Pages

வெள்ளி, ஜனவரி 05, 2024

மரிச்ஜாப்பி: தகர்க்கப்பட்ட புனைவுகள்

 



மரிச்ஜாப்பி என்றால் என்ன என்ற கேள்வியும், அதுபற்றி தெரிந்ததும்,  இவ்வளவு காலதாமதமாக இந்த புத்தகம் வெளி வந்து என்ன பயன் என்ற கேள்வியும், இதுவரை ஏன் இது பற்றிய விவரங்களை தேடி வெளியிடவில்லை என்ற கேள்வியும், யார் இந்த தமிழ் மார்க்ஸ் குழுவினர்? என்ற கேள்வியும் இணையத்திலும் நேரடியாகவும் பலராலும் கேட்கப்படுகின்றது. இதற்கான விளக்கங்கள் தர முடியும் என்றாலும் இந்த புத்தகத்தை வாசிப்பது மட்டும் தான் இந்த எல்லாக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதிலாக அமையும்.

இடதுசாரிகள் மீது குறிப்பாக மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசின் மீது மேற்கு வங்கத்திலும், வெளி உலகிலும் கட்ட மைக்கப்பட்ட "பொய் மலைகளை" புல்டோசர் கொண்டு தரைமட்டமாக தகர்த்துள்ளது இந்த புத்தகம்.

மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்ட இளம் தோழர்கள் சிலர், படித்த இளைஞர்களிடம் மார்க்சியத்தை கொண்டு செல்லக்கூடிய முறையில் புதிய புதிய வடிவங்களில், தளங்களில் செயல்பட தொடங்கினர். குறிப்பாக வலைதளம், முகநூல், youtube, ஸ்பேஸ், கிளப் ஹவுஸ் ,எக்ஸ் தளம் போன்றவற்றில்செயல்படுகிற பொழுது அவர்கள் எதிர்கொண்ட பல கேள்விகளில்  மரிச்ஜாப்பி மிக முக்கியமானதாக முன்வைக்கப்பட்டது.

கம்யூனிஸ்டுகள் குறிப்பாக மார்க்சிஸ்ட்கள் மேற்கு வங்காளத்தில் 17,000 வங்கதேச அகதிகளான நாமசூத்திரர்களை(தலித்)அதாவது தலித்துகளை இனப்படுகொலை செய்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு  இடதுசாரிகளை நோக்கிய பெரும் தாக்குதலாக முன்வைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக தலித்தியம் பேசக்கூடிய  மார்க்சிஸ்ட் எதிர்ப்பாளர்கள் சிலர் இதை முன்வைத்த பொழுது எதிர்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

தொலைக்காட்சி விவாதங்களில் நான் பங்கேற்ற போது, என் கேள்விகளுக்கு குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாத பாஜ தரப்பினர், ‘‘மேற்குவங்கத்தில் ஆயிரக்கணக்கான தலித்துகளை படுகொலை செய்தவர்கள்தானே நீங்கள்’’ என்று விவாதத்தை திசை திருப்புவார்கள். இதை நான் பலமுறை எதிர்கொண்டுள்ளேன். குஜராத்தில், டெல்லியில். உத்தரபிரதேசத்தில் இனப்படுகொலை செய்த  சாத்தான்கள்தான் இந்த வேதத்தை ஓதின. ஒருகட்டத்தில் சில தலித்திய பத்திரிகைகள் மரிச்ஜாப்பி பற்றி இடதுசாரிகள் மீது நடத்திய தாக்குதலும், வகுப்பு வாத பாஜக நடத்திய தாக்குதலும் ஒரே புள்ளியில் இணைந்தன.

வலதுசாரிகளின், மார்க்சிஸ்ட் எதிர்ப்பாளர்களின் மரிச்ஜாப்பி பற்றிய கேள்விகளை கடந்து சென்ற என்னைப் போன்றவர்களைப் போல் அல்லாமல், மரிச்ஜாப்பி பற்றிய கேள்விகளுக்கு விடை காணுவதற்கான வழிகளை தேடி தமிழ் மார்க்ஸ் குழுவினர் அலைந்தனர். அபொழுதுதான் ஹரிலால்நாத் என்பவர் வங்க மொழியில் எழுதிய இந்த புத்தகம் பற்றி தெரியவந்துள்ளது. அதை தமிழில் மொழி பெயர்ப்பதற்காக தீவிரமுயற்சி எடுத்து  மேற்கு வங்கத்தில் படித்துக் கொண்டிருந்த ஆய்வு மாணவர் சத்தீஸ்வரன் மூலம் பெங்காலியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து சிறப்பு செய்துள்ளனர். இதற்கான எல்லா செலவுகளையும் இந்தக் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த மொழிபெயர்ப்பை மேற்குவங்க செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அதிகாரியாக பணியாற்றிய தோழர் வீ .பா.கணேசன் அவர்கள் செழுமைப்படுத்தி கொடுத்திருக்கிறார்.

இவ்வளவு காலதாமதமாக வந்து என்ன பயன் என்று ஒருசிலரிடம் கேள்வியும் எழலாம். இப்போதாவது வந்ததே என்று ஒருசிலர் சந்தோஷமும் கொள்ளலாம். ஆனால், மரிச்ஜாப்பி பற்றிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டிய தேவை இன்றைக்கும் இருக்கிறது. இதுகுறித்து நூலின் ஆசிரியர் கருத்தை முன் வைக்கலாம்.

"மரிச்ஜாப்பி விவகாரத்தில் இடது முன்னணி அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லாததாலும், எதிர்க்கட்சிகளின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு மக்களின் ஆதரவு இல்லாததாலும், மரிச்ஜாப்பி விவாதிக்கப்படாத ஒரு விஷயமாக மாறி, பின்னர் படிப்படியாக மறக்கப்பட்டுவிட்டது. மக்கள் அதனை முடிவுற்ற அத்தியாயமாக கருதி மறந்து விட்டனர். மரிச்ஜாப்பி மெல்ல மெல்ல நினைவுகளில் இருந்து மறைந்து போனது.

மறதியின் ஆழத்திலிருந்து அதனைத் தோண்டி எடுக்கும் முயற்சிகள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 21 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்திலும் விஸ்வரூபமெடுத்தது. சரியாக திரிணாமுல்  காங்கிரஸ் பிறந்து, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த போதுதான் இது நிகழ்ந்தது. இந்த இரண்டு பிற்போக்கு சக்திகளும் கூட்டுச்சேர்ந்திருந்த நிலையில் இடதுசாரி அல்லது கம்யூனிஸ்ட் எதிர்ப்பின் ஒரு அங்கமாக மரிச்ஜாப்பி சம்பவத்தை புதுப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டன. திடீரென்று மரிச்ஜாப்பி பற்றிய செய்திகள் வியப்பூட்டும் வகையில் பல்வேறு செய்தித்தாள்களில் இடம் பெற்றன. பல புத்தகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டன. சில காணொலிகளும் உருவாக்கப்பட்டன. இவற்றின் மூலம் எவ்வளவு நாட்கள் கழிந்தாலும் வங்கத்தில் இடது முன்னணிக்கு எதிரான அரசியலில் ஒரு முதன்மை பிரச்சினையாக மரிச்ஜாப்பி முன் வைக்கப்பட்டது. ஏன் 2019 ஆம் ஆண்டு  கூட, ‘‘1984ம் ஆண்டு டெல்லியில் நடந்த சீக்கிய படுகொலையை விட 2002 ம் ஆண்டு குஜராத்தில் நடந்த  படுகொலையை விட மோசமானது மரிச்ஜாப்பி படுகொலை’’என்றுமின்ட்’ பத்திரிக்கையில் எழுதி இருந்தார்கள்’’.  

மேற்கண்ட பின்னணியின்  தேவையில் இருந்து தான் நூலாசிரியர் இந்த புத்தகத்தை 2020 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார்சிங்கூர், நந்திகிராம் போன்ற இடங்களில் நடைபெற்ற சம்பவங்களை மத்தியில் ஆளும் வர்க்க உதவியுடன் இடது முன்னணிக்கு எதிராக எவ்வாறு ஊடகங்கள் பயன்படுத்தியது என்பதை நாம் அறிவோம்.

இதே போன்று தான் வரலாற்றில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட பொய்களை, கம்யூனிஸ்டுகள் எழுச்சி அடைகிற போது  அவர்களுக்கு எதிராக பயன்படுத்துவார்கள். அதன் தொடர்ச்சி தான் மரிச்ஜாப்பிஇந்த அவதூறு பிரச்சாரம் மார்க்சிஸ்ட்டு களுக்கு எதிராக இன்றைக்கும் வலதுசாரிகளால் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே எந்த விதத்திலும் கம்யூனிஸ்டுகளுக்கு பொருந்தாத ஒரு விஷயத்தை நேர் எதிரான குற்றச்சாட்டை வரலாற்று ஆதாரங்களுடன் மறுக்க வேண்டிய தேவை என்றைக்குமே உள்ளது. அதைத்தான் இந்த புத்தகம் செய்துள்ளது. இந்த புத்தகம் காலம் கடந்தது அல்ல. இன்றைக்கும் நாளைக்கும் என்றைக்கும் காலம் கடந்தும் தேவைப்படக்கூடிய மிக முக்கியமான புத்தகம் ஆகும்.

மரிச்ஜாப்பி என்ற இடம் மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டத்தில் அமைந்துள்ள சதுப்பு நில காடுகளான சுந்தரவனக் காடுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். சுந்தரவனக் காடுகள் இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 10,000 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இவற்றில் 6000 கிலோ மீட்டர் பரப்பளவு காடுகள் வங்கதேசத்தில் உள்ளது. கங்கையின் அடிப்பாகத்திலும் கழிமுகப்பகுதியாகவும் இருக்கிறது.

1958 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்தில் இருந்து மக்கள் அகதிகளாக மேற்கு வங்கத்தை நோக்கி படையெடுத்தனர்.(1947 ல் வராமல்  ஏன் 1958- ல் வந்தார்கள் என்பதை புத்தகத்தில் விளக்கி இருப்பது மிக முக்கியமானது). நாடு பிரிவினையும் அதன் தொடர்ச்சியாகவும் இது நடந்தது. ஏற்கனவே 1947 ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் 84 லட்சம் அகதிகள் குடியேறினார்கள். அதுவே அந்த மாநிலத்திற்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது. 1958 ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்தவர்கள் நாமசூத்திரர்கள் என்று அழைக்க கூடிய பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள ஆவார்கள். மேற்கு வங்காள காங்கிரஸ் அரசு அவர்களை ஏற்க மறுத்தது.

இடதுசாரிகள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகதிகளுக்கான அமைப்பை உருவாக்கி மனிதாபிமான அடிப்படையில் அவர்களை அரவணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது; போராட்டங்களை நடத்தியது. இதன் விளைவாக ஒன்றிய அரசு தலையிட்டு அவர்களை தண்டகாருண்யத்தில் குடியமர்த்தியது.

அங்கு அவர்களுக்கு வாழ்வதற்கான வசதிகள் இல்லாத பொழுது மேற்கு வங்காளத்தை நோக்கி படை எடுக்க ஆரம்பித்தனர். அன்றைய தினம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அந்த அகதிகளை ரயில் நிலையங்களில் இறங்க விடாமல் அடித்து துரத்தியது. மீண்டும் தண்ட  காருண்யத்திற்கு அனுப்பியது. தப்பித்து ஓடியவர்களையும் பிடித்து திருப்பி அனுப்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அகதிகள் ஆதரவு அமைப்பு அவர்களை மனிதாபிமான அடிப்படையில் அணுகிட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது. இதற்கெல்லாம் காங்கிரஸ் அரசு செவி சாய்க்கவில்லை.

1977 ஆம் ஆண்டு இடது முன்னணி ஆட்சி ஏற்பட்டவுடன் தண்டகாருண்யத்தில் இருந்த அகதிகள் வங்கத்தை நோக்கி வந்தனர். இதுவரை அவர்களை அடித்து விரட்டிய காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ், ஜனதா கட்சி, இந்து மகா சபா போன்ற கட்சிகளின் தலைவர்கள் அகதிகளை தூண்டிவிட்டு மேற்குவங்க அரசுக்கு எதிராக கல கம் செய்ய வைத்தனர். ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசு அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் நடத்தியது. வங்கத்தில் தற்காலிக முகாம்களை ஏற்படுத்தி வந்தவர்களை தங்க வைத்தது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தண்ட காருண்யத்திற்கு அனுப்பி வைத்தது மட்டுமல்ல, தண்டகாருண்யத்தில் ஒன்றிய அரசு செய்ய வேண்டிய உடனடி பணிகளை வலியுறுத்தியும் நிர்பந்தம் கொடுத்தும் செய்ய வைத்தது.

இந்தப் பின்னணியில் கம்யூனிஸ்ட் எதிரிகள் மேற்கு வங்கத்தின் இடதுசாரி அரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சுந்தரவனக் காடுகளில் உள்ள மரிச்ஜாப்பி தீவுகளுக்கு குடியேற அழைத்துச் சென்றனர். காங்கிரஸ் அரசு செய்தது போல் அவர்களை அடித்து விரட்டாமல் , அது பாதுகாக்கப்பட்ட பகுதி, ஆபத்துக்கள் நிறைந்த பகுதி அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று குடியேறியவர்களிடம் மாநில அரசு அறிவுறுத்தியது. ஒன்றிய அரசோ உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த பின்னணியில் அவர்களிடம் 8 மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி பெரும்பகுதியிலான அகதிகளை அமைதியான முறையில் திருப்பி அனுப்பினார்கள். 8 மாதங்களுக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி குழுவினர் அந்த தீவுக்கு சென்று மீதம் இருந்தவர்களை அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சி போக்கில் மரிச்ஜாப்பி அடுத்துள்ள கிராமத்தில் காவல் நிலைய தாக்குதலில் ஈடுபட்டதை முன்னிட்டு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இரண்டு பழங்குடியினர் மரணம் அடைந்தனர். இதற்கு முன்பு இடது முன்னணி அரசுக்கு எதிராக செய்து வந்த பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் மற்றும் அந்த மக்களை தூண்டி விடக்கூடிய ஆதிவாசி அமைப்புகளும் கூட்டம் நடத்தி படுகொலை இனப்படுகொலை என பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டனர். இருவர் மரணத்தை 6பேர்,12 பேர்,36 பேர்,77பேர், 17000 வரை கொண்டு வந்து நிறுத்தி விட்டனர்.

தீவில் கடைசியாக இருந்தவர்களை தவிர வெளியேறியர்கள் எல்லாம், தண்ட காருண்யத்திற்கு செல்லாமல் வெளியிடங்களுக்கு சென்று வசித்தவர்களை எல்லாம் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்ற கணக்குகளில் சேர்த்து பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். ஈறைப் பேனாக்கி பேனை பெருமாளாக்கி விட்டனர். இந்த மரணங்கள் பற்றி எந்தவிதமான பத்திரிக்கை செய்திகளும் அப்போதும் இல்லை. அதற்கு அப்புறமும் இல்லை. ஆய்வு என்ற முறையில் கற்பனை குதிரைகளை தட்டிவிட்டு அவதூறு கதைகளை புத்தகமாக உலவவிட்டனர்.

மரிச்ஜாப்பி பொய்கள் எப்படி இடதுசாரி அரசுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டது என்ற விவரத்தை புத்தகத்தின் 328 பக்கத்தில் வரலாற்று ஆதாரங்களோடு அரசியல் பொருளாதார பின்னணியில் தொடர்புகள் அறுபடாமல்  விளக்கப்பட்டுள்ளது.

கட்டமைக்கப்பட்ட கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய் மூட்டைகளுக்கு ஒரு உதாரணத்தை மட்டும் புத்தகத்திலிருந்து இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அன்னூ ஜலாய்ஸ் என்ற சுற்றுச்சூழல் மானுடவியலாளர் எழுதிய கட்டுக்கதை.

" சுந்தரவனத்தில் வாழும் வங்காள புலிகள் மனிதர்களோடு சகஜமாக பழகி வந்ததாகவும், மரிச்ஜாப்பில் நடைபெற்ற அடக்குமுறைகளை கண்டு அதனுடைய உளவியல் தன்மை மாறி விட்டதாகவும், குறிப்பிடுகிறார். காவல்துறையால் கொல்லப்பட்ட மக்களை ஆற்றில் வீசியதால் அதை உணவாக உட்கொண்ட புலிகள் அதற்குப் பிறகுதான் மனிதக் கறி ருசியை தேடி மக்களை வேட்டையாடத் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார்." சைவப் புலி அசைவப் புலி ஆன கதை’’ என்று புருடா விடுகிறார். இவர் மானுடவியலாளர் அல்ல. மார்க்சிஸ்ட் எதிர்ப்பாளர் என்று அவிழ்த்துவிட்ட கட்டுக்கதையாலேயே அம்பலப்பட்டுப் போகிறார்.

வங்கப் புலிகள் இயல்பிலேயே மனிதர்களை வேட்டையாடி உணவு உண்பவையாக இருந்துள்ளது என்பதற்கு ஏராளமான ஆய்வுகள் இருக்கின்றன. புலிகள் சுந்தரவனத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஆண்டுகளாக மனிதர்களை வேட்டையாடி வந்துள்ளன. புலிகளின் வேட்டைக்கு பலியான கணவர்களை இழந்த விதவைப் பெண்கள் அதிகமாக இருப்பதால் விதவா கிராமம் என்று அங்குள்ள ஒரு கிராமம் அழைக்கப்படுகிறது.

மனிதர்களை வேட்டையாடும் புலிகளை கொல் வதற்காக  பிரிட்டிஷார் 1883 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே பரிசுத்தொகைகளை வழங்கி வந்தனர். 1881 முதல் 1912 வரை 2400 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை புலிகள் வேட்டையாடி உள்ளதாக ஜிம் கார்பெட் என்ற புகழ் பெற்ற புலி வேட்டையாளர் குறிப்பிடுகிறார்.

உப்மா பட்னாகர் என்ற ஊடகவியலாளர் சுந்தரவன காடுகளில் உள்ள புலிகள் மனிதர்களை உண்பதற்கு காரணம் உணவு பற்றாக்குறை , உப்பு தண்ணீரில் வாழ்வதால் ஏற்பட்டுள்ள முரட்டுத்தனமான இயல்பு, வயது முதிர்ந்த புலிகள் வலுவான விலங்குகளை வேட்டையாட இயலாமல் போவது உள்ளிட்ட காரணமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

1978 முதல் 1979 வரை ஓராண்டு மட்டுமே குடியிருந்த அகதிகளை உண்பதன் மூலமாகத்தான் புலி மனிதர்களை உண்ணவே ஆரம்பித்தது என்ற அறிவற்ற பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்இது போன்ற ஏராளமான புனைவுகளை இந்த புத்தகம் தகர்த்து தரைமட்டம் ஆக்கி உள்ளது.

20 துணை தலைப்புகளில் 328 பக்கங்கள் கொண்ட புத்தகம். புனையப்பட்ட சித்ரவதைகளின் கதை என்று துணை தலைப்பு மிக முக்கியமாக ஆய்வு என்ற பெயரில், ஆதாரம் என்ற பெயரிலும் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளது.

பாரதி புத்தகாலயம் இந்த புத்தகத்தை வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. பல பதிப்பகங்கள் மலிவு விலை பதிப்புகளை வெளியிட ஆரம்பித்து விட்டன. இந்த புத்தகத்தின் விலையையும் ஓரளவு குறைத்து இருந்தால் பரவலாக வாசகர்களுக்குப் போய்ச் சேர வசதியாக இருக்கும். புத்தகத்தின் அட்டைப்படம் அருமை. புத்தகத்தின் தாளிலும், பிரிண்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அடுத்த பதிப்பில் இதை சரி செய்துதிட வேண்டும்.

தமிழகத்தில் இடதுசாரி அமைப்புகள் குறிப்பாக நடுத்தர வர்க்க அமைப்புகள் இந்த புத்தகத்தை தங்களின் ஊழியர்கள் மத்தியில் கொண்டு செல்வது பாஜக அரசியலை பின்னுக்கு தள்ளுவதற்கு, உதவியாக இருக்கும்.

இடதுசாரிகள் உழைப்பாளி மக்களிடம், அடித்தட்டு மக்களிடம், தலித் மக்களிடம் கொண்டுள்ள வர்க்க பாசத்தையும் வெளிப்படுத்துவதாக அமையும்.

அதே நேரத்தில் இதர ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்க உந்து சக்தி பெற முடியும்.

இளம் தோழர்கள் தமிழ் மார்க்ஸ் குழுவினர் தமிழக இடதுசாரி அரசியலுக்கு செய்துள்ள மிகப்பெரும் பங்களிப்பு இந்த புத்தகம் என்றால் அது மிகையில்லை.

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளில் அம்பலமாகிவிடும் என்பார்கள். மரிச்ஜாப்பி விஷயத்தில் ரொம்பவே லேட் ஆனாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு தேவையான லேட்டஸ்ட்டான புத்தகம் இது.

-அ.பாக்கியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...