Pages

புதன், ஜூன் 18, 2025

ஈரான் அணுசக்தியின் வரலாறும் அமெரிக்க வஞ்சகமும்

 


அ. பாக்கியம்

இன்று 18.06.25. வெளிவந்துள்ள செய்தியில் ஈரான் இதுவரை ஒரு அணுகுண்டு கூட தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அமெரிக்காவின் உளவுத்துறை ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்றும் 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சிகளைகூட ஈரானின் உச்ச தலைவர் கமேனி அங்கீகரிக்கவில்லை என்று அறிக்கை கொடுத்துள்ளது. உளவுத்துறையின் உயர்ந்த அதிகாரியான கப்பார்ட், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்றும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் கூடுதலாக இருக்கிறது என்பது மட்டும்தான் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்த அறிக்கை பற்றி டொனால்ட் ட்ரம்ப், எனக்கு உளவுத்துறை அறிக்கை பற்றி கவலை இல்லை,( I don’t care what she said,”) நான் முடிவெடுத்து விட்டேன். இஸ்ரேலின் தலைவர் நேதயான்குவும் நானும் ஒரே இடத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துவிட்டார். அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதலை ஆரம்பிக்கப் போகிறோம் என்பதுதான் இதற்கான அறிகுறியாகும். அவர்கள் அணுகுண்டை தயாரிக்கவில்லை என்றாலும் அணுகுண்டை தயாரிப்பதற்கான அருகில் இருக்கிறார்கள் எனவே அவர்களை தாக்குவோம் என்று இஸ்ரேலும், டிரம்பும் அறிவித்து தாக்குதலை நடத்துகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு இதுவரை இல்லாத அளவு எதிர் தாக்குதலை ஈரான் நடத்தி இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேல் இப்படி ஒரு பேரழிவை இதுவரை சந்தித்தது இல்லை.

உலகில் அணு ஆயுத நாடுகள்:

ஈரான் நாடு மட்டும்தான் அணுகுண்டு மூலம் ஆபத்து ஏற்படுத்த இருக்கிறது என்று அமெரிக்க பிரச்சாரங்கள் உலாவந்து கொண்டிருக்கிறது. பூமியில் உள்ள நாடுகளில் ஒன்பது நாடுகள் அணுஆயுதங்களை சொந்தமாக தயாரித்து ராணுவ தாக்குதலுக்கு ஏற்ற வகையில் பொருத்தி வைத்திருக்கிறார்கள். ரஷ்யா(5449), அமெரிக்கா(5277), சீனா(600), பிரான்ஸ்(290), பிரிட்டன்(225), இந்தியா(180), பாகிஸ்தான்(170), இஸ்ரேல்(90), வடகொரியா(50) ஆகிய 9 நாடுகள் ஆகும். இந்த ஒன்பது நாடுகள் தவிர இத்தாலி (25) துருக்கி(20) பெல்ஜியம்(15) ஜெர்மனி(15) நெதர்லாந்து(15) ஆகிய ஐந்து நாடுகளும் அமெரிக்காவிடமிருந்து அணுஆயுதங்களை  வாங்கி வைத்துள்ளன. பெலாரஸ்(வெளியிடவில்லை) நாடு ரஷ்யாவிடம் இருந்து அணுஆயுதங்களை வாங்கி வைத்துள்ளது. இந்த 15 நாடுகள் தவிர அமெரிக்காவின் கூட்டணிகள் மேலும் 28 நாடுகளில் அணு ஆயுதங்களை தாக்குதலுக்கு ஏற்ற வகையில் பொருத்தி வைத்துள்ளது. மொத்தமாக 43 நாடுகளில் அணு ஆயுதங்கள் இப்போது இருக்கிறது. இஸ்ரேலில் மட்டும் 200க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் ராணுவ ஆயுதங்களில் பொருத்தி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கிறது என்பது உலகம் அறிந்த செய்தி. தோராயமாக 12,331 ஆயுதங்கள் உள்ளன இவற்றில் 9600க்கும் மேற்பட்டவை செயலில் உள்ள ராணுவ இருப்புகளில் உள்ளன என்று விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் விஞ்ஞானிகள் 2025 ஆம் ஆண்டு அணுசக்தி படைகளின் நிலையை பற்றி கூறுகிறது பொழுது இவற்றை தெரிவித்து இருக்கிறார்கள். பனிப்போர் காலத்தை ஒப்பிடும்பொழுது அணு ஆயுதங்கள் குறைந்து இருப்பதற்கான தகவல்களையும் தெரிவிக்கிறார்கள். வருங்காலத்தில் இது அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்கள்

இத்தனைக்கு மத்தியிலும் ஈரான் மட்டும் அணு ஆயுத ஆபத்தை உருவாக்கும் என்று சொல்வதற்கு பின்னால் இருக்கக்கூடிய புவிசார் அரசியலை இதற்கு முன் எழுதிய கட்டுரையில் விலக்கி இருக்கிறேன்.

ஈரானின் அணுசக்தி கொள்கை

ஈரான் அணு சக்தியை ஆக்கபூர்வமான வழிகளில் மட்டுமே பயன்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது, வந்துள்ளது. இன்றும் அதே நிலைப்பாட்டை தான் சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்து வருகிறது. 1950 ஆம் ஆண்டுகளில் ஈரான் அறிவியல் ரீதியாகவும், தொழில் துறையிலும் வளர்ச்சி அடைய தொடங்கி இருந்தது. நாட்டை மேலும் தொழில்மயம் ஆக்குவதற்கு அணு சக்தி அவசியமாக தேவைப்பட்டது. மின்சாரம் உட்பட பல தேவைகளை அணுசக்தியின் மூலம் உருவாக்க முடியும் என்று இதர நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு அணுசக்தி வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டினார்கள். 1953ஆம்ஆண்டு முகமதுமெசாடேக் ஆட்சி கவிழ்க்கப் பட்டவுடன், ஈரான் அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. இந்த ஆட்சி கவிழ்க்க உதவி செய்த அமெரிக்க ஜனாதிபதி ஐசெனோவர் 1957 ஆம் ஆண்டு அமைதிக்கான அணுசக்தி கொள்கையை அறிவித்தார். ஈரான் அன்றைய தினம் இந்தக் கொள்கையை முழுமையாக ஆதரித்தது. எனவே ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்திற்கு அணுசக்தி உருவாக்க வேண்டும் என்று அன்றைய மன்னரும் முக்கிய அரசியல் தலைவர்களும் கருதினார்கள்.

ஈரான் அணுசக்தியின் தந்தை

இந்தப் பின்னணியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த அக்பர் எடமெட் என்ற மின் பொறியியல்,லை இயற்பியல் மற்றும் எம்எஸ்சி பட்டங்களை முடித்த ஒரு விஞ்ஞானி சுவிட்சர்லாந்தில் உள்ள கல்லூரியில் ஆராய்ச்சி பொறியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் ஒரு அணு விஞ்ஞானி என்பதால் சுவிட்சர்லாந்து நாட்டின் அணுக்கரு பாதுகாப்பு குழுவின் தலைவராக 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். 1960 ஆம் ஆண்டுகளில் ஈரான் மன்னர் ஷா மேற்கத்திய பாணியில் பல நடவடிக்கைகளை ஈரானில் எடுத்து வந்தார். மன்னர் ஷாவின் சிலர் அம்சங்கள் அக்பர் எடமெட்  கவனத்தை ஈர்த்த து. எனவே அவர் 1965 ஆம் ஆண்டு ஈரானுக்கு திரும்பினார். அன்றைய ஈரான் நாட்டு பிரதமருடன் ஒரு ஆலோசனையை நடத்தி ஈரானுக்கு என்று தனியான அறிவியல் ஆராய்ச்சி துறை தேவை என்பதையும், அதற்கான ஒரு அமைப்பை நிறுவவேண்டும் என்று முன்மொழிந்தார். அப்பொழுது பிரதமராக இருந்த அமீர் அப்பாஸ் ஹூவைடா இந்த ஆலோசனை ஏற்றுக்கொண்டார். நாட்டில் ஏராளமான கார்பன் வளங்கள் இருந்த பொழுதும், ஈரான் நாட்டுக்கு என்று சொந்தமாக எண்ணெய் தொழில் கிடையாது. இது வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என்று அவர் கருதினார். ஈரானில் இருந்த என்னை கம்பெனிகள் முழுவதும் ஆங்கிலோ ஈரானிய நிறுவனமான பிரிட்டிஷுக்கு சொந்தமாக இருந்தது. எனவே ஈரானின் வளர்ச்சிக்கு மின்சாரம் அவசியம். மின்சாரத்திற்கு அணுசக்தி அவசியம். அணுசக்திக்கு ஈரானின் தனித்துவமான அணுக் கொள்கை தேவை என்று முன்மொழிந்தார்.

ஈரான் அரசு 1968 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தின் ஆராய்ச்சிக்கான துணை அமைச்சராக எடமெட் ஈரான் நியமித்தது 1972 ஆம் ஆண்டு இவர் லண்டனுக்கு பயணம் செய்து அணுசக்தி தொடர்பான விவரங்களை அறிந்து கொண்டது மட்டுமல்ல, ஈரான் மன்னர் அணுசக்தி குறித்த வளர்ச்சிக்கு எந்த அளவு ஆர்வமாக உதவி செய்கிறார் என்பதையும் எடுத்துரைத்து வந்தார். இதே காலத்தில் ஈரானில் எண்ணெய் வருவாய் மூலம் கிடைத்த நிதியை அணு சக்திக்கான திட்டங்களை உருவாக்குவதற்கு செலவழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இதற்காக அக்பர் எடமெட் ஐ உடனடியாக இந்த பணியில் இறங்க அழைத்தார்கள். ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த அக்பர் ஈரானில் உருவாக்கப்பட்ட புதிய அணுசக்தி அமைப்பின் தலைவராக மன்னர் நியமித்தார். மேலும் ஈரானின் திட்டமிடல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு ஈரானின் துணைப் பிரதமராகவும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த உயர் அதிகாரங்கள் மூலம் அணுசக்தி துறைக்கான அதிக நிதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதற்கும், அதன் வரவு செலவுகளை அரசாங்கத்திற்கு கொடுக்கத் தேவையில்லை, கருவூலத்திற்கு ஒப்படைத்தால் போதும் என்ற அதிகாரத்தையும் அவரால் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதன் விளைவாக அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்தன.

அமெரிக்க வஞ்சகம் ஆரம்பம்

ஈரான் ஆக்கப்பூர்வமான முறையில் அணுசக்தி பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்ததினால் 1970 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதே காலத்தில் இந்தியா 1974 மே மாதம் அணுகுண்டு சோதனை நடத்தி ஒரு அணு ஆயுத நாடாக தன்னை உயர்த்திக் கொண்டது. இன்னும் சில நாடுகளும் அணுகுண்டு சோதனைகளை நடத்தியதனால் ஈரான் மக்களிடமும் ஆட்சியாளர்களும் இயற்கையாகவே அணுசக்தி வளர்ச்சிக்கு அந்நிய நாடுகளை சார்ந்தே இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் 1970 ஆம் ஆண்டு கையெழுத்து போட்டு இருப்பதால் குறைந்தபட்சம் செறிவூட்டும் யுரேனியத்தை வைத்துக் கொள்வதற்கு உரிமை இருக்கும் என்று ஈரான் அரசு கருதியது.

ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. அமெரிக்கா யுரேனியம் செறுவூட்டலை நீங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. ஈரானில் செறிவூட்டல் தொழில் நுட்ப திட்டத்தை உருவாக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. இதற்கு மாற்றாக ஈரான் அணுசக்தியின் சர்வதேச கூட்டமைப்பிலிருந்து தனக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அன்றைய மன்னர் அமெரிக்க சார்பில் இருந்ததால் வேறு வழி இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஈரானின் முதலீடுகளை அந்நிய நாடுகள் நோக்கி இருக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக அமெரிக்கா மேற்கத்திய நாடுகளை நோக்கி ஈர்க்க வேண்டும் என்பதுதான் திட்டம். எனவே ஈரான் மன்னரும் அதற்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு அணுசக்தி துறையில் முதலீடுகளை செய்தார். ஈரானில் இருந்த விஞ்ஞானிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இது பெரும் விரக்தியை ஏற்படுத் தியது.

இதனால் அக்பர் எடமெட் பிரிட்டனுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி ஈரான் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். 1977ஆம் ஆண்டு ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் பிரிட்டனில் உள்ள அணுசக்தி துறைகளில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு ஈடாக பிரிட்டனின் அணுசக்தி துறை 1984 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அணு உலைகள் என்று 20 அணு உலைகளை கொடுத்து விடும். இது 1994 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று முடிவாகியது. இப்போதும் ஈரானுக்கான அணுசக்தி மின்சாரம் தயாரிக்க யுரேனிய செறிவூட்டலை கொடுக்கவில்லை. அதற்கு மாறாக நீங்கள் பணத்தை எங்கள் அணுஉலையில் முதலீடு செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு அணு உலை தயாரித்து தருகிறோம் என்று தான் முடிவாகியது. பிரிட்டன் ஒப்பந்தப்படி 1994 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கூடிய அணு உலைகளை கொடுக்க வேண்டும் என்பதும் இது ஈரானின் எரிசக்தி சேவையில் மூன்றில் ஒரு பங்காக அமையும் என்றும் முடிவாகியது.

புரட்சியால் தடைபட்டு போன திட்டங்கள்

1978 ஆம் ஆண்டு இத்திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தத் திட்டத்தின் தலைவர் பதவியை அக்பர் எடமெட் ராஜினாமா செய்தார். நிர்வாக சீர்குலைவு மற்றும் ஊழல் காரணமாக அரசு அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இதே காலத்தில் ஈரானில் மன்னர் ஷாவுக்கு எதிராக அனைத்து மக்களும் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக 1979 ஆம் ஆண்டு கொமேனி தலைமையில் இஸ்லாமிய புரட்சி மன்னரின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு புதிய ஆட்சி பொறுப்புக்கு வந்தது. புதிய அரசாங்கம் அணுசக்தி திட்டங்கள் அனைத்தும் பண விரயம் மேலை நாட்டு முறைகள் என்று கைவிட்டு விட்டது. அணுசக்தி துறையின் தந்தை என்று அழைக்கப்பட்ட அக்பர் எடமெட் பிரான்சுக்கு சென்று விட்டார். 1984 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அவரை மீண்டும் அழைத்த பொழுது வர மறுத்துவிட்டார்.

1980 முதல் 1988 வரை சுமார் 8 ஆண்டுகள் ஈரான் ஈராக் யுத்தம் நடைபெற்றது. இக்காலகட்டத்தில் ஈரானின் அரசவைத் தலைவர்கள் அணுசக்தியின் தேவையை அவசியம் என்று உணர்ந்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல அணு விஞ்ஞானிகளை விடுவித்து அணுசக்தி திட்டங்களை முன்னெடுத்தார்கள். அமெரிக்கா ஈராக்கிற்கு ஆயுதம் கொடுத்து உதவி கொண்டு இருந்த சூழலில், ஈரானை அணுசக்தி முன்னேற விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக தனது பிடியை இறுக்கியது. அணு ஆயுதத்தால் உலக மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சாத்தான் வேதம் ஓதியது. இதற்கான இதற்கான அடுத்தடுத்த சில சம்பவங்களையும் முன் வைத்தார்கள்.

1979 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் முள்று மயில் தீவு என்ற இடத்தில் அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு அதனுடைய உள் வட்டாரங்களில் கதிர்வீச்சுகள் காணப்பட்டது. இது ஒரு கடுமையான விபத்தாக கருதப்பட்டது. 1986 ஆம் ஆண்டு செர்னோபியில் ஏற்பட்ட பெரும் விபத்து அணுசக்தி தொடர்பான அச்சத்தை உருவாக்கியது. அமெரிக்கா தனக்கு எதிரான நாடுகளை அணுசக்தி தயாரிக்க கூடாது என்பதற்காக இந்த விபத்துக்களை பெரும் பிரச்சாரமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஈரானின் இஸ்லாமிய குடியரசின் அணு ஆயுத பாதுகாப்பு என்பது மன்னர் ஷா காலத்து கொள்கையில் இருந்து மாறுபட்டதாக இருக்கவில்லை. அதையே தான் பிரதிபலித்தது. ஆனாலும் அமெரிக்கா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஈரான் ஆயுத தயாரிப்பில் முன்னேறுவது மட்டுமல்ல பிரச்சனை, பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கு எதிராக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை. 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா ஈரானுக்கு எதிராக செய்து வரக்கூடிய செயல்கள் அனைத்தும் ஈரானிய தலைவர்களிடம் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏன் கணிசமான பதட்டங்களையுமே உருவாக்கியது.

இயற்கையாகவே அமெரிக்கா எதிர்ப்புணர்வு இதனால் மக்களிடமும் உருவாகியது. ஆகவே 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈரானிய தேசிய வாதி என்று கருதப்பட்ட மஹ்மூத் அஹ்மதிநெஜாத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக 2013 ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். இவர் சித்தாந்த ரீதியாக ஒரு தேசியவாதியாக இருந்தது மட்டுமல்ல, ஈரானின் அணுசக்தி திட்டத்தில் வலுவான ஆதரவாளராகவும் இருந்தார். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உட்பட பல நாடுகளை கடுமையாக விமர்சித்தார். அணு பரவல் தடைச் சட்டத்தின் பிரிவு நான்கில் உள்ள சரத்தை மேற்கோள் காட்டி ஈரானுக்கு யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை உள்ளது என்று அறிவித்தார். இவரின் பேச்சுக்கள் அனைத்தும் தேசிய உரிமைகள் பற்றியதாக மாறியது. இதனால் ஈரானின் உள்ளேயும் ஈரானுக்கு வெளியேயும் இவருக்கு ஆதரவு கிடைத்தது. அமெரிக்கா,  பிரிட்டன்,இஸ்ரேலும் ஆகிய நாடுகளுக்கு 1951 ஆம் ஆண்டு முகமது மெசாடேக் எண்ணெய் உரிமைகளை தேசியமயமாக்கிய செயல் நினைவுக்குவந்தது. அது மட்டுமல்ல ஈரானில் பூஷேரில் ஒரு மின் உற்பத்தி நிலையம் ஜெர்மனியர்களால் கட்டப்பட்டு கைவிடப்பட்டதை ரஷ்யர்கள் கட்டிக் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். எனவே மீண்டும் ஈரானின் அணுசக்தி விஷயத்தை சர்வதேச அணு சக்தி முகமை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 2012 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியது.

 

தெளிவும்,நிலையும் இல்லாத டிரம்ப்

ஈரானுடன் அமெரிக்க  முரண்பாடுகள் முற்றிக் கொண்டிருந்ததால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க கொள்கைகளில் சில இலக்குகளை தீர்மானித்தார். இவர் 2009 முதல் 2017 வரை அமெரிக்காவில் 44 வது ஜனாதிபதியாக இருந்தார். எனவே ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்தி 2015 ஆம் ஆண்டு கூட்டு (the joint comprehensive plan of action)  செயல்திட்டத்திற்கு உட்படுவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த பேச்சு வார்த்தைகளை பின்னடைவு செய்வதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலிய ஆதரவாளர்களும் பல சதிதிட்டங்களை தீட்டினார்கள்.

2018 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த டொனால்ட் ட்ரம்ப் தான்தோன்றித்தனமான முடிவுகளை அறிவித்துக் கொண்டே இருந்தார். ஈரானுடன் நடைபெற்ற அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒரு தலைபட்சமாக வெளியேறி ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார். மீண்டும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தவுடன் பல அதிரடி அறிவிப்புகள் செய்தார். மார்ச் மாதம் ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்தார். ஈரானும் இது பொதுவெளியில் அறிவிக்கப்பட்டாலும் இவற்றை நிராகரிக்கவில்லை. பேச்சுவார்த்தை தயாராக இருந்தது.

 

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்க ஈரான் பேச்சு வார்த்தைகள் முதல் சுற்று ஓமானின் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் ஒப்பந்தம் செய்வதற்கான மூன்று அம்சங்களை முடிவு செய்தார்கள்.

1 ஈரான் தற்காலிகமாக யுரேனிய செறிவூட்டலை 3.67 சதவீதம் குறைத்துக் கொள்வது என்றும், அதற்கு ஈடாக, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள நிதி முடக்கத்தை தளர்த்துவது, கச்கா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப்பது.

2. ஈரான்  உயர்மட்ட யுரேனிய செறிவுகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும், சர்வதேச அணுமுகமை மீண்டும் ஆய்வுகளை தொடங்குவதற்கும் ஈரானில் வேறு ஏதேனும் அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்கள் இருந்தால் அவற்றை நெறிமுறை படுத்துவதற்குமான திட்டங்களை உருவாக்குவது.

3. இதன்படி அமெரிக்க காங்கிரஸ்  அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரித்து ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதும், ஈரானில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால் அவற்றை மூன்றாவது நாட்டிற்கு மாற்றுவது என்றும் முடிவாகியது.

          இந்தப் பேச்சு வார்த்தையின் இரண்டாவது சுற்று ரோம் நகரத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது இஸ்ரேலிய விமானப்படைகள் ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்துவதற்கான பயிற்சிகள் நடைபெறுகின்றன என்ற தகவல் கிடைத்தது. எனவே இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்பதை காட்டியது. இதனால் பேச்சு வார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது. மறுபுறத்தில் ஈரானில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பூஜ்ஜியம் சதவீதமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பின்னணியில் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் எந்த யுரேனியத்தையும் செறிவூட்ட நான் அனுமதிக்க மாட்டேன் என்று அச்சுறுத்தி பேசினார். காரணம் இஸ்ரேலின் எதிர்ப்பாகும். அனேகமாக இஸ்ரேலில் தாக்குதலுக்கு அமெரிக்கா ஏப்ரல் மாதமே பச்சைக்கொடி காட்டிவிட்டது. இது டிரம்ப் நிர்வாகத்தில் இருந்த வஞ்சக நடவடிக்கையாகும்.

ஜூன் ஒன்பதாம் தேதி ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸ்மாயில் பகாயி ஓமான் வழியாக ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார். ஈரான் குறித்து நெதயாகுன்வுடன் பேசியதாகவும், நேர்மறையான நல்ல முன்னேற்றம் அடைந்ததாகவும் டிரம்ப்  கூறினார். ட்ரம்ப் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, ஜூன் 12-ம் தேதி இஸ்ரேலிய தாக்குதல் நடக்க இருப்பதாக ஊடகத்தில் செய்திகள் கசிந்தன. அடுத்த நாள் இஸ்ரேல் அதாவது ஜூன் 13ஆம் தேதி தாக்குதலை நடத்தியது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கும், ஈரானை தாக்குவதற்கும் இஸ்ரேலுக்கு பச்சைக்கொடி காட்டுகிற முறைகளிலும், பிறகு ஈரானை எச்சரிப்பதும், என மாறி மாறி எந்த திட்டவட்டமான கொள்கையின் அடிப்படையிலும் டொனால்டம் இந்த விஷயத்தை அணுகவில்லை. எதையும் கணிக்க முடியாத நபர் என்று அவரைச் சொல்லுவதை விட புவிசார் அரசியலில் இஸ்ரேலுடன் இணைந்து வளைகுடா நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது தான் உகந்தது என்ற முடிவின் அடிப்படையில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். பாலஸ்தீன படுகொலைகளுக்காக பேசாதவர் இஸ்ரேலின் பாதுகாப்புகளை உலகத்தின் பாதுகாப்பு போல் உச்ச குரலில் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்.

ஈரானின் அணுசக்தி கொள்கை என்பது ஆக்கபூர்வமான பணிகளுக்கு தான் என்பதை கடைசி வரை கடைபிடித்தார்கள். பல நாடுகள் அணுகுண்டு சோதனைகள் வைத்திருந்த பொழுதும் ஈரான் அது பற்றி கவலை கொண்டாலும் அந்த தயாரிப்பில் இறங்கவில்லை. உக்ரைனிலும் அணு உலைகள் இருக்கிறது ஆனால் அது தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துகிறது. ஈரான் முழுக்க முழுக்க அணுசக்தி மற்றும் எரிசக்தியில் அமெரிக்காவை சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்து நிற்பது தான் மிகப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்க ஈரானுக்கு இடையில் நடைபெற்ற அணுசக்தி செறிவூட்டும் ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் ஜூன் 13ஆம் தேதி தாக்குதலை நடத்துவதின் வஞ்சகத்தை புரிந்து கொள்ள முடியும். போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பிரச்சனை அல்ல, பேரழிவுகளின் வெளிப்பாடாக இந்தப் போர் இருக்கும். இஸ்ரேல் இதுவரை காசாவை அழிக்க முடியவில்லை, லேபனானை, சிரியாவை, ஈராக்கின் ஒரு பகுதியை, ஏமனின் அவுத்தியை அழிக்க முடியவில்லை. அதுபோல் ஈரானும் எதிர்ப்பு சக்தியின் தொடர்ச்சியாக இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

அ. பாக்கியம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....