Pages

செவ்வாய், ஜூன் 02, 2015

அமுதா: மேலும் ஒரு மரண சாட்சி


ஏ.பாக்கியம்,
சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்

         அழுகுரல், சாவு மேளச்சத்தம், வாகன இரைச்சல். இதற்கிடையில், இந்த பாழாப்போன ஆபரேஷன் பண்ணக்கூடாது சார். தடைவிதிக்க வேண்டும் சார் என்று அமுதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற என்னிடம் அமுதாவின் மாமனார் கண்ணீர் மல்க கூறினார். கதறிக் கதறி அவர் குரல் கம்மி போய் இருந்தது. மருமகளின் மரணத்திலும், அவர் மருத்துவரின் தவறுகளை கடந்து தறிகெட்ட மருத்துவ சந்தைக்கு எதிராகத்தான் கருத்தை முன்வைத்தார். அமுதா வணிகமய மருத்துவத்துக்கு பலியான மற்றுமொரு மரணசாட்சி. அமுதாவின் பத்துமாத மரண பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்தவர்கள் சென்னை தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையின் டாக்டர்கள் நடேசன், மாறன்.
மரண டைரிக் குறிப்பு
       01.08.2014 அன்று அமுதா சென்னை தி.நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனைக்கு செல்கிறார். உடல் பருமனான அமுதாவை பார்த்து உடல் மெலிய மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். குறிப்பிட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டால் உடல் மெலிந்து அழகாக இருப்பீர்கள். வய தானாலும் இளமையாக இருப்பீர்கள். உங்களுக்கு இருக்கும் சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்று விளம்பரம் செய்தனர். உடல் மெலியும், சர்க்கரை நோய் வராது என்று சொன்னதைக் கேட்டு அமுதாவும் சம்மதித்தார்.
பிறகு என்ன? பிரியாணி கடை, பீட்சா கடையில் காம்போ ஆஃபர் போல், அறுவை சிகிச்சைக்கு பேக்கேஜ் ரூ.5 லட்சம் என்றும் ரூ.3 லட்சம் அட்வான்ஸ் என்றும் வியாபாரம் பேசி முடிக்கப்பட்டது. மருத்துவர்கள் நடேசன், மாறன் தலைமையில் இந்த வியாபாரம் முடிக்கப்பட்டது. அமுதாவிற்கு 4 முறை பரிசோதனைகள் படுவேகத்தில் நடைபெற்றன. 11.08.2014ல் அறுவை சிகிச்சை, 14.08.2014ல் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர்நலமானதாக தெரியவில்லை.

        ஆனாலும், அவர் டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்கு சென்றதில் இருந்துஅமுதாவிற்கு தொடர்ந்து வயிற்று வலி, மார்பு வலி நீடிக்கவே மீண்டும் 26.08.2014ல் மருத்துவர்கள் நடேசன், மாறனிடம் சென்றனர். அவர்கள் ஒன்றுமில்லை, 10 நாட்கள் பிசியோதெரபி செய்தால் சரியாகி விடும் என ஆலோசனை வழங்கி சிகிச்சையளித்தனர்.

  அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து சீழும், நீரும் வெளியேறியது.எனவே, 31.08.2014ல் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதன் முடிவில் மீண்டும் இரண்டாவது தடவையாக அமுதாவிற்கு அதே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். 10.09.2014ல் எல்லாம் சரியாகிவிட்டது. போங்க என்று அனுப்பினர். ஆனால், இம்முறை உணவைவாயால் உட்கொள்ளும் நிலையில் அமுதா இல்லை. அதனால், வயிற்றில் உணவு செல்வதற்காக துளை போட்டு, உணவை குழாய் மூலமாக அனுப்பிட வேண் டிய கருவிகளுடன் வீட்டிற்கு அனுப்பினர். அடுத்த 10 நாட்களில் மீண்டும் அமுதாவுக்கு வலியும், இதர உபாதைகளும் ஏற்பட்டன.

       அமுதா துடிப்பதை தாங்க முடியாமல், அவரை அழைத்து சென்று விஆர்ஆர் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். இந்த பரிசோதனை முடிவோ அடுத்த அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்தது. நடேசனும், மாறனும் அமுதாவின் கணவரை அழைத்து, எங்களுக்கு கட்ட வேண்டிய பாக்கி ரூ.1.75 லட்சத்தை கட்டினால், அமுதாவை அப்போலோவில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்போம். அந்த அறுவை சிகிச்சைக்கு தனியாக ரூ.10 லட்சம் செலவாகும் என்றனர். ஒவ்வொரு முறையும் பல லட்சங்களை முன்வைத்தே அமுதாவின் உயிர் விலை பேசப்பட்டது.
           நடேசன், மாறன் முடிவின்படி அப்போலோவில் சேர்த்து ரூ. 9 லட்சம் பணம் கட்டி அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சையின் முடிவில் அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. நடேசன் மற்றும் மாறன் தலைமையில் நடந்த முதல்அறுவை சிகிச்சையிலேயே அமுதா வின் வயிற்றுக்குள் காட்டன் துணியை வைத்து தைக் கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை ஆபத் தான நிலைக்கும் அதுதான் காரணம் என்று தெரியவந்தது.இதற்கு முன்னால் நடேசனும், மாறனும் நடத்திய இரு அறுவை சிகிச்சைகளில் ஏன் இதை கண்டுபிடிக்கவில்லை? யாருக்கு தெரியும்? அறுவை சிகிச்சை நடத்தினார்களா, இல்லை அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, பணத்தை பறிக்க நடேசன் களும், மாறன்களும் போட்ட நாடகமா என்பது மருத்துவ உலகிற்கே வெளிச்சம்.
          
        மீண்டும் அமுதாவின் உயிரை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. உயிர் காக்க மறு அறுவை சிகிச்சை செய்ய ரூ.70 லட்சம் செலவாகும் என்றார்கள். அமுதாவின் குடும்பம் நடேசனையும், மாறனையும் அணுகியது. நடந்த தவறுக்கு நீங்கள் செய்த அறுவை சிகிச்சைதான் காரணம் என்றது. அப்போதும் ஒரு நாடகத்தை நடேசன் அரங்கேற்றினார்.
         
      ரூ.5 கோடிக்கு காசோலை கொடுத்தனர். நாங்கள் சொல்லும் தேதியில் காசோலையை வங்கியில் செலுத்துங்கள் என்று கட்டளையும் இட்டனர்.வலி தாங்காமல் துடித்த அமுதாவை உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த மருத்துவமனைக்கு பணம் கட்ட வேண்டும் என்பதால், காசோலையை வங்கியில் போடலாமா என்று கேட்பதற்கு பாரதிராஜா மருத்துவ மனை நிர்வாகத்தை அணுகினர். ஒரு மாதம் கழித்துபோடுங்கள் என்று பதில் வந்தது. மீண்டும் அணுகிய போது இன்னும் ஒரு மாதம் கழித்து போடு என்றனர்.

    காசோலை காலாவதி ஆகும் தேதி வரை காத்திருக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். காலம் கடந்தது. அமுதாவின் உயிர் ஊசலாடியது. இனியும் பொறுக்க முடியாது என்ற எண்ணத்தில், பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தபோது, 5 கோடி ரூபாய்க்கு ஆசையா..? உனக்கு5 ஆயிரம் கூட தர முடியாது. இத்தன மாசம் முடிஞ் சிடுச்சி.. இனி உன்னால என்ன செய்ய முடியும்? என்று அடித்து விரட்டாத குறையாக குரைத்து விரட்டினர்.
நடேசன், மாறனின் உண்மை உருவம் வெளிப்பட்டது.திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். இதில் உண்மை இருக்கிறதா என்பது அதில் நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால், திக்கற்றவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிதான் துணை. இது உண்மை. அமுதா வின் கணவர் கவுரி சங்கர், மாதர் சங்கத்தையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் அணுகினார். முறைப்படி, சட்டப் படி மாதர் சங்கம் மனு கொடுத்து, பேச்சுவார்த்தை நடத்திஅமுதாவின் உயிரை காக்க வேண்டுகோள் விடுத்தது.
  
      மருத்துவமனை நிர்வாகம் தடாலடியாக மறுத்தது. அரசு நிர்வாகமோ, நடேசன், மாறன்களுக்கு ஆதரவாக இருந்தது. போராடுவதை தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்த மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம்,அமுதாவுக்கு நியாயம் கேட்டு 11.3.15 அன்று மருத்துவ மனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன.

 அரசியல் இயக்கங்கள்
      உடனே நடேசன், மாறனுக்கு ஆதரவாக தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒரு கட்சியின் முன்னாள் துணை சபாநாயகர், மாநில கட்சிகள் சில, சாதிய பின்னணி கொண்ட அமைப்புகள், சமூக விரோதிகள், சில வழக் கறிஞர்கள் ஒன்று திரண்டனர். வேண்டுகோள், பேரம் பேசுவது, மிரட்டுவது என தங்கள் வேலைகளை காட்டினர். போராட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று காவல்துறைக்கு, அரசியலில் செல்வாக்கு உள்ள சில கொள்கை வியாபாரிகள் நெருக்கடி கொடுத்தனர்.

        அமுதாவின் உயிரை காக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்கள் உயிருக்கு விலைபேசி பணக்கொள்ளைக்கு துணை நின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் அமுதாவுக்கு துணையாக நின்றன.முற்றுகை போராட்டம் காலை 10 மணி என்றால் அதிகாலை 3.00 மணிக்கு மாறன் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாக போலி உத்தரவை காட்டி போராட்டத்தை நிறுத்த முயற்சி செய்தனர். அந்தப் பொய்யும் புஸ்வாணம் ஆகியது. இறுதியாக தடைகளை கடந்து போராட்டம் நடைபெற்றது.

          குற்றவாளிகளுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுத்தது. நியாயவாதிகளை கைது செய்து காவலில் வைத்தது. நீங்கள் செய்வது நூற்றுக்கு நூறு சரிதான் என காவல்துறையினர் கரிசனத்துடன் பேசினாலும், எல்லாம் மேலிடத்து உத்தரவு. நாங்க என்ன பண்ணறது என்றது. சட்டத்தின் ஆட்சிக்கு மேலிட உத்தரவுதான் தலைமை. அனைத்து உரிமை மீறலுக்கும் இந்த மேலிட உத்தரவுதான் கடவுளாக உள்ளது. முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பிரமுகர்கள் விலைபோகும் சரக்காக மாறி விட்டனர். பணத்துக்கு அடிமையாகி அமுதாவின் உயிருக்கு உலை வைத்துக் கொண்டிருந்தனர்.

          அரசு நிர்வாகம்
அமுதாவின் உயிர் பிரச்சனையை அரசு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பதைவிட நடேசன், மாறன்களுக்கு ஆதரவாக இருக்கிறது. எந்த ஒரு கட்டத்திலும் புகாரை வாங்குவது இல்லை. கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளவில்லை. அல்லது அவர்கள் மருத்துவமனைகளால் கவனிக்கப் பட்டார்களா என்பது தெரியாது. மருத்துவ கவுன்சில், சுகாதாரத்துறை என, எத்தனை எத்தனை அமைப்புகள். இவை அனைத்தும் அரசின் கருவி. துருப்பிடித்த இந்த கருவிகள் ஏழைகளுக்கு எப்போது உதவின?இறுதியாக அந்த சோகம் நிகழ்ந்தேவிட்டது.


             இதய மற்றவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் அமுதா19.5.15 அன்று இறந்து விட்டார். 10 மாத மரண பயணத் துக்கு அன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த 10மாத காலம் அவரின் உயிர் வலியை யார் உணரப் போகிறார்கள்? விஷயம் இத்துடன் நின்றுவிடவில்லை.எல்லா விஷயங்களிலும் போஸ்ட்மார்ட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தும் காவல்துறை, போஸ்ட் மார்ட்டம் பண்ணித்தான் அமுதாவின் உடலை வாங்குவோம் என்ற சம்பந்தப்பட்டவர்களின் வேண்டு கோளை மறுத்தது. அதெல்லாம் முடியாது என்று ஆயிரம்விளக்கு காவல்நிலைய ஆய்வாளர் அடம் பிடித்தார். அவரும் விலை போன சரக்காகத்தான் இருக்கமுடியும்.
பிறகு மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட்டின் பேரில் உயர் அதிகாரிகளின் உத்தரவால் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது.அமுதாவின் மரணத்திற்கு நடேசன், மாறன்கள்தாம் காரணம் என்று அவரது குடும்பத்தார் குற்றம்சாட்டு கின்றனர். இருவர் மீதும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை, தற்போது கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். சட்டப்படியும் கூட இதுதான் சரி என்று சட்டம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். பணக்காரர்களின் கைப்பாவை யாக உள்ள அரசு செவி சாய்க்குமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடர்கிறது...
        
       

பிரபல டென்னிஸ் வீரர் சந்திரசேகர், நடிகை விஜி, வெளியே சொல்லாத பல ஆயிரம் பேர் என வணிகமயமான மருத்துவத்தின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அமுதாவின் மரணத்தோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? இது, மருத்துவர்களுக்கு எதிரான போராட்டமல்ல. அமுதாவிற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்கான போராட்டம். வணிகமய மான மருத்துவத்திற்கு எதிரான போராட்டம். யார்செத்தால் என்ன? என் பாக்கெட் நிரம்பினால் போதும் என நினைக்கிற அழுகிப்போன அரசியல் கலாச்சாரத்திற்கு, அதிகார வர்க்கத்துக்கு எதிரான போராட்டம். பண முதலைகளின் கருவியாகச் செயல்படும் அரசை மாற்றுவதற்கான போராட்டம். ஒரு அமுதா மட்டுமா.பாதிக்கப்பட்டார்.

      இல்லை. பல ஆயிரம் அமுதாக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது வீதிக்கு வந்தது இந்த பிரச்சனைதான். பாதிக்கப்படும் அமுதாக்களில் உங்கள் தாய் இருக்கலாம், சகோதரி இருக்கலாம், மகள் இருக்கலாம், மனைவி கூட இருக்கலாம். அவர்களில் யாருக்குமே இந்த நிலை வரக்கூடாது. தனி மரம் தோப்பாகாது; ஒற்றை மனிதர்களால் இதை எதிர்த்து நிற்க முடியாது. இந்த அட்டூழியங்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும். அமுதாவின் மரணம் போராட்டத்தை முடி வுக்கு கொண்டுவந்து விட்டதாக யாராவது நினைத்தால் அது முட்டாள்தனமானது. மரணம் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வராது. உண்மையில் அமுதாவின் மரணம் ஆயிரம் போராட்டக்காரர்களை உருவாக்கி உள்ளது. அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

2015-06-02 தீக்கதிர்


        டாக்டர் எல்லா மனிதரையும் போலத் தவறுகிற இயல்பும் கொண்டவரே. தாம் செய்யும் தவறை நோயாளியிடம் தெரிவிக்கும் துணிவு டாக்டருக்கு அவசியம். தவறே எப்போதும் செய்யாத தெய்வப்பிறவிகள் தாங்கள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவே கூடாது. சமூகம் டாக்டர்களை மிக உன்னத இடத்தில் வைத்துப் போற்றிய காலம் உண்டு. ஆனால், இன்று டாக்டர்களை பேராசைக்காரன், சுயநலக்காரன், பொய்யன் என்று மக்கள் சந்தேகம் கொள்வது ஏன்? இவை மோசமான நுகர்வு கலாச்சாரத்தின் விளைவுகளே. மருத்துவத்தை சந்தை சரக்காக்கினோம். விற்கத் துவங்கிய நவீன மருத்துவர்க்கு கருணை மனம் தேவை. கார்ப்பரேட் பெருவணிகர்கள், மருத்துவம் ஒரு பணம் குவிக்கும் தொழில் என முடிவு செய்து மருத்துவ வணிகத்தில் குதிக்க துவங்கியுள்ளனர். இதில், தொழிற்சங்க போராட்டம் இல்லை. வேலை நேரக் கட்டுப்பாடில்லை. கட்டண எல்லை இல்லை, தொழில் நடத்த தேவையான மூலப்பொருள்(நோயாளி) தட்டுப்பாடில்லை. மருத்துவ அறநெறிக் கோட்பாடுகள் அனைத்துக்கும் எதிரான வகையில் பெருவணிக நிறுவனங்கள் கொள்ளையடித்து வருகின்றன.
பேராசிரியர் டாக்டர் பி.எம்.ஹெக்டே
அதையும் தாண்டி...
மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்டது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், இன்று அதையும் தாண்டி வழிப்பறி, கொள்ளை, சமூக விரோதத்தனம் என்னும் அளவுக்கு சில இடங்களில் நடப்பது மருத்துவர்களுக்கும், மருத்துவத்துறைக்கும் மிகப்பெரிய அவமானம். தேவையே இல்லாமல் கமிஷனுக்காக பல பரிசோதனைகளையும், கொடூரமாக சில சமயங்களில் ஸ்கோபி, சர்ஜரி போன்ற வேதனை தரும் செயல்களை நோயாளிகளுக்கு செய்வது, ஆடித் தள்ளுபடி மாதிரி ஃபாதர்ஸ் டே/மதர்ஸ் டேக்களுக்கு அப்பா, அம்மாக்களுக்கு பாதி விலையில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் என விளம்பரம் போன்ற விஷயங்கள், மருத்துவம் வியாபாரம் என்ற படியை தாண்டிசமூக விரோதத்தனம் என்ற நிலையை அடைந்துவிட்டதையே காட்டுகிறது.
பிரபல மனநல மருத்துவர் பி.ஆனந்தன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...