Pages

புதன், ஜனவரி 31, 2024

கேரளாவில் வறுமை ஒழிப்பு எப்படி சாத்தியமானது?

 


அ.பாக்கியம்

இந்தியாவில் வறுமையில் வாழக்கூடிய மக்கள் மிக மிக குறைவாக உள்ள மாநிலம் கேரள மாநிலம் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இது பற்றி அவுட்லுக் பத்திரிக்கை ஆகஸ்ட் 6 2023 எழுதிய விரிவான ஆய்வு கட்டுரை கவனத்தில் எடுக்க வேண்டியது.
கடந்த நாற்பதாண்டு கால கொள்கை முடிவுகள், விடாப்பிடியான அமுலாக்கம், அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கேரளா இந்தியாவின் முதல் 10 பணக்கார மாநிலங்களில் பட்டியலில் இல்லை. அதேபோன்று அதிகதொழிற்சாலைகள் உள்ள 10 மாநிலங்களின் பட்டியலில் கேரளா இல்லை. 7796 தொழிற்சாலை களுடன் 12 வது இடத்தில் தான் உள்ளது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் பங்கு அடிப்படையில்  கேரளா முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. இது அகில இந்திய சராசரியை விட அதிகமாகும். கல்வி அறிவு, சுகாதாரம், வாழ்க்கை தரம் போன்ற சமூக வளர்ச்சியின் பல குறியீடுகளில் கேரள மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்ட பன்முக வறுமை குறியீட்டு அளவின்படி (multi dimension poverty index) அடிப்படையில் 0.55 சதவீதத்துடன் மிகக் குறைந்த ஏழைகளைக் கொண்ட மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. இந்தியாவிலேயே ஏழ்மை இல்லாத மாவட்டமாக எர்ணாகுளம் மாவட்டம் 2022 ஆம் ஆண்டு உருவெடுத்தது. ஏற்கனவே கேரளாவின் கோட்டயம் மாவட்டம் பூஜ்ஜியம் சதவீதம் வறுமையைக் கொண்ட மாவட்டமாக உருவெடுத்தது. இந்தியாவிலேயே இந்த மாவட்டங்கள் வறுமை ஒழித்த மாவட்டங்களாக மாறியது.

இந்த ஆய்வுகள் ஊட்டச்சத்து, பள்ளி படிப்பு ஆண்டுகள், குழந்தை இறப்பு, இளம் பருவத்தினரின் இறப்பு, தாய் வழி ஆரோக்கியம், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், சொந்த வீடு, சொத்துக்கள், மற்றும் வங்கி கணக்கு போன்ற 12 குறியீட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி அதிக அளவு இல்லாத ஒரு மாநிலத்தில் சமூக வளர்ச்சியின் அனைத்து குறியீடுகளிலும் குறிப்பாக மனித வளர்ச்சி மற்றும் சமூக பாதுகாப்பில் இந்தியாவிலேயே வலுவான அடித்தளத்தை கேரளா நிறுவியுள்ளது. நிலசீர்திருத்தங்கள, அனைவருக்குமான பள்ளிக்கல்வி, ஜனநாயக பரவலாக்கம், சுகாதார பாதுகாப்பு, போன்ற முயற்சிகள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினரை உயர்த்துவதில் முன்னணி பங்காற்றி உள்ளத. அதாவது பொது விநியோகமுறை பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை வழங்கி உள்ளது அடிப்படையான. கேரளாவில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் மூலம் சுமார் 65 லட்சம் பேர் உதவிகளை பெறுகிறார்கள். இது கேரளாவின் பசியை போக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. பொருளாதார பாதிப்புகளையும் நிவர்த்தி செய்கிறது.

அதிகாரப்பூர்வமான அறிக்கையின் படி 1973-74 கேரளாவில் வறுமையின் அளவு 59.79 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியான 54. 88 சதவீதத்தை விட அதிமாக இருந்தது. ஆனால் 2011-12 ஆம் ஆண்டுகளில் கேரளாவின் முழுமையான வறுமை 11 சதவீதமாக குறைந்தது. இதே காலத்தில் தேசிய சராசரி 29.5%. தற்போதைய நிதி ஆயோக் அறிக்கை படி இந்தியாவின் ஏழ்மை மக்களின்0.55 சதவீதத்துடன் மிகக் குறைந்த வறுமையுள்ள மாநிலமாக கேரளா மாறியதற்கு 40 ஆண்டு காலம் தொடர்ச்சியாக எடுத்த கொள்கை முடிவுகளில் அமலாக்கம் இந்த வெற்றியை ஈட்டி தந்துள்ளது.

சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வு(NHFS) அறிக்கைப்படி நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் குழந்தை இறப்பு ஒற்றை இலக்கமாக கேரள மாநிலத்தில் உள்ளது. அதாவது ஆயிரம் பிறப்புகளுக்கு 6 இறப்பு என்ற நிலைமையில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் கேரளாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் இந்தியாவிலேயே முதல் தரவரிசைகளைப் பெற்ற சுகாதார நிலையங்களாக உள்ளது என்று தேசிய சுகாதார இயக்கம் சான்றிதழ் அளித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு பட்டியலின்படி இந்தியாவில் சிறப்பாக செயல்படும் முதல் 12 ஆரம்ப சுகாதார மையங்கள் கேரளாவை சேர்ந்தவை.

இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஆயிரத்து 1996-ம் ஆண்டு மக்கள் திட்டமிடல் திட்டத்தை கேரளா அறிமுகப்படுத்தியது. இது எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக அமலாகியது. அதாவது கேரளாவில் திட்டமிடல் பரவலாக்கப்பட்டது, திறமையான வளமான நிர்வாக அமைப்புகளையும் உருவாக்கியது, பஞ்சாயத்து ராஜ் மற்றும் மக்கள் திட்டமிடல் செயல்படுத்தல் போன்ற முடிவுகள் அமுதானது, புரட்சிகரமான மாற்றங்களை அடித்தளத்தில் கொண்டு வந்தது.

திட்ட நிதியில் 40% பஞ்சாயத்துகளுக்கு மாற்றி அடிமட்ட திட்டமிடலுக்கு கேரளா வழிகாட்டியாக அமைந்தது. மாநில அரசாங்கத்திடம் இருந்த பல அதிகாரங்கள் குறிப்பாக மருத்துவ மனைகள், பள்ளிகள், விவசாயத் துறைகள் நிர்வாகம், உட்பட பல அதிகாரங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டன. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது.

இதைவிட அதிகமாக குறிப்பிடப்பட வேண்டிய மிக முக்கியமான அம்சம் சிறந்த முறையில் பயனுள்ள நிதி பரவலாக்க முறை உருவாக்கப்பட்டது. மாநில அரசின் வரிகளில் ஒரு பங்கும், மானியங்களில் ஒரு பங்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றப்பட்டது. மாநில நிதி ஆணையங்களின் பரிந்துரையின் அடிப்படையில் செலவினங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

 இந்தியாவிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது. பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலமாக கேரளா இருக்கிறது. பதிவு செய்யப்பட்டுள்ள அறிக்கையின் படி 2021-22 ல இடைநிற்றல் விகிதம் தொடக்க கல்வியில் 0.02 சதவிகிதம், உயர்நிலைப் பள்ளிகளில் 0.05, மேல்நிலைப் பள்ளியில் 0.03 என்ற அளவில் உள்ளது. இது தேசிய சராசரியான 4.13 சதவீதத்தை விட மிக மிக குறைவு. உயர்நிலைப் பள்ளியில் இடைநிற்றல் தேசிய சராசர 17.06 சதவீதமாக இருக்கிற பொழுது கேரளாவில் இது 0.05 சதவீதமாக உள்ளது. பட்டியலின சாதியான எஸ்சி மற்றும் எஸ் டி பிரிவுகளில் இடைநிற்றல் 0.04 மற்றும் 0.03 சதவீதத்துடன் நாட்டிலேயே மிகக் குறைவாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளுக்கு பதிலாக அரசு பள்ளிகளை மக்கள் விரும்பி மாணவர்களை சேர்த்து வருவது புதிய போக்காக உள்ளது. இதற்கு காரணம் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், நவீன மயமாக்கப்பட்ட ஆய்வகங்கள், நூலக வசதிகள், கல்வியின் தரம் ஆகியவை பெற்றோர்களையும் மாணவர்களையும் அதிகமாக கவர்ந்துள்ளது. கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 144 உயர்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்து கோடி ரூபாய் முதலீட்டில் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு வந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தகவலை தெரிவித்துள்ளது.

பெண்களுக்கான அதிகாரம் மற்றும் செயல்பாட்டு வெளிகள் விரிவடைந்துள்ளது. வறுமையை ஒழிப்பதற்காக 1997 இல் கேரளா அரசால் குடும்பஸ்ரீ என்ற தனித்துவமான பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது இதில் 4.5 மில்லியன் பெண்கள் உறுப்பினராக உள்ளனர். இந்தத் திட்டம் மூன்று அடுக்கு கட்டமைப்புடன் செயல்படுகிறது. மிகக் குறைந்த வருமான பிரிவினருக்கான குழு, நடுத்தர பகுதி மேம்பாட்டு சங்கங்கள்,  அடுத்து சமூக மேம்பாட்டுச் சங்கங்கள் என்ற முறையில் செயல்படுகிறது. இது உள்ளூர் உள்ளாட்சி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி வரையில் இந்த குடும்பஸ்ரீ அமைப்பில 2,94,436 கீழ்நிலைக் குழுக்கள், 19,489 நடுத்தர குழுக்கள், 1064 சமூக மேம்பாட்டு குழுக்கள் என மொத்தம் 45,85,677 பெண்கள் உறுப்பினராக உள்ளனர். குடும்பத்திற்கு ஒரு உறுப்பினர் என்ற முறையில் இந்த குழு பராமரிக்கப்படுகிறது.

கேரளாவில் குடும்பஸ்ரீ பெண்களால் 26,448 மேற்பட்ட குறுந்தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு திட்டங்களில் சுமார் 5 லட்சம் உறுப்பினர்கள் கூட்டாகவும், தனியாகவும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சமூக சமையல் அறைகள், வீட்டிலேயே கடைகள் நடத்துவது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் நடத்துவது, ஹெல்த் கலப்புகளை நடத்துவது, வண்டிகளில் உணவுகள் தயாரித்து விற்பது, வீட்டு விடுதிகள் நடத்துவது, திறன் மேம்பாட்டு திட்டங்கள், தொழில்சார் பயிற்சிகள் என பல துறைகளில் ஈடுபட்டுள்ளனர். நோய் தடுப்பு சிகிச்சை, சமூக ஆலோசனை, பாலின பயிற்சி, குழந்தைகளுக்கான சுகாதாரத் திட்டங்களை நடத்துகிறார்கள். கேரளாவின் வறுமை ஒழிப்பில் குடும்பஸ்ரீ அமைப்பின் செயல்பாடு முக்கிய பங்காற்றி வருகிறது.

பினராய் விஜயன் தலைமையிலான அரசு 2021 ஆம் ஆண்டில் மீண்டும் பதவி ஏற்ற உடன் தீவிர வறுமை ஒழிப்பை அறிவித்தது. அறிவித்தது மட்டுமல்ல உணவு, பாதுகாப்பான தங்கும் இடம், அடிப்படை வருமானம், சுகாதாரம்  ஆகிய நான்கு வசதிகள் பெறாத மக்களை கண்டறிந்து அவர்களுக்கு முதல் கட்டமாக இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுத்து அமலாக்கப்பட்டது. ஒரு வருடத்தில் கணக்கெடுக்கப்பட்டு 103 099 தனி நபர்களைக் கொண்ட 64 006 குடும்பங்கள் ஏழ்மையில் வாழ்வது கண்டறியப்பட்டது. இவர்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு அமலாக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் இந்த வெற்றிகளின் கூடவே தனித்துவமான சில சவால்களையும் சந்தித்து வருகிறது. ஒழிக்கப்பட்ட தொற்று நோய்கள் மீண்டும் வருவது சிக்கன்குனியா, டெங்கு, மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற தொற்று நோய்கள் அடிக்கடி வருவதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு களையப்பட வேண்டியதையும், தொற்று நோய் அல்லாத இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்கள் அதிகமாவதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மிகப்பெரும் சவாலான பணியாக அரசின் முன்னால் உள்ளது.

கேரளாவின் இந்த வளர்ச்சிக்கு இடதுசாரிகளின் ஆட்சியும் செயல்பாடும் அவர்களின் திறமையும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஜனநாயக செயல்பாடுகள், அறிவியல் விழிப்புணர்வு, அதிகாரம் பரவலாக்கப்படுதல், நிதி பரவலாக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளில் இடதுசாரிகள் அதிகாரத்தில் இருந்த பொழுதும், இல்லாத பொழுதும் கவனம் செலுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாகவே அந்த மாநிலத்தின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அ.பாக்கியம்

(அவுட்லுக் என்ற இதழில் வெளிவந்த கட்டுரையை தளுவி எழுதப்பட்டது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...