சீனாவின்
மதத்தைப் பற்றி எழுதி முடிக்கிற பொழுது உய்குர் இன மக்களின்
பிரச்சனையை எழுதாமல் முடிக்க முடியாது. காரணம் மதமும் இனமும்
இரண்டறக் கலந்து இருக்கக்கூடிய பிரச்சனை இது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது போல், சீனாவில் பல இடங்களில் இனக்குழுவும், மதமும்
பழக்கவழக்கங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பின்னிப்
பிணைந்து கிடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது
மட்டுமல்ல, இன்றைய சீன விரோத சக்திகளால் குறிப்பாக அமெரிக்காவால் புவிசார்
அரசியலில் முன்னெடுக்கப்படுகிற பல புள்ளிகளில் மத்திய ஆசியாவின் முக்கிய புள்ளியாக
உய்குர் இனப் பிரச்சனை இருக்கிறது.
சீனாவின்
வளர்ச்சியை தடுப்பதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை
எடுத்து வருவதோடு, பல்முனை தாக்குதல்களையும் தொடுத்து வருகிறது. தைவான் ஜலசந்தியில் யுத்தத்தை உருவாக்குவது, தென்
சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டை சீனாவுக்கு எதிராக தூண்டிவிடுவது, இந்தியாவின் எல்லைப்புறங்களில் முரண்பாடுகளுக்கு
கொம்பு சீவிவிடுவது போன்று சீனாவுக்கு எதிராக பல செயல்களில் அமெரிக்கா ஈடுபடுகிறது. இதேபோன்று சீனாவில் உள்நாட்டு கலவரங்களை
உருவாக்கி அதன் மூலம் ஆட்சியாளர்களை பலவீனப்படுத்தவும் பல நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து
வருகிறது. ஹாங்காங் தன்னாட்சி பிரதேசத்தில் போராட்டங்களை
தூண்டி விடுவதும், தியான்மென்
சதுக்கத்தில் எடுத்த முயற்சிகளும் ஜனநாயக மீட்பு என்ற போர்வையில் அமெரிக்கா
நடத்திய நாடகம் ஆகும். சீனாவில் மத சுதந்திரம் இல்லை என்று கத்தோலிக்க கிறிஸ்தவ
அமைப்பை அமெரிக்கா தூண்டி விடுகிறது. இதற்கு போப் ஆண்டவரை கருவியாக
பயன்படுத்தவும் முயற்சிக்கிறது.
இதேபோன்று
வடமேற்கு சீனாவில் இருக்கக்கூடிய உய்குர் இன மக்களின்
பிரச்சனைகளை முன் வைத்து தீவிரவாதத்தையும்,
பயங்கரவாதத்தையும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் தூண்டி
விடுகிறார்கள். சீனாவில் உய்குர் இனத்தைச் சேர்ந்தவர்கள்
பெரும்பாலும் இஸ்லாமியர்கள். அவர்களின் உரிமைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்கா, வளைகுடா நாடுகளில்
ஈரான், ஈராக், லிபியா, ஏமன், பாலஸ்தீனம், சிரியா
உட்பட எண்ணற்ற நாடுகளில் இஸ்லாமிய மக்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது.
எனவே இவர்களின் மனித உரிமை, மத சுதந்திரம் அனைத்தும் தங்களுக்கு ஆதரவான, மக்களை
சுரண்டுவதற்கான அமைப்பை உருவாக்குவதை தவிர வேறு ஒன்றும் இல்லை.
உய்குர் என்றால் என்ன?
சீனாவின்
வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஜின்ஜியாங் மாநிலம். இந்த மாநிலத்தில் உய்குர் இன மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இவர்கள்
இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள். ஆனால் துருக்கிய மொழிகுடும்பத்தை சேர்ந்த உய்குர் மொழியை பேசக்கூடியவர்கள். துருக்கி, உஸ்பெக்,கசன் கலந்து உய்குர் உருவானது.
வரிவடிவத்திற்கு அதாவது எழுதுவதற்கு அரபிக் மொழி வடிவத்தை பயன்படுத்துகின்றனர். வேறுசில
இடங்களில் வாழக்கூடிய உய்குர் இன மக்கள் லத்தின் வடிவத்தை பயன்படுத்து கின்றனர். 1949 ஆம்
ஆண்டு வரை அதாவது புரட்சி வெற்றி பெறுகிற வரை இது ஜின்ஜியாங் மாநிலம் என்று
அழைக்கப்பட்டது. இங்கு உய்குர் மக்கள்
அதிகமாக வாழ்ந்ததால் அவர்களின் தனித்தன்மையை பாதுகாப்பதற்காக
சீன மக்கள் குடியரசு 1955 ஆம் ஆண்டு ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி மாநிலம் என்று இதன் பெயரை மாற்றியது.
அது மட்டுமல்ல... அதற்கான திட்டங்களையும் உருவாக்கியது.
இந்த
மாநிலம் யுரேசிய கண்டத்தின் மையப் பகுதியில்
அமைந்துள்ளது. சீனாவில் இருக்கக்கூடிய மாகாணங்களில் மிகப்
பெரியது. சீன நிலப்பரப்பில் ஆறில் ஒரு பகுதியை இந்த மாநிலம்
மட்டும் கொண்டுள்ளது. சுமார் 1.6649 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது. இந்த மாநிலத்தின் மற்றொரு முக்கியத் தன்மை சீனாவின்
மொத்த எல்லைப் புறத்தில் 5700 கிலோ மீட்டருக்கு அதிகமான
நீளம் உள்ள எல்லையை இந்த மாநிலம் பெற்றுள்ளது. மொத்த எல்லையில் கால்பங்கு எல்லை இந்த மாநிலத்தில் மட்டும் வருகிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க புவிசார்ந்த அம்சம் மங்கோலியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு நாடுகளின் எல்லைப்புறங்கள் இந்த மாநிலத்தை ஒட்டி உள்ளன. அது மட்டுமல்ல இந்த பகுதி பண்டைய
காலத்திலிருந்து சீனாவின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது.
உய்குர் இன மக்கள் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் பொதுவான
பகுதியிலிருந்து தோன்றியவர்கள். இவர்கள் கலாச்சார ரீதியாக
துருக்கிய இனக்குழுக்களில் இருந்து உருவானவர்கள். உய்குர்
என்பது பண்டைய இனக்குழுக்களின் பெயர்களை குறிக்கக்கூடியது. 19ஆம் நூற்றாண்டில்தான் இம்மக்களுக்கு உய்குர் என்ற
பெயர் பொதுவாக வழங்கப்பட்டது. 19ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியான இந்தியா மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு
ஆசியாவின் என்சைக்ளோபீடியா என்ற கலைக்களஞ்சியம் உய்குர்
மக்கள் துருக்கிய பழங்குடியினர்களில் மிகவும் பழமையானவர்கள் என்று பதிவு
செய்வதுடன், இவர்களின் முன்னோர்கள் சீன டார்டோரியன், ஜின்ஜியாங் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. சீன
மக்கள் குடியரசு தெரிவித்திருப்பது போல் இந்தப் பிரதேசம் பண்டைக்காலம் முதல்
சீனாவின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் பல
உள்ளன.
உய்குர்
மக்கள் பற்றியும், அவர்களின் வாழ்வாதாரம்
பற்றியும் பொது ஆண்டுகள் 4 மற்றும் 5
நூற்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உய்குர் மக்கள்
காலங்காலமாக இஸ்லாமிய மக்களாக இருக்கவில்லை. 15ஆம் நூற்றாண்டு வரை இவர்களின் பெரும்பாலானோர் பௌத்த மதங்களை தழுவியவர்களாக
இருந்தார்கள். 10ம் நூற்றாண்டில் தான்
ஒரு பகுதியினர் இஸ்லாம் மதத்தை தழுவ ஆரம்பித்தனர். 16ஆம் நூற்றாண்டில் பெரும் பகுதி உய்குர் மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவினார்கள். இந்த நிகழ்வுகள் 17ஆம் நூற்றாண்டு வரை நடந்து
கொண்டுதான் இருந்தது. 17 ஆம்
நூற்றாண்டுக்குப் பிறகு உய்குர் மக்களின் பிரதான அடையாளமாக
இஸ்லாம் மதம் மாறியது. இதற்குப் பிறகு இம்மக்களின்
கலாச்சாரம், அவர்களின் அடையாளம் அனைத்திலும் இஸ்லாம் முக்கிய
பங்கு வகித்தது. இக்காலத்திலிருந்து இம்மக்கள் அதற்கு முந்தைய பௌத்த மரபு வழியிலான
செயல்களை துண்டித்துக் கொண்டனர்.
ஜின்ஜியாங்
மாநிலத்தில் உள்ள தாரிம் வண்டல் படுகையில்தான்
இம்மக்களில் 80 சதவீதம் பேர் வாழ்கிறார்கள். இந்தத் தாரிம் படுகை தக்கல்மான் பாலைவனம் முழுவதும் சிதறி கிடக்கக்கூடிய சோலைவனமாகும். இது ஒரு வளமானபடுகை.
சுமார் 8,88,000 கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கி உள்ளது. வடமேற்கு சீனாவில் மிகப்பெரிய படுகைகளில் ஒன்று.
இவை தவிர உய்குர் மக்கள் தலைநகர் உரும்கியிலும், அதிகமாக வாழ்கிறார்கள்.
1765 ஆம் ஆண்டு மஞ்சு வம்சத்தினர் ஆட்சிக்கு வந்த பிறகு
அவர்களின் பொருளாதாரக் கொள்கையும், அடக்கு முறையும் ஜின்ஜியாங்
மாநிலத்தை கடுமையாக பாதித்தது. இதை எதிர்த்து போராட்டங்கள்
நடைபெற்றன. பெரும்பாலும் உய்குர் இன
மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மன்னர் அந்தப்
போராட்டங்களை கடுமையாக அடக்கினார். போராட்டக்காரர்களை
படுகொலை செய்ய உத்தரவிட்டார். ஆண்களை தூக்கில் போடுவதும், பெண்களையும் குழந்தைகளையும் அடிமையாக்கிடவும் உத்தரவிட்டார். இது உய்குர் மக்கள் மத்தியில் ஆறாத வடுக்களை
ஏற்படுத்தின.
1911 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு புரட்சிக்கு பிறகு சீனாவை ஆட்சி செய்த கோமிங்டாங் கட்சி, சீனாவில் உள்ள ஒட்டுமொத்தமான முஸ்லிம் மக்களுடன் இணைத்து
உய்குர் மக்களையும் பார்த்தனர். இதற்கு முன் ஆட்சி செய்த
மஞ்சு அரசாங்கமும் இவர்களை இஸ்லாமிய மக்களின் ஒரு பிரிவாக மட்டுமே பார்த்தனர். இந்நிலையில், 1944 ஆம் ஆண்டில் சீனாவில், யுத்த
பிரபுக்களின் ஆட்சி நடைபெற்றது. பல்வேறு மாகாணங்களில் யுத்த
பிரபுக்கள் அந்தந்த பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதன் ஒரு தொடர்ச்சியாக ஜின்ஜியாங் மாநிலத்தில் மூன்று நான்கு மாவட்டங்களை
இணைத்து உய்குர் மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியை கிழக்கு
துர்கிஸ்தான் குடியரசு என்று அறிவித்து யுத்த பிரபுக்கள்
ஆட்சி நடத்தினர். இந்த அறிவிப்பிற்கு உய்குர் மக்களிடம்
எதிர்ப்பு இருந்தது. ஒரு பகுதியினர் சீன குடியரசை
ஆதரித்தனர்.
இதே
காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மாவோ தலைமையில் நடந்த சீனப் புரட்சி, பல
பிரதேசங்களை விடுவித்து மக்கள் விடுதலைப் படையின் கீழ், சோவியத்துக்களாக அமைத்து வந்தது. ஜின்ஜியாங் பகுதியில் உள்ள யுத்த பிரபுக்களை தோற்கடித்து சிஞ்சியான் பகுதியில் மக்கள்
விடுதலைப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதற்கான சோவியத்துக்களையும்
அறிவித்தார்கள்.
1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மாவோ தலைமையில்
நடந்த புரட்சி வெற்றி பெற்று சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டது. ஜின்ஜியாங் பிரதேசம்
சீனாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில்
உய்குர் மக்கள் அதிகமாக வாழ்வதால் அவர்களின் இனத்தை
அங்கீகரிக்கக் கூடிய வகையில் 1955 ஆம் ஆண்டு ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசம் என்று பெயர் மாற்றப்பட்டது.
சீன மக்கள் குடியரசு சிறுபான்மை மக்களுக்கான சிறப்பு கவனத்தையும் செலுத்த
ஆரம்பித்தது.
சோவியத் வீழ்ச்சியும் இனக்குழு
எழுச்சியும்
1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு இனவாதங்கள் பரவலாக
தலைதூக்கியது. சோவியத் நாட்டிலும் கிழக்கு ஐரோப்பிய
நாடுகளிலும் ஏற்பட்ட இன மோதல்களால் பல நாடுகள், பல துண்டுகளாக மாறின. ஏகாதிபத்திய நாடுகள் இந்த மோதல்களை அதிகப்படுத்தி ஏற்கனவே துண்டான
நாடுகளை மேலும் பல துண்டுகளாக உடைத்து தங்களது பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்குவதற்கான
களமாக மாற்றிக் கொண்டன. இந்த சகுனி வேலையை சீனாவிலும் தொடங்கின. சீனாவின் எல்லைப்புற மாகாணமான உய்குர் மக்களை தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராடத் தூண்டின. அவர்களின்
போராட்டத்திற்கான அனைத்து உதவிகளையும்
செய்தன. கிழக்கு துர்கிஸ்தான் என்ற நாட்டிற்கான வடிவத்தை உருவாக்கி பிரிவினைவாத
கோஷத்தை ஏகாதிபத்திய நாடுகள் உயர்த்திப் பிடித்தன.
இதற்காக
கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பை அமெரிக்கா
ஊட்டி வளர்த்தது. சீனாவில் ஒரு
சுதந்திரமான கிழக்கு துர்கிஸ்தானை நிறுவ வேண்டும் என்று இந்த அமைப்பு அறிக்கைகளை
வெளியிட்டு மக்களை அணி திரட்டியது. இது மட்டுமல்ல துருக்கி,
சிரியா ஆகிய நாடுகளில் இருந்தும் தீவிரவாத குழுக்களை இவர்களோடு இணைக்க கூடிய
வேலைகளையும் செய்தார்கள். பிரிவினைவாத இயக்கமான கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய
இயக்கத்தை மிகவும் போர்க்குணம் மிக்க மக்கள் இயக்கம் என்று அமெரிக்கா பாராட்டியது. சீனா உட்பட உலக நாடுகள் பலவும், இந்த பயங்கரவாத இயக்கத்தை கண்டித்த
பொழுது, அமெரிக்கா வேறு வழியில்லாமல் பயங்கரவாத பட்டியலில் இந்த இயக்கத்தை சேர்ப்பதாக
அறிவித்தது. ஆனால், அமெரிக்கா தனது வெளியுறவுத் துறையில் உள்ள பயங்கரவாத
பட்டியலில் இந்த அமைப்பை சேர்க்கவில்லை. காரணம் அந்த
அமைப்பிற்கான எல்லா உதவிகளையும்
வெளியுறவுத்துறை செய்து கொண்டிருந்தது. இந்த மக்கள் சட்டபூர்வமாக போராடுகிறார்கள்;
இவர்களை சீன அரசாங்கம் அடக்குகிறது என்று பிரச்சாரம் செய்து பிரிவினைவாதிகளுக்கு
கலவரத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தனர். இதன் விளைவாக அடுத்தடுத்த கலவரங்கள்
நடந்து கொண்டே இருந்தது.
கலவரமே பிரிவினை இயக்க கலாச்சாரம்:
சீனாவில்
உய்குர் மக்களிடம் வஹாபிஷம்
என்று பொதுவாக அறியப்படும் தீவிர பழமைவாத இஸ்லாமிய விழுமியங்களின் வடிவம்
ஒருபோதும் இருந்ததில்லை. இப்பொழுதும் இருக்கவில்லை.
இம்மக்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருமானம் ஈட்டக் கூடியவர்கள். அவர்கள் இஸ்லாமிய மதத்தின் அணுகுமுறைகளிலும் நடைமுறைகளிலும்
மிதமானவர்கள். இவர்களது உலக கண்ணோட்டங்கள் மதச்சார்பற்றவைகளையும் உள்ளடக்கியவைகளாக
இருக்கிறது. இப்படிப்பட்ட மக்களை வன்முறை பாதையை நோக்கி
பிரிவினை இயக்கம் இழுக்க முயற்சித்தது. பிரிவினைவாதிகளின்
எந்த ஒரு நடவடிக்கைக்கும் இந்த மக்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை.
ஜின்ஜியாங்
மாநிலம் மத்திய ஆசியாவின் புவிசார் அரசியலின் மையப் புள்ளியாக இருந்தது. இந்த மாநிலம் வளமான பகுதிகளையும் மலைப்பாங்கான இடங்களையும், பாலைவனங்களையும் எண்ணெய், எரிசக்தி வளங்களையும்
எட்டு நாடுகளின் எல்லைப்புறங்களையும் தன்னகத்தே கொண்டு
இருப்பதால் இவற்றை தனி நாடாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்தால் சீனா உட்பட ஒட்டுமொத்த மத்திய ஆசிய நாடுகளை கபளீகரம் செய்ய முடியும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசைப்பட்டது. அதற்காக பிரிவினைவாதிகளை உருவாக்கி, அவர்களுக்கு
உதவி செய்து, கலவரங்களை நடத்தியது.
1991 ஆம் ஆண்டில் இந்த பிரிவினைவாத இயக்கம் சில கலவர முயற்சிகளை மேற்கொண்டது. 1997 ஆம் ஆண்டு குல்ஜா என்ற இடத்தில் பிரிவினைவாத
இயக்கம் நடத்திய கலவரத்தில் சிலர் கொல்லப்பட்டனர். 50 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இதே ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி
பிரிவினை வாதத்தை சித்தாந்த ரீதியாக ஏற்றுக் கொண்ட ஒரு படை ஜின்ஜியாங் மாநிலத்தின்
தலைநகர் உரும்கியில் கலவரத்தை உருவாக்கியது.
1989 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற தியான்மென்
சதுக்க போராட்ட மாதிரியில் ஒரு கலவரத்தை 20
ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் தேதி ஜின்ஜியாங்
மாநிலத்தின் தலைநகர் உரும்கியில் நடத்த திட்டமிட்டார்கள்.
இங்கு நடத்தப்பட்ட பிரிவினைவாதிகளின் தாக்குதலால் உலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது.
இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் நூற்றுக்கணக்கான
இடங்களில் காவல்துறையினர், பொதுமக்கள் மீது தாக்குதலை தொடுத்தனர். அரசு அலுவலகங்களையும், குடியிருப்பு வளாகங்களையும்
சூறையாடினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 197 பேர், படுகொலை செய்யப்பட்டார்கள். 1700 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். 331 கிடங்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 1325 வாகனங்களையும் பொதுமக்களின் சொத்துக்களையும்
மீண்டும் பயன்படுத்த முடியாத அளவில் ஒட்டுமொத்த சேதாரத்தை பிரிவினைவாதிகள் ஏற்படுத்தினார்கள்.
ஜின்ஜியாங் மாநிலத்தின் அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் உய்குர் மக்களின் ஆதரவுடன் இந்த பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டெடுத்தது.
பிரிவினைவாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லை.
இந்த
நிகழ்வுக்கு முந்தைய 2008 ஆம் ஆண்டு
பெய்ஜிங் தலைநகரத்தில் உலகமே வியந்து பார்க்கும் அளவில் ஒலிம்பிக் போட்டி
நடைபெற்றது. இந்த போட்டியை சீர்குலைப்பதற்கான மிகப்
பிரம்மாண்டமான திட்டங்களை உருவாக்கி அமலாக்குவதற்காக முயற்சி செய்யப்பட்டது. சீன மக்கள் குடியரசு இதை முறியடித்து விட்டது.
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி இந்த
மாநிலத்தின் எச்சென் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய
தாக்குதலில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இதே ஆண்டு ஜூன்
மாதம் ஒரு விமானத்தை கடத்துவதற்கான முயற்சியில் பிரிவினைவாதிகள் ஈடுபட்டனர். அதை
விமான பணியாளர்களும், பயணிகளும் முறியடித்தனர். 2013 ஆம்
ஆண்டு ஷான் ஷான் மாவட்டத்தில் உள்ளூர் அரசாங்கக் கட்டிடங்களை வெடிவைத்து
தகர்க்கும் நாச வேலையில் பிரிவினைவாதிகள் ஈடுபட்டனர். இதில், 27
பேர் மரணமடைந்தனர். இதே வருடம் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள
தியான்மன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருக்கிற
நேரத்தில் 31 பெட்ரோல் டேங்கர்கள் மூலமாக பிரிவினைவாதிகள் தாக்குதல்
நடத்தினார்கள். 2014 ஆம் ஆண்டு மே மாதம் ஜின்ஜியாங்
மாநிலத்தின் தலைநகர் உரும்கியில் பிரிவினைவாதிகள் வெடிகுண்டு
வீசியதில் 30க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 90க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதே ஆண்டு புனித போர் என்ற அறிவிப்பை செய்து பிரிவினைவாதத்தை எதிர்த்த
இஸ்லாமிய மதத் தலைவர்களையும் அறிஞர்களையும் ஆசிரியர்களையும் படுகொலை செய்தார்கள்.
சர்வதேச பத்திரிகைகளிலும் சீன அரசாங்கத்தின் அறிக்கைகளிலும் இவையெல்லாம் வெளிவந்த
செய்திகளாகும். 1990 முதல் 2016 வரை
மதவெறி தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் ஆயிரத்துக்கும் அதிகமான தாக்குதலை நடத்தி
பொதுமக்களை படுகொலை செய்தார்கள் என்பதை சீன அரசாங்கம் ஆதாரப்பூர்வமாக
வெளியிட்டுள்ளது.
அ.பாக்கியம்