Pages

வியாழன், ஜூன் 12, 2025

24 சீனாவில் கத்தோலிக்க மதத் தோற்றமும் கருத்தியல் மோதல்களும்

 

 

அ.பாக்கியம்

சீனாவில் கத்தோலிக்க மதத்தின் தோற்றம் பொதுஆண்டு ஏழாம் நூற்றாண்டில் இருந்து பதினான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் காணப்பட்டது. இக்காலத்தில் வந்தது நெஸ்டோரிய கிறிஸ்தவம் என்று அழைக்கப்படுகிறது. தாங் வம்ச காலத்தில் (பொஆ 618-781) இந்த நெஸ்டோரிய கிறிஸ்தவம் இருந்ததாக சியான் கல்வெட்டு (பொஆ 781) தெரிவிக்கிறது. அலோப்பன் என்ற துறவியின் தலைமையில் பொது ஆண்டு 635 இல் சீனாவிற்கு வந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நெஸ்டோரிய கிறிஸ்தவத்திற்கு முதலில் வரவேற்பு கிடைத்தாலும் பிறகு அங்குள்ள மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. தாங் வம்ச ஆட்சி வீழ்ச்சி அடைந்த பிறகு இந்த நெஸ்டோரிய கிறிஸ்தவம் மறைந்து விட்டது. இது கத்தோலிக்க வகையைச் சேர்ந்தது அல்ல என்ற கருத்து உள்ளது.

மரியா தேவமாதாவா? கிறிஸ்துவின் தாயா?

இந்த நெஸ்டோரிய  கொள்கை (Nestorianism)  நெஸ்டோரியுசு என்பவர் எடுத்துரைத்த கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. இதை தவறான கொள்கை என்று திருச்சபையின் அங்கம் வகித்த சில பொதுசங்கங்களால் கண்டனம் செய்யப்பட்டது. நெஸ்டோரியுசு கான்ஸ்டான்டின்நோபளின் மறைமுதல்வராக 428 முதல் 431 வரை பொறுப்பு வகித்தார். இவரின் கருத்துப்படி இயேசு கிறிஸ்துவில் கடவுள் இயல்பும் மனித இயல்பும் ஒன்றோடு ஒன்று தொடர்பு அற்றது என்று தெரிவித்தார். இந்தக் கருத்தை எதிர்த்தவர்களில் அலெக்சாந்திரியா மறை மாவட்ட முதல்வர் சிறில் முக்கியமானவர்.

 கிறிஸ்துவ திருச்சபையின் கொள்கைப்படி இயேசுவின் தாயான மரியா உண்மையிலேயே கடவுளின்தாய் என்று இருக்கிறது. நெஸ்டோரியசு மரியாவை வெறுமனே கிறிஸ்துவின் தாய் என்று கூறியது தவறு என்று குற்றம் சுமத்தி அவரது கொள்கையை திரிபுக் கொள்கை என்று கண்டனம் செய்தது மட்டுமல்ல தாக்குதலையும் தொடுத்தார்கள். அங்கிருந்து நெஸ்டோரியஸ் ஆதரவாளர்கள் பாரசீகத்திற்கு சென்று விட்டனர். அங்கிருந்த கிறிஸ்தவசபை சிறுபான்மையாக இருந்ததால் இவர்களை அங்கீகரித்தனர். பாரசீக மன்னர்கள் மற்றும் அங்கிருந்த செராஸ்ட்ர மதமும் கிறிஸ்தவர்கள் வெளி அதிகாரிகளுக்கு அதாவது ரோம் திருச்சபைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் விரும்பவில்லை. எனவே பாரசீக கிறிஸ்துவர்கள் தனிஅதிகாரம் கொண்ட திருச்சபை என்று அறிக்கை விட்டனர். படிப்படியாக பாரசீகத்தில் இருந்து அந்த திருச்சபை நெஸ்டோரிய கொள்கையை தனதாக்கிக் கொண்டதால் மேற்குலக திருச்சபையில் இருந்து பிரிந்து கொண்டது. இந்த முறையில்தான் நெஸ்டோரியனிசம் சீனாவிற்குள் பரவியது. மேலோட்டமான பரவலைத் தவிர சீனாவில் இந்த மதம் செல்வாக்கு செலுத்தவில்லை.

மதமாற்றத்தின் துவக்கம்

பொது ஆண்டுகள் 13 மற்றும் 14வது நூற்றாண்டுகளில் யுவான் வம்சம் என்று பெயர் சூட்டிக்கொண்ட மங்கோலியர்களின் ஆட்சி சீனாவில் ஏற்பட்டது. மங்கோலியா, ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பகுதியில் உள்ளது. முதலில் மங்கோலிய பேரரசின் பகுதிகளுக்கு பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த இறையியல் பிரச்சாரகர்கள் வந்தனர். ஜான் ஆப் மாண்டிகோர்வினோம் என்பவர் 1294 இல் கான்பாலிக் என்று அழைக்கப்பட்ட பெய்ஜிங் வந்தடைந்தார். இவர் இங்கு சில தேவாலயங்களை கட்டினார். புனித நூல்களை சீன மொழியில் மொழி பெயர்த்தார். ஆயிரக்கணக்கான மங்கோலியர்களையும், ஆர்மீனியர்களையும் ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்துவ மதத்தை தழுவச் செய்தார். 1307 ஆம் ஆண்டு பெய்ஜிங் நகரின் முதல் ஆர்ச் பிஷப் ஆக திருச்சபையால் நியமிக்கப்பட்டார். மங்கோலிய பேரரசர்களை கிறிஸ்துவத்தை தழுவ செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 1305 ஆம் ஆண்டு பெய்ஜிங் நகரத்தில் மன்னரின் அரண்மனைக்கு எதிரே குடியிருப்புகள், 200 பேருக்கான பட்டறைகள், இவற்றுடன் ஒரு தேவாலயத்தையும் கட்டினார். மேலும் அங்கிருந்த வறுமையில் வாடிய பெற்றோர்களிடமிருந்து 7 முதல் 11 வயதான சிறுவர்களை வாங்கி??? அவர்களை தேவாலயத்தில் தங்க வைத்து லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளை பயிற்றுவித்தார். அதோடு இசையையும் பயிற்றுவித்து தேவாலயங்களில் நடைபெறும் திருப்பலியில் பாடவும் பயிற்சி அளித்தார். பைபிளின் புதிய ஏற்பாட்டையும், பாடல்களையும் மங்கோலிய ஆளும்வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட உய்கூர் மொழியில் மொழிபெயர்த்தார். சுமார் 6,000த்துக்கு மேற்பட்டவர்களை ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்துவராக மாற்றினார். இதில் அரசவை பிரமுகர்களும் அடங்குவார்கள்.

ஜான் மாண்டிகோர்வினோம் இத்தாலியில் பிறந்தவர். இவர் இத்தாலிய பிரான்சிஸ்கன் மிஷினரி மட்டுமல்ல பயணங்களை மேற்கொள்ளக்கூடியவரும், அரசியல்வாதியும் ஆவார். சீனாவில் மட்டுமல்ல அதற்கு முன்பாக இந்தியாவிலும் லத்தீன் கத்தோலிக்க மிஷினரிகளை நிறுவியவர். இவர் பெர்சியாவில் இருந்து கடல் வழியாக 1291 இல் மெட்ராஸ் பகுதிக்கு வந்து 13 மாதங்கள் கிறிஸ்துவ பிரச்சாரங்களை செய்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். மெட்ராஸில் இருந்து பயணம் செய்து தான் சீனாவிற்கு சென்றார். இவர் சீனாவிற்கு சென்ற பொழுது யுவான்வம்ச அரசவையில் மார்க்கோ போலோ பொறுப்புகளை வகித்த செல்வாக்கு மிக்க நபராகத் திகழ்ந்தார். இதனால் ஜான் மாண்டிகோர்வினோமின் மத செயல்பாடுகளுக்கு தடையற்ற வெளிகிடைத்தது. இருப்பினும் 1368 ஆம் ஆண்டு யுவான் வம்சம் வீழ்ச்சி அடைந்தது. மங்கோலியர்கள் அந்நியர்கள் என்பதால் அவர்களை எதிர்த்த மிங் வம்சத்தின் ஆட்சி ஏற்பட்டது. அந்நிய எதிர்ப்பில் அந்நிய மதமாக கருதப்பட்ட லத்தின் கத்தோலிக்கத்தின் செயல்பாடும் முடிவுக்கு வந்தது.

இணக்கமான இணைப்பு

ரோமை தலைநகரமாகக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் கீழ் பல்வேறு சபைகள் அன்றும் செயல்பட்டன, இன்றும் செயல்படுகின்றன. அடுத்த கட்டமாக சேசு சபையை சேர்ந்த மாட்டியோ ரிச்சி (Matteo Ricci) மிங்க் வம்ச ஆட்சியின் பிற்காலமான 16,17 வது நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த மக்காவ் தீவிற்கு 1582ல் வந்தடைந்தார். அங்கிருந்து சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு 1583இல் நுழைந்தார். இவர் சீன மொழியும் சீனாவின் பாரம்பரிய நூல்களையும் கற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல சீனாவில் நன்கு அறிமுகமான கன்பியூசிய அறிஞரைப் போல உடைகளை அணிந்து கொண்டார். கிறிஸ்துவத்தின் இறையியலை கன்பியூசிய கருத்துக்களுடன் ஒருங்கிணைத்து பிரச்சாரம் செய்தார். மேற்கத்திய கத்தோலிக்க கோட்பாடுகளை, சீனாவில் முன்னோர் வழிபாடுகளுடன் ஒருங்கிணைத்தார். கிறிஸ்துவ வரலாற்றில் இதற்கு முன் இல்லாத ஒரு புதிய முயற்சியாக இது அமைந்தது.  தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும் இருந்தது. பல கன்பூசியஸ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மேற்குலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். இது சீனாவின் பண்டைய நாகரிகத்தையும், கிழக்கு நாகரீகம் நவீனமானது என்ற உண்மைகளையும் மேற்கத்திய அறிவு சார் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது.

அறிவு சார்ந்த விஷயங்களை பரிமாற்றம் செய்வதிலும் இவர் கவனம் செலுத்தினார். அதாவது மேற்கத்திய அறிவியல், கணிதம், வானிலை போன்றவற்றை அதிகமாக அறிமுகப்படுத்தி பேசினார். இவர் கல்வியறிவு பெற்ற சீன உயர் குடியினரை இலக்காகக் கொண்டு தனது செயலை அமைத்துக் கொண்டார். இவர் மிஷினெரியாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த அறிஞராகவும் இருந்தார்.

இவர் 1601 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் குடியேறினார். அறிஞர்கள் மற்றும் பேரரசிடம் நன்மதிப்பை பெற்றார். இவரைப் பின்பற்றி பிற்காலத்தில் சேசு சபையை சேர்ந்த ஜோஹான் ஆடம்ஷால் வான்பெல், ஃபெர்டினாண்ட் வெர்பீஸ்ட், போன்றவர்கள் கிங் வம்ச ஆட்சி காலத்தில் வானியல் ஆலோசர்களாக இருந்தார்கள். மேட்டியோ ரிச்சி தலைமையிலான சேசு சபையினர் கன்பியூசிய சடங்குகள், மூதாதையர்கள் வழிபாடு, கடவுளுக்கான வார்த்தைகள்,  குடிமை மற்றும் அரசியல் சடங்குகள் ஆகியவை கத்தோலிக்கத்துடன் பொருந்தக் கூடியது என்று வாதிட்டார்கள். ஆனால் பிரான்சிஸ்கன் மற்றும் டொமினிக்கன் சபையினர் இதை எதிர்த்தார்கள்.

சீன மக்கள் பல்வேறு மத நம்பிக்கைகளை கொண்டுள்ளார்கள். இவற்றில் குறிப்பிடத்தக்கது புத்தரை வணங்குவதும், தங்களது முன்னோர்களை வணங்கி கௌரவிப்பதும் அடங்கும். இந்த சடங்கு முறைகள் ஒருவரின் தோற்றத்தை மதிப்பதும், தங்களது ஆசான்களுக்கு மரியாதை செலுத்துவதற்குமான ஒரு பண்பாட்டு ரீதியான மரபாகும். இந்த மரபு கிறிஸ்துவ நம்பிக்கைகளுடன் எந்த இடத்திலும் முரண்படவில்லை என்று அப்போதைய திருத்தந்தைக்கு (போப்) கடிதம் எழுதினார். இது திருத்தந்தையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பிற பண்பாடுகள் மீது மாட்டியோ ரிச்சியன் கொண்டிருந்த அணுகுமுறை சீனாவில் அவரது மிஷனரி பணிகள் பரவுவதற்கா சூழலை எளிதாக்கியது. அத்துடன் மட்டுமல்ல சீன வரலாற்றில் அவர் நீண்ட காலத்திற்கு புகழைப் பெற்றார். இக்காலத்தில் மிங்வம்ச உயர்அதிகாரிகள் உட்பட பலர் ஞானஸ்நானம் பெற்று கத்தோலிக்கர்களாக மாறினார்கள். கத்தோலிக்க மதம் சீன முன்னோர்களின் சடங்குகளை ஏற்றுக்கொண்டவுடன் அது தொடர்புடைய பண்பாட்டு விழாக்களான விளக்கு விழா, இலையுதிர் கால விழா, டிராகன் படகு விழா போன்றவைகளும் இணைத்து கொண்டாடப்பட்டன. கிறிஸ்தவர்கள் பலிபீடங்கள், முன்னோர் பழக்கவழக்கங்கள் மற்றும் டிராகன் சிற்பங்கள் போன்றவற்றையும் தங்கள் வழிபாட்டு முறைகளில் சேர்த்துக் கொண்டார்கள். இதனால் சீனாவில் கத்தோலிக்கத்தை  பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானது.

தடையும் - தடை நீக்கமும்:  தடுமாற்றத்தில் திருச்சபை

ஆனாலும் சீனாவில் கன்பூசியஸ் சடங்குகளின் தன்மைகளை கிறிஸ்துவம் உள்வாங்கிக் கொள்வது தொடர்பான சூடான விவாதம் கத்தோலிக்க திருச்சபையில் நடந்து கொண்டே இருந்தது. ஒரு தீர்மானகரமான முடிவை எட்டவில்லை. இந்த நேரத்தில் சீனாவில் செயல்பட்ட  டொமினிக்கன் சபையைச் சேர்ந்த மிஷினரி பாதிரியார் ஜுவான் பாடிஸ்டா மோராலெஸ் சீனாவில் உள்ள கத்தோலிக்கர்கள் சீன முன்னோர் மற்றும் கன்பூசியஸ் சடங்குகளை ஏற்றுக் கொள்வதை எதிர்த்து, பல ஆவணங்களை தயாரித்து அவற்றை தடை செய்ய வேண்டும் என்று திருத்தந்தைக்கு கடிதம் எழுதினார். 1645 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பத்தாம் இன்னோசன்ட், பாதிரியார் மோராலெஸ் முன்மொழிவை ஏற்றுக் கொண்டு கத்தோலிக்கர்கள் இந்த சடங்குகளை பின்பற்றக் கூடாது என்று உத்தரவிட்டார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த மற்றொரு சேசு சபை மிஷனரி பாதிரியார்  மார்ட்டினோ மார்ட்டினி 1643 ஆம் ஆண்டு மக்காவ்விற்கு வந்து சேர்ந்தார். 1650 ஆம் ஆண்டு பெய்ஜிங் தலைநகருக்குள் நுழைந்தார். அங்கு அவர் சுன்சி பேரரசை சந்தித்துப் பேசினார். இதே ஆண்டு சீன சடங்குகள் விஷயத்தில் சேசு சபையின் நிலைப்பாட்டை வாடிகனுக்கு விளக்குவதற்காக சீனாவில் இருந்த சேசு சபையினரால் அனுப்பப்பட்டார். அப்போது நடைபெற்ற கொண்டிருந்த மிங் வம்ச ஆட்சிக்கு எதிரான படையெடுப்புகளையும், ஐரோப்பா முழுவதும் விரிவாக விளக்கினார். திருத்தந்தையிடம் சீனாவில், பெற்றோர்களுக்கும், மூத்தவர்களுக்கும் செய்யப்படுகிற சடங்கு என்பது அவர்களது குழந்தைகள் அவர்களுக்கு செய்யக்கூடிய கடமைகளில் ஒன்றாகும். அவர்கள் வாழ்ந்த பொழுதும் இறந்த பின்னரும் கத்தோலிக்க கோட்பாட்டிற்கு முரணாக இல்லை என்று வாதிட்டார்.

இதன் விளைவாக 1656 இல் திருத்தந்தை ஏழாம் அலெக்ஸாண்டர் மார்ட்டினியின் மனுவை அங்கீகரித்து சீனாவில் மதம் மாறிய மக்கள் முன்னோர் மற்றும் கன்பியூசியஸ் சடங்குகளை செய்ய அனுமதி வழங்கினார். இந்த உத்தரவுடன் 1657இல் மார்ட்டினி சீனாவிற்கு புறப்பட்டார். சீனாவில் இதர சேசு சபையினருடள் இணைந்து சுற்றுப்பயணங்களை செய்து சீனாவிற்கான வரைபடத்தை தயாரித்தார். மேற்குலக நாடுகளுக்கு கிடைத்த முதல் வரைபடமாகும் இது. சீனாவில் மரியாதைக்குரியவராக இருந்த மார்ட்டினி 1861 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி காலராவால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது கல்லறை சீனாவில் ஹாங்கோவில் உள்ளது.

பண்பாட்டு அகம்பாவமும்  நாகரிகத்தின் வெளிப்பாடும்

சீன சடங்குகளை ஏற்றுக் கொண்டதை எதிர்த்து 1674 இல் டொமினிக்கன்  மிஷினரி பாதிரியார் டொம்மிங்கோ பெர்னாண்டஸ் நவாரெட் சீன சடங்குகள் தொடர்பான அம்சங்களை தடைசெய்ய  வேண்டும் என்று ஆவணங்களை சமர்ப்பித்தார். 1676 இல் சீனாவின் வரலாறு, அரசியல் மற்றும் மதம் குறித்த பொது உரை என்ற நூலை ஐரோப்பாவில் வெளியிட்டார். இதில் சீனாவில் கடைபிடிக்கப்பட்ட முன்னோர் வழிபாடுகளும், கன்பூசியஸ் சடங்குகளின் அம்சங்களில் உள்ளவற்றையும் மிகப்பெரிய விவாதமாக ஐரோப்பாவில் நடப்பதற்கு இந்த புத்தகம் தூண்டுகோலாக அமைந்தது. இந்த விவாதங்களைத் தொடர்ந்து 1704 இல் திருத்தந்தை பதினோராம் கிளமெண்ட் சீன கத்தோலிக்கத்தில் கன்பியூசிய மற்றும் முன்னோர் சடங்குகளை தடை செய்து உத்தரவை பிறப்பித்தது மட்டுமல்ல, அடுத்த ஆண்டு அவர் தனது பிரதிநிதிகள் இருவரை சீனாவிற்கு அனுப்பி இந்த தடையை முறையாக அறிவிக்க செய்தார். நீண்ட விவாதங்களுக்கு பிறகு முன்னோர் மற்றும் கன்பியூசிய சடங்குகள் விக்கிரக ஆராதனை செயல்கள் என்று முடிவு செய்தது மட்டுமல்ல, அவை கத்தோலிக்க கோட்பாட்டிற்கு பொருந்தாதவை என்று முடிவு செய்தது. அநேகமாக 1939 ஆம் ஆண்டு வரை இந்த தடை அதிகாரப்பூர்வமாக நீக்கப்படவில்லை. ஆரம்பத்தில் திருத்தந்தையின் தூதுவராக தடைகளை அறிவிக்க வந்த பிஷப் டூர்னனை சீனாவின் காங்சி பேரரசர் மரியாதையுடன் வரவேற்றார். தடைகளை அறிவிக்க வந்தவர் என்று அறிந்தவுடன் அவரை தலைநகரை விட்டு உடனடியாக வெளியேற்றினார்.

இந்த தடைகளுக்கு எதிராக சீனப் பேரரசர்களின் பதில் நடவடிக்கை கடுமையானதாக இருக்கவில்லை. காரணம், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த சடங்குகளை நடத்தினார்கள். கன்பூசியஸ் மதிப்புகள் விசுவாசம், குழந்தைகளின் கடமை, கருணை, அன்பு ஆகியவற்றை உணர்த்தியது என்று நம்பினார்கள். மேற்கத்திய மிஷனரிகள் இந்த சடங்குகள் குற்றச் செயல்கள் என்று தொடர்ந்து பேரரசரிடமும் மற்றவர்களிடமும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். இவை பண்பாட்டு அகம்பாவம் மட்டுமல்ல ஆதிக்கம் செலுத்துவதற்கான நோக்கத்தையும் பிரதிபலித்தது. இந்தத் தடைகளுக்கு எதிராக ரத்தம் தோய்ந்த மோதல்களை சீன மக்கள் நடத்தவில்லை. இஸ்லாம், கிறிஸ்துவத்திற்கு இடையே நடந்த ரத்தம் தோய்ந்த மதப் போர்கள், ஜப்பான் மற்றும் கொரியாவில் கூட கிறிஸ்துவ மிஷனரிகளின் தலைகளை துண்டித்து எறிந்தார்கள், மதவிரோதிகளை தீயில் எரிப்பது உட்பட அக்காலத்தில் கத்தோலிக்க திருச்சபைக்குள்ளேயே நடந்த மோதல்களை விட,  சீனாவின் இந்த தடைகளை எதிர்த்த முறைகள் என்பது மிகவும் நாகரிகமானதாக இருந்தது. கிறிஸ்துவ மதம் தடை செய்யப்பட்டது. அதன் வளர்ச்சியும் குன்றியது.

டிராகன் மீதான பண்பாட்டு தாக்குதல்

மீண்டும் 1842 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீன மக்களை மேற்கத்திய சக்திகள் அபினி போதைக்குள் அழுத்தி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டார்கள். ஒவ்வொரு முறையும் கிங் வம்சத்தை வெற்றி கொண்ட பொழுது ஒப்பந்தம் போட்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் கத்தோலிக்க மதத்தை சீனாவில் செயல்படுவதற்கு, பிரச்சாரம் செய்வதற்கு சுதந்திரம் வேண்டும் என்றும், சொத்துக்கள் வாங்குவதற்கு தடை கூடாது என்றும், கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களுக்கும், அதன் பாதிரிகளுக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் ஒப்பந்தங்களை போட்டார்கள். இதன் மூலமாக துப்பாக்கி முனையில் கத்தோலிக்கத்தை பரவ செய்தார்கள். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புடன் புதிய முறையில் கிறிஸ்துவம் உள்ளே நுழைந்தது. கருத்தியல் மோதல்களை கடந்து வன்முறை மூலமாக மேற்கத்திய சக்திகள் சீனாவில் கத்தோலிக்கத்தை திணித்தார்கள்.

1860 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவின் கடற்கரைப் பகுதிகளிலும் உள்பகுதிகளிலும் கத்தோலிக்க திருச்சபை சீன அரசின் டைகளையும் மீறி செயல்பட ஆரம்பித்தது. உள்ளூர் மக்களுடன்  ஆயுதம் கொண்டு மோதலை நடத்தி நிலம் மற்றும் சொத்துக்களை வாங்குவதும், அபகரித்ததும் நடந்து கொண்டிருந்தது. அங்கு அவர்கள் கல்விப் பணிகளையும் சுகாதாரப் பணிகளையும் செய்தாலும் அடிப்படையில் பதட்டமும் வெறுப்பும் கொதிநிலையில் இருந்தது.

கொடுமை என்னவென்றால், சீனாவில் டிராகன் என்ற வார்த்தையும், அந்தப் படமும் சீனப் பண்பாட்டில் ஒரு நல்லிணக்க அடையாளமாகவும், தெய்வீகத்தின் உயிரினமாகவும் கருதப்படுகிறது. ஆனால் பைபிளில் சீன மொழிபெயர்ப்பில் டிராகன் என்ற வார்த்தை நரகத்தின் சின்னம், தீய செயல்களின் அடையாளம் , ஒரு சாத்தானிய அரக்கனாக முன்வைக்கப்பட்டது. எப்படி ஒரு மத நம்பிக்கை மீது கத்தோலிக்க கிறிஸ்துவம் அரசியல் நோக்கத்தோடு பண்பாட்டு படையெடுப்பை நடத்தினார்கள் என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை.

இதன் தொடர்ச்சியாக தான் 1900 இல் பாக்சர் ககத்தின் போது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களையும், திருச்சபையையும் பிரித்துப் பார்க்க முடியாமல் ஒன்றாக கருதி கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அயல்நாட்டு வெறுப்பு, மூடநம்பிக்கை அல்ல. அதற்கு மாறாக சீன பண்பாட்டின் மீது நடைபெற்ற தொடர் தாக்குதலுக்கான வெளிப்பாடாக அமைந்தது.

1949 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பிறகு மதம் குறித்த மார்க்சிய அணுகுமுறைகள் முன்னெடுக்கப்பட்டன. கத்தோலிக்கம் ஏகாதிபத்திய சதிகளின் ஒரு பகுதியாக தொடர்ந்து செயல்பட்டதால் அதனுடன் கடுமையான முரண்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும். சீனா தேசபக்த மத சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் அடிப்படையில் மதத்தை அரசியலில் இருந்து பிரித்து செயல்பட அனுமதித்து உள்ளது.

இந்த தேசபக்த மத செயல்பாடுகளில்  சீன கத்தோலிக்க தேசபக்த சங்கம், சீன கத்தோலிக்க மத விவகாரங்கள் குழு, சீன கத்தோலிக்க பிஷப் கவுன்சில் என்ற மூன்று அமைப்புகள் மூலம் கத்தோலிக்க வழிபாட்டு முறைகளும், வழிபாட்டு இடங்களும், மதகுருமார்களும், அவர்களது வெளியீடுகளும், பிரச்சாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகள் சீனாவிற்குள் ஊடுருவல் செய்வதற்கு கத்தோலிக்க மதத்தை பயன்படுத்த துடிக்கிறார்கள். அதன் விளைவாகத்தான் தலைமறைவு தேவாலயங்களையும் அமைப்புகளையும் நடத்துகிறார்கள். இதற்கு நிதி உதவி செய்கிறார்கள். இதிலே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் சீன மக்கள் குடியரசும் 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை போட்டார்கள். இந்த ஒப்பந்தத்தையே ழித்துக் கட்ட அமெரிக்காவும் மேற்கத்திய சக்திகளும் பிரதான கடமையாக எடுத்துக்கொண்டு, மதத்தை சீனாவுக்கு எதிரான பீரங்கி ஆயுதமாக மாற்றி வருகிறார்கள்.

அ.பாக்கியம்

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....