Pages

புதன், டிசம்பர் 27, 2023

இஸ்ரேல்-காசா யுத்தம் இந்தியா யார் பக்கம்?

 

அ.பாக்கியம்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல்-காசா எல்லைப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் உலகின் சக்திவாய்ந்த இஸ்ரேல் ராணுவம் நிலைகுலைந்து போனது. உலகின் தலைசிறந்த உளவுத்துறை மொசாட் இதற்கான அறிகுறிகளைகூட அறியாமல் இருந்தது பெரும்அதிர்ச்சியாகும். இந்த தாக்குதலில் சுமார் 1200 பேர் இறந்ததாக தகவல் உள்ளது. இந்த தாக்குதலை ஒரு பயங்கரவாத தாக்குதலாக கட்டமைக்கும் முயற்சிகளை இஸ்ரேல் ஆதரவு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா தலைமையில் உள்ள நாடுகள் மேற்கொண்டுள்ளன.

இஸ்ரேலின் 75 ஆண்டுகால தாக்குதல்கள், சட்டவிரோத குடியேற்றங்கள், ஆக்கிரமிப்புகளை எதிர்த்து நடைபெற்ற தாக்குதல் தான் ஹமாசின் தாக்குதல். இதற்கு எதிர்வினையாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் மிக பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது. யுத்த விதிமுறைகளை எல்லாம் மீறி பொதுமக்களையும், குழந்தைகளையும், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என அனைத்தையும் தரைமட்டம் ஆக்கிவிட்டன. காசா பகுதியில் ஒவ்வொரு நகரும் அகதிகள் முகாமாக மாறிவிட்டது. இதுவரை 18,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த யுத்தத்தில் இந்தியாவின் நிலைபாடு பாரம்பரியமான கொள்கைகளுக்கு எதிரான முறையில் இருக்கிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு நிலையை அப்பட்டமாக மேற்கொண்டு வருகிறது நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு. இதுவரை அணிசேரா இயக்கத்தின் தலைமையில் இருந்த இந்தியா, எப்பொழுதுமே தெற்கு உலகத்துடன் இணைந்துதான் பாலஸ்தீனத் திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது.

அக்டோபர் 7 தாக்குதல் நடந்து சில மணி நேரத்தில் இந்தியாவின் பிரதமர் பயங்கரவாதத்தை வலுவான மொழியில் கண்டித்ததுடன் இஸ்ரேலுடன் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். தொடர்ச்சியாக "இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக நிற்கிறோம் என்று பிரதமர் பேசினார். திரு நரேந்திர மோடியின் இந்த அனுதாப ஆதரவு திடீரென்று வந்தது அல்ல. இந்தியாவில் கடைபிடிக்கக் கூடிய வெறுப்பு அரசியலின் அடித்தளத்தில் இருந்தும், அமெரிக்க சார்பு கொள்கையில் இருந்தும் வெளிவந்தது.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் காசா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும் என்ற முறையில் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. இதுவரை கடைபிடித்து கொள்கைக்கு எதிராக இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளியேறியது. 120 நாடுகள், குறிப்பாக தெற்குலகநாடுகள், மேற்குஆசியா, தெற்கு ஆசியாவின் அனைத்து நாடுகளும், தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் போர் நிறுத்தம் வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

இந்தியா போர்நிறுத்தத்திற்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக நிலை எடுத்தது மிகப்பெரிய அவமானம் ஆகும். இந்தியா சில நாட்கள் கழித்து இதற்கு கொடுத்த விளக்கம் வினோதமாக இருந்தது. அடுத்த டுத்த தீர்மானத்தை இந்தியாவால் எதிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே முதல் தீர்மானத்திற்கு விளக்கத்தை தானாக முன்வந்து அளித்தனர்.

ஏழாம் தேதி நடைபெற்ற ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் பற்றி வெளிப்படையான குறிப்பு எதுவும் இல்லாததால் அந்த தீர்மானத்திற்கு வாக்களிக்கவில்லை என்று ஒரு சொத்தை காரணத்தை கூறினார்கள். பாலஸ்தீனர்களுக்கான ஐநாவின் நிவாரண மற்றும் பணிகள் தொடர்பான அமைப்பு, பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி செய்வது, பாலஸ்தீன அகதிகளின் சொத்துப் பிரச்சனை, இஸ்ரேல் ஆக்கரமித்த கோலோன் குன்று பகுதி, பாலஸ்தீன்களுக்கு சொந்தமான கிழக்கு ஜெருசலேமில் யூதர்களை குடியேற்றுவது போன்ற தீர்மானங்கள் ஐநா சபையில் கொண்டு வந்த பொழுது இந்தியா அவற்றை ஆதரித்தது.

 அக்டோபர் 26 ஆம் தேதி கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்தில் இந்தியா எந்தவித திருத்தமும் கொடுக்கவில்லை. தீவிரவாத தாக்குதல் பற்றி இந்த தீர்மானத்தில் வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்பதற்காக வாக்களிக்காத இந்தியா, அடுத்து வாக்களித்த ஐந்து தீர்மானங்களிலும் மேற்கண்ட தீவிரவாத தாக்குதல் பற்றி எந்த குறிப்பு இல்லை. பிறகு இதற்கு மட்டும் ஏன் வாக்களிக்க வேண்டும். இந்தியா கொடுத்தது பொருத்தப்பாடற்ற விளக்கமாக இருந்தது.

மேற்கண்ட 5 தீர்மானங்களையும் நிராகரிக்க வேண்டும் என்று இஸ்ரேல் நாட்டின் தூதுவர் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் இதர நாட்டு தூதுவர்களை பகிரங்கமாக கேட்டுக் கொண்டார். காரணம் இஸ்ரேலின் இன்றைய நிலைமை பற்றி அதில் எந்த குறிப்பும் இல்லை என்று தெரிவித்தார். உடனடியாக கியூபா நாட்டின் தூதுவர் தலையிட்டு பாலஸ்தீனத்திலும் 4000 குழந்தைகள் உட்பட 11 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 10 லட்சம் பேர் வரை இடம்பெயர்வு செய்துள்ளனர். இது பற்றியும் எந்த குறிப்பு இல்லை.இதை காரணமாக கூறி தீர்மானத்தை தடுக்க கூடாது. ஆகவே தீர்மானத்தை அனைவரும் ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். இந்த தீர்மானத்திலும் இந்தியா எந்தவித திருத்தங்களையும் கொடுக்க வில்லை.

ஐக்கிய நாடுகள் சபையில் 15 நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு கவுன்சில் உள்ளது. இவற்றில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிறப்பு ரத்து அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்கள். மற்ற பத்து நாடுகள், அல்பேனியா, பிரேசில், ஈக்குவடார், கோபன், கானா, ஜப்பான், மால்டா, மொசாம்பிக்,, சுவிட்சர்லாந்து ஐக்கியஅரபுஎமிரேட்ஸ் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பத்து நாடுகளும் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும். இந்தப் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை முன்மொழிகிறது. அதில் ஹமாஸ் தாக்குதலை கண்டித்தும், தற்காலிக தாக்குதல் நிறுத்தம் (pause) மனிதாபிமான உதவி என்று குறிப்பிட்டு முன்மொழிகிறது. இந்த தீர்மானம் ஹமாஸ் விடுதலைக்கான போராடக்கூடிய அமைப்பு அல்ல என்பதையும், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதற்கான முறையில் சட்டபூர்வமான ஒப்புதலை பெறக்கூடிய முறையில் உள்ளார்ந்த விஷயங்கள் இருந்தது எனவே சீனா, ரஷ்யா தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோற்கடித்தனர்.

ரஷ்யா மனிதாபிமான உதவி, நிரந்தர போர் நிறுத்தம் என்ற வரிகளுடன் தீர்மானத்தை முன்மொழிந்தது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர நாடுகளை இணைத்த  தீர்மானத்தை ஏற்க விடாமல் தடுத்தது. பிரேசில் நிரந்தர போர் நிறுத்தம் அல்லது தற்காலிக நிறுத்தம் என்ற விஷயங்களை தவிர்த்து, மனிதாபிமான உதவி உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்ததை ரஷ்யா, சீனா உட்பட பெரும்பாலான நாடுகள் ஆதரித்தது. எங்கே தீர்மானம் நிறைவேறி விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோற்கடித்தது. 1948 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் பாலஸ்தீனம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் 36 தீர்மானங்கள் முன்மொழிபட்டுள்ளது. இவற்றில் இரண்டே இரண்டு தீர்மானங்கள் மட்டும்தான் ரஷ்யாவும், சீனாவும் ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளன. மீதமுள்ள 34 தீர்மானங்களும் அமெரிக்காவின் ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கப்பட்டதாகும். அமெரிக்காவின் இந்த செயல்கள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவான செயல்களாகும்

நிரந்தர போர் நிறுத்தத்திற்காக உலகமே ஒன்று திரண்டு நிற்கிற பொழுது இந்தியா மேற்கண்ட தீர்மானம் குறித்து கூட எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை நிரந்தரமான போர் நிறுத்தம் தேவை என்று இதுவரை அறிவிக்கவில்லை.



பல்வேறு நாடுகள் இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு எதிராக கண்டனத்தை தெரிவிப்பதுடன் பல அமைப்புகள் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக இந்தியா முக்கிய பங்குசெலுத்தக்கூடிய பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு போர் நிறுத்தத்திற்காக மெய்நிகர் கூட்டத்தை நடத்தியது. சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உட்பட 11 நாடுகளுக்கு மேற்பட்ட ஜனாதிபதிகள் கலந்து கொண்டார்கள். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தை தவிர்த்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கலந்து கொள்ள வைத்தார். அவரும் போர் நிறுத்தம் பற்றி பேசவில்லை நிவாரண உதவிகளைப் பற்றி பேசி முடித்தார். பிரிக்ஸ் நாடுகள் போர் நிறுத்தத்திற்கான உடனடி தீர்மானத்தை நிறைவேற்றியது. தென்னாப்பிரிக்கா நாடு இஸ்ரேலின் போர் குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கடுமையான நிலை எடுத்தது.

பயங்கரவாதம் தொடர்பான விஷயத்தில் பூஜ்ஜியம் சகிப்புத்தன்மையுடன் தான் இருப்பதாக இந்திய பிரதமர் அடிக்கடி பேசினாலும், ஹமாஸ் அமைப்பின் தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக அறிவித்த இந்தியா, இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன குழந்தகள் உட்பட பொதுமக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவிப்பதை பயங்கரவாதம் என்று கண்டிக்க தயாராக இல்லை. இந்தியாவில் இருந்து 18,000 தொழிலாளர்கள் இஸ்ரேலின் பணி புரிவதும், இந்திய வம்சாவளியினர் 85 ஆயிரம் பேர்கள் (குறிப்பாக மணிப்பூர் பஞ்சாப் மகாராஷ்டிரா) அங்கு இருப்பதும் இதற்கு காரணமாக கூறமுடியாது. அங்கு பணிக்கு சென்றுள்ள தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் ஏற்பாடுகள் நடந்து விட்டது.

ஹமாஸ் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று இந்தியா இதுவரை சட்டரீதியாக எந்த முடிவும் செய்யவில்லை. அந்த அமைப்பை இந்தியா தடை செய்யவும் இல்லை. அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உட்பட பல நாடுகள் அந்த அமைப்பை தடை செய்யவில்லை. அவ்வாறு இருக்கிற பொழுது ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற முத்திரை குத்துவது ஏன்? இந்தியா அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் முயற்சி செய்கிறது. அதன் ஒரு காரணியாக மும்பையில் 26/11 நடைபெற்ற தாக்குதலில் தொடர்புடைய லஸ்கர்--தொய்பா அமைப்பை பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தமாதம் இஸ்ரேல் தடை செய்துள்ளது. இந்தியாவின் நரேந்திர மோடி அவர்களும் ஜி-20 நாடுகளின் நிறைவு அமர்வு, உலகளாவிய தெற்கு நாடுகளின் உச்சி மாநாடு என்ற இரண்டு மெய்நிகர் நிகழ்ச்சியில் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் பற்றி பேசினார்.  இந்த உரையும், அதன் பிறகு வெளியுறவுதுறை அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சரும் கொடுத்த கூட்டு அறிக்கையின் சாராம்சங்கள் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பாக இருந்தது.

இந்தியா தெற்கு உலகில் உள்ள முக்கியமான நாடுகள் என்ற முறையில் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி இருக்க முடியும். காரணம் ஏற்கனவே அணிசேரா நாடு என்ற முறையில் பல முயற்சிகளை எடுத்த ஒரு நாடு இந்தியா. ஆனால் இஸ்ரேலில் கொடூர தாக்குதலை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் அதற்கான வாய்ப்பை இழந்தது. அது மட்டும் அல்ல ரஷ்ய உக்ரைன் போரில் யுத்தத்திற்கு எதிராக இருக்கிறோம் என்ற முறையில் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் இஸ்ரேலின் யுத்த்தை ஆதரிப்பதன் மூலம் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு தெற்கு உலகத்திலிருந்து இந்தியாவை தனிமைப்படுத்தி உள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் உருவாக்கி இருந்த சிறப்பு உறவுகள் சீர்குலைந்துள்ளது. இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றை இணைக்க கூடிய முறையில் உருவாக்கப்பட்ட பொருளாதார தாழ்வாரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது.

மகாத்மா காந்தியின் காலத்தில் இருந்து அடுத்தடுத்து வந்த இந்திய நாட்டின் தலைவர்கள், அரசு தலைவர்கள் பாலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தனர். 1974 ஆம் ஆண்டு பி எல் ஓ அமைப்பை ஐநா சபையின் பார்வையாளராக அங்கீகரித்ததில் இந்தியா முக்கிய பங்காற்றியது.1988 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் தூதரகத்தைத் திறந்த முதல் நாடு இந்தியா.

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமியர் மீதான வெறுப்பு அரசியலின் தொடர்ச்சியாக இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்தது. எனவேதான் ஆயுதம் வாங்குவதிலிருந்து அனைத்து விதமான ஒப்பந்தத்திலும் இஸ்ரேலுடன் உறவுகளை உருவாக்கியது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலின் யுத்தத்திற்கு ஆதரவாக சங்கிகள் இந்தியாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க விசுவாசத்தை நிரூபிப்பதற்காக சீன எதிர்ப்பு நிலை எடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக தெற்கு உலகின் தலைவன் தான்தான் என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சி செய்வதன் மூலமாக பாலஸ்தீன மக்களுக்கு மட்டும் அல்ல இந்திய மக்களுக்கும் துன்பத்தை வரவழைத்துக் கொண்டிருக்கிறார். உலக மக்கள் பாலஸ்தீனம் பக்கம் இருக்கிறார்கள். அமெரிக்காவும் இஸ்ரேலும் இது வரை இல்லாத வகையில் தனிமை பற்றிருக்கிறார்கள் இந்தியா தனிமைப்படாமல் இந்திய மக்களை பாதுகாப்பதற்காக உலக மக்களோடு இணைந்து இருக்க வேண்டும் வெறுப்பு அரசியலுக்கு இறுதி முடிவு கட்டுவதன் மூலமாகத்தான் இது சாத்தியமாகும்.

அ.பாக்கியம்.

எதிரொலி டிசம்பர் 23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...