Pages

சனி, ஏப்ரல் 30, 2011

6 கடிதமே பிரகடனமாய்


        புறச்சூழல் பொருத்தமாக இருந்தால் ஒரு சிறு தீப்பொறியும் காட்டுத்தீபோல் மள மள என பற்றிக் கொள்ளும் என்பதற்கு இளம் இத்தாலி சிறந்த உதாரணம்.போராட்ட சூழலில் ஒரு கடிதம் ஏற்கப்படாதபோது அதுவே போர் பறையாய் போராட்டத்தையே கொழுந்துவிட்டு எரிய செய்யும் என்பதற்கு மாசினியின் கடிதம் ஒரு உதாரணமாகும். 1931-ல் சார்டினிய அரசின் புதிய அரசராக சார்லஸ் ஆல்பர்ட் என்பவர் பதவியேற்றார்.  இவர் கார்போரிய இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதால் இவ்வியக்கத்தில் இவருடன் கலந்துகொண்ட மாசினி அவருக்கு ஒரு கடிதம் எழுதினான். 

               க்கடிதத்தில் ஒன்றுபட்ட இத்தாலி உருவாக்குவது பற்றி அதை எப்படி அடைய முடியும் என்பது பற்றியும் அதற்கான திட்டத்தினையும் முன்வைத்திருந்தான். அந்த மன்னனோ இக்கடிதத்தை அலட்சியப்படுத்தினான்.பதிலும் இல்லை,பரிசீலனையும் இல்லை. இதனால் இளம் இத்தாலிய அமைப்பினர் அக்கடிதத்தை பல்லாயிரக்கணக்கில் அச்சடித்து இளைஞர்களிடமும், பொதுமக்களிடமும்  விநியோகம் செய்தனர். தேசப்பற்றின் உணர்ச்சி பிழம்பாய் எழுதப்பட்ட அக்கடிதம் இளைஞர்களையும், பொதுமக்களையும் சாரை,சாரையாக அணிதிரட்டியது. அரசனுக்கோ இந்தக் கடிதம் அச்சத்தை ஏற்படுத்தியது, ஆத்திரமூட்டியது.

              மாசினி பிரான்சிலிருந்ததனால் அவனை கைதுசெய்யக்கோரி நிர்பந்தம் செலுத்தினான். ஆனால் பிரான்சு அரசோ மாசினியை கைது செய்யாமல் மீண்டும் ஸ்விட்சர்லாந்திற்கு நாடுகடத்தியது. இக்கடிதத்தை விநியோகம் செய்த இளைஞர்கள் நாடுமுழுவதும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இக்கடிதமே இளம் இத்தாலியின் கொள்கை பிரகடனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர் எழுச்சிகள்
      கைதுகளும், நாடுகடத்தலும், தண்டனைகளும் இளைஞர்களின் எழுச்சிக்கு தடைபோட முடியவில்லை. எழுச்சிகள் தொடர்ந்தது மட்டுமல்ல பரவியும் சென்றது. 1833-ம் ஆண்டு அலெக்சான்டரியா, டூரின், ஜெனோவா, சாம்பிரி ஆகிய நகரங்களில் இளம் இத்தாலியர்கள் அரசுக்கெதிராக ஆயுதம் தாங்கி கலகம் செய்தனர். அரசு படைக்கும், இளைஞர்களுக்கும் வீதியில் கடும் மோதல் ஏற்பட்டது.

          அரசு அடக்குமுறையின் உச்சகட்டத்திற்கே சென்றது.இந்த எழுச்சியில் ஈடுபட்ட 12-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்டது. மாசினி தலைமறைவாக இருந்தாலும் அவருக்கும் மரணதண்டனை என அறிவிக்கப்பட்டது. இந்த எழுச்சி தோல்வியில் முடிந்தாலும் ஒட்டுமொத்த ஐரோப்பிய இளைஞர்களின் பார்வை இத்தாலியை நோக்கி திரும்பியது.

      ளம் இத்தாலி அமைப்பின் இளைஞர்கள்  தோல்வி கண்டு துவளவில்லை. 1834-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி ஸ்விட்சர்லாந்திற்கு தப்பிச்சென்ற இளைஞர்கள் அங்கே ஒன்று கூடினர். அங்கிருந்து பியன்மன்ட் நகர் மீது பெரும் தாக்குதல் தொடுத்தனர். மறுபுறத்தில் இளம் இத்தாலிய சங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு கரிபால்டி ஜெனோவா நகரை தாக்கினான்.  

                தனால் கோபமடைந்த சுவிட்சர்லாந்து அரசு 1834-ம் ஆண்டு மே மாதம் மாசினியை நாடுகடத்தியது. போராட்டமும் நசுக்கப்பட்டது. பாரிசுக்கு தப்பிச்சென்ற மாசினியை சார்டினிய அரசின் நிர்பந்தத்தால் அவ்வரசு கைது செய்து சிறையிர் அடைத்தது.மேற்கண்ட இரு எழுச்சிகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலால் இளம் இத்தாலிய அமைப்பு கடும் பின்னடைவை சந்தித்தது.நான்காண்டுகால இடைவெளிக்கு பின்னர் 1838-ம் ஆண்டு லண்டனில் ஒன்றுகூடி இளம் இத்தாலியை மீண்டும் புதுப்பித்தனர்.
 
             ந்த புனரமைப்பு புதிய தாக்குதலுக்கு புத்துயிர்ரூட்டியது.1841-முதல் 1845 வரை சிசிலி, அப்ரூசி, டஸ்கன், லம்போர்டி, வெனீசியா, ரோமக்னா ஆகிய நகரங்களில் இளம் இத்தாலியர்கள் தொடர் எழுச்சிகளை ஏற்படுத்தினர். மேலும் சில நகரங்களில் இளம் இத்தாலியுடன் தொடர்பு ஏற்படுத்தியிருந்த சில இளைஞர் குழுக்கள் அரசிற்கெதிராக கலகம் செய்தனர்.  

            பிரௌன் பிரான்ஸ்கோ என்ற இளம் இத்தாலியன் சிசிலியில் 1848-முதல் 1856-வரை தீரமிகு போராட்டங்களை நடத்தி தனது 36-வது வயதில் மரணமடைந்தான். இவன் 1848-ல் பிரெஞ்சு படைகளை எதிர்த்து பாலிமோர் பகுதிகளை விடுதலைசெய்ததில் முக்கிய பங்காற்றினான். இவனது தீர செயல்கண்டு இராணுவத்தில் சேர்ந்திட அரசு கொடுத்த அழைப்பை நிராகரித்து இளம் இத்தாலிய அமைப்பில் இணைந்து செயல்பட்டான். 

   பிரெஞ்சு படைகள் மீண்டும் பாலிமோரை கைபற்றியபோது பிரெஞ்சு படைகளையும், உள்ளூர் அரசையும் எதிர்த்து 1850-முதல் இளைஞர்களை அணிதிரட்டி புரட்சி செய்தான். இதனால் 1853-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 1856-ல் அவன் விடுதலையானபோது சிறைவாழ்க்கை அவனது விடுதலைவேட்கையும் கனவுகளும் மேலும் உரமேறி உறுதிபட்டிருந்தது.எனவேதான் விடுதலையானவுடன் இளைஞர்களையும் விவசாயிகளையும் திரட்டி அரசுக்கெதிரான தாக்குதலை முன்னிலும் தீவிரமாகத் தொடுத்து

   1856 டிசம்பர் 20-ல் யுத்தக்களத்தில் வீரமரணம் அடைந்தான். அவனின்  வரலாற்றை அரசு மறைக்க முயன்றது. ஆனால் 1860-ல் கரிபால்டி சிசிலியை கைபற்றியவுடன் இவனது உடலை தோண்டி எடுத்து சொந்த மண்ணில் அடக்கம் செய்து, நினைவு ஸ்தூபியை உருவாக்கினான்.
 தேபோன்று பாண்டிரா சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட 33 வயது நிரம்பிய அட்டிலோ , 25 வயது நிரம்பிய எமிலோ இருவரும் இளம் இத்தாலிய அமைப்பின் உதவியால் நேப்பில்ஸ் நகர கப்பற்படை மீது தாக்குதலை நடத்தினர். அந்நகரத்தின் சிறைக்கைதிகளையும் விடுதலை செய்தனர்.

       ரசு படைகளுடன் ஏற்பட்ட மோதலில் 8 இணைஞர்கள் இறந்தனர். 1844-ல் அட்டிலோ, எமிலோ மற்றும் ஒன்பது பேர்கள் கைது செய்யப்பட்டு ஜீலை 23-ல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மற்றொரு இளைஞன் கார்லோ பிசாகானே, இவன் 39வது வயதில் யுத்த களத்தில் இறந்தான். 

  நெபபோலியனின் படையிலிருந்த இவன் இளம் இத்தாலியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு 1847-ல் இவ்வமைப்பில் இணைந்தான். மாசினி உருவாக்கிய மிலான் நகர எழுச்சிக்கு தலைமையேற்று பெரும் தாக்குதலை நடத்தி கைதிகளை விடுவித்தான். இவன் புருதோனின் அராஜகவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான்.  துப்பாக்கி முனை ஆயிரம் புத்தகங்களைவிட அதிக பிரகாசமானது என்றும் , செயல்கள் மட்டுமே சிறந்த கருத்துப்பிரச்சாரம் என்றும் பேசினான். 1853-ல் ஏற்படுத்திய மிலான் எழுச்சி பெரும் அடக்குமுறைக்கு உள்ளாகியது. பல பிரதேசங்களில் இளம் இத்தாலி அமைப்பு வேட்டையாடப்பட்டு, பெரும் பின்னடைவை சந்தித்தது.

   ளம் இத்தாலியில் குறிப்பிடவேண்டிய மற்றொருவர் ஜோசப் வெர்டி இவர் தனதுசேர்ந்திசை மற்றும் மேடை நாடகத்தின் மூலமாக இளம் இத்தாலிய கருத்துக்களை பிரச்சாரம் செய்து இளைஞர்களை திரட்டினார்.  மறுபுறத்தில் கரிபால்டி இளம் இத்தாலி பலவீனப்பட்டிருந்தாலும் அவர் தனியாக படையமைத்து இத்தாலியின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்தார்.

   1870-ம் ஆண்டு சிசிலி எழுச்சியின்போது மாசினி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.உடல்நிலை பாதிப்பால் அதே ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாசினி 1872-ல் பைசா நகரில் மரணமடைந்தார். அவரது சொந்த ஊரான ஜெனோவாவில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்றனர்.

    1872-ல் இளம் இத்தாலியின் கனவான ஒன்றுபட்ட இத்தாலி உருவாகியது. ஆனால் அவர்கள் கருதிய சுதந்திர குடியரசு உருவாகவில்லை. காரணம் பிற்போக்கு அரசுக்கு எதிராகவும் , ஆஸ்திரிய, பிரெஞ்சு அரசுக்கெதிராகவும் பிரபலமான எழுச்சிகள் மூலம் மட்டுமே ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கிவிடலாம் என்று மாசினி நம்பினார்.

    சுதந்திர குடியரசிற்கு இதுமட்டும் சாத்தியமல்ல. செயல்கள், எழுச்சிகள், துப்பாக்கிகள் மூலமாக தானாக கருத்துக்கள் பரவிவிடுமென நம்பினர். இதே கருத்துக்கள் 1920ம் ஆண்டுகளுக்கு பிந்தைய இந்திய இளைஞர் அமைப்புகளிலும் காணக்கிடந்தது. இளம் இத்தாலி என்ற இளைஞர் அமைப்பு ஒன்றுபட்ட இத்தாலிக்கு அடித்தளமிட்டது. பல தியாகங்களை செய்தது. 

   வ்வமைப்பின் தாக்கத்தால் 1840-களில் இளம் ஸ்விட்சர்லாந்து , இளம் ஜெர்மனி, இளம் பிரான்சு, இளம் அயர்லாந்து என பல அமைப்புகள் உருவாகி இளம் ஐரோப்பா என்ற அமைப்பாக வடிவமெடுத்தது. இவ்வமைப்பின் தாக்கம் பிற்காலத்தில் இளம் துருக்கியர் அமைப்பு உருவாகிட தூண்டுகோலாக அமைந்தது. இளம் இத்தாலி என்ற அமைப்பின் வேர்களும் , விழுதுகளும் ஐரோப்பாவையும் கடந்து துளிர்க்கஆரம்பித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...