Pages

திங்கள், ஜூன் 19, 2023

நானே மகத்தானவன்

 

தொடர்-2

அ.பாக்கியம்


விண்ணை முட்டும் கரவொலி

செவிப்பறை கிழியும் கூச்சல்கள்

கரவொலி - குரல் ஒலியுடன்

எதிரொலியால் அதிரும் அரங்கம்

மனிதத் தலைகளால் மூடப்பட்டு இருந்தது


அரங்கின் நடு மேடையில் இருந்த

ஒவ்வொரு நகர்வுக்கும் ஆரவாரங்கள்

அதிகரித்துக் கொண்டே இருந்தன!

ஆரவாரங்கள் அடங்கவில்லை

வீழ்ந்தவன் எழவில்லை!

வீழ்த்தியவனோ

எரிமலை குழம்பாகப் பீறிட்டு

பொங்கிப் பிரவாகித்தான்

நானே மகத்தானவன்

நானே மகத்தானவன்

என்று இடி முழக்கமிட்டான்!

ஆர்ப்பரித்த அரங்கத்தை

நிசப்தமாக்கினான்!

 

அந்த இடி முழக்க குரலுக்கு

சொந்தக்காரன்

வெளிர் கருப்பு நிறம்

6.3 அடி உயரம்

சுருட்டைமுடி

தடித்த உதடுகள்

ஒழுங்கமைக்கப்பட்ட உடல்வாகு

முஷ்டி மடக்கிய கைகள்

பட்டாம்பூச்சி போல் மிதக்கும் கால்கள்

நெற்றி பொட்டில் குத்தி நிற்கும் இரு கண்கள்

என அமையப்பெற்ற

எளிதில் வெற்றி கொள்ள முடியாத

குத்துச்சண்டை வீரன் முகமது அலி!

 

1942 ஜனவரி 17 அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாநிலம் லூயிஸ் வில்லியில் அவன் ஜனனம்.  2016 ஜூன் 3  அன்று, 74 வது வயதில் அவர் மரணம். 25 ஆண்டு காலம் குத்துச்சண்டை அரங்கத்தை மட்டும் அல்லஉலக அரங்கையே உலுக்கி எடுத்த.முகமது அலியின் வாழ்க்கை முழுமையான முறையில் உலகிற்கு கொண்டு செல்லப்படவில்லை. அவன் வாழ்க்கையை ஒரு குத்துச்சண்டை வீரனாக மட்டுமே சுருக்கி, உலக மக்களின் உள்ளங்களில் பதிய வைக்கப்பட்டுள்ளது. முகமது அலி தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த நெருக்கடிகளும் அவற்றை எதிர்கொண்ட விதங்களும் அதில் உள்ள நேர்மறை எதிர்மறை அம்சங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

முகமது அலியின் அரசியல் வாழ்க்கை கொள்கை ரீதியான முறையிலும் தன்னலமற்றதாகவும் இருந்ததைப் போலவே முரண்பாடாகவும் சில அம்சங்களில் இருந்தது. சமகாலத்தில் வாழ்ந்த முக்கிய ஆளுமைகளை ஈர்த்த ஆளுமையாக முகமது அலி இருந்தார்.

முகமது அலியைப் போல பிரதான பத்திரிகைகளால் இழிவு படுத்தப்பட்ட ஒருவரைஅமெரிக்க அரசாங்கத்தால் அதிகம் துன்புறுத்தப்பட்ட ஒருவரைஅதே நேரத்தில் உலகம் முழுவதும் மிகவும் அதிகமான மக்களால் விரும்பப்பட்ட ஒரு விளையாட்டு வீரரை இதுவரை பார்த்திருக்க முடியாது.

               இனவெறி ஒதுக்கல்களும் போர் வெறி தாக்குதலும் நடந்து கொண்டிருந்த காலத்தில் அதை எதிர்த்து பல்வேறு வடிவங்களில் இயக்கங்களும் எழுந்து கொண்டிருந்தன. முகமது அலி மிகைவணிக மயமான குத்துச்சண்டை தளத்தை இனவெறிக்கு எதிராகவும் போர்வெறிக்கு எதிராகவும் பயன்படுத்தினார்.

இன ஒதுக்கல்களுக்கு எதிராக அரசின் போர் வெறிக்கு எதிராக மிகை வணிகதளத்தில் உள்ள விளையாட்டுகளில் ஒரு வலுவான பிரச்சனையாக மாற்றுவது என்பதை இப்பொழுது நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்படி நடந்தால் அது விளையாட்டின் பொன் விதிகளை உடைப்பதாகும். கொடிக்கு மரியாதை செலுத்துவது; ராணுவத்தை ஆதரிப்பது; போரை ஆதரித்து விளம்பரம் செய்வதுதான் விளையாட்டின் பொன் விதிகளில் அனுமதிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால் முகமது அலி, தான் புகழ் பெற்ற காலத்திலும், அதிக வருவாய் ஈட்டிய காலத்திலும் புகழையோ வருமானத்தையோ பொருட்படுத்தாமல் இனவெறிக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டார்.

நீதிக்காக சண்டை போடு:

அமெரிக்காவில் முதல் குத்துச்சண்டை வீரர்கள் அடிமைகளாகத்தான் இருந்தார்கள். பலம் வாய்ந்த அடிமைகளின் கழுத்தில் இரும்பு வளையங்களை அணிவித்து குத்துச்சண்டை களத்தில் மோதவிட்டு அவற்றைப் பார்த்து தென் அமெரிக்காவின் தோட்ட உரிமையாளர்கள் மகிழ்ந்தனர். வீட்டின் சமையல்காரனையும் தோட்டக்காரனையும் குத்துச்சண்டை வட்டத்தில் இறக்கி அவர்களின் மோதலை கண்டு ரசித்தனர்.

மனித வரலாற்றில் குத்துச்சண்டை துவக்கம் தொடர்பான தரவுகள் இல்லை என்றாலும் எகிப்தில் இருந்து கிரீஸ் மெசபடோமியா ரோமானிய நகரங்களுக்கு பரவிய பதிவுகள் உண்டு. கிரேக்கத்தில் பரவலாக விளையாட்டுப் போட்டிகளில் குத்துச் சண்டைகளும் இடம்பெற்று இருக்கிறது. 16-18ம் நூற்றாண்டுகளில் கிரேட்பிரிட்டனில் பரிசுகள் அடிப்படையில் குத்துச்சண்டை போட்டிகளை நடத்தி இருக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டில் நவீன குத்துச் சண்டைகளுக்கான விதிகள் உருவாக்கப்பட்டு நடைபெற்று உள்ளது.

அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட பிறகு குத்துச்சண்டை விளையாட்டு தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. விளையாட்டுக்களி டமிருந்து அது தனிமைப்படுத்தப்பட்டது. காரணம் அது மிருகத்தனமானது என்று ஒதுக்கினார்கள். ஆனாலும் அந்த விளையாட்டுக்கு நிதி முதலீடு செய்தவர்கள் இனவெறியை ஊக்குவிப்பதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தினர். வெள்ளை மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கான ஒரு இடமாக குத்துச்சண்டை களத்தையும் வடிவமைத்தனர்.

இது ஆழமான போலி அறிவியலின் கருத்தாகும். கருப்பர்கள் நிறத்தால் கீழானவர்கள், மனதளவில் பலவீனமானவர்கள், அறிவற்றவர்கள் அதே நேரத்தில் உடல் ரீதியிலும் வெள்ளையர்களை விட தாழ்ந்தவர்கள் என்ற கருத்தை உருவாக்கினார்கள். கருப்பினத்தவர்கள் சோம்பேறிகளாகவும் ஒழுக்கம் இல்லாதவர்களாகவும் இருப்பவர்கள். ஆகவே அவர்களை ஒரு விளையாட்டு வீரர்களாகவே அங்கீகரிக்க முடியாது என்று வடிவமைத்தனர்.

கருப்பு அடிமைகளாக இருந்தவர்களின் விளையாட்டைஏழைகளின் விளிம்பு நிலை மக்களின் விளையாட்டை… வெள்ளையர்களின் விளையாட்டாக மாற்றி நிறவெறி ஒதுக்கல்களின் கோரத்தாண்டவத்தை அரங்கேற்றினர். முகமது அலிக்கு முன்பாகவே குத்துச்சண்டை மேடை என்பது நிறவெறி வளையத்துக்குள் இருந்தது என்பதை அறிய வேண்டும்.

அ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...