Pages

செவ்வாய், மார்ச் 08, 2011

பொதுத்தேர்தல் ! பொதுத்தேர்வு ! பொதுப்புத்தி !

                                                       ஏ.பாக்கியம்
                 என்ன..சார் பரிட்சை நடப்பது கூடவா இந்த தேர்தல் கமிஷனுக்கு தெரியாது? என்ற பொதுஜன பிரஜையின் புலம்பல்  காதில் விழுந்தது. உடனே எனது பொதுபுத்தியில் பொறிதட்டிவிட்டது. எங்கோ, ஏதோ வாசித்தது நினைவுக்கு வந்தது. தேடியபோது ஓராண்டுக்குமுன் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் வலை தளத்தில்  அவர் எழுதியவற்றில் கீழ்க்கண்ட  கருத்துக்கள் தென்பட்டது.
                 
           பரிட்சை நாள் அன்று காலை  அலுவலகம் செல்கின்றவர்கள், வணிகர்கள்  மற்றும் பிற தொழில் செய்கின்றவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தங்கள் பணிக்கு செல்லும்படியாக அரசு கேட்டுக் கொள்கிறது. அதற்கான அனுமதியை  எல்லா நிறுவனங்களும் அளித்திருக்கின்றன.  முக்கிய காரணம் பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து ரயில் சாலை போன்ற இடங்களில் நெருக்கடி இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே.
                 பரிட்சை நாள் அன்று கூடுதலான ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கபடுகின்றன. பரிட்சை நடைபெறும் வளாகத்தில் யாரும் செண்ட் அடித்துக் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கபடுகிறது. காரணம் அது கவன சிதைவை உண்டுபண்ணக்கூடும். பரிட்சைக்கு தயார் ஆகும் மாணவர்களின் பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்தவதற்கு வசதியாக மாலை முன்னதாகவே அவர்கள் வேலையிலிருந்து திரும்ப அனுமதி தரப்படுகிறது. பரிட்சைக்கு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில்  பெற்றோர்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொண்டு இரவில் தாமதமாக வீடு திரும்ப கூடாது என்பதற்காக இரவு பத்து மணிக்கு எல்லா விழாக்களும் நிறைவு செய்யப்படுகின்றன.              
             
                பரிட்சை நாளில் ஆங்கில தேர்வு எழுதும் மாணவர்கள் உச்சரிப்பு கேட்டு பதில் எழுத நேரிடும் என்பதால் அதற்கு இடையூறு செய்ய கூடாது என்று பரிட்சை நடக்கும் நேரத்தில் விமான சேவைகள்  ரத்து செய்யப்படுகின்றன. விமானம் பறக்கும் ஒசை மாணவர்களின் கவனத்தை சிதற அடிக்கும் என்பதால் விமான சேவை நேரம் அன்று மட்டும் மாற்றப்படுகிறது. தரையிறங்க உள்ள விமானங்கள் கூட தாமதமாகவே அனுமதிக்கபடுகின்றன. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி பரிட்சைக்கு செல்லும் மாணவர்களை பொதுமக்கள் வாழ்த்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன. பரிட்சை நடைபெறும் நேரத்தில் இந்த ஆண்டு பரிட்சை எப்படியிருக்கிறது. இது சென்ற ஆண்டுகளில் இருந்து எந்த அளவு மாறுபட்டிருக்கிறது. எப்படி மாணவர்கள் இதை எதிர் கொள்கிறார்கள் என்பதை முக்கிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது.
                   
             அன்று மின்சார ரயில்கள் கூட அவசியமில்லாமல் ஒலிப்பானை உபயோகபடுத்த கூடாது. தேர்வு நடைபெறும் வளாகங்களின் அருகாமையில் எவரும் எவ்விதமான ஒலிப்பானையும் ஒரு போதும் பயன்படுத்த கூடாது. ஸ்டாக் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வணிக மையங்கள் கூட  அன்று ஒரு மணி நேரம் தாமதமாகவே இயங்க துவங்குகின்றன. நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கபடுகிறது. அதனால் மற்ற மாணவர்கள் வந்து போகும் இடையூறு தவிர்க்கபடுகிறது. தேர்வு நடைபெற்ற நாளின் மாலையில் அன்று கேட்கபட்ட கேள்விகளும் அதற்கான சரியான பதிலையும் நாளிதழ்கள் பிரசுரம் செய்கின்றன. இதனால் தான் எவ்வாறு தேர்வு எழுதினோம் என்பதை மாணவன் உடனே தெரிந்து கொள்ள முடிகிறது.      
           
            தேர்விற்கு ஒருவாரம் முன்னதாகவே மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் குறிப்புகள் மற்றும் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான சீரான உணவு முறை பற்றிய தகவல்களை எல்லா ஊடகங்களும் வாறி வழங்குகின்றன. வீடு தேடி வந்து உளவியல் நல ஆலோசகர்கள் நம்பிக்கை பயிற்சிகளும் தருகிறார்கள்.  மின்சார துறை இதற்காக தனது 4000 பணியாளர்களை சிறப்பு பணி என கருதி மின்சார தடையே இல்லாமல் பரிட்சை நடைபெற உதவி செய்கிறது
 
          பரிட்சைக்கு மாணவர்கள் தயார் ஆகும் நாட்களில் வீட்டில் பெற்றோர்கள் ஹெட்போன் போட்டுக் கொண்டு மட்டுமே தொலைக்காட்சி பார்க்கும்படியாக தொலைக்காட்சிகளே வற்புறுத்துகின்றன. தாமதமாகவோ அல்லது நுழைவு தேர்விற்கான அடையாள அட்டையை மறந்துவிட்டோ வரும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு என்றே தனியான போலீஸ்படை அமைக்கபட்டு உதவி செய்கிறார்கள்.
   
    இவையெல்ம் எங்கு நடக்கிறது தமிழகத்திலா? இந்தியாவிலா? என்று கேட்பவர்களிடம் ஆம் என்று கூறினால்  பலர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பலரின் மூச்சு நின்றுவிட நான் காரணமாக இருக்கப்போவது இல்லை. இவை அனைத்தும் தென்கொரியாவில் கல்லுரி நுழைவுத்தேர்வை ஒட்டி அந்த நாடு கடைபிடிக்கின்ற விதிகளாகும். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற பரிட்சையை பற்றிய அக்கரையின் வெளிப்பாடுதான் மேற்கண்ட விதிமுறைகளாகும்.
    
           ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை ஐந்து மாநிலத்தின் தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பின் தலைவிதியை தீர்மானிக்ககூடிய தேர்வுகளை 16 லட்சம் மாணவர்கள் எழுதத்தொடங்கிவிட்டனர். மாணவர்களின் எதிர்காலம் பற்றியோ, கல்விப்பற்றியோ தேர்தல் ஆணையத்திற்கு சட்டரீதியாக கவலைப்படவேண்டும் என்ற்  அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பரிட்சைப்பற்றிய பொதுபுத்தியே   ஆணையத்திற்கு இப்படித்தான் உள்ளது என்று  வெட்டவெளிச்சமாக்கிவிட்டது இந்த அறிவிப்புகள். இந்த பொதுபுத்தி ஒன்றும் தேர்தல் ஆணையத்தின் தனிச்சொத்தல்ல.  தேசத்தை ஆண்ட மற்றும் ஆள்வோரின் பொதுப்புத்தியும் இதுவாகத்தான் உள்ளது.
    
                                  தமிழகத்தில் தற்போது மாணவர்களின் தேர்வை கருதி தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று கேட்காத அரசியல் கட்சிகளே இல்லை. இது வரவேற்கப்படக்கூடிய அக்கரைதான். அதே நேரத்தில் இந்த அக்கரை மற்ற ஆண்டுகளில் தேர்வு நடக்கிறபோதும் எழக்கூடிய இடையூறுகளைப் பற்றியும் இந்த அரசியல் இயக்கங்கள் அக்கரை கொள்ள வேண்டுமென்பதுதான நமது அவா. உலககோப்பை கிரிக்கெட் போட்டியை தேர்வு காலத்தில் நடத்தவேண்டாம் என்ற கோரிக்கையை பலரும் முன்வைத்தனர். ஆனால் ஆட்சியாளர்களோ இதைக்கண்டுகொள்ளவில்லை.  அரசியல் இயக்கங்களுக்கு அப்படி ஒரு விஷயம் நடப்பதாகவே தெரியவில்லை, அக்கரைப்படவில்லை. 
    
                       ஏற்கனவே நடைபெற்ற ஐ.பி.எல். விளையாட்டுப்போட்டியும்கூட இதே சர்ச்சைகளை சந்தித்தது. இங்கேயும் அந்த  பொதுப்புத்தி செயலற்றுபோனது என்பதைவிட எதிர்பதமாக செயல்பட்டிருக்கலாம். பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லை. கிரிகெட் ரசிகர்களில் கணிசமானவர்களுக்கு வாக்குரிமை உள்ளது, நடத்துவோரிடம் வாக்குகளை வாங்கும் பசை உள்ளது என்ற வகையில் பொதுப்புத்தி நடத்துவோருக்கு ஆதரவாக வேலைசெய்து இருக்கலாம்.  
                 
                     மேற்கண்ட விஷயஙகளையொட்டியே சில சந்தேகங்கள் எழவாய்ப்புள்ளது. தேர்தல் தேதியை மாற்றக்கோருவது மாணவர்களின் மீது இருக்கிற அக்கறை மட்டுமா? அல்லது தயாரிப்புக்கு போதிய அவகாசம் இல்லை என்ற தேர்தல் கவலையா? என்பதுதான் அந்த சந்தேகம். தமிழக முதல்வர் கலைஞர் தேர்தலை தள்ளிவைத்திடவேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்னால் வாக்குகளை வாங்க அளித்து வந்த இலவசத்திட்டம் தடைபட்டுள்ளது என்ற கவலையே மேலோங்கியுள்ளது. இதைக்கூட செய்யவில்லை என்றால் கிடைக்கிறவாக்கும் கிடைக்காமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறார். 
                                      ஏப்ரல் 13 பீடைதேதி பீடை நாள் என்று ஒரு ஸ்தல பிரமுகர் அதை நிந்தித்த போது நமது பொது புத்திக்கு மேலும் ஒரு பொறிதட்டியது. தள்ளிவை  என்ற கோரிக்க்க்கு பின்னால் ஏன் இதுகூட இருக்க கூடாது என்று. நமது மாநிலத்தின் அரசியல் இயக்கம் அனைத்தும் அத்தன் முற்போக்கானதா? என்ன? நாள்களையும் கோள்களையும் பார்த்துதானே கொள்கை முடிவெடுக்கின்றனர். மஞ்சள் துண்டின் மகிமை பற்றி பேசக்கூடியவர்கள் தானே இவர்கள். எண்கள் மீது நம்பிக்கை மற்றும் வளர்பிறை தேய்பிறை பார்த்து தான் காரியம் முடிக்கும் தன்மைகள் இந்த பெரும் அரசியல் பாசறைகளிடம் காணப்படுவதுதானே. 
                             
                      யேசுநாதரின் கடைசிவிருந்து வெள்ளிக்கிழமை என்பதால் அவர்களுக்கு அது கெட்டநாள். பழங்குடி நார்வே மக்கள் மற்றும் ஜெர்மனி மக்கள் வழிபட்ட தெய்வத்த் அவர்கள் கிறிஸ்த்துவத்தில் இணைந்து விட்டபிறகு அதை  பேயாக கருத்தினர். அந்த பேய் வெள்ளிக்கிழமைதோறும் 13பேர்களுக்குவிருந்து  வைத்து ஒருவரை கொன்றுவிடும் என்ற முடநம்பிக்கையால் இந்த கிழமையையும் இந்த நாளையும் வெறுத்தனர். கிறிஸ்த்துவர்களுக்கு ஞாயிற்றுக்கிழம்போல் யூதர்களுக்கு சனிக்கிழமைபோல் பேய்களுக்கு வெள்ளிக்கிழமை ஓய்வுநாள் என்ற முடநம்பிக்கையும்  உள்ளது.  இப்படியான காரணங்கள் இவர்களுக்கு அப்பாற்பட்டவையா என்ன? இந்த அக்கறை தேர்தல் நேரத்தில் மட்டுமே வருகிறது என்றால் இந்த் மூடப்புத்தியும் ஏன் காரணமாக இருக்க கூடாது?
    
               தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் படைத்தது, அதில் தலையிட முடியாது என்பது வெளிப்படைக்கு உண்மைதான். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியும் தற்போது நடைபெறும் உலகக்கோப்பை போட்டி பற்றி வந்த கருத்துக்களுக்கும் அது சுதந்திரமான அமைப்பு, அதில் தலையிட முடியாது என்றே விளக்கம் கொடுக்கப்பட்டதை அனைவரும் அறிவர். இதுகூடவா தெரியாது என்று கேட்ட பொதுஜனத்தின் பொதுப்புத்தி இவர்களுக்கு உறைப்பதைவிட  சூதாட்டவெறியும் கிரிக்கெட் ரசிகனின் பாக்கெட் மனியும் மட்டுமே இந்த சுதந்திர அமைப்பு என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்துகிடக்கிறது
        
                தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று அறிவித்துவிட்ட தேர்தல் ஆணையம், கல்விநிலையம் அருகாமையில் பிரச்சாரம் கூடாது என பல ஆலோசனைகளை வாரி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையத்தின் பொதுப்புத்திக்கு மேலும் சவால் விடுவதாக உள்ளது. தேர்வுக்கு படிப்பவர்கள் வீடுகளிலிருந்துதான் படிப்பார்கள் என்பதும், கூச்சல் நிறைந்த பிரச்சாரங்கள் எங்கே நடக்கும் என்பதையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கும்வரை ஆளும் கட்சியால் பல இடங்களில் நலத்திட்டங்கள் என்று அறிவித்து பொருட்கள் வழங்கப்பட்டன.  இதற்காக தெருவெல்லாம் ஒலிப்பான்கள் அமைக்கப்பட்டது. பல இடங்களில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தும், வேண்டுகோள் விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது அக்கறைப்படும் ஆள்வோர்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கும்வரை பொதுப்புத்தி வேலை செய்யவில்லை. அவர்களின் காதுகளுக்கும் மாணவர்களின் குரல் கேட்கவில்லை. தேர்தல் ஆணையம் மற்றும் பெரும்  இயக்கத்தலைவர்களின் பொதுப்புத்தி இப்படி இருந்தால் பொதுஜனங்கன் சிலரின் பொதுப்புத்தியை கேள்விக்கு உள்ளாக்குவது கடினமான விஷயமல்லவா?
    
                   பல இடங்களில் மதம்சார்ந்த விழாக்களும், கேளிக்கை நிகழ்வுகளும், திருமணநிகழ்வுகளும் ஊரெல்லாம் அதிரும் வகையில் ஒலி எழுப்புகின்றனவாக இருக்கிறது. இவர்களிடம் தேர்வு காலங்கள் என்று சொன்னால் தெய்வவிரோதம் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.இங்கே பொதுப்புத்தியை மூட்டை கட்டி வைக்கவேண்டியுள்ளது.
                       
                     பேருந்து பயணங்களில் தனது அலைபேசியில் குத்துப்பாட்டை அலறவிட்டு, ஹெட்போனை பயன்படுத்தாமல் சகபயணிகளின் அமைதியை கெடுப்பதும்,  குட்டிததுக்கம் நுணிப்புல்  வாசிப்பைகூட கெடுத்துவிட், தான்மட்டும் குறட்டைவிட்டு துங்குபவரின்  பொதுபுத்திக்கும்  தேர்வுகாலத்தில் தேர்தல் நடத்துகிற பொதுபுத்திக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்?
                                 
                        படிக்கிற மற்றும் தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் என்னதான் ஒலி, சத்தம், கூச்சல் உன்னை சுற்றி இருந்தாலும், உனது கவனம் படிப்பில் இருக்கவேண்டும் என்று ஆசிரியாகள் உரக்க முழங்குவார்கள். சப்தங்களுக்கு இடையே படிக்கும் சிரமம் மாணவர்களுக்கு மட்டுமே தெரியும். குடும்பத்தில் கூட அம்மாவிற்கு மகாராணி தொடர் பார்க்காவிட்டால் துக்கம் வராது, அப்பாவிற்கு கிரிகெட் பார்க்கவில்லை என்றார் பொழுதுவிடியாது, பரிட்சை எழுதும் மாணவர்களின் உடன்பிறப்புகளுக்கோ எஸ்எஸ் மியூசிக் மற்றும் இந்திபாடல் அலைவரிசைகளை அலறவிடாமல் ஆர்வம் குறையாது, நாங்கள் எல்லாம் படித்துமுடித்துவிட்டோம், நீ இப்போது படிக்கிறாய்? அதைபோய்ப் பார் என்று கூறும் அளவிற்குதான் பெற்றோரின்  பொதுபுத்தி  உள்ளது.
                         
                           மதிப்பெண்கள் மட்டுமே எதிர்கால இடத்தை நிச்சயிக்கும் என்று சமூகம் மாறிவிட்டது. அல்லது பணம் கொழிக்கவேண்டும். இந்த சூழலில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வீட்டில் பெற்றோர் பிள்ளைகள் உறவு பாசவலையை கடந்து  சிறைவார்டன், சிறைக்கைதி என்று உறவு ஆட்சிசெய்கிறது. இதற்கிடையில் மாணவர்கள் மன அழுத்தத்துடன், பதட்டத்துடன் படிக்கவேண்டும், சிறுபிழைகள், மறதிகள் என ஒவ்வொரு அசைவும் அவர்களை அவதிக்கு உள்ளாக்குகின்றன. விளைவுகள் விபரீதமாக மாறிவருகின்றது. இதற்கான சூழலை மாற்றவதற்கு நீண்டகாலமாகலாம். ஆனால் மாணவர்களின் தேர்தல் காலத்திற்கான சூழலை கணக்கிலெடுக்க தேவையான  பொதுப்புத்திக்கு  என்ன தேவை? நாட்டை வளர்ப்போம் என்று பேசுவதைவிடுத்து  முடிவெடுப்பவர்களிடம் பொதுபுத்தியை வளர்ப்போம் என்பதேஇன்றுபொருத்தமாகஇருக்கலாம்.                                                                        ஏ.பாக்கியம்                                                                                             

3 கருத்துகள்:

  1. மிக அவசியமான, உடனடி பதிவு. எஸ்.ரா வின் பதிவை ஞாபகமூட்டியது சரியான உதாரணம். சம்ஸ்.

    பதிலளிநீக்கு
  2. WHAT TO DO WITH THIS GOVT ??THEY HAVE NO MINIMUM KNOWLEDGE ABOUT THE YOUTH S ISSUES..

    பதிலளிநீக்கு

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...