Pages

ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2022

அவரென்ன உங்கள தேடுறது நீங்க அவர தேடிப்போங்க.

 



1982-ம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திலும் சென்னை யிலும் குடிநீர் பஞ்சம் மக்களை வாட்டி எடுத்தது. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், சென்னை மக்களின் குடிநீர் தேவைகளை தீர்த்து வைக்காமல் மழை பெய்யவில்லை என்ற காரணத்தை மட்டும் கூறிக் கொண்டே இருந்தது.

நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டே இருந்ததால் சென்னை நகரத்தின் பல இடங்களில் சிறிய சிறிய போராட்டங்களும், எதிர்ப்பு இயக்கங்களும், மனு கொடுக்கிற நிகழ்வுகளும், நடந்து கொண்டிருந்தது. தமிழகத்திலும் பல இடங்களில் இந்த போராட்டங்கள் இங்கு மங்குமாக நடந்து கொண்டிருந்தது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மாதர் சங்கமும் பல்வேறு இடங்களில் மனு கொடுப்பது சுவரொட்டிகள் ஓட்டுவது சில இடங்களில் உண்ணாவிரதம் இருப்பது போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் கொழுந்து விட்டு எறிவதற்கு எங்காவது ஒரு இடத்தில் தீப்பொறி தேவைப்படுகிறது. அந்த தீப்பொறியாக பெரும் போராட்டம் ஒன்று சென்னை ஓட்டேரிக்கு அருகாமையில் உள்ள ஸ்டார்ன்ஸ் ரோட்டில் நடைபெற்றது.

1985-ம் ஆண்டு இறுதியில் இந்த பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டது. வாலிபர் சங்கம் மக்களுடைய அடிப்படையான பிரச்சனைகளை கையில் எடுத்து மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்திக் கொண்டிருந்தது. குறிப்பாக குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி துண்டு பிரசுரம் விநியோகித்தது சுவரொட்டி களும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தியது.

 

சென்னையில் மிக முக்கியமான நெருக்கடி மிகுந்த வியாபார ஸ்தலங்களும், திரையரங்குகளும் நிறைந்த இந்தப் பகுதி குடிதண்ணீர் தொடர்ந்து கிடைக்காமல் அவதிக்க உள்ளாகியது.

உரிய காலத்தில் குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சாலை மறியல் நடைபெறும் என்று வாலிபர் சங்கம் போராட்டங்கள் மூலமாகவும், பிரச்சாரங்கள் மூலமாகவும் எடுத்துரைத்து வந்தது.

சில நாட்கள் தொடர்ந்து குடிநீர் வராததனால் கோபம் அடைந்த மக்கள் நீண்ட சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டார்கள். சுமார் 5000 பேருக்கு மேல் அந்த சாலையில் அமர்ந்து விட்டனர் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.

வாலிபர் சங்கத்தின் கிளை நிர்வாகிகளாக இருந்த நாராயணன், சுப்பிரமணி, சங்கர் மேலும் பலரும் சேர்ந்து நானும் போராட்டத்திற்கு சென்று கலந்து கொண்டோம்.

அங்கிருந்த மக்கள் நாற்காலிகளை கொடுத்து அதன் மீது ஏறி நின்று பேச சொன்னார்கள். அரசின் செயலற்ற தன்மையும் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினோம்.

ஸ்தலத்துக்கு வந்திருந்த அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். காவல் துறையும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் கலைந்து செல்ல வேண்டும் என்று மிரட்டினார்கள்.

பல மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் சுற்றுவட்டாரத்தில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் மக்கள் தானாக மறியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இவை அனைத்தும் ஊடகங்களுக்கும் செய்தியாக சென்று கொண்டிருந்ததனால், காவல்துறையும் அரசும் கடுமையான முறையில் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தார்கள். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் சோடா பாட்டில்களை வீசி கூட்டத்தை கலைப்பதற்கு காவல்துறை க்கு உதவி செய்தார்கள். பலருக்கும் தடியும் ரத்த காயங்களும் ஏற்பட்டது.

மறியல் இடத்திற்கு வந்த அதிகாரிகள் லாரிகள் மூலமாக அவசர அவசரமாக தண்ணீர்களை அனுப்பி கொண்டு இருந்தார்கள். அந்த மாபெரும் கூட்டத்தை வாலிபர் சங்கத்தினால் ஒட்டுமொத்தமாக தலைமை தாங்க முடியவில்லை,கட்டுக்கோப்புக்குள் எங்களால் கொண்டுவர முடியவில்லை  என்றாலும் போராட்டத்தின் தீப்பொறியாக வாலிபர் சங்கம் இருந்தது.

அந்தப் போராட்டத்தை கலைத்து விட்டோம் என்ற இறுமாப்புடன் காவல்துறையும், அதிகாரிகளும் கலைந்து சென்ற பிறகுதான் அவர்களுக்கும், அரசுக்கும் விஷயம் புரிந்தது. சென்னை நகரம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்த நாட்கள் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் அனைத்து சந்து முனைகளிலும் தெருக்களி லும் வெடிக்க ஆரம்பித்தது.

இவற்றையெல்லாம் காவல்துறை தடியடி நடத்தி கலைப்பதிலேதான் குறியாக இருந்தது தவிர தண்ணீர் வழங்குவதற்கான முன்னுரிமை கொடுக்கவில்லை.

பல்வேறு இடங்களில் வாலிபர் சங்கத்தின் கிளைகள் இருக்கக்கூடிய பகுதியில் வாலிபர் சங்கத்தின் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது. இதன் வீச்சாக தண்ணீர் கிடைக்காத இடங்கள் எல்லாம் மக்கள் தானாகவே போராட ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நேரத்தில் இந்தப் போராட்டத்திற்கு வாலிபர் சங்கம் தான் காரணம் என்றும், அவர்கள்தான் தூண்டிவிடுகிறார்கள் என்றும்  அதனுடைய நிர்வாகிகளாக இருந்த என்னையும் கருணாநிதியையும் தேட ஆரம்பித்தார்கள். அப்போது சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜேப்பியார் இருந்தார். அதிமுகவின் அடியாட்கள் பலம் கொண்டவராக ஜேப்பியார் இருந்தா. அவர்தான் எங்கள் இருவரையும் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் போராட்டம் நடந்த இடங்களிலும் தேடுவதாக கூறினார்கள். நாங்களும் போராட்டங்களிடையே தான்  நாங்களும் மற்ற நிர்வாகிகளும் இருந்தோம்.

அவர் எங்களை தேடுகிறார் என்று தெரிந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாவட்ட செயலாளராக இருந்த தோழர் வி.மீனாட்சிசுந்தரம் அவர் என்ன உங்களைத் தேடுவது நீங்கள் அவரைத் தேடிப் போய் பாருங்கள் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்.

நானும் கருணாநிதியும் இருவர் மட்டுமே ஒரு ஸ்கூட்டரில் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சென்றோம். ஜேப்பியாரின் அறைக்கு சென்ற பொழுது அவர் அங்கு இல்லை. வாரியத்தின் இயக்குனர் மட்டும்தான் அங்கு இருந்தார். நாங்கள் வந்த தகவலை தெரிவித்து ஜேப்பியாருக்கு  தெரிவிக்க கேட்டுக் கொண்டோம்.

அவரும் அன்று இருந்த தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்தார். சில மணி நேரம் காத்திருந்த பிறகு ஜேப்பியார்  வரவில்லை. இயக்குநர் எங்களை  அழைத்து பேசினார்.

நீங்கள் மக்களை தூண்டி விடக்கூடாது என்று அவர் எங்களிடம் தெரிவித்தார். நாங்கள் மக்களை தூண்டி விடவில்லை மக்கள் குடிநீர் கிடைக்காமல் எங்கே போவார்கள். அரசிடம் தானே முறையிட வேண்டும் எத்தனை எத்தனை முறை முறையிட்டாலும் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. என்பதால் மக்கள் தெருவுக்கு வருகிறார்கள். நீங்கள் தான் குடிநீரை கொடுக்காமல் மக்களை போராடத் தூண்டுகிறீர்கள் என்று தெரிவித்தோம். உடனடியாக அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. மக்கள் போராட்டம் நடத்தினால் அதை ஆதரிப்போம் தலைமை தாங்குவோம் என்பதை தெரிவித்து விட்டு மேலும் சில மணித்துளிகள் காத்திருந்து விட்டு வந்து விட்டோம்.

சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக வட சென்னையில் போராட்டங்கள் நடைபெறாத இடமே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மோசம் அடைந்திருந்தது. காவல்துறை கூட்டத்தை கலைப்பது வாலிபர் சங்க தோழர்களை கண்டால் தாக்கி கைது செய்வது வழக்கு போடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். நான் கன்னிகாபுரம் கிளாஸ் பேக்டரி அருகில்  நடைபெற்ற மறியல் செய்தவர்களை பார்க்கச்சென்றபோது என்னை பிடித்து வேனில் ஏற்றி மக்கள் கூச்சல் போட்டவுடன் இறக்கிவிட்டனர்.

தமிழகத்தில் திண்டுக்கல், வேடச்சந்தூர், மதுரை, திருச்சி என போராட்டங்கள் நடந்தது. 1983 ஆம் ஆண்டு களிலிருந்து 87 ஆம் ஆண்டு வரை இந்த போராட்டங் கள் தீவிரமடைந்தது.

1983 ஆம் ஆண்டு வாலிபர் சங்கத்தின் சார்பிலும் மாதர் சங்கத்தின் சார்பிலும் சென்னை திருச்சி சேலம் மதுரை போன்ற மாவட்டங்களில் காலி பானைகளை உடைக்கும் போராட்டம் பல நூறு நடைபெற்றது.

மதுரையில் குடிதண்ணீர் நெருக்கடியினை தீர்க்க வலியுறுத்தி  சுவரொட்டிகளும் சுவர் எழுத்துக்களும் எழுதப்பட்டன. பானை உடைப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. மதுரையின் பெரும்பாலான கிளைகளில் வீதி முனைகளில் பானைகளை கட்டி தொங்கவிட்டு பானை இங்கே தண்ணீர்எங்கே என்று மிகப்பெரும் தட்டிகளை எழுதி வைத்தார்கள்.

 காகித அட்டையில்  செய்யப்பட்ட பானை வடிவிலான ராக்கெட்டுகளையும் மேலே செலுத்தினார்கள். மதுரையில் வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்து, பிறகு மதுரை மாமன்ற உறுப்பினராகி குடிதண்ணீரை வியாபாரம் ஆக்குவதற்கு எதிராக குழாய் மூலம் கொண்டு வருவதற்கான போராட்டத்தில் வெற்றி அடைந்த லீலாவதி அவர்கள் குடிதண்ணீர் போராட்டத்தில்தான் 1997ம்  ஆண்டு படுகொ லை செய்யப்பட்டார்கள்.

 

செங்கல்பட்டுநகரத்திலும் 87 ஆம் ஆண்டு குடிநீர் கேட்டு போராட்டமும் கடைஅடைப்பு நடைபெற்றது. இந்தப் போராட்டங்கள் அதிமுக அரசுக்கு கடுமையான நெருக்க டியை கொடுத்தது 1980 ஆம் ஆண்டு தெலுங்கு கங்கா திட்டம் அமலுக்கு வந்திருந்தாலும் போதிய அளவு குடிதண்ணீர் கிடைக்கவில்லை. அதை தீர்ப்பதற்கான முறையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை வாலிபர் சங்கத்தின் இந்த போராட்டங்கள் ஏற்படுத்தியது.

மற்றொரு திட்டமான வீராணம் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. மக்களின் இந்த போராட்டங்கள் காரணமாக விவாத பொருளாக மாறி 2004 ஆம் ஆண்டு குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிதண்ணீர் கொண்டுவரப் பட்டது.

சென்னையில் குடிதண்ணீர் பிரச்சினை இன்றும் பற்றாக்குறை பிரச்சினையாகதான் இருக்கிறது தமிழகத்தில் பல நகராட்சிகளில் ஐந்து நாள், ஆறு நாட்கள் இடைவெளியில் தான் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இன்றளவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மக்களுடைய அடிப்படையான இந்த பிரச்சனைகளுக்கு போராட்டத்தை முன்னெடுத்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் புரிகிற பாஷை என்பது போராட்டம்தான் என்பதை வரலாற்றின் மூலமாக நாமும் அறிந்து கொள்ள முடியும். ஆட்சியாளர்களுக்கும் கடைசி கட்டமாக அந்த பாஷை தான் புரிய வைக்க முடியும். இதற்கு மக்கள் திரளில் நாம் இருக்க வேண்டும். மக்கள் போராட்டத்தில் முன்நிற்போம்.

. பாக்கியம்

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...