Pages

வியாழன், ஆகஸ்ட் 04, 2022

நாஞ்சோறுபோட ஊரானுக்கு ரத்தமா?

 



''நாஞ்சோறுபோட ஊரானுக்கு ரத்தமா. வகுந்துருவேன்..உருப்படுற வழியப்பா ரு! ''

''ரத்தத்தைப் பார்த்தாலே எனக்கு மயக்கம் வரும். என்னால முடியாதுப்பா!''

''என்கிட்ட இருக்கிறதே கொஞ்சம் ரத்தம், அதை கொடுத்துட்டு நான் என்ன பண்றது?''

''ரத்தம் கொடுத்தால் உடம்பு வீக் ஆயிரும்.''

''எவ்வளவு ரத்தம் எடுப்பாங்க?''

''நமக்குத் தெரியாமல் நிறைய உறிஞ்சிட்டாங்கன்னா என்ன பண்றது?''

''நான் கண்ணை மூடிட்டு இந்தப் பக்கம் திரும்பிக்கிறேன், எனக்கு தெரியாம எடுத்திடுங்க.''

1986 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி பகத்சிங் நினைவுதினம் அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சென்னை மாவட்டக்குழு சார்பாக இரத்ததானம் செயவது என்று முடிவெடுத்து அறிவிக்கப்பட்டவுடன் ''கேட்ட குரல்கள்தான்'' மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணற்ற கேள்விகள் எழுந்தன. இவைகளுக்கெல்லாம் விளக்கமளித்துதான் இரத்தான கழகம் துவக்கப்பட்டது.

வாலிபர் சங்கம் இரத்ததானம் கொடுப்போம் என்று அறிவித்தாலும் மருத்துவர்கள் நம்ப மறுத்தார்கள். 100 பேர் ஒரே இடத்தில் ரத்த தானம் செய்வதெல்லாம் அப்போது நடைபெறாத, சாத்தியப்படாத ஒரு விஷயமாக இருந்தது. மருத்துவமனையும் அதனுடைய ரத்த சேமிப்பு திறனும் மிகக் குறைவாக இருந்த காலகட்டம். நான் (பாக்கியம்), கருணாநிதி, ஞானவேல் மாவட்ட நிர்வாகிகளாக இருந்தோம். இராயப்பேட்டை மருத்துவமனையின் இரத்த வங்கி மருத்துவர்களை நம்பவைத்து இரத்த தான முகாமுக்கு வரவைப்பது பெரும் பிரச்சனையாக இருந்தது. காரணம், அதுவரை படித்த, அலுவலகத்தில் பணியாற்றிய சில குழுக்கள் மட்டுமே ரத்ததானம் செய்தன. DYFI போன்ற இளைஞர் அமைப்புகளின் முகாமை ரத்த தான வங்கிகள் சந்தித்தது இல்லை.

அதே நேரத்தில், ''ஒரு புரட்சிகரமான இளைஞர் அமைப்பு ரத்ததானம் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டுமா?'' என்ற கேள்வியும் விவாதங்களும் வாக்குவாதங்களும் வாலிபர் சங்கத்தின் மாவட்டக் குழுவில் நடைபெற்றன. அப்போது வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளராக இருந்த தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் ரத்த தானத்தின் தேவை குறித்தும் பன்முக கலாச்சார நடவடிக்கையின் அவசியம் குறித்தும் சித்தாந்த அடிப்படை ஒரு இளைஞர் இயக்கத்துக்குரிய திட்டங்களில் இருந்து எடுத்துரைத்து கருத்தொற்றுமை ஏற்படுத்தினார். மாநில முழுவதுமே வாலிபர் சங்கத்தின் வெகுஜனத் தன்மை நிலைநாட்டுவதில் அவரின் பங்கு பிரதானமாக அமைந்திருந்தது. DYFI அதன் வெகுஜனத் தன்மையோடு செயல்படுவதற்கான தளம் அமைக்கப்பட்டது.

1986 மார்ச் 23ஆம் தேதி ரத்ததானம் செய்வதற்கான தோழர்களை தேர்வு செய்து 125 பேர் ரத்த தானம் கொடுப்பதற்கான பட்டியலை கொடுத்து பதிவு செய்து, ரத்த தான முகாம் நடந்த  அண்ணா சாலையில் உள்ள எல்எல்ஏ பில்டிங் அரங்கிற்கு ரத்த தான கொடையாளர்களும் வந்துவிட்டனர். வேடிக்கை பார்க்க பலர் வந்திருந்தனர். ஆனால் அரசு மருத்துவமனை ரத்த வங்கி நிர்வாகத்தால் 65 பேரிடம்  மட்டும்தான் ரத்தம் தானம் பெற முடிந்தது. அதற்கான திறனும் சேமிப்பும்தான் ரத்த வங்கி நிர்வாகத்திடம் இருந்தது. 

சிறிய துவக்க நிகழ்ச்சியுடன் இரத்த தானம் செய்ய ஆரம்பித்தது சற்று பரபரப்பாக தான் இருந்தது. ரத்தம் கொடுத்தவர்களிடம் சிலர் எப்படி இருக்கு என்று விசாரிப்பதும்,  ரத்தம் எடுப்பதை வேடிக்கை பார்ப்பதும் போன்ற காட்சிகள் முதல் கட்டத்தில் நடைபெற்றது.

.முதல் ரத்ததான நிகழ்வு முடிந்தவுடன் ரத்தம் கொடுத்தவர்கள் அல்லாது மற்றவர்களுக்கான இரத்த வகை  பற்றிய பரிசோதனையும் நடத்தப்பட்டது.  மருத்துவமனைக்கு சென்று பலர் பரிசோதித்து கொண்டனர். பலரும் ரத்தம் கொடுக்க தயாராகினர். முதல்முறை ரத்தம் கொடுத்தவர்கள் ஆர்வமிகுதியால் மீண்டும்  ரத்தம் கொடுக்க முன்வந்தபோது 3 மாதம் கழித்துதான் இரத்தம் கொடுக்கவேண்டும் என்ற விதி விளக்கப்பட் டது.  மருத்துவமனைகள் வாலிபர் சங்கத்தின் உதவியை நாட ஆரம்பித்தனர். ரத்தம் தேவைப்பட்டவர்களுக்கு வாலிபர் சங்கத்தின் தொலைபேசி எண்ணை யும் அலுவலக முகவரியையும் கொடுத்தனர். பலரும் ரத்தம் கேட்டு எண் 15, திப்பு சாகிப் தெரு, எல்லீஸ் ரோடு அலுவலகம் வரத்தொடங்கினர்.

தமிழகத்தில் முதல்முறையாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நூறு பேருக்கு மேல் குருதி கொடையாளர்களை பதிவு செய்து சென்னை ரத்ததான கழகத்தை ஆரம்பித்தது. 

தமிழகத்தில் ரத்த தானம் செய்வதில் குணாம்ச ரீதியிலான குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்றால் மிகை ஆகாது. அதுவரை ரத்த தானம் செய்வது படித்த மேல் தட்டு பகுதி மக்களுடைய விழிப்புணர்வாக மட்டுமே இருந்தது. தமிழக இளைஞர்கள் மத்தியில் ரத்த தானத்தை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றியதில் வாலிபர் சங்கத்தின் பங்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ரத்ததான கழகம் வாலிபர் சங்க வளர்ச்சியில் பேரெழுச்சியை ஏற்படுத்தியது. 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்து தரப்பு இளைஞர்களையும் ஒன்றிணைக்க கூடிய அமைப்பாகும். ஒரு அரசியல் இயக்கமாக மட்டும் இருப்பது அதனுடைய நோக்கம் அல்ல. இளைஞர்கள் மத்தியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற முறையில் பல்வேறு விதமான பன்முக கலாச்சார நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்த முயற்சி செய்து கொண்டிருந்தது. 1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் படிப்படியாக பல துறைகளில்  தடம்பதிக்க ஆரம்பித்தது. சென்னை பெருநகரம் என்பதால் அதே நேரத்தில் ஒரு மெட்ரோபாலிட்டன் சிட்டி என்பதால் பன்முகத் தன்மை வாய்ந்த இளைஞர் களை தன்னகத்தே இணைக்க வேண்டிய தேவை இருந்தது.

இதன் தொடர்ச்சியாக 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி  பெரும்திரள் ரத்த தானம் செய்திட ( MASS BLOOD DONATION CAMP -) சென்னை ரத்த தானம் கழகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மாநில பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளும் ரத்தம் எடுப்பதற்காக வருகை தந்தன. நிகழ்ச்சி மிக எழுச்சியாகவும் அதே நேரத்தில் ரத்தம் எடுக்க வந்த மருத்துவர்கள் அதிர்ச்சியாகவும் காணப்பட்டனர். காரணம் 1400க்கும் அதிகமான இளைஞர்கள் மாநில பள்ளியில் குவிந்து விட்டார்கள்.

பெயர்களை பதிவு செய்வது, எடை அளவிடுவது,  வேறு ஏதாவது நோய்கள் இருக்கிறதா என்பதை கண்டறிவது போன்ற பணிகளை வாலிபர் சங்கத்தின் தோழர்கள் உதவியோடு நடத்தினார்கள்.

40 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் தான் இரத்ததானம் வழங்க வேண்டும் என்று விதி உள்ளது. ஒவ்வொருவரின் எடையை போட்டு ஒரு ரசீதில் அவருடைய எடையை எழுதிக் கொடுத்து  அனுப்புவார்கள். சிலருக்கு எடை குறைவாக இருக்கிற பொழுது அதையும் எழுதிக் கொடுத்து அனுப்பினார்கள். ஆர்வம் மிகுதியால் சில இளைஞர்கள் 38 கிலோ இருந்தவர்கள் 40 என்று திருத்தி ரத்தம் கொடுத்து  சென்றதை  பிறகுதான் அறிய முடிந்தது. ஏராளமான இளைஞர்கள் ரத்தம் கொடுக்க முடியவில்லை என்று சோகத்தோடு திரும்பினார். சிலர் கண்ணீர் கூட விட்டார்கள்.

 எனினும் மூன்று மருத்துவமனைகளும் சேர்ந்து 875 பேர்களுக்கு மட்டும் ரத்தம் எடுக்க முடிந்தது. 500 பேர் ரத்தம் கொடுக்க முடியவில்லை. அவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். ஒரு பகுதியினர் ரத்தம் கொடுக்காமல் செல்லமாட்டோம் என்று வற்புறுத்தினர்.  அவர்களுக்கு ரத்தவகை பரிசோதித்து தேவைப்படும்போது ரத்தம் தானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

1990-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அவருடைய பிறந்தநாள் ஏப்.14 அன்று சென்னை மாவட்டத்தில் 10 இடங்களில் ரத்த தானம் தனித்தனியாக செய்யப்பட்டது இதற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் சில இடங்களில் தனியார்  மருத்துவமனைகளையும் நிச்சயித்து  ரத்ததானம் செய்யப்பட்டது. 10 இடங்களிலும் பகுதிவாரியாக வழங்கப்பட்ட இந்த முகாமில்  10 இடங்களிலும் 3045 இளைஞர்கள் திரண்டு விட்டனர். 10 இடங்களிலும் 1345 பேர்களுக்கு மட்டுமே ரத்தம் எடுக்க முடிந்தது. 

இந்தியாவிலேயே கல்கத்தாவிற்கு அடுத்து அதிக ரத்த தானம் செய்தது சென்னைதான் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் பெருமிதத்தோடு கூறினார்கள். கல்கத்தாவிலும் ரத்ததானம் செய்தது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சென்னையில் 3000 பேர்  ரத்தம் கொடுத்த பட்டியல் தயாரானது. 3000 பேர் அடங்கிய குருதி கொடையாளர் சங்கமாக சென்னை ரத்ததான கழகம் விரிவுபடுத்தப்பட்டது. பகுதி வாரியாக குருதி கொடையாளர்கள் பட்டியலும் தயாரானது. 


1990 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 507 பேர் ரத்ததானம் வழங்க முன் வந்தார்கள். 80 பேருக்கு மட்டும் தான் ரத்தம் எடுக்க முடிந்தது. 1992 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் நான்கு இடங்களில் 450 பேர் ரத்ததானம் வழங்க முன் வந்து 150 பேருக்கு மட்டும் தான் ரத்தம் எடுக்க முடிந்தது.

1989ஆம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் ரத்ததானம் வழங்குவதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சிஎம்சி மருத்துவம னையை அணுகியபோது  அவர்கள் இடதுசாரி இயக்கத்திடம் இருந்து நாங்கள் ரத்தம் எடுப்பதில்லை என்று தெரிவித்து விட்டார்கள். வாலிபர் சங்கத்தை பற்றிய தவறான மதிப்பீடும் பொதுவாக அரசு சாரா நிறுவனங்களின் அணுகுமுறையுமாக அது இருந்தது. 

வடஆற்காடு மாவட்ட  வாலிபர் சங்கம் 1990 ஆம் ஆண்டு அம்பேத்கருடைய பிறந்தநாள் அன்று 200 இளைஞர்கள் வேலூரில் ஊர்வலமாக சென்று அம்பேத்கார் சிலைக்கு மாலஅணிவித்து பெல்லியப்பா  கட்டிடத்தில் ரத்ததானம் செய்தனர். அதன்பிறகு சிஎம்சி மருத்துவமனையும்  ரத்தம் எடுக்க தானாக முன்வந்து ரத்தம் எடுத்தனர். 1992 ஆம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் ரத்ததான கழகம் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது.

திருச்சியில் 1991ஆம் ஆண்டு 4 மையங்களில் 500 பேர் வரை இரத்த தானம் செய்ய முன் வந்து 60 பேருக்கு  ரத்தம் எடுக்க முடிந்தது. 92 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக திருவெறும்பூரில் ரத்ததான கழகத்தை ஆரம்பித்து குருதிக்கொடையாளர்களை பதிவு செய்தனர் 2000 பேர் வரை பதிவு செய்து ரத்ததானம் வழங்கி வந்தனர். தஞ்சையில் 1991 ஆம் ஆண்டு, ஈரோட்டில் 1993 டிசம்பர் மாதம் ரத்ததான கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 1992 ஜனவரி மாதம் 200 பேர் ரத்த தானம் செய்து ரத்ததான கழகத்தை துவக்கினார்கள்.

மதுரை மாவட்டத்தில் 1992 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தேவைப்படும்போது ரத்தம் வழங்குவதற்காக 755 இளைஞர்கள் குருதிக் கொ(ப)டையாளர்களாக பதிவு செய்து கொண்டார்கள். ரத்ததான கழகம் துவக்கப்பட்டது கோவை மாவட்டத்திலும் நீலகிரி மாவட்டத்திலும் இதேபோன்று குருதிக்கொடையாளர்கள் பட்டியல் எடுத்து ரத்ததான கழகம் துவக்கப்பட்டது. சேலத்திலும் ரத்ததான கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலுமே ரத்ததான கழகம் உருவாக்கப்பட்டுவிட்டது. 

இதன் தொடர்ச்சியாக  ஒரு மாநில அமைப்பாக மாற்றும் நிகழ்ச்சிகள நடைபெற்றது. மாநில குழுவில் முடிவு செய்து மாநில அளவிலான ரத்ததான கழகம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக காப்பீட்டுக் கழக தொழிற்சங்க தலைவர் தோழர் ராஜப்பா அவர்களும், அதன் செயலாளராக நானும்(பாக்கியம்) செயல்பட்டோம். மாநிலம் முழுவதும் ரத்ததான கழகத்தை பலப்படுத்தக்கூடிய பணியினை செய்தோம். தோழர் ராஜப்பா அவர்கள் அதிகாரிகள் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என பல்வேறு பகுதியினரை வாலிபர் சங்கத்தின் ரத்ததான கழகத்தோடு இணைப்பதில் முக்கிய பங்காற்றினார். 

1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி மராட்டிய மாநிலத்தில் லத்தூர் என்ற இடத்தில் மிகப் பெரும் பூகம்பம் ஏற்பட்டது 52 கிராமங்கள் அழிந்தது பத்தாயிரம் பேர்கள் மரணமடைந்தார்கள். 30 ஆயிரம் பேருக்கு மேல் காயம் அடைந்தார்கள்.காயம் பட்டவர்களுக்கு ரத்த தானம் செய்வது உடனடி தேவையாக இருந்தது. அப்பொழுதெல்லாம்  மாநிலம் விட்டு மாநிலம் இரத்த தானம் செய்து அனுப்புகிற  வழக்கம் இருந்தது. மத்திய குழு அறைகூவலுக்கிணங்க உடனடியாக சென்னையில் 1200 பேர் ரத்த தானம் செய்வதற்காக குவிந்து விட்டார்கள். மருத்துவமனை 294 பேருக்கு மட்டும் ரத்தம் எடுத்து அனுப்பி வைத்தது. பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வளவு விரைவான உதவியை கொடுப்பார்கள் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கவில்லை.

சென்னையில் ரத்த தானம் செய்வதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முதல் இடத்தை பிடித்தது. அதுவரை  சென்னை ராகாகிருஷ்ணன் சாலையில் உள்ள டிடிகே எல்த்கேர்   அமைப்புதான் முறைப்படி ரத்த வங்கி நடத்தி  ரத்த தானத்தை வழங்கி வந்தது. அவர்களும் வாலிபர் சங்க  ரத்ததான கழகத்தை அவர்களுடன் இணைக்க கேட்டனர். நாம் மறுத்து விட்டோம்.

1990 ஆம் ஆண்டுகள் முதல் அடுத்தடுத்த மூன்றாண்டுகள் சென்னையில் அதிக ரத்த தானம் செய்த அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்ற பெருமையை வாலிபர் சங்கம் பெற்றது. தொடர்ந்து அதை தக்கவைத்து வந்தது. சென்னை நகர காவல் துறை ஆணையாளரால் பொதுநிகழ்ச்சியில் கேடயங்கள் வழங்கப்பட்டன.  

சென்னையில் எடுத்த இந்த முயற்சி தமிழகம் முழுவதும் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தியது. 1986 ஆம் ஆண்டு நானும்(அ.பாக்கியம்) பா.கருணாநிதியும் மாவட்ட நிர்வாகிகளாக இருந்தோம். 1988-ம் ஆண்டு மாவட்ட தலைவராக க.மாதவ் செயலாளராக அ.பாக்கியம் பொருளாளராக க.பீமாராவ். 1992-ம் ஆண்டு டி.கே.சண்முகம் தலைவராகவும் க.பீமாராவ் செயலாளராகவும் ஆர்.சுரேஷ் பொருளாளராகவும் செயல்பட்டார்கள் 1994 ஆம் ஆண்டு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வடசென்னைக்கு ஆர்.முரளி தலைவராக சி.திருவேட்டை செயலாளராக தென்சென்னைக்கு பா.ரவி தலைவராக ஆர்.ரேஷ் செயலாளராக பொறுப்பேற்றனர். இந்த ஒட்டுமொத்த மான தலைமையின் வெளிப்பாடாகத்தான் ரத்ததான கழகத்தின் எழுச்சி ஏற்பட்டது. சென்னையிலேயே அதிக ரத்ததானம் செய்து நடுத்தரவர்க்க இளைஞர்களை ஆகர்ஷித்த   இயக்கமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாறியது.

முதல் முறையாக ரத்தம் கொடுக்கிற பொழுது அச்சப்பட்ட இளைஞர்கள் சிலர் ரத்தம் எடுப்பதை பார்த்து மயங்கினர். ஒரு சிலர் ரத்தம் எடுக்கிற பொழுது மயக்கம்ஏற்பட்டது. அடுத்தடுத்து அச்சங் கள்  போக்கப்பட்டு வாலிபர் சங்கத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு ரத்தம் வழங்க முன் வந்தார்கள். 

சென்னை துறைமுகத்தில் ரேவ்பகுதியில் இருந்த கிளை உறுப்பினர் ஒருவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரத்தம் கொடுப்பதற்காக சென்ற பொழுது ஊர் மக்கள் 20 பேர் அதை வேடிக்கை பார்க்க வந்து விட்டார்கள். இப்படி இன்னும் பல நிகழ்வுகள் நடந்தது. 

தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகிறவர்கள் ஏராளம். அவர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிற பொழுது அந்தந்த மாவட்டத்திலிருந்து தகவல் வருவதை விட மருத்துவமனையில் இருந்து சென்னையில் அலுவலகத்திற்கு அனுப்பி விடுவார்கள். அவ்வாறு ஏராளமான கிராமத்திலிருந்து வந்தவர்களுக்கு  ரத்தம் கொடுத்தோம். அவர்கள் சென்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைகளை அவர்கள் கிராமத்தில்  ஆரம்பித்தார்கள். உதாரணமாக கவிஞர் வைரமுத்து அவர்களின் சொந்த ஊரான வடுகப்பட்டியில் இருந்து வந்திருந்தவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இரத்தம் கொடுத்ததால் அந்த ஊரில் சென்று ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளையை ஆரம்பித்தார்கள்.  உறவினர்களிடம் ரத்தம் கேட்டு அவர்கள் கொடுப்பதற்கு தயங்கியதால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திடம் ரத்ததானம் பெற்ற ஏராளமான பேர் இயக்கத்தின் ஆதரவாளர்களாக  மாறினார்கள்.

ரத்ததானம் வழங்கியவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது முதலில் சென்னை மாவட்ட குழுவின் சார்பில் சென்னையில் வழங்கப்பட்டது. பிறகு மாநில அளவில் வழங்கப்பட்டது. இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் பல இடங்களில் மதிக்கப்பட்டார்கள். வாலிபர் சங்கத்தை சேர்ந்த ஒரு லாரி டிரைவர் லாரியை ஓட்டிக்கொண்டு செல்கிற பொழுது திருச்சிக்கு முன்பாக போக்குவரத்து காவலர் வண்டியை நிறுத்தினார். எதற்காக  என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வாலிபர் சங்கத் தோழர் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிற பொழுது இரத்ததான அடையாள அட்டையும் கீழே விழுந்தது. அதை பார்த்தவுடன் அந்த போக்குவரத்துக் காவலர் நீங்கள் இந்த ரத்ததான கழகத்தில் இருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களால்தான், என்னுடைய உறவினர் உயிர் பிழைத்திருக்கிறார். பணம் எதுவும் வேண்டாம் என்று சொல்லி அவரை மரியாதையாக அனுப்பி வைத்து விட்டார்.

சென்னையில் 1990ம் ஆண்டு 3045 இளைஞர்கள் கலந்துகொண்ட முகாமை தூர்தர்ஷனில் ஒலிபரப்பாமல் எங்கோ காங்கிரஸ் அமைப்பின் சார்பில 30பேர் நடத்திய முகாமை ஒலிபரப்பினர். நான் இதுபற்றி அப்போதைய அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் ஹனன்முல்லா வழியாக தகவல் ஒலிபரப்பு அமைச்சருக்கு புகார் செய்தேன். அப்போதைய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த உபேந்திரா நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவரை பணியிட மாற்றம் செய்துவிட்டார். 

தமிழகத்தில் மருத்துவ மனைகளில் உள்ள ரத்தவங்கி குறைந்தபட்ச தேவைகளுடன் செயல்படவில்லை. பலவீனமாக இருந்தது. வாலிபர் சங்கம் ரத்தவங்கியை பலப்படுத்த மனுக்கொடுத்தும், போராட்டங்கள் முலமாகவும், பிரச்சாரங்கள் செய்து வலியுறுத்தியதின் காரணமாக அதிக நிதிஒதுக்கீடு செய்து மேம்படுத்தினர்.

 இப்படி எண்ணற்ற சம்பவங்கள் அக்காலத்தில் நடந்து கொண்டே இருந்தன. தமிழகத்தில் வேலூர் மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் தயாநிதி 72 முறை ரத்த தானம் செய்திருக்கிறார். அதன் பிறகு அவர் நிறுத்திவிட்டார். ஆம்பூரை சேர்ந்த அருள் சீனிவாசன் இதுவரை 80 முறை ரத்த தானம் செய்து உள்ளார் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இப்படி 50 முறைகளுக்கு மேல் ரத்ததானம் செய்தவர்கள் இருக்கிறார்கள். இன்றும் தானம் செய்துகொண்டுள்ளனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் படித்த மேல்தட்டு மக்களிடம் மட்டும் இருந்த ரத்ததானம் என்ற விழிப்புணர்வை குடிசைப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கொண்டு சென்று அவர்களிடம் இருந்த அச்சத்தை போக்கி பெற்றோர்களிடமிருந்த எதிர்ப்பை மாற்றி அனைத்து இளைஞர்களுக்கும் ரத்த தானம் செய்யலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கி ரத்த தானம் வெகுமக்கள் இயக்கமாக மாற்றியது. வேலை தேடிக் கொண்டிருந்த இளைஞர்களை ஒரு மாதிரியாகப் பார்த்த சமூகம், அவர்களுக்கு ரத்ததானம் செய்தபோது வேறு மாதிரியாகப் பார்த்தது. அந்த பெருமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தையே சாரும். செந்நீர் விட்டு இயக்கம் வளர்த்த இந்த செயல் இன்றும் தொடர்கிறது. 

போராட்டத்தில் ரத்தம் சிந்துவோம்; உயிர் காக்க ரத்தம்தந்து உதவுவோம் என்ற வாலிபர் சங்கத்தின் பணி தொடர்ந்து வருகிறது. இந்தப் பணியை மேலும், அதிகப்படுத்தி மக்களோடு இன்னும் நெருக்கமாவோம்.

அ.பாக்கியம்.

(பின்னூட்டங்கள் வழியாக மேம்படுத்த வேண்டும்.)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...