Pages

புதன், டிசம்பர் 27, 2023

சென்னை மூழ்கிட "காலநிலை" மாற்றம் மட்டும்தான் காரணமா?

 



அ. பாக்கியம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெருமழையால் வெள்ளக்காடானதற்கு காலநிலை மாற்றத்தை காரணமாக கூறுகின்றனர். அதிக மழை பெய்து விட்டது; ஆகவே வெள்ளம் வந்தது. கடந்த காலத்தை விட ஒரே நாளில் மழைக்கொட்டி தீர்த்ததால் வெள்ளம் ஏற்பட்டது. இவை தவிர கடந்த ஆட்சி (அதிமுக) திறமையாக செயல்பட்டது இந்த ஆட்சி (திமுக) திறமையாக செயல்படவில்லை அல்லது இந்த ஆட்சி திறமையாகவும் கடந்த ஆட்சி திறமையற்றதாக செயல்பட்டதாகவும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டமிடலில் இருக்கக்கூடிய குறைபாடுகளும் அதை அமலாக்கக்கூடிய நடைமுறைகளும் ஊழல் நிறைந்த செயல்பாடுகளும் மிகப்பெரிய காரணம் என்ற அம்சம் சாவகாசமாக பின்னுக்கு தள்ளப்படுகிறது. உலகம் வெப்பமயமாவதும் காலநிலை மாற்றமும் இயற்கை சீற்றங்களையும் வறட்சிகளையும் ஏற்படுத்துவது உண்மைதான். பல்வேறு விதமான பாதிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னையை சுற்றி நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், மழைநீர் வடிகால்வாய் போதுமான அளவிற்கு அமைப்பதற்கும், தூர்வாருவதற்கும், அடைப்புகளை அகற்றுவதற்கும், காலநிலை மாற்றத்திற்கும் தொடர்பு படுத்த முடியாது.


நீரில் மூழ்கிட அடிப்படை காரணம்.

சென்னையில் உள்ள வடிகால் அமைப்புகள் மிக குறைந்தபட்ச மழை அளவை எதிர்கொள்ளும் வகையில் தான் உள்ளது. சுமார் 5 சென்டிமீட்டர் மழை அளவை தாங்க கூடியது தான் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. இவற்றை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் துரிதமாகவும் தேவைப்படக் கூடிய அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை. வளர்ச்சி திட்டங்கள் அவசியமானவை. அவற்றை யாரும் புறக்கணிக்க முடியாது. ஆனால் அவை அனைத்தும் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் திட்டங்களை நிறைவேற்றுவது இந்த நெருக்கடிக்கு காரணமாகிறது. இருக்கிற நீர் நிலைகளை எல்லாம் வளர்ச்சி திட்டங்கள் அழித்து விடுகிறது. சில திட்டங்களை ஆட்சியாளர்கள் வாக்கு சேகரிப்பதற்கான நோக்கத்தோடு அவசரகதியில் முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிற பொழுது மாற்று ஏற்பாடுகள் தோல்வி யடைகிறது.

சென்னையில் உள்ள மூன்று ஆறுகளில் கொசஸ்தலை, அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் நீர் வந்து சேர்வதற்கான 52க்கும் மேற்பட்ட நீர் வழி தடங்களும் 512 இடங்களில் துளைகளும் கழிவு நீர் வந்து விழுகின்ற இடங்களாகவும் இருந்தன. கூவம் ஆற்றின் மூலம் 27 சதவிகிதமும், பக்கிங்காம் கால்வாய் மூலம் 29 சதவிகிதமும் அடையாறு கால்வாய் மூலமாக 19 சதவிகிதமும் மழை நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது இந்த மூன்று ஆறுகளும் வளர்ச்சி திட்டங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சென்னையில் அமைக்கப்பட்ட பறக்கும் ரயில் திட்டம் பக்கிங்காம் கால்வாய் மீது கட்டப்பட்டது. 5600 கனஅடி தண்ணீர் செல்லக்கூடிய பக்கிங்காம் கால்வாயில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் 600 கன அடி மட்டுமே செல்லக்கூடியதாக மாறியது 25 மீட்டர் அகலம் உள்ள கால்வாய் ரயில் நிலையங்கள் தூண்களின் ஆக்கிரமிப்பால் 10 மீட்டராக குறுக்கப்பட்டது. இதன் மூலமாக செல்லும் 5000 கனஅடிநீர் தற்போது குடியிருப்புகளுக்கு உள்ளே தானே வரும். இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை.

இதேபோன்று சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை உயர் விரைவுச்சாலை அமைப்பதற்கான திட்டங்கள் வெள்ள நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் மீது கட்டப்பட்டு நீரின் இயல்பான போக்கை தடுத்து கால்வாயின் அகலத்தை சுருக்கி விட்டது. இந்த நீரும் வீடுகளுக்கு வராமல் வேறு எங்கு செல்லும்?

சென்னைக்கு சாலைகள் முக்கியமானது. அவற்றை அமைக்க வேண்டியது தான். ஆனால் சாலைகள் அமைக்கிற பொழுது நீரோட்டங்களுக்கு இயல்பான பாதைகளை ஏற்பாடு செய்யாமல், பெரும் சாலைகளை அமைத்து விடுவது வெள்ளப்பெருக்கு ஏற்பட முக்கிய காரணம். ஐடி காரிடார் அதாவது ராஜீவ் காந்தி சாலை - பழைய மாமல்லபுரம் சாலையில் அமைக்கப்பட்டது. சாலை அமைத்தது வளர்ச்சிக்கு உதவியது. ஆனால், நீர் செல்லக்கூடிய இடங்களில் மதகுகளை அமைக்காமல் நீர் தடுக்கப்பட்டதால் வேளச்சேரியில் ஆரம்பித்து மடிப்பாக்கம் வரை நீரில் மூழ்கும் நிலைதான் உள்ளது.

பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி அமைக்கப்பட்டுள்ள ரேடியல் சாலை வடிகால்களும், மதகுகளும் போதுமான அளவிற்கு அமைக்கப்படாமல் பல்லாவரம் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குகிறது.

மதுரவாயல் பைபாஸ் சாலையிலும் இதே போன்ற பிரச்சனைதான். திருநீர்மலை, அனகாபுத்தூர், கோவூர், அம்பத்தூர் போன்ற இடங்களில் குறுக்கே செல்லும் சாலைகளில் தான் இந்த மழை நீர் அனைத்தும் செல்கிற நிலை உள்ளது. இடைப்பட்ட பகுதிகளில் மதகுகள் அமைக்கப்படவில்லை. இதனால் கிழக்கு நோக்கிய வடிகால்கள் பாதிக்கப்பட்டது. அண்ணா நகர், போரூர், மதுரவாயல், முகப்பேர், வானகரம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படுகிறது.

வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை அமைக்கப்பட்ட 400 அடி பைபாஸ் சாலைகளும் இதே நிலைமை உள்ளது. தாம்பரத்தில் வரதராஜபுரம் ராயப்பா நகர் அதை ஒட்டிய பகுதிகள் முழுவதும் மூழ்குவதற்கு இந்த பெரும் நெடுஞ்சாலையில் மதகுகள் அமைக்கப்படாது முக்கிய காரணம். தற்போது வரதராஜபுரத்தில் சாலைகளை வெட்டி மதகு அமைப்பதற்கான வேலைகள் துவங்கி மந்தகதியில் நடக்கிற பொழுது வெள்ளம் வந்து பெரும்பாலான வீடுகளை சேதப்படுத்தியது.

சென்னையின் மூன்று ஆறுகளைப் போலவே வெள்ள தடுப்பில் மிக முக்கிய பங்காற்றியது பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலமாகும். இந்த சதுப்பு நிலத்தின் உண்மையான பரப்பளவு 5500 ஹெக்டேர் ஆகும். தற்போது அரசிடம் இருப்பது 695 ஹெக்டேர் மட்டுமே. இந்த 695 ஹெக்டரில் 84. 57 சென்னை மாநகராட்சியின் குப்பை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு குப்பை கொட்டப்படுகிறது. இப்போது அரசிடம் இருக்கிற 695 ஹெக்டேர் எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியாது. நகரங்கள் வளர்கிற பொழுது கட்டிடங்களை மட்டும் அனுமதித்து விட்டு மற்ற அனைத்தையும் புறக்கணித்து செயல்படுத்தியதற்கு யார் காரணம்?

சென்னைக்குள் மட்டும் நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வியாசர்பாடி, ஓட்டேரி, வேளச்சேரி, சேத்துப்பட்டு, மாம்பலம், கோடம்பாக்கம், அரசினர் தோட்டம், வேப்பேரி, விருகம்பாக்கம், கோயம்பேடு, அல்லிக்குளம் என்ற வகையில் நகரத்தின் மையப் பகுதிகளில் ஏரிகள் இருந்தன. இவையெல்லாம் நகரங்கள் விரிவடையும் பொழுது காணாமல் போய்விட்டது. இதற்காக நகரங்களை விரிவாக்காமல் இருக்க முடியாது. ஆனால் இந்த ஏரிகளை பாதுகாத்து நகரங்களை விரிவாக்கி இருக்க முடியும். அதற்கான செயல் திட்டம் அரசிடம் இல்லை. அரசே எதிர்கால பார்வையின்றி அருகில் இருப்பதை பிரதான விஷயமாக கருதி தான் தோன்றித்தனமான வளர்ச்சிக்கு வித்திட்டுவிட்டது. அனைத்து ஏரிகளையும் பாதுகாக்க முடியாவிட்டாலும் சென்னைக்கு தேவையான ஏரிகளையாவது பாதுகாத்து இருக்க முடியும். சென்னை குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வெள்ளம் ஏற்படுவதற்கும் நிலத்தடி நீர் குறைவதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது. 

தற்பொழுது சேத்துப்பட்டு ஏரி ஒரு குளம் போல் காட்சியளிக்கிறது. போரூர் ஏரியும், கொளத்தூர் அட்டை ஏரியும் சுருங்கி போய்விட்டது. மிக முக்கியமாக வேளச்சேரி ஏரி இருந்தது. 107.48 இதன் பரப்பளவாகும். பல ஏரிகள் அழிந்த பிறகும் இந்த ஏரி நீராதாரமாக இருந்தது. அரசு திட்டங்களுக்காக இந்த ஏரி பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு 21.44ஹெக்டரும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு 56.39 ஹெக்டரும், நெடுஞ்சாலை துறைக்கு 3.17 ஹெக்டரும் ஒதுக்கப்பட்டு ஏரி ஏரியாவாகிவிட்டது. தற்பொழுது ஏரியாக இருப்பது 22.4 ஹெக்டர் மட்டுமே.

சென்னையும் அதன் புறநகர் பகுதியும் வெள்ள பாதிப்பிற்கு உள்ளாவதற்கு ஒரு காரணம் அருகில் உள்ள மாவட்டங்களில் பெய்கின்ற மழையும் சென்னையை நோக்கி பாய்கிறது. சென்னையின் சுற்றுப்புறங்களில் உள்ள தற்போது செயல்பாட்டில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தாமல் இருப்பதும், வாய்ப்புள்ள இடங்களில் புதிய நீர் நிலைகளை போர்க்கால அடிப்படையில் உருவாக்காமல் இருப்பதும் வெள்ளம் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. இவற்றுடன் கூடவே மழை வெள்ளம் அதிகமாக வருகிறபோது ஆதனூர், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் இருந்து பல ஏரிகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த ஏரிகளை பாதுகாப்பது, கரைகளை பலப்படுத்துவது என்று நடவடிக்கை எடுத்தால் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம்.

இதற்கெல்லாம் மேலாக மழை நீர் வடிகால்வாய், கழிவுநீர் அகற்றும் கால்வாய் போதுமான அளவுக்கு இல்லை. சராசரி மழை பொழிவை வெளியேற்றுவதற்கு கூட சக்தி வாய்ந்ததாக இல்லை. சென்னையில் மழை நீரை வெளியேற்றுவதற்கு கடந்த காலங்களில் 84 சதவிகிதம் கழிவு நீர் குழாய்களும் 11 சதவிகிதம் மழை நீர் வடிகால்வாய்களும் பயன்பட்டன. சென்னையில் உள்ள கழிவுநீர் குழாய்கள் கட்டமைப்பு 50 முதல் 100 ஆண்டுகள் பழமையானது. கழிவுநீர் நீரேற்று நிலையம் உருவாகிற கழிவு நீர்களை வெளியேற்றக் கூடிய அளவிற்கு திறன் கொண்டதாக இல்லை. மழைக்காலங்களில் வெள்ள நீரும் சேருகிற பொழுது நீரேற்று நிலையங்கள் செயல்பட முடியாத அளவிற்கு பாதிக்கப்படுகிறது. இதனால் சாக்கடையும் மழை நீரும் இரண்டற கலந்து சென்னை வீதிகளிலும், வீடுகளிலும் வாசம் செய்கிறது. இந்த மாதம்  (டிசம்பர்-23) ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னையின் பெரும்பாலான வீடுகளிலும், கிணறுகளிலும் சாக்கடைகள் குடியேறிவிட்டன. சென்னையில் உள்ள சாலைகளின் நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படவில்லை. மேலும் ஒரு மதிப்பீட்டின்படி, சரிபாதி வீடுகள் கழிவு நீர் குழாய்கள் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இவையெல்லாம் திறந்தவெளி ஆறுகளில் கலக்கிறது. மழை நீர் வெளியேற்றக் காலத்தில் கழிவு நீர் குழாய்கள் செயல்படாமல் போய்விடுவது முக்கிய காரணமாகும்.

தற்போது திமுக ஆட்சியில் சென்னையில் கூடுதலான அளவு மழை நீர் வடிகால் வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் அவை தேவைக்கு ஏற்ற அளவில் இல்லை. சென்னையில் 33,374 உட்புற சாலைகள் உள்ளன. இவற்றின் நீளம் சுமார் 5525 கிலோமீட்டர். இவற்றில் 2058 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும்தான் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு வரை 615 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும்தான் மழை நீர் வடிகால்வாய் இருந்தது என்றால் நிலைமையை புரிந்து கொள்ளலாம். அசுர வேகத்தில் நகரம் வளர்கிறது. ஆமை வேகத்தில் கட்டமைப்பு நடைபெறுகிறது.

மழை நீர் வடிகால்வாய் தரமான முறையில் அமைக்கப்படவில்லை. பெரும்பாலான சாலைகளில் செல்வாக்கு படைத்த நபர்களின் ஆக்கிரமிப்புகளை தவிர்த்து பல வளைவுகளை உருவாக்கி நீரோட்டத்தை குறைக்கும் வகையில் உள்ளது. பல மழை நீர் வடிகால் அமைப்புகள் முக்கிய இடங்களில் இணைப்புகள் இல்லாமல்( Missig Link) உள்ளது. 2021 ஆம் ஆண்டு இணைப்பு ஏற்படுத்துவதற்காக சுமார் ரூ.120 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு சில இடங்களில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. கால்வாய்களில் பெரும்பாலான இடங்களில் இணைப்புகள் ஏற்படுத்தாமல் மழைநீர் சாலைக்கு வந்து விடுகிறது. வடபழனி, கேகே நகர் பகுதிகளில் ராஜமன்னார் சாலை வழியாக சிவன் பார்க்கில் கடந்து அடையாறுக்கு செல்லக்கூடிய சிறிய ஆற்றில் சிவன் பூங்கா அருகில் ஆக்கிரமிப்பு இருக்கிறது. இது போன்று நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளும், இணைப்பு இல்லாதவைகளும் இருப்பதன் காரணமாக வெள்ளம் சாலைகளிலும் வீடுகளிலும் குடியேறுகிறது காலநிலை மாற்றத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்க முடியாது.

சென்னை நகரம் கடல் மட்டத்திலிருந்து 6.7 மீட்டர் உயரத்தில் உள்ளது. எனவே முகத்துவாரத்தில் மழைநீர் கடலில் சேர்வதற்கான ஏற்பாடுகளை உரிய முறையில் செய்திட வேண்டும். இயற்கையான முறையில் கடலில் கலந்து விடும் என்ற மெத்தனப் போக்கில் மாற்றம் தேவை. மழை நீர் கடலில் கலக்க நான்கு முக துவாரங்கள் உள்ளது. கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் 120 மீட்டர் அகலமும், கூவம் 150 மீட்டர், அடையார் 300 மீட்டர், முட்டுக்காடு 100 மீட்டர் அகலம் உடைய முகத்துவாரங்களாக உள்ளது. புயல் வீசுகிற பொழுது முகத்துவாரங்கள் மழை நீரை கடலுக்குள் வாங்காது. எனவே இவற்றை ராட்சச எந்திரங்கள் மூலம் புயல் காலங்களில் வெளியேற்ற வேண்டும்.

சென்னை மாநகரமும் அதன் புறநகர்களும் வெள்ளத்தில் மிதப்பதற்கு மேற்கண்ட காரணங்கள் எல்லாம் மிக அடிப்படையான காரணங்களாகும். காலநிலை மாற்றமும் எதிர்பாராத மழை பொழிவும் என்ற காரணங்களை மட்டும் முன்னிறுத்தி கட்டமைப்பு குறைகளை கடந்து செல்லக்கூடாது. சென்னை வெள்ளத்தில் மிதக்காமல் இருப்பதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

திருப்புகழ் குழு தந்த ஆலோசனைகளை வெளியிட்டு அவற்றை செழுமைப்படுத்த வேண்டும். 

ஏரிகளை ஆழப்படுத்துவதும் கரைகளை பலப்படுத்துவதும் உடனடி கடமை. அடிக்கடி உடைந்து போகிற அல்லது உடைக்கப்படுகிற ஏரிகளின் கரைகளை பலப்படுத்துவதுடன் பாதுகாப்பு ஏற்பாடும் செய்ய வேண்டும்.

 புதிய நீராதார ஏரிகளை வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் உருவாக்க வேண்டும். வெள்ளம் ஏற்படுகிற பொழுது அவற்றை குறிப்பிட்ட அளவு இந்த ஏரிகள் உள்வாங்கிட முடியும். 

நன்னீர் சதுப்பு நிலத்தை தற்போது இருக்கக்கூடிய அளவை பாதுகாப்பதுடன், அங்கு அமைந்துள்ள குப்பைமேட்டை முறைப்படுதிட வேண்டும். 

சென்னையில் 3 ஆறுகளிலும் தொழிற்சாலை கழிவுகளும்  இதர கழிவுகளும் எந்த வரைமுறையும் இன்றி திறந்து விடப்படுகிறது. இவற்றை தடுத்து நிறுத்தி நீரோட்டம் இயல்பாக செல்வதற்கான முறைகளை ஏற்படுத்த வேண்டும். 

நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்றிட வேண்டும். மழை நீர் வடிகால்வாய் மழை நீர் வடிவதற்கு ஏற்ற முறையில் அடைப்புகள் இல்லாமல் இணைப்புகளை ஏற்படுத்தி அமைத்திட வேண்டும். 

கழிவுநீர் குழாய்களை முழுமைப்படுத்தி கழிவுநீர் வெளியேற்றுவதற்கான நீரேற்று நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும்.

 சிறிய சிறிய ஆறுகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மிகப்பெரும் தடைகளை ஏற்படுகிறது. இவற்றை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

சென்னையில் புறநகர் பகுதிகளில் கழிவுநீர் குழாய் அமைப்புகள், மழை நீர் வடிகால்வாய், ஆறுகளில் தடுப்பணைகள் போன்ற அடிப்படையான கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும்.

மேலே முன் வைத்துள்ள அனைத்துமே அரசியல் உறுதிப்பாட்டுடன் ஊழலையும், கமிஷனையும் புறம்தள்ளி மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி அமல்படுத்தினால் மட்டுமே சென்னை நகரை தொடர் வெள்ளத்தில் இருந்து மீட்க முடியும். காலநிலை மாற்றமும் பூமி வெப்பமடைதல் காரணங்களால் கூடுதலான இயற்கை காரணிகள் அடுத்தடுத்து ஏற்படலாம் அவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கு அடிப்படையான கட்டமைப்பு கூட இல்லை என்றால் அழிவு பேரழிவாக மாறும். இயற்கையின் மீதும் கால நிலையின் மீதும் காரணங்களை போட்டுவிட்டு கடந்து செல்ல முடியாது. மனித குலம் அவ்வாறு செய்யக்கூடியவர்களை மன்னிக்காது.


அ. பாக்கியம்




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...