Pages

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

செங்கோட்டையில் வாலிபர் சங்கம்∶

 

டெல்லி கோட்டையில் இருப்பவர்கள் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள். தமிழகத்தின் தென்கோடி எல்லையில் உள்ள செங்கோட்டை   சுதந்திரப்போராட்ட  களம் அமைத்து குருதிசிந்தயவர்கள்.

             செந்நீர் சிந்திய இந்த செங்கோட்டையிலிருந்து  வாலிபர் சங்கத்தின் இணை சைக்கிள் பிரச்சார பயணக்குழு 23.4.22 தேதியில் துவங்கியது. பயணக் குழுவை துவக்கி வைப்பதற்காக நான் செங்கோட்டை சென்றிருந்தேன்.

        23ம் தேதி காலை வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணம் துவங்கியது. பிரச்சார பயணக்குழுவிற்கு தென்காசி மாவட்ட செயலாளர் தோழர் உச்சிமாகாளி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் மாடசாமி கலந்து கொண்டனர்.

பிரச்சார பயண குழுவை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் தோழர் முத்துப்பாண்டி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் கணபதி, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சத்தியா உட்பட பலரும் பேசினர்.உரிய வாகன ஏற்பாடுடன் பிரச்சாரப் பயணம் முன்னோக்கி சென்றது.

              வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா

வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா.

என்ற பாடல்வரிகளைப் போல் சைக்கிள் பயணமவீரர்கள் முன்னோக்கி சென்று கொண்டிருந்தாலும் என் எண்ணங்கள் செங்கோட்டையில் வாலிபர் சங்கம்  உருவாக்கப்பட்ட காலத்தை பின்னோக்கி அசை போட்டது.

               தோழர் நன்மாறன் அகத்தியலிங்கம் ஆகிய தோழர்களின் வழிகாட்டுதலில் நெல்லை மாவட்டத்தில் தோழர்கள் ஆர் கிருஷ்ணன், சிவசாமி போன்றவர்கள் அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். நானும் ரவீந்திரன் மாநில பொறுப்பிற்கு வந்தபொழுது வாலிபர் சங்கம் இல்லாத தாலுகாக்களில் அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மாநிலக் குழுவில் செயல்திட்டங்கள் உருவாக்கி அமுலாக்க ஆரம்பித்தோம்.

இதன் ஒரு பகுதியாக 27ஆண்டுகளுக்கு முன்பாக செங்கோட்டைபகுதியில் இருக்கிற தொடர்புகளைப் பயன்படுத்தி கிளைகளை உருவாக்குவதற்காக அப்போதைய மாவட்ட தலைவராக இருந்த தோழர் ஆர்.கருமலையான், மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் சேவியர் (தற்போது சூர்யா சேவியர்) நானும் சேர்ந்து செங்கோட்டையில் முகாமிட்டோம். தோழர் சேவியரும் நானும் சில நாட்கள் தங்கி அங்கிருந்ததொடர்புகளை கிளைகளாக மாற்றி செங்கோட்டை கமிட்டியை அமைத்தோம்.

       தோழர் நாராயணன்(சைக்கிள் பயண துவக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்) அதுவரை வாலிபர் சங்கத்தை தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். கிளைகளை அமைத்து முதல் கமிட்டியை உருவாக்கிய பொழுது அதன் தலைவராக ராஜகோபால் செயலாளராக தோழர் சங்கரபாண்டி பொருளாளராக தோழர் ஆனந்தன் மூன்று பேரும் துடிப்புடன் செயல்பட்டு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கினார்கள்.

இவர்கள் தோழர்.காளிமுத்து என்ற தோழரின் செயல்பாட்டால் ஆகர்ஷிக்கப்பட்டவர்கள். தோழர் காளிமுத்து கட்சியின் பொறுப்பில் இருந்து மக்கள் பிரச்சனைகள் தலையிடக்கூடிய முறைகள்மற்றும் செருப்பு அணியாமல் அனைத்து கிராமங்களுக்கும் சென்று இயக்க வேலைகள் செய்தவர். அவரது எளிமையான நடவடிக்கையும் கடுமையான உழைப்பும் ஈர்ப்புத்தன்மையுடையது.

முதலில் உருவாக்கப்பட்ட கமிட்டியும் கிளைகளும் இணைந்து வாஞ்சிநாதனின நினைவுநாளை கொண்டாடுவதற்காகவும், இளைஞர்கள் மத்தியில் சுதந்திர போராட்ட வரலாறு களை   கற்பிக்கவும்  வாஞ்சிநாதனின் கல்வெட்டை தேடினால் அது ஒரு கால்வாய் கரையோரம் கிடைத்தது.தோழர் சேவியரும் செங்கோட்டை நிர்வாகிகளும் இதற்கான முயற்சி எடுத்து நகரத்தின் மத்தியில் அந்தக் கல்வெட்டை கொண்டு வந்து சேர்த்தார்கள். அதற்காக ஒரு விழா எடுத்து கல்வெட்டை மீண்டும் நிலைநிறுத்தி னார்கள்

             செங்கோட்டை மக்களுக்காக மருத்துவமனை ஒன்று இருந்தது அது மருத்துவமனை என்பதைவிட மரண மனையாகவே இருந்தது.வாலிபர் சங்கம் பிரச்சாரம் செய்து அதை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வாலிபர்களை திரட்டி நகரம் முழுவதும் "பாடைகட்டி ஊர்வலம்" நடத்தப்பட்டது. பாடையில் ஒருவரை பிணமாக படுக்க வைப்பது எல்லாம் தவறாக எண்ணக் கூடிய காலம் அது.

                 அந்தக் காலத்திலும் அவ்வாறு செய்து நகரம் முழுவதும் வலம் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அதில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்து மருத்துவமனை மாற்றத்திற்கு உள்ளானது.அதுவரை வாலிபர் சங்கம் பற்றி அறியாதவர்கள் எல்லாம் அதன் பிறகு நமது நிர்வாகிகள் தோழர்களை  "டைஃபி தோழர்" என்ற பொதுப் பெயரால்  அழைக்கத் துவங்கினர்.இதன் மூலம் கிடைத்த தொடர்புகளை பயன்படுத்தி பல கிளைகள் உருவாக்கப்பட்டது.

            செங்கோட்டை வாலிபர் சங்கத்தின் அடுத்த பணி "குற்றாலம் மலையை பாதுகாப்பது" என்று ஒரு பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. குற்றாலத்தில் ஏராளமான ஆலமர வகைகள் உள்ளது. பேரால்,மாவால், வெள்ளால், குற்றால் என்ற பெயரில் பலவகையான மரங்கள்.

       இவற்றில் குற்றால் மரங்கள் நிறைந்து இருப்பதால் தான் குற்றாலம் என்றும் பெயர் பெற்றது. குற்றால் மரத்திற்கு விஷ வண்டுகள் கூட நெருங்க முடியாத அளவிற்கு மருத்துவ குணம் படைத்தது.இந்த மரங்களை சமூக விரோதிகள் ஆட்சியாளர்களின் உதவியுடன் களவாடிய பொழுது அவற்றை தடுத்து நடத்திய போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

       குற்றாலத்தில் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் பணம் வசூலித்தார்கள். இருசக்கர வாகனத்திலிருந்து அனைத்துக்கும் பணம் வசூலிப்பதை கண்டித்து "இலவச குளியல்" என்று நூற்றுக்கணக்கான வாலிபர்களை அணிதிரட்டி குளிக்கச் சென்று அந்த கோரிக்கையில் வெற்றி பெற்றார்கள். அதன்பிறகு வாகனத்தை நிறுத்தவும் கட்டணத்தை குறைக்கும் ஏற்பாடுகளும் முறைப்படுத்த ஏற்பாடும் நடைபெற்றது

             எந்த ஒரு இயக்கத்திற்கும் கிளை அமைப்பு இருக்க வேண்டும். அவைசெயல்படக்கூடியதாக,மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும். இதைத்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சென-யுன் குறிப்பிடுகின்ற பொழுது "கூடு கட்டினால் எந்த பயனும் இல்லை.உள்ளடக்கம் அவசியமானது என்பதை வலியுறுத்துவார். கிளைகள் இல்லாமல் நபர்களின் அறிமுகத்தால், சில முக்கியஸ்தர்கள் தொடர்பால் அமைப்புகள்  நடத்துவது சாத்தியமற்றது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது. கிளை அமைப்புகளை உருவாக்குவது மாநில தலைமையின் நேரடி தலையீடு இல்லாமல் மேளாளர் தன்மையால் நடக்காது.

இக்காலத்தில் செங்கோட்டை கமிட்டி செயல்பாடுகளுக்கு அருகிலிருந்த தென்காசி இடைக்கமிட்டியின் செயல்பாடும் உறுதுனையாக இருந்தது. அதனுடைய தலைவராக பட்டாபிராமன் செயலாளராக கணபதி பொருளாளராக பால்ராஜ் போன்றவர்கள் களமாடினார்கள்.

           செங்கோட்டையில் வாஞ்சிநாதன் செயல்கள் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் பாரதமாதா அபிநவபாரத் அமைப்பின் கூட்டம் நடந்த இட்ங்கள் உட்பட அடையளப் படுத்தப்படுகிறது.  1914ம் ஆண்டுகள் வரை இந்திய சுதந்திர போராட்டத்தில ஈடுபட்ட இளைஞர்கள் மதப்பிடிப்பும், அன்றைய சமுககட்டமைப்பின் சிந்தனைகளும் மேலோங்கி இருந்தது. இதற்கு வாஞ்சிநாதனும் விதிவிலக்கல்ல

சட்டநாத கரையாளர் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்து முக்கிய பங்காற்றியிருக்கிறார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று திருநெல்வேலியிலிருந்து வேலூர் சிறைக்கு முதல் வகுப்பு இரயில் பயணத்தை மறுத்து மூன்றாவது வகுப்பில் தான் பயணிப்பேன் என்று காவல் துறையில் அடம்பிடித்து பயணித்தார்.

செங்கோட்டை மொழிவழி மாநிலம் அமைப்பதற்கு முன்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது மொழிவழி மாநில போராட்டத்தில் செங்கோட்டையில் சட்டநாத கரையாளர் முக்கிய பங்காற்றியிருக்கிறார் 11 பேர்கள் மொழிவழி மாநில போராட்ட துப்பாக்கிசூடில் இறந்திருக்கிறார்கள். சட்டநாத கரையாளர் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு இருக்கிறார்.

மற்றொரு முக்கிய செய்தி புகழ்பெற்ற இசை அமைப்பாளர் நாடக வியலாளர் எஸ் ஜி கிட்டப்பாவின் ஊர் செங்கோட்டை ஆகும். இவர் கொடுமுடி யை சேர்ந்த கே பி சுந்தராம்பாளை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மகாத்மா காந்தி செங்கோட்டைக்கு வந்த பொழுது 1927 ஆம் ஆண்டு நாராயண குருவை சந்தித்து பேசியிருக்கிறார்.

இக்காலத்தில் கே பி சுந்தராம்பாள்  அவர்ககளை சந்தித்து அவரை அரசியலுக்குள் இழுத்து சட்டசபை உறுப்பினராகவும் மாற்றியிருக்கிறார் மகாத்மா காந்தி. இந்தியாவிலேயே முதல் முதலாக  பெண் திரைக் கலைஞர் அரசியலில் ஈடுபட்டது கே.பி. சுந்தராம்பாள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

                1936 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி மீண்டும் ஒரு முறை நெல்லைக்கு வந்து குற்றாலத்தில் குளிக்க சென்ற பொழுது தலித்கள் குளிக்க கூடாது என்ற தடையை அறிந்து குளிக்காமல் திரும்பிச் சென்றுவிட்டார்.செங்கோட்டையில் இருக்கக்கூடிய சாம்பவர் வடகரையில் நெல்லை மாவட்டத்தில் முதன் முதலாக கம்யூனிஸ்ட் கிளை ஆரம்பிக்கப்பட்டது.

        23ம் மதேதி செங்கோட்டையில் துவங்கிய சைக்கிள் பிரச்சார பயணம் முதல் நாள் இரவு புளியங்குடி வந்து சேர்ந்தது. புளியங்குடி பகுதியில் குறிப்பாக சிந்தாமணியில் வாலிபர் அமைப்பை அமைப்பதற்கான பணிகளில் அன்றைய மாவட்ட செயலாளராக இருந்த தோழர் கருமலையான், மாநில தலைவராக இருந்த நானும் முகாமிட்டு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலம் வந்து கொண்டு இருக்கிறது. அதன் அடையாளம்தான் செங்கோட்டையிலிருந்து துவங்கியுள்ள சைக்கிள் பயணம். திருச்சியில் சங்கமித்து வெற்றிபெற உள்ளது..

.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...