Pages

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

முகமது அலி: ஒரு கருப்பின போராளி

- ஏ.பாக்கியம்




விண்ணை முட்டும் கரவொலி
செவிப்பறை கிழியும் கூச்சல்!
கரவொலி - குரல் ஒலியுடன்
எதிரொலியும் இணைந்து கொண்ட அரங்கம்!
பெரும் ஆரவாரங்களுக்கிடையில்
அரங்கின் நடு மேடையிலிருந்து 
எரிமலை குழம்புகள் வெளியேறுவதுபோல்,
"நான் மகத்தானவன்
நானே மகத்தானவன்"

என்ற குரல் பீறிட்டு கிளம்பி, அத்தனை சப்தங்களையும் அமைதியாக்கியது. இந்த குரலுக்கும்,வார்த்தைக்கும் உரிமையாளனின் அடையாளம் இதோ.
வெளிர் கருப்பு நிறம்
6.3 அடி உயரம்
சுருட்டை முடி
தடித்த உதடுகள்
ஒழுங்கமைக்கப்பட்ட 
உடல்வாகு,புஜபலம்,
முஷ்டி மடக்கிய கைகள்
பட்டாம்பூச்சிபோல் மிதக்கும் கால்கள்
நெற்றி பொட்டில் குத்தி நிற்கும் இரு கண்கள்

என அமையப் பெற்ற அவன்தான் எளிதில் வெற்றி கொள்ள முடியாத குத்துச் சண்டை வீரன் முகமது அலி.

        னது 22வது வயதில் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு பிளோரிடா மாநிலம் மியாமி கடற்கரைக்கு வந்து சேர்கிறார் முகமது அலி. மோதப்போவது பிரபலமான சாம்பியன் சன்னி லிஸ்டனுடன் (SUNNY LISTON). அவன் சாம்பியன் மட்டுமல்ல. அங்குள்ள உழைப்பா ளர்களுக்கு எதிராக கூட்டங்களை கலைக்கவும், போராட்டக்காரர்களை காயப்படுத்தும் பணிகளை செய்யும் பிரபலமான அடியாளாகவும் திகழ்ந்தான். அவனின் ஆதரவாளர்கள் கேலி பேசினர். முகமது அலியை அவமானப்படுத்தினார்கள். அவநம்பிக்கையை விதைத்து விரட்டப் பார்க்கிறார்கள். ஆனாலும் அலி அசைந்து கொடுக்கவில்லை.

        1964 பிப்ரவரி 25 அன்று போட்டி துவங்கியது. ஒரே சுற்றில் போட்டி முடியும். சன்னி லிஸ்டன் எளிதில் வெல்வான் என நினைத்து அரங்கத்தில் அவனுக்கு ஆதரவான குரல்கள் இடைவிடாமல் எழுந்தவண்ணம் இருந்தது. முதல் சுற்று கடந்து இரண்டு...மூன்று சுற்றுகள் தொடர கூட்டங்களின் சப்தம் கடல் அலைகள் உள்வாங்குவது போல் அடங்கி புருவங்கள் விரிந்தன. ஆறாவது சுற்றில் லிஸ்டன் முகமது அலியால் வீழ்த்தப்பட்டான். கூட்டத்தினரின் விரிந்த புருவங்கள் நிலைத்து சில நிமிடங்கள் நின்றன. நடுவரின் மணியோசை ஒலித்தவுடன் அலியின் வெற்றி அறிவித்த நிலையில், நிசப்தமான அரங்கம் ஆரவாரத்தின் உச்சநிலையை அடைந்தது. இந்த ஆரவாரங்களுக்கிடையே முகமது அலி இருகைகளையும் உயர்த்தி "நானே மகத்தானவன்" (I am the greatest ) என எரிமலைகுழம்பு பீறிட்டு அடித்தது போல் கத்தினான். இந்த வார்த்தைகள் அடுத்த பத்தாண்டுகள் குத்துச்சண்டை உலகை ஆட்சி செய்தது.


உன்னால் முடிந்தால் என்னை பிடி
பட்டாம் பூச்சிபோல் மிதந்து,
தேனி போல் கொட்டுவேன்
உன்னால் முடிந்தால் என்னை பிடி!
என்ற கவிதை வரிகளுடன் வெற்றிப்பயணத்தில் தடம்பதித்தான்.


விருப்பத்தேர்வு இல்லை விடுதலைக்களம்:

குத்துச்சண்டை என்பது சமூகத்தில் ஏழைகள், விளிம்புநிலை மக்களின் விளையாட்டு. இந்த குத்துச்சண்டை விளையாட்டு, வீரர்களை சிவிங்கம் போல் மென்று வெளியே துப்பிவிடும். அதுவும் அமெரிக்க சமூகத்தில் கறுப்பின வீரர்கள் என்றால் எளிதில் துப்பிவிடும். கறுப்பின மக்களுக்கு இந்த விளையாட்டு விருப்பத் தேர்வாக இருக்கவில்லை. வாழ்வின் அவசியமாக அமைந்து விடுகிறது. அமெரிக்காவின் ஆரம்பகால குத்துச்சண்டை வீரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து வரப்பட்ட கருப்பின அடிமைகளே. அமெரிக்காவின் தெற்கு பகுதியில் தோட்ட முதலாளிகள் மற்றும் பண்ணை உடைமையாளர்கள்  தங்களது பொழுதுபோக்கிற்காக கருப்பு அடிமைகளின் கழுத்தில் இரும்புபட்டை கட்டி மோதவிடுவார்கள். அந்த அடிமைகளின் வலியில் இவர்கள் இன்பம் காண்பார்கள். அமெரிக்காவில் அடிமை ஒழிப்பு சட்டம் நிறைவேறியது. அடிமைள் பூரணமாக விடுவிக்கப்படவில்லை என்றாலும், நிவெறி ஒதுக்கல் தொடர்ந்தாலும் பணத்திற்காக நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கருப்பினத்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் களத்தையும் கருப்பின மக்கள் தங்களது விடுதலைக் களமாக அமைத்துக் கொண்டனர். முகமது அலியின் முன்னோடிகளின் வரலாறும் இதுவே.

ஜாக்ஜான்சனின் குத்தும் கலவரத்தீயும்:


      1908-ம் ஆண்டு 20 வயதுள்ள ஜாக் ஜான்சன் (1878-1946) என்ற கருப்பின இளைஞன் டெக்சாஸ் மாநிலத்தில் தொழில்முறை குத்துச்சண்டை களத்திற்கு வருகிறான். 1908-ம் ஆண்டு சிட்னி நகரில் நடைபெற்ற போட்டியில் டோமி பர்னஸ் (Tommy Burns) என்பவனை வீழ்த்தி வெற்றி பெற்றான். முதன்முறையாக "உலக குத்துச்சண்டை வீரன்" என்ற பட்டத்தை பெற்ற முதல் அமெரிக்க கருப்பினத்தவன் இவனே ஆகும். இந்த வெற்றி கருப்பின மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதிகாரம், பணபலம் படைத்த வெள்ளைநிறவெறியர்களால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. ஜாக் ஜான்சன் இதற்குமுன் உள்ளூர் அளவில் பல கருப்பு, வெள்ளை நிற வீரர்களை தோற்கடித்துள்ளான்.
   
        னினும் ஒரு கருப்பன் "உலக சாம்பியன் பட்டம்" பெற்றதையும் அதனால் கருப்பின மக்கள் பெருமைகொள்வதையும்  அவர்களால் ஏற்க முடியவில்லை. முறைப்படி அடுத்த போட்டி  வரும்வரை காத்திருக்க முடியவில்லை. நிறவெறிமேன்மை நிருபிக்க துடித்து அடுத்தடுத்த  காட்சிப்போட்டிகளை ஏற்பாடு செய்தனர்.  ஒரு வெள்ளையன் மூலம் ஜாக் ஜான்சனை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு. ஜாக் ஜான்சனுக்கு இன அடிப்படையில் அச்சுறுத்தல் நெருக்கடிகளை கொடுத்தனர்.
   
       1909-ம் ஆண்டு வெள்ளை நிறவெறி  பண்ணைஉடமையாளர்களால் தயார் செய்யப்பட்டு மோதவிடப்பட்ட டோனிராஸ்(TONY ROSS), அல்கைஃப்மேன்(AL KAUFMAN), மற்றும் ஸ்டேன்லி கெட்சல்(STANLEY KETCHELஆகியோரை ஜாக்ஜான்சன் தோற்கடித்தான். ஜாக் ஜான்சனின் ஒவ்வொரு குத்தும் நிறவெறி ஒதுக்கல் மீது விழுந்த குத்தாக கருப்பி னத்தவர்கள் கருதினர். வெள்ளைநிறவெறி பண்ணைஉடமையாளர்கள் இத்தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தங்களின் அதிகாரத்தின் மீது விழுந்த அடியாக கருதி  ஓய்வுபெற்ற உலக குத்துச்சண்டை வீரர் ஜேம்ஸ் ஜெஃப்ரீசை பணம் கொடுத்து அழைத்து வந்து மோதவிட்டனர்.

"நான் மீண்டும் சண்டைபோட வருவதற்கு ஒரே காரணம் வெள்ளை நிறத்தவன்     நீக்ரோவைவிட சிறந்தவன் என்பதை நிரூபிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே" என நிறவெறி திமிருடன் ஜேம்ஸ் பேசினான்.

       நிறவெறி பதற்றம் போட்டி நடைபெறும் நெவ்டா பிரதேசத்திலும், ரெனோ நகரிலும் பற்றிக்கொண்டது. அரங்கைச் சுற்றிலும், ஆயுதம், துப்பாக்கி, மது வகைகள் இந்த பதற்றத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது. எனினும் வெள்ளை நிறவெறியாளர்கள்  ஜேம்ஸ் ஜெஃப்ரி மீது பெரும் தொகை பந்தயம் கட்டி யிருந்தனர். அரங்கை வெள்ளையர் கூட்டம் ஆக்கிரமித்திருந்தது. பார்வை யாளர் கூட்டம் "கருப்பனை சாகடி" என வெறிக் கூச்சலிட்டது. போட்டி ஜீலை 4, 1910 அன்று 20,000 பார்வையாளர்கள் மத்தியில் நடந்தேறியது. கருப்பின ஜாக் ஜான்சன் தனது 15-வது சுற்றில் முன்னால் உலக சாம்பியன் "ஜேம்ஸ் ஜெஃப்ரியை" நாக்அவுட் முறையில் வீழ்த்தினான். ஜெஃப்ரிக்கு இது தோல்வி மட்டுமல்ல  தனது குத்துச்சண்டை வரலாற்றில்  நாக்அவுட் முறையில் பெற்ற முதல் தோல்வியாகும்.

ந்த போட்டி முடிந்தவுடன் ஜீலை 4-ம் தேதி மாலையே கலவரம் துவங்கியது.  ஜாக் ஜான்சன் வெற்றி கருப்பின மக்களை குதூகலிக்க செய்தது. வெறுப்படைந்த வெள்ளை நிறவெறியர்கள் கருப்பர்கள் மீது தாக்குதலை தொடுத்தனர். நியுயார்க், பிட்ஸ்பர்க், பிலடெல்பியா, நியு ஆர்லியான்ஸ், அட்லாண்டா, செயின்ட்லூயிஸ் என 25 மாநிலங்களிலும், 50க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கலவரம் வெடித்தது. 20-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். பலநூறு பேர்கள் படுகாயமடைந்தனர். இதற்கடுத்து 1960-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தான் மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் மீண்டும் கருப்பின மக்களின் எழுச்சி ஏற்பட்டது.

நாக் அவுட்டில் ஹிட்லர்:

மூக யதார்த்தங்கள் அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கும் என்பதைபோல் தொழில்முறை குத்துச்சண்டையிலும் அமெரிக்க சமூகத்தில் நீடித்த நிறவெறி ஒதுக்கல் பிரதிபலித்தது. இந்தப் பின்னணியில்  இதோ, மீண்டும் ஒரு கருப்பின வீரன் "ஜோ லூயிஸ்" குத்துச்சண்டை அரங்கை பற்றவைத்தான். 1937 முதல் 1949-ஆம்ஆண்டு வரைஉலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தன்வசம் வைத்திருந்தான். 1934 முதல் 1951 வரை 71 போட்டிகளில் கலந்து கொண்டு 68ல் வெற்றி பெற்றுள்ளான். அவற்றுள் 54 நாக்அவுட் முறை வெற்றியாகும்.

ஜோ லூயிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும்போதும் இனவெறி மோதல் இருக்கக் கூடாது என்பதற்காக அவரது மேலாளர்கள் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். வெள்ளை நிற பெண்களுடன் புகைப்படம் எடுக்கக் கூடாது, பொழுதுபோக்கு விடுதிக்கு செல்லக்கூடாது, தானாக சென்று யாரிடமும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜோ லூயிஸ் இதை கச்சிதமாக கடைபிடித்தார். அரங்கத்திற்குள் எனது செயல் பேசும் வெளியில் எனது மேலாளர் வாய்பேசும் என்று பதில் அளித்து களம் கண்டார். எனினும் ஜோ லூயிஸ் கலந்து கொண்ட குத்துச்சண்டை அதிக அளவு அரசியல் களமாக மாறியது.
     
    மெரிக்க நாட்டு நிறவெறியை கடந்து ஜெர்மனி வீரர்களுடன் மோதும்போது கண்டம் கடந்த பிரச்சனையாக மாறியது. கருப்பினத்தவர்கள் மூளைத்திறன், உடல்திறன் குறைந்தவர்கள். சோம்பேறிகள், கட்டுப்பாடற்ற
வர்கள் என்று ஹிட்லரின் நாஜிகளால் இனவெறி  கருத்துக்கள்   கட்டமைக்கப்பட்டிருந்த காலம் அது. இதுவே விஞ்ஞானம் என்று பிரச்சாரம் செய்தனர். இனவெறி மேன்மையை நிரூபிக்கும் ஒரு போட்டியாக இனவெறியர்கள் இதை மாற்றினார்கள்.

1935-ம் ஆண்டு கருப்பின ஜோ லூயிஸ் இத்தாலிய உலக சாம்பியன் பிரைமோ கார்னராவுடன் மோதி அவரை தோற்கடித்தான். கார்னரா பெனிட்டோ முசோலியின் தூதராக கருதப்பட்டான். கருப்பின ஜோ லூயிஸ் இத்தாலியால் ஆக்கிரமிக்கப்பட்ட எத்தோப்பிய இனமாக அடையா  ளப்படுத்தினர்.  குத்துச்சண்டை அரங்ககில் இனத்தூய்மைவாதம் மேலோங்கியது. ஜெர்மானிய வீரர் மேக்ஸ் ஸ்க்மெல்லிங்கிடம் ஜோ லூயிஸ் 1936-ல் தோற்றுப்போனார். ஹிட்லரும், அவரது கூட்டாளி கோயபல்சும் இந்த வெற்றியை இனவெறி வெற்றியாக பறைசாற்றினர். அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் `இந்த வெற்றி  எந்த இனம்  மேன்மையான இனம் என்பதை நிரூபித்துள்ளது' என்று எழுதின.

       1938-ம் ஆண்டு கருப்பின ஜோ லூயிஸ் ஜெர்மானிய மேக்ஸ் ஸ்க்மெல்லிங்குடன் மீண்டும் மோதினான். இந்த போட்டியை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வானொலி மூலம் நேரடி ஒலிபரப்பு செய்தது. இந்த போட்டியின் மூலம் வெள்ளை இனமே கருப்பினத்தைவிட மேலானது என்று நிரூபணம் ஆகும் என ஹிட்லரும், வெள்ளை நிற வெறியர்களும் கருதினர். இனப்பெருமையை நிரூபிக்க இது உடல்பலத்தின் மூலமாக நடைபெறும் பொதுவாக்கெடுப்பு என ஹிட்லர் கருதுவதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டனர். 1938 ஜூன் 22-ம் அன்று நியூயார்க் நகரம் யாங்கி அரங்கில் 70000 பார்வையாளர்கள் மத்தியில் போட்டி துவங்கியது.

          தோ... கருப்பின ஜோ லூயிஸ் முதல் சுற்றிலேயே ஜெர்மானிய
மேக் ஸ்க்மெல்லிங்கை (Max Schmeling) வீழ்த்தி ஆட்டத்தை முடித்தான். உடனே ஹிட்லர் ஜெர்மனி முழுவதும் வானொலி ஒலிபரப்பை நிறுத்தினான்.  இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க கண்டம் கடந்து கருப்பின மக்கள் எழுச்சி கொண்டனர். கருப்பின இளைஞர்கள் நம்பிக்கையோடு ஒன்று சேர்ந்தனர். ஜோ லூயிஸ் எந்த அளவு இளைஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருந்தார் என்பதற்கு மற்றொரு சான்று இதோ. அமெரிக்காவின் தெற்குபகுதி மாநிலத்தில்  மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினர். "விஷவாயு"வை செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றுவது என்று முடிவு செய்தனர். இறக்கும் போது விஷவாயு கூண்டுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிய மைக்ரோபோன் பொருத்தப்பட்டது. முதன்முதலில் விஷ்வாயு மூலம் தண்டணை  நிறைவேற்றப்பட்டவர் கருப்பின இளைஞர். அவரது மரணக்குரல்

"ஜோ லூயிஸ்! என்னை காப்பாற்றுங்கள்!
ஜோ லூயிஸ்! என்னை காப்பாற்றுங்கள்!"

என்று இருந்ததாக பதியப்பட்டுள்ளது. அந்த அளவு கருப்பின குத்துச்சண்டை வீரர்கள், அம்மக்களுக்கு மீட்பராக, பாதுகாப்பாளராக இருந்துள்ளனர். ஜோ லூயிஸ் 12 ஆண்டுகளில் 25 முறைகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளான். அடுத்த 20 ஆண்டுகளில் மீண்டும் குத்துச்சண்டை களம் சமூக போராட்டத்தின் உந்து சக்தியாக மாறுகிறது. அந்த உந்து சக்தியின் முகமாக முகமது அலி இருந்தார்.

சமூகம் படைத்த முகமது அலி:

1950-60 ஆண்டுகளில் அமெரிக்காவில் கருப்பின மக்களின் விடுதலை போராட்டம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது. பல இடங்களில் கருப்பின மக்களின் போராட்டம் தீ ஜூவாலைகளாகவும் சில இடங்களில் கனன்று கொண்டும் இருந்தது. இந்த சூழலில்தான் 1942-ம் ஆண்டு அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லூயிஸ்வில்லி என்ற இடத்தில் முகமது அலி பிறந்தார்.அவருக்கு கேசியஸ் கிளே ஜீனியர் என்று அவரது தந்தை பெயர் வைத்தார். முகமது அலியின் தாத்தா ஹெர்மன் அடிமை சட்டத்தை ஒழித்திட பாடுபட்டவரின் நினைவாக தனது மகனுக்கு கேசியஸ் மார்செல்ஸ் கிளே (Cassius Marcellus Clay) என்று பெயர் வைத்தார். இப்போது முகமது அலிக்கு கேசியஸ் மார்செல்ஸ் கிளே ஜீனியர் (Cassius Marcellus Clay,Jr..) என்று பெயர் வைக்கப்பட்டது. காலம் அவனுக்கு கேசியஸ் கிளே என்று பெயரிட்டாலும்  சமூக சூழல் அவனை முகமது அலியாக மாற்றியது.

"எனது மனதால் ஒரு கருத்தை உருவாக்கி கொள்ள முடியும்போது, எனது இதயத்தால் அதை நம்பமுடியும் போது ஏன் அதை என்னால் செய்ய முடியாது"

   ன்ற வினாவை எழுப்பி விடை தேடினான். அசாத்தியங்களை சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டான். இளம் வயதிலேயே குத்துச் சண்டை களத்தை தேர்வு செய்தான். குத்துச்சண்டை வளையத்துக்குள் எந்த அளவிற்குகேசியஸ் கிளேயின் செயல் இருக்குமோ அந்த அளவிற்கு அவரது வாயும் இருந்தது. ஜோ லூயிஸ் "அரங்கில் எனது செயல் பேசும், வெளியில் எனது மேலாளர் பேசுவார்" என்று இருந்தார். ஆனால் கேசியஸ் கிளே இரண்டையும் செய்தார். "சத்தம் போட்டு பேச கத்தி கூச்சல் போட எனக்கு தெரியாவிட்டால், அடுத்த வாரம் நான் எனது சொந்த ஊரில் ஜன்னல் துடைத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு தலையாட்டிக் கொண்டிருப்பேன்" என்று நிலைமையை விவரித்தார். இதனால் இவருக்கு அவசரக்குடுக்கை, வலிமையான வாய் என்ற பட்டப்பெயர் இருந்தாலும், `லூயிஸ்வில்லி வாயன்' என்ற பட்டப்பெயர் புகழ்பெற்று இருந்தது.

          தனது பள்ளி பருவ காலத்தில், தொழில்முறை குத்துச்சண்டைக்கு வருவதற்கு முன்னால் தேசிய தங்க கையுறை பதக்கத்தையும், இருமுறை தேசிய அமெச்சூர் அதலெடிக் யூனியன் பட்டத்தையும் வென்றுள்ளான். இக்காலத்தில் நடைபெற்ற போட்டிகளில் 100-ல் கலந்து கொண்டு 92-ல் வெற்றி பெற்றான்.8 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்தான். கேசியஸ் கிளே 18 வயது நிரம்பிய நேரத்தில் ரோம் நகரில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டியில், குத்துச்சண்டையில் ஐக்கிய அமெரிக்க குடியரசு சார்பில் கலந்து கொண்டு, முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றான். ரோமிலிருந்து உற்சாகத்துடன் திரும்பி வந்தான். அவனது கழுத்தில் அணியப்பட்ட தங்கப்பதக்கதை கழற்றாமலயே விமான நிலையத்தில் இறங்கி பத்திரிக்கை யாளர்களுக்கு பேட்டி கொடுத்தான்.

அமெரிக்காவிற்காக தங்கம் வெல்வதே என் குறிக்கோள்
ரஷ்யனைத் தோற்கடித்தேன்
போலந்துகாரனைத் தோற்கடித்தேன்
அமெரிக்காவிற்காக தங்கப் பதக்கம் வென்றேன்
நீ பழைய கேசியசை விட சிறந்தவன் என்று கிரேக்கர்கள்        கூறினார்கள்.

என அமெரிக்க தேசம் முன் தனது வெற்றியை ஒப்படைத்தான். கருப்பின மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. அவன் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், தேசத்திற்காக பதக்கம் பெற்றாலும் நிறவெறி அவனை நிலைகுலையச் செய்தது.

கேசியஸ் கிளே கழுத்தில் போடப்பட்ட பதக்கத்தை கழற்றவில்லை. தூங்கும்போது, தெருவில் நடக்கும்போது, தேநீர் அருந்தும் போது எப்போதும் பதக்கத்துடனேயே பயணித்தான் என சக ஒலிம்பிக் வீரர் ஷல்மா ருடோல்ப் கூறுகிறார். ஒரு வாரம் கழித்து லூயிஸ்வில்லியில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு சீஸ்பர்க்கர் சாப்பிட செல்கின்றான். அங்கே அவனை உள்ளே விடாமல், உணவு பரிமாற முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டனர். அடக்க முடியாத கோபம் கொப்பளித்தது. அந்தக் கோபம் உணவு விடுதியின் மீது அல்ல அமெரிக்க சமூகத்தில் நிலைகொண்டிருந்த நிறவெறியின் மீது. எந்த தேசத்திற்காக பதக்கம் வென்றேன் என பெருமைப்பட்டானோ, அந்த தேசத்திலேயே அவமானப் படுத்தப்பட்டான். அடுத்த வினாடியே கழுத்தில் தொங்கிய பதக்கத்தை கழற்றி ஓடிக்கொண்டிருந்த ஒஹியோ ஆற்றில் வீசினான். கேசியஸ் கிளேவிற்கு அனைத்தும் கேள்வி குறியாக மாறியது.

தேசத்திற்கான போட்டி என்பதிலிருந்து தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு மாறினான். மறுபுறம் மால்கம் எக்சும், `இஸ்லாமிய தேசம்' என்ற இஸ்லாமிய மதப்பிரிவும் கேசியஸ் கிளே-வை கவர்ந்தது. அதே நேரத்தில் மால்கம் எக்சையும் கலகக்கார கேசியஸ் கிளே கவர்ந்தார். 1964-ம் ஆண்டு மியாமி கடற்கரையில் உலக சாம்பியன் சன்னி லிஸ்டனை தோற்கடித்தவுடன் கேசியஸ் கிளே பெரும் புகழ்பெற்றான். போட்டிக்கு முன் மால்கம் எக்ஸ் கூறினார். "கிளே வெல்வான்.நான் பார்த்த சிறந்த கருப்பின வீரன்" என்றார். கிளேயின் பயிற்சியாளர் கேசியஸ் கிளே தலைமுறை வீரர்களை தனது குத்துச்சண்டையால் தரைமட்டமாக்கிவிடுவான் என்றார்.

       கிளாசியஸ் கிளே "நான் மிகவும் வேகமானவன். படுக்கையறை சுவிட்சை தட்டிவிட்டு விளக்கு அணையுமுன் படுக்கையில் இருப்பேன்" என தன்மீதுள்ள அசைக்க முடியா நம்பிக்கையை வெளிப்படுத்தினான். சன்னி லிஸ்டனை சாய்த்த பிறகு, அவனது வெற்றி கொடிகட்டி பறந்தபோது அவன் அடுத்த நாள் தான் இஸ்லாமிய தேசம் என்ற மதப்பிரிவில் சேர்ந்ததாக அறிவித்தான். எலிசா முகமது இவரது பெயரை "முகமது அலி" என்று மாற்றினார். முகமது அலியின் இந்த செயல் கருப்பின இளைஞர்களுக்கு எழுச்சியூட்டியது. வெள்ளை நிறவெறியர்கள் சீறினர். கிறிஸ்துவ மதம் வெள்ளை நிறவெறியை ஊக்குவிக்கும் மதம் என கிளே நம்பினான். எனவே இந்த மாற்றம் அவனுக்கு தேவைப்பட்டதாக அறிவித்தான். மதம் சமூக ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டியதாக வரலாறு இல்லை என்றாலும், மதத்தை சுரண்டும் வர்க்கம் தனது சுரண்டலுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கிறது என்ற நிலைமை நீடித்தாலும் கேசியஸ் கிளே வாழ்ந்த சூழல் எதிர்ப்பின் அடையாளமாகவே இஸ்லாமிய தேசம் என்ற மதப்பிரிவை பார்த்தான்.

பெயரை மாற்றியதும், மதம் மாறியதும் வெள்ளை நிறவெறியர்களுக்கு ஒரு அடியாக இருந்தது. இந்த மாற்றத்தால் முகமது அலி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை விவரிக்க வார்த்தையே கிடையாது. முகமது அலி வெள்ளை நிறவெறியர் மற்றும் விளையாட்டு வீரர்கள் மத்தியில் மட்டும் தாக்குதலை சந்திக்கவில்லை. சிவில் உரிமை அமைப்புகளும் இவருக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்தனர். முகமது அலி இதற்கெல்லாம் அமைதியாக பதில் கொடுத்தான். இந்த மாற்றம் அரசியல் அல்ல. முழுமையான மதமார்க்கத்தை மட்டுமே மாற்றிக் கொண்டேன் என்று கூறினார். எனினும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பல பிரபலமான பத்திரிக்கைகள் பெயர் மாற்றத்தை குறிப்பிடாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து கேசியஸ் கிளே என்றுதான் எழுதினார்கள். இது முகமது அலிக்கு கோபத்தை உருவாக்கியது.

            1964-ம் ஆண்டு முழுவதும் அமெரிக்காவின் கருப்பின மக்கள் சம உரிமைக்காக போராடினார்கள். இதனால் பல ஆயிரம் சிவில் உரிமை போராளிகள் கைதாகினர். அமெரிக்காவின் தெற்கு முதல் வடக்கு வரை இந்த போராட்டம் நடந்தது. வெள்ளை நிறவெறி அமைப்பு குகிளக்ஸ்  (KU KLUX KLAN) 30-கட்டிடங்களை குண்டுவைத்து தகர்த்தனர்.
36-தேவாலயங்களை தீக்கிரையாக்கினர். கருப்பின இளைஞர்களும் வடக்கு பகுதி சேரிகளில் கொதித்தெழுந்தனர். முதன்முதலாக நகர்ப்புற எழுச்சி அமெரிக்காவில் நிகழ்ந்தது.

வா அமெரிக்காவே! வா!

ந்த பின்னனியில்தான் முகமது அலி என்ற பெயர் மாற்றத்திற்கு பிறகு நடக்கும் ஒவ்வொரு குத்துச்சண்டை போட்டியும், கருப்பின மக்களின் எழுச்சிக்கும் அதை ஒடுக்க நினைப்பவர்களுக்கும் இடையான போட்டி தளத்திலேயே நடக்க ஆரம்பித்தது. பிளைவுட் பேட்டர்சன் (FLYOD PATTERSON) என்பவர் கருப்பின குத்துச்சண்டை முன்னால் உலக சாம்பியன். இவர் வெள்ளை நிறவெறி விசுவாசத்துடன் முகமது அலியை போட்டிக்கு அழைத்தார். இது "ஒரு கருப்பு முஸ்லீமிடமிருந்து பட்டத்தை வெல்லும் புனிதப்போர். நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் கிளேயுடன் மோதுவது தேசபக்த கடமை. நான் அமெரிக்க கிரீடத்தை மீட்டுக்கொண்டு வருவேன்" என சபதம் எடுத்து, அமெரிக்க கொடியை தனது உடலில் இறுக்கமாக கட்டிக் கொண்டு போட்டிக் களத்திற்கு வந்தார். 1965-ம் ஆண்டு நவம்பர் 22 அன்று போட்டி நடைபெற்றது. முகமது அலி தனது ஒன்பதாவது சுற்றிலேயே பிளைவுட் பாட்டர்சனை அடித்து நொறுக்கினார். பேட்டர்சனை கீழே தள்ளி
வா அமெரிக்காவே! வா!
வா வெள்ளை அமெரிக்காவே!வா!

       என்று கர்ஜித்தான். பாட்டர்சன் முகமது அலி என்று அழைக்காமல் கிளே என்றே அழைத்து வந்தார். 1967-ல் எர்னி டெரல் (ERNIE TERRELL) என்பவருடன் இதே பின்னனியில் போட்டி நடைபெற்றது. அவரும் முகமது அலி என அழைக்கமாட்டேன் கிளே என்று தான் அழைப்பேன் என்றார். அவரையும் போட்டி மேடையிலிருந்து வீழ்த்தி வளையத்துக்கு வெளியே தள்ளி
என் பெயர் என்ன?
என் பெயர் "கிளே" யா?
முட்டாள், என் பெயர் என்ன?

    ன்று தனது பெயர் மாற்றத்தை அங்கீகரிக்காததை எதிர்த்து வினையாற்றினார். முகமது அலி குத்துச்சண்டை வளையத்துக்குள் பட்டம் வெல்வதை மட்டுமல்ல கருப்பின மக்களின் சம உரிமைக்கான போராட்டகளமாகவும் மாற்றினர். நிறவெறி நெருப்பில் நீந்தி கருப்பின மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு வழிவகுத்தான். முகமது அலியின் வெற்றி, கருப்பின மக்கள் பயமின்றி சமஉரிமை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியது. முகமது அலியின் போட்டியை கண்ணுற்ற பெரும்பாலான கருப்பின அமெரிக்கர்கள் பயத்தை எளிமையாக வெற்றி கொண்டனர். முகமது அலி அவர் வழியில் மக்களை தைரியப்படுத்தினார் என்று செய்தி தொகுப்பாளர் பிரையன்ட் கம்பள் (BRYANT GUMBLE) நினைவு கூர்ந்தார்.

என்னை நீக்ரோ என்று எந்த வியட்நாமியரும் அழைக்கவில்லை:

1966-ம் ஆண்டு அமெரிக்க இராணுவம் முகமது அலியை அழைத்து இராணுவத்தில் சேர உத்தரவிட்டது. அமெரிக்காவில் இராணுவ சேவை சட்டப்பூர்வமானது. எனவே, படையில் சேர்ந்து வியட்நாம் சென்று சண்டையிட அழைத்தது. அப்போது அதை மறுத்த அவரது வார்த்தை

"எனக்கு வியட்நாமியர்களுடன் எந்த விரோதமும் இல்லை
என்னை நீக்ரோ என்று எந்த வியட்நாமியரும் அழைக்கவில்லை"

        என்று பத்திரிக்கையாளர் சூழ,  இராணுவத்தினரிடம் தெரிவித்தான். இது இராணுவத்தினருக்கு அதிர்ச்சியூட்டியது. அப்போது அமெரிக்காவில் யுத்த எதிர்ப்பு இயக்கம் நடைபெற்று கொண்டிருந்தது. “வியட்நாமிலிருந்து அமெரிக்காவே வெளியேறு” இயக்கம் வேகம் பிடித்திருந்த காலம். இந்த இயக்கம் இப்போது முகமது அலியின் இந்த வார்த்தைக்கு பின்னால் அணி வகுத்தது. யுத்த எதிர்ப்பு சமாதான செயற்பாட்டாளர் டானியல் பெரிகன் (DANIEL BERRIGAN) அலியின் இந்த முடிவு வெள்ளையர் மத்தியில் உருவான போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது என்று கூறினார். முகமது அலி மன்னிப்பு கேட்க, கையெழுத்துபோட, பணிந்துவிட வேண்டும் என பலர் கூறினர். ஆளும் நிறுவனங்கள் முகமது அலியை படுமோசமான தேச விரோதியாக சித்தரித்தன. முகமது அலிமண்டியிட மறுத்துவிட்டார். ஒரு குத்துச்சண்டை வீரனின் ஒற்றைவரி கருப்பின மக்களின் எழுச்சியையும், யுத்த எதிர்ப்பு இயக்கத்தையும் வீறு கொள்ள செய்தது. குத்துச்சண்டை வளையத்துக்குள் மட்டுமல்ல அரசியல் களத்திலும் உறுதியான நிலை எடுத்தான். ஒரு கட்டத்தில் அவர் மன்னிப்பு கேட்டு படையில் சேர்வார் என வதந்தி கிளம்பியது. உடனே பத்திரிக்கையாளரை சந்தித்தார்.
"நான் சொல்வதை கேளுங்கள், வியட்நாம் யுத்தம் எவ்வளவு நாள் நடக்கும் என்பது பிரச்சனை அல்ல. நான் வியட்நாமியர்களுடன் என்றும் சண்டையிட மாட்டேன்" 
என்ற பாடலை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டே இருப்பேன் என்று உறுதிபட கூறினார்.

           அக்காலத்தில் கருப்பின மக்கள் மார்டின் லூதர் கிங் வழி நடத்திய சமஉரிமைக்கான பெரும் போராட்டத்தில் இருந்தனர். சமஉரிமை கோரி நடத்திய மார்டின் லூதர் கிங் போரையும் எதிர்க்க துவங்கினார். "முகமது அலி சொல்வது போல நாம் எல்லாம் கருப்பு, பழுப்பு நிறத்தவர்கள். ஏழைகள். ஒடுக்குமுறை அமைப்பால் வஞ்சிக்கப்பட்டவர்கள்" என்று அறை கூவல் விடுத்தார்.

        அலியின் சொந்த ஊரான லூயிஸ் வில்லியில் நடைபெற்ற கருப்பின மக்களின் போராட்டத்தின்போது மார்ட்டின் லூதர் கிங்-உடன் அலி கலந்து கொண்டார். அப்போது " சுதந்திரம், நீதி, சமத்துவம் கேட்டு நடக்கும் போராட்டத்தில் உங்களோடு நானும் இருக்கிறேன். எனது சொந்த மக்கள், என்னோடு வளர்ந்தவர்கள், என்னோடு படித்தவர்கள், எனது உறவினர்கள் சுதந்திரம், நீதி, குடியிருப்பு சமஉரிமை கேட்பதற்காக, தாக்கப்படுவதை, தெருக்களில் விரட்டப்படுவதை வேடிக்கைப் பார்த்து கொண்டு நான் சும்மா இருக்க முடியாது" என்றான்.

          அடுத்த நாள் அங்கு பத்திரிக்கையாளர்கள் குவிந்து வியட்நாம் யுத்தம் பற்றி கேள்வி கேட்டனர். வெகுண்டெழுந்தார் முகமதுஅலி.

"எனது சொந்த ஊரில் கருப்பின மக்களை நீக்ரோ என அழைத்து, சாதாரண மனித உரிமை கூட மறுக்கப்பட்டு, நாய் போல் நடத்தப்படும் போது, நான் சீருடை அணிந்து, 10,000 மைல்கள் கடந்து, பழுப்புநிற வியட்நாமியரை, குண்டுவீசி, துப்பாக்கியால் சுட்டு, ஏன் கொல்ல வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். வெள்ளைநிற எசமானர்கள், வெள்ளைநிற அல்லாத மற்றொரு எளிய நாட்டை அடிமையாக்கி இருள்படர்ந்த ஆதிக்கம் உருவாக நான் 10,000 மைல் கடந்து போக மாட்டேன் என்றார். இந்த தீமைகள் விரைவில் முடிவுக்கு வரவேண்டும். இப்படி ஒரு நிலை எடுப்பதால் எனக்கு கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்றார்கள். நான் மீண்டும் சொல்வேன். இங்குதான் என் மக்களின் உண்மையான எதிரிகள் இருக்கின்றனர். சுதந்திரம், நீதி, சமத்துவம் கேட்டு போராடும் எம்மக்களை  அடிமைப்படுத்தும் ஒரு கருவியாக்கி என் மக்களை, என் மதத்தை, என்னை இழிவுபடுத்திக் கொள்ள மாட்டேன்"
என்று எழுந்த கேள்விகளை நாக்அவுட் ஆக்கினார்.

1967-ம் ஆண்டு ஜீன் 19-ம் தேதி கீழை நீதிமன்றம் முகமது அலி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. படையில் சேர மறுத்ததற்காக 5 ஆண்டு சிறைத்தண்டனை, கடவுச்சீட்டு முடக்கம். அவரது சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. 3 1/2 ஆண்டுகள் அவர் குத்துச்சண்டையில் கலந்து கொள்ள முடியவில்லை. முகமது அலி மேல்முறையீடு செய்தார். 1968-ம் ஆண்டுகள் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களில் மாணவர்களிடையே உரையாற்றி இருக்கிறார். அந்த உரைகளில் இதோ இரத்தின வரிகள்
"நான் வியட்நாமுக்கு செல்லாததால் நிறையஇழந்துவிட்டேன் என்று கூறுபவர்களுக்கு ஒன்று சொல்வேன், எனக்கு மன நிம்மதிஉள்ளது. எனது மனசாட்சிக்கு விலங்கு பூட்டப்படவில்லை. நான் தெளிவாக உள்ளேன். மகிழ்ச்சியுடன் தூங்கி எழுகிறேன். எனது முடிவில் நான் பெருமை கொள்கிறேன். என்னை சிறைக்கு அனுப்பினாலும் மகிழ்ச்சியுடன் சிறை செல்வேன்" என தனது முடிவின் நியாயத்தை தீர்க்கமாக எடுத்துரைத்தார். இக்காலத்தில் முகமது அலியின் பேச்சுக்கள் அமெரிக்க கொள்கைக்கு எதிராகவும், யுத்தத்திற்கு எதிராகவும், இன, நிறவெறிக்கு எதிராகவும் அமைந்திருந்தது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் ஏராளமான இளைஞர்களை அலியின் பேச்சு ஆகர்ஷித்தது.

"நான்" என்றால்  நிரந்தரமாக காயப்படுத்துபவன்:

1970-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உச்ச நீதிமன்றம் கருப்பின மக்கள் நலன், உயர்வுக்காக என காரணம் சொல்லி முகமது அலியை விடுதலை செய்தது. 31/2 ஆண்டுகளுக்கு பிறகு முகமது அலி மீண்டும் குத்துச்சண்டை வளையத்திற்குள் வந்தார். 1971-ம் ஆண்டு மேடிசானில் "நூற்றாண்டின் சண்டை" என்ற பெயரில் நடைபெற்ற போட்டியில் ஜோ-பிரேசியரிடம் தோல்வி அடைந்தார் முகமது அலி. போட்டி கடுமையாக இருந்தது. 15 வது சுற்றில் பிரேசியர் வென்றார். இருவரையும் சிகிச்சைக்கு அனுப்பும் அளவிற்கு காயம் அடைந்தனர். 1973-ம் ஆண்டு கென்னூர்ட்டனிடம் தோற்றார். மீண்டும் அவருடனயே மோதி பட்டத்தை வென்றார். பிறகு மற்றொரு போட்டியில் தன்னை தோற்கடித்த ஜோ-பிரேசியரை தோற்கடித்து வெற்றி கண்டார் முகமது அலி.

          1974-ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் ஜைர் நாட்டில் மீண்டும் ஒரு பெரும் போட்டி. "காடுகளின் கர்ஜனை" என வர்ணிக்கப்பட்ட இந்த போட்டியை ஜைர் நாட்டின் அதிபர் ஏற்பாடு செய்திருந்தார். ஜார்ஜ் போர்மன் என்ற மற்றொரு கருப்பின அமெரிக்க குத்துச்சண்டை வீரன் வலிமையானவன். அவனை அலியால் வீழ்த்த முடியாது என நினைத்தனர். கருப்பின மக்கள் பெருங்கூட்ட ஆரவாரங்களுக்கிடையே முகமது அலி ஜார்ஜ் போர்மனை வீழ்த்தி மீண்டும் பட்டம் வென்றார். அதுவரை இல்லாத புதிய யுக்தியை கடைபிடித்து இந்த வெற்றியை ஈட்டினான். வழக்கம் போல் போட்டிக்கு முன்பு முகமது அலி கர்ஜித்தார்.அந்த கர்ஜனையின் சிலவரிகளை நினைவு கூர்வது அவரது நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அமையும்.இதோ...

ஜார்ஜ் நினைக்கிறான்
வெல்வேன் என்று!
எனக்குத் தெரியும்
அவனால் முடியாது!
நான் 
முதலையையும் சிலுவையில் அறைவேன்!
திமிங்கலத்துடன் மோதி வீழ்த்துவேன்!
கடந்த வாரம் 
நான்,
ஒரு பாறையை படுகொலை செய்தேன்
கல்லை காயப்படுத்தினேன்
செங்கல்லை மருத்துவமனைக்கு அனுப்பினேன்
"நான்" என்றால்
நிரந்தரமாக காயப்படுத்துபவன்.

தனக்கான உறுதியை நிலை நிறுத்த மட்டுமல்ல. எதிரியினை பலவீனப்படுத்தவும் செய்கிறார் அலி.
       
                1981-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி, தனது 39-வது வயதில் குத்துச்சண்டை போட்டியிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் அலி. தனது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் 21 ஆண்டு வாழ்க்கையில் 61 போட்டிகளில் 56-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் தழுவி உள்ளார். இதில் 37 போட்டியில் நாக்அவுட் முறையில் வெற்றி பெற்றுள்ளார். மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். அரசு, நிறவெறி என பல்முனை தாக்குதலுக்கு மத்தியில் அலி தனது வெற்றிப் பயணத்தை நடத்தினார்.
             
             1984-ல் அவரை பார்கின்சன் நோய் தாக்கி முடமாக்கியது. அமெரிக்க ஆளும் வர்க்கம் அந்த மாபெரும் கலகக்காரனை தன்னுடன் இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 1996-ஆம் ஆண்டு அட்லான்டா ஒலிம்பிக் சுடரை தனது நடுங்கும் கரங்களால் முகமது அலி ஏற்றி வைத்தார். 1990-ல் அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை சந்தித்து அமெரிக்க பிணைய கைதிகளை மீட்டு வந்தார். ஆப்கன் போர் பற்றிய ஹாலிவுட் விளம்பர படத்தில் நடிக்க வைத்தனர். 20-ம் நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல. 1964-ல் தனது வெற்றியாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது அரசியல் நிலைபாட்டாலும் உலகின் அதிக பத்திரிக்கைகளின் அட்டைப்படத்தை அலங்கரித்தவர் முகமது அலி.

நிறைவேறாத ரசிகர்களின் ஏக்கம்:


              குத்துச்சண்டை வீரர்களுக்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்தது. முகமது அலியின் சமகாலத்தில் வாழ்ந்த கியூபாவின் சிறந்த குத்துச்சண்டை வீரன் எபிலோ ஸ்டீவன்சன் (TEOFLILO STEVENSON). இவர் மூன்று முறை 1972 மூனிச், 1976 மான்ட்ரில், 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். அலிக்கு நிகரான பட்டம் பெற்றாலும், பொது தளத்தில் புகழ்பெற்றவர் அல்ல. காரணம் அவர் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ள மறுத்துவிட்டார். விளையாட்டை தனிநபர் லாபத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற அவரது சோசலிச கோட்பாட்டில் உறுதியாக இருந்தார். தொழில்முறை போட்டியில் கலந்து கொண்டால் கியூபா குடியுரிமையுடன் இருக்க முடியாது.

 “8-மில்லியன் கியூபா மக்களின்
 அன்பிற்கு முன்னால்
 1-மில்லியன் டாலர் எம்மாத்திரம்” 

என்று ஸ்டீவன்சன் பேசினான். கியூபாவின் ஸ்டீவன்சன் மட்டுமல்ல. மற்றொரு முக்கிய வீரர் பெலிக்ஸ் சாவன் (FELIX SAVON) என்பவரும் மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் பேசினான். இவரையும் பல கோடி டாலர் கொடுத்து கியூபாவை விட்டு வெளியேறி, மைக் டைசனுடன் போட்டிக்கு அழைத்தனர். பெலிக்ஸ் சாவன் உறுதியாக மறுத்துவிட்டார். கியூபா குத்துச்சண்டை போட்டியில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இப்போட்டி நடைபெறவில்லை என்ற ஏக்கம் பலரிடம் இருந்தது.

வீரன் மட்டுமல்ல போராளி:


               மெரிக்காவில் கருப்பின மக்களின் சமஉரிமை போராட்டத்துடன் இணைந்துதான் குத்துச்சண்டை மேடையும் இருந்தது. உணவு விடுதிகளில், தேவாலயங்களில், பேருந்து போன்ற பொது இடங்களில் இன ஒதுக்கல் கடைபிடிக்கப்பட்டதுபோல் குத்துச்சண்டையில் இதை அமுலாக்க முடியவில்லை. குறிப்பாக தொழில்முறை குத்துச்சண்டையில் பணம் அடிப்படையாக அமைந்ததால் நெகிழ்வுத்தன்மை இருந்தது, அதிகமக்களும், பெருந்தொகையும் இவ்விளையாட்டில் இருந்தால் வெற்றி பெறுவோர் மக்களிடம் புகழ்பெற்றனர்.

           ருப்பின விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்ற போதெல்லாம் கருப்பின மக்கள் பெருமிதம், எழுச்சி கொண்டனர். துணிச்சல் பெற்றனர். இது அவர்களின் சமஉரிமை போராட்டத்தினை வேகப்படுத்தியது. ஜாக்ஜான்சன், ஜோலூயிஸ் வெற்றி பரந்துபட்ட கருப்பின மக்களை ஒற்றுமைப் படுத்தியது. முகமதுஅலி மேற்கண்ட இருவரிலிருந்தும் மாறுபட்ட முறையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார். குத்துச்சண்டை போட்டியில் இவர்கள் சாதனைகள் சற்றேரக்குறைய ஒரே தளத்தில் இருந்தாலும், முகமதுஅலி சமூகதளத்தில் தெளிவான உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டார். ஜாக் ஜான்சனும், ஜோலூயிஸ் வெற்றியிலும் கருப்பின மக்கள்திரண்டனர். இவை மேற்கண்ட இருவருக்கும் புறத்தே நடைபெற்றது. இவ்விருவரின் நேரடி பங்கு அதிகம் இருக்கவில்லை.

முகமதுஅலி அமெரிக்க அரசின் கொள்கைகளை கேள்விக்கு உள்ளாக்கினார். கருப்பின மக்களின் போராட்டங்களில் நேரடியாக பங்குபெற்றார். குத்துச்சண்டை போட்டி தடை செய்யப்பட்ட காலத்தில் கருப்பின மக்களின் சமஉரிமை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட உரைகளை நிகழ்த்தி உள்ளார். தன் உணர்விலிருந்து அவர் வியட்நாம் போரை எதிர்க்கவில்லை. அமெரிக்காவில் நிறவெறி கடைபிடிக்கும் அரசின் அநீதிக்கும், வியட்நாமில் அம்மக்களுக்கு எதிராக ஏகாதிபத்தியம் இழைக்கும் அநீதிக்கும் தொடர்புபடுத்தி, ஒருகோட்பாடு ரீதியாகவே யுத்த எதிர்ப்பை கடைபிடித்தார். முகமதுஅலி வியட்நாமுக்கு சண்டையிட செல்லமாட்டேன் என்றது, வியட்நாம் போரை எதிர்த்து பேசியது அமெரிக்காவில் இருவித தாக்கத்தை ஏற்படுத்தியது.

         மஉரிமை போராட்டகளத்தில் இருந்த கருப்பின மக்களை யுத்தஎதிர்ப்பு நோக்கி ஈர்த்தது. யுத்தஎதிர்ப்பில் மட்டும் இருந்தவர்களை சமஉரிமை போராட்டத்தை நோக்கி ஈர்த்தது. இவ்விரண்டிற்குமான இணைப்பை பலப்படுத்தி, வேகப்படுத்தினார் முகமதுஅலி. சமுதாயத்தில் பிரபலமானவர்கள் அரசின் கொள்கையில் மாறுபடுகிறபோது அதை துணிச்சலாக தடுக்க முன்வருவது இல்லை. பல நேரங்களில் பொதுமக்கள் விரும்புவதாக தங்களது கருத்துக்களை பதிவு செய்வார்கள். தவறானதை தடுக்க வேண்டியது தங்களது கடமை என்பதை மறந்து விடுவார்கள். ஆனால் முகமது அலி இதிலிருந்து மாறுபட்டு தனது கடமை என்ற முறையில் பல இழப்புகளை சந்தித்து சமூக தளத்தில் எதிர் நீச்சலடித்தார். அரசின் தவறான கொள்கைகளை, கண்முன் நடக்கும் கொடுமைகளை எதிர்க்கத் துணிந்தவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக, அச்சம் போக்கும் அவதாரமாக நிஜ வாழ்வில் இருந்தார்.

                 மெரிக்காவை பொறுத்தவரையில் விளையாட்டுவீரர்கள் "அமெரிக்க கொடிக்கு வணக்கம் செலுத்துவது, படைவீரர்களை ஆதரிப்பது, யுத்தங்களை நியாயப்படுத்திபிரச்சாரம் செய்வது" மட்டுமே அவர்களது இதர நடவடிக்கையாக இருக்கவேண்டும் என விரும்புகிறது. 2003-ம் ஆண்டு கூடைப்பந்து வீராங்கனை டோமி ஸ்மித், ஈராக் யுத்தத்திற்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்த, தேசியகொடியை அவமதித்ததாக கடுமையான முறையில் தண்டிக்கப்பட்டார். இதே போன்று ஜோஸ் ஹர்டுவேர்ட் என்ற கூடைப்பந்து வீரன் ஈராக் யுத்தம் எண்ணெய்க்கான யுத்தம் தவிர வேறில்லை என்று கூறியதற்காக கண்டத்திற்கு உள்ளாகினார். இதில் ஸ்மித் கலப்பினம், ஹர்டுவேர்ட் கருப்பினம். முகமதுஅலி தனது கடைசிகாலம் வரை இனவெறிக்கு எதிராக இருந்தார். தற்போது நடைபெற உள்ள தேர்தலில் வேட்பாளராக உள்ள டொனால்ட் டிரம்ப்-ன் இனவெறி பேச்சை, கீழ்த்தரமான பேச்சை கடுமையாக கண்டித்தார்.

1960-ம் ஆண்டுகளில் இளைஞனாக மட்டுமல்ல, அரசு அடக்கு முறைக்கு எதிரான இளைஞனாக வலம் வந்தான். நானே மகத்தானவன் (I am the greatest) என்ற வார்த்தை மற்றவர்களை கோபப்படுத்தினாலும், தனக்கான தன்னம்பிக்கையாக (Self-Promiting) அடிக்கடி அதை விதைத்துக் கொண்டான். 60-ம் ஆண்டுகளில் சேகுவேரா உலக இளைஞர்களை ஆகர்ஷித்துக் கொண்டிருந்த சூழலில், முகமதுஅலி அமெரிக்க கருப்பின இளைஞர்களின் களத்திற்கு உரமிட்டுக் கொண்டிருந்தார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் இன்றும் நிறவெறி மோதல் நீடிக்கிறது. அங்கே மார்ட்டின் லூதர் கிங்கும், மால்கம் எக்சும், முகமதுஅலியும் இன்றும் புதியவடிவில் பரந்ததளத்தில் தேவையாய் இருக்கிறார்கள்.




     ன்றைய இந்திய சமூகம் பொருளாதார சுரண்டலால் நசுக்கப்படுகிறது. மதம்,சாதி என்ற பெயரால் சமூக கொடுமைகள் உச்சத்தை அடைந்து வருகிறது. ஒற்றுமை குலைக்கப்படுகிறது. நம்பிக்கை அனைத்து தளத்திலும் சிதைக்கப்படுகிறது. அரசின் அவலங்களை தடுப்பது மட்டுமல்ல, கண்ணெதிரே நடைபெறும் கொடுமைகளை தடுக்க முடியாத சமூகம் கட்டியமைக்கப்படுகிறது. இதற்கான போலி காரணங்களை கண்டுபிடித்து நியாயப்படுத்தம் கூட்டங்கள் பெருகி வருகிறது. இழப்பதற்கு எதுவும் இல்லை என்றாலும் எதிர்ப்புக்குரல் எழ மறுக்கிறது. இந்த மௌனம் உடைபட முகமது அலியின் செயல்கள் நமக்கு உதவட்டும்.

- ஏ.பாக்கியம்

திங்கள், ஆகஸ்ட் 22, 2016

எனக்கு வயது 377


இது வேடிக்கையும் அல்ல. வினோதமும் அல்ல. புத்தக வாசிப்பினால் ஆயுள்காலம் கூடிய அதிசயம். ஆம்! ராமச்சந்திர வைத்தியநாத் அவர்கள் சென்னப்பட்டிணம் என்ற புத்தகத்தை 21-ம் தேதி வெளியிட்டுள்ளார். ஒரு பொருளின் மதிப்பு அதனுள் புதைந்திருக்கும் உழைப்பினால் தீர்மானிக்கப்படுகிறது என்ற காரல் மார்க்சின் சொற்களுக்கு ஏற்ப இந்த புத்தகத்தில் தோழர் இராமச்சந்திர வைத்தியநாத்தின் பத்தாண்டு உழைப்புகள் அடங்கியுள்ளது. 693 பக்கங்களை கொண்ட புத்தகம். புத்தகத்தின் சிறப்பாக முதலில் குறிப்பிட விரும்புவது 93 துணை நூல் பட்டியல்களை இணைத்துள்ளார். 43 பக்கங்கள் சொல்லடைவு விளக்கமாக கொடுத்துள்ளார். 
     சென்னையில் வசிக்கக் கூடியவர்கள் இந்த புத்தகத்தை வாசித்தால் இது உருவான காலத்திலிருந்து வாழ்ந்து வருவதான ஒரு உணர்வுக்கு உள்ளாக்கப்படுவார்கள். அந்த அளவிற்கு விபரங்களை எளிய முறையிலும், துரித வாசிப்பிற்கு ஏற்ற வகையிலும் தங்குதடையின்றி படைப்பாக்கியுள்ளார். நம்மை சுற்றி நடந்த விஷயங்களாகவே அனைத்தும் எழுதப்பட்டுள்ளது. 
             ஒரு நகரம் அடிப்படைத் தன்மை என்ன? என்பதை விளக்கக் கூடிய வகையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் கோட்டைக்குள் நடைபெற்ற ஆங்கில மற்றும் பிரெஞ்சு காரர்களுக்கிடையிலான மோதல் புதிய செய்தியாகும். அதே போன்று அன்றைய சென்னையை தூய்மைப்படுத்தி, ஒழுங்குப்படுத்தியதில் பிரெஞ்சுக்காரர்களின் முயற்சி அடிப்படையானது என்பதை அழுத்தமாக பதியவைத்துள்ளார். 

           வெளுப்பர் நகரம், கருப்பர் நகரம் என்ற வர்க்க வேறுபாட்டை நகர உருவாக்கத்திலேயே இருந்தது. கருப்பர் நகரம் வழக்கம்போல் ஜார்ஜ் டவுன் என்று மன்னர் பெயரால் மாற்றப்பட்ட விபரத்தையும் காண முடிகிறது. ஒட்டுமொத்தமாக வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட சென்னை மாநகரம் என்ற தவறான கருத்தமைவை இப்புத்தகத்தின் மூலம் தகர்த்துள்ளார். பெத்தநாயக்கன்பேட்டை, முத்தையால்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை என உருவாக்கப்பட்ட 3 இடங்களை தவிர மற்ற அனைத்தும் மயிலாப்பூர் ஆரம்பித்து திருவொற்றியூர் வரை பாரம்பரிய வளம்பெற்ற இயற்கை வளம்பெற்ற கிராமங்களையும் பாடல்பெற்ற ஸ்தலங்களையும் இணைத்து தான் இந்த நகரம் உருவாகியது என்பதற்கான சான்றுகளை அடிக்கியுள்ளார். 
      ழக்கமாக சென்னையை பற்றி விழா கொண்டாடுவோர்களும், பத்திரிக்கையில் எழுதுவோர்களும் கடந்த கால மேன்மைகளையும், மேலோர்களை பற்றியும் பேசுவார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் நகர மாந்தர்களின் பல்வேறு அசைவுகளை படம்பிடித்து காட்டியுள்ளார். 22.08.1639-ம் ஆண்டாகிய சென்னை பிறந்தநாள் என்று அறிவிக்கப்படுவதற்கு முந்தைய கால வரலாறுகளை சுருக்கமாக தொகுத்து இருப்பது குறிப்பிடப்பட வேண்டியது. அதற்கடுத்து சென்னப்பட்டிணத்தில் முதலில் குடியேறியவர்கள் பற்றியும் அவர்களை பற்றிய விபரமும் குறிப்பிடப்பட வேண்டியது. தொடர்ந்து உருவான அரசு கட்டமைப்புகள், ஆலைகள், தொழிலாளர் வாழ்விடங்கள், வியாபார ஸ்தலங்கள் என நகரின் விரிவாக்கம் விபரமாக எடுத்துரைக்கப்படுகிறது. 
 சுதந்திர போராட்டத்தை பற்றிய பல்வேறு போக்குகளும் சென்னையில் நிலவியதை அதற்குரிய தன்மையோடு விளக்கியுள்ளார். தேசிய காங்கிரஸ் இயக்கம், தொழிற்சங்க இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கம், விடுதலை போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள் என அனைத்து அம்சங்களும் விளக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் மீது தொடுக்கப்பட்ட சதி வழக்குகளும், தாக்குதல்களும் பதியப்பட்டுள்ளது. 

    காந்தியின் வருகை இந்த அளவுக்கு துல்லியமான முறையில் இதற்கு முன் பதிவு செய்யப்பட்டதை நான் அறியவில்லை. இத்துடன் கூடவே தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது வியாபாரிகள் நிதி வசூலித்து வேலை நிறுத்த காலத்தில் தொழிலாளர்களுக்கு உதவி செய்த பதிவு மிகமிக முக்கியமானது. ஒர்க்கர்ஸ் பாங்க் ஆஃப் இந்தியா என்ற பெயரில் ஒரு வங்கியும் செயல்பட்டிருப்பது அறிந்து கொள்ள வேண்டியது. 

          அந்த காலத்தில் புத்தக நிலையங்கள் புத்தகத்தின் விலைகள் உட்பட சிலவற்றை துல்லியமாக குறிப்பிட்டுள்ளார். நாட்டு மருத்துவம் உட்பட பல மருத்துவ விளம்பர சுவரொட்டிகளை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார். இதற்கு மேலாக சென்னையின் 210-க்கும் மேற்பட்ட சாலைகள், பாலங்கள், பூங்காக்கள் ஆகியவற்றின் உருவாக்கம், மாற்றம், இடப்பெயர்வு, அழிவு ஆகியவற்றை மிகவும் சிரமப்பட்டு தொகுத்துள்ளார். பலப் பெயர்கள் மருவி இன்று அழைக்கப்படும் விதங்களை பற்றியும் நாளை ஒருவேளை இப்படி என்கிற கற்பனை கலந்த நையாண்டியும் வெளிப்படுத்தி இருக்கிறார். 
     ட்டாயம் சொல்ல வேண்டிய மிகப்பெரிய உழைப்பு இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள புகைப்படங்கள். இந்த புகைப்படங்களே சென்னையின் மாற்றங்களை பளிச்சென வெளிப்படுத்தும். புத்தகத்தில் வெளியிட்டுள்ள படங்களை தனியாகவும் வெளியீட்டு தினத்தன்று அரங்கத்தில் காட்சிப்படுத்தியது நிகழ்கால சென்னையை மறக்க வைத்தது. 
           எனவே இந்த புத்தகத்தை வாசிப்பது எதிர்கால வாழ்க்கை நாம் ஒவ்வொருவருக்கும் எத்தனை நாள் என்பது தெரியாது. ஆனால் கடந்த காலம் குறிப்பாக நமது பிறந்த தேதியை வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் 22.08.1639 ஆக மாற்றிவிடும். 


குஜராத் கோப்புகள் மறைக்கப்பட்ட விபரங்களின் கோர வடிவங்கள்


ஹிம்சா கொள்கையை உலகுக்கு அளித்த மகாத்மா காந்தியின் சொந்த மாநிலம் குஜராத் என்று அறியப்பட்ட காலங்கள் கரைந்து போய்விட்டது. இப்போது குஜராத் முரண்பாடுகளும், மோதல்களும், வெறுப்பு நிறைந்த வாழ்வும், குரோதங்கள் நிறைந்த அரசு கட்டமைப்பும் என மாற்றம் அடைந்துவிட்டது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக பிஜேபி ஆட்சிக்கு வந்தது மட்டுமல்ல, மோடியின் தலைமையில் கார்ப்ரேட் கொள்கை 2001-ல் ஆட்சிக்கு வந்ததுதான் அடிப்படை காரணமாகும். 2002-ம் ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் மாநிலத்தை வகுப்புவாத சக்திகள் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டன. இந்த வகுப்பு வெறியின் விளைவுகளை விளக்கி பல புத்தகங்கள், கட்டுரைகள், குறும்படங்கள் வெளிவந்து விட்டன. 
        னினும், ரானா அயூப்-ன் குஜராத் கோப்புகள் என்ற புத்தகம் புதிய உணர்வலைகளை உருவாக்கி உள்ளது. வகுப்புவாத வன்முறைகளில் ஈடுபட்ட பாஜக மற்றும் சங்பரிவார தலைவர்களின் மூளைக்குள் சென்று இதயத்தின் வழியாக வந்த வார்த்தைகளை பதிவு செய்திருக்கிறார். உள்துறை செயலாளரிலிருந்து காவல்துறையின் பலமட்ட அதிகாரிகளை சந்தித்து உண்மைகளை சேகரித்துள்ளார். படிப்படியாக மோடியின் இடத்திற்கே சென்று பேசும் அளவிற்கு கடுமையாக உழைத்துள்ளார். ரானா அயூப் இதற்காக பல வருடங்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். கடுமையான கட்டுப்பாடுகளையும் பரிசோதனைகளையும் கடந்து பாதுகாப்பு வளையம் நிறைந்த மனிதர்களிடம் ஊடுருவியுள்ளார். 
      மோடியின் பொதுக்கூட்டத்தில் பொது மக்களை அவர் எப்படி நரவேட்டைக்கு தூண்டி விடுகிறார் என்பதில் துவங்கி நம்மை குஜராத்தினுள் அழைத்து செல்கிறார். உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா அனைத்தையும் ஆட்டிப்படைத்தார் என்பதை சிங்கால் என்ற அதிகாரி மூலம் அம்பலப்படுத்துகிறார். மேலும் மோடியை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் குஜராத்தின் ரப்பர் ஸ்டாம்ப்புகளாகத்தான் இருந்தார்கள் என்பதையும் இந்த அதிகாரி தெரிவிக்கிறார். போலி என்கவுண்டர் நடைபெற்ற காலத்தில் சுமார் 65,000 பேர்களுக்கு மேல் உளவுப் பார்க்கப்பட்டிருக்கிறார்கள். விசாரிக்கப்பட்டுள்ளார்கள். 

     இதில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், பிஜேபி கட்சியிலேயே மோடியை எதிர்ப்பவர்கள், பத்திரிக்கையாளர்கள், அதிகாரிகளும் அடங்குவர். மோடி மற்றும் அமித்ஷா-ன் வாய்வழி உத்தரவை அமுல்படுத்தாத அதிகாரிகள் பழிவாங்கப்பட்டார்கள். மோடிக்கு வேண்டப்பட்ட அகமதாபாத் கமிஷனர் பி.சி.பாண்டே உள்துறை செயலாளரின் உத்தரவை கூட ஏற்று கலவரத்தை அடக்காமல் அதற்கு ஆதரவாக செயல்பட்ட சம்பவங்கள் பல விவரிக்கப்பட்டுள்ளது.
      குஜராத்தில் ஹரேன் பாண்டே என்ற உள்துறை அமைச்சராக இருந்தவர் படுகொலை செய்யப்பட்டதில் உள்ள மர்மங்களை எல்லாம் இப்புத்தகம் சம்மந்தபட்டவர்கள் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளது. இவரது கொலை வழக்கு ஒரு எரிமலை போன்றது. நியாயமாக விசாரணை நடந்தால் குஜராத் முதல்வர் வீட்டுக்கு போகமுடியாது, சிறைக்குத்தான் செல்ல வேண்டுமென உயர் அதிகாரியே பேசும் சம்பவங்கள் அரசு நிர்வாகமும் ஆட்சியும் யாரிடம் சிக்கியுள்ளது என்ற கோபம் வருகிறது. 
   ரானா அயூப்-ன் இந்த உழைப்பு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தாலும் அதில் சொல்லி இருக்கக் கூடிய முறைகள் அனைவர் கவனத்தையும் ஈர்க்கக் கூடியதாக உள்ளது. அவர் பணிசெய்த நிறுவனம்தான் இப்படி ஒரு புலனாய்வு தகவல்களை சேகரிக்கும் திட்டத்தை கொடுத்தது. 
   

       அதை நிறைவேற்றிய பிறகு அந்த உண்மைகளை வெளியிட முன்வரவில்லை. எனவே ரானா அயூப் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். விற்பனைக்கு எண்ணற்ற இடையூறுகள் வந்துகொண்டே இருக்கிறது. எனினும், உண்மையை, வலிமையை யாராலும் தடுக்க முடியாது என்பதை இந்த புத்தகம் நிரூபித்துக் கொண்டு வருகிறது. இதன் விளைவு தற்போது குஜராத்தில் தொடங்கியுள்ளது. அனைவரும் வாசிப்பதின் மூலம் இந்த தொடக்கம் வகுப்பு வெறி சக்திகளின் முடிவாக அமையும்.

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2016

Nerpada Pesu: PM Modi

தனிநபர் தாக்குதலால் சீர்குலையும் சட்டமன்றம் 4/4 | 13.08.16 | Kelvi Neram

தனிநபர் தாக்குதலால் சீர்குலையும் சட்டமன்றம் 3/4 | 13.08.16 | Kelvi Neram

தனிநபர் தாக்குதலால் சீர்குலையும் சட்டமன்றம் 2/4 | 13.08.16 | Kelvi Neram

தனிநபர் தாக்குதலால் சீர்குலையும் சட்டமன்றம் 1/4 | 13.08.16 | Kelvi Neram

புதன், ஆகஸ்ட் 10, 2016

குஜராத்தில் பாஜக-வின் சரிவும், சாதிய வெறியும்


 ஏ.பாக்கியம்
தீக்கதிர்-03.08.2016

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக வை வெல்ல முடியாது என்ற கருத்து பரவலாக இருந்தது... இருக்கிறது. குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அங்கு நடைபெறும் தொடர் போராட்டங்களும் நமக்கு மாறுபட்ட உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கிராமப் புறங்களில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2000-ம் ஆண்டில் கேசுபாய் படேல் முதல்வராக இருந்த போது உள்ளாட்சி தேர்தலில் உள்கட்சி மோதலால் ஒரு பின்னடைவை சந்தித்தது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் சரிவு அதிலிருந்து மாறுபட்ட அம்சங்களை கொண்டதாகும். 
    1998-ம் ஆண்டு பதவியேற்ற கேசுபாய் படேல் 2001-ம் ஆண்டு முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு நரேந்திர மோடி முதல்வராக பொறுப்பேற்றார். இந்தியாவில் முதன்முதலாக ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் முதல்வராக பொறுப்பேற்றது குஜராத்தில் தான். எனவே அந்த மதவெறி குணமும் குஜராத்தில் வெளிப்பட்டது. 2002-ம் ஆண்டு கோத்ரா கலவரத்தின் மூலமாக மக்களை மத ரீதியாக பிளவை ஏற்படுத்தினார் நரேந்திர மோடி. அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. ஆனால் தற்போது மதவெறி என்ற வாக்கு வங்கியும் சிதைய ஆரம்பித்துள்ளது. 
   2015 டிசம்பர் ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையை அதிர்க்குள்ளாக்கியது. இந்திய ஊடகங்கள் இதைப்பற்றி பெரிதாக செய்திகள் வெளியிடவில்லை. அவர்களின் வர்க்க பாசம் இதற்கு தடையாக இருந்தது. 2010-ல் பாஜக 30 மாவட்ட பஞ்சாயத்துக்களையும் 50.26 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. 2015-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 6 மாவட்ட பஞ்சாயத்துக்களையும் 43.97 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற முடிந்தது. 24 பஞ்சாயத்துகளை இக்காலத்தில் இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2010-ல் ஒரு மாவட்ட பஞ்சாயத்தையும், 44 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. 2015-ல் 24 மாவட்ட பஞ்சாயத்துகளையும், 47.85 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. 
     தாலுகா அளவிலான உள்ளாட்சி அமைப்புகளிலும் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2010-ல் 150 இடங்களிலும் 48.51 சதவீத வாக்குகளையும் பாஜக பெற்றிருந்தது. தற்போது 67 இடங்களையும் 42.32 சதவீத வாக்குகளையும் பெற்று சுருங்கி உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமே பாஜக ஓரளவு வாக்குகளை தக்க வைத்துள்ளது என்பதை பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் நகராட்சிகளிலும் அக்கட்சியின் வாக்கு தளம் குறைந்துள்ளது. 2010-ல் 47.7 சதமாக இருந்த வாக்கு சதவீதம் 2015-ல் 44.67 சதமாக பாஜகவிற்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் நகராட்சிகளில் 29.59 சதவீதத்திலிருந்து 39.59 சதமாக தன்னுடைய செல்வாக்கை பெருக்கி உள்ளது. 
    மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளையும் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு விகிதம் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. மாநகராட்சி இடங்களும் 443-லிருந்து 390-ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் 100 இடத்திலிருந்து 175 இடமாக உயர்த்தி கொண்டது. இந்த மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி 33 சதவிகிதத்திலிருந்து 41.12 சதவீதமாக உயர்த்தி கொண்டுள்ளது. சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை அதிகப்படவில்லை என்பது மட்டுமல்ல குறைந்துள்ளது. மொத்தமுள்ள 184 இடங்களில் 2002-ல் பாஜக 127 இடங்களை கைப்பற்றியது. தற்போது 115 இடமாக குறைந்துள்ளது.  

பொருளாதார கொள்கையும், தோல்வியும்
    பாஜக-வின் இந்த தோல்விக்கு படேல் இனத்தவரின் கிளர்ச்சி தான் காரணம் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. சில பத்திரிகைகள் பாஜக-வின் உள்கட்சி கோஷ்டி மோதல் காரணமென்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அடிப்படையான காரணம் மோடியின் வளர்ச்சி திட்டங்கள் பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட தோல்விதான் அடிப்படையான காரணம். 
    குறிப்பாக விவசாய துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. 2006-ம் ஆண்டு மாநிலத்தின் உற்பத்தியில் விவசாயம் மற்றும் அதன் துணை தொழில்களின் பங்கு 17 சதவிதமாக இருந்தது. 2013-ம் ஆண்டில் இத்துறையின் பங்கு 11 சதவீதமாக படுவீழ்ச்சிக்கு உள்ளானது. அந்த மாநிலத்தில் உள்ள 24.7 மில்லியன் தொழிலாளர்களில் 15.7 மில்லியன் தொழிலாளர்கள் விவசாயத்தை சார்ந்து வாழக் கூடியவர்கள். மொத்தமுள்ள 40.6 மில்லியன் வாக்காளர்களில் 25.8 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் கணிசமான பகுதி விவசாயம் சார்ந்த வாக்காளர்கள். ஆகவே பொருளாதார கொள்கையின் தோல்வி இந்த தேர்தலில் பிரதிபலித்துள்ளது. 
 
      குஜராத் மாநில அரசு பாசன வசதிக்காக கூடுதலாக நிதி ஒதுக்கியது. அந்த நிதியை வசதி படைத்த ஒருசிலர் பயன்படுத்தி கொண்டார்கள். அனைத்து பகுதியும் பாசன வசதியை பெற முடியவில்லை. பாசன வசதி செய்யப்பட்ட பல இடங்கள் தரம் குறைவானதால்  பழுதடைந்து நீடித்து நிற்கவில்லை. எனவே பெருமளவு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மழை பொய்த்தால் விவசாய உற்பத்தி பாதித்தது. விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதார விலையை குஜராத் அரசு உரிய முறையில் வழங்காததால் மக்கள் துன்பத்திற்கு உள்ளானார்கள். இந்தியாவில் தொடர்ந்து ஏற்றுமதி  என்பது வீழ்ச்சி அடைந்து கொண்டு வருகிறது. இந்த ஏற்றுமதி வீழ்ச்சி குஜராத் விவசாயிகளை கடுமையாக பாதித்தது. இதற்கு முன்னால் மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது பழி போட்டு குஜராத் மாநில அரசு தப்பித்து வந்தது. ஆனால் தற்போது மத்தியிலும் பாஜக அரசு மாநிலத்திலும் பாஜக அரசு இருப்பதால் விவசாயிகளிடம் பொய் சொல்லி தப்பிக்க முடியவில்லை. எனவே கிராமப்புற வாக்காளர்கள் பாஜக அரசுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர்.
      ல்வி வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலைமையிலேயே குஜராத் இருக்கிறது. பள்ளியிலிருந்து படிப்பை தொடர முடியாமல் விடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட குஜராத்தில் அதிகமாக உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் விடுபடுதல் தேசிய சராசரி 53 சதவீதம். குஜராத்தில் இது 62 சதவீதமாக உள்ளது. இதே போன்று ஆரம்ப கல்வி மற்றும் பட்டதாரிகள் ஆகியவற்றிலும் குஜராத் பின்தங்கிய நிலைமையில் உள்ளது. 
       மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி 2005-06 ல் 15 சதவீதமாக இருந்தது. 2012-13 ல் 8 சதவீதமாக குறைந்துள்ளது. 2007-2012 ஆகிய ஆண்டுகளில் குஜராத் மாநிலம் இந்தியாவின் 5 முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. 2012-14 ஆம் ஆண்டுகளில் இம்மாநிலம் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 
    ட்டுமொத்தத்தில் மோடியின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே உதவி செய்துள்ளது. வரிச்சலுகைகளை வாரி வழங்குவதும், விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரித்து அடானி போன்றவர்களுக்கு அள்ளி கொடுப்பதும் குஜராத்தின் உழைப்பாளி மக்களை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. எனவே அம்மக்களின் கோபம் உள்ளாட்சி தேர்தலில் வெளிப்பட்டுள்ளது. 
படேல் சமூக போராட்டமும், பாதிப்பும்
 
    குஜராத் மாநிலத்தின் படேல் சமுதாயத்தினர் பாஜக-வின் தளமாக இருந்துள்ளனர். பாஜக வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகித்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதம் படேல் சமுதாயத்தினர். 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இச்சமுகத்தினர் 70 சதவீதம் வரை பாஜகவிற்கு வாக்களித்து உள்ளனர். ஆனால் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் இந்நிலைமை மாறும். இந்த படேல் சமுதாயத்தினர் 2015-ல் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு கணிசமானவர்கள் வாக்களிக்கவில்லை. விவசாய பகுதி இருக்கக்கூடிய படேல் சமுதாயத்தினர் விவசாயம் பொய்த்தது மட்டுமல்ல நிலங்களையும் இழந்துள்ளனர். நகர்ப்புறத்தில் மோடி அரசின் ஏற்றுமதி கொள்கை தோல்வி அடைந்ததால் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் பாஜக அரசுக்கு எதிராக திரும்பி உள்ளதும் தேர்தலில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற தேர்தல்களிலும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 
   2017-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த பொருளாதார பின்னடைவுகள் படேல் சமுதாயத்தினருடைய போராட்டம் ஆகியவை பாஜக தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படேல் சமுதாயத்தினர் 10 சதவிகித வாக்குகள் மாறினாலும் பாஜக 73 இடங்களை இழந்துவிடும். பாஜகவிலிருந்து பிரிந்த வந்த கேசுபாய் படேல் கடந்த தேர்தலில் பரிவர்தன் கட்சி ஆரம்பித்து அதன் மூலம் தேர்தலில் போட்டியிட்டார். இவரது கட்சிக்கு 3.6 சதவித வாக்குகள் கிடைத்தது. குறிப்பாக சௌராஷ்டிரா மற்றும் குட்ஜ் பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றதால் பாஜக 23 இடங்களை இழந்தது. 
    2002 கோத்ரா கலவரத்திற்கு பிறகு கணிசமான இஸ்லாமியர்களை பாஜக அச்சுறுத்தல் மூலமாக தன்பக்கம் வைத்திருந்தது. பாதுகாப்பு மற்றும் அரசு நிர்வாகத்தின் தாக்குதல் ஆகியவற்றிற்கு பயந்து 2012-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 10 சதவித இஸ்லாமியர்களில் 31 சதவீதம் பாஜகவிற்கு வாக்களித்தனர். இருந்தும் இஸ்லாமியர்கள் மீது தொடர் தாக்குதல்களும் சகிப்பு தன்மையின்மையும் கடைபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வருகிற தேர்தலிலும் இஸ்லாமியர் வாக்கு 3 சதவிதம் மாறினாலும் பாஜக 36 இடங்களை இழக்கும். ஆகவே பாஜக 2017-ம் ஆண்டு வெற்றி பெறுவது மிகப்பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. 

 கோஷ்டி மோதல்

தற்போது குஜராத் முதல்வராக உள்ள ஆனந்திபென் திருமதி நக்குறுதி பாண்டியாவை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவராக நியமித்தார். இந்த நியமனம் மோடி மற்றும் அமித்ஷா உட்பட பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர் ஹரேன் பாண்டேயாவின் மனைவி ஆவார். 2012-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கேசுபாய் படேலின் பரிவர்தன் கட்சியின் சார்பில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டவர். இவரின் கணவர் ஹரேன் பாண்டேயா நரேந்திர மோடியை 2001-ம் ஆண்டு முதலமைச்சராக நியமித்த பொழுது கேசுபாய் படேலின் மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக இருந்தவர். மோடியின் வருகையை கடுமையாக எதிர்த்தவர். அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து மோடி போட்டியிடுவதற்கு வழிவிட வேண்டுமென்று மோடி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். முதல்வராக இருந்த மோடி வேறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 2002-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஹரேன் பாண்டேயாவிற்கு மோடி வேட்பாளராக போட்டியிட டிக்கெட் தரவில்லை. தேர்தல் முடிந்து அடுத்த மூன்று மாதங்களில் ஹரேன் பாண்டேயா படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மோடியால் நடத்தப்பட்டது என்று அவரது தந்தையும் மனைவியும் தொடர்ந்து குற்றம் சாட்டினர். 
    னவே மோடியின் எதிர்ப்பாளரை அரசு பதவியில் நியமித்தது மோடி அமித்ஷா விற்கு எதிராக ஆனந்திபென்னின் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, மோடிக்கு முன்னாள் பாஜக வின் தேசிய செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷி குஜராத்தில் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். மோடி பதவிக்கு வந்த பிறகு இவரை இருந்த இடம் தெரியாமல் ஓரங்கட்டி விட்டார். மோடி - ஜோஷி மோதல் கடந்த 20 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. 2009-ல் நிதின்கட்கரி பாஜகவின் தலைவராக இருந்தபோது சஞ்சய் ஜோஷிக்கு மாநிலத்தில் கட்சி பதவியை வாங்கினார். நரேந்திர மோடி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சஞ்சய் ஜோஷியை பதவியிலிருந்து நீக்கும் வரை மோடி தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு செல்வதை புறக்கணித்தார். அவரை நீக்கிய பிறகு கூட்டத்திற்கு சென்றார். 
   அந்த சஞ்சய் ஜோஷி தற்போது தன்னை தலைவராக்க வேண்டுமென்று மாநிலம் முழுவதும் சுவரொட்டி பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இவரும் தற்போது முதல்வராக உள்ள ஆனந்திபென்னும் வி.எச்.பி.தொகாடியாவின் குடும்ப திருமண நிகழ்வில் சந்தித்து உரையாடுவது நடந்துள்ளது. இந்த சந்திப்பு மோடி-அமித்ஷா விற்கு எதிரானது என்பது தெள்ளத்தெளிவாகும். தொகாடியாகவும் மோடிக்கு எதிரானவர் என்பது அறிந்த விஷயமே. ஆகவே கோஷ்டி பூஷல் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. 
    ற்றொரு நிகழ்வு இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. பாஜகவின் மாநில புதிய தலைவராக ருபானி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆனந்திபென் மந்திரி சபையில் மந்திரியாக உள்ளார். இந்த நியமனம் மோடி-அமித்ஷாவால் நடத்தப்பட்டுள்ளது என்பதால் ஆனந்திபென் பிரிவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த ரூபானி மாநிலத்தில் பாஜக வை வழி நடத்துவதற்கு திறமையற்றவர் என்றும், தற்போதைய நெருக்கடியை சமாளிக்கக்கூடியவர் அல்ல என்றும் பலர் கருதுகிறார்கள். குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவித இட ஒதுக்கீட்டை அந்த அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் வெளியிடவில்லை. இதற்கு மாறாக அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் ருபானி அறிவித்தார். மாநில முதல்வர் ஆனந்திபென் ஒன்றும் செய்ய முடியாமல் அடக்கமாக அமர்ந்திருந்தார். அரசு துறை அப்பட்டமாக மீறப்படுவதும், இந்த கோஷ்டி மோதலின் குற்றமாகும். 
   குஜராத்தில் பாஜகவின் வகுப்பு வெறி அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மோடியின் பொருளாதார கொள்கைகள் தோல்வி அடைந்தது, படேல் சமுதாய போராட்டம் கோஷ்டி மோதலின் உச்சக்கட்டம் ஆகியவை பாஜகவை சுற்றி வளைத்துள்ளது. எனவே 2017 சட்டமன்ற தேர்தல் 2015 உள்ளாட்சி தேர்தல் போல் அமைந்து விடும் என்ற அச்சம் அலைக்கழிக்க ஆரம்பித்துள்ளது. பாஜகவின் இந்த தோல்விக்கு எதிர்க்கட்சியான காங்கிரசின் தீவிரமான செயல்பாடு காரணமில்லை. காங்கிரஸ் இன்றும் அம்மாநில அரசை எதிர்த்து சக்திமிக்க போராட்டங்களை நடத்தவில்லை. மாநிலத்தில் ஆகர்ஷிக்க கூடிய தலைவர்களும் இல்லை. எனினும் மோடி மற்றும் பாஜக அரசின் தோல்வியால் மக்கள் அதிருப்தி அடைந்து காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளனர்.

சரிகட்ட... சாதியம்

பாஜக தனது செல்வாக்கையும், பதவியையும் தக்க வைத்து கார்ப்ரேட் நலனை பாதுகாக்க எந்த கொடூர செயலையும் செய்யும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. தற்போது குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலை கையில் எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள தலித் மக்களை தாக்குவது மூலம் மற்ற பிரிவினரை ஒன்று சேர்க்கும் மிகமிக நாகரீகம் அற்ற செயலில் இறங்கியுள்ளது. இதன் வெளிப்பாடு தான் இறந்த மாட்டுத் தோலை உறித்த தலித் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம். தொடர்ந்து தலித்துகளை படுகொலை செய்வதும், காயப்படுத்துவதும் பத்திரிக்கைகளில் வந்து கொண்டே இருக்கிறது. குஜராத் அரசு தலித்துகளை வேட்டையாடுவதற்கே 200-க்கும் மேற்பட்ட பசு பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் குண்டர்களையும் உருவாக்கியுள்ளது. தலித் மக்களை பாதுகாக்க எந்தவித சட்டங்களையும் அமுல்படுத்துவதில்லை. வன்கொடுமை தடுப்பு சட்டதத்தின் கீழ் தேசிய அளவில் 28 சதவீதம் தண்டிக்கப்பட்டாலும் குஜராத்தில் 5 சதவிதம் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது என்றால் இதன் கொடூரத்தை அனைவரும் உணர முடியும். மாநில அரசின் மேல்சாதி ஆதிக்க உணர்வால் கட்டமைக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் தலித் மக்களை வேட்டையாடுகிறது. 
   ற்போது இந்த தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அரசு மட்டுமல்ல மத்திய மோடி அரசும் அம்பலப்பட்டு நிற்கிறது. பாஜகவின் அடிப்படை குணாம்சமே கார்ப்ரேட் பொருளாதாரம், மேல்சாதி ஆதிக்கம் என்பதற்கான செயல்பாடுகள் தற்போது வேகமாக வெளிப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களும், உழைப்பாளி மக்களும் ஒன்று சேர்வது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஒற்றுமை உயர்வு வகுப்பு வெறி பிடித்த பாஜகவை 2017-ல் குஜராத்தில் மூழ்கடிக்கும். இந்தியாவிலிருந்தும் இந்த வகுப்பு வெறி சக்திகள் வீழ்த்தப்படும்.

- ஏ.பாக்கியம்

திங்கள், ஆகஸ்ட் 08, 2016

"நானே மகத்தானவன்"

- ஏ.பாக்கியம்
மார்க்சிஸ்ட் ஜுலை 2016

விண்ணை முட்டும் கரவொலி
செவிப்பறை கிழியும் கூச்சல்!
கரவொலி - குரல் ஒலியுடன்
எதிரொலியும் இணைந்து கொண்ட அரங்கம்!
பெரும் ஆரவாரங்களுக்கிடையில்
அரங்கின் நடு மேடையிலிருந்து 
எரிமலை குழம்புகள் வெளியேறுவதுபோல்,
"நான் மகத்தானவன்
 நானே மகத்தானவன்"

என்ற குரல் பீறிட்டு கிளம்பி, அத்தனை சப்தங்களையும் அமைதியாக்கியது. இந்த குரலுக்கும்,வார்த்தைக்கும் உரிமையாளனின் அடையாளம் இதோ.
வெளிர் கருப்பு நிறம்
6.3 அடி உயரம்
சுருட்டை முடி
தடித்த உதடுகள்
ஒழுங்கமைக்கப்பட்ட 
உடல்வாகு,புஜபலம்,
      முஷ்டி மடக்கிய கைகள்
      பட்டாம்பூச்சிபோல் மிதக்கும் கால்கள்
      நெற்றி பொட்டில் குத்தி நிற்கும் இரு கண்கள்

என அமையப் பெற்ற அவன்தான் எளிதில் வெற்றி கொள்ள முடியாத குத்துச் சண்டை வீரன் முகமது அலி.
     தனது 22வது வயதில் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு பிளோரிடா மாநிலம் மியாமி கடற்கரைக்கு வந்து சேர்கிறான் முகமது அலி. மோதப்போவது பிரபலமான சாம்பியன் சன்னி லிஸ்டனுடன் (ளுருசூசூலு டுஐளுகூடீசூ). அவன் சாம்பியன் மட்டுமல்ல. அங்குள்ள உழைப்பாளர்களுக்கு எதிராக கூட்டங்களை கலைக்கவும், போராட்டக்காரர்களை காயப்படுத்தும் பணிகளை செய்யும் பிரபலமான அடியாளாகவும் திகழ்ந்தான். அவனின் ஆதரவாளர்கள் கேலி பேசுகின்றனர். முகமது அலியை அவமானப்படுத்துகின்றனர்.அவநம்பிக்கை விதைத்து விரட்டப் பார்க்கிறார்கள். ஆனாலும் அலி அசைந்து கொடுக்கவில்லை.
       1964 பிப்ரவரி 25 அன்று போட்டி துவங்கியது.ஒரே சுற்றில் போட்டி முடியும். சன்னி லிஸ்டன் எளிதில் வெல்வான் என நினைத்து அரங்கத்தில் அவனுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தவண்ணம் இருந்தது. முதல் சுற்று கடந்து இரண்டு...மூன்று சுற்றுகள் தொடர கூட்டங்களின் சப்தம் அடங்கி புருவங்கள் விரிந்தன. ஆறாவது சுற்றில் லிஸ்டன் முகமது அலியால் வீழ்த்தப்பட்டான். கூட்டத்தின் விரிந்த புருவங்கள் நிலைத்து சில நிமிடங்கள் நின்றன. நடுவரின் மணியோசை ஒலித்தவுடன் அலியின் வெற்றி அறிவித்த நிலையில், நிசப்தமான அரங்கம் ஆரவார உச்சநிலையை அடைந்தது. இந்த ஆரவாரங்களுக்கிடையே முகமது அலி இருகைகளையும் உயர்த்தி "நானே மகத்தானவன்" (ஐ யஅ வாந பசநயவநளவ) என எரிமலைகுழம்பு பீறிட்டு அடித்தது போல் கத்தினான். இந்த வார்த்தைகள் அடுத்த பத்தாண்டுகள் குத்துச்சண்டை உலகை ஆட்சி செய்தது.
உன்னால் முடிந்தால் என்னை பிடி
பட்டாம் பூச்சிபோல் மிதந்து,
தேனி போல் கொட்டுவேன்
உன்னால் முடிந்தால் என்னை பிடி! 
என்ற கவிதை வரிகளுடன் வெற்றிப்பயணத்தில் தடம்பதித்தான்.

குத்துச்சண்டை என்பது சமூகத்தில் ஏழைகள், விளிம்புநிலை மக்களின் விளையாட்டு. இந்த குத்துச்சண்டை விளையாட்டு, வீரர்களை சிவிங்கம் போல் மென்று வெளியே துப்பிவிடும். அதுவும் கறுப்பின வீரர்கள் என்றால் எளிதில் துப்பிவிடும். கறுப்பின மக்களுக்கு இந்த விளையாட்டு விருப்பத் தேர்வாக இருக்கவில்லை. வாழ்வின் அவசியமாக அமைந்து விடுகிறது. அமெரிக்காவின் ஆரம்பகால குத்துச்சண்டை வீரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து வரப்பட்ட கருப்பின அடிமைகளே. அமெரிக்காவின் தெற்கு பகுதியில் தோட்ட முதலாளிகள் மற்றும் பண்ணை முதலாளிகள் தங்களது பொழுதுபோக்கிற்காக கருப்பு அடிமைகளின் கழுத்தில் இரும்புபட்டை கட்டி மோதவிடுவார்கள். அந்த அடிமைகளின் வலியில் இவர்கள் இன்பம் காண்பார்கள். அமெரிக்காவில் அடிமைகளை விடுதலை செய்யும் சட்டம் நிறைவேற்றிய பிறகு பலர் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு பணத்திற்காக நடைபெற்ற போட்டியில் கறுப்பினத்தவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்தக் களத்தையும் கருப்பின மக்கள் தங்களது விடுதலைக் களமாக அமைத்துக் கொண்டனர். முகமது அலியின் முன்னோடிகளின் வரலாறும் இதுவே.

       1908ம் ஆண்டு ஜாக் ஜான்சன் (1878-1946) என்ற கருப்பின 20 வயது இளைஞன் டெக்சாஸ் மாநிலத்தில் தொழில்முறை குத்துச்சண்டை களத்திற்கு வருகிறான். 1908ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதன்முறையாக "உலக குத்துச்சண்டை வீரன்" என்ற பட்டத்தை டோமி பர்னஸ் என்பவனை வீழ்த்தி வெற்றி பெற்றான். உலக பட்டத்தை பெற்ற முதல் அமெரிக்க கருப்பினத்தவன் இவனே ஆகும். இந்த வெற்றி கருப்பின மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதிகாரம், பணபலம் படைத்த வெள்ளையர்களால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. ஜாக் ஜான்சன் இதற்குமுன் உள்ளூர் அளவில் பல கருப்பு, வெள்ளை நிற வீரர்களை தோற்கடித்துள்ளான். எனினும் ஒரு கருப்பன் "உலக சாம்பியன் பட்டம்" பெற்றதை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஒரு வெள்ளையன் மூலம் ஜாக் ஜான்சனை தோற்கடிக்க வேண்டும் என முடிவெடுத்தனர். ஜாக் ஜான்சனுக்கு இன அடிப்படையில் அச்சுறுத்தல் நெருக்கடிகளை கொடுத்தனர். 1909ம் ஆண்டு வெள்ளை நிறத்து பண்ணையாட்களால் தயார் செய்யப்பட்டு மோதவிடப்பட்ட டோனிராஸ் (கூடீசூலு சுடீளுளு), அல்கைஃப்மேன் (ஹடு முஹருகுஆஹசூ), மற்றும் ஸ்டேன்லி கெட்சல் (ளுகூஹசூடுநுலு முநுகூஊழநுடு) ஆகியோரை ஜாக் ஜான்சன் தோற்கடித்தான். வெள்ளை முதலாளிகளால் தயார் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உலக குத்துச்சண்டை வீரர் ஜேம்ஸ் ஜெஃப்ரீசை அழைத்து வந்து மோதவிட்டனர். 

"நான் மீண்டும் சண்டைபோட வருவதற்கு ஒரே
காரணம் வெள்ளை நிறத்தவன் நீக்ரோவைவிட
சிறந்தவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று"
நிறவெறி திமிருடன் ஜேம்ஸ் பேசினான்.
       நிறவெறி பதற்றம் போட்டி நடைபெறும் நெவ்டா பிரதேசத்திலும், ரெனோ நகரிலும் பற்றிக்கொண்டது. அரங்கைச் சுற்றிலும், ஆயுதம், துப்பாக்கி, மது வகைகள் இதனால் தடைசெய்யப்பட்டிருந்தது. எனினும் வெள்ளை நிற முதலாளிகள் ஜேம்ஸ் ஜெஃப்ரி மீது பந்தயம் கட்டியிருந்தனர். அரங்கை வெள்ளையர் கூட்டம் ஆக்கிரமித்திருந்தது. பார்வையாளர் கூட்டம் "கருப்பனை சாகடி" என வெறிக் கூச்சலிட்டது. போட்டி ஜீலை 4, 1910 அன்று 20,000 பார்வையாளர்கள் மத்தியில் நடந்தேறியது. கருப்பின ஜாக் ஜான்சன் தனது 15வது சுற்றில் முன்னால் உலக சாம்பியன் "ஜேம்ஸ் ஜெஃப்ரியை" நாக்அவுட் முறையில் வீழ்த்தினான். ஜெஃப்ரி தனது குத்துச்சண்டை வரலாற்றில் அதுதான் நாக்அவுட் முறையில் பெற்ற முதல் தோல்வி.
      இந்த போட்டி முடிந்தவுடன் ஜீலை 4ம் தேதி மாலையே கலவரம் துவங்கியது. ஜாக் ஜான்சன் வெற்றி கருப்பின மக்களை குதூகலிக்க செய்தது. வெறுப்படைந்த வெள்ளை நிறத்தவர் கருப்பர்கள் மீது தாக்குதலை தொடுத்தனர். நியுயார்க், பிட்ஸ்பர்க், பிலடெல்பியா, நியு ஆர்லியான்ஸ், அன்ட்லாண்டா, செயின்ட்லூயிஸ் என 25 மாநிலங்களிலும், 50க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கலவரம் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். பலநூறு பேர்கள் படுகாயமடைந்தனர். இதற்கடுத்து 1960ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தான் மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் மீண்டும் கருப்பின மக்களின் எழுச்சி ஏற்பட்டது.
      சமூக யதார்த்தங்கள் அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கும் என்பதைபோல் தொழில்முறை குத்துச்சண்டையிலும் அமெரிக்காவில் இந்த நிறவெறி பாகுபாடு இருந்தது. இந்த நிறவெறி சமூகம் சட்டம் வந்த பிறகும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்தப் பின்னணியில்  இதோ, மீண்டும் ஒரு கருப்பின வீரன் "ஜோ லூயிஸ்" குத்துச்சண்டை அரங்கை பற்றவைத்தான். 1937 முதல் 1949-ஆம் ஆண்டு வரை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தன்வசம் வைத்திருந்தான். 1934 முதல் 1951 வரை 71 போட்டிகளில் கலந்து கொண்டு 68ல் வெற்றி பெற்றுள்ளான். அவற்றுள் 54 நாக்அவுட் முறை வெற்றியாகும்.


ஜோ லூயிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும்போதும் இனவெறி மோதல் இருக்கக் கூடாது என்பதற்காக அவரது மேலாளர்கள் பலக் கட்டுப்பாடுகளை விதித்தனர். வெள்ளை நிறப் பெண்களுடன் புகைப்படம் எடுக்கக் கூடாது, பொழுதுபோக்கு விடுதிக்கு செல்லக்கூடாது, தானாக சென்று யாரிடமும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும் ஜோ லூயிஸ் கலந்து கொண்ட குத்துச்சண்டை அதிக அளவு அரசியல் களமாக மாறியது. அமெரிக்கன் நாட்டு நிறவெறியை கடந்து ஜெர்மனி வீரர்களுடன் மோதும்போது இனவெறி மேன்மையை நிரூபிக்கும் ஒரு போட்டியாக இனவெறியர் மாற்றினார்கள். கருப்பினத்தவர்கள் மூளைத்திறன், உடல்திறன் குறைந்தவர்கள். சோம்பேறிகள், கட்டுப்பாடற்றவர்கள் என்று ஹிட்லரின் நாஜிகளால் இனவெறி விஞ்ஞான கருத்து என்று கட்டமைக்கப்பட்டிருந்தது.
       1935ம் ஆண்டு கருப்பின ஜோ லூயிஸ் இத்தாலிய உலக சாம்பியன் பிரைமோ கார்னராவுடன் மோதி அவரை தோற்கடித்தான். கார்னரா பெனிட்டோ முசோலியின் தூதராக கருதப்பட்டான். கருப்பின ஜோ லூயிஸ் இத்தாலி ஆக்கிரமித்த எத்தோப்பிய இனமாக அடையாளப்படுத்தினர். இங்கு அந்த இனத்தூய்மைவாதம் மேலோங்கியது.
        ஜெர்மானிய வீரர் மேக்ஸ் ஸ்க்மெல்லிங்கிடம் ஜோ லூயிஸ் 1936-ல் தோற்றுப்போனார். ஹிட்லரும், அவரது கூட்டாளி கோயபல்சும் இந்த வெற்றியை இனவெறி வெற்றியாக பறைசாற்றினர். அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் `இந்த வெற்றி தான் எந்த இனம் சிறந்த மேன்மையான இனம் என்பதை நிரூபித்துள்ளது' என்று எழுதின.
      1938ம் ஆண்டு கருப்பின ஜோ லூயிஸ் ஜெர்மானிய மேக்ஸ் ஸ்க்மெல்லிங்குடன் மீண்டும் மோதினான். இந்த போட்டியை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வானொலி மூலம் நேரடி ஒலிபரப்பு செய்தது. இந்த போட்டியின் மூலம் வெள்ளை இனமே கருப்பினத்தைவிட மேலானது என்று நிரூபணம் ஆகும் என ஹிட்லரும், வெள்ளை நிற வெறியர்களும் கருதினர். இனப்பெருமையை நிரூபிக்க இது உடல்பலத்தின் மூலமாக நடைபெறும் பொதுவாக்கெடுப்பு என ஹிட்லர் பேசினார். போட்டி துவங்கியது. பெருங்கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது. இதோ... கருப்பின ஜோ லூயிஸ் முதல் சுற்றிலேயே ஜெர்மானிய மேக் ஸ்க்மெல்லிங்கை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தான். உடனே ஹிட்லர் ஜெர்மனி முழுவதும் வானொலி ஒலிபரப்பை நிறுத்தினான்.  இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க கண்டம் கடந்து கருப்பின மக்கள் எழுச்சி கொண்டனர். கருப்பின இளைஞர்கள் நம்பிக்கையோடு ஒன்று சேர்ந்தனர். ஜோ லூயிஸ் எந்த அளவு இளைஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருந்தார் என்பதற்கு மற்றொரு சான்று இதோ. அமெரிக்காவின் தெற்குபகுதி மாநிலத்தில் ஒன்று, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு புதிய வடிவத்தை கொண்டு வந்தது. "விஷவாயு"வை செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றுவது என்று முடிவு செய்தது. இறக்கும் போது விஷவாயு கூண்டுக்குள் என்ன நடக்கிறது என அறிய மைக்ரோபோன் பொருத்தப்பட்டது. முதன்முதலில் இந்த தண்டணை பெற்று நிறைவேற்றப்பட்டவர் கருப்பின இளைஞர். அவரது மரணக்குரல்

"ஜோ லூயிஸ் என்னை காப்பாற்றுங்கள்
ஜோ லூயிஸ் என்னை காப்பாற்றுங்கள்"

என்று இருந்ததாக பதியப்பட்டுள்ளது. அந்த அளவு கருப்பின குத்துச்சண்டை வீரர்கள், அம்மக்களுக்கு மீட்பராக, பாதுகாப்பாளராக இருந்துள்ளனர். ஜோ லூயிஸ் 12 ஆண்டுகளில் 25 முறைகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளான். அடுத்த 20 ஆண்டுகளில் மீண்டும் குத்துச்சண்டை களம் சமூக போராட்டத்தின் உந்து சக்தியாக மாறுகிறது. அந்த உந்து சக்தியின் முகமாக முகமது அலி இருந்தார். 

1950-60 ஆண்டுகளில் அமெரிக்காவில் கருப்பின மக்களின் விடுதலை போராட்டம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது. பல இடங்களில் கருப்பின மக்களின் போராட்டம் தீ ஜூவாலைகளாகவும் சில இடங்களில் கனன்று கொண்டும் இருந்தது. இந்த சூழலில்தான் 1942-ம் ஆண்டு அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லூயிஸ்வில்லி என்ற இடத்தில் முகமது அலி பிறந்தார். அவருக்கு கேசியஸ் கிளே ஜீனியர் என்று அவரது தந்தை பெயர் வைத்தார். முகமது அலியின் தாத்தா ஹெர்மன் அடிமை சட்டத்தை ஒழித்திட பாடுபட்டவரின் நினைவாக தனது மகனுக்கு கேசியஸ் கிளே என்று பெயர் வைத்தார். இப்போது முகமது அலிக்கு கேசியஸ் கிளே ஜீனியர் என்று பெயர் வைக்கப்பட்டது. காலம் அவனுக்கு கேசியஸ் கிளே என்று பெயரிட்டது. சமூக சூழல் அவனை முகமது அலியாக மாற்றியது.
    "எனது மனதால் ஒரு கருத்தை உருவாக்கி கொள்ள முடியும்போது, எனது இதயத்தால் அதை நம்பமுடியும் போது ஏன் அதை என்னால் செய்ய முடியாது" 
    
     என்ற வினாவை எழுப்பி விடை தேடினான். அசாத்தியங்களை சாத்தியமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டான். இளம் வயதிலேயே குத்துச் சண்டை களத்தை தேர்வு செய்தான். குத்துச்சண்டை வளையத்துக்குள் எந்த அளவிற்கு கேசியஸ் கிளேயின் செயல் இருக்குமோ அந்த அளவிற்கு அவரது வாயும் இருந்தது. ஜோ லூயிஸ் "அரங்கில் எனது செயல் பேசும், வெளியில் எனது மேலாளர் பேசுவார்" என்று இருந்தார். ஆனால் கேசியஸ் கிளே இரண்டையும் செய்தார். "சத்தம் போட்டு பேச கத்தி கூச்சல் போட எனக்கு தெரியாவிட்டால், அடுத்த வாரம் நான் எனது சொந்த ஊரில் ஜன்னல் துடைத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு தலையாட்டிக் கொண்டிருப்பேன்" என்று நிலைமையை விவரித்தார். இதனால் இவருக்கு அவசரக்குடுக்கை, வலிமையான வாய் என்ற பட்டப்பெயர் இருந்தாலும், `லூயிஸ்வில்லி வாயன்' என்ற பட்டப்பெயர் புகழ்பெற்று இருந்தது. 
       தனது பள்ளி பருவ காலத்தில், தொழில்முறை குத்துச்சண்டைக்கு வருவதற்கு முன்னால் தேசிய தங்க கையுறை பதக்கத்தையும், இருமுறை தேசிய அமெச்சூர் அதலெடிக் யூனியன் பட்டத்தையும் வென்றுள்ளான். இக்காலத்தில் நடைபெற்ற போட்டிகளில் 100-ல் கலந்து கொண்டு 92-ல் வெற்றி பெற்றான். 8 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்தான்.
      கேசியஸ் கிளே 18 வயது நிரம்பிய நேரத்தில் ரோம் நகரில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டியில், குத்துச்சண்டையில் ஐக்கிய அமெரிக்க குடியரசு சார்பில் கலந்து கொண்டு, முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றான். ரோமிலிருந்து உற்சாகத்துடன் திரும்பி வந்தான். அவனது கழுத்தில் அணியப்பட்ட தங்கப்பதக்கதை கழற்றாமலயே விமான நிலையத்தில் இறங்கி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தான்.

அமெரிக்காவிற்காக தங்கம் வெல்வதே என் குறிக்கோள்
ரஷ்யனைத் தோற்கடித்தேன்
போலந்துகாரனைத் தோற்கடித்தேன்
அமெரிக்காவிற்காக தங்கப் பதக்கம் வென்றேன்
நீ பழைய கேசியசை விட சிறந்தவன் என்று கிரேக்கர்கள் கூறினார்கள்.

        என அமெரிக்க தேசம் முன் தனது வெற்றியை ஒப்படைத்தான். கருப்பின மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. அவன் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், தேசத்திற்காக பதக்கம் பெற்றாலும் நிறவெறி அவனை நிலைகுலையச் செய்தது.
 
    கேசியஸ் கிளே கழுத்தில் போடப்பட்ட பதக்கத்தை கழற்றவில்லை. தூங்கும்போது, தெருவில் நடக்கும்போது, தேநீர் அருந்தும் போது எப்போதும் பதக்கத்துடனேயே பயணித்தான் என சக ஒலிம்பிக் வீரர் ஷல்மா ருடோல்ப் கூறுகிறார். ஒரு வாரம் கழித்து லூயிஸ்வில்லியில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு சீஸ்பர்க்கர் சாப்பிட செல்கின்றான். அங்கே அவனை உள்ளே விடாமல், உணவு பரிமாற முடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டனர். அடக்க முடியாத கோபம் கொப்பளித்தது. அந்தக் கோபம் உணவு விடுதியின் மீது அல்ல அமெரிக்க நிறவெறியின் மீது. எந்த தேசத்திற்காக பதக்கம் வென்றேன் என பெருமைப்பட்டானோ, அந்த தேசத்திலேயே அவமானப்படுத்தப்பட்டான். அடுத்த வினாடியே கழுத்தில் தொங்கிய பதக்கத்தை கழற்றி ஓடிக்கொண்டிருந்த ஒஹியோ ஆற்றில் வீசினான். கேசியஸ் கிளேவிற்கு அனைத்தும் கேள்வி குறியாக மாறியது.
        தேசத்திற்கான போட்டி என்பதிலிருந்து தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு மாறினான். மறுபுறம் மால்கம் எக்சும், `இஸ்லாமிய தேசம்' என்ற இஸ்லாமிய மதப்பிரிவும் கேசியஸ் கிளே-வை கவர்ந்தது. அதே நேரத்தில் மால்கம் எக்சையும் கலகக்கார கேசியஸ் கிளே கவர்ந்தார். 1964ம் ஆண்டு மியாமி கடற்கரையில் உலக சாம்பியன் சன்னி லிஸ்டனை தோற்கடித்தவுடன் கேசியஸ் கிளே பெரும் புகழ்பெற்றான். போட்டிக்கு முன் மால்கம் எக்ஸ் கூறினார். "கிளே வெல்வான். நான் பார்த்த சிறந்த  கருப்பின வீரன்" என்றார். கிளேயின் பயிற்சியாளர் கேசியஸ் கிளே தலைமுறை வீரர்களை தனது குத்துச்சண்டையால் தரைமட்டமாக்கிவிடுவான் என்றார். கிளாசியஸ் கிளே "நான் மிகவும் வேகமானவன். படுக்கையறை சுவிட்சை தட்டிவிட்டு விளக்கு அணையுமுன் படுக்கையில் இருப்பேன்" என தன்மீதுள்ள அசைக்க முடியா நம்பிக்கையை வெளிப்படுத்தினான். சன்னி லிஸ்டனை சாய்த்த பிறகு, அவனது வெற்றி கொடிகட்டி பறந்தபோது அவன் அடுத்த நாள் தான் இஸ்லாமிய தேசம் என்ற மதப்பிரிவில் சேர்ந்ததாக அறிவித்தான். எலிசா முகமது இவரது பெயரை "முகமது அலி" என்று மாற்றினார். முகமது அலியின் இந்த செயல் கருப்பின இளைஞர்களுக்கு எழுச்சியூட்டியது. வெள்ளை நிறவெறியர்கள் சீறினர். கிறிஸ்துவ மதம் வெள்ளை நிறவெறியை ஊக்குவிக்கும் மதம் என கிளே நம்பினான். எனவே இந்த மாற்றம் அவனுக்கு தேவைப்பட்டதாக அறிவித்தான். மதம் சமூக ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டியதாக வரலாறு இல்லை என்றாலும், மதத்தை சுரண்டும் வர்க்கம் தனது சுரண்டலுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கிறது என்ற நிலைமை இருந்தாலும் கேசியஸ் கிளே வாழ்ந்த சூழல் எதிர்ப்பின் அடையாளமாக இஸ்லாமிய தேசம் என்ற மதப்பிரிவை பார்த்தான். 
    பெயரை மாற்றியதும், மதம் மாறியதும் வெள்ளை நிறவெறியர்களுக்கு ஒரு அடியாக இருந்தது. இந்த மாற்றத்தால் முகமது அலி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை விவரிக்க வார்த்தையே கிடையாது. முகமது அலி வெள்ளை நிறவெறியர் மற்றும் விளையாட்டு வீரர்கள் மத்தியில் மட்டும் தாக்குதலை சந்திக்கவில்லை.சிவில் உரிமை அமைப்புகளும் இவருக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்தனர். முகமது அலி இதற்கெல்லாம் அமைதியாக பதில் கொடுத்தான்.இந்த மாற்றம் அரசியல் அல்ல. முழுமையான மதமார்க்கத்தை மட்டுமே மாற்றிக் கொண்டேன் என்று கூறினார். எனினும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பல பிரபலமான பத்திரிக்கைகள் பெயர் மாற்றத்தை குறிப்பிடாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து கேசியஸ் கிளே என்றுதான் எழுதினார்கள். இது முகமது அலிக்கு கோபத்தை உருவாக்கியது.
           1964ம் ஆண்டு முழுவதும் அமெரிக்காவின் கருப்பின மக்கள் சம உரிமைக்காக போராடினார்கள். இதனால் பல ஆயிரம் சிவில் உரிமை போராளிகள் கைதாகினர். அமெரிக்காவின் தெற்கு முதல் வடக்கு வரை இந்த போராட்டம் நடந்தது. வெள்ளை நிறவெறி அமைப்பு குகிளக்ஸ் (முரு முடுருஓ முடுஹசூ) 30 கட்டிடங்களை குண்டுவைத்து தகர்த்தனர். 36 தேவாலயங்களை தீக்கிரையாக்கினர். கருப்பின இளைஞர்களும் வடக்கு பகுதி சேரிகளில் கொதித்தெழுந்தனர். முதன்முதலாக நகர்ப்புற எழுச்சி அமெரிக்காவில் நிகழ்ந்தது.

         இந்த பின்னனியில்தான் முகமது அலி என்ற பெயர் மாற்றத்திற்கு பிறகு நடக்கும் ஒவ்வொரு குத்துச்சண்டை போட்டியும், கருப்பின மக்களின் புரட்சி மற்றும் அதை எதிர்ப்பவர்கள்  என்ற தளத்திலேயே நடக்க ஆரம்பித்தது. பிளைவுட் பேட்டர்சன் (குடுலுடீனு ஞஹகூகூநுசுளுடீசூ) என்பவர் கருப்பின குத்துச்சண்டை முன்னால் உலக சாம்பியன். இவர் வெள்ளை நிறவெறி விசுவாசத்துடன் முகமது அலியை போட்டிக்கு அழைத்தார். இது"ஒரு கருப்பு முஸ்லீமிடமிருந்து பட்டத்தை வெல்லும் புனிதப்போர். நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் கிளேயுடன் மோதுவது தேசபக்த கடமை. நான் அமெரிக்க கிரீடத்தை மீட்டுக்கொண்டு வருவேன்" என சபதம் எடுத்து, அமெரிக்க கொடியை தனது உடலில் இறுக்கமாக கட்டிக் கொண்டு போட்டிக் களத்திற்கு வந்தார். 1965ம் ஆண்டு நவம்பர் 22 அன்று போட்டி நடைபெற்றது. முகமது அலி தனது ஒன்பதாவது சுற்றிலேயே பிளைவுட் பாட்டர்சனை அடித்து நொறுக்கினார். பேட்டர்சனை கீழே தள்ளி 
வா அமெரிக்காவே! வா!
வா வெள்ளை அமெரிக்காவே! வா!

என்று கர்ஜித்தான். பாட்டர்சன் முகமது அலி என்று அழைக்காமல் கிளே என்றே அழைத்து வந்தார். 1967ல் எர்னி டெரல் (நுசுசூஐநு கூநுசுசுநுடுடு) என்பவருடன் இதே பின்னனியில் போட்டி நடைபெற்றது. அவரும் முகமது அலி என அழைக்கமாட்டேன் கிளே என்று தான் அழைப்பேன் என்றார். அவரையும் போட்டி மேடையிலிருந்து வீழ்த்தி வளையத்துக்கு வெளியே தள்ளி
என் பெயர் என்ன?
என் பெயர் "கிளே" யா?
முட்டாள், என் பெயர் என்ன?

    என்று தனது மாற்றத்தை அங்கீகரிக்காததை எதிர்த்து வினையாற்றினார். முகமது அலி குத்துச்சண்டை வளையத்துக்குள் பட்டம் வெல்வதை மட்டுமல்ல கருப்பின மக்களின் சம உரிமைக்கான வெற்றியாகவும் மாற்றினர். நிறவெறி நெருப்பில் நீந்தி கருப்பின மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு வழிவகுத்தான். முகமது அலியின் வெற்றி, கருப்பின மக்கள் பயமின்றி சமஉரிமை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியது. முகமது அலியின் போட்டியை கண்ணுற்ற பெரும்பாலான கருப்பின அமெரிக்கர்கள் பயத்தை எளிமையாக வெற்றி கொண்டனர். முகமது அலி அவர் வழியில் மக்களை தைரியப்படுத்தினார் என்று செய்தி தொகுப்பாளர் பிரையன்ட் கம்பள் (க்ஷசுலுஹசூகூ ழுருஆக்ஷடுநு) நினைவு கூர்ந்தார்.
        1966-ம் ஆண்டு அமெரிக்க இராணுவம் முகமது அலியை அழைத்து இராணுவத்தில் சேர உத்தரவிட்டது. அமெரிக்காவில் இராணுவ சேவை சட்டப்பூர்வமானது. எனவே, படையில் சேர்ந்து வியட்நாம் சென்று சண்டையிட அழைத்தது. அப்போது அதை மறுத்த அவரது வார்த்தை

"எனக்கு வியட்நாமியர்களுடன் எந்த விரோதமும் இல்லை
என்னை நீக்ரோ என்று எந்த வியட்நாமியரும் அழைக்கவில்லை"

    என்று பத்திரிக்கையாளர் சூழ, இராணுவத்தினரிடம் தெரிவித்தான். இது இராணுவத்தினருக்கு அதிர்ச்சியூட்டியது. அப்போது அமெரிக்காவில் யுத்த எதிர்ப்பு இயக்கம் நடைபெற்று கொண்டிருந்தது. வியட்நாமிலிருந்து அமெரிக்காவை வெளியேறு இயக்கம் வேகம் பிடித்திருந்த காலம். இந்த இயக்கம் இப்போது முகமது அலியின் இந்த வார்த்தைக்கு பின்னால் அணி வகுத்தது. யுத்த எதிர்ப்பு சமாதான செயற்பாட்டாளர் டானியல் பெரிகன் (னுஹசூஐநுடு க்ஷநுசுசுஐழுஹசூ) அலியின் இந்த முடிவு வெள்ளையர் மத்தியில் உருவான போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது என்று கூறினார். முகமது அலி மன்னிப்பு கேட்க, கையெழுத்துபோட, பணிந்துவிட வேண்டும் என பலர் கூறினர். ஆளும் நிறுவனங்கள் முகமது அலியை படுமோசமான தேச விரோதியாக சித்தரித்தன. முகமது அலி மண்டியிட மறுத்துவிட்டார். ஒரு குத்துச்சண்டை வீரனின் ஒற்றைவரி கருப்பின மக்களின் எழுச்சியையும், யுத்த எதிர்ப்பு இயக்கத்தையும் வீறு கொள்ள செய்தது. குத்துச்சண்டை வளையத்துக்குள் மட்டுமல்ல அரசியல் களத்திலும் உறுதியான நிலை எடுத்தான். ஒரு கட்டத்தில் அவர் மன்னிப்பு கேட்டு படையில் சேர்வார் என வதந்தி கிளம்பியது. உடனே பத்திரிக்கையாளரை சந்தித்தார்.
"நான் சொல்வதை கேளுங்கள், வியட்நாம் யுத்தம் எவ்வளவு நாள் நடக்கும் என்பது பிரச்சனை அல்ல. நான் வியட்நாமியர்களுடன் சண்டையிட 0மாட்டேன்" 

என்ற பாடலை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டே இருப்பேன் என்று உறுதிபட கூறினார்.
        அக்காலத்தில் கருப்பின மக்கள் மார்டின் லூதர் கிங் வழி நடத்திய சமஉரிமைக்கான பெரும் போராட்டத்தில் இருந்தனர். சமஉரிமை கோரி நடத்திய மார்டின் லூதர் கிங் போரையும் எதிர்க்க துவங்கினார். "முகமது அலி சொல்வது போல நாம் எல்லாம் கருப்பு, பழுப்பு நிறத்தவர்கள். ஏழைகள். ஒடுக்குமுறை அமைப்பால் வஞ்சிக்கப்பட்டவர்கள்" என்று அறை கூவல் விடுத்தார்.
    அலியின் சொந்த ஊரான லூயிஸ் வில்லியில் நடைபெற்ற கருப்பின மக்களின் போராட்டத்தின்போது மார்ட்டின் லூதர் கிங்-உடன் அலி கலந்து கொண்டார். அப்போது "உங்களது சுதந்திரம், நீதி, சமத்துவம் கேட்டு நடக்கும் போராட்டத்தில் உங்களோடு நானும் இருக்கிறேன். எனது சொந்த மக்கள், என்னோடு வளர்ந்தவர்கள், என்னோடு படித்தவர்கள், எனது உறவினர்கள் சுதந்திரம், நீதி, குடியிருப்பு சமஉரிமை கேட்பதற்காக, தாக்கப்படுவதை, தெருக்களில் விரட்டப்படுவதை வேடிக்கைப் பார்த்து நான் சும்மா இருக்க முடியாது" என்றான்.
     அடுத்த நாள் அங்கு பத்திரிக்கையாளர்கள் குவிந்து வியட்நாம் யுத்தம் பற்றி கேள்வி கேட்டனர். வெகுண்டெழுந்தார் முகமதுஅலி. "எனது சொந்த ஊரில் கருப்பின மக்களை நீக்ரோ என அழைத்து, சாதாரண மனித உரிமை கூட மறுக்கப்பட்டு, நாய் போல் நடத்தப்படும் போது, நான் சீருடை அணிந்து, 10,000 மைல்கள் கடந்து, பழுப்புநிற வியட்நாமியரை, குண்டுவீசி, துப்பாக்கியால் சுட்டு, ஏன் கொல்ல வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். வெள்ளைநிற எசமானர்கள், வெள்ளைநிற அல்லாத மற்றொரு எளிய நாட்டை அடிமையாக்கி இருள்படர்ந்த ஆதிக்கம் உருவாக நான் 10,000 மைல் கடந்து போக மாட்டேன் என்றார். இந்த தீமைகள் விரைவில் முடிவுக்கு வரவேண்டும். இப்படி ஒரு நிலை எடுப்பதால் எனக்கு கோடி டாலர் இழப்பு ஏற்படும் என்றார்கள். நான் மீண்டும் சொல்வேன். இங்குதான் என் மக்களின் உண்மையான எதிரிகள் இருக்கின்றனர். சுதந்திரம், நீதி, சமத்துவம் கேட்டு போராடும் எம்மக்களை  அடிமைப்படுத்தும் ஒரு கருவியாக்கி என் மக்களை, என் மதத்தை, என்னை இழிவுபடுத்திக் கொள்ள மாட்டேன்" என்று எழுந்த கேள்விகளை நாக்அவுட் ஆக்கினார்.
      1967-ம் ஆண்டு ஜீன் 19-ம் தேதி கீழை நீதிமன்றம் முகமது அலி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. படையில் சேர மறுத்ததற்காக 5 ஆண்டு சிறைத்தண்டனை, கடவுச்சீட்டு முடக்கம். அவரது சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. 3 1/2 ஆண்டுகள் அவர் குத்துச்சண்டையில் கலந்து கொள்ள முடியவில்லை. முகமது அலி மேல்முறையீடு செய்தார். 1968-ம் ஆண்டுகள் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பல்கலைகழகங்களில் மாணவர்களிடையே உரையாற்றி இருக்கிறார். அந்த உரைகளில் இதோ இரத்தின வரிகள்

   "நான் வியட்நாமுக்கு செல்லாததால் நிறைய இழந்துவிட்டேன் என்று கூறுபவர்களுக்கு ஒன்று சொல்வேன், எனக்கு மன நிம்மதி உள்ளது. எனது மனசாட்சிக்கு விலங்கு பூட்டப்படவில்லை. நான் தெளிவாக உள்ளேன். மகிழ்ச்சியுடன் தூங்கி எழுகிறேன். எனது  முடிவில் நான் பெருமை கொள்கிறேன். என்னை சிறைக்கு அனுப்பினாலும் மகிழ்ச்சியுடன் சிறை செல்வேன்"

என தனது முடிவின் நியாயத்தை தீர்க்கமாக எடுத்துரைத்தார். இக்காலத்தில் முகமது அலியின் பேச்சுக்கள் அமெரிக்க கொள்கைக்கு எதிராகவும், யுத்தத்திற்கு எதிராகவும், இன, நிறவெறிக்கு எதிராகவும் அமைந்திருந்தது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் ஏராளமான இளைஞர்களை அலியின் பேச்சு ஆகர்ஷித்தது.
     1970-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உச்சநீதிமன்றம் கருப்பின மக்கள் நலன், உயர்வுக்காக என காரணம் சொல்லி முகமது அலியை விடுதலை செய்தது. 31/2 ஆண்டுகளுக்கு பிறகு முகமது அலி மீண்டும் குத்துச்சண்டை வளையத்திற்குள் வந்தார். 1971-ம் ஆண்டு மேடிசானில் "நூற்றாண்டின் சண்டை" என்ற பெயரில் நடைபெற்ற போட்டியில் ஜோ-பிரேசியரிடம் தோல்வி அடைந்தார் முகமது அலி. போட்டி கடுமையாக இருந்தது. 15 வது சுற்றில் பிரேசியர் வென்றார். இருவரையும் சிகிச்சைக்கு அனுப்பும் அளவிற்கு காயம் அடைந்தனர். 1973-ம் ஆண்டு கென்னூர்ட்டனிடம் தோற்றார். மீண்டும் அவருடனயே மோதி பட்டத்தை வென்றார். பிறகு மற்றொரு போட்டியில் தன்னை தோற்கடித்த ஜோ-பிரேசியரை தோற்கடித்து வெற்றி கண்டார் முகமது அலி.
      1974-ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் ஜைர் நாட்டில் மீண்டும் ஒரு பெரும் போட்டி. "காடுகளின் கர்ஜனை" என வர்ணிக்கப்பட்ட இந்த போட்டியை ஜைர் நாட்டின் அதிபர் ஏற்பாடு செய்திருந்தார். ஜார்ஜ் போர்மன் என்ற மற்றொரு கருப்பின அமெரிக்க குத்துச்சண்டை வீரன் வலிமையானவன். அவனை அலியால் வீழ்த்த முடியாது என நினைத்தனர். கருப்பின மக்கள் பெருங்கூட்ட ஆரவாரங்களுக்கிடையே முகமது அலி ஜார்ஜ் போர்மனை வீழ்த்தி மீண்டும் பட்டம் வென்றார். அதுவரை இல்லாத புதிய யுக்தியை கடைபிடித்து இந்த வெற்றியை ஈட்டினான். வழக்கம் போல் போட்டிக்கு முன்பு முகமது அலி கர்ஜித்தார்.
அந்த கர்ஜனையின் சிலவரிகளை நினைவு கூர்வது அவரது நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அமையும். இதோ...

ஜார்ஜ் நினைக்கிறான்
வெல்வேன் என்று!
எனக்குத் தெரியும்
அவனால் முடியாது!
நான் 
முதலையையும் சிலுவையில் அறைவேன்!
திமிங்கலத்துடன் மோதி வீழ்த்துவேன்!
கடந்த வாரம் 
நான்,
ஒரு பாறையை படுகொலை செய்தேன்
கல்லை காயப்படுத்தினேன்
செங்கல்லை மருத்துவமனைக்கு அனுப்பினேன்
"நான்" என்றால்
நிரந்தரமாக காயப்படுத்துபவன்.

தனக்கான உறுதியை நிலை நிறுத்த மட்டுமல்ல. எதிரியினை பலவீனப்படுத்தவும் செய்கிறார் அலி.
        
     1981-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி, தனது 39-வது வயதில் குத்துச்சண்டை போட்டியிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் அலி. தனது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் 21 ஆண்டு வாழ்க்கையில் 61 போட்டிகளில் 56-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் தழுவி உள்ளார். இதில் 37 போட்டியில் நாக்அவுட் முறையில் வெற்றி பெற்றுள்ளார். மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். அரசு, நிறவெறி என பல்முனை தாக்குதலுக்கு மத்தியில் அலி தனது வெற்றிப் பயணத்தை நடத்தினார். 
           
      1984-ல் அவரை பார்கின்சன் நோய் தாக்கி முடமாக்கியது. அமெரிக்க ஆளும் வர்க்கம் அந்த மாபெரும் கலகக்காரனை தன்னுடன் இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. 1996-ஆம் ஆண்டு அட்லான்டா ஒலிம்பிக் சுடரை தனது நடுங்கும் கரங்களால் முகமது அலி ஏற்றி வைத்தார். 1990-ல் அப்போதைய ஈராக் அதிபர் சதாம் உசேனை சந்தித்து அமெரிக்க பிணைய கைதிகளை மீட்டு வந்தார். ஆப்கன் போர் பற்றிய ஹாலிவுட் விளம்பர படத்தில் நடிக்க வைத்தனர். 20-ம் நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல. 1964-ல் தனது வெற்றியாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தனது அரசியல் நிலைபாட்டாலும் உலகின் அதிக பத்திரிக்கைகளின் அட்டைப்படத்தை அலங்கரித்தவர் முகமது அலி.
              
       குத்துச்சண்டை வீரர்களுக்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்தது. முகமது அலியின் சமகாலத்தில் வாழ்ந்த கியூபாவின் சிறந்த குத்துச்சண்டை வீரன் எபிலோ ஸ்டீவன்சன் (கூநுடீகுடுஐடுடீ ளுகூநுஏநுசூளுடீசூ).  இவர் மூன்று முறை 1972 மூனிச், 1976 மான்ட்ரில், 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர். அலிக்கு நிகரான பட்டம் பெற்றாலும், பொது தளத்தில் புகழ்பெற்றவர் அல்ல. காரணம் அவர் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ள மறுத்துவிட்டார். விளையாட்டை தனிநபர் லாபத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற அவரது சோசலிச கோட்பாட்டில் உறுதியாக இருந்தார். தொழில்முறை போட்டியில் கலந்து கொண்டால் கியூபா குடியுரிமையுடன் இருக்க முடியாது.  கியூபாவின் ஸ்டீவன்சன் மட்டுமல்ல. மற்றொரு முக்கிய வீரர் பெலிக்ஸ் சாவன் (குநுடுஐஓ ளுஹஏடீசூ) என்பவரும் மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். இவரையும் பல கோடி டாலர் கொடுத்து கியூபாவை விட்டு வெளியேறி, மைக் டைசனுடன் போட்டிக்கு அழைத்தனர். பெலிக்ஸ் சாவன் உறுதியாக மறுத்துவிட்டார். கியூபா குத்துச்சண்டை போட்டியில் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இப்போட்டி நடைபெறவில்லை என்ற ஏக்கம் பலரிடம் இருந்தது.
               
     முகமது அலி குத்துச்சண்டை வீரனாக மட்டும் வெகு மக்கள் மத்தியில் அறியப்படவில்லை. அவர் அநியாயங்களை தட்டிக் கேட்கும் கலகக்காரனாக, போராளியாகவும் வாழ்ந்துள்ளார். அவர் காலத்து கருப்பின மக்களின் வலியை உணர்ந்தவராக இருந்தார். சமுதாயத்தில் பிரபலமானவர்கள் அரசின் கொள்கையில் மாறுபடுகிறபோது அதை துணிச்சலாக தடுக்க முன்வருவது இல்லை. பல நேரங்களில் பொதுமக்கள் விரும்புவதாக தங்களது கருத்துக்களை பதிவு செய்வார்கள். தவறானதை தடுக்க வேண்டியது தங்களது கடமை என்பதை மறந்து விடுவார்கள். ஆனால் முகமது அலி இதிலிருந்து மாறுபட்டு தனது கடமை என்ற முறையில் பல இழப்புகளை சந்தித்து சமூக தளத்தில் எதிர்நீச்சலடித்தார். அரசின் தவறான கொள்கைகளை, கண்முன் நடக்கும் கொடுமைகளை எதிர்க்கத் துணிந்தவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக, அச்சம் போக்கும் அவதாரமாக நிஜ வாழ்வில் இருந்தார். 
               
          வியட்நாம் போரை எதிர்ப்பது என்பது, அங்கு இழைக்கப்படும் ஏகாதிபத்திய அநீதிக்கும், அமெரிக்காவில் நடைபெறும் இனவெறி அநீதிக்கும் உள்ள தொடர்பை முன்னிறுத்தி தன் உணர்விலிருந்து எதிர்க்கவில்லை. ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே எதிர்க்கிறேன் என்பதை நிலைநாட்டினார். தற்போது நடைபெற உள்ள அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் டிரம்பின் இனவாதம், தரக்குறைவான பேச்சுகளை இறப்பதற்கு முன்பு கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.
               
      இன்றைய இந்திய சமூகம் பொருளாதார சுரண்டலால் நசுக்கப்படுகிறது. மதம், சாதி என்ற பெயரால் சமூக கொடுமைகள் உச்சத்தை அடைந்து வருகிறது. ஒற்றுமை குலைக்கப்படுகிறது. நம்பிக்கை அனைத்து தளத்திலும் சிதைக்கப்படுகிறது. அரசின் அவலங்களை தடுப்பது மட்டுமல்ல, கண்ணெதிரே நடைபெறும் கொடுமைகளை தடுக்க முடியாத சமூகம் கட்டியமைக்கப்படுகிறது. இதற்கான போலி காரணங்களை கண்டுபிடித்து நியாயப்படுத்தம் கூட்டங்கள் பெருகி வருகிறது. இழப்பதற்கு எதுவும் இல்லை என்றாலும் எதிர்ப்புக்குரல் எழ மறுக்கிறது. இந்த மௌனம் உடைபட முகமது அலியின் செயல்கள் நமக்கு உதவட்டும்.

- ஏ.பாக்கியம்
மார்க்சிஸ்ட் ஜுலை 2016

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...