Pages

வெள்ளி, மார்ச் 04, 2011

உலக இளைஞர் எழுச்சிகளும்-இயக்கங்களும்


                                                                    
                
                                                                                           
                                                                                               வெளியீடு:
                                                                                   பாரதி புத்தகாலயம்
                                                                                 421, அண்ணாசாலை,
                                                                       தேனாம்பேட்டை, சென்னை-600018
                                                                      தொலைபேசி-04424332424-   04424332924
                                                                                 முதல்பதிப்பு. ஜனவரி-2010 


            1. இளமை பற்றிய இருவேறு சித்தாந்தங்கள
          
             ஒரு நாட்டின் எதிர்காலம் நிகழ்கால இளைஞர்களின் வாழ்நிலையைப்  பொறுத்தே அமையும் என்பது அறிஞர்களின் கூற்று. இயற்கைவளங்களி லேயே உயர்ந்த வளம்  மனித வளம் ஆகும்.  இதைப்போற்றும்வகையிலேதான்


அரிது அரிது மானிடராதல் அரிது
மானிட ராயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது 

 எனஅவ்வையார் மனிதவளத்தின் அவசியத்தைப் பாடியுள்ளார்.மானிடர்களில்  இளைஞர்களை அதிகமாகப் பெற்றுள்ள சமூகமே மிகவும் சக்திவாய்ந்தது. கட்டுடலும்,  கவர்ச்சி உடையும்,  மிடுக்கு நடையும் அரும்பு மீசையும்,  குறும்புப் பார்வையும்தான் இளமை என்று புறத்தோற்றத்தை மட்டுமே இளமைக்கு இலக்கணமாக் கியுள்ளனர் சில பண்டிதர்கள். ஆனால் இளமை என்பது தீவிரமான சமூகமயமாக்கல் என்று பல சமூக விஞ்ஞானிகள் வரையறுத்து உள்ளனர்.  இளமை என்பது ஆற்றலின் தோற்றுவாயாகவும், புதுமையின் புகலிடமாகவும், மாற்றத்தின் மகுடமாகவும் இருந்துள்ளதை வரலாறு  நமக்கு  எடுத்துரைத்துள்ளது.

   எது இளமை? அதன் எல்லை என்ன? வயது என்ன? என்பதை  ஒவ்வொரு நாடும் தனது சமூக வளர்ச்சிப் போக்குகளுக்கு ஏற்ற வகையில் நிச்சயித்துள்ளது.  14 வயது முதல் 40 வயது வரை நாட்டுக்கு நாடு வேறுபட்ட வரையறை உள்ளது. பெரும்பாலான சமூக விஞ்ஞானிகள் இளமையின் எல்லை 35 வயது வரை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

   குழந்தைகளின் வளர்ச்சிப்போக்கில் 6 வயதுக்குள் பெற்றோர் களைப்பற்றி அறிந்து கொள்வர். 13 வயதுக்குள் சில குறிப்பான விஷயங்களை அறிந்து கொள்வர். 19 வயதுவரை சீரான வளர்ச்சி அடைவார்கள். 20 வயதுக்குமேல் அரசியல் மற்றும் சமூகங்களைப் பற்றிய கருத்துக்களையும் வடிவங்களையும் பெறுவார்கள். 30 வயதில் சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளையும்,  எதார்த்தங் களையும்,  முழுமையாகப் புரிந்து கொள்ளுதலும் முடிவெடுக்கும் திறனை முழுமையாகப் பெறுதலும் நடைபெறுகிறது. 30 முதல் 35 வயதுக்குள் குறிப்பிட்ட தளத்தில் நிலைபெறும் பருவமாகும்.அதாவது படைப்பாளியாக,  அறிவுவிஷயமாக,  விஞ்ஞானியாக , எழுத்தா ளனாக,  இன்னும் பல தளத்தில்  தடம் பதிக்கும் பருவமாக உள்ளது என்று சமூக விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர்.

தனித்துவத்தின் சிறப்பம்சம்?

   பாலின வேறுபாட்டாலும் ஆணாதிக்கச் சமூக அடக்குமுறை களாலும் பெண்களுக்குத் தனித்துவம் கிடைக்கிறது. கல்விச்சாலைகளில் குவிந்துள்ளதாலும் அதற்குரிய தேவைகள் இருப்பதாலும் மாணவர்களுக்கு தனித்துவம் உள்ளது. தொழிற்சாலைகளில்  குவிக்கப்பட்டுள்ளதாலும் சுரண்டலுக்கு உள்ளாவதாலும் தொழிலாளர்களுக்கு தனித்துவம் தேவைப்படுகின்றது. ஆனால் இதுபோன்ற ஒரு விஷேச சூழல் இல்லாமல்,  ஆண், பெண், மேல்தட்டு வர்க்கம் உழைப்பாளி வர்க்கம் என சமூகத்தின் அனைத்துப் பிரிவிலும் இடம் பெற்றுள்ள விரவிக்கிடக்கக் கூடிய இளைஞர்கள் ஏன் தனி முக்கியத்துவம் பெறுகின்றனர்?

   மனித வாழ்வில் ஆற்றல் நிறைந்த பகுதியாக இருப்பதாலும்,  மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாலும்,  வாழ்வின் அடிப்படைத் தேவைகளைத் தேடி நிலைநிறுத்துவதற்கான கட்டாயமான பருவத்தில் இருப்பதாலும் இளைஞர்கள் தனித்துவமும் முக்கியத்துவமும் பெறுகின்றனர் என்று சமூக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முடிவுக்கு வந்துள்ளனர்.

     இசைத்துறை,  கலைத்துறை,   விளையாட்டுத்துறை,  விஞ்ஞானத் துறை என பல துறைகளில் புதிய புதிய சாதனைகள் நிகழ்த்துவதும்,  அந்தச்சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை நிகழ்த்துவதும் தனிநபர்களின் முயற்சியும்.  ஆற்றலையும் அதிகமாக சார்ந்திருப்பதாகும்.  இதில் கூட்டு முயற்சி பின்புலமாகவும்.  தனிநபர் உழைப்பு மையமாகவும் இருக்கும். வரலாற்று ரீதியாக விடுதலைப் போராட்டத்திலும், தேசிய அரசுகள் உருவாவதிலும்,  சமூகசீர்திருத்த இயக்கங்களிலும்,  சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும், அரசியல் மாற்றங்களிலும், சமூக மாற்றப் போராட்டங்களிலும்,  இளைஞர்கள் தங்களது தடத்தை ஆழப்பதித்து வந்துள்ளனர். இங்கே தனிநபர்கள் விளிம்பிலும். கூட்டுமுயற்சி. அமைப்பு ஆகியவை மையமாகவும் இருக்கும். 

  அரசியலா ? மகிழ்ச்சியா ?

  புதுமையையும் மாற்றத்தையும் விரும்பிய இளைஞர்கள். தங்களது தேவைகளை நிறைவேற்றாத அரசுக்கு எதிராகவும்,  அழுகி நாற்றமெடுக்கும்  சமூகத்திற்கு எதிராகவும்,  அமைப்பு ரீதியில் அணிதிரண்டனர்,  எழுச்சி பெற்றனர். இந்த அமைப்புகளாலும். எழுச்சிகளாலும் நமக்கு மரணஅடிதான் என உணர்ந்த ஆளும் வர்க்கம் இளைஞர்களை கருத்துரீதியாகபிரித்தது. தடிகொண்டும் துப்பாக்கி ரவை கொண்டும் அடக்கியது.  இளைஞர்கள் அரசியல் சமூக போராட்டங்களில் ஈடுபடுகின்றபோது அவ்வியக்கங்களைத் தோல்வி அடையச் செய்வதற்காக இளைஞர்களை அரசியலிலிருந்து பிரித்திடும் பணியை ஆளும் வர்க்கம் செய்தது. பிரபலமான பிரெஞ்சு நாட்டு சமூகவியலாளர்கள் கார்மல் கம்லெரி,  மற்றும்  பிளவுட்டாப்பியா ஆகிய இருவரும் இளைஞர்களைப் பார்த்து அரசியல் வேண்டுமா? மகிழ்ச்சி வேண்டுமா? என்று கேட்டனர்.

  மகிழ்ச்சி தேவையானால் அரசியலைத் துறக்க வேண்டும்,  அரசியல் வேண்டுமானால் மகிழ்ச்சியைத் துறக்க வேண்டும் என்று ஆளும் வர்க்க கருத்துக்கு ஆதரவு திரட்டினர்.  இதையே நமது நாட்டில் இளைஞர்களைப் பார்த்து உனக்கேன் அரசியல் வேலையைத்தேடு, மாணவர்களைப் பார்த்து உனக்கேன் அரசியல் படிப்பைப்பார், பெண்களுக்கு ஏன் அரசியல் குடும்பத்தைப்பாருங்கள். தொழிலாளர்களுக்கு ஏன் அரசியல் வேலையைப்பாருங்கள் என்ற கருத்தைப் போதிப்பது வாடிக்கையாகிவிட்டது
அரசியல்சார்பற்ற அமைப்பு என்று அறிவிப்பதில் அறிவாளித்தனமும் நடுநிலையும் இருப்பதாக மக்களை நம்பவைத்து அவர்களை வாக்கு இயந்திரங்களாகவும் சுரண்டும் அரசியல் கட்சிகளின் அடியாட்களாக மட்டுமே தக்கவைக்க முயல்கின்றனர்.அரசியல் உணர்வின் எல்லையைச் சுருக்கி அறியாமையின் எல்லையை விரிவுபடுத்துகின்றனர்.

       அரசியலற்ற இந்த கருத்தாக்கத்தின் விளைவுகள் அமெரிக்காவில் பரவலாக வெளிப்பட்டன.  1971-ம் ஆண்டு வியட்நாம் யுத்த எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்குப் பிறகு அமெரிக்க இளைஞர்களின் அரசியல் நடவடிக்கைகள்,  உணர்வுகள்  வெகுவாகக் குறைந்துள்ளன.

அமெரிக்க இளைஞர்களுக்கு சமாதானம்,  மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சனைகள்,  ஆயுத ஒழிப்பு ஆகியவற்றின் பாலபாடம்கூட தெரியாது. இதையெல்லாம் தெரிந்துகொள்வது இளைஞர்களுக்குத் தேவையற்றது எனபோதிக்கின்றனர். எனவே அமெரிக்க இளைஞர்கள்அரசியலில் பூஜ்யமாக உள்ளனர். என்று அமெரிக்க வரலாற்று அறிஞர் ஆர். பார்ஸ்ட்னர் கூறுகின்றார். தற்போது இந்த அரசியலற்ற போக்கு புதிய செயல் முறையில் வெளிப்பட்டுக்கொண்டுள்ளது. அரசுசாரா நிறுவனங்களும், தனனார்வ நிறுவனங்களும் இக்கருத்தை பலமாக பரப்பி வருகின்றனர். எங்கே அரசுசாரா நிறுவனங்கள் வலுவாகத் தங்களை நிறுவிக்கொண்டனவோ அங்கே தீவிர சமூக இயக்கங்கள் பின்னடைந்துள்ளன என்று ஜேம்ஸ் பெட்ராஸ் தனது ஆய்வில் வெளிப்படுத்துகின்றார்.

வயதா? வாழ்க்கையா?

   உலகின் பலநாடுகளில் உள்ள இளைஞர்கள் தங்களின் அடிப்படையான பிரச்சனைகளுக்காகவும் வாழ்க்கைப் பிரச்சனைக் காகவும் அணிதிரண்டு போராடினார்கள். இப்போராட்டங்கள் பல இடங்களில் வன்முறைகளாகவும் கலகங்களாகவும் மாறின. இப்போராட்டங்களைக் கண்டுகொள்ள வேண்டிய  தேவையமில்லை, கவலைப்பட வேண்டிய அவசியமுமில்லை என்று அமெரிக்க சமூக விஞ்ஞானி எஸ். பீஃவர் எடுத்துரைத்தார். காரணம் 21-ம் வயதிலே கோஷம்போடுவார்கள்,   22-ம் வயதிலே ஓய்ந்துவிடுவார்கள்.  இது வாழ்க்கைப்போராட்டமல்ல வயதுக்கோளாறு என்று கூறினார். 

  ஆனால் சரித்திரம் இவரின் இக்கருத்தை கல்லறைக்கு அனுப்பியது. இளைஞர்களின் எழுச்சிகள் 1960-ம் ஆண்டுகளுக்குப்பிறகு உலகளாவிய முறையில் உக்கிரமடைந்தன.இதைக் கண்டு ஆளும் வர்க்கம் அஞ்சியது.  இளைஞர்கள் சமுதாயத்தில் சிறுபான்மையினர் அவர்களது சுயநலம் காரணமாக இதரபகுதியினரை தாக்கி தங்களது மேலாதிக்கத்தை சமுதாயத்தில் நிலைநிறுத்த முயலுகின்றனர் என்ற முரட்டு சித்தாந்தத்தை பேராசிரியர் எம்.ஜெரால்டு முன்மொழிந்தார். இளைஞர்கள் கலகக்கார சிறுபான்மையினர்.   எனவே இவர்களது போராட்டத்தை அடக்குவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று வாதிட்டு. அடக்கு முறை அஸ்திவாரத்தை நியாயப்படுத்திக் கட்டவிழ்த்துவிட்டனர்.

தனிவர்க்கமா ?

     வர்க்க சமுதாயத்தில் வர்க்கப்போராட்டங்கள் தீவிரமடைந்தது. இளைஞர்கள் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக அணிதிரள்வது அதிகரித்தது. ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் பரந்த அளவில் உழைப்பாளி மக்கள் அணிதிரள்வதைத் தடுக்க வேண்டாமா? அதற்கு ஆளும் வர்க்க ஆயுதம் மட்டும் போதுமா? போதாது. எனவே இவற்றைத் தடுக்கும் வகையில் புதிய புதிய சித்தாந்தங்களை சிந்தைக்குள் ஏற்றினர்.  இளைஞர்கள் அனைத்து  மக்கள்பிரிவிலும் இருப்பதால் அவர்கள் வர்க்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள்,  தனிவர்க்கம் என்று வாதிட்டனர். காலப்போக்கில் இளைஞர்கள் அணிதிரள்வதும் அரசியலில் பங்கெடுப்பதும் அதிகமானதே தவிர குறையவில்லை. குறிப்பாக 1968-ல் பிரெஞ்சு மாணவர்கள் எழுச்சி நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியது கண்டு பயம் கொண்டனர்.  இளைஞர்களை தனிவர்க்கம் என்று முத்திரை குத்தி உழைப்பாளி மக்களிடமிருந்து பிரித்திடும் சூழ்ச்சியினைச் செய்தனர். சில இளைஞர் தலைவர்களை நீங்கள் இளைஞர் வர்க்கத்தின் தலைவர்கள் எனப் புகழாரம் சூட்டி பலரை புதைகுழிக்கே அனுப்பிவிட்டனர். எனினும் அவர்களின் சித்தாந்தங்கள்தான் சிதைந்ததே தவிர இளைஞர்களின் ஒற்றுமை வளர்ந்தது. எழுச்சிகள் தொடர்ந்தது. தத்துவம் வயதிற்கு அல்ல வர்க்கத்திற்குதான் என்பதை வரலாறு துல்லியமாகவே நிரூபித்துள்ளது.

புதிய பார்வை?

  ஒரு தத்துவம் இளமையை,இளமையின் ஆற்றலை தங்களது சுரண்டலுக்காகவும் சுரண்டல் சமுதாயத்தைப் பாதுகாத்திடவும் பயன்படுத்தியது. இளையசக்தி சுரண்டல் அமைப்புக்கு எதிராக அணிதிரண்டு களத்தில் இறங்கியபோது, அவர்களை ஆயுதம் கொண்டு  அடக்கியது மட்டுமல்ல,  பின்னுக்குத்தள்ளும் சித்தாந்தங்களையும் வலுவாகப் பயன்படுத்தியது. மறுபுறம் மற்றொரு தத்துவம் சுரண்டலின் கொடுமையை ஒழித்திட நினைத்த புரட்சியாளர்கள் இளைஞர்களைப் பற்றி புதிய பார்வையையும், புரிதலையும் உருவாக்கினார்கள்.  காரல் மார்க்ஸ்,  எங்கெல்ஸ் உட்பட மார்க்சிய அறிஞர்கள் 

       இளைஞர்களை சமூகப் பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக,  வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பொதுவானவர்களாகப் பார்க்கக்கூடாது என்றும் அவர்களை வர்க்கக் கட்டமைப்புக் கொண்ட சமூகத்தின் ஒரு பகுதியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று உறுதியுடன் எடுத்துரைத்தார்கள். 1844-ம் ஆண்டில் பாட்டாளி வர்க்கத்தின் வளரும் தலைமுறை என்ற கட்டுரையில் காரல் மாக்ஸ் கீழ்கண்டவாறு எழுதினார். உழைக்கும் வர்க்கத்தின்   எதிர்காலம்,  மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் அனைத்தும்,  வளரும் உழைக்கும் தலைமுறையைச் சார்ந்துதான் உள்ளது என்பதை, ஞானம் பெற்ற தொழிலாளி வர்க்கம் புரிந்தே வைத்திருக்கிறது என்றார்.  

  1848ஆம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற தொழிலாளர்கள் எழுச்சிக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவாகச்  செயல்பட்டதையும்,  1865-66ஆம்  ஆண்டுகளில்  பிரான்சில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவாக இருந்ததையும் சுட்டிக்காட்டி வரவேற்றுள்ளார்.

   லெனின் சகாப்தத்தில் புதிய நிலைமைகள் தோன்றினாலும் மேற்கண்ட கருத்துக்களையே முன்னெடுத்துச் சென்றார். தொடக்கத்தில் சில சமூக ஜனநாயகக் கட்சிகளும்,  தொழிற்சங்கங்களும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் அமைப்புகளுக்கு உதவிசெய்ய மறுத்தனர்.  நமது பிரதான கடமை இளைஞர்களை பயிற்றுவிப்பதுதான். அவர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டு
வதல்ல என்று வலுவாக வாதிட்டு முட்டுக்கட்டையை ஏற்படுத்தினர். அரசியல் அரங்கத்தில் போராட்டம் என்பது இளைஞர்களுக்கு இல்லை என்று சீர்திருத்தவாதிகள் வாதிட்டனர். இன்றைக்கும் இக்கருத்துக்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.

    இக்கருத்துக்களிலிருந்து மாறுபட்டமுறையில் லெனின்,  இளம் போராட்ட வீரர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்றுபடுத்துவதற்கும்,  பாட்டாளி வர்க்கத்தின் பொதுப் போராட்டத்தில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவும் தெளிவான இலக்குகளை நிர்ணயித்தார்.

   சமூக அரசியல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவது இயல்பானது வரவேற்கத்தக்கது என்றார் லெனின். இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பது முட்டாள்தனமானது போலித்தனமானது என்று லெனின் உறுதியாகச்சாடினார். இளைஞர்கள் கூர்மைபடுத்தப்பட்டு இருக்கின்ற ஆயுதம்.  அவர்களை யார் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றார்.

  இளைஞர்களைப்பற்றி பயப்பட வேண்டாம். போராட்டம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும். நமது முன்னோர்களைவிட மாறுபட்ட முறையில்,  மாறுபட்டவடிவில்மாறுபட்டசூழலில்சோஷலிசத்தைமுன்னெடுத்துச்செல்வார்கள் என்று  நம்பிக்கையுடன்இளைஞர்களையும், இளைஞர் அமைப்புகளையும் அணுகி அணிதிரட்டினார் லெனின்.

      இளைஞர்களை இன்று அமைப்புரீதியாக அணிதிரட்டாத சமூகப் பிரிவுகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைவரும் இளைஞர்களை அணிதிரட்டுகின்றனர். மதம்,  சாதி,  இனக்குழு,  மொழி,  அரசியல் கட்சிகள்,  ரசிகர் அமைப்புக்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவர்கள் யாருடைய நலனுக்காகத் திரட்டுகின்றனர் என்பதுதான் முக்கிய கேள்வி?இருக்கிற சீரழிந்த சமூகத்தைப் பாதுகாக்கவா?மாற்றி அமைக்கவா? என்பதை பொறுத்துதான் இவர்களது சிந்தாந்தங்கள் தீர்மானிக்கப் படுகின்றன.

   வரலாறு நெடுகிலும் காலத்தின் தேவைக்கேற்ப இளைஞர்கள் தங்களது தியாகத் தடத்தை ஆழப் பதித்துள்ளனர். அதிலும் காலச் சக்கரத்தை முன்னோக்கி செலுத்திட்ட ஏராளமான  இளைஞர் அமைப்புகள் உலகம் முழுவதும் செயல்பட்டது. மாற்றத்தின் மகுடமாகத் திகழ்ந்த ஐரோப்பா தொடங்கி அண்மைக்கால ஆப்பிரிக்கா வரை இளைஞர் இயக்கம் எழுச்சியுடன் இயங்கியுள்ளது. 18ம்நூற்றாண்டு இறுதியிலும் 19-ம்நூற்றாண்டு துவக்கத்திலும்இளைஞர்களின்எழுச்சியும்இளைஞர்களுக்கான அமைப்புகளும் உருவாகினாலும் 14ஆம்  நுற்றாண்டிலேயே சிறு சிறு குழுக்கள் செயல்படத்  துவங்கின. ஒவ்வொருநாட்டின்,  பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்ப இந்த இயக்கங்கள் வெளிப்பட்டன. இவ்வியக்கங்கள் தோன்றுவதற்கான சமூக அடித்தளம் என்ன என்பதைக் காண்போம்.
                                                                                                                                         தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...