Pages

செவ்வாய், செப்டம்பர் 26, 2023

போர்களின் பூமியில் முஹம்மது அலி

 

தொடர்: 24

அ.பாக்கியம்

அமெரிக்காவில் வியட்நாம் போர் எதிர்ப்பாளராக, சிவில் உரிமை போராளியாகவும், ஆப்பிரிக்க நாட்டில் கருப்பின தேசியவாதியாகவும் பார்க்கப்பட்ட முகமது அலி அரபு நாடுகளில் முஸ்லிம் அடையாளங்களால் வரவேற்கப்பட்டார். ஆனால், மேற்கண்ட மூன்றையும் கடந்த பொது தன்மையுடனும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் முகமது அலி என்பதை மறுக்க இயலாது.

அரபு நாடுகளை தனது எண்ணெய்வளத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் என்ற கருவியைக் கொண்டு கூறுபோட்டு வேட்டையாடியது. அமெரிக்காவின் இந்த வேட்டையாடலில் அரபு நாடுகள் பலியாகிக் கொண்டிருந்தன. அமெரிக்காவின் சுரண்டலை எதிர்த்த நாடுகள் மீது அமெரிக்கா பொய் குற்றச்சாட்டுக்களை கூறி போர் தொடுத்தது. இந்தப் போரில் எண்ணற்ற அப்பாவி மக்கள் பலியானார்கள். இவர்கள் அமெரிக்க மற்றும் அரபு நாட்டைச் சேர்ந்த பொதுமக்களாக இருந்தன. இந்த நிலவியல், இயற்கை வளங்களை மேலாதிக்கம் செய்யும் யுத்தத்தில் முகமது அலி இடர்பாடுகளில் இருந்த மக்களை மீட்க கூடிய பணியை செய்தார். அவர் போரின் காரணங்களை ஆராயவில்லை; அதன் நியாயங்களுக்குள் செல்லவில்லை. போரில் அகப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கான முறையில் தனிநபராகவும் சில அமைப்புகளின்  ஆதரவுடனும் களத்தில் இறங்கினார்.

1990ம் ஆண்டு ஈராக் மற்றும் அமெரிக்கா இடையிலான நெருக்கடிகள் முற்றியது. ஈராக் தனது எண்ணெய் வளத்தை பாதுகாக்க அமெரிக்காவை எதிர்த்தது. அமெரிக்காவின் செயல்களுக்கு ஆதரவாக இருந்த குவைத்தின் மீது படையெடுத்தது. இதையடுத்து அமெரிக்கா ஈராக்கை தாக்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியது. அமெரிக்கர்கள் பலர் ஈராக்கில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சி எடுக்கவில்லை. யார் சென்றாலும் சதாம் உசேன் சிறை பிடித்து விடுவார் என்று அமெரிக்கா கருதியது. அந்த நேரத்தில் ஈராக்கில் சிக்கி கொண்ட 15 அமெரிக்கர்களை மீட்டுக் கொண்டு வர முகமது அலி தயாரானார். ஈராக் செல்ல ஆயத்தமானார். அவரது மீட்பு பணி தவறாக கருதப்பட்டு விமர்சிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியும் இதை ஏற்கவில்லை. ஈராக்கின் பாக்தாத் நகரத்தில் அப்போதைய அமெரிக்க தூதராக அதிகாரியாக இருந்த ஜோசப் வில்சன், ‘‘ஈராக்கின் பிரச்சார விளையாட்டில் இவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். ஈராக் செல்லக் கூடியவர்கள் பெரிய தவறு செய்கிறார்கள்’’ என்று முகமது அலியின் பெயரை குறிப்பிடாமல்  ஈராக்  பயணத்தை குறித்து கருத்து தெரிவித்தார்.

ஆனாலும், அதையெல்லாம் புறக்கணித்து அலி நல்லெண்ண பயணமாக ஈராக் சென்றார். அமெரிக்காவின் மிகவும் பிரபலமான முஸ்லிம் ஈராக்கின் பாக்தாத் நகரத்திற்கு 1990 நவம்பர் 23ம் தேதி சென்றார். போர் நெருக்கடி ஆரம்பித்த 113 வது நாளில் அங்கு சென்று இறங்கினார். உலகச் சாம்பியன், உலகப் புகழ்பெற்ற கதாநாயகன் முகமது அலி இப்போது பாக்தாத்தில் இருக்கிறார் என்ற செய்தி ஈராக் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அலியின் உதவிக்காக அமெரிக்க தூதரகத்திலிருந்த வெனான்  நோரேட் என்ற அதிகாரியும் சென்றார். முகமது அலி ஒரு வாரம் பாக்தாத்தில் தங்கியிருந்தார். அவரை சதாம் உசேன் சந்திப்பதற்கான நேரம் நிச்சயிக்கப்படவில்லை. ஈராக்கியர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார்கள்; அவருடன் நின்று பேசுவதற்கு விரும்பினார்கள். முகமது அலி யாரையும் நிராகரிக்காமல் அவர்களுடன் பாசமாக பழகினார்.

பிணைக் கைதிகளை மீட்பதற்காக அலி இங்கு வந்துள்ளார் என்பதை மக்கள் அறிந்திருக்கவில்லை. போர் நெருங்கி வருகிறது என்பதை மட்டும் அறிந்திருந்தார்கள். முகமது அலி தெருக்களில் நடந்தார். குழந்தைகளை சந்தித்தார். பள்ளிவாசலுக்கு சென்றார். அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது "ஒரு யுத்தம் வராது என்று நாங்கள் நம்புகிறோம்; அதற்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று தெரிவித்தார். எனக்கு கிடைத்த புகழின் சிறிய அதிகாரத்துடன் நான் ஈராக்கின் நியாயமான நிலைமைகளை எடுத்துக் கூறுவேன்"என்றும் தெரிவித்தார். அவர் பாக்தாத்தில் இருந்தபொழுது அவரிடம் பார்க்கின்சன் நோய்க்கான மருந்து தீர்ந்து விட்டது. அதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுது உதவியாளர் ஐரிஷ் மருத்துவமனையில் மருந்துகளை கண்டுபிடித்து வாங்கி கொடுத்தார்.

அடுத்த நாள் சதாம் உசேன் அவரை சந்திக்க உள்ளார் என்று முகமது அலிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அமெரிக்காவிற்கும் சென்றது. பத்திரிகைகளிலும் வெளியானது. அமெரிக்காவின் புஷ் நிர்வாகம் இது ஈராக்கியர்களுக்கு சாதகமான பிரச்சாரம் என்று விமர்சனம் செய்தது. மற்ற அமெரிக்கர்கள், நோபல் பரிசுக்காக அலி, இதுபோன்று செயல்படுகிறார் என்று வதந்திகளை பரப்பினார்கள். 1990ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி சதாம் உசேனும் முகமதுஅலியும் சந்தித்தார்கள்.

பிணைக் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்தியதை சதாம் உசேன்   விவரித்தார். ஈராக் பற்றிய நேர்மையான விஷயங்களை அமெரிக்காவிடம் வலியுறுத்துவேன் என்று சதாம்உசேனுக்கு முகமதுஅலி உறுதி அளித்தார். ‘‘உங்களை அமெரிக்காவிற்கு திரும்ப அனுமதித்தால்தானே நீங்கள் அவ்வாறு கூற முடியும் என்று சதாம் உசேன் கூற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே சதாம், ‘‘முகமது அலி மீட்க வந்த 15 அமெரிக்கர்கள் இல்லாமல் அவரை மட்டும் தனியாக அனுப்ப அனுமதிக்க மாட்டேன்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். அலி உட்பட அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அமெரிக்கர்கள் 15 பேரும் விடுவிக்கப்பட்டு முகமது அலி தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்தார்கள். முகமது அலியின் முயற்சிக்கு அவர்கள் கடமைப்பட்டு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் என்று தொடங்கி அவரை புகழ்ந்து தள்ளினர். 1990ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி, முகமது அலியும் 15 பணயக் கைதிகளும் ஈராக்கில் இருந்த இதர அமெரிக்கர் களும் விமானம் மூலமாக ஜே.எஃப்.கே விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். 1991 ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்கா, ஈராக் மீது குண்டு வீசத் தொடங்கியது. முகமது அலி அதிர்ச்சியை தெரிவித்தார். இது நேர்மையானது இல்லை என்று கண்டனம் தெரிவித்தார்.

முகமது அலி இதை விளம்பரத்திற்காகவும், தன்னை உயர்த்திக் கொள்வதற்காகவும் செய்கிறார் என்று அவர் மீது அவதூறு பரப்பப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு முகமது அலி கர்ஜித்தார். எனக்கு விளம்பரம் தேவை. எனது புத்தகத்திற்கும் எனது சண்டைக்கும் எனது திரைப்படத் திற்கும்தான் கண்டிப்பாக விளம்பரம் தேவை. ஆனால் மக்களுக்கு நன்மை செய்வதற்காக, மக்களுக்கு உதவுவதற்காக என்றைக்குமே விளம்பரத்தை விரும்பாதவன் நான் என்று கோபத்துடன் கூறினார். நேர்மையற்ற விமர்சனங்கள் என்று அவற்றை புறம் தள்ளினார்.

இதேபோன்று உயிருக்கு ஆபத்தான சூழலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சிக்கி இருந்த அமெரிக்கர்களை மீட்கும் பணியை  அவர்1985ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செய்தார். மேற்கு பெய்ரூட்டில் அதிகாலை 2 மணி அளவில் முகமது அலியும் அவருடன் வந்தவர்களும் சம்மர்லேண்ட் ஓட்டலுக்கு சென்று காத்துக் கொண்டிருந்தனர். அந்த இடம் போரினால் சிதைந்த இடமாக இருந்தது. அந்த ஓட்டல்களின் கண்ணாடி ஜன்னல்கள் தோட்டாக்களால் சேதம் அடைந்திருந்தது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முகமது அலியும் அவரது குழுவினரும் வெகுதொலைவு இரவு நேரத்திலேயே சென்றனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய பிரமுகர் இப்ராஹிம் அல்-அமீன் முகமது அலி தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். லெபனானில் உள்ள எல்லா அமெரிக்கர்களையும் அவர்களின் கூட்டாளி களையும் வெளியேற்றுவது, எங்கள் நிலத்தில் எந்தஒரு காலனித்துவ நிறுவனத்திற்கும் இடமில்லை என்று எடுத்த கொள்கை முடிவை அல்-அமீன் முகமது அலியிடம் விளக்கினார். லெபனானில் உள்ள பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என முகமதுஅலி வலியுறுத்தினார்.

அவரிடம், இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூறு பாலஸ்தீனர்களை நீங்கள் விடுவிக்க செய்தால் நாங்கள் இவர்களை விடுவிக்கிறோம் என்று அல்-அமீன் உறுதி அளித்தார். இஸ்ரேல் சிறையில் இருப்பவர்களின் பட்டியலையும் முகமது அலியிடம் அல்-அமீன் கொடுத்தார். இவை அனைத்தும் உலகில் மிகவும் ஆபத்தான நகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை  பூர்த்தி செய்திட பெய்ரூட்டில் தினமும் மதியம் வரை போர் நிறுத்தம் இருக்கும். அதன்பிறகு போர் துவங்கிவிடும். நடைபெற்றுக் கொண்டிருந்த போர்களுக்கிடையில் இந்த பேச்சுவார்த்தையில் முகமது அலி ஈடுபட்டார்.

முகமது அலி அமெரிக்கர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல… பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான நிலையில் இருந்தும் அடுத்த நகர்வுக்கு சென்றார்.  இஸ்ரேல் தெற்கு லெபனானை ஆக்கிரமித்து இருந்தது. ஏராளமான லெபனானியர்களையும் பாலஸ்தீனர்களையும் சிறை வைத்திருந்தது. ஜூன் 28, 1985ம் ஆண்டில் சிறை வைக்கப்பட்ட 700க்கும் மேற்பட்ட லெபனான் மற்றும் பாலஸ்தீனியர்களை விடுவிக்க செய்வதற்காக முகமது அலி இஸ்ரேல் சென்றார். அவர்களை விடுவிப்பதற்காக நாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கூறினார். ஒரு குத்துச் சண்டை சாம்பியன் என்ற முறையில்-தனிப்பட்ட முறையில் உங்களை வரவேற்கிறோம். ஆனால் குத்துச்சண்டை வீரருடன் கைதிகளை விடுவிப்பது பற்றிய பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று முகமது அலியிடம் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முகமது அலி இருந்தார் என்பதற் காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் புகழ் பெற்ற ஒருவர், அமெரிக்கா எதிர்க்கும் பாலஸ்தீனத்தை ஆதரித்தார். அமெரிக்கா ஆதரிக்கும்  இஸ்ரேலின் ஜியோனிசத்தை எதிர்த்தார். 1974 ம் ஆண்டு பெய்ரூட்டில் இருந்த பாலஸ்தீனிய அகதிகள் முகாமுக்கு அவர் விஜயம் செய்தபோது "என் பெயரிலும் அமெரிக்காவில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் பெயரிலும் பாலஸ்தீனியர்களின் தாயகத்தை விடுவிப்பதற்கும், ஜியோனிச படையெ டுப்பாளர்களை வெளியேற்றுவதற்கும் நடைபெறும் பாலஸ்தீன போராட் டத்தை நான் முழு மனதோடு ஆதரிக்கிறேன் என்று அறிவித்தார். முகமது அலிக்கு பல யூத நண்பர்கள், ஆதரவாளர்கள், கூட்டாளிகள் இருந்தனர். ஆனால் அது அவரை ஜியோனிசத்திற்கு எதிராக பேசுவதை தடுக்கவில்லை.

"முழு அதிகார அமைப்பு ஜியோனிஸ்ட் என்பது உங்களுக்கு தெரியும். அவர்கள் அமெரிக்காவை கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் உலகத்தை கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் உண்மையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக உள்ளார்கள். ஒரு முஸ்லிம் தவறு செய்யும் பொழுதெல்லாம் அவர்கள் இஸ்லாம் மதத்தின் மீது பழி சுமத்துகிறார்கள் என்று  ஜியோனிசம் பற்றி காத்திரமான முறையில் அலி, கருத்து தெரிவித்தார். முகமது அலியின் பாலஸ்தீன ஆதரவு பேச்சுக்களை அமெரிக்க ஊடகங்கள் மூடி மறைத்தன. முக்கியமான ஊடகங்கள், ஜியோனிசம் குறித்து அலி தவறாகம் பேசுகிறார் என்று கண்டனக் கணைகளை தொடுத்தனர். முகமது அலியின் போராட்ட வரலாறு, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இடையில் கூட்டுப் போராட்டம்,பரஸ்பர ஒற்றுமை ஆகியவற்றை இணைக்கும் பாலமாக இருந்தது.

 

வியாழன், செப்டம்பர் 21, 2023

தோல்வியடைந்த ராஜதந்திர பயணம்

 


தொடர்: 23


அ.பாக்கியம்

முகமது அலி, 1980 பிப்ரவரி 3 முதல் 10  வரை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் சிறப்பு தூதராக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் 10க்கும் அதிகமான வெள்ளை மாளிகை அதிகாரிகள் உடன் சென்றனர்.

1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோடைகால ஒலிம்பிக் போட்டி சோவியத் யூனியன் தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. இந்தப் போட்டியை அமெரிக்கா தலைமையில் 60 அமெரிக்க சார்பு நாடுகள் புறக்கணித்தன. 1979-ல் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் தலையீட்டை இந்த புறக்கணிப்புக்கு காரணமாக கூறினார்கள். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளை, மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணிப்பதில் பங்குபெற  வைக்க வேண்டும் என்பதற்காக முகமது அலியை சிறப்பு தூதராக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அனுப்பினார். ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அரசாங்க தலைவர்களுடன் முகமது அலியை பேச வைத்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் முகமது அலியின் பிரபலத்தை பயன்படுத்தியது மட்டுமல்ல… அவருக்கு கருப்பின மக்களிடமிருந்த செல்வாக்கையும், ஆப்பிரிக்க நாட்டில் அவருக்கு இருந்த வரவேற்பையும், இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்ற மத சாயத்தையும் தனது அரசியல் கொள்கைகளுக்காக பயன்படுத்தியது.

1974ம் ஆண்டு முகமது அலி ஜயர் நாட்டில் ஜார்ஜ் போர்மனை தோற்கடிப்பது வரை அமெரிக்காவில் இருந்த அரசும் வெள்ளை இன வெறியர்களும் முகமது அலிக்கு இடையூறாகவே இருந்தனர். இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதை வெள்ளை மாளிகை கண்டுகொள்ளவில்லை.1974 ஆம் ஆண்டு அவர் வெற்றி பெற்று வந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த குடியரசு கட்சியின் தலைவர் ஜெரால்டு ஃபோர்டு முகமது அலியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கவுரவித்தார். ஏகாதிபத்திய அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு முகமதுஅலி தேவை என்ற அரசியல் பின்னணியுடன் அமெரிக்க அரசு இதை அரங்கேற்றியது.

இந்நிலையில் 1978 ல் முகமது அலி, மாஸ்கோ சென்று வந்த பிறகு அவருடைய கருத்துக்கள், பொதுவெளியில் சோவியத் யூனியன் மதிப்பை உயர்த்துவதாக இருந்தது. இது அமெரிக்க தலைமைக்கு நெருக்கடிகளை உருவாக்கியது என்பது தனிக்கதை.

முகமதுஅலி, தனித்தன்மையும் ஆளுமையும் கொண்ட நபர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். அவற்றில் பெரும்பகுதி தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தி பயணித்துள்ளார். சில நேரங்களில் அமெரிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணிக்கச் செய்வதற்காக, அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக அவர் மேற்கொண்ட ஆப்பிரிக்கப் பயணம் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது.

முகமது அலி ஆப்பிரிக்காவில் முதலில் தான்சானியா,  பிறகு நைஜீரியா, கென்யா, லைப்ரியா, செனகல் ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டார். அந்த நாடுகளில் இருந்த  கடுமையான எதிர்ப்பாலும் தனது பயணம் வெற்றி பெறாது என்று உணர்ந்ததாலும் அத்துடன் திரும்பி விட்டார்.

முகமது அலி முதலில் சென்ற தான்சானியா  நாட்டிற்கு. அந்த நாட்டின் ஜனாதிபதி ஆப்பிரிக்க மக்களின் புகழ் பெற்ற தலைவரன ஜூலியஸ் நைரேரே. அவர், முகமது அலியை சந்திக்க மறுத்து விட்டார். நைஜீரியாவிலும் முகமது அலி எதிர்ப்பை சந்தித்தார். இந்த பயணத்தினால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதை முகமது அலியே உணர்ந்து கொண்டார். பாக்ஸிங்கை விட ராஜதந்திர நடவடிக்கை மிகவும் கஷ்டமானது என்பதையும் அவர் புரிந்து கொண்டார். ஆப்பிரிக்க நாட்டின் தலைவர்களும், பத்திரிக்கை யாளர்களும், பொதுமக்களும் அவரிடம் கேட்ட கேள்விகள், அவரது பயணத்தையே கேள்விக்குள்ளாக்கியது. 

அமெரிக்காவுக்கு ஆதரவாக முகமது அலி பயணம் செய்த நாடுகளில் "முகமது அலி உங்களை வரவேற்கிறோம்; தயவுசெய்து திரும்பி போய் விடுங்கள்" என்ற கோஷம் எல்லா இடங்களிலும் காணப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பல கேள்விகளுக்கு முகமது அலி பதில் சொல்ல முடியாமல் திணறினார். ‘‘குத்துச்சண்டை விளையாட்டு ஓரளவு என் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த ராஜதந்திர பயணம் என்னால் கட்டுப்படுத்த முடியாத விளையாட்டாக உள்ளது’’ என்று முகமது அலியே கூறினார்.   அமெரிக்காவின் மாஸ்கோ ஒலிம்பிக் புறக்கணிப்புக்கு கருப்பின ஆப்பிரிக்க மக்களிடையே ஆதரவு இல்லை என்று முகமது அலி உணர்ந்து கொண்டார்.

மேலும் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இடங்களில் எல்லாம் "மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணிக்க சொல்லும் அமெரிக்கா,1976 கனடாவின்  மாண்ட்ரீலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை 28 ஆப்பிரிக்க நாடுகள் - அனேகமாக ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் புறக்கணித்த பொழுது அமெரிக்கா ஏன் புறக்கணிப்பிற்கு ஆதரவு தரவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. முகமது அலியால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.

1976இல் தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சி நடைபெற்றது. நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தார். கருப்பின மக்கள் கொடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம், தென் ஆப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசை ஆதரித்தது. தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசை உலகம் முழுவதும் பல நாடுகள் எதிர்த்தன.  குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் தென்ஆப்பிரிக்காவை புறக்கணித்தன.

இதன் ஒரு பகுதியாக 1976 ஆம் ஆண்டு கனடா ஒலிம்பிக் போட்டியை ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று தான்சானியா நாட்டின் தலைமையில் அணி திரண்டனர். காரணம் இந்த ஒலிம்பிக் போட்டியில் தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுடன் விளையாட்டு தொடர்புகளை வைத்திருந்த நியூசிலாந்து அணி பங்கேற்பதை ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்தன. 28 ஆப்பிரிக்க நாடுகள் பங்கு பெறவில்லை. இந்த புறக்கணிப்பால் டிக்கெட் கட்டணமாக 10 லட்சம் டாலரை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. குறிப்பாக தடகளப் போட்டிகள் பாதிக்கப்பட்டன. தடகளத்தில் கென்யா, தான்சானியா நாடுகள் அதிகமான பதக்கத்தை பெறக்கூடிய நாடுகள். இந்தப் புறக்கணிப்பை அமெரிக்க ஆதரிக்காததால், கருப்பின மக்களுக்கு எதிரான - தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவானது அமெரிக்கா என்ற வலுவான கருத்து ஆப்பிரிக்க மக்களிடம் ஏற்பட்டு இருந்தது. அதன் எதிரொலி முகமது அலியின் பயணத்தின் போது வெளிப்பட்டது.

ஆப்பிரிக்க பயணத்தின்போது கேள்விகளால் துளைக்கப்பட்ட முகமது அலி, ஒரு கட்டத்தில், நிலைமைகளை புரிந்து கொண்டு சுயமான முடிவுக்கு வந்தார். ‘‘தென் ஆப்பிரிக்கா மீதான கருப்பின ஆப்பிரிக்காவின் உணர்வுகளை அமெரிக்க அரசாங்கம் உணரவில்லை என்று நான் நினைக்கிறேன்’’ என பத்திரிக்கையாளரிடம் கூறினார். ‘‘1976 இல் அமெரிக்கா எங்களோடு (ஆப்பிரிக்க நாடுகளோடு) ஒத்துழைக்காத போது, தற்போது நாங்கள் ஏன் அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க வேண்டும்’’ என்ற அவர்களின் கேள்வி நியாயமானதுதான் என்று அலி கூறினார். தென் ஆப்பிரிக்கா விவகாரத்தை இதர ஆப்பிரிக்க நாடுகள் எப்படி பார்க்கின்றன என்று எனக்குத் தெரியாமல் போனது. அது என் பயணத்தை பாதிக்கும் என்பதை நான் கருத்தில் கொள்ளவில்லை என்றும் முகமது அலி கூறினார்.

இஸ்லாமிய ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் கைப்பற்றியதில் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளான நான் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் ஜிம்மி கார்ட்டரின் பிரதிநிதியாக ஆப்பிரிக்காவிற்கு வந்தேன். ஆனால் நான் அமெரிக்காவின் கருத்துக்களை என் மக்கள் மீது திணிக்கும் கிளிப்பிள்ளை போல் இங்கு இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். தான்சானியாவில் நிருபர்களை சந்தித்த பொழுது" ஒருவேளை நான் தவறான ஒன்றை செய்ய பயன்படுத்தபட்டு இருக்கலாம். நீங்கள் என்னை வித்தியாசமாக பார்க்க வைக்கிறீர்கள். நான் சொல்வது தவறு என்று எனக்குத் தெரிந்தால் நான் அமெரிக்காவுக்கு சென்றுவிடுகிறேன். முழு பயணத்தையும் ரத்து செய்கிறேன் என்று கூறினார். முகமது அலி அமெரிக்காவுக்கு திரும்பி ஜிம்மி கார்ட்டரிடம் நடந்தவைகளை தெரிவித்து அந்த விவகாரத்தை அத்துடன் முடித்துக் கொண்டார்.

முகமது அலி அமெரிக்க அரசுக்கு ஆதரவான தனது ஆப்பிரிக்க பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை சந்தித்ததற்கு காரணங்கள் இருக்கின்றன. தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசை சோவியத் யூனியன் எதிர்த்ததுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற்ற பல மக்கள் எழுச்சிகளையும், புரட்சிகரமான நடவடிக்கைகளையும், விடுதலை போராட்டங்களையும் ஆதரித்தது. சோவியத் யூனியனின் இது போன்ற நடவடிக்கைகள் ஆப்பிரிக்க மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.  இதை பயணத்திற்கு முன்பு முகமது அலி அறிந்திருக்கவில்லை. அதே நேரத்தில் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் சோவியத் நாட்டின் கூட்டாளிகள் அல்ல. ஆனால், அமெரிக்காவின் நோக்கங்கள், நடவடிக்கைகள் ஆப்பிரிக்க நலன்களுக்கு எதிராக இருந்தது என்பதை அந்த நாடுகளின் மக்கள் உணர்ந்து இருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி, ஒரு அரசியல் செயல்பாட்டாளராக தன்னை களம் இறக்கியது தனது மதிப்பை குறைக்கும் என்பதை உணர அலி தவறிவிட்டார். ஜயர்  நாட்டின் மொபுடு, பிலிப்பைன்ஸ் மார்கோஸ் போன்ற சர்வாதிகாரிகள் குத்துச்சண்டைப் போட்டிக்கு அழைத்த பொழுது அதில் முகமது அலி கலந்து கொண்டது பற்றி ஏற்கனவே அவர் மீது விமர்சனம் இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி அரசு இருந்தவரை அந்த  நாட்டிற்கு அவர் செல்லவில்லை. தென் ஆப்பிரிக்கா வெள்ளை நிறவெறி ஆட்சியை வெளியேற்றிய பிறகு, 27 ஆண்டுகள் சிறைப்பட்ட நெல்சன் மண்டேலா விடுதலையான பிறகு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவிற்கு சென்று  மண்டேலாவை முகமது அலி சந்தித்தார்.

அந்தப் பயணத்தைப் பற்றி அலி குறிப்பிடும் பொழுது,  தீயில் எரிந்த  நாட்டிற்கு நான் வருவது ஒரு அமைதிக்கான பணி என்று தெரிவித்தார். ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளரான கிரீஸ் ஹானி தனது வீட்டிற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டிருந்ததால் தென் ஆப்பிரிக்கா கொந்தளித்துக் கொண்டிருந்தது. உள்நாட்டு போர் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அந்தப் பதட்டமான சூழலில் சோவெட்டோவில் நடைபெற்ற கிரீஸ் ஹானியின் இறுதி நிகழ்வில் முகமது அலி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். வெளிப்படையான ஆபத்துக்கள் இருந்த போதும் முகமது அலி அனைத்திற்கும் துணிந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பிய இடத்தில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முகமது அலி கருப்பின தேசியவாத கருத்துக்களில் மிகத் தீவிரமான நிலையிலிருந்தும், கருப்பின மேலாதிக்கம் என்ற நிலையிருந்தும், இனசமத்துவம் என்ற நிலைபாட்டிற்கு மாறிஇருந்தார், அதே நேரத்தில் கருப்பின சுயநிர்ணயத்தை நோக்கிய கருத்துக்களிலும் செயல்பாட்டிலும், காலனிய எதிர்ப்பு நிலையிலும் தொடர்ந்து களமாடி வந்தார். அவரது தோல்வியுற்ற மாஸ்கோ ஒலிம்பிக் எதிர்ப்பு பிரச்சாரம் அவர் மேற்கொண்ட கடைசி ராஜதந்திர பணி அல்ல. 90 ஆம் ஆண்டு மேலும் ஒரு சில பணிகளை அவர் மேற்கொண்டார்.

அ.பாக்கியம்

 


ஞாயிறு, செப்டம்பர் 17, 2023

சீன சரிவு கோட்பாடு: சுனாமி வேக பொய் பிரச்சாரம்

 

உலக அரங்கில் சீனா-8



அ.பாக்கியம்

"சீனப் பொருளாதாரம் சிறிய குளம் போன்றது அல்ல. அது பெருங்கடல் போன்றது. கடல் அமைதியான நாட்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் பெரிய காற்றும் புயல்களை மட்டுமே கடல் சந்திக்கும். எண்ணற்ற காற்றும் பெரும் புயல்களும் சந்திக்கிற அனுபவம் இருப்பதால் மட்டுமே கடல் இருக்கிறது. கடல் போன்றது தான் சீனாவும்" - ஜி ஜின்பிங்.

சீனாவின் பொருளாதாரத்தைப் பற்றியும் அதன் கடந்த காலத்தில் சீனா சந்தித்த நெருக்கடியின் அனுபவங்கலிருந்துதான் சீனா இன்றைக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது. சீனா வேகமான வளர்ச்சிகளையும் நெருக்கடிகளையும் சந்திக்கவில்லை என்றால் சீனாவாக இருக்க முடியாது என்பதை அழுத்தமாக சீன ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

உலகின் பொருளாதாரம் குறித்து அமெரிக்கா என்றைக்குமே உண்மைகளை ஏற்றுக் கொள்வது இல்லை. காரணம் ஒரு முதலாளித்துவ நாட்டைவிட சோசலிச நாட்டின் பொருளாதார மேன்மையை ஏற்றுக் கொள்வதாக அது அமைந்து விடும் என்பதால் அமெரிக்கா உண்மையை புறக்கணிக்கும். அமெரிக்க அரசியல் என்பது உலக யதார்த்தத்தில் ஏற்பட்டிருக்க கூடிய மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளாமல் மலைக்கும் மடுவுக்கும்மான இடைவெளியுடன் செயல்படுகிறது. தற்கு சீனா பற்றிய அதன் பொய் பிரச்சாரங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். சீனாவின் வளர்ச்சி பற்றிய உண்மைகளை மறைத்து பட்டவர்த்தமான பொய் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சீனாவின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருகிறது என்ற பொய் பிம்பத்தை அமெரிக்கா சுனாமி வேகத்தில் கட்டமைக்கிறது.

பெரியபொய் என்ற வார்த்தையை பொய்களின் பிதாமகன் பாசிச கோயபல்ஸ் பயன்படுத்தவில்லை. அதற்கு மாறாக ஒரு பொய்யை அரசு இயந்திரங்கள் மூலமாக, ஊடகங்கள் வாயிலாக திரும்பத் திரும்பக் கூறினால் அதை ஏராளமான மக்கள் உண்மை என்று நம்பி விடுவார்கள். அது மட்டுமல்ல மீண்டும் மீண்டும் ஒரு பொய்யை பிரச்சாரம் செய்பவரே அந்தப் பொய்யை உண்மை என்று நம்பி விடுவார். கோயபல்சை மிஞ்சிய விதமாக அமெரிக்கா, பெரிய பொய்யை உலகம் முழுவதும் பரப்புகிறது. சீன பொருளாதார நிலைமைகளை காண்பதற்கு முன்பாக அமெரிக்காவின் பொய் பிரச்சாரத்தின் சில கருத்துக்களை பார்க்கலாம்.

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசுகிற பொழுது, சீனாவின் வளர்ச்சி இரண்டு சதவீதம் என்று கூறினார். அடுத்ததாக, சீனாவில் உழைக்கும் வயதினரைவிட ஓய்வு பெறும் வயதினரின் எண்ணிக்கை அதிகமா உள்ளது என்று தெரிவித்தார். இவை இரண்டும் உண்மைக்கு மாறானது. மேலும் சீனப் பொருளாதாரம் ஒரு டிக்கிங் டைம் பாம் (Ticiking Time Bomb) அதாவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வெடிகுண்டு என்று பயமுறுத்தினார். மேற்கத்திய ஊடகங்களும், அமெரிக்க அதிகாரிகளும், பொருளாதார அறிஞர்களும், சீன சரிவு கோட்பாடு என்ற ஒரு தலைப்பை உருவாக்கி ஊதி பெரிதாக்குகின்றனர். சீனா ஏன் இவ்வளவு நெருக்கடியில் இருக்கிறது, நம்பிக்கையின் நெருக்கடி சீனாவின் பொருளாதாரத்தை வாட்டி வதைக்கிறது, சரிவின் விளிம்பில் சீனா, சீனாவின் சரிவை அமெரிக்கா எவ்வாறு எதிர்கொள்வது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ஆரம்பித்து மேற்கத்திய ஊடகங்கள் அனைத்தும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். அந்த செய்திகளை இந்தியாவில் இருக்கக்கூடிய ஊடகங்களும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறது. பிரபலமான முதலாளித்துவ பொருளாதாரவாதி பால் க்குருக்மேன் ஜப்பானைமாதிரி சீனா தேக்க நிலையை அடையாது அழிந்துவிடும் என்று அவரது ஆசையை வெளியிட்டார்.இன்றைய உலக பொருளாதாரத்தின் ண்மையான போக்குகள் என்ன? அமெரிக்கா ஏன் ஒரு திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை அதி வேகமாக தொடங்கியிருக்கிறது?

சீன வளர்ச்சி ஒரு வரலாற்று சாதனை.

கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் மனதைக் கவரும் வளர்ச்சி உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகில் உள்ள அனைத்து மெகா தொழிற்சாலைகளும் சீனாவில் தங்களது ஆலைகளை நிறுவி உள்ளனர். 1990 ஆம் ஆண்டு உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் சீனாவின் பங்கு 3% ஆகும். 2018 ஆம் ஆண்டு இது 25% உயர்ந்தது.உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 129 நிறுவனங்கள் சீனாவை தலைமையிடமாகக் கொண்டது. 2017ஆம் ஆண்டு இது 109 ஆக இருந்தது. 1978 ஆம் ஆண்டுக்கு முன்பு சீனா ஆண்டுக்கு 6% வளர்ச்சியை ஏற்படுத்தியது. 1978ஆம் ஆண்டுக்குப் பிறகு வருடத்திற்கு 9% அதிகமான சராசரியான வளர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளில் வளர்ச்சியின் உச்சமாக 13% வரை வளர்ச்சியை கண்டது. கடந்த 15 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 4 மடங்காக அதிகரித்துள்ளது . கடந்த 20 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை விட இரண்டரை மடங்கு வேகமாகவும் தனிநபர் ஜிடிபி வளர்ச்சி மூன்று மடங்கு வேகமாகவும் வளர்ந்தது என்பதை மறுக்க முடியாது. சீனா இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம்.கடந்த 30 ஆண்டுகளில் உலகில் அமெரிக்கா உட்பட வேறு எந்த நாடும் வளர்ச்சி அடையாத வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி உள்ளது.

 2019 பெரும் தொற்று காலத்தில் சீனா பொது முடக்கத்தை முழுமையாகவும், மற்ற நாடுகளை விட நீண்டநாட்கள் அமல்படுத்தியது. இதனால் அங்கு மரணங்கள் குறைவாக ஏற்பட்டது. மற்ற நாடுகளை விட பொருளாதார முடக்கம் அதிக நாட்கள் இருந்தது சீனாவில் தான். என்றாலும் தொற்றுக்குப் பிறகு பொருளாதார மீட்சியை முயற்சியை மற்ற நாடுகளை விட சீனா துரிதமாக ஏற்படுத்தியது. 2018 ஆம் ஆண்டு சீனாவில் உற்பத்தி  91.9 ட்ரில்லியன் யுவான்.(12.6 டிரில்லியன் டாலர்). 2022 ஆம் ஆண்டு சீனாவில் உற்பத்தி 121 ட்ரில்லியன் யுவான் ஆகும். 2023 ஆம் ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்கு 34.9% ஆக இருக்கும்.சீனா பொருளாதார சரிவின் உச்சியில் உள்ளது என்று எந்த நியாயமான சிந்தனையாரும் கூற முடியாது. பகுத்தறிவு சிந்தனையற்ற முதலாளித்து சுரண்டல் முறைகளை ஆதரிக்க கூடிய பொருளாதார அறிஞர்கள் மட்டும்தான் இவ்வாறு கூற முடியும்.

பெரிய பொய்யின் பிரதிநிதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்கு வருவோம். அவர் சீனா இந்த ஆண்டு இரண்டு சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று பொய்யான தகவலையே தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல் பாதியில் சீனா 5.5 வளர்ச்சி அடைந்துள்ளது என்ற உண்மையை மறைத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் இந்த ஆண்டு சீனா 5% வளர்ச்சி அடையும் என்று மதிப்பீடு செய்துள்ளது. சீன அரசு 5.5 சதவீதம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று இலக்கை தீர்மானித்து உள்ளது. அமெரிக்காவில்தான் இதுவரை உலகில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மூன்று பெரிய வங்கிகள் திவாலாகி டிக்கிங் டைம் பாம் ஆக இருந்ததை அமெரிக்க ஜனாதிபதி மறந்துவிட்டார்.

 தொற்று நோய் காலங்களிலும் அதற்குப் பிறகும் மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும் பொழுது சீனாவின் வளர்ச்சி பிரம்மாண்டமானது. 2023 இரண்டாவது காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 19.2% வளர்ச்சி அடைந்தது. ஜி 7 நாடுகளை சேர்ந்த, அமெரிக்காவின் வளர்ச்சி 7.5% கனடாவின் வளர்ச்சி 4.77% இத்தாலியின் வளர்ச்சியை 1.5 % பிரான்சின் வளர்ச்சி 1.3 % ஜப்பானின் வளர்ச்சி 0.8% ஜெர்மனி வளர்ச்சி 0.5% இங்கிலாந்தின் வளர்ச்சி 0.3 % சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவை விட இரண்டு மடங்கு வேகமாகவும் கனடாவை விட நான்கு மடங்கும் இத்தாலியை விட 13 மடங்கும் பிரான்சை விட 15 மடங்கு ஜப்பானை விட 24 மடங்கு ஜெர்மனியைவிட 38 மடங்கு இங்கிலாந்தைவிட 64 மடங்கு வேகமாக இக்காலத்தில் வளர்ந்துள்ளது.

இக்காலத்தில் சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சியால்தான் மொத்த பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது என்ற ஒரு கருத்தையும் முன் வைக்கிறார்கள். இது தவறானது என்பதை சீனாவின் பொருளாதார வளர்ச்சி வெளிப்படுத்துகிறது. 2019 ஆம் ஆண்டு சீனாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி அல்லது அதிகரிப்பு 0.1% ஆகும். உள்நாட்டில் மக்கள் தொகை வளர்ச்சியுடன் வெளிநாடுகளில் இருந்து குடியேறுகிறவர்களையும் இணைத்து பார்த்தால் கனடாவின் மக்கள் தொகை 2019 ஆம் ஆண்டு 1.2% அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் அதிகரிப்பு 0.5% இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு 1.2% என உள்ளது. எப்படி பார்த்தாலும் சீனாவின் மக்கள் தொகை 0.1% என்ற வகையில் மிக மிக குறைவாகவும் அதே நேரத்தில் மேற்கண்ட நாடுகளை விட பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தது.

மக்கள் தொகை மாற்றங்களினால் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) வளர்ச்சி அடையவில்லை. சீனா பொருளாதார வளர்ச்சிக்கு அதாவது ஜிடிபி வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் உற்பத்தி திறன்வளர்ச்சியும், வாழ்க்கைதர மேம்பாடும்தான்  இந்த வளர்ச்சிக்கு காரணமாகும். இந்த செயல் திறனை அளவிடுவதற்கு சீனாவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4% அதிகரித்து உள்ளது. இதுவே இந்தியாவில் 2.5%, அமெரிக்காவில் 1.3% என்ற அளவில் தான் உள்ளது. இக்காலத்தில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி என்பது சீனாவின் ஜிடிபி வளர்ச்சியில் 56 சதவீதத்தைதான் எட்டிப் பிடிக்க முடிந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி சீனாவில் வேலைசெய்யும் வயதினரைவிட ஓய்வு பெறும் வயதினர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று மாற்றங்களை கணக்கில் எடுக்காமல் மறைத்து பேசி உள்ளார்.

சீனாவில் 2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி சீன மக்கள் தொகையில் 0-14 வயதுக்கு உட்பட்டவர்கள் 17.5%, 15-64 வயதுக்கு உட்பட்டவர்கள் 68.3%, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 14.2% சதவீதமாக உள்ளது. சீனாவில் உழைக்கும் திறன் உள்ளவர்கள் 68.3 சதவீதம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சீனா கடந்த காலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாட்டை திட்டமிட்ட முறையில் அமுலாக்கியதால் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்தது. சீனாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்ததிலிருந்து மக்கள் தொகை வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு 14 வயதிற்கு உட்பட்டவர்கள் 16.9 சதத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டில் 17.5% உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் வேலைசெய்யும் வயதினரின் சதவீதம் குறைந்து வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டு குறைந்து வரும் விகிதம் 0.6% இருந்தது. 2020-21ஆம் ஆண்டு 0.3% என்ற அளவிலும், 2022 ஆம் ஆண்டு 0.1% என்று குறைந்து வருகிறது

சீனாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 12.6% இருந்தது. 2022 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 14.9% என்று உயர்ந்துள்ளது. அதாவது 2.3% உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வுக்கு சராசரிவாழ்நாள் உயர்வு என்பது முக்கிய காரணம். சீனாவின் 2022- ல் சராசரி வாழ்நாள் 78.08.% ஆகும்.2019 ஆம் ஆண்டு முதல் சீனாவின் சராசரி வாழ்நாள் உயர்வு 0.22% ஏற்பட்டுள்ளது. சீனாவை அமெரிக்காவுடன் ஒப்பிடுவது பொருளாதார அளவீடுகளில் பொருத்தமற்றதுதான். சீனாவை வளரும் நாடுகளுடன் ஒப்பிட வேண்டும். ஆனாலும் பல விஷயங்களில் அமெரிக்காவைவிட முன்னேறி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்வதற்காகத்தான் இந்த ஒப்பீடுகள். அமெரிக்காவின் சராசரி வாழ்நாள் 2022ஆம் ஆண்டு தரவுகளின் படி 79.05% ஆகும். 2017-18 அமெரிக்காவின் சராசரி வாழ்நாள் 0.030% குறைந்தது. அதாவது 78.84% லிருந்து 78.81% என குறைந்து 2022-ல் 0.080% சிறிதளவு அதிகரித்துள்ளது.

1990 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் சராசரி வாழ்நாள் 75.21% சீனாவின் சராசரி வாழ்நாள் 68 % இந்தியாவின் சராசரி வாழ்நாள் 58. 65% என்ற அளவில் இருந்தது. சீனா 10%

வளர்ச்சியும், அமெரிக்கா 4% வளர்ச்சியும் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்த சீனா வளர்ந்த நாடான அமெரிக்காவின் சராசரி வாழ்நாளுடன் சமமான அளவிற்கு வளர்ந்துள்ளது என்றால் சீனாவின் வளர்ச்சி, அதன் திறன்வளர்ச்சியிலும், வாழ்க்கைதர மேம்பாட்டிலும் உள்ள மாற்றங்களை வெளிப்படுத்துகிறது.

சரிவுக்கோட்பாட்டின் அரசியல்

அமெரிக்கா ஏன் இந்த பொய் பிரச்சாரங்களை செய்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய தேர்தலில் அமெரிக்க மக்களை திசை திருப்புவதற்காக ஜோ பைடன் மற்றும் ஆளும் வர்க்கம்  இந்த சீன சரிவு என்ற கட்டுக்கதைகளை கொண்டு வருகிறார்கள். அமெரிக்கா வங்கிகள் திவால் ஆவது, கடன் மலையாக மாறுவது,கடுமையான டாலர் நெருக்கடி போன்ற  பொருளாதார நெருக்கடியில் இதிலிருந்து தப்பிக்க  சீன பூச்சாண்டிதான் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

இதேபோன்று, மேற்கத்திய நாடுகள் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்க சார்பு நிலை எடுத்தது பொருளாதார வளர்ச்சியில் பெரிய வேகம் பெற முடியவில்லை. அவர்களும் சீன பொருளாதார வளர்ச்சி ஒரு முன்மாதிரியாக அமைந்து விட்டால் தங்கள் நாட்டு மக்களிடம் இருக்கும் கருத்துக்கள் மாறிவிடும் என்று அஞ்சுகின்றனர்.

இந்தப் பிரச்சாரங்கள் மூலமாக சீனாவிற்கு செல்லுகின்ற அந்நிய முதலீடுகளை அச்சுறுத்தி தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

சீனாவின் வளர்ச்சி, அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தையும் ராணுவ மேலாதிக்கத்தையும் தகர்த்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியன், பிரிக்ஸ், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு போன்ற பல பொருளாதார அமைப்புகள் உருவாகி அமெரிக்காவினுடைய ஆதிக்கத்திலிருந்து பல நாடுகள் வெளியேறிக் கொண்டிருப்பது சீனாவின் வளர்ச்சியால் தான் என்பதை புரிந்து கொண்டு அதற்கு எதிரான தாக்குதலை துவக்குகிறார்கள்.

2022 ஆம் ஆண்டு கூடிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடும், சீன நாடாளுமன்றமும் சீனாவின் வளர்ச்சி இலக்கை தெளிவாக தீர்மானித்துள்ளது. 2035 ஆம் ஆண்டு சீனா நடுத்தர வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்கை அடைய வேண்டும். சீனாவின் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதுதான் அந்த இலக்கு. இவற்றை இந்தியாவின் தேர்தல்கால வாக்குறுதிகள் போல் நிர்ணயிக்கவில்லை.கடந்த கால வருடாந்திர வளர்ச்சியை கணக்கில் எடுத்து இந்த இலக்கை தீர்மானித்தனர். அதன் அடிப்படையில்  2035 ஆம் ஆண்டு 100 சதவீதம் இலக்கை அடைய முடியும் என்று சீன மக்களும், உலகமும் நம்புகிறது. அமெரிக்காவின் கடந்த கால வருடாந்திர வளர்ச்சியை கணக்கில் எடுத்தால் இரண்டு சதவீதமாக உள்ளது. இதன்படி 2035 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வளர்ச்சி 35% சதவீதமாக மட்டுமே இருக்கும். சீனாவின் இந்த இலக்கை நிறைவேற்ற அனுமதித்தால் அமெரிக்கா பின்தங்கும் என்ற காரணத்தினால் இதை தடுப்பதற்கான முயற்சிதான் சீன சரிவு கோட்பாடு பிரச்சாரம்.

உலகிலேயே அதிகமான உள்நாட்டு நுகர்வு உள்ள நாடு சீனாவாகும். இந்த நுகர்வை மேற்கத்திய முதலாளித்துவ பொருளாதார முறைக்கு மாற்றினால் சீனாவின் பொருளாதாரம் மந்தமடையும். மேற்கத்திய பொருளாதாரத்தைவிட வேகமாக வளராது. சீன வளர்ச்சியை மந்தப்படுத்தினால் சீனாவின் வாழ்க்கைதரம் குறையும். அதன் இலக்கையும் அடைய விடாமல் தடுக்க முடியும். சீனா மெதுவாக வளர வேண்டும் என்று அவர்களால் சொல்ல முடியாது. மேற்கத்திய வணிக முறைகளை திணிக்கவும் முடியாது. எனவேதான் இந்த சீனசரிவு கட்டுக்கதைகளை கொட்டிக் குவிக்கிறார்கள்

சீனாவில் பொருளாதார நெருக்கடி இல்லையா?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மந்தமான உலக பொருளாதார மீட்சி மற்றும் நிதி நெருக்கடிகள்  ஆகியவை ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை ஏற்படுத்துகிறது. இந்தப் பின்னணியில் சீனாவும் சில சவால்களை எதிர்கொள்வது உண்மை

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மந்தமான உலக பொருளாதார மீட்சி மற்றும் நிதி கொந்தளிப்பு ஆகியவை ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பொருளாதார சவால்களை ஏற்படுத்துகிறது. இந்தப் பின்னணியில் சீனாவும் சில சவால்களை எதிர்கொள்வது உண்மைஎந்த ஒரு வேகமான பொருளாதார வளர்ச்சியும் குறிப்பிட்ட கட்டத்தில் வேகம் குறைவதும் தேக்கம் ஏற்படுவதும் இயல்பானது. இவ்வாறு வரும் நெருக்கடியை சீனா எதிர்கொள்ள வேண்டும் என்பதை முன்கூட்டியே கணித்திருக்கிறார்கள். தொடர்ந்து இரட்டை இலக்கு வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை முடிவுசெய்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் வளர்ச்சி தொடர்பான புதிய விவாதங்களை நடைபெற்று வருகிறது. அந்த விவாதம் (De-growth -இது பற்றி தனியாக எழுதுகிறேன்)பொதுவாக பூமிப்பந்தை பாதுகாப்பதற்கான பசுமை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இந்தத் துறையிலும் சீன தலைமை கவனம் கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சி மற்றும் நாடாளுமன்ற கூட்டங்களில் மூன்று துறைகளை கணக்கில் எடுத்து அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்று நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். தேவை சுருங்குதல், விநியோகத்தில் சீர்குலைவு, பலவீனமான உணர்வுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதாகும். சீன பொருளாதார வளர்ச்சியில் உள்நாட்டு நுகர்வு முக்கிய பங்காற்றி வருகிறது. இவற்றில் ஏற்படக்கூடிய தேக்கத்தை போக்குவதற்கு  தேவைகளை அதிகரிப்பதற்கு இரட்டை சுழற்சி நுகர்வு முறை என்பதை அமலாக்கி வருகிறார்கள்.

சீனா ரியல் எஸ்டேட் பிரச்சினையில் நெருக்கடிகளை சந்தித்து வருவது உண்மை. சீனா மட்டுமல்ல உலகின் பலநாடுகள் சந்திக்றது, அமெரிக்க வங்கிகள் திவால் ஆனதில் ரியல் எஸ்டேட் நெருக்கடி பிரதான அம்சம். இன்றும் அவை நீடிக்கிறது. ஆனால் சினாவில் இதுவே வேறுவிதமான முறையில் உள்ளது.இவற்றை அவர்க்ள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை காணவேண்டும்.மிக வேகமான வளர்ச்சி பெற்று தேவையான அளவிற்கு இருப்பிடங்கள் அலுவலகங்கள் அமைத்த பிறகு அந்த வளர்ச்சியில் தொய்வு ஏற்படுகிறது. சிறுநகரங்களில் இருந்து மக்கள் பெரு நகரங்களில் குடியேறியதால் சிறு மற்றும் நடுத்தர நகரங்களில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு காலியாக உள்ளது. எவர் கிராண்ட் உட்பட பல நிறுவனங்கள் திவால் ஆகாமல் இருப்பதற்கு மூன்று சிகப்பு கோடுகள் என்ற திட்டத்தை அறிவித்து அமலாக்கி வருகிறது. இது பற்றி இதற்கு முந்தைய கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

சீனாவில் உள்நாட்டு உற்பத்தியில் ரியல் எஸ்டேட் வணிகம் அல்லது சொத்து சந்தை குறிப்பிட்ட அளவு பங்கினை செலுத்துகிறது. இந்த துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தனிப் பகுதியாக பரிசீலிக்க வேண்டும். ஆனாலும் இந்த தலைப்பின் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட சில விஷயங்களை வாசகர்களுக்காக முன் வைக்கிறேன்.

ரியல் எஸ்டேட் நெருக்கடி சீனாவில் உள்நாட்டு நுகர்விலும் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. சீன அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் சொத்து கொள்கைகள் தொடர்பான பல தளர்வுகளை அறிவித்தது. சீனாவில் சொத்துக்கள் வாங்குவது மற்றும் முதலீடு செய்வதற்காக அதிக வணிகம் நடைபெறக்கூடிய மாதம் செப்டம்பர் அக்டோபர் மாதமாகும். இது பாரம்பரியமாக நடந்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தை கோல்டன் செப்டம்பர் என்றும், அக்டோபர் மாதத்தை சில்வர் அக்டோபர் என்றும் அழைப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இம்மாதங்களில் வீடுவிற்பனை வீழ்ச்சி அடைந்தது. இந்த ஆண்டு அவற்றை சரி செய்வதற்காக ஜூலை மாதம் கொள்கை தளர்வுகளை அறிவித்தார்கள். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுவதாக பல ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு மூன்று சிகப்பு கோடுகள் என்று விதிகள் உருவாக்கப்பட்டது. வீடுகள் வாழ்வதற்கே ஊக வணிகத்திற்கு அல்ல என்பதுதான் இந்த கட்டுப்பாடுகளின் அடிப்படை அம்சம். இதனால் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நெருக்கடிகளை சந்தித்தது. அரசு அவற்றை ஒழுங்குபடுத்தக்கூடிய பணியை மேற்கொண்டது. தற்போது இந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி சந்தையை மேம்படுத்த முடிவெடுத்து உள்ளன.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலைகள் நிகர சொத்து மதிப்புக்கு கீழே குறைந்தாலும் அல்லது நிதி இழப்பில் இயங்கினாலும் அவற்றை மறு நிதி அளிப்பதற்கான விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளனர். அடமான பத்திரங்களை வைப்பதற்கான முறைகளை தளர்த்தியது மட்டுமல்ல இரண்டாவது வீடு வாங்குவதற் கானகட்டண விகிதத்தை குறைப்பதுடன், விரைவான அனுமதியும் கொடுக்கின்றனர். உள்ளூர் அரசாங்கங்கள் கட்டுப்பாடுகள தளர்த்துவதை துரிதப்படுத்தி உள்ளார்கள். சொத்து வாங்குவதை எளிதாக்கி உள்ளது. பல அரசு வங்கிகள் ஏற்கனவே உள்ள அடமான பத்திரங்கள் மற்றும வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இவை அனைத்தும் வீடு வாங்குபவர்களை அதிகப்படுத்தும். சீன அதிகாரிகள் சந்தையை நிலைப்படுத்துவதற்காக வர்த்தக பத்திர வரியை பாதியாக குறைத்துள்ளனர்

மக்கள் தொகை வளர்ச்சியின் குறைவு ஏற்பட்டு இருப்பது வீட்டு தேவையில் வீழ்ச்சியை குறிக்கிறது. சீர்திருத்தத்தின் ஆரம்ப ஆண்டுகளில் தனி நபர்களின் சராசரி குடியிருப்பு பரப்பு ஐந்து சதுர மீட்டராக இருந்தது. தற்போது 40 சதுர மீட்டராக உயர்ந்து விட்டது. அடிப்படை வீட்டு வசதி பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் கண்டிப்பாக ரியல் எஸ்டேட் வளர்ச்சி அதன் உச்சத்தில் இருந்து வீழ்ச்சி அடையும். பொதுவாக சொத்து சந்தை என்பது பண மதிப்பை பாதுகாக்கும் என்ற நிலைமையில் மாற்றம் உருவாகி உள்ளது. அதனால் தான் புதிய நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் சீன அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீனா சந்தித்துவரக்கூடிய மற்றொரு நெருக்கடி இளம் வயதினருக்கான வேலை யின்மை. வளர்ந்த சில குறிப்பிட்ட துறைகளில் வேலை வாய்ப்பைவிட அதிகமான இளைஞர்கள் வேலைக்கு வருவதால் நெருக்கடிகள் உருவாகி உள்ளது. மாற்று வேலைகளுக்கு இளைஞர்களை அமர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இதற்கு இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மாற்று வேலைகளை அதாவது பணிகளை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற பல நெருக்கடிகளை சந்தித்து விட்டோம். எனவே இதையும் நாங்கள் எதிர்கொள்ள முடியும் என்று எதிர் கொண்டு வருகிறார்.

சீனா புயலை எதிர் கொள்ளும் கடல் போன்றது

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக துணை இயக்குனர் கீதா கோபிநாத் அவர்கள் இந்த நெருக்கடிகள் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்

சீனா இதுவரை சந்தித்த நெருக்கடியை விட தற்போது சந்தித்து வரக்கூடிய ரியல் எஸ்டேட், உள்நாட்டு நுகர்வு சுருங்குதல், இளம் வயதினருக்கான வேலையின்மை போன்றவை சற்று அதிகமான நெருக்கடிதான். சீனா இது போன்ற நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்கான கடந்தகால அனுபவங்களை பெற்றிருக்கிறது. பணவியல் துறைகளிலும், நிதி கொள்கையிலும் நிறைய மாற்றங்களை செய்ய முடியும். அதற்கான பரிணாமம் இருக்கிறது, செய்து வருகிறார்கள். எது எப்படி இருந்தாலும் இவை ஒரே நாளில் செய்து விட முடியாது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்து இருக்கிறார். இதைவிட மேலாக, எது எவ்வாறு இருந்தாலும் சீனா கூர்மையான நெருக்கடிகளை சந்திக்கவும்,ஆழமான வீழ்ச்சி அடைவதற்குமான வாய்ப்பே இல்லை என்று ஐ.எம்.எப் உறுதியாக மதிப்பீடு செய்திருப்பத தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீதா கோபிநாத் அவர்களை பேட்டி கண்ட பத்திரிக்கையாளர் 13.09.23 பிசினஸ் டுடேவில்  கட்டுரை எழுதியுள்ளார். இதில் தலைப்பை மட்டும் கீதா கோபிநாத்தின்  கருத்தாக வைத்தவிட்டு மற்றவை அனைத்தும் சீன எதிர்ப்பாளர்கள் கூறிய கருத்துகளை அதிமாக  முன்வைத்து எழுதியுள் ளார். சீனா வீழ்ச்சி அடைந்தே தீரும் என்ற முறையில் கட்டுரையில் முடித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைபெற்ற அல்லது நடைபெற்று வரக்கூடிய பொருளாதார வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகள் சீனாவிலும் நடைபெறுகிறது.  அவற்றை பூதாகரமாக பிரச்சாரம் செய்வதற்கு காரணம் அமெரிக்காவின் புவி அரசியல் ஆதிக்கம் பலவீனம் அடைவதுதான்.

உலகம் முழுவதும் சீனாவின் வளர்ச்சி பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சர்வதேச நாணய நிதியகம் சீனா இவ்வளவு விரைவாக வளர்ச்சியடைந்தது எப்படி என்பதை ஆய்வுகளின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறார்கள். அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறை சி ஐ ஏ சீனா விஷயத்தில் நாம் ஏமாந்து விட்டோம். அவர்கள் இவ்வாறு வளர்ச்சி அடைந்து வருவதை கவனிக்காமல் இருந்தது பெரும் ஆபத்து என்ற அடிப்படையில் ரகசிய அறிக்கைகளையும் சுற்றுக்கு விட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஒற்றை உலக கொள்கை நெருக்கடிக்கு உருவாவதும் சீனா, ரஷ்யா. மற்றும் வளரும்  நாடுகளில் பன்முக உலக கொள்கை மக்களிடம் மேலோங்கி வருவதை தடுக்கும் நோக்கோடு சீன சரிவு கோட்பாடு அமெரிக்க மேற்கத்திய ஊடகங்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதை கண்டு கொள்ள வேண்டும்.

அ.பாக்கியம்


சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...