அ.பாக்கியம்

புனித பீடம் என்பது வாடிகன் நகர அரசின் தலைமையகம் ஆகும். சின்னஞ்சிறிய நாட்டின் தலைமையகமான புனித பீடம் உலகில் 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைமையகமாக இருக்கிறது. வரலாற்றில் பல மன்னர்களுக்கு மகுடம் சூட்டியதும், பல மன்னர்களின் அரியாசனத்தை ஆட்டம் காண செய்ததும் இந்த புனிதபீடம்தான். அரசியலும் மதமும் தனித்தனியானது என்று ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் எழுந்த அறிவொளி எழுச்சியின் மூலமாக புனித பீடத்தின் அதிகாரம் மத அமைப்புகளை கட்டுப்படுத்துவதாக சுருங்கி விட்டது. ஆனாலும் அதற்கான அரசியல் களம் இன்றும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
புதிய போப் 14-ம் லியோவின் சவால்கள்
முதல் முறையாக வட அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் புதிய போப்பாக பொறுப்பேற்றுள்ளார். மற்றொரு முக்கியமான காரணம் இவருக்கு முன்பு போப் ஆக இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்ட போப் பிரான்சிஸ், தென் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவர். அதே நேரத்தில் எளிதில் திரும்ப முடியாத சில சீர்திருத்தங்களை அவர் திருச்சபையில் பதித்துவிட்டு சென்றுள்ளார். இதுவரை இல்லாத பல குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை அவர் செய்துள்ளார்.
ஓரினசேர்க்கையாளர்களை அங்கீகரித்தது, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான கார்டினல்கள் மீது நடவடிக்கை எடுத்தது ஆகியவற்றை குறிப்பிடலாம். அதோடு, ஐரோப்பா அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆதிக்கம் தான் போப்பாண்டவரை தேர்ந்தெடுக்கும் கார்டினல்கள் எண்ணிக்கையில் அதிம் இருந்தது.இதில் மாற்றத்தை ஏற்படுத்தி 48 நாடுகளில் மட்டும் இருந்த கார்டினல்களை 78 நாடுகளுக்கு விரிவுபடுத்தினார். இதற்கெல்லாம் மேலாக 1951 ஆம் ஆண்டு சீனாவுடன் முறிந்து போன உறவை புதுப்பிக்க செய்தார். இவை தவிர கோட்பாடு ரீதியான சில விஷயங்களில் துணிச்சலான முறையில் உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஐரோப்பியர்கள் 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் மீது வணிகம் என்ற பெயரால் உள்நுழைந்து காலனி நாடுகளாக மாற்றினார்கள். புதிய நிலங்களை நாங்கள் கண்டுபிடித்து புதிய வளர்ச்சிகளை ஏற்படுத்தினோம். பூர்வகுடி மக்களுக்கு நாகரிகங்களை கற்றுக் கொடுத்தோம். இவையெல்லாம் எங்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள் என்று பறை சாற்றினார்கள். இதற்கு காலனித்துவ கண்டுபிடிப்பு கோட்பாடு (doctrine of discovery) என்று பெயர். இவர்கள் பூர்வகுடி மக்களின் நிலங்களை சட்டம் என்ற அடிப்படையிலும், மதத்தை பயன்படுத்தி, வன்முறை மூலமாக அபகரித்துக் கொண்டார்கள். பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்களை நிலத்தை விட்டு விரட்டி அடித்தார்கள். இந்த நடவடிக்கைக்கு அன்று இருந்த புனித பீடம் உறுதுணையாக இருந்ததுமட்டுமல்லஅதிகாரபூர்மானஉத்திரவையும்வழங்கினார்கள்.
1452 ஆம் ஆண்டு போப் ஐந்தாம் நிக்கோலஸ் என்பவர் போர்ச்சுகல் மன்னன் ஐந்தாம் அல்போன்சோவிற்கு இஸ்லாமியர்களையும், கருப்பர்களையும் பல்வேறு கடவுள்களை வழிபடுபவர்களையும், கடவுள் நம்பிக்கையற்றவர்களையும் அடிமையாக்கி கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு சம்பந்தப்பட்டவர்களின் நிலங்களை சட்டபூர்வமாக அபகரிக்க வழிவகை செய்தது.50 ஆண்டுகள் கடந்த பிறகு இவை செல்லுபடி ஆகாது என்று அறிவித்தாலும், அதற்குள் பூர்வ குடி மக்களின் நிலங்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டுவிட்டது. அடிமை வியாபாரம், கடவுளின் பெயரால் கடல் கடந்து பரவியது.
19ஆவது நூற்றாண்டில் இந்த கோட்பாட்டை அமெரிக்கா தனது செவ்விந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்திக் கொண்டது. பூர்வகுடி மக்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் உரிமை பத்திரம் இல்லை என்றால் அந்த நிலங்கள் கைப்பற்றியவர்களுக்கு சொந்தம் என்று அறிவித்தது. அதற்கு மேலாக 1823 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் பூர்வகுடி மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்த நிலமாக இருந்தாலும் அதன் மீது அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் அவை வெறுமனே குடியிருப்பு உரிமை மட்டுமே என்று கூறியது. இதன் மூலம் சட்டபூர்வமாக நிலத்தை கைப்பற்றுவது துரிதமாக நடைபெற்றது.
திருச்சபையினால் 1452 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட இந்த உத்தரவை திருச்சபையின் மூலமாகவே திரும்ப பெற வேண்டும் என்று காலனிநாடுகளில்வசித்தபூர்வகுடி மக்கள் போராடினார்கள். தனிப்பட்ட முறையில் சில போப்பாண்டவர்கள் மன்னிப்பு கேட்பது பிரச்சனைக்கு தீர்வாகாது என்று தெரிவித்தார்கள். இத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் இதற்கு முந்தைய போப்பாண்டவர்கள் சில முற்போக்கான கருத்துக்களை தெரிவித்து இருந்தாலும் போப் பிரான்சிஸ் அவர்கள்அதிகாரப்பூர்வமாக கத்தோலிக்க திருச்சபை பூர்வகுடி மக்களின் உள்ளார்ந்த மனித உரிமைகளை அங்கீகரிக்காத எந்த கருத்தையும் நிராகரிக்கிறது என்றும், காலனித்துவ கண்டுபிடிப்பு கோட்பாடுகளை புனித பீடம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் உறுதிப்பட தெரிவித்தார். இதே காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை பூர்வகுடி மக்களின் உரிமைகளைப் பற்றிய விரிவான அறிக்கை தயார் செய்து அளித்ததை புனித பீடம் வரவேற்றது.
2023 ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் கனடாவிற்கு சென்ற பொழுது பூர்வகுடி மக்களின் கலாச்சாரத்தையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட காலனித்துவ கண்டுபிடிப்பு கோட்பாடுகள் கத்தோலிக்க நம்பிக்கையின் ஒரு பகுதி அல்ல என்று திட்டவட்டமாக அறிவித்தது மட்டுமல்ல பூர்வகுடி மக்களிடம் மன்னிப்பையும் கேட்டார். இதையும் கடந்து நவ காலனித்துவத்தை ஒரு குற்ற செயல் என்றும் சமாதானத்துக்கு எதிரானது என்றும்போப்பிரான்சிஸ் அறிவித்தார்.
இதன் விளைவாக போப் பிரான்சிஸ் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்; எதிர்ப்புகளை சந்தித்தார். இவர் லத்தீன் அமெரிக்காவின் அர்ஜென்டைனா நாட்டைச் சேர்ந்தவர். பெரோனிச கலாச்சாரத்தை சார்ந்தவர் (அர்ஜென்டைனாவில்இருக்கும்அரசியல்சிந்தாந்தம்இயக்கம்) இயற்கையாகவே அமெரிக்க எதிர்ப்பாளர் என்று அமெரிக்க ஆதரவு சக்திகள் குற்றம் சாட்டினார்கள். அத்துடன் நிற்கவில்லை. சீனாவின் எதிர்மறை கூறுகளை இவர் கவனிக்க தவறுகிறார் அல்லது கண்டிக்க தவறுகிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.திபெத் பிரச்சனை, தலாய்லாமா பிரச்சனை, உய்கூர்,ஜின்ஜியாங், ஹாங்காங் போன்றவற்றில் கருத்து சொல்ல மறுக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்கள். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு தான் அவர் சீர்திருத்தங்களை முன் வைத்தார்.
போப் 14-ம் லியோ, சீனாவுடனான உறவை தொடர்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையில் ஐரோப்பிய ஒன்றியம் சிக்கிக் கொண்டது போல் புனிதபீடம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று நினைக்கிறார் என பத்திரிக்கையாளர்கள் எழுதுகிறார்கள். மற்றொரு செய்தியும் பரவலாக பேசப்படுகிறது. இவர் போப் 13ம் லியோவின் பெயரை தேர்ந்தெடுத்து இருப்பதே ஒரு செய்தியை வெளிப்படுத்துகிறது என்று எழுதுகிறார்கள். இந்தப் பெயர் பழமைவாதிகளுக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
13ம் லியோ சீர்திருத்தவாத முன்னோடியாக இருந்தார். அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். 1878 முதல் 1903 வரை பொறுப்பில் இருந்தார். நீண்ட வருடங்கள் பொறுப்பில் இருந்தவர்களில் இவரும் ஒருவர். பதிமூன்றாம் லியோ 1891 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் தொழிலாளர்களுக்கான நியாயமான ஊதியம், அவர்களுக்கு பாதுகாப்பான வேலை, தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமை ஆகியவற்றிற்காக தேவாலயங்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். தாராளவாத முதலாளித்துவத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையே நடந்தார் என்று கூட பதியப்பட்டுள்ளது.
நான் சோசலிசத்தை எதிர்க்கவில்லை நாத்திக சோசலிசத்தை எதிர்க்கிறேன் என்ற முறையில் பேசினார். இந்த நடவடிக்கை காரணமாக அவரை தொழிலாளர்களின் போப்பாண்டவர் அல்லது சமூகபோப்பாண்டவர் என்று அழைத்தார்கள். கத்தோலிக்க திருச்சபையின் சமூக கோட்பாடுகளில் சில நவீன சிந்தனைக்கான அடித்தளங்களை உருவாக்கினார். இந்த உருவாக்கம் அடுத்தடுத்து வந்தவர்களின் மீது செல்வாக்கு செலுத்தியது. இவரின் பெயரை தான் 14-ம் லியோ என்று தற்போதைய போப் சூட்டிக்கொண்டார்.
புதிய போப்பின் சீனக் கொள்கையும் அமெரிக்க தலையிடும்
1951 ஆம் ஆண்டு சீனா வாடிகன்அரசுடனான ராஜதந்திர உறவை துண்டித்துக் கொண்டது. தைவானுடன் வாடிகன் அரசு உறவு கொண்டிருப்பதால் சீனாவில் இருந்த போப்பாண்டவரின் தூதுவரை வெளியேற்றினார்கள். சீனாவில் கத்தோலிக்க மத செயல்பாடுகள் தேசபக்தி மத செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அமெரிக்க மற்றும் வாடிகன் தலையீடு மூலமாக தலைமறைவு செயல்பாடுகளையும், சீர்குலைவு வேலைகளையும்தொடர்ந்துசெய்துகொண்டிருந்தனர். சீனாவுடனான உறவை புதுப்பிப்பதற்கு போப் பிரான்சிஸ்க்கு முன்பு இருந்த போப் பெனெட்டிக் சில கடிதங்களை எழுதியிருந்தார். 2012 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஜி ஜின்பிங் பொறுப்பேற்றவுடன் சீன தன்மைக்கு ஏற்ற வகையில் மதங்களின் செயல்பாடுகளில் புதிய கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு சீனாவிற்கும் போப்பிரான்சிஸ் தலைமையிலான புனித பீடத்திற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் விதிகள் ரகசியமாக வைத்திருப்பது என்று இரு தரப்பின் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு முக்கியமான அம்சம் சீனாவில் உள்ள கத்தோலிக்க மறை மாவட்டங்களுக்கு (90 மாவட்டங்கள்உள்ளன) பிஷப்புகளை இதுவரை சீனாவின் தேசபக்த கத்தோலிக்க மதசபை நியமித்து வந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீன அரசு சார்பில் பிஷப்களின் பெயர்கள் முன்மொழியப்படும் அவற்றை போப் அங்கீகரிப்பார் என்ற முறையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட பிஷப்கள்நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். போப்பின் வீட்டோஅதிகாரத்தை அவர் இதுவரை பயன்படுத்தவில்லை.
முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தம் 2020 ஆம் ஆண்டு நான்காண்டுகள் என்று விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 2024 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக இந்த ஒப்பந்தம் போப் பிரான்சிஸ் தலைமையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கண்டு அச்சப்பட்டு சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. முதல் முறை டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இருக்கிற பொழுது சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு சிறுபான்மையினரை துன்புறுத்துகிறது என்று காரணத்தைச் சொல்லி கத்தோலிக்க திருச்சபை இருதரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். மீண்டும் 2020 ஆம் ஆண்டு நான்காண்டுகள் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான பொழுது புதுப்பிக்க கூடாது என்று புனிதபீடத்தை வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமலும் ரோம் அரசின் வேண்டுகோளை ஏற்காமலும் வாடிகன்அரசு ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்தது. புனித பீடத்தின் செய்தி குறிப்பு கத்தோலிக்க திருச்சபையின் வாழ்க்கையையும், சீன மக்களின் நன்மையும் மேம்படுத்த திறந்த மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலை தொடர வாடிகன் விரும்புகிறது என்று தெரிவித்தது.
தற்பொழுது இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் சீனாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற வேலையை ஆரம்பித்து உள்ளது. வாடிகனுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க தூதர் பிரைன் பர்க் ஒரு தனியார் மத நிறுவனத்தின் தலைமையை தேர்ந்தெடுப்பதில் வெளிநாட்டு அரசாங்கத்திற்கு எந்த பங்கும் இல்லை என்பதை வாடிகன் உறுதிபட தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான வாடிகன் ராஜதந்திர உறவை புதுப்பிக்கவில்லை. ஆனால், கத்தோலிக்க மதம் தொடர்பான சில விஷயங்களில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கூட அமெரிக்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சீனாவை சீர்குலைக்க கத்தோலிக்க மதத்தை பயன்படுத்த துடிக்கிறது. அதற்கு புனித பீடத்தை தன் வலைக்குள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிடுகிறது.ஆனால்,சீனமக்கள்குடியரசு,மதம்அரசியலுக்குபயன்படுத்தக்கூடாது, ஏகாதிபத்தியசக்திகள்எந்தமதத்தையும்பயன்படுத்திசீனாவில்சீர்குலைவுசெய்யமுடியாதுஎன்பதில்உறுதியாகஉள்ளது.
அமெரிக்கா மற்றும் சீன எதிர்ப்பு சக்திகள் சீனாவில் செயல்படக்கூடிய சில கத்தோலிக்க அமைப்புகளை தூண்டிவிட்டு கலவரத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சிக்கிறது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் சாங்காய் மறை மாவட்டத்தின் பிஷப் நியமிக்கப்பட்டதை ஒரு பிரச்சினையாக மாற்றினார்கள். சீனா போப் பிரான்சிஸிடம் கலந்தால் ருசிக்காமலேயே சாங்காய் மாவட்டத்தின் பிஷப்பை நியமித்து விட்டது என்று பிரச்சாரம் செய்தார்கள் சீன அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்கள்.
போப் பிரான்சிஸ் இந்த நியமனத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல ஒப்பந்தத்தில் தனக்கு இருக்கக்கூடிய வீட்டோ அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை. இதிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தான் இந்த நியமனம் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பொய் செய்திகளை பரப்பி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான
ஹாங்காங் பிரதேசத்தில் பல சீன எதிர்ப்பு சக்திகள் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடையில் பல போராட்டங்களை தூண்டி விட்டார்கள்.கத்தோலிக்கபடிப்பு மிஷின் என்ற பெயரால் பல கத்தோலிக்க பாதிரியார்களை போராட்டங்களில் இறக்கி விட்டனர்.
தைவானும் புனித பீட ஒப்பந்தமும்
தைவானை சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்ததை அமெரிக்காஉட்படஉலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. இன்று வரை 12 நாடுகள்தான் தைவானை அங்கீகரித்து உள்ளன. அவற்றில் ஒன்று வாடிகன்அரசு.
வாடிகனுக்கும்சீனாவிற்கும் உறவு பலமானால் அது தைவானின் நிலைமையை பலவீனமாக்கும் என்று அமெரிக்கா அச்சப்படுகிறது. டொனால்ட்டிரம்ப் போன்றவர்கள் ஜப்பான் மற்றும் சில நாடுகள் உதவியுடன் தைவானைசீனாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு முயற்சிக்கிறது.தைவான் நாடும் வாடிகனின்சீனாவுடனான உறவுகளையும், ஒப்பந்தங்களையும் கடுமையாக எதிர்க்கிறது.
ஆனால் ஆசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், ஒப்பந்தம் ஏற்படுத்துவதிலும் இரண்டாவது சிந்தனை இல்லை என்பதை வாடிகன் தெரிவித்துவிட்டது.
இருந்தாலும் புதிய போப் ஆண்டவர் அமெரிக்க கண்டத்தை சேர்ந்தவர் என்பதால் அமெரிக்க அதிபரின் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். இவர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர் என்று கூற முடியாது. ட்ரம்ப் முன்வைத்த மகா கொள்கையை இவர் ஆதரிக்கவில்லை. ஆனாலும் அமெரிக்காவின் புவிசார் அரசியல் என்பதை நிலை நிறுத்துவதற்கு டொனால்ட் ட்ரம்பும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
ஆனால் சீனாவில் கத்தோலிக்க மதத்தை காலம் காலமாக அந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அன்னிய சக்திகள் ஆட்சியைப்பிடித்த பொழுதிலிருந்து பயன்படுத்தி வருகிறார்கள். நான்கிங் ஒப்பந்தத்தில் இருந்து ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் கத்தோலிக்க மத செயல்பாடுகளுக்கு தடை இருக்கக் கூடாது என்று ஷரத்துக்களை சேர்த்துக் கொண்டே வந்தார்கள்.
இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்துள்ள ட்ரம்ப் சீனாவில் ஜனநாயகம் இல்லை என்றோ, மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள் என்றோ, சுதந்திரம் இல்லை என்றோ இப்பொழுது பேச முடியாது. எனவே சீனாவின் சீர்குலைவு சக்திக்கு ட்ரம்பின் குழு திட்டமிட்டு இருப்பது மத சுதந்திரம் என்ற பெயரில் உள்நாட்டில் தலையிடுவது மட்டும் தான். இதைத்தான் இன்று சீன அரசாங்கம் சாதுரியமான முறையில் எதிர்கொண்டு வருகிறது.சீனா கடந்த கால அனுபவத்திலிருந்து குறிப்பாக அவமானங்களின் நூற்றாண்டின் அனுபவத்திலிருந்து மதம் தொடர்பான விஷயங்களில் விஞ்ஞான பூர்வமான மார்க்சிய அணுகுமுறைகளை கடைபிடித்து வருகிறது.
அ.பாக்கியம்
தொடர் 24 ஜூன் 11 புதனன்று வெளியாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக