Pages

செவ்வாய், நவம்பர் 23, 2010

உணவு பாதுகாப்புச் சட்டமும் மத்திய அரசின் உள்குத்தும்.

                                                                                                                           அ.பாக்கியம்                                       


                                                  சுதந்திரம்  யார் வேண்டுமானாலும், எங்கு சென்றும் எவ்வளவு சொத்து ண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற அர்த்தத்துடன் பிரெஞ்சு புரட்சியின் வெற்றி பிரகடனம் செய்தது. இதிலே சுரண்டல் என்ற பெரும்பொருள் புதைந்துள்ளது. உண்மையானசுதந்திரம்ஒரு மனிதன் சுரண்டலிலிருந்து எப்பொழுது விடுதலை அடைகிறானோ அப்பொழுதுதான்சுதந்திரம் உண்மையான அர்த்தத்தை அடைகிறது என்று காரல் மார்க்ஸ் பிரகடனம் செய்தார்.


                                                இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் இன்னும் பட்டினச் சாவிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை. ஊட்டச்சத்து குறைவிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை. 62 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இதுவரை சந்திக்காத அளவில் மத்திய அரசின் தவறான (பெருமுதலாளிகளுக்கு ஆதரவான) கொள்கைகளால் கடுமையான உணவு நெருக்கடியையும், விலையேற்றத்தையும் சந்தித்து வருகிறது. இதையே சாக்காக வைத்து எல்லோராலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை தனது குறுகிய நலனை நிறைவேற்றக்கூடிய முறையில் ஐ.மு.கூ. அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.தவறான கொள்கை அல்ல தெளிவான கொள்கை ! உலகிலேயே ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்கள் நிறைந்த நாடு, பட்டினிச்சாவு அதிகமாக உள்ள நாடு இந்தியா  கிராமப்புறத்தில் 83 சதமும், நகர்புறத்தில் 66 சதமும் இம்மக்கள் உள்ளனர


                                    இந்த பின்னணியில் உணவுக்கான உரிமை அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் உணவளிப்பதுதான் மத்திய, மாநில அரசுகளின் தலையாகிய கடமையாகும். இதை அமுலாக்க அனைவருக்கும் பொதுவிநியோக முறையே சாத்தியமாகும். அனைத்து ஏழை மக்களுக்கும் 35 கிலோ அரிசி / கோதுமை வழங்கிட 1,20,000 கோடி செலவாகும். ஏற்கனவே மத்திய அரசு 50,000 கோடிவரை செலவு செய்கிறது. மேலும் ரூ 70,000 கோடி செலவு செய்தால் உணவு பாதுகாப்பை ஏற்படுத்திட முடியும். இந்த தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ழுனுஞ) 1.5 சதவீதம் மட்டுமே. ஆனால் இதை செய்ய தயங்கும் மத்திய அரச கடந்த வருடம் ரூ 3 லட்சம் கோடிகள் வரை தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்துள்ளது. கடந்த 6 மாதத்தில் அம்பானியின் ரிலயன்ஸ் கம்பெனிக்கு மட்டும் ரூ 45,000 கோடி வரிச்சலுகையை மத்திய அரசு அளித்துள்ளது. 2009-10 -ம் ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக அளிக்க உள்ளது ரூ 4 லட்சம் கோடி. பொதுவினியோகத்திற்காக 2009-10 பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பது ரூ 52,489 கோடியாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.18 சதவீதம் மட்டுமே. இதிலிருந்து மத்திய அரச தவறான கொள்கையை கடைபிடிக்கிறது என்று கூற முடியாது. பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது என்ற தெளிவான கொள்கையுடன்தான் உள்ளது.

                                                     நீண்டநாள் பேசாத குழந்தை எப்போது பேசும் என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை வாயைத்திறந்தவுடன்சித்தப்பன் எப்போது செத்துப்போவான் என்று கேட்டதாம். அதுபோல் உணவு பாதுகாப்பு சட்டம் வராதா என்று எதிர்பார்த்து போராடியவர்களுக்கு உணவு பாதுகாப்புச் சட்டம் உணவு பறிப்பு சட்டமாக வந்ததை கண்டு அதிர்ந்தனர். அதற்காக சட்டம் வேண்டாம் என்று கூறவில்லை. சடடம் இந்த வடிவிலேயே அமுலானால் பாரதம் பட்டினிக் கூடாரமாக பரிதவிக்கும். உலக நாடுகளில் பல நாடுகள் ஏற்கனவே உணவு பாதுகாப்பு சடடத்தை அமல்படுத்தி உள்ளன. சில நாடுகள் உணவு உரிமையை அடிப்படை உரிமையாவே அரசியல் சட்டத்தில் சேர்த்துள்ளனர். வளரும் நாடுகள் பலவற்றில் உணவு பாதுகாப்பிற்கு கூடுதல் அக்கறை செலுத்த உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பே பொலிவியா, கயானா, ஈக்வடார், தென் ஆப்பிரிக்கா உணவு  உரிமை என்பதை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளனர். பெலாரஸ், மால்டோவா போன்ற நாடுகள் அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியாக சேர்த்ததுடன் தேவையான ஊட்டச்சத்தும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை அளிப்பதையும் சட்டத்தில் சேர்த்துள்ளனர். தற்போது மெக்சிகோ, நிகரகுவா, பெரு உட்பட பல நாடுகள் உணவு உரிமையை அடிப்படை உரிமையாக மாற்றி உள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன்முதலாக ஈக்வடார் உணவு மற்றும் ஊட்டச்சத்து அளிப்பதை அடிப்படை உரிமை யாக மாற்றி உள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது பிரேசில் நாடும் சட்டம் இயற்றி வருகிறது. இந்தயாவில் இதற்கான போராட்டப் பாதை நெடிது. ஆனால் முழுப்பயனும் இன்னும் அடைந்திடவில்லை. 1948-ம் ஆண்டே உலகில் மனித உரிமை அடிப்படை உரிமை என்பதும், 1976 -ல் குடியுரிமை, அரசியல் உரிமை, பேச்சு -எழுத்துரிமை போன்றவைகள் அடிப்படை உரிமைகளாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள், பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமை பற்றிய சட்டங்கள் வந்தது. நமது நாட்டில் மேற்கண்ட ஒவ்வொரு உரிமைக்காகவும் வீதியில் போராடவும், நீதிமன்றத்தில் வாதாடவும் வேண்டியிருந்தது. 1996-ல் உலக உணவு சம்மேளனம் (றுடிசடன குடிடின ளுரஅஅவை) கூடி ரோம் பிரகடனத்தை வெளியிட்டது. உணவு பாதுகாப்பு என்பது அனைத்து மக்களுக்கும் எல்லா காலங்களிலும், செயலூக்க முள்ள வாழ்வுக்கும், ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கும் போதுமான, பாதுகாப் பான, ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைப்பதாகும்.

                                          

                          இந்த அறைகூவலை இந்தியா ஏற்றாலும், அதுபற்றி நமது நாட்டில் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. 2001-ம் ஆண்டு மத்திய பிரதேசம் மராட்டியம் கடும் வறட்சியில் இருந்த போது, பொதுநல வழக்கின் மூலமாக உயர்நீதிமன்றம் தலையிட்டு சேமிப்பில் வீணாகும் உணவு தானியங்களை பட்டினி கிடன்கும் மக்களுக்கு வினியோகிக்க உத்திரவிட்டது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் வாழும் உரிமை அடிப்படை உரிமை என்பதில் உணவு பாதுகாப்பும் அடங்கும் என்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதன் தீர்ப்பில் நீதிபதி பகவதி  அடிப்படை வாழ்வுரிமை என்பது மனிதன் கண்ணியத்துடன் வாழ்வது மற்றும் போதுமான ஊட்டச்சத்து, உடை, உறையுள், கல்வி, எழுத்து, கருத்துச்சுதந்திரம் இதர மனிதர்களுடன் சகஜ வாழ்க்கையும் உள்ளடக்கியதுதான்  என்று விளக்கமளித்தார். இதே போல் இடதுசாரிகளின் தொடர் போராட்டமும், இன்றைய உணவு நெருக்கடியும், தேசியஉணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.


                     உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு என்று ஆணாதிக்க இலக்கியங்கள் பேசுகின்றது. ஆனால் மத்திய அரசு தேசத்தில் உள்ளவர்கள் உண்டி சுருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புச் சட்டத்தில் தனது கொள்கையாக அறிவித்துள்ளது. இச்சட்டப்படி நகர்புறத்திலும், கிராமப்புறத்திலும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்குத்தான் குறிப்பிட்ட அளவு அரிசி / கோதுமை / உணவு தானியங்கள் மானிய விலையில் அளிக்க முடியும் என்று கூறிவிட்டது. இதைக் கேட்டதும் ஏழை மக்களே! நீங்கள் சந்தோஷப்படாதீர்கள். நீங்கள் ஏழையாக இருக்கலாம். பட்டினி கிடக்கலாம்! செத்துக்கூட போகலாம். ஆனால் அதை நாங்கள் ஏற்க முடியாது! யார் ஏழை என்பதை நாங்கள் அறிவிப்போம் என மத்திய அரசு அறிவித்துவிட்டது. தற்போது 2009 -ல் வறுமை கோட்டிற்கு கீழே (க்ஷஞடு) உள்ளவர்கள் 5.91 கோடி குடும்பங்கள் என்று சட்டத்தில் தீர்மானித்துள்ளனர். ஏற்கனவே வறுமை கோட்டிற்கு கீழ் 10.68 கோடி குடும்பங்களுக்கு  ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6.52 கோடியை மத்திய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. ஏற்றுக்கொண்டதையும் புதிய சடடத்திற்கு ஏற்ற வகையில் சுருக்கி 5.91 கோடிதான் வறுமையில் வாழ்பவர்கள் என்று தீர்மானித்து உள்ளனர். மாநில அரசுகள் மதிப்பீட்டின்படி வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் 11.5 கோடி ஆகும். இத்தனை கொடிய வறட்சியும், உணவு நெருக்கடியும் உள்ள நேரத்தில், உணவை ஏழைகளுக்கு கொடுப்பதில் எத்தனை கெடுபிடிகளை அரங்கேற்றுகிறார்கள். மத்திய அரசு நியமித்த முறைசாரா தொழில் பற்றி ஆய்வு நடத்திய கமிஷன் தேசிய மாதிரி ஆய்விலிருந்து (சூளுளு) ஒரு அதிர்ச்சி தரும் உண்மையை வெளியிட்டது. நாட்டில் 77 சதவீதம் மக்கள் ஒரு நாளைக்கு ரூ 20 மட்டுமே செலவு செய்கிறார்கள் என்பதுதான் அந்த உண்மை. உள்ளங்கை நெல்லிக்கணியாய் இருப்பதைகூட மத்திய அரசு ஏற்க தயாராக இல்லை. பெருமுதலாளி வர்க்க பாசம் இதற்கு தடையாக உள்ளது!


                                   வறுமை கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு பொதுவினியோக முறை உட்பட அனைத்து மானியங்களும் நீக்கப்படுவதாக சட்டத்தில் தெரிவித்துள்ளனர். அதாவது கிராமப்புறத்தில் ஒருவர் ஒரு நாளைக்கு 11.80 காசும் நகர்புறத்தில் 17.80 காசும் வருமானம் ஈட்டினால் அவர்களுக்கு மேற்கண்ட சலுகை ரத்து செய்யப்படும். ஒரு மனிதன் இந்த தொகையில் வாழ முடியுமா? ஒரு மனிதனுக்கு உணவு மட்டும்தான் தேவையா? உடைக்கும், உறையுளுக்கும் அவர் எங்கே போவான்? மன்மோகன், மாண்டக்சிங், சிதம்பரம் போன்ற வினோத நிபுணர்களின் விபரீத கணக்கல்லவா இது ! வறுமை கோட்டைட சுருக்கி காட்டுவது மட்டுமல்ல, புதிய சட்டத்தின்படி அவர்களுக்கு அரிசியின் அளவை குறைத்து விலையை ஏற்றவும் செய்துள்ளனர். அந்தோதயா அன்ன போஜனா (ஹஹலு) என்பது வறுமை கோட்டிலேயே மிகவும் வறுமையாக இருப்பவர்களுக்கான அதாவது பரம ஏழைகளுக்கான திட்டம். இதில் 35 கிலோ அரிசி ரூ 2 விலைக்கு தரப்படுகிறது. புதிய சட்டத்தின் ஆலோசனை இவர்களுக்கும் 25 கிலோவாக குறைத்து விலையை கிலோவிற்கு ரூ 3 என உயர்த்துகின்றனர். இது உணவு பாதுகாப்பா சுடுகாட்டிற்கு பாதை அமைப்பா ? என்பது புரியவில்லை. இச்சட்டம் விவசாயிகள் பற்றி அக்கறைப்படவும் இல்லை. அதிகம் பேசவும் இல்லை. விவசாய உற்பத்தியை பெருக்கவும், கொள்முதலை விரிவுபடுத்திடவும், விளை பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய்வித்துக்களுக்கு போதுமான விலை கொடுப்பது பற்றி பேசாமல், பொதுவினியோக முறைக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவினியோக முறையை பலப்படுத்துவதால் மட்டுமே உணவுப்பாதுகாப்பு சட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும். இதற்கு மாறாக, குறிப்பிட்ட மக்களுக்கும் குறைவான ஒதுக்கீடு செய்து5 லட்சம் நியாய விலைக்கடைகள் என்பது ஒப்பேறாத விஷயமாகும். தற்போது உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுவினியோக முறைகளில் 58 சதவீதம் ஊழல் நடப்பதாக திட்ட கமிஷனை கோடிட்டு அசோக் குலாட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நியாய விலை அரிசிகள் சைக்கிளில், லாரிகளில் அல்ல சரக்கு ரயிலில் கடத்தப்படுவது ஊரறிந்த விஷயம். எனவே, ஊழலற்ற கண்கா ணிப்பு குழுக்கள் மூலமாக பொது வினியோக முறை அமலாக்கிட வேண்டும்.


                மத்திய அரசு தற்போது கொண்டுவர உள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தைவிட மேலான முறையில் 10 மாநிலங்கள் பொதுவினியோக முறையை அமுல்படுத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்து ஆதிவாசிகளுக்கும், பெண்கள் தலைமையேற்றுள்ள குடும்பங்களுக்கும் 35 கிலோ உணவு தானியங்கள் ரூ 1 மற்றும் 2 விலையில் வழங்கி வருகின்றது. அம்மாநிலத்தில் மக்கள் தொகையில் 70 சதம் இதைப்பெறுகின்றனர். கேரளத்தில் 50 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். மத்திய அரசோ 14 லட்சம் குடும்பங்கள் என்று அறிவித்துள்ளது. மாநில அரசு 25 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொதுவினியோகமுறை வழங்கி வருகிறது. மாநிலத்தில் அனைத்து எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மீனவர் சமுதாயங்கள் முழுமையாகவும், முறைசார தொழில் புரிவோரையும் வறுமை கோட்டிற்கு கீழே கொண்டு வந்துள்ளது. கேரளாவிற்கு மத்திய அரசு மானியம் 11 சதம் மட்டுமே தருகிறது. அம்மாநில அரசு வறுமையை ஒழிக்க 30 சதம் மானியமாக செலவு செய்கிறது. ஆந்திராவில் ரூ 2 விலையில் 80 சதவீதம் மக்கள் அரிசியை பெறுகின்றனர். தலைக்கு 6 கிலோ என்ற அளவில் இந்த அரிசி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிலோ ரூ 1 என்ற அடிப்படையில் 16 முதல் 20 கிலோ வரை வறுமைக் கோடு வேறுபாடின்றி விரும்பியவர்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் வறுமை ஒழிப்பதற்கு பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. மாநிலஅரசின் இத்திட்டங்களையெல்லாம் தடுத்திடக் கூடிய முறையில்தான் மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டம் உள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிட வேண்டிய கோதுமையை 2006-2008 -ல் மட்டும் 73 சதவீதம் வெட்டிச் சுருக்கி உள்ளது. இச்சட்டத்தின் மூலமாக ஏற்கனவே அமுலில் உள்ள பல திட்டங்களை கைவிடும் அபாயம் உள்ளது. மதிய உணவு திட்டம், சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை போன்ற திட்டங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இன்றைய தேவைக்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அவசியமானது. ஆனால் அது இன்றைய வடிவிலிருந்து அடிப்படை மாற்றத்தை செய்து அமலாக்கிட வேண்டும். 1996-ல்  ரோம் பிரகடனம்  உலக உணவு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி எல்லோருக்கும் எல்லா காலத்திலும் போதுமான அளவு உணவு, செயலூக்கமுள்ள ஆரோக்கிமான வாழ்விற்கு அளித்திட வேண்டும் என்ற பிரகடனத்தின் நோக்கத்தை நிறைவேற்றறு வதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. இன்று தேசமே உணவு நெருக்கடிக்கு சென்று கொண்டிருக்கிறது. மன்மோகன்சிங் மயான வாசலில் நின்று வறுமைக்கோட்டை அளக்கிறார்.                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...