Pages

திங்கள், ஆகஸ்ட் 22, 2016

எனக்கு வயது 377


இது வேடிக்கையும் அல்ல. வினோதமும் அல்ல. புத்தக வாசிப்பினால் ஆயுள்காலம் கூடிய அதிசயம். ஆம்! ராமச்சந்திர வைத்தியநாத் அவர்கள் சென்னப்பட்டிணம் என்ற புத்தகத்தை 21-ம் தேதி வெளியிட்டுள்ளார். ஒரு பொருளின் மதிப்பு அதனுள் புதைந்திருக்கும் உழைப்பினால் தீர்மானிக்கப்படுகிறது என்ற காரல் மார்க்சின் சொற்களுக்கு ஏற்ப இந்த புத்தகத்தில் தோழர் இராமச்சந்திர வைத்தியநாத்தின் பத்தாண்டு உழைப்புகள் அடங்கியுள்ளது. 693 பக்கங்களை கொண்ட புத்தகம். புத்தகத்தின் சிறப்பாக முதலில் குறிப்பிட விரும்புவது 93 துணை நூல் பட்டியல்களை இணைத்துள்ளார். 43 பக்கங்கள் சொல்லடைவு விளக்கமாக கொடுத்துள்ளார். 
     சென்னையில் வசிக்கக் கூடியவர்கள் இந்த புத்தகத்தை வாசித்தால் இது உருவான காலத்திலிருந்து வாழ்ந்து வருவதான ஒரு உணர்வுக்கு உள்ளாக்கப்படுவார்கள். அந்த அளவிற்கு விபரங்களை எளிய முறையிலும், துரித வாசிப்பிற்கு ஏற்ற வகையிலும் தங்குதடையின்றி படைப்பாக்கியுள்ளார். நம்மை சுற்றி நடந்த விஷயங்களாகவே அனைத்தும் எழுதப்பட்டுள்ளது. 
             ஒரு நகரம் அடிப்படைத் தன்மை என்ன? என்பதை விளக்கக் கூடிய வகையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் கோட்டைக்குள் நடைபெற்ற ஆங்கில மற்றும் பிரெஞ்சு காரர்களுக்கிடையிலான மோதல் புதிய செய்தியாகும். அதே போன்று அன்றைய சென்னையை தூய்மைப்படுத்தி, ஒழுங்குப்படுத்தியதில் பிரெஞ்சுக்காரர்களின் முயற்சி அடிப்படையானது என்பதை அழுத்தமாக பதியவைத்துள்ளார். 

           வெளுப்பர் நகரம், கருப்பர் நகரம் என்ற வர்க்க வேறுபாட்டை நகர உருவாக்கத்திலேயே இருந்தது. கருப்பர் நகரம் வழக்கம்போல் ஜார்ஜ் டவுன் என்று மன்னர் பெயரால் மாற்றப்பட்ட விபரத்தையும் காண முடிகிறது. ஒட்டுமொத்தமாக வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட சென்னை மாநகரம் என்ற தவறான கருத்தமைவை இப்புத்தகத்தின் மூலம் தகர்த்துள்ளார். பெத்தநாயக்கன்பேட்டை, முத்தையால்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை என உருவாக்கப்பட்ட 3 இடங்களை தவிர மற்ற அனைத்தும் மயிலாப்பூர் ஆரம்பித்து திருவொற்றியூர் வரை பாரம்பரிய வளம்பெற்ற இயற்கை வளம்பெற்ற கிராமங்களையும் பாடல்பெற்ற ஸ்தலங்களையும் இணைத்து தான் இந்த நகரம் உருவாகியது என்பதற்கான சான்றுகளை அடிக்கியுள்ளார். 
      ழக்கமாக சென்னையை பற்றி விழா கொண்டாடுவோர்களும், பத்திரிக்கையில் எழுதுவோர்களும் கடந்த கால மேன்மைகளையும், மேலோர்களை பற்றியும் பேசுவார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் நகர மாந்தர்களின் பல்வேறு அசைவுகளை படம்பிடித்து காட்டியுள்ளார். 22.08.1639-ம் ஆண்டாகிய சென்னை பிறந்தநாள் என்று அறிவிக்கப்படுவதற்கு முந்தைய கால வரலாறுகளை சுருக்கமாக தொகுத்து இருப்பது குறிப்பிடப்பட வேண்டியது. அதற்கடுத்து சென்னப்பட்டிணத்தில் முதலில் குடியேறியவர்கள் பற்றியும் அவர்களை பற்றிய விபரமும் குறிப்பிடப்பட வேண்டியது. தொடர்ந்து உருவான அரசு கட்டமைப்புகள், ஆலைகள், தொழிலாளர் வாழ்விடங்கள், வியாபார ஸ்தலங்கள் என நகரின் விரிவாக்கம் விபரமாக எடுத்துரைக்கப்படுகிறது. 
 சுதந்திர போராட்டத்தை பற்றிய பல்வேறு போக்குகளும் சென்னையில் நிலவியதை அதற்குரிய தன்மையோடு விளக்கியுள்ளார். தேசிய காங்கிரஸ் இயக்கம், தொழிற்சங்க இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கம், விடுதலை போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள் என அனைத்து அம்சங்களும் விளக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்டுகள் மீது தொடுக்கப்பட்ட சதி வழக்குகளும், தாக்குதல்களும் பதியப்பட்டுள்ளது. 

    காந்தியின் வருகை இந்த அளவுக்கு துல்லியமான முறையில் இதற்கு முன் பதிவு செய்யப்பட்டதை நான் அறியவில்லை. இத்துடன் கூடவே தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது வியாபாரிகள் நிதி வசூலித்து வேலை நிறுத்த காலத்தில் தொழிலாளர்களுக்கு உதவி செய்த பதிவு மிகமிக முக்கியமானது. ஒர்க்கர்ஸ் பாங்க் ஆஃப் இந்தியா என்ற பெயரில் ஒரு வங்கியும் செயல்பட்டிருப்பது அறிந்து கொள்ள வேண்டியது. 

          அந்த காலத்தில் புத்தக நிலையங்கள் புத்தகத்தின் விலைகள் உட்பட சிலவற்றை துல்லியமாக குறிப்பிட்டுள்ளார். நாட்டு மருத்துவம் உட்பட பல மருத்துவ விளம்பர சுவரொட்டிகளை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார். இதற்கு மேலாக சென்னையின் 210-க்கும் மேற்பட்ட சாலைகள், பாலங்கள், பூங்காக்கள் ஆகியவற்றின் உருவாக்கம், மாற்றம், இடப்பெயர்வு, அழிவு ஆகியவற்றை மிகவும் சிரமப்பட்டு தொகுத்துள்ளார். பலப் பெயர்கள் மருவி இன்று அழைக்கப்படும் விதங்களை பற்றியும் நாளை ஒருவேளை இப்படி என்கிற கற்பனை கலந்த நையாண்டியும் வெளிப்படுத்தி இருக்கிறார். 
     ட்டாயம் சொல்ல வேண்டிய மிகப்பெரிய உழைப்பு இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள புகைப்படங்கள். இந்த புகைப்படங்களே சென்னையின் மாற்றங்களை பளிச்சென வெளிப்படுத்தும். புத்தகத்தில் வெளியிட்டுள்ள படங்களை தனியாகவும் வெளியீட்டு தினத்தன்று அரங்கத்தில் காட்சிப்படுத்தியது நிகழ்கால சென்னையை மறக்க வைத்தது. 
           எனவே இந்த புத்தகத்தை வாசிப்பது எதிர்கால வாழ்க்கை நாம் ஒவ்வொருவருக்கும் எத்தனை நாள் என்பது தெரியாது. ஆனால் கடந்த காலம் குறிப்பாக நமது பிறந்த தேதியை வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் 22.08.1639 ஆக மாற்றிவிடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...