முதல் 70 சதவீதம் முன்னேறி உள்ளது. இது வரலாற்றில் மத்திய கால நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது.

தற்பொழுது ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானியின் மோசடிகள் அம்பலப்பட்டு மோடி தலைமையிலான அரசு வெட்கி தலைகுனிந்து நிற்கிறது. அதானியின் போலி நிறுவனங்களில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்தது யார்? யாருடைய பணம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டது போன்ற மில்லியன் டாலர் கேள்விகளுக்கெல்லாம் மோடியிடம் பதில் இல்லை. ஓடி ஒளிகிறார்.  அதானி விஷயம் பூதாகரமாக நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.  மோடி அரசை எதிர்க்கட்சிகளும், மக்களும் கேள்விகளால் துளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இவற்றை திசை திருப்புவதற்காகதான் ராகுலின் எம்பி பதவியை பறித்திருக்கிறார்கள்.

இந்திரா காந்தி அதிகாரத்தில் இருக்கிற பொழுது படுகொலை செய்யப்பட்டார். அதன்பிறகு தேர்தல் காலத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின்பு சோனியா காந்தி இந்த நாட்டின் பிரதமராக வரக்கூடாது என்பதற்காக அவர் அந்நியர் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து தடுத்தனர். ராகுல் காந்தியே அப்பொழுது பிரதமர் ஆவதை விரும்பவில்லை. பிரதமர் பதவி மன்மோகன் சிங்கை நோக்கி நகர்ந்தது.

இப்பொழுது மோடி அரசாங்கம் மக்கள் விரோத நடவடிக்கைகளால் அம்பலப்பட்டு நிற்கிற பொழுது ராகுல் காந்தியின் நடவடிக்கையும், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையும் மோடிக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. கட்டமைக்கப்பட்ட தன் பிம்பத்தை ராகுல் எங்கே நொறுக்கி விடுவாரோ என்று மோடி பயப்படுகிறார்.

2019- ஏப்ரல் 13, நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில்  ராகுல்காந்தி பேசினார். ‘‘ நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என அனைத்துத் திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று ஏன் இருக்கிறது” என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார்.

ராகுலின் இந்தப் பேச்சு, நரேந்திர மோடியை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த ‘மோடி’ சமூகத்தினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக பாஜ எம்எல்ஏ-வும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி,  அதே ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சூரத் தலைமை மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2021 ஜூன் 6,  ராகுல் காந்தி நேரடியாக நீதிமன்றத்திற்கு சென்று விளக்கம் அளித்தார். அப்போது பூர்னேஷ் மோடி மீண்டும் ராகுல் காந்தி நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை நிராகரித்த நீதிபதி,  தேவையில்லை என்றும் வழக்கு விசாரணையை தொடங்கலாம் என்றும் உத்தரவிட்டார். எங்கே நீதிபதி நியாயத்தின்படி தீர்ப்பு வழங்கி விடுவாரோ என்று பூர்னேஷ் மோடிக்கு அச்சம் வந்துவிட்டது. இதனால் 2022 மார்ச் 7, குஜராத் உயர் நீதிமன்றம் சென்று  வழக்கு விசாரணைக்கு தடை வாங்கி விட்டார்.

இந்த சூழ்நிலையில்தான் அதானி முறைகேடுகள் அம்பலத்துக்கு வருகின்றன. மோடியையும் அவரது கூட்டாளி அதானியையும் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் வெளுத்து வாங்குகிறார்.

சூட்சுமக் கயிறு வீசப்படுகிறது. தடை வாங்கிய பூர்னேஷ் மோடியே 2023 பிப்ரவரி 16ம் தேதி குஜராத்  உயர் நீதிமன்றத்திற்கு ஓடோடிச் சென்று ராகுல் மீதான வழக்கு விசாரணை தடையை நீக்கி உத்தரவு வாங்குகிறார்.  மீண்டும் விசாரணை தொடங்குகிறது. இதற்கிடையே, வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி தவே மாற்றப்படுகிறார். அந்த இடத்தில் எச்.எச்.வர்மா நியமிக்கப்படுகிறார். இவர் வந்தவுடன் குறுகிய காலத்தில் வழக்கை நடத்தி 2023 மார்ச் 23 அன்று தீர்ப்பு வழங்கிவிட்டார். இந்திய தண்டனை சட்டப் பிரிவு  504-இன் கீழ் ராகுல்  காந்தியை குற்றவாளி என அறிவித்து,  அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். ராகுலின் பேச்சு கிரிமினல் குற்றமாக கருதப்பட்டுள்ளது.  உடனே மோடி அரசானது, அதிவிரைவாக செயல்பட்டு ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்துள்ளது.  

எச்.எச்.வர்மாவின் தீர்ப்பு பல உயர் நீதிமன்றங்களின் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று சட்ட நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் ராகுலின் எம்பி பதவியை பறித்தது மட்டுமல்லாமல் அவருடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான குடியிருப்பை 30 நாட்களில் காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தனை அவசரம் இதுநாள் வரை இருந்தது இல்லை.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் இது போன்ற வழக்குகள் தொடர்பாக  விசாரணை வந்த பொழுது அரசின் சார்பில் தண்டனை அளித்தவுடன் பதவி நீக்கம் உடனடியாக செய்யக்கூடாது என்று தனது வாதத்தை முன் வைத்தது. இவர்களே, நீதிபதி உத்தரவில் கையெழுத்திட்ட பேனாவின் மை காயும் முன்பே, தகுதி நீக்கம் செய்கிறார்கள் என்றால்  இது வீரமா? கோழைத்தனத்தின் உச்சம்.

இதற்கு முன் பாஜவினர் பேசாத அவதூறு பேச்சுக்களா? காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரியை, சூர்ப்பனகை என்று நரேந்திர மோடியே பேசியிருக்கிறார்.

குஜராத் பெண்  பத்திரிகையாளரும், “வைப்ஸ் ஆப் இந்தியாஊடக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், ஆசிரியருமான தீபால் திரிவேதி மோடியின் கண்ணியமற்ற பேச்சுக்கள் பற்றி கூறுகையில், 2004-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி, ‘‘சோனியா பென் டூ ஏக் ஜெர்சி கே சே’’ என்றும், ‘‘ ராகுல் ஏக் ஹைப்ரிட் வச்சர்டு சே (சோனியா பென் ஒரு ஜெர்சி பசு, மற்றும் ராகுல் ஒரு கலப்பின கன்று)’’ என்றும் பேசினார்’’ என்கிறார்.

ராகுல் காந்தியின் “திருடர் மோடி” என்ற கருத்து குஜராத் மக்களிடையே எவ்வித சர்ச்சையையும், எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், ‘மோடி’ பெயருடைய சமூகத்தினர் கூட இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம், 2001-ஆம் ஆண்டு முதல் நாங்கள் (குஜராத் மக்கள்) மோடியின் மிகவும் மோசமான அருவருப்பான மற்றும் கலாச்சாரமற்ற கருத்துகளுக்குப் பழகிவிட்டோம் என்பதுதான் என்றும் தீபால் திரிவேதி குறிப்பிடுகிறார்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற சட்டங்கள், விலைவாசி உயர்வு, கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் குறையவே குறையாத பெட்ரோல், டீசல் விலை, கேஸ் மானியம் ரத்து, ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிறுகுறு தொழில்கள் சீரழிப்பு ஆகியவற்றுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், பாஜ ஆளாத மாநிலங்களில் (குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு) ஆளுனரை வைத்து ஒன்றிய அரசு செய்கின்ற அடாவடிகள் –  ஒன்பது ஆண்டு கால மோடியின் சாம்ராஜ்யத்தில் சரிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், மோடியின் கூட்டாளி அதானியின் மோசடிகளை இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அம்பலப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியா முழுவதும் பிரபலமான காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல், மோடி-அதானியின் கூட்டாண்மையை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.  இது இந்துத்துவா-கார்பரேட் சாம்ராஜ்யத்தில் மேலும் சரிவை ஏற்படுத்தி ஆட்சியை சாய்த்துவிடுமோ என்று மோடி அஞ்சுகிறார்.

அவதூறு வழக்கை, கிரிமினல் வழக்காக்கி, நாலாண்டுகளுக்குப் பிறகு அதில் இரண்டு ஆண்டு தண்டனை விதித்து, 6 ஆண்டுகளுக்கு (2+6 மொத்தம் 8 ஆண்டுகள்) ராகுல் காந்தியை தேர்தலில் நிற்க முடியாமல் செய்வதுதான் ஒன்றிய அரசின் நோக்கம். அதன் மூலம் நாடறிந்த ஒரு கட்சியை (காங்கிரசை) முடக்கிப் போட்டு எதிர்க்கட்சியே இல்லாமல் செய்து விடலாம் என்று கணக்குப் போடுகிறது காவிக் கூட்டம்.

இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய தாக்குதலை, பாசிச நகர்வை எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும். இது ராகுல் காந்திக்கு மட்டுமல்ல… அகில இந்திய அளவில் இருக்கின்ற எந்தக் கட்சியை வேண்டுமானாலும் முடக்கிப் போடுவதற்கு இந்த உபாயத்தை காவிக்கூட்டம் கையாளலாம். நாளையே தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரியில் யாராவது ஒருவர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்று குஜராத்தில் வழக்கு தொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே மக்களின் ஒற்றுமைதான் - ஒன்றுபட்ட மக்கள் இயக்கம் தான் காவிப் பாசிசத்தை முறியடிக்கும் ஒரே வழி. காவி-ஜனநாயகத்தைப் பாதுகாக்க கடமை ஆற்ற வேண்டியது அனைவரின் பொறுப்பாகும். காவி – கார்பரேட் ஆட்சியில் ஜனநாயகத்தின் தாயகமாக இந்தியா எப்போதுமே இருக்க முடியாது.

பேய் ஆட்சி செய்தால்

பிணம் தின்னும் சாத்திரங்கள்

-மகாகவி பாரதியார்


.பாக்கியம்
எழுத்தாளர்
arubakkiyam@gmail.com.

எதிரொலி

ஏப்ரல் வெளியீடு 
25.06.23 எழுதியது,ஆஸ்திரேயாவிலிருந்து வெளிவரும் எதிரொலி  பத்திரிக்கையில் ஜீலை இதழில் வெளிவந்தது

 

 

 

1 கருத்து:

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...