Pages

புதன், ஆகஸ்ட் 10, 2016

குஜராத்தில் பாஜக-வின் சரிவும், சாதிய வெறியும்


 ஏ.பாக்கியம்
தீக்கதிர்-03.08.2016

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக வை வெல்ல முடியாது என்ற கருத்து பரவலாக இருந்தது... இருக்கிறது. குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அங்கு நடைபெறும் தொடர் போராட்டங்களும் நமக்கு மாறுபட்ட உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கிராமப் புறங்களில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2000-ம் ஆண்டில் கேசுபாய் படேல் முதல்வராக இருந்த போது உள்ளாட்சி தேர்தலில் உள்கட்சி மோதலால் ஒரு பின்னடைவை சந்தித்தது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் சரிவு அதிலிருந்து மாறுபட்ட அம்சங்களை கொண்டதாகும். 
    1998-ம் ஆண்டு பதவியேற்ற கேசுபாய் படேல் 2001-ம் ஆண்டு முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு நரேந்திர மோடி முதல்வராக பொறுப்பேற்றார். இந்தியாவில் முதன்முதலாக ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் முதல்வராக பொறுப்பேற்றது குஜராத்தில் தான். எனவே அந்த மதவெறி குணமும் குஜராத்தில் வெளிப்பட்டது. 2002-ம் ஆண்டு கோத்ரா கலவரத்தின் மூலமாக மக்களை மத ரீதியாக பிளவை ஏற்படுத்தினார் நரேந்திர மோடி. அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. ஆனால் தற்போது மதவெறி என்ற வாக்கு வங்கியும் சிதைய ஆரம்பித்துள்ளது. 
   2015 டிசம்பர் ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையை அதிர்க்குள்ளாக்கியது. இந்திய ஊடகங்கள் இதைப்பற்றி பெரிதாக செய்திகள் வெளியிடவில்லை. அவர்களின் வர்க்க பாசம் இதற்கு தடையாக இருந்தது. 2010-ல் பாஜக 30 மாவட்ட பஞ்சாயத்துக்களையும் 50.26 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. 2015-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 6 மாவட்ட பஞ்சாயத்துக்களையும் 43.97 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற முடிந்தது. 24 பஞ்சாயத்துகளை இக்காலத்தில் இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2010-ல் ஒரு மாவட்ட பஞ்சாயத்தையும், 44 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. 2015-ல் 24 மாவட்ட பஞ்சாயத்துகளையும், 47.85 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. 
     தாலுகா அளவிலான உள்ளாட்சி அமைப்புகளிலும் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2010-ல் 150 இடங்களிலும் 48.51 சதவீத வாக்குகளையும் பாஜக பெற்றிருந்தது. தற்போது 67 இடங்களையும் 42.32 சதவீத வாக்குகளையும் பெற்று சுருங்கி உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமே பாஜக ஓரளவு வாக்குகளை தக்க வைத்துள்ளது என்பதை பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் நகராட்சிகளிலும் அக்கட்சியின் வாக்கு தளம் குறைந்துள்ளது. 2010-ல் 47.7 சதமாக இருந்த வாக்கு சதவீதம் 2015-ல் 44.67 சதமாக பாஜகவிற்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் நகராட்சிகளில் 29.59 சதவீதத்திலிருந்து 39.59 சதமாக தன்னுடைய செல்வாக்கை பெருக்கி உள்ளது. 
    மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளையும் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு விகிதம் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. மாநகராட்சி இடங்களும் 443-லிருந்து 390-ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் 100 இடத்திலிருந்து 175 இடமாக உயர்த்தி கொண்டது. இந்த மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி 33 சதவிகிதத்திலிருந்து 41.12 சதவீதமாக உயர்த்தி கொண்டுள்ளது. சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை அதிகப்படவில்லை என்பது மட்டுமல்ல குறைந்துள்ளது. மொத்தமுள்ள 184 இடங்களில் 2002-ல் பாஜக 127 இடங்களை கைப்பற்றியது. தற்போது 115 இடமாக குறைந்துள்ளது.  

பொருளாதார கொள்கையும், தோல்வியும்
    பாஜக-வின் இந்த தோல்விக்கு படேல் இனத்தவரின் கிளர்ச்சி தான் காரணம் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. சில பத்திரிகைகள் பாஜக-வின் உள்கட்சி கோஷ்டி மோதல் காரணமென்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அடிப்படையான காரணம் மோடியின் வளர்ச்சி திட்டங்கள் பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட தோல்விதான் அடிப்படையான காரணம். 
    குறிப்பாக விவசாய துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. 2006-ம் ஆண்டு மாநிலத்தின் உற்பத்தியில் விவசாயம் மற்றும் அதன் துணை தொழில்களின் பங்கு 17 சதவிதமாக இருந்தது. 2013-ம் ஆண்டில் இத்துறையின் பங்கு 11 சதவீதமாக படுவீழ்ச்சிக்கு உள்ளானது. அந்த மாநிலத்தில் உள்ள 24.7 மில்லியன் தொழிலாளர்களில் 15.7 மில்லியன் தொழிலாளர்கள் விவசாயத்தை சார்ந்து வாழக் கூடியவர்கள். மொத்தமுள்ள 40.6 மில்லியன் வாக்காளர்களில் 25.8 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் கணிசமான பகுதி விவசாயம் சார்ந்த வாக்காளர்கள். ஆகவே பொருளாதார கொள்கையின் தோல்வி இந்த தேர்தலில் பிரதிபலித்துள்ளது. 
 
      குஜராத் மாநில அரசு பாசன வசதிக்காக கூடுதலாக நிதி ஒதுக்கியது. அந்த நிதியை வசதி படைத்த ஒருசிலர் பயன்படுத்தி கொண்டார்கள். அனைத்து பகுதியும் பாசன வசதியை பெற முடியவில்லை. பாசன வசதி செய்யப்பட்ட பல இடங்கள் தரம் குறைவானதால்  பழுதடைந்து நீடித்து நிற்கவில்லை. எனவே பெருமளவு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மழை பொய்த்தால் விவசாய உற்பத்தி பாதித்தது. விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச ஆதார விலையை குஜராத் அரசு உரிய முறையில் வழங்காததால் மக்கள் துன்பத்திற்கு உள்ளானார்கள். இந்தியாவில் தொடர்ந்து ஏற்றுமதி  என்பது வீழ்ச்சி அடைந்து கொண்டு வருகிறது. இந்த ஏற்றுமதி வீழ்ச்சி குஜராத் விவசாயிகளை கடுமையாக பாதித்தது. இதற்கு முன்னால் மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது பழி போட்டு குஜராத் மாநில அரசு தப்பித்து வந்தது. ஆனால் தற்போது மத்தியிலும் பாஜக அரசு மாநிலத்திலும் பாஜக அரசு இருப்பதால் விவசாயிகளிடம் பொய் சொல்லி தப்பிக்க முடியவில்லை. எனவே கிராமப்புற வாக்காளர்கள் பாஜக அரசுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர்.
      ல்வி வளர்ச்சியிலும் பின்தங்கிய நிலைமையிலேயே குஜராத் இருக்கிறது. பள்ளியிலிருந்து படிப்பை தொடர முடியாமல் விடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட குஜராத்தில் அதிகமாக உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் விடுபடுதல் தேசிய சராசரி 53 சதவீதம். குஜராத்தில் இது 62 சதவீதமாக உள்ளது. இதே போன்று ஆரம்ப கல்வி மற்றும் பட்டதாரிகள் ஆகியவற்றிலும் குஜராத் பின்தங்கிய நிலைமையில் உள்ளது. 
       மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி 2005-06 ல் 15 சதவீதமாக இருந்தது. 2012-13 ல் 8 சதவீதமாக குறைந்துள்ளது. 2007-2012 ஆகிய ஆண்டுகளில் குஜராத் மாநிலம் இந்தியாவின் 5 முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. 2012-14 ஆம் ஆண்டுகளில் இம்மாநிலம் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 
    ட்டுமொத்தத்தில் மோடியின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே உதவி செய்துள்ளது. வரிச்சலுகைகளை வாரி வழங்குவதும், விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரித்து அடானி போன்றவர்களுக்கு அள்ளி கொடுப்பதும் குஜராத்தின் உழைப்பாளி மக்களை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. எனவே அம்மக்களின் கோபம் உள்ளாட்சி தேர்தலில் வெளிப்பட்டுள்ளது. 
படேல் சமூக போராட்டமும், பாதிப்பும்
 
    குஜராத் மாநிலத்தின் படேல் சமுதாயத்தினர் பாஜக-வின் தளமாக இருந்துள்ளனர். பாஜக வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகித்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதம் படேல் சமுதாயத்தினர். 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இச்சமுகத்தினர் 70 சதவீதம் வரை பாஜகவிற்கு வாக்களித்து உள்ளனர். ஆனால் அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் இந்நிலைமை மாறும். இந்த படேல் சமுதாயத்தினர் 2015-ல் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு கணிசமானவர்கள் வாக்களிக்கவில்லை. விவசாய பகுதி இருக்கக்கூடிய படேல் சமுதாயத்தினர் விவசாயம் பொய்த்தது மட்டுமல்ல நிலங்களையும் இழந்துள்ளனர். நகர்ப்புறத்தில் மோடி அரசின் ஏற்றுமதி கொள்கை தோல்வி அடைந்ததால் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் பாஜக அரசுக்கு எதிராக திரும்பி உள்ளதும் தேர்தலில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற தேர்தல்களிலும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 
   2017-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த பொருளாதார பின்னடைவுகள் படேல் சமுதாயத்தினருடைய போராட்டம் ஆகியவை பாஜக தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படேல் சமுதாயத்தினர் 10 சதவிகித வாக்குகள் மாறினாலும் பாஜக 73 இடங்களை இழந்துவிடும். பாஜகவிலிருந்து பிரிந்த வந்த கேசுபாய் படேல் கடந்த தேர்தலில் பரிவர்தன் கட்சி ஆரம்பித்து அதன் மூலம் தேர்தலில் போட்டியிட்டார். இவரது கட்சிக்கு 3.6 சதவித வாக்குகள் கிடைத்தது. குறிப்பாக சௌராஷ்டிரா மற்றும் குட்ஜ் பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றதால் பாஜக 23 இடங்களை இழந்தது. 
    2002 கோத்ரா கலவரத்திற்கு பிறகு கணிசமான இஸ்லாமியர்களை பாஜக அச்சுறுத்தல் மூலமாக தன்பக்கம் வைத்திருந்தது. பாதுகாப்பு மற்றும் அரசு நிர்வாகத்தின் தாக்குதல் ஆகியவற்றிற்கு பயந்து 2012-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 10 சதவித இஸ்லாமியர்களில் 31 சதவீதம் பாஜகவிற்கு வாக்களித்தனர். இருந்தும் இஸ்லாமியர்கள் மீது தொடர் தாக்குதல்களும் சகிப்பு தன்மையின்மையும் கடைபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வருகிற தேர்தலிலும் இஸ்லாமியர் வாக்கு 3 சதவிதம் மாறினாலும் பாஜக 36 இடங்களை இழக்கும். ஆகவே பாஜக 2017-ம் ஆண்டு வெற்றி பெறுவது மிகப்பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. 

 கோஷ்டி மோதல்

தற்போது குஜராத் முதல்வராக உள்ள ஆனந்திபென் திருமதி நக்குறுதி பாண்டியாவை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் தலைவராக நியமித்தார். இந்த நியமனம் மோடி மற்றும் அமித்ஷா உட்பட பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர் ஹரேன் பாண்டேயாவின் மனைவி ஆவார். 2012-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கேசுபாய் படேலின் பரிவர்தன் கட்சியின் சார்பில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டவர். இவரின் கணவர் ஹரேன் பாண்டேயா நரேந்திர மோடியை 2001-ம் ஆண்டு முதலமைச்சராக நியமித்த பொழுது கேசுபாய் படேலின் மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக இருந்தவர். மோடியின் வருகையை கடுமையாக எதிர்த்தவர். அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து மோடி போட்டியிடுவதற்கு வழிவிட வேண்டுமென்று மோடி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். முதல்வராக இருந்த மோடி வேறு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 2002-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஹரேன் பாண்டேயாவிற்கு மோடி வேட்பாளராக போட்டியிட டிக்கெட் தரவில்லை. தேர்தல் முடிந்து அடுத்த மூன்று மாதங்களில் ஹரேன் பாண்டேயா படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை மோடியால் நடத்தப்பட்டது என்று அவரது தந்தையும் மனைவியும் தொடர்ந்து குற்றம் சாட்டினர். 
    னவே மோடியின் எதிர்ப்பாளரை அரசு பதவியில் நியமித்தது மோடி அமித்ஷா விற்கு எதிராக ஆனந்திபென்னின் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, மோடிக்கு முன்னாள் பாஜக வின் தேசிய செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷி குஜராத்தில் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். மோடி பதவிக்கு வந்த பிறகு இவரை இருந்த இடம் தெரியாமல் ஓரங்கட்டி விட்டார். மோடி - ஜோஷி மோதல் கடந்த 20 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. 2009-ல் நிதின்கட்கரி பாஜகவின் தலைவராக இருந்தபோது சஞ்சய் ஜோஷிக்கு மாநிலத்தில் கட்சி பதவியை வாங்கினார். நரேந்திர மோடி இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சஞ்சய் ஜோஷியை பதவியிலிருந்து நீக்கும் வரை மோடி தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு செல்வதை புறக்கணித்தார். அவரை நீக்கிய பிறகு கூட்டத்திற்கு சென்றார். 
   அந்த சஞ்சய் ஜோஷி தற்போது தன்னை தலைவராக்க வேண்டுமென்று மாநிலம் முழுவதும் சுவரொட்டி பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இவரும் தற்போது முதல்வராக உள்ள ஆனந்திபென்னும் வி.எச்.பி.தொகாடியாவின் குடும்ப திருமண நிகழ்வில் சந்தித்து உரையாடுவது நடந்துள்ளது. இந்த சந்திப்பு மோடி-அமித்ஷா விற்கு எதிரானது என்பது தெள்ளத்தெளிவாகும். தொகாடியாகவும் மோடிக்கு எதிரானவர் என்பது அறிந்த விஷயமே. ஆகவே கோஷ்டி பூஷல் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. 
    ற்றொரு நிகழ்வு இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. பாஜகவின் மாநில புதிய தலைவராக ருபானி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆனந்திபென் மந்திரி சபையில் மந்திரியாக உள்ளார். இந்த நியமனம் மோடி-அமித்ஷாவால் நடத்தப்பட்டுள்ளது என்பதால் ஆனந்திபென் பிரிவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த ரூபானி மாநிலத்தில் பாஜக வை வழி நடத்துவதற்கு திறமையற்றவர் என்றும், தற்போதைய நெருக்கடியை சமாளிக்கக்கூடியவர் அல்ல என்றும் பலர் கருதுகிறார்கள். குஜராத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவித இட ஒதுக்கீட்டை அந்த அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் வெளியிடவில்லை. இதற்கு மாறாக அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் ருபானி அறிவித்தார். மாநில முதல்வர் ஆனந்திபென் ஒன்றும் செய்ய முடியாமல் அடக்கமாக அமர்ந்திருந்தார். அரசு துறை அப்பட்டமாக மீறப்படுவதும், இந்த கோஷ்டி மோதலின் குற்றமாகும். 
   குஜராத்தில் பாஜகவின் வகுப்பு வெறி அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மோடியின் பொருளாதார கொள்கைகள் தோல்வி அடைந்தது, படேல் சமுதாய போராட்டம் கோஷ்டி மோதலின் உச்சக்கட்டம் ஆகியவை பாஜகவை சுற்றி வளைத்துள்ளது. எனவே 2017 சட்டமன்ற தேர்தல் 2015 உள்ளாட்சி தேர்தல் போல் அமைந்து விடும் என்ற அச்சம் அலைக்கழிக்க ஆரம்பித்துள்ளது. பாஜகவின் இந்த தோல்விக்கு எதிர்க்கட்சியான காங்கிரசின் தீவிரமான செயல்பாடு காரணமில்லை. காங்கிரஸ் இன்றும் அம்மாநில அரசை எதிர்த்து சக்திமிக்க போராட்டங்களை நடத்தவில்லை. மாநிலத்தில் ஆகர்ஷிக்க கூடிய தலைவர்களும் இல்லை. எனினும் மோடி மற்றும் பாஜக அரசின் தோல்வியால் மக்கள் அதிருப்தி அடைந்து காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளனர்.

சரிகட்ட... சாதியம்

பாஜக தனது செல்வாக்கையும், பதவியையும் தக்க வைத்து கார்ப்ரேட் நலனை பாதுகாக்க எந்த கொடூர செயலையும் செய்யும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. தற்போது குஜராத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலை கையில் எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள தலித் மக்களை தாக்குவது மூலம் மற்ற பிரிவினரை ஒன்று சேர்க்கும் மிகமிக நாகரீகம் அற்ற செயலில் இறங்கியுள்ளது. இதன் வெளிப்பாடு தான் இறந்த மாட்டுத் தோலை உறித்த தலித் இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம். தொடர்ந்து தலித்துகளை படுகொலை செய்வதும், காயப்படுத்துவதும் பத்திரிக்கைகளில் வந்து கொண்டே இருக்கிறது. குஜராத் அரசு தலித்துகளை வேட்டையாடுவதற்கே 200-க்கும் மேற்பட்ட பசு பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் குண்டர்களையும் உருவாக்கியுள்ளது. தலித் மக்களை பாதுகாக்க எந்தவித சட்டங்களையும் அமுல்படுத்துவதில்லை. வன்கொடுமை தடுப்பு சட்டதத்தின் கீழ் தேசிய அளவில் 28 சதவீதம் தண்டிக்கப்பட்டாலும் குஜராத்தில் 5 சதவிதம் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது என்றால் இதன் கொடூரத்தை அனைவரும் உணர முடியும். மாநில அரசின் மேல்சாதி ஆதிக்க உணர்வால் கட்டமைக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் தலித் மக்களை வேட்டையாடுகிறது. 
   ற்போது இந்த தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அரசு மட்டுமல்ல மத்திய மோடி அரசும் அம்பலப்பட்டு நிற்கிறது. பாஜகவின் அடிப்படை குணாம்சமே கார்ப்ரேட் பொருளாதாரம், மேல்சாதி ஆதிக்கம் என்பதற்கான செயல்பாடுகள் தற்போது வேகமாக வெளிப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களும், உழைப்பாளி மக்களும் ஒன்று சேர்வது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஒற்றுமை உயர்வு வகுப்பு வெறி பிடித்த பாஜகவை 2017-ல் குஜராத்தில் மூழ்கடிக்கும். இந்தியாவிலிருந்தும் இந்த வகுப்பு வெறி சக்திகள் வீழ்த்தப்படும்.

- ஏ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...