Pages

திங்கள், நவம்பர் 22, 2010

உலகளாவிய உரிமைக்குரல்-1

                                                          அ.பாக்கியம்

 (தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய, மகத்தான பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி புதிய தரிசனம், சாசன இயக்கம், உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு, அயர்லாந்து எண்ணூறு ஆண்டுகள் விடுதலைப்போர், நீதிக்காக போராடும் பாலஸ்தீன மக்கள் ஆகிய ஆறு நூல்களை முன்வைத்து 02.10.2010.அன்று நடைபெற்ற தமுஎகச தென்சென்னை மாவட்ட ஆய்வரங்கில் சமர்ப்பித்தது)

கடவுள்களால் கடந்த காலத்தை அழிக்க முடியாது. அத்தகைய வலிமை அவர்களுக்கு கிடையாது என்று ஆப்பிரிக்க அறிஞன் அகதான் கூறினான். வரலாறு அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துவதுதான் இந்த கருத்தின் அர்த்தமாகும். வெற்றி பெற்ற மன்னர்கள்.தலைவர்கள் கடந்தகால வரலாற்றை அழித்துவிட்டு தங்களது வசதிக்கேற்ற வரலாற்றை எழுதுவர். இந்தவித அழிப்புக்கு எதிரான தொடர்ந்து வரலாற்றினை பாதுகாக்கும் போராட்டமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையிலேயே மேற்கண்ட புத்தகங்களையும் ஆசிரியர் படைத்துள்ளார்.
வரலாறு என்றால் மன்னர்கள், தளபதிகள், தலைவர்களின் சாதனைகள் என்ற கருத்துமுதல்வாத சித்தாந்தங்கள் இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆளும் வர்க்கமும் இதையே நிலைநாட்ட விரும்புகிறது. ஆசிரியர் மேற்கண்ட புத்தகங்களில் மக்களின் வரலாற்றை, அக்கால பொருள் உற்பத்தி முறையின் பின்னணியோடு விளக்கியுள்ளார். இது நாள் வரையிலான வரலாறுகள் அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறே என்ற மார்க்சிய பார்வையுடன் கூடிய பதிகவுளை நிலைநிறுத்தியுள்ளார்.
முதலாளித்துவ வர்க்கத்தினர் அனைத்தையும் ஒரு விற்பனைக்கான சரக்காக மாற்றி வருகின்றனர். வரலாற்றை எழுதுவது என்பதையும் அவ்வாறே செய்து விடுகின்றனர் என்று ஏங்கெல்ஸ் எழுதினார். இந்தியாவில் இன்றைய ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவும், தக்க வைக்கவும் நடைபெறும் அரசியல் வியாபார சந்தையில் வரலாற்று  வணிகம் அமோகமாக விலைபோகின்றது. வரலாற்றின் வடுக்கள் வலிமையானது மட்டுமல்ல எதிர்கால திசையை தீர்மானிக்க கூடியதுமாகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தை அறிந்த கொள்ளாமல் எதிர்கால பாதையின் இலக்கை எந்த ஒரு இயக்கமும் தீர்மானிக்க முடியாது. வரலாற்றை அணுகும் முறை, ஆய்வு செய்யும் முறை, பயன்படுத்தும் முறை முக்கியமான ஒன்றாகும். அதைவிட வரலாறு யாரால் எழுதப்படுகின்றது? யாருக்காக எழுதப்படு கின்றது என்பது பிரதான கேள்வி? வெற்றி பெற்றவர்களாலும், உயர்குடி மக்களாலும், அரசு சார்ந்த வரலாறுகளும்தான் இன்று அதிகமாக போதிக்கப்படுகின்றது.    வெற்றி கொண்டவர்களே சரித்திரம் எழுதும் சம்பிரதாயத்தை உடைத்தெறிவதற்காக இந்த என் மக்களின் கதை உதவிடும் என்று நம்புகிறேன் என்று அலெக்ஸ்ஹேலி ஏழு தலைமுறைகள் நாவலின் கடைசிவரியில்  முடித்தான்.
இங்கே ராமகிருஷ்ணன் எழுதியுள்ள மேற்கண்ட நூல்கள் அடித்தட்டு மக்களை முன்வைத்தே பேசப்படுகின்றது. வரலாற்றாளன் நிகழ்வுகளை பதிவு செய்வான். கலைஞன் உண்மைகளை தேடுவான் என்ற கூற்றுக்கேற்ப இராமகிருஷ்ணன் வரலாற்றாளனாகவும், கலைஞனாகவும் இப்புத்தகத்தின் வழியே காணப்படுகின்றார்.நிகழ்வுகளையும் பதிவுசெய்கிறார் புள்ளிவிபரங்களையும் பதிசெய்கிறார். அதற்கு பின்னால் உள்ள வர்க்க நலன்களையும் அம்பலப்படுததுகிறார்.
மேற்கண்ட ஆறு தலைப்புகளில் பல புத்தகங்களும், ஆய்வுகளும் வெளிவந்துள்ளது. ஆனால், இந்நூல்கள் புதிய வாசகனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும் தேவையான அளவு விஷயதானங்களையும், வாசிப்பு தன்மை குன்றாமல் கொடுத்துள்ளார்.
வரலாற்று நூலுக்கு காலவரையரை மிகமுக்கியமானது.காரணம் காலமும்,அக்காலத்தில் ஏற்படும் மாற்றமும் நாம் அறியஉள்ள விஷயங்களை துல்லியமாக் நமக்கு வழங்குகின்றன. பிரெஞ்சுபுரட்சி, ரஷ்யபுரட்சி, சாசன இயக்கம், முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு ஆகிய நான்கு நூலுக்கும் அதற்குரிய காலத்தை அதற்குரிய பின்னனியோடு வரையறுத்துள்ளார். மற்ற இருநூல்களான அயர்லாந்து, பாலஸ்தீனம் ஆகிய போராட்டங்கள் அம்மக்களின் இருப்பிடம், உருவாக்கம் ஆகியவைகளே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதால், அவர்களின் பூர்வீகத்திலிருந்து காலவரையரையை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட புத்தகங்களில் வர்க்க நிலைபாட்டை மட்டுமல்ல வர்க்க செயல்பாட்டை அதன் போக்கிலேயே தெளிவாக கொண்டுவந்துள்ளது சிறப்பம்சாகும். காரணம், பிரஞ்சுப்புரட்சி, சாசனஇயக்கம் ஆகியவற்றில் உருவாகிவரும் பாட்டாளி வர்க்கத்தின் இருப்பையும், செயல்பாட் டையும், நிலபிரபுத்துவ, முதலாளித்துவ மோதல்களுக்கிடையில் முழ்கிவிடாமல், புத்தகத்தில் நிலைநாட்டியுள்ளார். குறிப்பாக பிரெஞ்சு புரட்சியில் தலைகீழ் மாற்றங்கள், திருப்பங்கள் தேசிய சட்டமன்றம் துவங்கி நெப்போலியன் ஆட்சிக்குவரும் போது இயங்கிய டைரக்டரி வரை உள்ள செயல்பாடுகள் எந்த வர்க்க நலன் சார்ந்தது என்பதை வெளிக்கொணர்ந்து புரிய வைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. புத்தகம் அதை எளிமையாகவே செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...