Pages

செவ்வாய், நவம்பர் 23, 2010

உலகளாவிய உரிமைக்குரல்-2

                                                           அ.பாக்கியம்


                  
பிரெஞ்சுப் புரட்சி-ரஷ்யப் புரட்சி -சாசன இயக்கம்.

மேற்கண்ட மூன்று புத்தகங்களும் வெவ்வேறுநாட்டில் வெவ்வேறு காலத் தில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.பிரஞ்சுப்புரட்சி முதலாளித்துவ சகாப்தத்தை துவக்கிவைத்தது.ரஷ்யப்புரட்சி சோசலிச சகாப்தத்தை துவக்கி வைத்தது.சாசன இயக்கத்தில் முதலாளிகள் நலன்உள்ளடங்கி இருந்தாலும்  தொழிலாளர் உரிமைக்கான முதல் இயக்கமாக இருந்தது என்பதை புத்தகத்தை வாசிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.எனினும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றையும்  நீண்ட கட்டுரையாக மாற்றுவதைவிட புத்தகத் தில் கையாண்டுள்ள சில விஷயங்களை முன்னிறுத்தலாம் என்று கருதுகிறேன்.
             முதலாவதாக படைப்பு சராசரி வாசகர்களை ஈர்க்க வேண்டும். அதே நேரம் தீவிரவாசகர்கள் அனுபவிக்கவும் அதில் இடங்கள் அமைந்திருக்க வேண்டும் என்று உம்பட்டோ எக்கோ வின் கூற்றுக்கு ஏற்ப புத்தகங்களின் பல பகுதிகள் அமைந்துள்ளது. தீவிரவாசகர்களுக்கு முழுமையாக தீனிபோடவில்லை என்றாலும் அவர்களுக்கான இடங்களும் உள்ளது.காரணம் புத்தகம் சராசரி வாசகனை சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் முன்வைக்கப்பட்டதால்  இவ்வாறு அமைந்துள்ளது. வரலாற்றை அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல புதியவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த மூன்று புத்தகங்களிலும் காலவரிசைப்படி நிகழ்வுகளை முன்வைத்திருப்பதும், கடினவார்த்தைகளை தவிர்த்திருப்பதும் எளிய வாசிப்புக்கும் புரிதலுக்கும் உதவுகிறது. உதாரணமாக அன்றைய பிரெஞ்சுநாட்டு சமுகத்தை புரிந்துகொள்ள, மதகுருக்கள் முதல் எஸ்டேட், நிலபிரபுக்கள் இரண்டாவது எஸ்டேட், மக்கள் மூன்றாவது எஸ்டேட் என்று புள்ளிவிவரங்களுடன் விபரித்திருப்பதை குறிப்பிடலாம்.  ரஷ்ய புரட்சி புத்தகத்தில் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் கீழ்கண்ட விஷயத்தை முன்வைக்கலாம். சார்மன்னன் காலத்தில் தொழிலாளர்கள் நிலையை குறிக்கும் வகையில்  உங்கள் அறையில் எத்தனை பேர் என்ற கேள்வியுடனான தலைப்புகள். இதில் 12 பேர்கள் என்று பதில் வரும். எப்படிப்பட்ட அறை? 12 பேர்களும் ஒரே நேரத்தில் படுக்கமுடியாமல் முறைவைத்து படுப்பது, கரியும், அழுக்கும் நிறைந்த சுவர்கள், வியர்வை நாற்றம் வீசும் அறை! என்ற வர்ணனை. புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் புரட்சிக்கு பிறகு உங்கள் அறையில் எத்தனை பேர் என்றால், நான், எனது மனைவி, குழந்தைகள் என்ற பதிலுடன் புத்தகம் முடிவது சராசரி வாசகனுக்காக. இதே போன்று சாகனஇயக்கம் புத்தகத்தில் இங்கிலாந்தின் தொழிற்புரட்சியின் கோரச்சுரண்டலை விளக்கிட தொண்ணூறு ஆண்டுகளில் ஒன்பது தலைமுறைகளை விழுங்கப்பட்டு விட்டன என்ற பீல்டனின் வார்த்தைகள் எளிமையானது மட்டுமல்ல வலிமையானதும் கூட.
                 அதே நேரத்தில் ரஷ்ய சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய நரோதியம் தோன்றுவதற்காக பொருளாதார சமூகக்ரணிகளை ஆழமாகவும், சுருக்கமாகவும் (பக்.14) பதிய வைத்துள்ளதும், ரஷ்யபாராளுமன்ற (டூமா) தேர்தலில் போல்ஷ்விக் கட்சி பங்கேற்காமைக்கு காரணமான தந்திரங்க ளையும் விளக்கியுள்ளார்.(பக்.71) ரஷ்ய புரட்சியின்முக்கியமான தந்திரோஉபாயங்களை தவறாமல் ரத்தினச்சுருக்கமா விளக்கியுள்ளார். உதாரணமாக ரஷ்யாவில் அன்றிருந்த புரட்சிகரமான சக்திகளில் பலபிரிவுகள்,பல போக்குகள் இருந்ததால் ஆயத தாக்குதலை திட்டமிட்டு நடத்துவதில் பல சிரமங்கள் இருந்தது. எடுத்த முடிவுகள் வெளிவந்த முறைகள் புரட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை உணர்ந்த லெனின் ஒரு நிமிடம் தாமதிக்காமல்,இன்றே இப்போதே, இந்த நிமிடமே தாக்குலை தொடங்குங்கள் என்ற அறைகூவல், எந்தஅளவு வெற்றிக்கு வித்திட்டது என்பதை புத்தகம் தெளிவாக தேவையான வகையில் விளக்கியுள்ள முறைகள், தீவிர வாசகர்களும் அனுபவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இதேபோன்று பிரஞ்சுப்புரட்சியில் முதலாளித்துவம் அதிகாரத்தை கைப்பறிய பிறகு நடந்த தேசிய சட்டமன்றம், அரசியல் நிர்ணய சபை,தேசியபடை, ஜாக்கோபின்கள் கழகம் அதில் உருவான பிரிவுகள் அனைத்தும் ஆழமான வகையில் விளக்கப்பட்டுள்ளது. அன்னியநாடுகள் படையெடுத்த போது தேசிய படைகள் புரட்சிபாடல்களை பாடி அணிதிரட்டியது, போதியபாதுகாப்பு உடைகளின்றியே தொழிலாளர்கள் யுத்தத்தில் பங்கேற்றது மட்டுமல்ல பாரீஸ் தொழிலாளர்கள் மாதம் 650 துப்பாக்கிகளை உற்பத்திசெய்த நிலையைமாற்றி மாதம் 16000 துப்பாக்கிகளையும்,20000 கிலோ வெடிமருந்துகளையும் தயாரித்துகொடுத்து வெற்றிவாகைசூடினர். தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயிகளையும் முதலாளிவர்க்கம் எப்படி தனது வெற்றிக்கு பயன்படுத்தி விட்டு. அவர்களை கழுத்தை அறுத்து ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்தது என்ற பதிவு முக்கியமானது. இதேவகையில், சாசன இயக்கத்திற்கு முன்பாக நடைபெற்ற அனை வருக்கும் வாக்குரிமை என்ற இயக்கம் தீவிரதன்மை வாய்ந்த தொழிலாளர்களின் தலைமைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதிலிருந்த முதலாளிகள் பலபிரித்தாளும் காரியங்களை கையாண்டனர்.1832-க்குபிறகு தொழிலாளி வர்க்கம் தலைமையில் சாசன இயக்கம் அரசியல் இயக்கமாக வீறுகொண்டு எழுந்தபோது  அவற்றை  அடக்கியமுறையும் தொழிற்சங்கத்தை தடைசெய்து தணடித்தது,அதற்குத் தலைமை தாங்கியவர்களை விலைபேசிய தன்மைகளும், மூலதனத்தை தோலுரித்துக் காட்டுகிறது. சாசன இயக்கத்தில் தலைதூக்கிய தார்மீககட்சியினர், பலப்பிரயோக கட்சியினர், ஜனநாயகப் பிரிவினரின் போக்குகள் இயக்கத்தின் உள்முரண்பாடுகளை புரிந்துகொள்ள உதவுகிறது. மார்க்சும், எங்கல்சும் சாசன இயக்கத்தில் தொடர்பை ஏற்படுத்தி இடதுசாரி பிரிவினருடன் இணைந்து செயல்பட்டனர்.முதலாளித்துவ வர்க்கம் காலனி நாடுகளில் அடித்த கொள்ளையால், தகுதிவாய்ந்த ஆங்கிலேயே தொழிலாளி வர்க்கத்தின் நிலையை உயரச் செய்தது. ஒரு பகுதி தொழிலாளர்களை வசதியானவர்களாக மாற்றியது. இதனாலும், ஒரு உறுதிமிக்க பாட்டாளி வர்க்க ஆட்சி இல்லாததாலும் சாசன இயக்கம் பின்னடைவை சந்தித்தது என்று மார்க்ஸ் கூறினார். இன்றும்கூட ஆளும் வர்க்கம் இதுபோன்ற தந்திரங்களை கையாள்வதை நாம் உணர வேண்டும்.சாசனஇயக்கம் தனிமைப்பட்டபோது சாசன கோரிக்கைகளுக்ககாக நடத்தும் அரசியல் போராட்டத்தை தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட பொருளாதார போராட்டங்களுடன் ஒன்றிணைப்பது அவசியம் என்று மார்க்ஸ், எங்கல்ஸ் என இருவரும் கருத்து தெரிவித்தனர். இங்கிலாந்து நாடானது சாசனஇயக்கம் என்ற முதலாவது பரந்துபட்ட உண்மையான வெகுஜன மற்றும் திட்டவட்டமான அரசியலைக் கொண்ட பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்தை உலகிற்கு அளித்துள்ளது என்று லெனின் மதிப்பீடு செய்தார். சாசனஇயக்கம் என்ற புத்தகத்தில் மேற்கண்ட அம்சங்கள் தீவிரவாசகர்களுக்கும் பயனுள்ளதாகும்.

               இரண்டாவதாக, இந்த மூன்றுபுத்தகங்களிலும் நிலபிரபுத்துவத்தின் கொடுமைகள் மனதை நெருடும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.  மன்னர்களையும் மகாராஜாக்களையும் துதிபாடி மக்களாட் சியின் மகத்துவர்களாக சிததரிக்க முயலும் இந்தக் காலத்தில் நிலபிரபுத்துவத்தின் கோரமுகங்களை நினைகூர்வது நமது கடமை.பிரஞ்சுப்புரட்சி  புத்தகத்தில்,  நீதிபதிகளுக்கு பகிரங்கமாக விலை நிர்ணயிக்கப்பட்டது. 400 வகையான சட்டங்கள, சட்டத்திற்கு மேலே ஆளும் வர்க்கம் இருந்தது. அனைத்து சட்டங்களும்  மூன்றாவது எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட 92 சதமான மக்கள் மீதான அடக்குமுறைக்கே பயன்பட்டது. சிறிய குற்றங்கள் அல்ல தவறுகளுக்குகூட சக்கரத்தை ஏற்றி எலும்பை முறிப்பது, கையை நறுக்குவது, காதுகளை அறுப்பது, என கொடிய தண்டனைகள் சாதாரணமாக நிறைவேற்றப் பட்டது. தவளைகள் கத்துவதால் நிலபிரபுக்களின் தூக்கம் கெடுகிறது.விவசாயி கள் இரவெல்லாம் தவளைகளை விரட்டிட வேண்டும். மீறி தவளைசத்தம் கேட்டால் விவசாயிகள் காது அறுக்கப்படும். கடும் தண்டனைக்கு உள்ளா வார்கள். பட்டினியில் மடிந்து கொண்டிருந்த மக்கள் ஊர்வலமாக சென்று உணவுகேட்டபோதுஇதோஇங்கே இருக்கிற புல்லைத் திண்ணுங்கள் என்று கூறிய நிலபிரபுத்துவ அதிகாரிகள். இந்தியாவில் கூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், எலி திண்ணாலும் திண்ணட்டும, அழுகி வீணாகினாலும் ஆகட்டும் ஏழைகளுக்கு உணவளிப்பது என் வேலை அல்ல என்று மன்மோகன் சிங் அடம்பிடித்தது  லூயி மனனனை நமக்கு நினைவூட்டுகிறது,
               இங்கிலாந்தில் கிராமங்களில் கோட்டை போன்ற இடங்களை உருவாக்கி விவசாயிகளை அதற்குள் வசிக்கவும் கட்டாயப்படுத் தினர் .வேலைசெய்யும் இடத்தை  (றடிசம டிரளந) உருவாக்கி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என தனித்தனியாக பிரித்து கல்உடைத்தல், எலும்புகளை பொடியாக்குதல், போன்ற கடின வேலைகளை கொடுத்தனர். கால்வயிறு உணவளிததனர். பட்டினி தாளாமல் அவர்கள் எலும்புளில் இருந்த மஜ்ஜைகளை நக்கித்தின்றனர். பட்டினியால் மடிந்தனர்.                                                                                                                 

ரஷ்யப்புரட்சி புத்தகத்தில் அடிமைகள் மற்றும் சார்மன்னனின் அடக்குமுறைகள் தொழிற்கூடத் திலும் கல்லூரிகளிலும் எப்படி இருந்தது என்பது விளக்கப்பட்டுள்ளது. தூக்குமேடைகள், நாடுகடத்தல் என்பது சாதாரணமாக நிறை வேற்றப்பட்டுள்ளது. அயர்லாந்து  விடுதலைப்போராட்ட புத்தகத்தில்  நிலபிரபுத்துவ கொடுமைகளை சகிக்கமுடியாத வகையில் உள்ளது.அவர்கள் காட்டை அழித்து உருவாக்கிய விளைநிலங்களை சிதைத்தனர்.காடுகளையும் மேய்ச்சல் நிலங்களையும் கைப்பற்றி அம்மக்களை விரட்டினர். கம்பளி தொழிலுக்காக 96 லட்சம் ஆடுகளுக்காக 11 லட்சம் அயர்லாந்து மக்களை விரட்டியடித்த கொடுமைகளை மார்க்ஸ்  அம்பலப்படுத்தியுள்ளார். கொடூர சுரண்டலால் பஞ்சம். பஞ்சத்தால் 20 சதம் மக்கள் மரணம்.

              மூன்றாவதாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பில் மேல்கட்டுமானமாக இருந்த மதம் பொருளாதார சுரண்டலின் கருவியாக செயல்பட்டது என மார்க்ஸ் கூறியுள்ளார்.இதற்குரிய பலதகவல்களை இப்புத்தகங்களில் ஆசிரியர் கொடுத்துள்ளார். பிரஞ்சுபுரட்சி புத்தகத்தில் மதக்குருக்கள் முதலாவது எஸ்டேட் என்ற முதல் நிலையில் இருந்தன்ர்.இவர்கள் ஆடம்பர வாழ்வில் திளைத்தனர். சர்ச்சின் வருமானம் முழுவதும் ஆர்ச்பிஷப்களுக்கும், பிஷப்களுக்குமே சென்றது.இத்துடன் இவர்களின் அனைத்து சொத்துக்களுக்கும் லூயிமன்னன் வரிவிலக்கு அளித்திருந்தான்.ஒரு ஆர்ச்பிஷப்பின் வருமானம் மூன்று லட்சம் டாலர். இருநூறுபேர்கள் உண்ணும் உணவுக்கூடம்.நூற்றி எண்பது குதிரைகள் என தனிராஜியமே நடத்தினர். சர்ச்கள் தனியாக விவசாயிகளிடம் வரிவசூல் நடத்தினர், சுங்கச்சாவடிகள் அமைத்து வணிகர்களிடம் வரிவசூலித்த னர்.தனி நீதிமன்றங்கள் தர்பார்கள் நடத்தினர் என்றால் மதத்தின் பங்கை  பொருளாதார சுரண்டலில் அறியமுடியும். இங்கிலாந்தில் மடாலயங்கள் ஒவ்வொரு பாதிரியாரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது.இது பேரிஷ்(யிசளை) என்று அழைக்கப்பட்டது. இற்றின்கீழ் நிலங்கள் இதர சொத்துக்களும் இருந்தன. இவைதவிர வேலைசெய்யும் இடம் (றடிசமாடிரளந) என்ற குழந்தைகளை யும் பெண்களையும் கசக்கிபிழியும் இடமும் இவர்களுக்கு கீழ் செயல்பட்டது.இந்த பேரிஷ் என்ற பகுதியில் கிடைக்கும் வருமானத்தை மூன்றில் ஒருபகுதி ஏழைமக்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும்  என்ற விதிமுறைகள்கூட அப்பட்டமாக மீறப்பட்டன.
                         நான்காவதாக, அறிவுஜீவிகள் மற்றும்  கலை இலக்கிய படைப்புகள் பங்கு இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிரெஞ்சு புரட்சியில் ரூசோ, மாண்டஸ்க்கியு, வால்டர், தீதரோ சிந்தனைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. வால்டர் மற்றும் தீதரோ இருவருக்ககுமான  வேறுபாடுகள் குறிப்பிட்டுள்ள முறைகள் அதாவது  சொல்லவந்த பொருளோடு இணைந்தே செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. வால்டேர் மதபீடங்களை கடுமையாக சாடினார். ஆனால் மதத்தின் இருத்தலை நியாயப்படுத்தினார்.தீதரோ மதபீடங்களையும், மதத்தையும் சாடியதுடன் பொருள்முதல்வாத சிந்தனைகளுக்குமுக்கியத்துவம் கொடுத்தார்.எனவேதான் இவரின் கலைக்களஞ்சியத்தை மன்னன்  தீயிட்டுக் கொளுத்தினான். இந்த அளவிற்கு இல்லை என்றாலும் ரஷ்யப்புரட்சி புத்தகத்திலும் அறிவிஜீவிகளின் பங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. சாசனஇயக்கத்தில்  இவர்களின் பங்கை ஓரளவு குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
                     
 இம்மூன்று புத்தகங்களிலும் கையாளப்பட்ட விஷயங்கள் மாறுபட்டகாலம், இடம், வர்க்க நலன்கள் என்று இருந்தாலும், சாதாரண மற்றும் தீவிரவாசகர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நிலபிரபுத்துவத்தின் கொடுமைகள் மூன்றிலும் படம்பிடித்துகாட்டப் பட்டுள்ளது ரஷ்யப்புரட்சி புத்தகத்தில் மக்களை சுரண்டியதில் மதத்தின் பங்கு போதுமாக அளவு இடம்பெற வில்லை .கூடுத லாக ,வந்திருக்கலாம். நரோதினிய தோற்றச்சூழலை சரியாகவே சுட்டியிருக் கும் நிலையில் அதன் தாக்கம் ரஷ்யசமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும் என கருதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...