Pages

ஞாயிறு, நவம்பர் 28, 2010

நவ.28.பிறந்ததினம் எங்கல்ஸ்:வரலாற்றைப் புரட்டிப்போட்டவன்.


                                                                  அ.பாக்கியம்
          
    என்னால் போராட்டத்தில் ஈடுபடமுடியாத அந்த வினாடி                             என்னை மரணம் தழுவிக்கொள்ளட்டும் 
             
           என்று உலக உழைப்பாளி மக்களின் தத்துவத்தை உருவாக்கிய அந்த மாபெரும் ஆசான் பிஃடரிக் எங்கல்ஸ் இப்படித்தான்  மரணத்திற்கு அழைப்பு விடுத்தார்.அவரைப் பொறுத்தவரை வாழ்வது என்பது வேலை செய்வது, வேலை செய்வது என்பது போராடுவது.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற வள்ளுவனின் குறளை நிஜமாக்கியவர் ஏங்கல்ஸ். ஐரோப்பாவில் நிலபிரபுத்துவத்தை முதலாளித்துவம் நிர்மூலமாக்கி கொண்டிருந்த காலத்தில் ஜெர்மானியில் உப்பெர்தல் என்ற சிற்றூரில் 1820 நவ.28-ல் பிறந்தார் எங்கல்ஸ். தந்தையின் கடுமையான கட்டுப்பாட்டில் குடும்பம் அஞ்சி நடுங்கியது.தந்தை தீவிரமதப்பற்றாளர். எங்கே கட்டுப்பாடுகள் அதிகமோ அங்கே சுதந்திர வேட்கையும் தீவிரமாக இருக்கும். இறுக்கமான குடும்ப சூழலில்தான் எங்கல்ஸ் தனது இளமைக்காலத்தை கடத்தினார். ஆனாலும் அறிவுத்தாகம், சுரந்திரச்சிந்தனை, விடாமுயற்சி ஆகியவை இளமையிலேயே அவரிடம் நிறைந்து காணப்பட்டது. 15-வது வயதில் எங்கல்சின் நடவடிக்கையில் அவரது தந்தை சந்தேகம் கொண்டார். ஒரு நாள் மகனின் பெட்டியை சோதனையிட்டு, வேதனைப்பட்டு தனது மனைவியிடம் தெரிவித்தார் என்ன தண்டனை கொடுத்தாலும் அவன் கீழ்படிய மறுக்கிறான். அவனது பெட்டியில் பதிமூன்றாம் நுற்றாண்டு பிரபுகுல வம்சத்தைச் சேர்ந்த வீரர்களை பற்றிய நவீனத்தை கண்டேன. கடவுள் அவனை காப்பாற்றட்டும் . என்றார்.
அக்காலத்தில் மதநூல்களைத்தவிர வேறு எதையும் படிப்பது தவறு மட்டுமல்ல மாபெரும் குற்றமாக கருதப்பட்டது. நாடகம், நடனம், கதைகள் படிப்பது கூட எங்கல்ஸ் வாழ்ந்த உப்பெர்தலில்(நதிதீரப் பள்ளத்தாக்கு) மதவிரோத செயலாக கருதப்பட்டது.இவரது சிற்றூரில் சமுக நடவடிக்கைகளை மதவேடதாரிகளே நிச்சயித்தனர்.சகிப்புத் தன்மையற்ற பைட்டிசம் என்ற கிறிஸ்துவமதப்பிரிவு இங்கு இருந்தது. இருந்தபோதிலும் ஆலை முதலாளிகள் குழந்தைகளையும், தொழிலாளர்களையும் சுரண்டிய கொடுமையை நேரில் கண்டார். கேள்விகள் எழுந்தன? விடைகள் கிடைக்காததால் கேள்விகள் தொடர்ந்தன . எனவேதான் தனது இளமைக்கால கடிதத்தில் ஊரின் பெருமைகளை மட்டும் பேசித்திரியாமல் உப்பெர்தல் என்பதை முக்கெர்தல்(பாசாங்கு பள்ளத்தாக்கு) என்று வர்ணித்தார் 

               எங்கல்சின் நடவடிக்கை மீது அச்சம் கொண்ட தந்தை அவரை  இறுதிபடிப்பை முடிக்கவிடாமலேயே 1837ம் ஆண்டு வர்த்தகத்திற்கு அழைத்துச்சென்றார். ஓராண்டுகளுக்கு பிறகு பிரேமன் என்ற நகரில் ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தார். அங்கு எங்கல்ஸ் வர்த்தக வேலையோடு தனது சொந்த ஊரில் பங்கேற்க முடியாத நாடகம், நடனம், இசை அரங்குகளுக்கும், நீச்சல், கத்திச்சண்டை, குதிரை சவாரி போன்ற விளையாட்டிலும் ஈடுபட்டு வந்தார். பிரேமன் நகரிலும் உழைப்பாளிமக்களின் வாழ்வை கூர்ந்து கவனித்தார். ஒரு மன்னன் தனது நாட்டில் சிறந்ததாக எதை வைத்திருக்க முடியுமோ அதன் உருவகமே இந்த சாமானியன்தான்  என எழுதினார். 

                தனது மகனின் ஆன்மீக வளர்ச்சி பற்றி கவலை கொண்ட தந்தை அவரை பிரேமனில் உள்ள பாதிரியார் வீட்டில் குடியேற்றினார். பாதிரியின் வீட்டில் வாழ்ந்த எங்கல்ஸ் தனது முன்னோர்களின் மத மூடநம்பிக்கைகள் மீது வெறுப்பு கொண்டார். ஆன்மீக வளர்ச்சிக்கு அனுப்பப்பட்ட அவர், அதன் போலித்தனத்தை புரிந்து கொண்டு மத மூடநம்பிக்கையிலிருந்து முற்றிலும் விடுபட்டார். பைபிளில் தீர்க்க முடியாத முரண்பாடுகள் மண்டிக்கிடக்கின்றன. மதத்தையும் விஞ்ஞானத்தையும் ஒத்துப்போகச்செய்ய முடியாது என்றார் எங்கல்ஸ். இதனால் அவர் அளவற்ற சிரமங்களை சந்திக்க நேர்ந்தது.

இளம் ஜெர்மனி

                இதே காலத்தில் இளம் ஜெர்மனி என்ற அமைப்புகளுடன் எங்கல்சுக்கு  தொடர்பு ஏற்பட்டது. இவ்வமைப்பு இலக்கியத்தை சமூக வாழ்வுக்கும்,  அரசியலுக்கு ஈடுபடுத்த முயன்றதால்  எங்கல்ஸ் இவ்வமைப்பை நோக்கி ஈர்க்கப்பட்டார். ஆயினும் இவ்வமைப்புகளின் கொள்கை முதிர்ச்சி  பெறாமலும், அரசியலில் தெளிவற்றும் இருந்தது. உலக துன்பங்களுக்காக இக்குழுவினர் அழுது புலம்பினர். இவர்களின்ஜெர்மன்தந்தி என்ற பத்திரிக்கையில் எங்கல்ஸ்                       
                                                 கவிதைகளும்,கட்டுரைகளும்எழுதினார்.இக்கட்டுரைகளில்ஆட்சியாளர்கள், மற்றும் சுரண்டல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிதெறிந்தார். ஆஸ்வல்டு என்ற புனைப்பெயரில் வெளிவந்த இக்கட்டுரைகள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.இக்கட்டுரையாளரை அறிய மக்கள் பல யூகங்களை மேற்கொண்டனர். பத்திரிக்கையின் ஆசிரியர்தான் இந்த ஆஸ்வல்டு என நினைத்தைனர். ஞிபலர் பிரபலமான இலக்கியவாதிகளின் பெயர்களை  நினைத்தனர். ஆனால் மக்கள் யூகித்த பிரபலமான இலக்கியவாதிகளையும், இளம் ஜெர்மனி  என்ற அமைப்பின் பலவீனத்தையும் கடுமையாக விமர்சித்து அதே பத்திரிக்கையில் ஆஸ்வல்டு என்ற அதே பெயரில் எங்கல்ஸ் எழுதியபோது மக்களின் யூகங்கள் தவிடு பொடியாகின. உப்பெர்தலின் எறும்பு புற்றை கலைத்தவர் இந்த இளம் எங்கல்ஸ் என்பதை மக்கள் அறிய முடியவில்லை.

 இராணுவ வீரனிலிருந்து இளம் ஹெகல்வாதியா

                  1841ம் ஆண்டு அவரின் தந்தை பெர்லினுக்கு ராணுவ சேவைக்கு எங்கல்சை அனுப்பினார். பெர்லினில் எங்கல்ஸ் பீரங்கிப் படையில் சேர்ந்ததுடன் அப்படையில் சிற்றதிகாரியாகவும் உயர்ந்தார். அவருக்கு விருப்பம் இல்லாத பணி என்றாலும் அவருக்க பல அனுபவத்தை இந்த இராணுவசேவை கற்றுக்கொடுத்தது. ஓய்வு நேரத்தை ஒழுங்காக பயன்படுத்தும் பழக்கம் எங்கல்சுக்கு இருந்ததால் இராணுவ சேவைக் காலத்தில் நேரம் கிடைக்கும்போது பெர்லின் பல்கலைக்கழகத்திற்க சென்று வந்தார். அங்கேதான் அவருக்கு இளம் ஹெகல்யவாதிகளுடன் தொடர்பு கிடைத்தது. இங்கே அவர் மார்க்சை சந்திக்க முடியாவிட்டலும் அவரைப்பற்றி அதிகமாகவே கேள்விப்பட்டார். பெர்லினில்தான் எங்கல்ஸ் இளம் ஜெர்மானியர்களுடன் அதுவரை இருந்த தொடர்பை துண்டித்துக்கொண்டு இளம் ஹெகலியராகவும், பிறகு இடதுசாரி  ஹெகலியர் பிரிவிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். 1842ம் ஆண்டுகளில் இடதுசாரி ஹெகலியவாதிகளுடன்  தீவிர தத்துவப்போராட்டத்தில் ஈடுபட்டார். இக்காலத்தில்ஷெல்லிஸ்டும் திருவழிபாடும்என்ற பிரசுரம் எங்கல்சால் எழுதப்பட்டு பெயர் குறிப்பிடப்படாமல் வெளிவந்தது. இந்த பிரசுரத்தின் மேதாவிலாசத்தைக்  கண்டு ஜெர்மன் ஆண்டு மலரின் ஆசிரியர்  ரூகே, இதை எழுதியவர் சிறந்த அறிவாளியாக,டாக்டராக இருக்கவேண்டும் என கருதி அவர் தனது கட்டுரையில்  இதை எழுதியவரை டாக்டர் என்றே குறிப்பிடுகின்றார். எங்கல்ஸ்  அதைக்கண்டு கூசிப்போனார். உடனே அந்த ரூகேவிற்கு கடிதத்தின் மூலம்  நான் ஒரு டாக்டர் அல்ல. அப்படி ஒருபோதும் ஆகவும் முடியாது. நான் வெறும் வியாபாரி. பிரெஷ்ய மன்னரின் பீரங்கிப் படையாளன்.எனவே இந்த பட்டத்திலிருந்து தயவு செய்து என்னை விடுவித்துவிடுக என்று எழுதினார். அந்த அளவு டாக்டர் பட்டத்தின் மீது உயரிய மரியாதையும் தன்னைப்பற்றிய தன்னடக்கத்தையும் கொண்டிருந்தார் எங்கல்ஸ்.

வர்த்தகத் தளத்திலிருந்து வர்க்கக் களத்திற்கு....

                   1842ம் ஆண்டு அக்டோபர் 8ம் நாள் இராணுவசேவைய் முடித்து சொந்த ஊர் திரும்பினார். உடனே அவரது தந்தை அவரை நாடு கடத்தினார்(?) இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எர்மன்-எங்கல்ஸ் வர்த்தக நிறுவனத்திற்கு வியாபாரத்தில் அனுபவம் பெறவேண்டும் என்று அனுப்பிவைத்தார். அவருக்கோ வர்த்தகத்தில் விருப்பமில்லை என்பது மட்டுமல்ல தொழில் மீது தீராதகோபமும் கொண்டிருந்தார். ஆனாலும் வாய்ப்பை பயன்படுத்தி தனது அறிவுத்தாகத்தை தீர்த்தக்கொண்டார். இங்கு ஏராளமான  ஆய்வுகளில்  ஈடுபட்டார். தொழில்புரட்சி இங்கிலாந்தை முதலாளித்துவ நாடாக மாற்றி இருந்த. அங்கு ஏற்பட்டு வரும் புரட்சிகரமான சூழ்நிலைகளைப் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். மான்செஸ்டர், லீட்ஸ் ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் அல்லலுக்கு உள்ளாகி அடைந்து கிடந்தனர். அத்தெருக்களில் எங்கல்ஸ் அலைந்து திரிந்து தெழிலாளர்களை பற்றி அறிந்துகொண்டார்.இக்காலத்தில்தான்  இங்கி லாநதில் மக்கள் உரிமைகளுக்காக போராடக்கூடிய சாசன இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. இந்த இயக்கத்துடன் எங்கல்ஸ் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டார். சாசன இயக்கத்தின் பலத்தையும், பலவீனத்தையும் மதிப்பீடு செய்து அதிலிருந்தவர்களை பலவீனத்திலிருந்து வென்றெடுக்க முயன்றார். இதேபோல் கற்கனாவாத பிரிட்டிஷ் சோஷலிஸ்டுகளின் தொடர்பும் கிடைத்தது. அவர்களின் ஒழுக்கம் நிறைந்த புத்துலகம் என்ற பத்திரிக்கையில் கட்டுரைகளும் எழுதினார். 1844ம் ஆண்டு மார்க்சும்,ரூகேயும் இணைந்து வெளியிட்ட ஜெர்மன்-பிரெஞ்சு   ஆண்டு மலரில் எங்கல்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனக்குறிப்பு என்ற கட்டுரை வெளியாகிது. இதைபற்றி மார்க்ஸ்மேதமை நிறைந்த முதற்குறிப்பு என்று கூறினார்.

ஆளுமைகளின் சங்கமம்

                       களப்பணி. அறிவு. நட்பு என பன்முகத்தன்மைகொண்ட இருபெரும் ஆளுமைகளின் சந்திப்பு 1844-ல் ஆகஸ்ட் மாதம் பாரிஸ் நகரில் நிகழ்ந்தது. எங்கல்ஸ் மான்செஸ்டரிலிருந்து ஜெர்மனியில் உள்ள தனது ஊருக்கு செல்லுகிறபோது, பாரீசிற்கு சென்று காரல் மார்க்சை சந்திக்கிறார். அவரோடு தங்கி இருந்த அந்த 10 நாட்கள்  நட்பின் இலக்கியம் பல உருவாக இலக்கணமாக அமைந்தது. எங்கல்ஸ் படிப்படியாக பல நாடுகளில் பயணித்து அறிவிஜீவிகளுடன் விவாதித்து, ஆய்வுகளை மேற்கொண்டு விஞ்ஞான  சோஷலிச சத் தத்துவத்தை நோக்கி முன்னேறுகிறார். காரல்மார்க்ஸ் ஆய்வுகளை நடத்தி மறுமுனையிலிருந்து இத்தத்துவத்தை நோக்கி முன்னேறுகிறார். உழைப்பாளி வர்க்க சிந்தனை அவர்களை ஒன்றிணைத்தது. 

                       1842ல் நவம்பரில் கோலோனில் சிறிது நேரம் சந்திப்பு நடந்தது. ஆனால் அவை அவசர சந்திப்புதான்.ஆனாலும் மாக்சை சந்தித்து வீடு திரும்பியவுடன் வீட்டின் கட்டுப்பாடுகள் அவரது சுதந்திர சிந்தனைக்கு, புரட்சிகரமான செயல்பாட்டிற்கும் பெரும்தடையாக இருப்பதை உணர்ந்து 1845ம் ஆண்டு எங்கல்ஸ் வீட்டை விட்டு வெளியேறி புரூசெல்ஸ் சென்றடைந்தார். அதே நேரத்தில் பிரஷ்ய அரசு கோரிக்கையை ஏற்று பிரெஞ்சு அரசு காரல்மார்க்சை நாட்டைவிட்டு வெளியேற்றியது. அவரும் புரூசெல்ஸ் சென்றார்.இந்த சந்திப்பின்போது மார்க்ஸ் வரலாற்று பொருள்முதல் வாதம்  பற்றி முடித்துவைத்திருந்தார். இதை மேலும் விரிவுபடுத்தி ஆய்வுநடத்தி படிப்பதற்காக போதுமான அளவு நுலக வசதி புருசெல்சில் இல்லாததால்  ஆறுவாரப்பயணத்தில் இங்கிலாந்து சென்றனர். மான்செஸ்டர் நூலகத்தில் பெரும்பகுதி நாட்களை செலவிட்டு கடைசியாக லண்டன் போய்ச்சேர்ந்தனர். இங்கேதான் எங்கல்ஸ் தனது புரட்சி நடவடிக்கையின் அடுத்த கட்டத்தில் காலடி எத்துவைத்தார். ஒரு பாட்டாளிவர்க்க புரட்சி கட்சியை முன்னெடுத்துச்செல்ல அவசியம் என்பதை உணர்ந்து அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினார். 

நீதியாளர் சங்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் லீக் நோக்கி

                  லண்டனில் மார்க்சும்-எங்கல்சும் இணைந்து அமைப்புகளை உருவாக்கும் பணிகளில் இறங்கினர். எங்கல்ஸ் தனக்கு இருந்த பழையதொடர்புகளை பயன்படுத்தி இடதுசாரி சாசனவாதிகளுக்கும், நேர்மையாளர் சங்கத்திற்கம் இணைப்பை ஏற்படுத்தும் வேலைகளை செய்தார். இருவரும் புருசெல்ஸ் நகரத்திற்கு சென்று  ஜெர்மன் தொழிலாளர்களை திரட்டி அமைப்பினை ஏற்படுத்தினர். இவ்வமைப்பின்  சார்பில் எங்கல்ஸ் 1846 பாரீஸ் சென்றார். அங்கு பல கற்பனாவாத சோஷலிஸ்டுகளுடன் விவாதம் நடத்தியும், தத்துவப்போராட்டத்தை  நிகழ்த்தியும் பல அமைப்புகளை ஒன்றி ணைக்கும் வேலையில் ஈடுபட்டார். இச்சூழலில் 1847-ல் லண்டனில் செயல்பட்டு வந்த நேர்மையாளரின் சங்கத்தலைவர் யோசிப்மோல் புரூசெல்ஸ் சென்று மாச்சையும், பிரான்ஸ் சென்று எங்கல்சையும் சந்தித்து தனது அமைப்பில் உறுப்பினராக சேரவேண்டும் எனவும் சங்கத்திற்கான புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கிடவும் வேண்டினார். இதன்பிறகு 1847 ஜீன் 2 முதல் 9 வரை சங்கத்தின் காங்கிரஸ் லண்டனில் கூடியது. மார்க்ஸ் பணம் இல்லாததால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்கல்ஸ் பாரீஸ்நகர பிரதிநிதியாக கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் நீதியாளர் சங்கம் கம்யூனிஸ்ட் லீக் என பெயர் மாறியது. எல்லா மனிதர்களும் சகோதரர்களே என்பது உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்  என்றாகியது. இதன்பின் மார்க்சும், எங்கல்சும் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உருவாக்குவதில் ஓராண்டு ஈடுபட்டு 1848 பிப்ரவரியில் உழைப்பாளி மக்களின் பேராயுதமான கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர். அறிக்கை ஐரோப்பிய முதலாளித்துவத்தை ஆட்டம்காணச்செய்ததுடன், தொழிலளாளி வர்க்கத்திற்கு புதுயுகத்தை திறந்தது. மேலும  கற்பனாவாத சோஷலிசத் திற்கு எதிரான உக்கிரமான யுத்தம் முடிவுக்கும் வந்தது. களமும்-கருவியும் மாறுகிறது

                     1848-49பிரான்சில் வர்க்கப்போராட்டமும் ஐரோப்பாவில் தொழிலாளர் எழுச்சியும் தீவிரமாக நடைபெற்து.எங்கல்ஸ் இப்போராட்டத்தில் நேரடியாக களத்தில் இறங்கினார். நூலகத்திலிருந்து  யுத்தகளத்திற்கு சென்றார். பிரான்சில் புரட்சியை துண்டியதற்காக அரசு  எங்கல்சை வெளியேற்றியது. அவர் புருசெல்ஸ் நகருக்கு சென்று அங்கு மார்க்ஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இயக்கம் நடத்திவிட்டு மீண்டும் பாரீஸ் வந்தார். பிரான்சில் 400-க்கும் மேற்பட்ட ஜெர்மானிய தொழிலாளர்களை அணிதிரட்டி ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கைகளை  தயாரித்து அவர்களது ஒவ்வொருவரின் கையிலும் கொடுத்து ஜெர்மனி புரட்சிக்கு, தொழிலாளர்களை அணிதிரட்ட அனுப்பி தானும் ஜெர்மனி சென்றார். ஜெர்மனியில் தொழிலாளர் புரட்சியை தீவிரப்படுத்த ஒரு பத்திரிக்கை அவசியம் என உணர்ந்து 1848 ஜீன்-1 ல் புதிய ரைன் பத்திரிக்கை மாச்கை ஆசிரியராக கொண்டு வெளிவந்தது. எங்கல்ஸ் அரசியல் கட்டுரைகளை இலக்கிய நயத்துடன் இப்பத்திரிக்கையில் எழுதினார்.

                       ரைன் மாநிலத்தில் புரட்சி தீவிரமாவதைக் கண்டு ராணுவம் குவிக்கப்பட்டது. பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. எங்கல்ஸ் தலைமறைவாக வேண்டும் என கட்சி உத்தரவிட்டது. எங்கல்ஸ் ரகசியமாக புருசெல்ஸ் செல்லும் போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அங்கிருந்து பாரிசிற்கு சென்ற போது  பாரீஸ் புரட்சி தோல்வி கண்டு பிரான்ஸ் இறந்து கிடந்த காட்சியைக் கண்டு என மனம் நொந்து பணம் இல்லாத நிலையிலும் கால்நடைப் பயணமாக ஸ்விட்சர்லாந்து சென்றார். அங்கிருந்தபடியே ஹங்கேரி புரட்சி பற்றியும், ஸ்விட்சர்லாந்து பற்றியும்  ரைன் பத்திரிகைக்கு கட்டுரை  எழுதினார். 1849 ஜனவரி ஜெர்மனி திரும்பியவுடன் ஒரே மாதத்தில் மாச்கும், எங்கல்சும்  கைது செய்யப்பட்டு வழக்ககு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் மார்க்சும், எங்கல்சும் வாதாடி விடுதலை பெற்றனர். இந்த வழக்கில் இவர்களின் வாதத்திறமை காணக்கண்கோடி வேண்டும் என சமகாலத்தவர்கள் வர்ணிக்கின்றனர்.

                    விடுதலையான பிறகு சோர்ந்து விடவில்லை. ஐரோப்பாவின் எழுச்சிக்கு திட்டம் தீட்டினர். ஹிதேகாலத்தில்  ரைன்  மாநிலத்தின் ஒரு பகுதியில் நடைபெற்ற புரட்சிக்கு எங்கல்ஸ் நேரடியாக சென்று புரட்சிப்படைகளை ஒருங்கிணைத்தார். மீண்டும் தென்மேற்கு ஜெர்மனி  சென்று புரட்சியை விரிவுபடுத்தும் பணியை செய்தார்.  அதன் பிறகுஇருவரும் பிரான்சை நோக்கி சென்றனர். அங்கு மீண்டும் இருவரும் கைது செய்யப்பட்டு விடுதலை ஆனார்கள். இதன்பின் மார்க்ஸ் பிரான்ஸ் சென்றார். எங்கல்ஸ் அங்கு நடந்த தொழிலாளர்களின்  ஆயுதம் தாங்கிய புரட்சியில் கலந்து கொண்டார். எங்கல்ஸ் புரட்சிக்படையில் கலந்துகொண்டது புரட்சி வீரனாக மட்டுமல்ல. இராணுவத்தில் பணிபுரிந்தபோது அது பற்றிய அறிவும், யுக்திகளையும் தெரிந்து வைத்திருந்தார் என்பதும் முக்கிய காரணம். எனவே அவர் தடையரண் உருவாக்குவது, பின்புலத்தை தயாரிப்பது உட்பட ஒரு புரட்சிப்படையை வழிநடத்தும் தலைவனாக இருந்து வழிநடத்தினார்.

 நட்பின் இலக்கணம்
                  
                1848-49 புரட்சிக்கு பிறகு ஐரோப்பா அடங்கி இருந்தது. பொருளாதார ரீதியில் எங்கல்ஸ் மார்க்ஸ் இருவரும் சிரமப்பட்டனர். எனவே, தன்னைவிட வறுமையில் வாடும் மார்க்ஸ் குடும்பத்தை பாதுகாக்க அவரது பொருளாதார ஆய்வுப்பணி தடங்களின்றி தொடர எங்கல்ஸ் மீண்டும் 1850-நவம்பவரில் மான்செஸ்டரில் வர்த்தக நிறுவனத்திற்கு சென்றார். முதலில் பிரதிநிதியாக, பிறகு பொறுப்புள்ள பிரதிநிதியாக, பிறகு 1864ல் தந்தை இறந்த பிறகு பங்குதாரராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து 20 ஆண்டுகாலம் இதில் ஈடுபட்டார். நாய்த்தனமான வர்த்தகம என எரிச்சலோடு நண்பர்களுக்கு எழுதினார். இக்காலத்தில் இவரது மனைவி அயர்லாந்து தேசத்தை சேர்ந்து மேரிபேர்ன்ஸ் தான் உறுதுணையாக இருந்தார். இவரும் 1863-ஜனவரியில் இதயநோயால் இறந்தபோது எங்கல்ஸ் துடித்துப்போனார். அவளுடன் கூடவே எனது இளமையில் கடைசித்துளியையும் புதைத்து முடித்துவிட்டதாக உணர்கிறேன் என்று மார்க்சுக்கு எழுதினார். எனினும் மார்க்ஸ் குடும்பத்தை காப்பாற்றவும்   மூலதனம் நூலை முடிக்கவும் அவர் வர்த்தகத்தில் தொடர்ந்தார். நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெல்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார்.தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், ஏழ்மையின் பாரத்தால் நசுக்கப்பட்டு மாண்டே போயிருப்பார்என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறினார்.

ராணுவ நிபுணன்

                   மான்செஸ்டரில் வேலை செய்த இக்காலத்தில் ஏராளமான ராணுவ நூல்களை கற்று கட்டுரைகளை எழுதினார். இவ்விஷயங்களை  பின்னாளில் புரட்சிக்கான தேவை எனற உணர்வோடு கற்றார். 18-ம் நூற்றாண்டின் இராணுவக்கலையின் வளர்ச்சி பற்றியும், ஐரோப்பிய இராணுவ தன்மை, பிரான்ஸ-ஆஸ்திரிய போர் பற்றி 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை இக்காலத்தில் எழுதினார். இவரின் இராணுவ அறிவைப்பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகையில் இன்னும் சில காலத்திற்கு இந்தப்போர் (பிரெஞ்சு-பிரஷ்ய)நீடிக்குமானால் லண்டனில் உள்ள ராணுவ வல்லுநர்களில் தலைசிறந்தவனாக நீயே கருதப்படுவாய் என்று எழுதினார். இக்காலத்தில்தான்  எங்கல்ஸின் நண்பர்கள் அவருக்கு ஜெனரல்என பட்டப்பெயர் சூட்டினார்கள்.

பன்மொழிப்புலவர்

                  எங்கல்ஸ் ஏற்கனவே ஐரோப்பாவின் அடிப்படை மொழிகளை கற்றிருந்தார். கிரேக்கம், லத்தீன் அறிந்திருந்தார். 1856ல் ருஷ்ய மொழியை கற்றார். கிரிமிய யுத்தம் காரணமாக கிழக்கிந்திய பிரச்சனைகளை அறிய பாரசீக மொழியை கற்றார். இதோடு பண்டைய ஜெர்மானிய மொழியையும் கற்றார். 1864ல் டென்மார்க் பகுதியில் நடைபெற்ற போரால் ஸ்காண்ட்நேவிய மொழி பயின்றார். அறுபதாவது வயதில் முதல் அகிலத்தில் அயர்லாந்து பிரச்சனை எழுந்தபோது அது பற்றி அறிய ஐரீஷ் மொழி மற்றும் டச்சு மொழிகளும்  தனது வாழ்வின் அந்திமக்காலத்தில் ருமேனியாவிலும், பல்கேரியாவிலும் சோஷலிச அமைப்புகளுக்கு வழிகாட்டி ருமேனிய, பல்கேரிய மொழியை பயின்றார். எங்கல்ஸிற்கு 20 மொழிகள் தெரியும். 12 மொழிகளில் பேச, எழுத புலமை பெற்றிருந்தார். எட்டு மொழிகளில் படிக்க கற்றிருந்தார். வெறும் மொழிகளைமட்டும் பயிலாமல் அந்த நாட்டு வரலாறு.  இலக்கிய வரலாற்றோடு பயின்றார். எங்கல்சின் இந்த புலமை ஒப்புநோக்கு மொழியியலுக்கு உதவியது. எங்கல்சின் சிறந்த படைப்பான குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற கண்டுபிடிப்பிற்கும், மொழிகளை பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்திற்கும், பின்னாளில் அவர் முதல் அகிலத்தில் பணியாற்றவும் இப்புலமை உதவியது. இத்துடன் எங்கல்ஸ் இலக்கியம், கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டி ருந்தார்.

முதல் அகிலத்தில்

                  1870 செப்டம்பரில் வர்த்தகத்தை விட்டுவிட்டுஅளவிடமுடியாத மகிழ்வுடன் மார்க்ஸ் இல்லத்திற்கு அருகே குடியேறினார். அங்கிருந்து அகிலத்தின் வேலைகளை செய்தார். பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, டென்மார்க்,ஆகிய நாடுகளுக்கு கட்சியை கட்ட உதவினார். இருவரும் பாரீஸ் கம்யூன் எழுச்சிக்கு கடினமான உழைத்தனர்.எழுச்சிக்கும், கம்யூனை நடத்தவும் சாத்தியமான அளவு வழி காட்டினார்கள்.
                           
                     காரல்மார்ஸ் பொருளாதாரத்துறையில் ஆய்வை மேற்கொண்ருந்த போது, இயற்கை விஞ்ஞானத்தில் எங்கல்ஸ் ஆய்வுகளை மேற்கொண்டார். இச்சூழலில் எங்கல்ஸ் மனைவி மேரிபேர்ன்ஸ் மறைவிற்கு பிறகு அவரது தங்கை  லீசிபேர்ன்ஸ்-ஐ திருமணம் செய்திருந்தார். அவர்  1878ல் மறைந்தது மேலும் தனிமைக்குள்ளாக் கியது. இவர் அயர்லாந்து  பிரச்சனை ஆய்வுக்கு அதிகம் உதவியவர் என்று எங்கல்ஸ் எழுதுகிறார். இதை அடுத்து                           1883 மார்ச் 14-ல் மார்க்சின் மடிறவு எங்கல்சுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திற்கு. இருந்தாலும் தனது லட்சியத்தை அடைய அயராது உழைத்தார்.
1883 மார்க்ஸ் மறைவிற்கு பிறகு எங்கல்ஸ் 12  ஆண்டுகள் வாழ்ந்தார். ஒரு புறம் மார்க்ஸ் விட்டுச்சென்ற ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். மறுபுறம் வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்க அமைப்புகளுக்கு உதவிட நேரத்தை செலவிட்டார்.
                      
                 காரல் மார்க்ஸ் மூலதனத்தின் முதல் பகுதியை வெளியிட்டார். இரண்டாவது மூன்றாவது தொகுதி கையெழுத்து பிரதியாகவே இருந்தது. இதை சரிபார்த்து அதற்கு தேவையானவற்றை சேர்த்து வெளியிட வெகுகாலம் எடுத்தது. இதற்காக இரவும் பகலும் உழைத்தார். இதோடு மூலதனத்தில் முதல் பகுதியின் மொழிபெயர்ப்பு வேலைகளையும் செய்தார். இக்காலத்தில் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற சிறப்பு வாய்ந்த நூலை எழுதி முடித்தார்.

                               வயது முதிர்ந்த காலத்திலும் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு பயணித்து இயக்க வேலைகளைச் செய்தார். பல நாடுகளில் இவருக்கு தொழிலாளர் அமைப்புகள் பாராட்டுகள் தெரிவித்தபோது இந்த பாராட்டுக்கள் அனைத்தும் மார்க்சையே சாரும் என்று அவருக்கே அர்பணித்து அவரின் பங்கை நிலைநாட்டுவார். மார்க்ஸ் விதைத்த விதைகளில் விளையும் புகழையும், கீர்த்தியையும் நான் அறுவடை செய்ய நேர்ந்திருக்கிறது என்று பல இடத்தில் கூறுவார். இரண்டாவது அகிலம் நிறுவப்பட்ட பிறகு எங்கல்சின் கட்சி அரசியல் பணிகள் அதிகமாயின. எங்கல்ஸ் உயிரோடு இருந்தவரை நிரந்தர அமைப்பை அகிலத்தின் காங்கிரஸ் ஏற்காததால் சித்தாந்த வேலையோடு பல நாடுகளுக்கு சென்று தனித்தனியான வழிகாட்டுதல் செய்ய 
வேண்டிய பொறுப்பு வந்தது.

                         இதனால் அவர் இயற்கையின் இயக்க இயல் என்ற நூலை  முடிக்கவில்லை. இதோடு அவர் இன்னும் பல நூல்களை எழுத திட்டமிட்டிருந்தார். ஜெர்மன்   சமூகத்தில் வன்முறையின் பாத்திரம்,  மார்க்ஸ் வரலாறு, முதல் அகிலம், மூலதனம் 4ம் தொகுதி என பலவற்றை எழுதுவதற்கு எத்தனித்திருந்தார்.

                    ஆனால், இதோ, 1895ம் ஆண்டு ஆகஸ்ட் 5 இரவு 11 மணிக்கு போராட முடியாத அந்த நிமிடத்தில் மரணம் அவரை தழுவிக் கொண்டது, உழைப்பு நின்று போனது. ஆனால் அவரின் சிந்தனைகள் பல புரட்சிகளை வெற்றிபெறச்செய்து வருகிறது. பிரடெரிக் எங்கல்ஸ் தனது 75 ஆண்டுகால வாழ்வில் கவிஞனாக, தத்துவஞானியாக, ஸ்தாபகராக, புரட்சிவீரனாக, இராணுவநிபுணணாக,பன்மொழிப்புரவ னாக,பலபரிமானங்களை பெற்றுள்ளார். உழைப்பாளி மக்களின் விடுதலைக்கு வித்திட்டவனாக இன்றும் நம்மிடம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்று நவம்பர் 28 அவரின் பிறந்த நாள். மரணம் தழுவிக்கொள்ளும் வரை உழைப்போம், போராடுவோம்..                                                                        ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...