Pages

திங்கள், அக்டோபர் 18, 2021

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி? அ.பாக்கியம்

 

                           இந்தியத் தேர்தல்களை

வெல்வது எப்படி?

 அ.பாக்கியம்


                         இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி என்ற தலைப்பில் பாஜகவின் முன்னாள் தேர்தல் ஆலோசகர் சிவம்சங்கர்சிங் எழுதிய ஆங்கில புத்தகத்தை தோழர் இ.பா.சிந்தன்  தமிழில் மொழி பெயர்த்து எதிர் வெளியீடு வெளியிட்டிருக்கிறது. இந்தஆண்டு நடைபெற்ற சென்னை புத்தககாட்சியில் அதிகம் விற்பனையான புத்தகம் என்று அறியப்படுகிறது.


       காலத்தின் தேவை கருதி, இன்றைய அரசியலின் அவசியம் கருதி,  மிகமுக்கியமான புத்தகத்தை சீரியமுயற்சி எடுத்து தமிழில் மொழிபெயர்த்து இருப்பது தமிழக அரசியல் களத்திற்கு ஆற்றியிருக்ககூடிய மிகப்பெரிய செயலாகும். அந்த வகையில் தோழர். இ.பா.சிந்தன் அவர்களை எத்தனை முறைபாராட்டினாலும் மிகையாகாது.


       2014-
ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இந்திய தேர்தல் முறைகளிலும், பிரச்சாரம் முறைகளிலும், அடிப்படையான மாற்றம் ஏற்பட்டிருப்பது மட்டுமல்ல தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் அறியமுடிகிறது. தரவுகளை வகைப்படுத்தல், கோரிக்கைகளை உருவாக்குதல், பிரச்சாரம் செய்தல் வாக்குறுதிகளை தயார்செய்வது, பிம்பங்களை கட்டமைப்பது, வெறுப்புகளை விதைப்பது, போலி செய்திகளை உற்பத்தி செய்துபரப்புவது,  வலைதள செயலிகள் மூலம் வாக்காளர்கள் கருத்துக்களை மாற்றி அமைப்பது என பலமுனைகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்களை நுணுக்கமாக புத்தகம் எடுத்துரைக்கிறது.


          புத்தகத்தின் முக்கிய அம்சம் சிவம்சங்கர்சிங் பாஜகவின் தேர்தல் ஆலோசகராக இருந்து பாஜக செய்த தில்லுமுல்லுகளை தனது வாக்குமூலமாகவே பதிவு செய்திருக்கிறார். ஒரு ஊடகவியலாளரின் வாக்குமுலமாக பல இடங்களில் உள்ளது.

 

          2014-ஆம் ஆண்டுக்கு பிறகு பாஜகட்சியும், சங்பரிவாரங்களும் கார்ப்பரேட் உதவியுடன் வலைதளங்களை எவ்வாறு துல்லியமாக பயன்படுத்தினர் என்பதை விரிவாக விளக்குகிறார். அதேநேரத்தில், பாஜகவின் பிரம்மாண்டங்களை ஒருவாசகன் உள்வாங்கு வதைவிட அதன் மோசடித்தனங்களை அம்பலப்படுத்தி இருப்பது வாசகனின் நினைவில் தங்குகிறது.


          நவீனவளர்ச்சியைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மைசெய்வது என்பதைவிட, வலைதளசெயலிகள் மூலம் மக்களின் வாக்குகளை ஏமாற்றிவாங்குவது, பணம் வினியோகிக்க பயன்படுத்துவது, வெறுப்பு உணர்ச்சிகளை தூண்டுவது, சாதிமதப் பிரிவினைகள் அனைத்தையும் உருவாக்ககூடிய செயலில் ஈடுபடுவது போன்றவற்றுக்காகதான் பாஜக முழுமையாக வலைதளத்தை பயன்படுத்தி இருக்கிறதை ஆதாரங்கள் முலம் அம்பலப் படுத்தியுள்ளார்.


           இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது பாஜகவை தோற்கடிக்க நினைக்கிற அரசியல்கட்சிகள் மற்றும் சித்தாந்த ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், வீழ்த்த நினைக்கிற இயக்கங்களும், வலைதளத்தை பயன்படுத்துவதில் வெகுதூரத்தில் உள்ளதை தெளிவாக புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டியவர்கள் என்று நான் கருதுவது அரசியல் இயக்கங்களில் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பவர்களும் டைமட்டதலைவர்களும்தான்.


             அரசியலில் நிச்சயமற்றதன்மை இருந்து கொண்டிருக்கக் கூடிய இந்தகால கட்டத்தில், துல்லியத்தன்மை மிக அவசியமானது. துல்லியத்தன்மை இல்லைஎன்றால், வெற்றி பெறமுடியாது.  நாளை என்ன நடக்கப்போகிறது அடுத்தவாரம் என்ன நடக்கப் போகிறது, அடுத்தமாதம் என்ன நடக்கப்போகிறது, அடுத்தவருடம் என்ன நடக்கப்போகிறது, என்பதை முன்கூட்டியே கணிக்ககூடிய திறன்படைத்தவராக ஒருஅரசியல்வாதி இருக்க வேண்டும். அப்படிகணித்தது எதுவும் நடக்காமல் போனாலும் அது ஏன் அவ்வாறு நடக்க வில்லை என்பதற்கான நியாயத்தை விளக்கக் கூடியதாகவும் அவர் இருக்கவேண்டும் என்று வின்ஸ்டன்சர்ச்சிலின் மேற்கோள்களை எடுத்துக்காட்டி யுள்ளார்.


            தேர்தல் முடிவை தெரிந்து கொண்டபின்னர் அது எப்படி ஏற்பட்டிருக்கக்கூடும் என்கிற திரைக்கதையை எழுதிவிட்டு அதுதான் வெற்றிக்கான உண்மையான காரணம் என்று வாதிடுவதுதான் காலம்காலமாக நடந்துவருகிறது. தேர்தலுக்கு முன்பே அதே மாதிரியான காரணங்களை சரியாக அவர்களால் வரையறுத்து இருக்க முடியாது. எனவே தேர்தலுக்கு பிந்தைய ஆய்வுகளை விட தேர்தலுக்கு முந்தைய துல்லியமான மதிப்பீடும், திட்டமிடலும் அவசியமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொண்டவர்கள் புரிந்துகொண்டவர்களாக இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை அழுத்தமாக பதியவைக்கிறார்.


            அரசியலை கண்டு கொள்ளாமல் அதிக அக்கறை இல்லாமலும் இருக்கிறாய் மக்களில் எவ்வளவு பேரை ஒருகட்சி ஆதரவு அளிக்கவைக்கிறதோ அந்த அளவுக்கு அந்தக் கட்சியின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.


              பாஜக இந்த அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களை தன்பக்கம் ஈர்ப்பதற்கு சாதி மத இன உணர்வுகளை பயன்படுத்தினாலும் அதற்கும் மேலாக ஒரு பிம்பத்தைகட்டி அமைத்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களை ஈர்ப்பதற்கு நிஜதலைவர்கள் பாஜகவில் இல்லாத நிலையில் அப்படிப்பட்ட வரலாறும் அவர்களுக்கு இல்லாத நிலையில், பிம்பம் என்ற கட்டமைப்பை பிரமாண்டமாக கார்ப்பரேட் உதவிகளுடன் உருவாக்கினார்கள்.

 

               2014-ஆம் ஆண்டு மோடி வளர்ச்சி நாயகனாக கட்டமைக்கப்பட்ட எளியமனிதனாக அவர் முன்நிறுத்துவதற்கு அவர் ரயில் நிலையங்களில் டீவிற்பனை செய்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த மணிசங்கர்அய்யர் மோடிடீவிற்றவர், அவருக்கு அனுபவம் இல்லை என்று பேசிய பொழுது அதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோடி எளியமனிதர் காங்கிரஸ்கட்சியில் இருப்பவர்கள் பெரும்பணக்காரர்கள் என்று பிம்பத்தை உருவாக்கினார்கள்.


                  லட்சக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவழித்து வாங்கப்படும் விலை உயர்ந்த ஆடைகளை எப்போதும் அணிந்தாலும், தன்னுடைய சுயவிளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவிட்டு கொண்டே இருந்தாலும், எப்போதும் நாடுநாடாக ஊர்சுற்றிக்கொண்டே இருந்தாலும், எளியகுடும்ப பின்னணியிலிருந்து வந்து மக்களுக்காக தொடர்ந்து செயல்படுபவர் என்கிறபிம்பத்தை தக்கவைத்துக் கொள்ளமுடிகிறது என்று  மோடியின் பிம்பத்தை பற்றி ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார்.


         மோடிக்கு இன்று உருவாகியிருக்கிறது பெரியபிம்பம் ஏதோ தற்செயலாக உருவானது அல்ல என்பது தெளிவானது. மிகத்துல்லியமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்று பிம்பம் கட்டமைக்கப்பட்டதைப்பற்றி சிவம்சங்கர்சிங் வரிசைப்படுத்துகிறார்.


            மோடியின் இந்தபிம்பத்தை உடைக்க நினைத்தவர்களை உருத்தெரியாமல் செய்வதற்கு ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகத்தின் கீழ் நேரடிகண்காணிப்பில் 200 பேர் கொண்ட ஊடககண்காணிப்புக்குழு செயல்படுத் தப்படுகிறது. மோடியின் பிம்பத்திற்கு ஊடகங்களில் எந்த களங்கமும் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரேவேலைதான் கடந்த நான்காண்டுகளில் அந்தகண்காணிப்பு குழுவிற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அனைத்து செய்தித் தொலைக்காட்சி சேனல்களையும் இடைவிடாமல் கண்காணிக்கும் வேலையை அவர்கள் செய்து வருகிறார்கள்.இந்த பிம்பத்தை உடைக்கநினைத்தால் என்ன ஆகும் என்பதற்கு இதோ ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

 

               மாஸ்டர் ஸ்ட்ரோக் என்ற பெயரில் மோடி சத்தீஸ்கரில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணுடன் விவாதிக்கிறார். அந்தப்பெண் மோடி ஆட்சிகாலத்தில் விவசாயத்தால் தனது வருமானம் இரண்டுமடங்கு அதிகரித்திருக்கிறது என்று பேசுகிறார். இதை நாடுமுழுவதும் உலகம்முழுவதும் சங்பரிவாரங்கள் வலைதளம் மூலமாக எடுத்துச்செல்கிறது.
சில நாட்களில் வாஜ்பாய் என்று சொல்லக் கூடிய பத்திரிக்கையாளர் அந்த பெண்ணை சந்தித்து கேட்டபொழுது அது அவர்கள் சொல்லிக்கொடுத்தது என்றும் எனக்கு எந்தவருமானமும் கிடைக்க வில்லை என்பதை தெரிவித்தார்.இதையே வீடியோ பதிவாக பதிவு செய்து அந்த பத்திரிக்கையாளர் வெளியீட்டு மோடியின் பிம்பத்தை உடைத்தார். மோடியின் ஒன்றிய அரசு அந்த பத்திரிக்கையாளரை ஏபிபிதொலைக்காட்சியிலிருந்து வெளியேற்றி அந்த தொலைக்காட்சியையும் முடக்கியது. இப்படி எண்ணற்ற தகவல்களை பதிவு செய்துள்ளார்.


                       அரசியலுக்கு விளம்பரமும் சந்தைப்படுத்தலும் மிகமுக்கியமான அடித்தளமாகும். இந்த அம்சத்தை மோடி ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக முழுமையாக பயன்படுத்தியது. அரசின் விளம்பரசெலவை 400 கோடியிலிருந்து 1200 கோடியாக உயர்த்தியது. இந்தியாவில் செய்திகளை கட்டுப்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஊடகங்கள் அனைத்தும் முதலாளிகளுக்கு சொந்தமாக இருக்கிறது. பல முதலாளிகள் அரசியலிலும் இருக்கிறார்கள். பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ்சந்திரசேகர் கேபிட்டல் என்ற நிறுவனத்தின் மூலம் ஏராளமான ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் கட்டுப்படுத்துகிறார்.ஆசிரியர்குழுவில் இருக்கும் அனைவரும் வலதுசாரி கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும். வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது இதனை முறையாக சரிபார்த்து எடுக்கவேண்டு என்ற முடிவை அமுல்படுத்துகிறார். இது குறித்த அவரது விரிவான சுற்றறிக்கையை ஆசிரியர் பதிவிட்டுள்ளார். முகேஷ்அம்பானி 15-க்கும் மேற்பட்ட பிரதேச மொழிகளில் செய்தி நிறுவனங்களை கட்டுப்படுத்தக்கூடிய இடத்தில் இருக்கிறார். இதன் விவரங்களை ஆசிரியர் சிவம்சங்கர்சிங் விரிவாக எடுத்துச்சொல்லி யுள்ளார்.


              பத்திரிக்கையாளர்களை மோடி இதுவரை சந்தித்தது இல்லை. ஆனால் அவர் பேசுகிற விஷயங்கள் எப்படிபத்திரிகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகள்வசம் உள்ளது. கார்ப்பரேட்டுகளிடம் மோடி வசமாக வசதியாக இருக்கிறார். எனவே அவர் தும்மினால் கூடதலைப்புச் செய்தியாக மாற்றும் ஊடகங்கள்.

 

                     நிகழ்வுகளை செய்திகளாக மாற்றுவதற்குப்பதிலாக போலிச்செய்திகளை உருவாக்குவதற்கும்  வதந்திகளைப் பரப்புவதற்கும்   சங்பரிவாரங்கள் தனிப்பிரிவுகளை   வைத்து பராமரித்து வருகிறார்கள். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் எதுவுமே நடக்காதது போன்ற மாயையை உருவாக்கி 2014-ஆம் ஆண்டுக்குப் பிற்பாடுதான் அனைத்தும் நடைபெறுகிறது என்பதை திட்டமிட்ட பிரச்சாரம் செய்வதற்கு 4,000 கோடி ரூபாய்க்குமேல் இந்திய மக்களின் வரிப்பணத்தை செலவழித்து கொண்டிருக்கிறார்கள்.வதந்திகளை போலிச்செய்திளை பரப்பும் பல பாஜக வினரின் டிவிட்டர் பக்கங்களை பின்தொடர்பவர் நமது நாட்டின் பிரதமர் மோ என்பதையும் அம்பலப்படுத்துகிறார்.


                            2018-
ஆம் ஆண்டு திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அதற்கு முன்பு மணிப்பூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவின் தேர்தல் ஆலோசகராக இந்த புத்தகத்தின் ஆசிரியர் சிவம்சங்கர்சிங் செயல்பட்டுள்ளார். மணிப்பூரில் அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு எதிராக 100 குற்றச்சாட்டுகளை தயார்செய்து பாஜக தலைவர்கள் பிரச்சாரம்செய்து காங்கிரசை அம்பலப்படுத்தியது. அதே நேரத்தில் திரிபுராவில் அவ்வாறு ஒரு குற்றச்சாட்டுகளைகூட மாணிக்சர்க்கார் மீது நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும்  தோற்கடித்து ஆகவேண்டும் என்று முடிவின்படி ஒன்றிய அரசின் செல்வாக்கை பயன்படுத்தி பணபலத்தை பயன்படுத்தி மாணிக்சர்க்காரின் அரசுக்கு நெருக்கடிகளை கொடுத்தோம்

                        ஒருசில பாலியல்வன்முறை நடந்தாலும் அவற்றை பெரியபிரச்சினையாக மாற்றி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தோம். கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ரோஸ்வெல் என்று சொல்லக் கூடிய சீட்டுகம்பெனி திரிபுராவில் பலரிடம் சீட்டுபிடித்து ஏமாற்றியது. இந்த கம்பெனி நிர்வாகிகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி தலைவருக்கு தொடர்பு இருப்பது போன்ற புகைப்படங்களை போலியாக தயார்செய்து வெளியிட்டு பிரச்சாரம் செய்தோம்.

                             2004 ஆம்ஆண்டிலிருந்து திரிபுராவில் வன்முறை என்பது இல்லை. பிரிவினைவாத, தீவிரவாத  வன்முறையை ஒழித்துக்கட்டியது  சிபிஎம்-தான் என்று இளைஞர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு வேலையின்மை முக்கியபிரச்சினையாக இருந்தது. எனவே நாங்கள் கடந்தகால தீவிரவாதத்தைப் பற்றி பேசக்கூடாது என்று முடிவுசெய்தோம். திரிபுராவாக்காளர்களில் 43.1 சதம் இருக்கக்கூடிய 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலைவாய்பை முன்வைத்தே வீட்டுக்கு ஒருவேளை ஒருவருக்கு வேலைகொடுப்போம். இளைஞர்களுக்கு செல்போன் கொடுப்போம் என்று அறிவித்தோம். அரசுஊழியர்களுக்கு 7வதுசம்பள கமிஷனை உடனடியாக அமல்படுத்துவோம் என்று வாக்குறுதிகளை கொடுத்து, இதையெல்லாம் அமுலாக்க ஒன்றிஅரசால்தான் முடியும் அவர்களிடம்தான் நிதி உள்ளது என்பதை வலுவான முறையில் பிரச்சாரம்செய்து தோற்கடித்தோம். என்று புத்தகத்தின் ஆசிரியர் வாக்குமூலமாக பதிவுசெய்திருக்கிறார்.

                            உத்தர பிரதேசத்தில் அடையாள அரசியலை குறிப்பாக சாதியமுறைகளை எப்படி பயன்படுத்தப்பட்டது என்று அம்பலப்படுத்துகிறார். வாக்காளர்கள் பட்டியலின் பெயர்களை வைத்தே 70 சதவீதமான சாதிகளை அடையாளம் கொள்ளமுடியும். அந்த அடிப்படையில்  பிரிவினைகளை உருவாக்கி வெற்றிகொண்டமுறைகளை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

                     இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் செயல்படக் கூடிய னலிட்டிகா என்ற நிறுவனம் வலைத்தளத்தின் மூலமாக, முகநூல் மூலமாக, வாட்ஸ் அப் மூலமாக, வாக்காளர்களின் விருப்பங்களை தேர்வுசெய்து அதற்கு ஏற்ற முறையில் அவர்களின் கருத்துக்களை மாற்றியமைப்பதில் ஆய்வுசெய்தது வெற்றிகண்டது. இந்த ஆய்வுகளை அமெரிக்காவில் பயன்படுத்தியதையும், இந்தியாவில் சங்பரிவாரங்கள்  பயன்படுத்தியதையும் வெளிப்படுத்தகிறார். இவையெல்லாம் நாம்     இதுவரை கண்டிராத  தேர்தல்களத்தில்அம

         



 இந்தப் புத்தகத்தில் இன்னும் எண்ணற்ற நிகழ்வுகள், ஆதாரங்கள், வருங்கால ஆபத்துக்கள், என்று பல்வேறுநிகழ்கால நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய தேர்தலில் பழைய முறையிலான வடிவங்கள் காலாவதியாகிப்போனது புதிய முறைகளை கைகொள்ளவில்லை என்றால் பலஇயக்கங்கள் காணாமல் போய்விடுவதும் காலாவதியாகிவிடுவதும்தவிர்க்கமுடியாதது.

                        இந்த புத்தகம் வாசித்து சிலாகிப்பதுமட்டுமல்ல இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தை புதியமுறையில் முறியடிப்பதற்கான திட்டமிடலும் களப்பணியும் உடனடிதேவையாகும்.
                                                                                                           பாக்கியம்

      

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...