Pages

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

செங்கோட்டையில் வாலிபர் சங்கம்∶

 

டெல்லி கோட்டையில் இருப்பவர்கள் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள். தமிழகத்தின் தென்கோடி எல்லையில் உள்ள செங்கோட்டை   சுதந்திரப்போராட்ட  களம் அமைத்து குருதிசிந்தயவர்கள்.

             செந்நீர் சிந்திய இந்த செங்கோட்டையிலிருந்து  வாலிபர் சங்கத்தின் இணை சைக்கிள் பிரச்சார பயணக்குழு 23.4.22 தேதியில் துவங்கியது. பயணக் குழுவை துவக்கி வைப்பதற்காக நான் செங்கோட்டை சென்றிருந்தேன்.

        23ம் தேதி காலை வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணம் துவங்கியது. பிரச்சார பயணக்குழுவிற்கு தென்காசி மாவட்ட செயலாளர் தோழர் உச்சிமாகாளி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் மாடசாமி கலந்து கொண்டனர்.

பிரச்சார பயண குழுவை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் தோழர் முத்துப்பாண்டி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் கணபதி, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சத்தியா உட்பட பலரும் பேசினர்.உரிய வாகன ஏற்பாடுடன் பிரச்சாரப் பயணம் முன்னோக்கி சென்றது.

              வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா

வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா.

என்ற பாடல்வரிகளைப் போல் சைக்கிள் பயணமவீரர்கள் முன்னோக்கி சென்று கொண்டிருந்தாலும் என் எண்ணங்கள் செங்கோட்டையில் வாலிபர் சங்கம்  உருவாக்கப்பட்ட காலத்தை பின்னோக்கி அசை போட்டது.

               தோழர் நன்மாறன் அகத்தியலிங்கம் ஆகிய தோழர்களின் வழிகாட்டுதலில் நெல்லை மாவட்டத்தில் தோழர்கள் ஆர் கிருஷ்ணன், சிவசாமி போன்றவர்கள் அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். நானும் ரவீந்திரன் மாநில பொறுப்பிற்கு வந்தபொழுது வாலிபர் சங்கம் இல்லாத தாலுகாக்களில் அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மாநிலக் குழுவில் செயல்திட்டங்கள் உருவாக்கி அமுலாக்க ஆரம்பித்தோம்.

இதன் ஒரு பகுதியாக 27ஆண்டுகளுக்கு முன்பாக செங்கோட்டைபகுதியில் இருக்கிற தொடர்புகளைப் பயன்படுத்தி கிளைகளை உருவாக்குவதற்காக அப்போதைய மாவட்ட தலைவராக இருந்த தோழர் ஆர்.கருமலையான், மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் சேவியர் (தற்போது சூர்யா சேவியர்) நானும் சேர்ந்து செங்கோட்டையில் முகாமிட்டோம். தோழர் சேவியரும் நானும் சில நாட்கள் தங்கி அங்கிருந்ததொடர்புகளை கிளைகளாக மாற்றி செங்கோட்டை கமிட்டியை அமைத்தோம்.

       தோழர் நாராயணன்(சைக்கிள் பயண துவக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்) அதுவரை வாலிபர் சங்கத்தை தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். கிளைகளை அமைத்து முதல் கமிட்டியை உருவாக்கிய பொழுது அதன் தலைவராக ராஜகோபால் செயலாளராக தோழர் சங்கரபாண்டி பொருளாளராக தோழர் ஆனந்தன் மூன்று பேரும் துடிப்புடன் செயல்பட்டு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கினார்கள்.

இவர்கள் தோழர்.காளிமுத்து என்ற தோழரின் செயல்பாட்டால் ஆகர்ஷிக்கப்பட்டவர்கள். தோழர் காளிமுத்து கட்சியின் பொறுப்பில் இருந்து மக்கள் பிரச்சனைகள் தலையிடக்கூடிய முறைகள்மற்றும் செருப்பு அணியாமல் அனைத்து கிராமங்களுக்கும் சென்று இயக்க வேலைகள் செய்தவர். அவரது எளிமையான நடவடிக்கையும் கடுமையான உழைப்பும் ஈர்ப்புத்தன்மையுடையது.

முதலில் உருவாக்கப்பட்ட கமிட்டியும் கிளைகளும் இணைந்து வாஞ்சிநாதனின நினைவுநாளை கொண்டாடுவதற்காகவும், இளைஞர்கள் மத்தியில் சுதந்திர போராட்ட வரலாறு களை   கற்பிக்கவும்  வாஞ்சிநாதனின் கல்வெட்டை தேடினால் அது ஒரு கால்வாய் கரையோரம் கிடைத்தது.தோழர் சேவியரும் செங்கோட்டை நிர்வாகிகளும் இதற்கான முயற்சி எடுத்து நகரத்தின் மத்தியில் அந்தக் கல்வெட்டை கொண்டு வந்து சேர்த்தார்கள். அதற்காக ஒரு விழா எடுத்து கல்வெட்டை மீண்டும் நிலைநிறுத்தி னார்கள்

             செங்கோட்டை மக்களுக்காக மருத்துவமனை ஒன்று இருந்தது அது மருத்துவமனை என்பதைவிட மரண மனையாகவே இருந்தது.வாலிபர் சங்கம் பிரச்சாரம் செய்து அதை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வாலிபர்களை திரட்டி நகரம் முழுவதும் "பாடைகட்டி ஊர்வலம்" நடத்தப்பட்டது. பாடையில் ஒருவரை பிணமாக படுக்க வைப்பது எல்லாம் தவறாக எண்ணக் கூடிய காலம் அது.

                 அந்தக் காலத்திலும் அவ்வாறு செய்து நகரம் முழுவதும் வலம் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அதில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்து மருத்துவமனை மாற்றத்திற்கு உள்ளானது.அதுவரை வாலிபர் சங்கம் பற்றி அறியாதவர்கள் எல்லாம் அதன் பிறகு நமது நிர்வாகிகள் தோழர்களை  "டைஃபி தோழர்" என்ற பொதுப் பெயரால்  அழைக்கத் துவங்கினர்.இதன் மூலம் கிடைத்த தொடர்புகளை பயன்படுத்தி பல கிளைகள் உருவாக்கப்பட்டது.

            செங்கோட்டை வாலிபர் சங்கத்தின் அடுத்த பணி "குற்றாலம் மலையை பாதுகாப்பது" என்று ஒரு பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. குற்றாலத்தில் ஏராளமான ஆலமர வகைகள் உள்ளது. பேரால்,மாவால், வெள்ளால், குற்றால் என்ற பெயரில் பலவகையான மரங்கள்.

       இவற்றில் குற்றால் மரங்கள் நிறைந்து இருப்பதால் தான் குற்றாலம் என்றும் பெயர் பெற்றது. குற்றால் மரத்திற்கு விஷ வண்டுகள் கூட நெருங்க முடியாத அளவிற்கு மருத்துவ குணம் படைத்தது.இந்த மரங்களை சமூக விரோதிகள் ஆட்சியாளர்களின் உதவியுடன் களவாடிய பொழுது அவற்றை தடுத்து நடத்திய போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

       குற்றாலத்தில் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டுப்பாடற்ற முறையில் பணம் வசூலித்தார்கள். இருசக்கர வாகனத்திலிருந்து அனைத்துக்கும் பணம் வசூலிப்பதை கண்டித்து "இலவச குளியல்" என்று நூற்றுக்கணக்கான வாலிபர்களை அணிதிரட்டி குளிக்கச் சென்று அந்த கோரிக்கையில் வெற்றி பெற்றார்கள். அதன்பிறகு வாகனத்தை நிறுத்தவும் கட்டணத்தை குறைக்கும் ஏற்பாடுகளும் முறைப்படுத்த ஏற்பாடும் நடைபெற்றது

             எந்த ஒரு இயக்கத்திற்கும் கிளை அமைப்பு இருக்க வேண்டும். அவைசெயல்படக்கூடியதாக,மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும். இதைத்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சென-யுன் குறிப்பிடுகின்ற பொழுது "கூடு கட்டினால் எந்த பயனும் இல்லை.உள்ளடக்கம் அவசியமானது என்பதை வலியுறுத்துவார். கிளைகள் இல்லாமல் நபர்களின் அறிமுகத்தால், சில முக்கியஸ்தர்கள் தொடர்பால் அமைப்புகள்  நடத்துவது சாத்தியமற்றது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது. கிளை அமைப்புகளை உருவாக்குவது மாநில தலைமையின் நேரடி தலையீடு இல்லாமல் மேளாளர் தன்மையால் நடக்காது.

இக்காலத்தில் செங்கோட்டை கமிட்டி செயல்பாடுகளுக்கு அருகிலிருந்த தென்காசி இடைக்கமிட்டியின் செயல்பாடும் உறுதுனையாக இருந்தது. அதனுடைய தலைவராக பட்டாபிராமன் செயலாளராக கணபதி பொருளாளராக பால்ராஜ் போன்றவர்கள் களமாடினார்கள்.

           செங்கோட்டையில் வாஞ்சிநாதன் செயல்கள் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் பாரதமாதா அபிநவபாரத் அமைப்பின் கூட்டம் நடந்த இட்ங்கள் உட்பட அடையளப் படுத்தப்படுகிறது.  1914ம் ஆண்டுகள் வரை இந்திய சுதந்திர போராட்டத்தில ஈடுபட்ட இளைஞர்கள் மதப்பிடிப்பும், அன்றைய சமுககட்டமைப்பின் சிந்தனைகளும் மேலோங்கி இருந்தது. இதற்கு வாஞ்சிநாதனும் விதிவிலக்கல்ல

சட்டநாத கரையாளர் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக இருந்து முக்கிய பங்காற்றியிருக்கிறார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று திருநெல்வேலியிலிருந்து வேலூர் சிறைக்கு முதல் வகுப்பு இரயில் பயணத்தை மறுத்து மூன்றாவது வகுப்பில் தான் பயணிப்பேன் என்று காவல் துறையில் அடம்பிடித்து பயணித்தார்.

செங்கோட்டை மொழிவழி மாநிலம் அமைப்பதற்கு முன்பாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது மொழிவழி மாநில போராட்டத்தில் செங்கோட்டையில் சட்டநாத கரையாளர் முக்கிய பங்காற்றியிருக்கிறார் 11 பேர்கள் மொழிவழி மாநில போராட்ட துப்பாக்கிசூடில் இறந்திருக்கிறார்கள். சட்டநாத கரையாளர் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு இருக்கிறார்.

மற்றொரு முக்கிய செய்தி புகழ்பெற்ற இசை அமைப்பாளர் நாடக வியலாளர் எஸ் ஜி கிட்டப்பாவின் ஊர் செங்கோட்டை ஆகும். இவர் கொடுமுடி யை சேர்ந்த கே பி சுந்தராம்பாளை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மகாத்மா காந்தி செங்கோட்டைக்கு வந்த பொழுது 1927 ஆம் ஆண்டு நாராயண குருவை சந்தித்து பேசியிருக்கிறார்.

இக்காலத்தில் கே பி சுந்தராம்பாள்  அவர்ககளை சந்தித்து அவரை அரசியலுக்குள் இழுத்து சட்டசபை உறுப்பினராகவும் மாற்றியிருக்கிறார் மகாத்மா காந்தி. இந்தியாவிலேயே முதல் முதலாக  பெண் திரைக் கலைஞர் அரசியலில் ஈடுபட்டது கே.பி. சுந்தராம்பாள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

                1936 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி மீண்டும் ஒரு முறை நெல்லைக்கு வந்து குற்றாலத்தில் குளிக்க சென்ற பொழுது தலித்கள் குளிக்க கூடாது என்ற தடையை அறிந்து குளிக்காமல் திரும்பிச் சென்றுவிட்டார்.செங்கோட்டையில் இருக்கக்கூடிய சாம்பவர் வடகரையில் நெல்லை மாவட்டத்தில் முதன் முதலாக கம்யூனிஸ்ட் கிளை ஆரம்பிக்கப்பட்டது.

        23ம் மதேதி செங்கோட்டையில் துவங்கிய சைக்கிள் பிரச்சார பயணம் முதல் நாள் இரவு புளியங்குடி வந்து சேர்ந்தது. புளியங்குடி பகுதியில் குறிப்பாக சிந்தாமணியில் வாலிபர் அமைப்பை அமைப்பதற்கான பணிகளில் அன்றைய மாவட்ட செயலாளராக இருந்த தோழர் கருமலையான், மாநில தலைவராக இருந்த நானும் முகாமிட்டு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலம் வந்து கொண்டு இருக்கிறது. அதன் அடையாளம்தான் செங்கோட்டையிலிருந்து துவங்கியுள்ள சைக்கிள் பயணம். திருச்சியில் சங்கமித்து வெற்றிபெற உள்ளது..

.பாக்கியம்

திங்கள், ஆகஸ்ட் 08, 2022

எமக்கு தொழில் போதை விற்பனை அதற்கு எதிராக ஸ்பான்சரா? நோ... நெவர்...


 


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) ஒரு அரசியல் சமூக இயக்கம் என்ற அடிப்படையில் பல்வேறு தளங்களில் களமாடி வருகிறது. இளைஞர்களின் வாழ்வை சீர்குலைப்பது, எதிர்கால சமூகத்திற்கு பேரழிவு என்பதை உணர்ந்து, சீர்குலைவு சக்திகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிற இயக்கமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளது.


இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பழக்கத்திற்கு எதிராகவும், உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ்க்கு எதிராகவும், விழிப்புணர்வு இயக்கம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த இயக்கம் சென்னையில் செயல்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெற்றது.


1994 ஆம் ஆண்டு வட,தென் சென்னை மாவட்ட குழுக்கள் சார்பில் பரந்த அளவில் இயக்கம் திட்டமிடப்பட்டது. எய்ட்ஸ் - போதை பழக்கத்திற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் பிரதிநிதிகள் சங்கம், ஆகிய அமைப்புகளை இணைத்து எய்ட்ஸ் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிராக (AIDS and drug addiction comat wave) என்ற பெயரில் ஒரு குழு உருவாக்கப்பட்டது.


இந்த தலைப்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக எய்ட்ஸ் மற்றும் போதைக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய வகையிலும், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையிலும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. சென்னை நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சுவரெழுத்துக்களும், எழுதப்பட்டு விரிவான அளவில் பிரச்சாரம் செய்யப் பட்டது.


நிகழ்ச்சியை நடத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் விளம்பரம் சேகரித்து (ஸ்பான்சர்), பேனர்கள் வைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வந்த கோகோ கோலா நிறுவனத்தின் தலைமை இடத்தை அணுகி சென்னை மாவட்ட நிர்வாகிகள் விளம்பரம் (ஸ்பான்சர்) கேட்டனர்.


அதற்கு கோகோ கோலா நிறுவனம், ''நாங்கள் மக்களை போதைக்கு அடிமையாக்குகிறோம். அதுதான் எங்கள் தொழில். எங்கள் தொழிலுக்கு எதிராக நாங்கள் ஸ்பான்சர் செய்ய மாட்டோம்'' என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.. கோகோ கோலா என்ற குளிர்பானத்திற்கு இளைஞர்களை அடிமை ஆக்குவது அவர்களின் வியாபாரமாக இருந்தது. லாபவெறி அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. எனவே தான் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் போதை பொருளை எதிர்ப்பதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை. பேரழிவைவிட லாபம்தான் முக்கியம் என்பது முதலாளித்துவம்.


1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காமராஜர் நினைவரங்கத்தில் பிரம்மாண்டமான கருத்தரங்கம் நடைபெற்றது. வாலிபர் சங்கத் தோழர்கள் கிளை மூலமாக (அன்று முகநூல் வலைதள வசதிகள் இல்லை) செய்த பிரச்சாரத்தின் விளைவாக 2200க்கு மேற்பட்ட இளைஞர்கள் காமராஜர் அரங்கத்தில் குவிந்தனர். அரங்கமே நிறைந்து வழிந்தது.


கருத்தரங்கத்தை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.மிஸ்ரா அவர்கள் துவக்கி வைத்தார்கள். பத்திரிக்கையாளர் என்.ராம் அவர்களும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.பொன்னுசாமி அவர்களும் மற்றும் மருத்துவர்களும் துறைசார்ந்த நிபுணர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.


மாநிலச் செயலாளர் தோழர் டி.ரவீந்திரன் முன்னாள் செயலாளர் சு.பொ. அகத்தியலிங்கம். மாவட்ட நிர்வாகிகள் மாதவ், டி.கே.சண்முகம், க.பீம்ராவ் சி.திருவேட்டை. ஆர்.முரளி. ஆர்.சுரேஷ், பா.ரவி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவராக இருந்த நான் (பாக்கியம்) நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினேன்.

 

ரத்ததான கழகத்தின் தலைவராக இருந்த தோழர் ராஜப்பா அவர்கள் இந்த கருத்தரங்கை ஒருங்கிணைப்பதிலும், நீதிபதி உட்பட பலரையும் பங்கேற்க செய்வதிலும் முக்கிய பங்காற்றினார். கருத்தரங்கத்தில் அபாயம் அகற்று என்ற விழிப்புணர்வு மலர் வெளியிடப்பட்டது


அரங்கம் நிறைந்த கூட்டமாக இருந்தாலும், மருத்துவர்களும் நிபுணர்களும் பார்வையாளர்களிடமிருந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரங்கத்திலேயே விளக்கம் அளித்தார்கள். வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் சங்கத்திற்கு அப்பாற்பட்ட இளைஞர்கள் பரவலாக இந்த இயக்கத்தில் கலந்து கொண்டனர்.


கருத்தரங்கம் நடைபெற்ற அன்று மாலை காமராஜர் அரங்கத்தில் இருந்து காந்தி சிலைவரை விழிப்புணர்வு ஓட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. காவல்துறை முதலில் அனுமதி மறுக்கவில்லை. பெரும் கூட்டத்தை பார்த்தவுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே விடுமுறை நாட்களில் அதை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்கள். தடை விதித்தார்கள்.


வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒரு நல்ல நோக்கத்திற்காக இளைஞர்களை திரட்டி நடத்தக்கூடிய அந்த ஓட்டம் காவல்துறையுடன் மோதலாகவும், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய முறையிலும் விடக்கூடாது என்பதற்கான ஆலோசனையாக அமைந்தது. அதன் அடிப்படையில் 26.2.1995 அன்று விழிப்புணர்வு ஓட்டத்தை என்.ராம் அவர்கள் துவக்கி வைக்க 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்த ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.


போதை பழக்கத்திற்கு எதிரான இயக்கத்திற்காக மாணவர் சங்கத்தின் முன்முயற்சியால் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. 


போதை பழக்கத்திற்கு எதிரான இந்த இயக்கம் அகில இந்திய அளவில் ஒரு முன்னுதாரணமான இயக்கம் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய குழு தமிழ்நாடு மாநில குழுவையும், நிகழ்ச்சி நடத்திய எய்ட்ஸ் மற்றும் போதை எதிர்ப்பலை குழுவையும் பாராட்டியது.


கோகோ கோலா நிறுவனம் விளம்பரம் தர மறுத்தார்கள் என்பது ஒரு செய்தி என்றால், மற்றொரு செய்தி சென்னையில் வாலிபர் சங்கம் வலிமையாக இருந்த ஒரு பகுதியில், இந்த இயக்கத்தை பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. காரணம், சாராயம் காய்ச்சுவது அங்கு குடிசைத் தொழிலாகவே இருந்தது.  சென்னை முழுவதும் அங்கிருந்துதான் சப்ளை செய்யப்பட்டது என்று கூட சொல்லப்பட்டது. அந்தப் பகுதியில், மது, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்றும், அப்பகுதி இளைஞர்களுக்கு மாற்று வேலை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை இணைத்து  போதை எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடக்க காலம் தொட்டே, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிராகவும் போதைப் பழக்கத்திற்கு எதிராகவும் கிளை முதல் மாநில தலைமை வரை பிரச்சாரங்களையும் இயக்கங்களையும் நடத்திக் கொண்டிருந்தது.


1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஓட்டம் சென்னையில் மெரினாவில் காமராஜர் சாலையில் நடைபெற்றது.1300 இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.


1990-ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று மதுரையில் மது ஒழிப்பு பிரச்சார ஓட்டம் நடைபெற்றது. இந்த ஓட்டத்தில் 80 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு முன்பாக மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இவையெல்லாம் மதுரை மக்கள் மத்தியில் வாலிபர் சங்கத்திற்கு பெரும் மதிப்பை உயர்த்தியது.


திருநெல்வேலி மாவட்டத்தில் எய்ட்ஸ் மற்றும் போதை எதிர்ப்பை கருத்தரங்கம் 22.4.1995 அன்று நடைபெற்றது. வாலிபர் சங்கத்திலிருந்து 300 இளைஞர்களும் பொதுவான இளைஞர்கள் 700 பேர் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றனர். இந்த கருத்தரங்கத்தில் மாநிலத் தலைவர் என்ற முறையில் நான் கலந்து கொண்டேன். நெல்லை மாவட்டத்திலிருந்து மருத்துவர்களும் நிபுணர்களும் கலந்து கொண்டனர். தோழர்கள் கருமலையான், சேவியர் கண்ணன், சிவசாமி போன்றவர்கள் நிர்வாகிகளாக இருந்து நிகழ்வை நடத்தினர். கருத்தரங்கத்தில் விழிப்புணர்வு மலர் வெளியிடப்பட்டது.கருத்தரங்கத்தின் நிறைவாக விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது இதில் 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டவர்கள்.


சேலம் மாவட்டத்தில் எய்ட்ஸ் மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான கருத்தரங்கம் 27.5.95 அன்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் டி.ரவீந்திரன் கருத்தரங்கத்தை துவக்கி வைத்தார். மாநில தலைவராகிய நான்(பாக்கியம்) கருத்தரங்கத்தை நிறைவு செய்தேன். மாவட்ட நிர்வாகிகள் பி.தங்கவேலு ஆர்.குழந்தைவேலு மேவை.சண்முகராஜா போன்ற தோழர்கள் நிர்வாகிகள் செயல்பட்டு கருத்தரங்கத்தை நடத்தினார்கள். இந்த கருத்தரங்கத்தில் 700க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றனர். மலர் வெளியிடப்பட்டது மாலையில் நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு பெற்றது சிறப்பாக அமைந்தது.


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கருத்தரங்கம் மட்டுமல்ல களத்திலும் கள்ளச்சாராயத்தை எதிர்த்து, போதைப் பழக்கத்தை எதிர்த்து சட்ட ரீதியான முறையில் மக்களை திரட்டி போராடி இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


வாலிபர் சங்கத்தில் இணைந்த காலத்தில் நான் வாழ்ந்த வியாசர்பாடி சாஸ்திரி நகரில் சுற்றுவட்டாரத்தில் கள்ளச்சாராயம் மிகப்பெரும் பிரச்சினையாக இருந்தது. எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்தது மட்டுமல்ல, சமுகவிரோதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வாலிபர் சங்கத்தை ஆரம்பித்த காலத்திலேயே, சிஐடியு தலைவராக இருந்த லூர்துசாமி, மற்றும் ராமு போன்றவர்கள் ஊர்தலைவர்களாக இருந்ததால் வாலிபர்களை திரட்டி கள்ளச்சாராயத்தை கைப்பற்றி, தெருக்களில் போட்டு எரித்தார்கள். ஆளும் கட்சிஆதரவுடன் காவல்துறையின் ஒத்துழைப்புடன் நடந்த கள்ளச்சாராயத்தை கைப்பற்றி சாலையில் போட்டு எரித்த சம்பவம் மக்களிடம் வாலிபர் சங்கத்தின் மதிப்பை மேலும் உயர்த்தியது. எங்களை போன்ற இளைஞர்களை களத்தில் இறக்கியது. 


சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் பெரிய மேடு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தோழர்கள்,கோதண்டபாணி, கொண்டையா, கண்ணையா போன்ற தோழர்கள் வாலிபர் சங்கத்தை ஆரம்பித்தார்கள். இங்கு உருவான வாலிபர் சங்கத் தலைவர்கள் மனோகரன், விஜயகுமார், ராமமூர்த்தி, ராஜாமணி மற்றும் மாதர் சங்கத்தைச் சேர்ந்த சரளா உட்பட பலர் உள்ளூர் பிரச்சனைகளில் இயக்கம் நடத்தினர்.


பெரியமேடு பகுதி அன்றைய தினம் கஞ்சா மற்றும் பிரவுன் சுகர் போன்ற போதைப்பொருள் விற்பனையில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. இப்பகுதியில் இருந்த பல இளைஞர்கள் பிரவுன் சுகர் என்ற போதைப் பொருளுக்கு அடிமையானார்கள். அந்தப் பவுடரை நீரில் சூடேற்றி ஊசியின் மூலமாக செலுத்திக் கொள்வதால் எய்ட்ஸ் நோய் பரவுவதும் அதிகமாக இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த எட்டுக்கும் அதிகமான இளைஞர்கள், போதைப் பொருளுக்கு அடிமையாகி ஒரு மாத காலத்தில் இறந்தார்கள். இதுபற்றி அபபோது இளைஞர் முழக்கம் இதழில், நான் ஒரு சிறிய கட்டுரை எழுதினேன். கல்லூரி மாணவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் சிலரும் அங்கு வந்து போதைப் பொருள் வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர் என்றும் கூறுவார்கள். 


காவல்துறையின் உதவியும் ஆட்சியாளர்களின் ஆசீர்வாதமும் போதைப் பொருள் விற்கும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக இருந்தது. இதற்கு எதிராக வாலிபர் சங்கம் மக்களை திரட்டி போராட்டம் நடத்தியது. அதிகாரிகளிடம் புகார் அளித்தது. அதிகாரிகளும், உள்ளூர் காவல்துறையினரும் சமூக விரோதிகளை வாலிபர் சங்கத்திற்கு எதிராக திருப்பி விட்டனர். எனினும் மக்கள் வாலிபர் சங்கம், மாதர் சங்கத்திறகு ஆதரவாக இருந்தனர். 

போதை ஆசாமிகளுக்கு ஆதரவாக வாலிபர் சங்க தோழர்களை பொய்வழக்கு போட்டு கைது செய்து லாக்கப்பில் வைத்து விடுவார்கள்.  


மக்கள் பலமுறை பெரியமேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தோழர்களை விடுவித்து வந்துள்ளனர். இரவு 12 மணிவரை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இரவிலும் 300க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். நானும் அங்கு நடைபெற்ற அனைத்து போராட்டத்தில் கலந்துகொண்டு உள்ளேன். 


காவல்துறையின் சமூக விரோத ஆதரவு செயல்பாட்டால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த எட்டுக்கும் அதிகமானவர்கள் மீது கொலைவழக்கு ஜோடிக்கப்பட்டு பல மாதங்கள் தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதுபோன்று மேலும் இரண்டு முறை 6 தோழர்கள் பொய்வழக்கு போடப்பட்டு பலமாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்தடுத்த பொய் வழக்குகள் போடப்பட்டு கொண்டே இருந்ததன. இந்த வழக்குகளின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது


. அப்போது இரண்டு நீதிமன்ற வளாகத்திலும் பெரியமேட்டை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் தினசரி கூடிவிடுவார்கள். சாப்பாட்டை அண்டாவில் சமைத்து எடுத்து வந்துவிடுவார்கள். உயர் நீதிமன்றம் முழுவதும் இந்த வழக்கு இதனால் பிரபலமானது. இப்படி பலநாட்கள் நடந்தது. அனைத்து தோழர்களும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக தான் சமூக விரோதிகளுக்கு எதிராகவும், அவர்கள் இளைஞர்களை போதை பழக்கத்திற்கு தள்ளுவதற்கு எதிராகவும் வெற்றி பெற முடிந்தது.


கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து மக்களை, இளைஞர்களை அணிதிரட்டி போராட்டம் நடத்தப்பட்டது, அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் கள்ளச்சாராயம் மக்களை மாய்த்துக்கொண்டிருந்தது. தோழர்கள். குமார் ஆனந்தன் என்ற வாலிபர் சங்க நிர்வாகிகள் கள்ளச்சாராய சக்திகளை எதிர்த்து போராடிய பொழுது படுகொலை செய்யப்பட்டனர்.


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே நேரத்தில், களத்திலே இறங்கி போராடவும் தயங்கியது என்பதற்கான வரலாற்று சாட்சியங்கள் தான் மேலே கூறப்பட்டவை. 


தமிழகத்தில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு ஒரு சில படித்த குழுக்களால் போஸ்டர் இயக்கங்களாக நடத்தப்பட்டு, மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்த பெருமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேரும். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் சந்தைமயமாக்கப்பட்டு சந்து பொந்துகளில் எல்லாம் டாஸ்மாக் கடைகள் பெருகி, குடியால் பல லட்சம் குடும்பங்கள் பாழான போதுதான், தமிழகத்தில் பரவலாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் எழுந்தன. ஆனால், வாலிபர் சங்கம் (DYFI) தொடக்க காலம் தொட்டே மதுவின் தீமைகளுக்கு எதிராக, போதைப் பழக்கத்திற்கு எதிராக, இளைஞர்கள் சீரழிக்கப்படுவதற்கு எதிராக மக்களை திரட்டி போராடி வருகின்றனர். இன்றும் அந்த போராட்டம் இழப்புகளை சந்தித்தாலும் தொடரும்...


-அ.பாக்கியம்


ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2022

அவரென்ன உங்கள தேடுறது நீங்க அவர தேடிப்போங்க.

 



1982-ம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திலும் சென்னை யிலும் குடிநீர் பஞ்சம் மக்களை வாட்டி எடுத்தது. மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், சென்னை மக்களின் குடிநீர் தேவைகளை தீர்த்து வைக்காமல் மழை பெய்யவில்லை என்ற காரணத்தை மட்டும் கூறிக் கொண்டே இருந்தது.

நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டே இருந்ததால் சென்னை நகரத்தின் பல இடங்களில் சிறிய சிறிய போராட்டங்களும், எதிர்ப்பு இயக்கங்களும், மனு கொடுக்கிற நிகழ்வுகளும், நடந்து கொண்டிருந்தது. தமிழகத்திலும் பல இடங்களில் இந்த போராட்டங்கள் இங்கு மங்குமாக நடந்து கொண்டிருந்தது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மாதர் சங்கமும் பல்வேறு இடங்களில் மனு கொடுப்பது சுவரொட்டிகள் ஓட்டுவது சில இடங்களில் உண்ணாவிரதம் இருப்பது போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் கொழுந்து விட்டு எறிவதற்கு எங்காவது ஒரு இடத்தில் தீப்பொறி தேவைப்படுகிறது. அந்த தீப்பொறியாக பெரும் போராட்டம் ஒன்று சென்னை ஓட்டேரிக்கு அருகாமையில் உள்ள ஸ்டார்ன்ஸ் ரோட்டில் நடைபெற்றது.

1985-ம் ஆண்டு இறுதியில் இந்த பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டது. வாலிபர் சங்கம் மக்களுடைய அடிப்படையான பிரச்சனைகளை கையில் எடுத்து மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்திக் கொண்டிருந்தது. குறிப்பாக குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி துண்டு பிரசுரம் விநியோகித்தது சுவரொட்டி களும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தியது.

 

சென்னையில் மிக முக்கியமான நெருக்கடி மிகுந்த வியாபார ஸ்தலங்களும், திரையரங்குகளும் நிறைந்த இந்தப் பகுதி குடிதண்ணீர் தொடர்ந்து கிடைக்காமல் அவதிக்க உள்ளாகியது.

உரிய காலத்தில் குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சாலை மறியல் நடைபெறும் என்று வாலிபர் சங்கம் போராட்டங்கள் மூலமாகவும், பிரச்சாரங்கள் மூலமாகவும் எடுத்துரைத்து வந்தது.

சில நாட்கள் தொடர்ந்து குடிநீர் வராததனால் கோபம் அடைந்த மக்கள் நீண்ட சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டார்கள். சுமார் 5000 பேருக்கு மேல் அந்த சாலையில் அமர்ந்து விட்டனர் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.

வாலிபர் சங்கத்தின் கிளை நிர்வாகிகளாக இருந்த நாராயணன், சுப்பிரமணி, சங்கர் மேலும் பலரும் சேர்ந்து நானும் போராட்டத்திற்கு சென்று கலந்து கொண்டோம்.

அங்கிருந்த மக்கள் நாற்காலிகளை கொடுத்து அதன் மீது ஏறி நின்று பேச சொன்னார்கள். அரசின் செயலற்ற தன்மையும் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினோம்.

ஸ்தலத்துக்கு வந்திருந்த அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். காவல் துறையும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் கலைந்து செல்ல வேண்டும் என்று மிரட்டினார்கள்.

பல மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் சுற்றுவட்டாரத்தில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் மக்கள் தானாக மறியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இவை அனைத்தும் ஊடகங்களுக்கும் செய்தியாக சென்று கொண்டிருந்ததனால், காவல்துறையும் அரசும் கடுமையான முறையில் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தார்கள். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் சோடா பாட்டில்களை வீசி கூட்டத்தை கலைப்பதற்கு காவல்துறை க்கு உதவி செய்தார்கள். பலருக்கும் தடியும் ரத்த காயங்களும் ஏற்பட்டது.

மறியல் இடத்திற்கு வந்த அதிகாரிகள் லாரிகள் மூலமாக அவசர அவசரமாக தண்ணீர்களை அனுப்பி கொண்டு இருந்தார்கள். அந்த மாபெரும் கூட்டத்தை வாலிபர் சங்கத்தினால் ஒட்டுமொத்தமாக தலைமை தாங்க முடியவில்லை,கட்டுக்கோப்புக்குள் எங்களால் கொண்டுவர முடியவில்லை  என்றாலும் போராட்டத்தின் தீப்பொறியாக வாலிபர் சங்கம் இருந்தது.

அந்தப் போராட்டத்தை கலைத்து விட்டோம் என்ற இறுமாப்புடன் காவல்துறையும், அதிகாரிகளும் கலைந்து சென்ற பிறகுதான் அவர்களுக்கும், அரசுக்கும் விஷயம் புரிந்தது. சென்னை நகரம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்த நாட்கள் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் அனைத்து சந்து முனைகளிலும் தெருக்களி லும் வெடிக்க ஆரம்பித்தது.

இவற்றையெல்லாம் காவல்துறை தடியடி நடத்தி கலைப்பதிலேதான் குறியாக இருந்தது தவிர தண்ணீர் வழங்குவதற்கான முன்னுரிமை கொடுக்கவில்லை.

பல்வேறு இடங்களில் வாலிபர் சங்கத்தின் கிளைகள் இருக்கக்கூடிய பகுதியில் வாலிபர் சங்கத்தின் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றது. இதன் வீச்சாக தண்ணீர் கிடைக்காத இடங்கள் எல்லாம் மக்கள் தானாகவே போராட ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நேரத்தில் இந்தப் போராட்டத்திற்கு வாலிபர் சங்கம் தான் காரணம் என்றும், அவர்கள்தான் தூண்டிவிடுகிறார்கள் என்றும்  அதனுடைய நிர்வாகிகளாக இருந்த என்னையும் கருணாநிதியையும் தேட ஆரம்பித்தார்கள். அப்போது சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜேப்பியார் இருந்தார். அதிமுகவின் அடியாட்கள் பலம் கொண்டவராக ஜேப்பியார் இருந்தா. அவர்தான் எங்கள் இருவரையும் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் போராட்டம் நடந்த இடங்களிலும் தேடுவதாக கூறினார்கள். நாங்களும் போராட்டங்களிடையே தான்  நாங்களும் மற்ற நிர்வாகிகளும் இருந்தோம்.

அவர் எங்களை தேடுகிறார் என்று தெரிந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாவட்ட செயலாளராக இருந்த தோழர் வி.மீனாட்சிசுந்தரம் அவர் என்ன உங்களைத் தேடுவது நீங்கள் அவரைத் தேடிப் போய் பாருங்கள் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்.

நானும் கருணாநிதியும் இருவர் மட்டுமே ஒரு ஸ்கூட்டரில் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சென்றோம். ஜேப்பியாரின் அறைக்கு சென்ற பொழுது அவர் அங்கு இல்லை. வாரியத்தின் இயக்குனர் மட்டும்தான் அங்கு இருந்தார். நாங்கள் வந்த தகவலை தெரிவித்து ஜேப்பியாருக்கு  தெரிவிக்க கேட்டுக் கொண்டோம்.

அவரும் அன்று இருந்த தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்தார். சில மணி நேரம் காத்திருந்த பிறகு ஜேப்பியார்  வரவில்லை. இயக்குநர் எங்களை  அழைத்து பேசினார்.

நீங்கள் மக்களை தூண்டி விடக்கூடாது என்று அவர் எங்களிடம் தெரிவித்தார். நாங்கள் மக்களை தூண்டி விடவில்லை மக்கள் குடிநீர் கிடைக்காமல் எங்கே போவார்கள். அரசிடம் தானே முறையிட வேண்டும் எத்தனை எத்தனை முறை முறையிட்டாலும் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. என்பதால் மக்கள் தெருவுக்கு வருகிறார்கள். நீங்கள் தான் குடிநீரை கொடுக்காமல் மக்களை போராடத் தூண்டுகிறீர்கள் என்று தெரிவித்தோம். உடனடியாக அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. மக்கள் போராட்டம் நடத்தினால் அதை ஆதரிப்போம் தலைமை தாங்குவோம் என்பதை தெரிவித்து விட்டு மேலும் சில மணித்துளிகள் காத்திருந்து விட்டு வந்து விட்டோம்.

சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்து கொண்டுதான் இருந்தது. குறிப்பாக வட சென்னையில் போராட்டங்கள் நடைபெறாத இடமே இல்லை என்ற அளவுக்கு நிலைமை மோசம் அடைந்திருந்தது. காவல்துறை கூட்டத்தை கலைப்பது வாலிபர் சங்க தோழர்களை கண்டால் தாக்கி கைது செய்வது வழக்கு போடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். நான் கன்னிகாபுரம் கிளாஸ் பேக்டரி அருகில்  நடைபெற்ற மறியல் செய்தவர்களை பார்க்கச்சென்றபோது என்னை பிடித்து வேனில் ஏற்றி மக்கள் கூச்சல் போட்டவுடன் இறக்கிவிட்டனர்.

தமிழகத்தில் திண்டுக்கல், வேடச்சந்தூர், மதுரை, திருச்சி என போராட்டங்கள் நடந்தது. 1983 ஆம் ஆண்டு களிலிருந்து 87 ஆம் ஆண்டு வரை இந்த போராட்டங் கள் தீவிரமடைந்தது.

1983 ஆம் ஆண்டு வாலிபர் சங்கத்தின் சார்பிலும் மாதர் சங்கத்தின் சார்பிலும் சென்னை திருச்சி சேலம் மதுரை போன்ற மாவட்டங்களில் காலி பானைகளை உடைக்கும் போராட்டம் பல நூறு நடைபெற்றது.

மதுரையில் குடிதண்ணீர் நெருக்கடியினை தீர்க்க வலியுறுத்தி  சுவரொட்டிகளும் சுவர் எழுத்துக்களும் எழுதப்பட்டன. பானை உடைப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. மதுரையின் பெரும்பாலான கிளைகளில் வீதி முனைகளில் பானைகளை கட்டி தொங்கவிட்டு பானை இங்கே தண்ணீர்எங்கே என்று மிகப்பெரும் தட்டிகளை எழுதி வைத்தார்கள்.

 காகித அட்டையில்  செய்யப்பட்ட பானை வடிவிலான ராக்கெட்டுகளையும் மேலே செலுத்தினார்கள். மதுரையில் வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்து, பிறகு மதுரை மாமன்ற உறுப்பினராகி குடிதண்ணீரை வியாபாரம் ஆக்குவதற்கு எதிராக குழாய் மூலம் கொண்டு வருவதற்கான போராட்டத்தில் வெற்றி அடைந்த லீலாவதி அவர்கள் குடிதண்ணீர் போராட்டத்தில்தான் 1997ம்  ஆண்டு படுகொ லை செய்யப்பட்டார்கள்.

 

செங்கல்பட்டுநகரத்திலும் 87 ஆம் ஆண்டு குடிநீர் கேட்டு போராட்டமும் கடைஅடைப்பு நடைபெற்றது. இந்தப் போராட்டங்கள் அதிமுக அரசுக்கு கடுமையான நெருக்க டியை கொடுத்தது 1980 ஆம் ஆண்டு தெலுங்கு கங்கா திட்டம் அமலுக்கு வந்திருந்தாலும் போதிய அளவு குடிதண்ணீர் கிடைக்கவில்லை. அதை தீர்ப்பதற்கான முறையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை வாலிபர் சங்கத்தின் இந்த போராட்டங்கள் ஏற்படுத்தியது.

மற்றொரு திட்டமான வீராணம் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. மக்களின் இந்த போராட்டங்கள் காரணமாக விவாத பொருளாக மாறி 2004 ஆம் ஆண்டு குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிதண்ணீர் கொண்டுவரப் பட்டது.

சென்னையில் குடிதண்ணீர் பிரச்சினை இன்றும் பற்றாக்குறை பிரச்சினையாகதான் இருக்கிறது தமிழகத்தில் பல நகராட்சிகளில் ஐந்து நாள், ஆறு நாட்கள் இடைவெளியில் தான் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இன்றளவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மக்களுடைய அடிப்படையான இந்த பிரச்சனைகளுக்கு போராட்டத்தை முன்னெடுத்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் புரிகிற பாஷை என்பது போராட்டம்தான் என்பதை வரலாற்றின் மூலமாக நாமும் அறிந்து கொள்ள முடியும். ஆட்சியாளர்களுக்கும் கடைசி கட்டமாக அந்த பாஷை தான் புரிய வைக்க முடியும். இதற்கு மக்கள் திரளில் நாம் இருக்க வேண்டும். மக்கள் போராட்டத்தில் முன்நிற்போம்.

. பாக்கியம்

 

 

 

 

 

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...