Pages

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

4.வார்ட் பர்க் (wartburg) எழுச்சி


                          ஜெர்மனியில் வார்ட் பர்க் (wartburg)என்ற கோட்டை போன்ற பெரும் கட்டிடத்தில் ஆண்டுதோறும் புதுமையை வரவேற்கும் விழா நடைபெறும் . இந்த கட்டிடத்தில் தங்கியிருந்துதான் மார்டின் லூதர் பைபிளை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார் எனவே இக்கட்டிடம் அன்றையஜெர்மானிய தேசீயத்தின் அடையாளமாக கருதப்பட்டது.

                          1817-ம் ஆண்டு நடைபெற்ற இந்த புதுமைகளை வரவேற்கும் வார்ட்பர்க் விழாவில் ஏராளமான மாணவர்கள் அணிதிரண்டனர்.உணர்ச்சி பிழம்பாக ஒன்றிணைந்த  அம்மாணவர்களிடையே எழுச்சி பொங்கும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. இதனால் உத்வேகமுற்ற மாணவர்கள் நெப்போலியனின் சட்டத்தையும், ஹேலரின் (ழயடடநச) மீட்டமைப்பு என்ற நூலையும் கோட்சூபூ என்ற கவிஞன் எழுதிய ஜெர்மானிய வரலாறு என்ற நுலையும் தீயிட்டு கொளுத்தினர்.

                          இச்சம்பவம் ஜெர்மனி முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை பிரஞ்புரட்சியின்போது நடைபெற்ற  ஜேகோபியன் அராஜகத்துடன் ஒப்பிட்டு அந்நாட்டு அரசுமாணவர்களையும் இளைஞர்களையும் வேட்டையாட துவங்கியது. அந்நாட்டு அரசு மாணவர்கள் அமைப்பின் மீதும், இளைஞர்களின் ரகசிய குழுக்கள் மீதும் தனது பிடியை இறுக்கியது. பல்கலைகழக வகுப்பறையிலேயே அரசின் ஒற்றர்கள் உட்கார்ந்தனர். ஆசிரியர்களிடம் பாடப்புத்தக பட்டியலையும், மாணவர்களின் தனிப்பட்ட விபரங்களையும்,குடியிருப்பு விபரங்களையும் அரசுக்கு அளித்திடவேண்டுமென உத்தரவு போட்டது. 

                     இந்த எழுச்சிகளினிடையே 1819-ம் ஆண்டு அரசு ஆதரவு கவிஞன் கோட்சூபூ என்பவரை காரல்சான்ட் என்ற மாணவன் படுகொலை செய்தான். இதனால் கோபமடைந்த அரசு அனைத்து மாணவர் அமைப்புகளையும் தடைசெய்து சட்டவிரோதம் என்று அறிவித்தது. காரல்சான்ட் (karl sand) கைது செய்யப்பட்டு ஓராண்டு விசாரிக்கப்பட்டான்.

                விசாரணையின்போது எனது விருப்பத்தையும்,எனது புனிதத்தையும்எனது உறுதியையும்அவன் நசுக்கினான். சுத்தமான துய்மையான, சுதந்திரமான இளைஞர் உலகை ஊழல்நிறைந்த அரசு சீரழிக்கிறது. எனவே நான்  இந்த காரியத்தை செய்தேன் நான் சாவதாக இருந்தால் மெச்சத்தகுந்த, உயரிய காரணத்திற்காகத்தான் சாவேன். விரைவான வெற்றி இளமையில் மரணம் என்பதே என் விருப்பம் என்றான். விசாரணைக்கு பிறகு 1820-ம் ஆண்டு பொது இடத்தில் அவனது தலை துண்டிக்கப்பட்டது. அமைப்பு  ரீதியான இயக்கத்தின் முதல் தியாகி காரல்சான்ட் ஆவான்.
                              காரல்சான்ட் தலை துண்டிக்கப்பட்டாலும் இளைஞர் இயக்கம் புதிய துடிப்புடன் எழுந்தது . ஜெர்மனியின் மற்றொரு பல்கலைகழகமான ஜிசன் பல்கலைகழகத்திலிருந்து காரல் ஃபாலன் (kari fallen) என்ற மாணவன் இவ்வியக்கத்திற்கு தலைமையேற்றான். எந்த வழியிலாவது நாம் நினைத்ததை சாதிக்கவேண்டும் என்றால் நாம் நிபந்தனையற்ற குழக்களாக மாறவேண்டும் என்றான். பொதுநலத்திற்காக வாழ்வது மட்டுமல்ல சாவதும் பொதுநலத்திற்காகவே  இருக்கவேண்டும் என்று அறைகூவி அழைத்தான். 

                இளைஞர்களை கவர்ந்திழுக்கும் தலைவனாக வலம் வந்தான். ஜெர்மனி அரசு கைது செய்ய முயற்சித்தபோது சுவிஸ்நாட்டிற்கு தப்பித்து சென்றான்.அங்கும் அரசின் அடக்குமுறையால் 1821-ல்  அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டான். இந்த மாணவர் சங்கம் 1848-ம் ஆண்டுவரை செயலூக்கத்துடன் தொடர்ச்சியாக பல்வேறு நடைவடிக்கைகளில் ஈடுபட்டது. இதே காலத்தில் அர்மேனிய மாணவர்சங்கம் என்ற கிருஸ்துவ பழமைவாத மாணவர் அமைப்பும் ஜெர்மானிய பல்கலைகழங்களில் பரவலாக செயல்பட்டது.

                          1830-ம் ஆண்டுகளில் இளம் ஜெர்மானியர்கள் என்ற பெயரில் இலக்கியம், பத்திரிகை சுதந்திரம், அறிவுத்துறை ஆகியவற்றில் இளைஞர்கள் தீவிரமாக செயல்பட்டனர். 1770-முதல் 1831 வரை வாழ்ந்த ஹெகல் என்ற தத்துவஞானியை பின்பற்றியவர்கள் இளம் ஹெகலியவாதிகள் என்றழைக்கப்பட்டனர். ஹெகல் இயக்கவியலை விரிவாக்கம் செய்தார். 

                     இது இயக்கவியல் பொருள்முதல்வாதம் தோன்ற அடிப்படையாக அமைந்தது. 22 வயது நிரம்பிய காரல்மார்க்ஸ் உட்பட பலர் இளம் ஹெகலியவாதிகளாக அக்காலத்தில் செயல்பட்டனர். சிலர் ஹெகலின் இயக்கவியல் குறைபாடுகளை முன்னிறுத்தி ஜெர்மனியில் முதலாளித்துவ சீர்திருத்த நடவடிக்கைகளை நிலைநிறுத்த மதத்துடன் இயக்கவியலை பொருத்த முயற்சித்தனர்.

      மார்க்சும், எங்கெல்சும் இதற்கு எதிராக இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை நோக்கி முன்னேறினர். மார்க்ஸ் 26வது வயதில் புனித குடும்பம் என்ற நூலையும் , 27வது வயதில் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூலையும் எழுதி தனது கருத்துக்களை நிறுவினார். 38 பகுதிகளாக பிரிந்து கிடந்த ஜெர்மனியில் இளைஞர்கள் ஜெர்மனியின் ஒன்றுமைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் கலகம் செய்தார்கள். இயக்கங்களாகவும் பரிணமித்தார்கள், எழுச்சியும் பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...