Pages

திங்கள், ஜூன் 16, 2025

ஈரான் மீது தாக்குதல்: பின்னணி என்ன?

 


ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கிறது. ஈரானும் பதில் தாக்குதலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இஸ்ரேல் காசாவின் மீது நடத்தும் தாக்குதல், உக்ரைன் ரஷ்ய யுத்தம் இந்திய பாகிஸ்தான் மோதல் இப்போது இஸ்ரேல் ஈரான் யுத்தம் ஆகியவை உலக ஒழுங்கு முறையில்(World Order) ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றங்களின் வெளிப்பாடாகும். இஸ்ரேல் என்ற தனி ஒரு நாட்டின் படையெடுப்பு அல்ல இது. அமெரிக்கா, பிரிட்டன் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளின் திட்டங்களில் ஒன்றுதான் இந்த தாக்குதல். இந்தத் திட்டத்தை அமலாக்குகிற கூலிப்படையாகத்தான் இஸ்ரேல் என்ற நாட்டின் ஜியோனிஸ்டுகள் இருக்கிறார்கள்.

தற்பொழுது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு செய்தி அனுப்பிவிட்டு தான் செய்கிறோம் என்று இஸ்ரேல் கூறுகிறது. எங்களிடம் ஒப்புதல் பெறவில்லை ஆனால் தகவல் தெரிவித்தார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவிக்கிறார். இது எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்பொழுதாவது ஈரான் திருந்த வேண்டும் என்று அறிக்கை கொடுக்கிறார் என்றால் யார் தாக்குதலை நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தாக்குதலுக்கான காரணமாக பிரச்சாரம் செய்யப்படுவது ஈரான் அணு ஆயுதத்தை தயார் செய்கிறது என்றும், அதுக்கான செறிவூட்டுப் பொருட்களை அதிகமாக வைத்திருக்கிறது என்றும், ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் உலகத்திற்கு நல்லது இல்லை என்று, உலகத்தில் பெரும்பாலான நாடுகளில் குண்டு மழைகளையும்  , அணு அணுகுண்டுகளையும்  பொழிந்த அமெரிக்கா தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை காலம் காலமாக கொள்ளையடித்து வந்த மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் அதற்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதை அறிந்த பிறகுதான் இது போன்ற தாக்குதலை தொடுக்கிறார்கள். முதலில் ஈராக் என்ற நாட்டை தாக்கியதற்கும், அடுத்தடுத்து லிபியா சிரியா, ஏமன் என தாக்குதலை தொடர்வதற்கும் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்குத்தான்.

மத்திய கிழக்கு நாடுகளில் அரபு தேசியம் எழுச்சி பெற்ற போதெல்லாம் அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படை வாதிகளை அமெரிக்காவும் பிரிட்டனும் தூண்டி விட்டார்கள். அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களின் நிர்பந்தத்தினால் தங்கள் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை தாங்களே தீர்மானித்துக் கொள்வோம் என்று நடவடிக்கை எடுத்தால் அது அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளின் சுரண்டலை பாதிக்கிறது என்ற காரணத்தினால் அந்த நாடுகள் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று தாக்குதல் நடத்தினார்கள். அல்லது தீவிரவாதிகளை உருவாக்குகிறது அது ஒரு தீவிரவாத நாடு என்று பிரச்சாரம் செய்து தாக்குதல் நடத்துவதை கொள்கையாக வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நஜிபுல்லா அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக தாலிபான்களை, பின் லேடன்களை உற்பத்தி செய்தவர்கள் தீவிரவாதம் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். 

மத்திய கிழக்கு நாடுகளில் இடதுசாரி கருத்துக்கள் வளர்ந்து, மக்கள் செல்வாக்கு பெற்ற பொழுது அவற்றையெல்லாம் அழித்து ஒழிப்பதற்காக மத அடிப்படை வாதத்தை உற்பத்தி செய்தவர்கள் இந்த ஏகாதிபத்தியவாதிகள். எகிப்து, துனீசியா, ஈராக், ஈரான், ஏமன், ஆப்கன் போன்ற இடங்களில் இடதுசாரி இயக்கத்திற்கு எதிராக சிஐஏ செய்த சதிராட்டங்கள் எண்ணில் அடங்காதவை. ஈரானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. மாறி வருகின்ற உலக ஒழுங்கில் ஈரான் ரஷ்யாவுடனும், சீனாவுடனும் தனது உறவை மேம்படுத்திக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல சவுதி அரேபியாவுடன் ஈரான் உறவை மீண்டும் ஏற்படுத்தியது மேற்குலகத்தையே அச்சத்துக்கு உள்ளாக்கியது. மேலும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் முக்கிய நாடாக இடம்பெற்று உலகில் என்னை வளம் அதிகமாக உள்ள நாடுகளில் வெனிசுலா முதல் இடத்திலும், அதற்கு அடுத்து சவுதி அரேபியாவும் மூன்றாவதாக ஈரானும் இருக்கிறது. இவை தவிர வளைகுடா நாடுகளில் மட்டும் உலகில் உள்ள எண்ணெய் வளங்களில் 55 சதவீத முதல் 57 சதவீதம் வரை இருக்கிறது. ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் வலுமிக்க ஒரு நாடாக வரலாற்று வேர்களுடன் இருக்கிறது. மக்கள் தொகையிலும் சரி, பரப்பளவிலும் சரி உலக அளவில் 17 வது இடத்திலும், ஆசிய கண்டத்தில் ஆறாவது பெரிய நாடாகவும் இருக்கிறது. மற்ற வளைகுடா நாடுகளை விட அதிக அளவு மலைப்பாங்கான பகுதிகளையும் ஈரான் தன்னகத்தே கொண்டுள்ளது.

எனவே ஈரானின் வளர்ச்சியும், எழுச்சியும் ராணுவ படைகளின் உயர்வும் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் எண்ணெய்வள கனவுகளை தகர்த்து விடும். ஏற்கனவே உலக ஒழுங்கில் வீழ்ந்து கொண்டிருக்கிற அமெரிக்கா அதல பாதாளத்திற்கு சென்று விடும் என்ற அச்சத்துடன் இஸ்ரேல் என்ற அடியானை கண்மூடித்தனமாக இறக்கி விட்டுள்ளது. வரலாறு நெடுகிலும் அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு எதிரான, இடதுசாரி அரசியலை, ஏன் முற்போக்கு அரசியலைக் கூட, ஏன் அதையும் கடந்து வெகு மக்களுக்கான நலன்யக்கக்கூடிய அரசியலை கூட அமெரிக்கா அனுமதித்ததே கிடையாது. ஈரானிலும் அது நிகழ்ந்துள்ளது.

ஈரானில் முகமது  மெசாடெக்  என்பவர் 19 பேர்களுடன் இணைந்து 1949 ஆம் ஆண்டு ஈரானின் தேசிய முன்னணி என்ற கட்சியை துவங்கினார். இவர் அரசியல்வாதி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆவார். ஈரானில் 1905 மற்றும் 1911 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட  புரட்சியின் விளைவாக நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது. முகமது மெசோடெக் 1923 ஆம் ஆண்டிலேயே இந்த பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மன்னர் ஆட்சியின் கீழ் இந்தப் பாராளுமன்றம் இருந்தது. ஈரான் அரசியலில் ஜனநாயகத்திற்காகவும், அந்நிய சக்திகள் தலையிடுவதற்கு எதிராகவும் தொடர்ந்து களம் கண்டவர் முகமது மெசோடக் மற்றும் அவரது ஈரான் தேசிய முன்னணி என்ற கட்சியும் ஆகும்.

1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மெசோடக்கை மன்னர் பிரதமராக பதவி ஏற்க செய்தார். மக்கள் செல்வாக்கு மிக்க ஈரான் தேசிய முன்னணியின் தலைவராக இவர் இருந்தார். இவரது செல்வாக்கை, புகழை மன்னர் நன்கு அறிந்திருந்தார். முகமது மேசாடெக் ஆட்சி பீடம் ஏறியவுடன் மக்களுக்கு செய்த பணிகளைக் கண்டும், அவரது செல்வாக்கு உயர்வதைக் கண்டும் மன்னர் அவரை பிரதமர் பதவியில் இருந்து 1952 இல் நீக்கம் செய்தார். மக்களின் எழுச்சியினால் வேறு வழியில்லாமல் மீண்டும் அவரை மன்னர் பிரதமராக அமர்த்திவிட்டார்.

முகமதுமெசாடெக் ஆட்சியில் இருந்த பொழுது, வேலையின்மைக்கு இழப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் காயம் அடைந்த தொழிலாளர்களுக்கும், நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று உத்தரவு கொண்டுவரப்பட்டது. விவசாயத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் நில உரிமையாளர்களின் தோட்டங்களில் அடிமை வேலை செய்வது தடை செய்யப்பட்டது. 1952 ஆம் ஆண்டு முகமது மெசோடெக் நிலச் சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றினார். இந்த சட்டத்தின்படி நில உரிமையாளர்கள் தங்கள் வருவாயில் 20 சதவீதத்தை மேம்பாட்டு நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது இந்த நிதியின் மூலமாக கிராமப்புறத்தில் விவசாயிகளுக்கு வீட்டு வசதிகளும் நீர்வள ஏற்பாடுகளும் பூச்சிகளிலிருந்து மக்களை பாதுகாக்கவும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

தேசத்தின் சொத்துக்களை குறிப்பாக எண்ணெய் வளங்களை 1913 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் அரசு கொள்ளை அடித்துச் சென்று கொண்டிருந்தது. அன்றைய மன்னர்கள் மூலமாக ஆங்கில-ஈரானிய என்னை நிறுவனத்தை உருவாக்கி எண்ணெய் வளத்தை கொள்ளை அடித்தார்கள். ஈரான் நாட்டில் ஒரு பிரிட்டிஷ் அரசு போலவே இந்த நிறுவனம் செயல்பட்டது. முகமது மெசாடக் இந்த நிறுவனத்தை தேசிய மயமாக்கினார். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல ஒப்பந்தங்கள் காலாவதியாகிப் போன பிறகும் அவர்கள் கையிலே இருந்தது. அவற்றையெல்லாம் ரத்து செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தார். மேற்கண்ட நிறுவனத்தால் நடத்தப்படும் பெட்ரோலிய தொழில் மக்களின் நல் வாழ்விற்கோ அல்லது நமது நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கோ அல்லது தொழில்துறை வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பையும் செய்யவில்லை என்று பிரதமர் முகமது மெசாடேக் அறிவித்தார்.

இந்த ஒரு நிறுவனத்தின் வருவாய்  முலமாக ஈரான் நாட்டின் முழு பட்ஜெட்டையும் பூர்த்தி செய்து, வறுமை மற்றும் பின் தங்கிய நிலைமைகளை சரி செய்ய முடியும் என்று அறிவித்தார். மேற்கண்ட ஆங்கிலோ-ஈரானிய நிறுவனம் ஈரான் நாட்டிற்குள் ஊழல்களையும், சதி செயல்களையும் பல்கி பெருகச்செய்கிறது. வற்றையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று அறிவித்தார். இந்த திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் ஈரான் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் அடைய முடியும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

ஆங்கிலோ ஈரானிய என்னை நிறுவனத்தில் பிரிட்டிஷார் தலையிடமுடியாமல்  தடுக்கப்பட்டதனால் அவர்களின் கப்பற்படைக்கு சேர வேண்டிய எண்ணெய்கள் கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்யக்கூடிய நிதியையும் இதிலிருந்து எடுத்துச் சென்றார்கள். அதிலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. இதன் விளைவாக பிரிட்டிஷ் உதவிக்கு அமெரிக்காவையும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையையும் அணுகியது. முதலில் அமெரிக்கா மறுத் தது.1952 ஆம் ஆண்டு ஐஸ்னேவர் ஜனாதிபதியாக வெற்றி பெற்றவுடன் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறியது. பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் ஈரானிய பிரதமரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க உளவுத்துறைக்கு பரிந்துரை செய்தனர்.இதற்கு கூறிய காரணம் இதுதான்? பிரிட்டிஷ் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில், முகமது மெசாடெக் ஒரு கம்யூனிஸ்ட் இல்லை யென்றாலும், கம்யூனிஸ்ட் கட்சி என்று கருதப்பட்ட டுடே கட்சியை சார்ந்து செயல்படுகிறார். எனவே அவர் விரைவில் ஈரானை கம்யூனிஸ்ட் ஆட்சியை நோக்கி திருப்பி விடுகிற அபாயம் இருக்கிறது. பனிப்போர் காலத்தில் ஈரான் அவ்வாறு மாறினால் மிகப் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை வின்சென்ட் சர்ச்சில் தெரிவிக்கிறார்.

இதை ஏற்றுக் கொண்ட அமெரிக்க சிஐஏ நிறுவனம் மக்கள் செல்வாக்கு மிக்க முகமது மெசோடக்கை பிரதமரிலிருந்து நீக்க திட்டங்களை உருவாக்குகிறது. ஈரான் மன்னர் ஷா ஏற்கனவே சூடு பட்டுள்ளதால் பதவி நீக்கம் செய்ய மறுத்துவிட்டார். அமெரிக்க உளவுத்துறை ஆபரேஷன் அஜாக்ஸ் இந்தத் திட்டத்தை உருவாக்கி, ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கீடு செய்து, பிரதமர் முகமது மெசாடெக்கை பதவி நீக்கம் செய்வதற்காக இந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். அமெரிக்காவின் சி..ஏ உளவுத்துறையும், பிரிட்டனின் M16 உளவுத்துறையும், ஈரானின் தலைநகர் டெஹாரனில்  தளத்தை அமைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பில் ஈடுபட்டார்கள். பிரதமர் முகமது மெசாடேக்கிற்கு எதிராக பெரும் கலவரங்களை உருவாக்கினார்கள்.

அது மட்டுமல்ல கருப்பு பிரச்சாரம் என்ற பெயரில் ஒரு பிரச்சாரத் திட்டத்தை உருவாக்கி முஹம்மது மெசாடெக் தொடர்ந்து இழிவு படுத்தி, மக்களுக்கு விரோதமானவர் என்ற பொய்பிம்பத்தை உருவாக்கினார்கள்.இறுதியில் 1953 ஆம் ஆண்டு டிசம்பர் 21 தேதி பிரதமர் மெசாடெக் பதவி நீக்கம் செய்யப்பட்டு ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் தனிமை சிறை. தேசபக்தனுக்கு, அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடியவருக்கு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன தெரியுமா? தேச விரோதி என்ற குற்றச்சாட்டை சுமத்திதான் சிறையில் அடைத்தார்கள். முகமது மெசாடெக் இந்த தீர்ப்பை கேட்ட பிறகு நீதிமன்றத்தின் தீர்ப்பு எனது வரலாற்று பெருமைகளை அதிகரித்து உள்ளது நீங்கள் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளித்ததற்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன் உண்மையிலேயே இன்று இரவு ஈரானிய நாடு அரசியல் அமைப்பின் அர்த்தத்தை புரிந்து கொண்டது என்று கூறினார் 1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் தேதி புற்றுநோயால் இறக்கும் வரை அவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஈரான்-இஸ்ரேல் இணைபிரியா கூட்டாளிகள்

இதன்பிறகு அமெரிக்காவின் கைப்பாவையாக ஈரான் மாறியது. மன்னர் ஷாவின் ஆட்சி 1979 ஆம் ஆண்டுகள் வரை, அதாவது இஸ்லாமிய புரட்சி நடக்கிற வரை இருந்தது. இதே காலத்தில்தான் ஈரான் அமெரிக்காவின் அடியாளாகிய இஸ்ரேலின் நெருக்கமான நாடாக செயல்பட்டது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு உருவான பிறகு ஈரானும் அதை அங்கீகரித்தது. இஸ்ரேல் அரபு நாடுகளுக்கு எதிராக ஈரானை தனது நட்பு நாடாக கருதியது. ஈரானிய விவசாய நிபுணர்களுக்கு இஸ்ரேல் பயிற்சி கொடுத்தது. தொழில் நுட்ப அறிவையும் வழங்கியது. ஈரானுக்கான ஆயுதப் படைகளின் கட்டமைப்பை செய்வதற்கு உதவியது. ஈரான் மன்னர் இஸ்ரேலுக்கு எண்ணெய் வழங்கினார். காரணம் இஸ்ரேலின் வளர்ச்சிக்கு எரிபொருள் மிக அடிப்படையான தேவையாக இருந்தது. அது மட்டுமல்ல இஸ்ரேலுக்கு வெளியே இரண்டாவது பெரிய யூத சமூகம் ஈரானில் தான் அன்று இருந்தது. இஸ்லாமிய புரட்சிக்கு பிறகும் 20 ஆயிரம் யூதர்கள் ஈரானில் இருக்கிறார்கள்.

1979 ஆம் ஆண்டு அய்துல்லா கோமேனி தலைமையில் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டவுடன் இஸ்ரேல் நாட்டுடன் முந்தைய அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தார்கள். பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு ஈரானிய அதிபர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். இதனால் ஈரானுக்கு மத்திய கிழக்கு பிராந்தியங்களில் செல்வாக்கு வளர்ந்தது. 1982 ஆம் ஆண்டு இஸ்ரேல் தெற்கு லெபனானுக்குள் நுழைந்து உள்நாட்டு கலவரத்தை பயன்படுத்த ஆரம்பித்த பொழுது ஈரானிய அரசு புரட்சிகர காவல் படையை லெபனானுக்கு அனுப்பி  இஸ்ல்லா போராளி குழுக்களுக்கு உதவியது. ஈரான் பிராந்திய செல்வாக்கின் அளவை அதிகரித்துக் கொண்டது.

எனவே அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ஈரான் இவ்வாறு வளர்வதை விரும்பவில்லை. ஈரான் நாட்டிற்கு எதிராக ஈராக்கை தூண்டி விட்டார்கள். சதாம் உசேனுக்கு ஈரான்-ஈராக் யுத்தம் நடக்கிற பொழுது அனைத்து ரசாயன ஆயுதங்களையும் அமெரிக்கா கொடுத்து உதவியது. ஈரான் மீது தாக்குதலில் நடத்துவதற்கு ஈராக்கை முழுமையாக பயன்படுத்தியது அமெரிக்கா என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆயுதம் கொடுத்தவர்களே பிறகு அபாயகரமான ஆயுதம் என்று சொல்லி ஈராக்கை அழித்துவிட்டார்கள்.

தற்பொழுது ஈரானின் வளர்ச்சி உலக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சீனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யாவின் மீது அமெரிக்கா அறிவித்த தடைகளை எல்லாம் தவிடு பொடி யாக்கி ரஷ்யா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரஷ்ய சீன உறவுகளும் மேம்பட்டு வருகிறது. ரஷ்ய, சீன, ஆப்பிரிக்க நாடுகளின் நெருக்கமும், பொருளாதார உறவுகளும் புதிய மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ பலம்மிக்க, பொருளாதார பலமிக்க ஒரு நாடாக பரிணமித்தால் என்னவாகும்? ஏகாதிபத்தியத்தின் எண்ணெய் கனவுகள் எண்ணெய் கிணறுகளுக்குள் மூழ்கிவிடும். எனவே தான் ஈரான் மீது இந்த தாக்குதல் நடைபெறுகிறது.

சர்வதேச அணுசக்தி நிறுவனம்

ஈரானிய அணுசக்தி திட்டம் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அது மட்டுமல்ல ஈரானிய தலைமை இஸ்ரேல் அரசை அங்கீகரிக்கவில்லை. ஈரான் அணுசக்தி திட்டம் அமைதி நோக்கங்களுக்காக மட்டுமே என்று அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தி வருகிறது. ஈரான் நாடு அணு ஆயுதம் வைத்துக் கொள்ளாத நாடுகளை விட அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டுகிறது என்று சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்ல ஜூன் 12ஆம் தேதி ஐ நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு 20 ஆண்டுகளில் இப்போது ஈரான் அணு ஆயுத பரவல் தடை சட்டத்தை மீறியதாக அறிவிக்கிறார்கள். ஈரான் மட்டும் அணு ஆயுதத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நியதியை எங்கே கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக ஈரானிய வெளியுறவு அமைச்சகமும் அணுசக்தி நிறுவனமும் கூட்டாக மூன்றாவது யுரேனியம் செறிவூட்டும் வசதியை பாதுகாப்பான இடத்தில் கட்டுவதை அறிவித்தார்கள். இஸ்ரேல் அணுசக்தி செறிவூட்டும் இடங்களை திட்டமிட்டு தாக்கி வருகிறது. எங்கள் சுய பாதுகாப்பிற்காக நாங்கள் ஈரானின் அணுசக்தியை தாக்குகிறோம் என்று இஸ்ரேல் கூறுவது நியாயமற்ற விவாதம் ஆகும். அமெரிக்கா தாக்குதலை கண்டிக்க வேண்டும் என்று மற்ற நாடுகள் கூறிய போது அதன் வெளியுறவு செயலாளர் அமெரிக்கா தாக்குதல்களை ஆதரிக்கவும் இல்லை ஏற்பாடு செய்வதில் ஈடுபடுவதும் இல்லை என்று கழுவுகிற மீனில் நழுவுகிறவராக அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

அமெரிக்காவின் பங்கு என்ன?

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் நடந்தவுடன் தனது சமூக வலைதளத்தில் ஈரானிய தலைமை உடனே வந்து ஒப்பந்தம் செய்ய வேண்டும் இல்லை என்றால் இன்னும் கொடூரமான தாக்குதல் நடக்கும் என்று எச்சரிக்கிறார். ஏற்கனவே பெரும் உயிரிழப்பும் அழிவும் ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலையை முடிவுக்கு கொண்டு வர இன்னும் நேரம் இருக்கிறது. இல்லையென்றால் ஏற்கனவே திட்டமிட்ட தாக்குதல்கள் இன்னும் கொடூரமானவை என்று டிரம்ப் எச்சரிக்கிறார். இஸ்ரேலிய தாக்குதல் மிகவும் வெற்றிகரமான தாக்குதல் என்று புகழாரம் சூட்டிய டொனால்ட் ட்ரம்ப் இதில் அமெரிக்கா ஈடுபடவில்லை என்பதையும் வெளியிறவுத்து துறை அமைச்சர் மூலம் சொல்ல வைக்கிறார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்களை முற்றிலுமாக அழிக்க, அமெரிக்காவால் வழங்கக்கூடிய ஆயுதங்களைக் கொண்டுதான் இஸ்ரேல் அவற்றை செய்ய முடியும். அவ்வாறு நிலைமை ஏற்பட்டால் ஈரானின் தாக்குதல் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் வளைகுடா நாடுகளில் இருப்பதை நோக்கி திரும்பலாம். இது மேலும் பல பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும்

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் பல இடங்களில் உள்ளது என்றும், சில நிலத்தடி பதுங்கு குழிகளில் உள்ளன என்றும் இதனால் முழுமையாக அழிப்பது கடினம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஈரானும் இஸ்ரேலை தாக்குவதற்கான விரிவான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது இஸ்ரேல் அடுத்ததாக ஈரானின் மின்சாரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களை தாக்குவதற்கு திட்டமிடுகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் ஈரானுக்கு எந்த  கட்டுப்பாடும் இல்லை என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கிறார். ஈரான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிங் அவசர கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேல் சுற்றியுள்ள நாடுகளை தாக்கிய பொழுது இது ஈரானை நோக்கியும் வரும் என்ற எதிர்பார்ப்புடன்தான் ஈரான் இருந்தது. இன்றைய சூழலில் சீனா யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறது இஸ்ரேலை கடுமையாக கண்டித்து சீனா அறிக்கை விட்டது மட்டுமல்ல ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மூலமும் அறிக்கை கொடுத்துள்ளது. இந்தியா நடுநிலை வேடம் தரித்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இந்த எண்ணெய் வளத்தை பாதுகாப்பதற்கும், உலக மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும், மத்திய கிழக்கு நாடுகளில் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை வைத்துள்ளது. சுமார் 21 க்கு மேற்பட்ட ராணுவ தளங்களை அமைத்துள்ளது. ஓமான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், பகரைன், குவைத், ஈராக், ஜோர்டான், சிரியா, சைப்ரஸ், லெபனான், காசா பகுதிகளில் இவை இருக்கிறது. கத்தார் என்ற சிறிய நாட்டில் மட்டும் 60 ஏக்கர் நிலப்பரப்பில் நூறு யுத்த விமானங்களை நிறுத்தி உள்ளது. சுமார் 10,000 வீரர்களை இங்கு முகாமிடச் செய்துள்ளது.

எனவே இந்த யுத்தத்தின் சூத்திரதாரி அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தான். அமெரிக்க ராணுவதளங்கள் தான் இஸ்ரேலுக்கு ராணுவ வலுவை கொடுக்கிறது. ரொனால்ட் ட்ரம்பின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருக்கிற வரை யுத்தம் நீடிக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் மக்களின் ரத்த ஆறுகள் ஓடினாலும், அதில் மூழ்கி எண்ணெய் கிணறுகளின் ஆதிக்கத்தை தக்கவைக்க ஏகாதிபத்திய வெறியர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள்.

அ.பாக்கியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....