Pages

செவ்வாய், மார்ச் 08, 2011

பொதுத்தேர்தல் ! பொதுத்தேர்வு ! பொதுப்புத்தி !

                                                       ஏ.பாக்கியம்
                 என்ன..சார் பரிட்சை நடப்பது கூடவா இந்த தேர்தல் கமிஷனுக்கு தெரியாது? என்ற பொதுஜன பிரஜையின் புலம்பல்  காதில் விழுந்தது. உடனே எனது பொதுபுத்தியில் பொறிதட்டிவிட்டது. எங்கோ, ஏதோ வாசித்தது நினைவுக்கு வந்தது. தேடியபோது ஓராண்டுக்குமுன் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் வலை தளத்தில்  அவர் எழுதியவற்றில் கீழ்க்கண்ட  கருத்துக்கள் தென்பட்டது.
                 
           பரிட்சை நாள் அன்று காலை  அலுவலகம் செல்கின்றவர்கள், வணிகர்கள்  மற்றும் பிற தொழில் செய்கின்றவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தங்கள் பணிக்கு செல்லும்படியாக அரசு கேட்டுக் கொள்கிறது. அதற்கான அனுமதியை  எல்லா நிறுவனங்களும் அளித்திருக்கின்றன.  முக்கிய காரணம் பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து ரயில் சாலை போன்ற இடங்களில் நெருக்கடி இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே.
                 பரிட்சை நாள் அன்று கூடுதலான ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கபடுகின்றன. பரிட்சை நடைபெறும் வளாகத்தில் யாரும் செண்ட் அடித்துக் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கபடுகிறது. காரணம் அது கவன சிதைவை உண்டுபண்ணக்கூடும். பரிட்சைக்கு தயார் ஆகும் மாணவர்களின் பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்தவதற்கு வசதியாக மாலை முன்னதாகவே அவர்கள் வேலையிலிருந்து திரும்ப அனுமதி தரப்படுகிறது. பரிட்சைக்கு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில்  பெற்றோர்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொண்டு இரவில் தாமதமாக வீடு திரும்ப கூடாது என்பதற்காக இரவு பத்து மணிக்கு எல்லா விழாக்களும் நிறைவு செய்யப்படுகின்றன.              
             
                பரிட்சை நாளில் ஆங்கில தேர்வு எழுதும் மாணவர்கள் உச்சரிப்பு கேட்டு பதில் எழுத நேரிடும் என்பதால் அதற்கு இடையூறு செய்ய கூடாது என்று பரிட்சை நடக்கும் நேரத்தில் விமான சேவைகள்  ரத்து செய்யப்படுகின்றன. விமானம் பறக்கும் ஒசை மாணவர்களின் கவனத்தை சிதற அடிக்கும் என்பதால் விமான சேவை நேரம் அன்று மட்டும் மாற்றப்படுகிறது. தரையிறங்க உள்ள விமானங்கள் கூட தாமதமாகவே அனுமதிக்கபடுகின்றன. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி பரிட்சைக்கு செல்லும் மாணவர்களை பொதுமக்கள் வாழ்த்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன. பரிட்சை நடைபெறும் நேரத்தில் இந்த ஆண்டு பரிட்சை எப்படியிருக்கிறது. இது சென்ற ஆண்டுகளில் இருந்து எந்த அளவு மாறுபட்டிருக்கிறது. எப்படி மாணவர்கள் இதை எதிர் கொள்கிறார்கள் என்பதை முக்கிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது.
                   
             அன்று மின்சார ரயில்கள் கூட அவசியமில்லாமல் ஒலிப்பானை உபயோகபடுத்த கூடாது. தேர்வு நடைபெறும் வளாகங்களின் அருகாமையில் எவரும் எவ்விதமான ஒலிப்பானையும் ஒரு போதும் பயன்படுத்த கூடாது. ஸ்டாக் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வணிக மையங்கள் கூட  அன்று ஒரு மணி நேரம் தாமதமாகவே இயங்க துவங்குகின்றன. நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கபடுகிறது. அதனால் மற்ற மாணவர்கள் வந்து போகும் இடையூறு தவிர்க்கபடுகிறது. தேர்வு நடைபெற்ற நாளின் மாலையில் அன்று கேட்கபட்ட கேள்விகளும் அதற்கான சரியான பதிலையும் நாளிதழ்கள் பிரசுரம் செய்கின்றன. இதனால் தான் எவ்வாறு தேர்வு எழுதினோம் என்பதை மாணவன் உடனே தெரிந்து கொள்ள முடிகிறது.      
           
            தேர்விற்கு ஒருவாரம் முன்னதாகவே மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் குறிப்புகள் மற்றும் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான சீரான உணவு முறை பற்றிய தகவல்களை எல்லா ஊடகங்களும் வாறி வழங்குகின்றன. வீடு தேடி வந்து உளவியல் நல ஆலோசகர்கள் நம்பிக்கை பயிற்சிகளும் தருகிறார்கள்.  மின்சார துறை இதற்காக தனது 4000 பணியாளர்களை சிறப்பு பணி என கருதி மின்சார தடையே இல்லாமல் பரிட்சை நடைபெற உதவி செய்கிறது
 
          பரிட்சைக்கு மாணவர்கள் தயார் ஆகும் நாட்களில் வீட்டில் பெற்றோர்கள் ஹெட்போன் போட்டுக் கொண்டு மட்டுமே தொலைக்காட்சி பார்க்கும்படியாக தொலைக்காட்சிகளே வற்புறுத்துகின்றன. தாமதமாகவோ அல்லது நுழைவு தேர்விற்கான அடையாள அட்டையை மறந்துவிட்டோ வரும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு என்றே தனியான போலீஸ்படை அமைக்கபட்டு உதவி செய்கிறார்கள்.
   
    இவையெல்ம் எங்கு நடக்கிறது தமிழகத்திலா? இந்தியாவிலா? என்று கேட்பவர்களிடம் ஆம் என்று கூறினால்  பலர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பலரின் மூச்சு நின்றுவிட நான் காரணமாக இருக்கப்போவது இல்லை. இவை அனைத்தும் தென்கொரியாவில் கல்லுரி நுழைவுத்தேர்வை ஒட்டி அந்த நாடு கடைபிடிக்கின்ற விதிகளாகும். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற பரிட்சையை பற்றிய அக்கரையின் வெளிப்பாடுதான் மேற்கண்ட விதிமுறைகளாகும்.
    
           ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை ஐந்து மாநிலத்தின் தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டு ஆண்டுகள் படிப்பின் தலைவிதியை தீர்மானிக்ககூடிய தேர்வுகளை 16 லட்சம் மாணவர்கள் எழுதத்தொடங்கிவிட்டனர். மாணவர்களின் எதிர்காலம் பற்றியோ, கல்விப்பற்றியோ தேர்தல் ஆணையத்திற்கு சட்டரீதியாக கவலைப்படவேண்டும் என்ற்  அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பரிட்சைப்பற்றிய பொதுபுத்தியே   ஆணையத்திற்கு இப்படித்தான் உள்ளது என்று  வெட்டவெளிச்சமாக்கிவிட்டது இந்த அறிவிப்புகள். இந்த பொதுபுத்தி ஒன்றும் தேர்தல் ஆணையத்தின் தனிச்சொத்தல்ல.  தேசத்தை ஆண்ட மற்றும் ஆள்வோரின் பொதுப்புத்தியும் இதுவாகத்தான் உள்ளது.
    
                                  தமிழகத்தில் தற்போது மாணவர்களின் தேர்வை கருதி தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று கேட்காத அரசியல் கட்சிகளே இல்லை. இது வரவேற்கப்படக்கூடிய அக்கரைதான். அதே நேரத்தில் இந்த அக்கரை மற்ற ஆண்டுகளில் தேர்வு நடக்கிறபோதும் எழக்கூடிய இடையூறுகளைப் பற்றியும் இந்த அரசியல் இயக்கங்கள் அக்கரை கொள்ள வேண்டுமென்பதுதான நமது அவா. உலககோப்பை கிரிக்கெட் போட்டியை தேர்வு காலத்தில் நடத்தவேண்டாம் என்ற கோரிக்கையை பலரும் முன்வைத்தனர். ஆனால் ஆட்சியாளர்களோ இதைக்கண்டுகொள்ளவில்லை.  அரசியல் இயக்கங்களுக்கு அப்படி ஒரு விஷயம் நடப்பதாகவே தெரியவில்லை, அக்கரைப்படவில்லை. 
    
                       ஏற்கனவே நடைபெற்ற ஐ.பி.எல். விளையாட்டுப்போட்டியும்கூட இதே சர்ச்சைகளை சந்தித்தது. இங்கேயும் அந்த  பொதுப்புத்தி செயலற்றுபோனது என்பதைவிட எதிர்பதமாக செயல்பட்டிருக்கலாம். பரிட்சை எழுதும் மாணவர்களுக்கு வாக்குரிமை இல்லை. கிரிகெட் ரசிகர்களில் கணிசமானவர்களுக்கு வாக்குரிமை உள்ளது, நடத்துவோரிடம் வாக்குகளை வாங்கும் பசை உள்ளது என்ற வகையில் பொதுப்புத்தி நடத்துவோருக்கு ஆதரவாக வேலைசெய்து இருக்கலாம்.  
                 
                     மேற்கண்ட விஷயஙகளையொட்டியே சில சந்தேகங்கள் எழவாய்ப்புள்ளது. தேர்தல் தேதியை மாற்றக்கோருவது மாணவர்களின் மீது இருக்கிற அக்கறை மட்டுமா? அல்லது தயாரிப்புக்கு போதிய அவகாசம் இல்லை என்ற தேர்தல் கவலையா? என்பதுதான் அந்த சந்தேகம். தமிழக முதல்வர் கலைஞர் தேர்தலை தள்ளிவைத்திடவேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்னால் வாக்குகளை வாங்க அளித்து வந்த இலவசத்திட்டம் தடைபட்டுள்ளது என்ற கவலையே மேலோங்கியுள்ளது. இதைக்கூட செய்யவில்லை என்றால் கிடைக்கிறவாக்கும் கிடைக்காமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறார். 
                                      ஏப்ரல் 13 பீடைதேதி பீடை நாள் என்று ஒரு ஸ்தல பிரமுகர் அதை நிந்தித்த போது நமது பொது புத்திக்கு மேலும் ஒரு பொறிதட்டியது. தள்ளிவை  என்ற கோரிக்க்க்கு பின்னால் ஏன் இதுகூட இருக்க கூடாது என்று. நமது மாநிலத்தின் அரசியல் இயக்கம் அனைத்தும் அத்தன் முற்போக்கானதா? என்ன? நாள்களையும் கோள்களையும் பார்த்துதானே கொள்கை முடிவெடுக்கின்றனர். மஞ்சள் துண்டின் மகிமை பற்றி பேசக்கூடியவர்கள் தானே இவர்கள். எண்கள் மீது நம்பிக்கை மற்றும் வளர்பிறை தேய்பிறை பார்த்து தான் காரியம் முடிக்கும் தன்மைகள் இந்த பெரும் அரசியல் பாசறைகளிடம் காணப்படுவதுதானே. 
                             
                      யேசுநாதரின் கடைசிவிருந்து வெள்ளிக்கிழமை என்பதால் அவர்களுக்கு அது கெட்டநாள். பழங்குடி நார்வே மக்கள் மற்றும் ஜெர்மனி மக்கள் வழிபட்ட தெய்வத்த் அவர்கள் கிறிஸ்த்துவத்தில் இணைந்து விட்டபிறகு அதை  பேயாக கருத்தினர். அந்த பேய் வெள்ளிக்கிழமைதோறும் 13பேர்களுக்குவிருந்து  வைத்து ஒருவரை கொன்றுவிடும் என்ற முடநம்பிக்கையால் இந்த கிழமையையும் இந்த நாளையும் வெறுத்தனர். கிறிஸ்த்துவர்களுக்கு ஞாயிற்றுக்கிழம்போல் யூதர்களுக்கு சனிக்கிழமைபோல் பேய்களுக்கு வெள்ளிக்கிழமை ஓய்வுநாள் என்ற முடநம்பிக்கையும்  உள்ளது.  இப்படியான காரணங்கள் இவர்களுக்கு அப்பாற்பட்டவையா என்ன? இந்த அக்கறை தேர்தல் நேரத்தில் மட்டுமே வருகிறது என்றால் இந்த் மூடப்புத்தியும் ஏன் காரணமாக இருக்க கூடாது?
    
               தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் படைத்தது, அதில் தலையிட முடியாது என்பது வெளிப்படைக்கு உண்மைதான். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியும் தற்போது நடைபெறும் உலகக்கோப்பை போட்டி பற்றி வந்த கருத்துக்களுக்கும் அது சுதந்திரமான அமைப்பு, அதில் தலையிட முடியாது என்றே விளக்கம் கொடுக்கப்பட்டதை அனைவரும் அறிவர். இதுகூடவா தெரியாது என்று கேட்ட பொதுஜனத்தின் பொதுப்புத்தி இவர்களுக்கு உறைப்பதைவிட  சூதாட்டவெறியும் கிரிக்கெட் ரசிகனின் பாக்கெட் மனியும் மட்டுமே இந்த சுதந்திர அமைப்பு என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்துகிடக்கிறது
        
                தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று அறிவித்துவிட்ட தேர்தல் ஆணையம், கல்விநிலையம் அருகாமையில் பிரச்சாரம் கூடாது என பல ஆலோசனைகளை வாரி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையத்தின் பொதுப்புத்திக்கு மேலும் சவால் விடுவதாக உள்ளது. தேர்வுக்கு படிப்பவர்கள் வீடுகளிலிருந்துதான் படிப்பார்கள் என்பதும், கூச்சல் நிறைந்த பிரச்சாரங்கள் எங்கே நடக்கும் என்பதையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கும்வரை ஆளும் கட்சியால் பல இடங்களில் நலத்திட்டங்கள் என்று அறிவித்து பொருட்கள் வழங்கப்பட்டன.  இதற்காக தெருவெல்லாம் ஒலிப்பான்கள் அமைக்கப்பட்டது. பல இடங்களில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தும், வேண்டுகோள் விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது அக்கறைப்படும் ஆள்வோர்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கும்வரை பொதுப்புத்தி வேலை செய்யவில்லை. அவர்களின் காதுகளுக்கும் மாணவர்களின் குரல் கேட்கவில்லை. தேர்தல் ஆணையம் மற்றும் பெரும்  இயக்கத்தலைவர்களின் பொதுப்புத்தி இப்படி இருந்தால் பொதுஜனங்கன் சிலரின் பொதுப்புத்தியை கேள்விக்கு உள்ளாக்குவது கடினமான விஷயமல்லவா?
    
                   பல இடங்களில் மதம்சார்ந்த விழாக்களும், கேளிக்கை நிகழ்வுகளும், திருமணநிகழ்வுகளும் ஊரெல்லாம் அதிரும் வகையில் ஒலி எழுப்புகின்றனவாக இருக்கிறது. இவர்களிடம் தேர்வு காலங்கள் என்று சொன்னால் தெய்வவிரோதம் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.இங்கே பொதுப்புத்தியை மூட்டை கட்டி வைக்கவேண்டியுள்ளது.
                       
                     பேருந்து பயணங்களில் தனது அலைபேசியில் குத்துப்பாட்டை அலறவிட்டு, ஹெட்போனை பயன்படுத்தாமல் சகபயணிகளின் அமைதியை கெடுப்பதும்,  குட்டிததுக்கம் நுணிப்புல்  வாசிப்பைகூட கெடுத்துவிட், தான்மட்டும் குறட்டைவிட்டு துங்குபவரின்  பொதுபுத்திக்கும்  தேர்வுகாலத்தில் தேர்தல் நடத்துகிற பொதுபுத்திக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்?
                                 
                        படிக்கிற மற்றும் தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் என்னதான் ஒலி, சத்தம், கூச்சல் உன்னை சுற்றி இருந்தாலும், உனது கவனம் படிப்பில் இருக்கவேண்டும் என்று ஆசிரியாகள் உரக்க முழங்குவார்கள். சப்தங்களுக்கு இடையே படிக்கும் சிரமம் மாணவர்களுக்கு மட்டுமே தெரியும். குடும்பத்தில் கூட அம்மாவிற்கு மகாராணி தொடர் பார்க்காவிட்டால் துக்கம் வராது, அப்பாவிற்கு கிரிகெட் பார்க்கவில்லை என்றார் பொழுதுவிடியாது, பரிட்சை எழுதும் மாணவர்களின் உடன்பிறப்புகளுக்கோ எஸ்எஸ் மியூசிக் மற்றும் இந்திபாடல் அலைவரிசைகளை அலறவிடாமல் ஆர்வம் குறையாது, நாங்கள் எல்லாம் படித்துமுடித்துவிட்டோம், நீ இப்போது படிக்கிறாய்? அதைபோய்ப் பார் என்று கூறும் அளவிற்குதான் பெற்றோரின்  பொதுபுத்தி  உள்ளது.
                         
                           மதிப்பெண்கள் மட்டுமே எதிர்கால இடத்தை நிச்சயிக்கும் என்று சமூகம் மாறிவிட்டது. அல்லது பணம் கொழிக்கவேண்டும். இந்த சூழலில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் வீட்டில் பெற்றோர் பிள்ளைகள் உறவு பாசவலையை கடந்து  சிறைவார்டன், சிறைக்கைதி என்று உறவு ஆட்சிசெய்கிறது. இதற்கிடையில் மாணவர்கள் மன அழுத்தத்துடன், பதட்டத்துடன் படிக்கவேண்டும், சிறுபிழைகள், மறதிகள் என ஒவ்வொரு அசைவும் அவர்களை அவதிக்கு உள்ளாக்குகின்றன. விளைவுகள் விபரீதமாக மாறிவருகின்றது. இதற்கான சூழலை மாற்றவதற்கு நீண்டகாலமாகலாம். ஆனால் மாணவர்களின் தேர்தல் காலத்திற்கான சூழலை கணக்கிலெடுக்க தேவையான  பொதுப்புத்திக்கு  என்ன தேவை? நாட்டை வளர்ப்போம் என்று பேசுவதைவிடுத்து  முடிவெடுப்பவர்களிடம் பொதுபுத்தியை வளர்ப்போம் என்பதேஇன்றுபொருத்தமாகஇருக்கலாம்.                                                                        ஏ.பாக்கியம்                                                                                             

வெள்ளி, மார்ச் 04, 2011

உலக இளைஞர் எழுச்சிகளும்-இயக்கங்களும்


                                                                    
                
                                                                                           
                                                                                               வெளியீடு:
                                                                                   பாரதி புத்தகாலயம்
                                                                                 421, அண்ணாசாலை,
                                                                       தேனாம்பேட்டை, சென்னை-600018
                                                                      தொலைபேசி-04424332424-   04424332924
                                                                                 முதல்பதிப்பு. ஜனவரி-2010 


            1. இளமை பற்றிய இருவேறு சித்தாந்தங்கள
          
             ஒரு நாட்டின் எதிர்காலம் நிகழ்கால இளைஞர்களின் வாழ்நிலையைப்  பொறுத்தே அமையும் என்பது அறிஞர்களின் கூற்று. இயற்கைவளங்களி லேயே உயர்ந்த வளம்  மனித வளம் ஆகும்.  இதைப்போற்றும்வகையிலேதான்


அரிது அரிது மானிடராதல் அரிது
மானிட ராயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது 

 எனஅவ்வையார் மனிதவளத்தின் அவசியத்தைப் பாடியுள்ளார்.மானிடர்களில்  இளைஞர்களை அதிகமாகப் பெற்றுள்ள சமூகமே மிகவும் சக்திவாய்ந்தது. கட்டுடலும்,  கவர்ச்சி உடையும்,  மிடுக்கு நடையும் அரும்பு மீசையும்,  குறும்புப் பார்வையும்தான் இளமை என்று புறத்தோற்றத்தை மட்டுமே இளமைக்கு இலக்கணமாக் கியுள்ளனர் சில பண்டிதர்கள். ஆனால் இளமை என்பது தீவிரமான சமூகமயமாக்கல் என்று பல சமூக விஞ்ஞானிகள் வரையறுத்து உள்ளனர்.  இளமை என்பது ஆற்றலின் தோற்றுவாயாகவும், புதுமையின் புகலிடமாகவும், மாற்றத்தின் மகுடமாகவும் இருந்துள்ளதை வரலாறு  நமக்கு  எடுத்துரைத்துள்ளது.

   எது இளமை? அதன் எல்லை என்ன? வயது என்ன? என்பதை  ஒவ்வொரு நாடும் தனது சமூக வளர்ச்சிப் போக்குகளுக்கு ஏற்ற வகையில் நிச்சயித்துள்ளது.  14 வயது முதல் 40 வயது வரை நாட்டுக்கு நாடு வேறுபட்ட வரையறை உள்ளது. பெரும்பாலான சமூக விஞ்ஞானிகள் இளமையின் எல்லை 35 வயது வரை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

   குழந்தைகளின் வளர்ச்சிப்போக்கில் 6 வயதுக்குள் பெற்றோர் களைப்பற்றி அறிந்து கொள்வர். 13 வயதுக்குள் சில குறிப்பான விஷயங்களை அறிந்து கொள்வர். 19 வயதுவரை சீரான வளர்ச்சி அடைவார்கள். 20 வயதுக்குமேல் அரசியல் மற்றும் சமூகங்களைப் பற்றிய கருத்துக்களையும் வடிவங்களையும் பெறுவார்கள். 30 வயதில் சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளையும்,  எதார்த்தங் களையும்,  முழுமையாகப் புரிந்து கொள்ளுதலும் முடிவெடுக்கும் திறனை முழுமையாகப் பெறுதலும் நடைபெறுகிறது. 30 முதல் 35 வயதுக்குள் குறிப்பிட்ட தளத்தில் நிலைபெறும் பருவமாகும்.அதாவது படைப்பாளியாக,  அறிவுவிஷயமாக,  விஞ்ஞானியாக , எழுத்தா ளனாக,  இன்னும் பல தளத்தில்  தடம் பதிக்கும் பருவமாக உள்ளது என்று சமூக விஞ்ஞானிகள் வரையறுத்துள்ளனர்.

தனித்துவத்தின் சிறப்பம்சம்?

   பாலின வேறுபாட்டாலும் ஆணாதிக்கச் சமூக அடக்குமுறை களாலும் பெண்களுக்குத் தனித்துவம் கிடைக்கிறது. கல்விச்சாலைகளில் குவிந்துள்ளதாலும் அதற்குரிய தேவைகள் இருப்பதாலும் மாணவர்களுக்கு தனித்துவம் உள்ளது. தொழிற்சாலைகளில்  குவிக்கப்பட்டுள்ளதாலும் சுரண்டலுக்கு உள்ளாவதாலும் தொழிலாளர்களுக்கு தனித்துவம் தேவைப்படுகின்றது. ஆனால் இதுபோன்ற ஒரு விஷேச சூழல் இல்லாமல்,  ஆண், பெண், மேல்தட்டு வர்க்கம் உழைப்பாளி வர்க்கம் என சமூகத்தின் அனைத்துப் பிரிவிலும் இடம் பெற்றுள்ள விரவிக்கிடக்கக் கூடிய இளைஞர்கள் ஏன் தனி முக்கியத்துவம் பெறுகின்றனர்?

   மனித வாழ்வில் ஆற்றல் நிறைந்த பகுதியாக இருப்பதாலும்,  மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாலும்,  வாழ்வின் அடிப்படைத் தேவைகளைத் தேடி நிலைநிறுத்துவதற்கான கட்டாயமான பருவத்தில் இருப்பதாலும் இளைஞர்கள் தனித்துவமும் முக்கியத்துவமும் பெறுகின்றனர் என்று சமூக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முடிவுக்கு வந்துள்ளனர்.

     இசைத்துறை,  கலைத்துறை,   விளையாட்டுத்துறை,  விஞ்ஞானத் துறை என பல துறைகளில் புதிய புதிய சாதனைகள் நிகழ்த்துவதும்,  அந்தச்சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை நிகழ்த்துவதும் தனிநபர்களின் முயற்சியும்.  ஆற்றலையும் அதிகமாக சார்ந்திருப்பதாகும்.  இதில் கூட்டு முயற்சி பின்புலமாகவும்.  தனிநபர் உழைப்பு மையமாகவும் இருக்கும். வரலாற்று ரீதியாக விடுதலைப் போராட்டத்திலும், தேசிய அரசுகள் உருவாவதிலும்,  சமூகசீர்திருத்த இயக்கங்களிலும்,  சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும், அரசியல் மாற்றங்களிலும், சமூக மாற்றப் போராட்டங்களிலும்,  இளைஞர்கள் தங்களது தடத்தை ஆழப்பதித்து வந்துள்ளனர். இங்கே தனிநபர்கள் விளிம்பிலும். கூட்டுமுயற்சி. அமைப்பு ஆகியவை மையமாகவும் இருக்கும். 

  அரசியலா ? மகிழ்ச்சியா ?

  புதுமையையும் மாற்றத்தையும் விரும்பிய இளைஞர்கள். தங்களது தேவைகளை நிறைவேற்றாத அரசுக்கு எதிராகவும்,  அழுகி நாற்றமெடுக்கும்  சமூகத்திற்கு எதிராகவும்,  அமைப்பு ரீதியில் அணிதிரண்டனர்,  எழுச்சி பெற்றனர். இந்த அமைப்புகளாலும். எழுச்சிகளாலும் நமக்கு மரணஅடிதான் என உணர்ந்த ஆளும் வர்க்கம் இளைஞர்களை கருத்துரீதியாகபிரித்தது. தடிகொண்டும் துப்பாக்கி ரவை கொண்டும் அடக்கியது.  இளைஞர்கள் அரசியல் சமூக போராட்டங்களில் ஈடுபடுகின்றபோது அவ்வியக்கங்களைத் தோல்வி அடையச் செய்வதற்காக இளைஞர்களை அரசியலிலிருந்து பிரித்திடும் பணியை ஆளும் வர்க்கம் செய்தது. பிரபலமான பிரெஞ்சு நாட்டு சமூகவியலாளர்கள் கார்மல் கம்லெரி,  மற்றும்  பிளவுட்டாப்பியா ஆகிய இருவரும் இளைஞர்களைப் பார்த்து அரசியல் வேண்டுமா? மகிழ்ச்சி வேண்டுமா? என்று கேட்டனர்.

  மகிழ்ச்சி தேவையானால் அரசியலைத் துறக்க வேண்டும்,  அரசியல் வேண்டுமானால் மகிழ்ச்சியைத் துறக்க வேண்டும் என்று ஆளும் வர்க்க கருத்துக்கு ஆதரவு திரட்டினர்.  இதையே நமது நாட்டில் இளைஞர்களைப் பார்த்து உனக்கேன் அரசியல் வேலையைத்தேடு, மாணவர்களைப் பார்த்து உனக்கேன் அரசியல் படிப்பைப்பார், பெண்களுக்கு ஏன் அரசியல் குடும்பத்தைப்பாருங்கள். தொழிலாளர்களுக்கு ஏன் அரசியல் வேலையைப்பாருங்கள் என்ற கருத்தைப் போதிப்பது வாடிக்கையாகிவிட்டது
அரசியல்சார்பற்ற அமைப்பு என்று அறிவிப்பதில் அறிவாளித்தனமும் நடுநிலையும் இருப்பதாக மக்களை நம்பவைத்து அவர்களை வாக்கு இயந்திரங்களாகவும் சுரண்டும் அரசியல் கட்சிகளின் அடியாட்களாக மட்டுமே தக்கவைக்க முயல்கின்றனர்.அரசியல் உணர்வின் எல்லையைச் சுருக்கி அறியாமையின் எல்லையை விரிவுபடுத்துகின்றனர்.

       அரசியலற்ற இந்த கருத்தாக்கத்தின் விளைவுகள் அமெரிக்காவில் பரவலாக வெளிப்பட்டன.  1971-ம் ஆண்டு வியட்நாம் யுத்த எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்குப் பிறகு அமெரிக்க இளைஞர்களின் அரசியல் நடவடிக்கைகள்,  உணர்வுகள்  வெகுவாகக் குறைந்துள்ளன.

அமெரிக்க இளைஞர்களுக்கு சமாதானம்,  மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சனைகள்,  ஆயுத ஒழிப்பு ஆகியவற்றின் பாலபாடம்கூட தெரியாது. இதையெல்லாம் தெரிந்துகொள்வது இளைஞர்களுக்குத் தேவையற்றது எனபோதிக்கின்றனர். எனவே அமெரிக்க இளைஞர்கள்அரசியலில் பூஜ்யமாக உள்ளனர். என்று அமெரிக்க வரலாற்று அறிஞர் ஆர். பார்ஸ்ட்னர் கூறுகின்றார். தற்போது இந்த அரசியலற்ற போக்கு புதிய செயல் முறையில் வெளிப்பட்டுக்கொண்டுள்ளது. அரசுசாரா நிறுவனங்களும், தனனார்வ நிறுவனங்களும் இக்கருத்தை பலமாக பரப்பி வருகின்றனர். எங்கே அரசுசாரா நிறுவனங்கள் வலுவாகத் தங்களை நிறுவிக்கொண்டனவோ அங்கே தீவிர சமூக இயக்கங்கள் பின்னடைந்துள்ளன என்று ஜேம்ஸ் பெட்ராஸ் தனது ஆய்வில் வெளிப்படுத்துகின்றார்.

வயதா? வாழ்க்கையா?

   உலகின் பலநாடுகளில் உள்ள இளைஞர்கள் தங்களின் அடிப்படையான பிரச்சனைகளுக்காகவும் வாழ்க்கைப் பிரச்சனைக் காகவும் அணிதிரண்டு போராடினார்கள். இப்போராட்டங்கள் பல இடங்களில் வன்முறைகளாகவும் கலகங்களாகவும் மாறின. இப்போராட்டங்களைக் கண்டுகொள்ள வேண்டிய  தேவையமில்லை, கவலைப்பட வேண்டிய அவசியமுமில்லை என்று அமெரிக்க சமூக விஞ்ஞானி எஸ். பீஃவர் எடுத்துரைத்தார். காரணம் 21-ம் வயதிலே கோஷம்போடுவார்கள்,   22-ம் வயதிலே ஓய்ந்துவிடுவார்கள்.  இது வாழ்க்கைப்போராட்டமல்ல வயதுக்கோளாறு என்று கூறினார். 

  ஆனால் சரித்திரம் இவரின் இக்கருத்தை கல்லறைக்கு அனுப்பியது. இளைஞர்களின் எழுச்சிகள் 1960-ம் ஆண்டுகளுக்குப்பிறகு உலகளாவிய முறையில் உக்கிரமடைந்தன.இதைக் கண்டு ஆளும் வர்க்கம் அஞ்சியது.  இளைஞர்கள் சமுதாயத்தில் சிறுபான்மையினர் அவர்களது சுயநலம் காரணமாக இதரபகுதியினரை தாக்கி தங்களது மேலாதிக்கத்தை சமுதாயத்தில் நிலைநிறுத்த முயலுகின்றனர் என்ற முரட்டு சித்தாந்தத்தை பேராசிரியர் எம்.ஜெரால்டு முன்மொழிந்தார். இளைஞர்கள் கலகக்கார சிறுபான்மையினர்.   எனவே இவர்களது போராட்டத்தை அடக்குவதில் எவ்விதத் தவறும் இல்லை என்று வாதிட்டு. அடக்கு முறை அஸ்திவாரத்தை நியாயப்படுத்திக் கட்டவிழ்த்துவிட்டனர்.

தனிவர்க்கமா ?

     வர்க்க சமுதாயத்தில் வர்க்கப்போராட்டங்கள் தீவிரமடைந்தது. இளைஞர்கள் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக அணிதிரள்வது அதிகரித்தது. ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் பரந்த அளவில் உழைப்பாளி மக்கள் அணிதிரள்வதைத் தடுக்க வேண்டாமா? அதற்கு ஆளும் வர்க்க ஆயுதம் மட்டும் போதுமா? போதாது. எனவே இவற்றைத் தடுக்கும் வகையில் புதிய புதிய சித்தாந்தங்களை சிந்தைக்குள் ஏற்றினர்.  இளைஞர்கள் அனைத்து  மக்கள்பிரிவிலும் இருப்பதால் அவர்கள் வர்க்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள்,  தனிவர்க்கம் என்று வாதிட்டனர். காலப்போக்கில் இளைஞர்கள் அணிதிரள்வதும் அரசியலில் பங்கெடுப்பதும் அதிகமானதே தவிர குறையவில்லை. குறிப்பாக 1968-ல் பிரெஞ்சு மாணவர்கள் எழுச்சி நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியது கண்டு பயம் கொண்டனர்.  இளைஞர்களை தனிவர்க்கம் என்று முத்திரை குத்தி உழைப்பாளி மக்களிடமிருந்து பிரித்திடும் சூழ்ச்சியினைச் செய்தனர். சில இளைஞர் தலைவர்களை நீங்கள் இளைஞர் வர்க்கத்தின் தலைவர்கள் எனப் புகழாரம் சூட்டி பலரை புதைகுழிக்கே அனுப்பிவிட்டனர். எனினும் அவர்களின் சித்தாந்தங்கள்தான் சிதைந்ததே தவிர இளைஞர்களின் ஒற்றுமை வளர்ந்தது. எழுச்சிகள் தொடர்ந்தது. தத்துவம் வயதிற்கு அல்ல வர்க்கத்திற்குதான் என்பதை வரலாறு துல்லியமாகவே நிரூபித்துள்ளது.

புதிய பார்வை?

  ஒரு தத்துவம் இளமையை,இளமையின் ஆற்றலை தங்களது சுரண்டலுக்காகவும் சுரண்டல் சமுதாயத்தைப் பாதுகாத்திடவும் பயன்படுத்தியது. இளையசக்தி சுரண்டல் அமைப்புக்கு எதிராக அணிதிரண்டு களத்தில் இறங்கியபோது, அவர்களை ஆயுதம் கொண்டு  அடக்கியது மட்டுமல்ல,  பின்னுக்குத்தள்ளும் சித்தாந்தங்களையும் வலுவாகப் பயன்படுத்தியது. மறுபுறம் மற்றொரு தத்துவம் சுரண்டலின் கொடுமையை ஒழித்திட நினைத்த புரட்சியாளர்கள் இளைஞர்களைப் பற்றி புதிய பார்வையையும், புரிதலையும் உருவாக்கினார்கள்.  காரல் மார்க்ஸ்,  எங்கெல்ஸ் உட்பட மார்க்சிய அறிஞர்கள் 

       இளைஞர்களை சமூகப் பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக,  வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட பொதுவானவர்களாகப் பார்க்கக்கூடாது என்றும் அவர்களை வர்க்கக் கட்டமைப்புக் கொண்ட சமூகத்தின் ஒரு பகுதியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று உறுதியுடன் எடுத்துரைத்தார்கள். 1844-ம் ஆண்டில் பாட்டாளி வர்க்கத்தின் வளரும் தலைமுறை என்ற கட்டுரையில் காரல் மாக்ஸ் கீழ்கண்டவாறு எழுதினார். உழைக்கும் வர்க்கத்தின்   எதிர்காலம்,  மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் அனைத்தும்,  வளரும் உழைக்கும் தலைமுறையைச் சார்ந்துதான் உள்ளது என்பதை, ஞானம் பெற்ற தொழிலாளி வர்க்கம் புரிந்தே வைத்திருக்கிறது என்றார்.  

  1848ஆம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் நடைபெற்ற தொழிலாளர்கள் எழுச்சிக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவாகச்  செயல்பட்டதையும்,  1865-66ஆம்  ஆண்டுகளில்  பிரான்சில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவாக இருந்ததையும் சுட்டிக்காட்டி வரவேற்றுள்ளார்.

   லெனின் சகாப்தத்தில் புதிய நிலைமைகள் தோன்றினாலும் மேற்கண்ட கருத்துக்களையே முன்னெடுத்துச் சென்றார். தொடக்கத்தில் சில சமூக ஜனநாயகக் கட்சிகளும்,  தொழிற்சங்கங்களும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் அமைப்புகளுக்கு உதவிசெய்ய மறுத்தனர்.  நமது பிரதான கடமை இளைஞர்களை பயிற்றுவிப்பதுதான். அவர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டு
வதல்ல என்று வலுவாக வாதிட்டு முட்டுக்கட்டையை ஏற்படுத்தினர். அரசியல் அரங்கத்தில் போராட்டம் என்பது இளைஞர்களுக்கு இல்லை என்று சீர்திருத்தவாதிகள் வாதிட்டனர். இன்றைக்கும் இக்கருத்துக்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.

    இக்கருத்துக்களிலிருந்து மாறுபட்டமுறையில் லெனின்,  இளம் போராட்ட வீரர்களை ஸ்தாபன ரீதியாக ஒன்றுபடுத்துவதற்கும்,  பாட்டாளி வர்க்கத்தின் பொதுப் போராட்டத்தில் இளைஞர்களின் பங்கை அதிகரிக்கவும் தெளிவான இலக்குகளை நிர்ணயித்தார்.

   சமூக அரசியல் நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடுவது இயல்பானது வரவேற்கத்தக்கது என்றார் லெனின். இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பது முட்டாள்தனமானது போலித்தனமானது என்று லெனின் உறுதியாகச்சாடினார். இளைஞர்கள் கூர்மைபடுத்தப்பட்டு இருக்கின்ற ஆயுதம்.  அவர்களை யார் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றார்.

  இளைஞர்களைப்பற்றி பயப்பட வேண்டாம். போராட்டம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும். நமது முன்னோர்களைவிட மாறுபட்ட முறையில்,  மாறுபட்டவடிவில்மாறுபட்டசூழலில்சோஷலிசத்தைமுன்னெடுத்துச்செல்வார்கள் என்று  நம்பிக்கையுடன்இளைஞர்களையும், இளைஞர் அமைப்புகளையும் அணுகி அணிதிரட்டினார் லெனின்.

      இளைஞர்களை இன்று அமைப்புரீதியாக அணிதிரட்டாத சமூகப் பிரிவுகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைவரும் இளைஞர்களை அணிதிரட்டுகின்றனர். மதம்,  சாதி,  இனக்குழு,  மொழி,  அரசியல் கட்சிகள்,  ரசிகர் அமைப்புக்கள் என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவர்கள் யாருடைய நலனுக்காகத் திரட்டுகின்றனர் என்பதுதான் முக்கிய கேள்வி?இருக்கிற சீரழிந்த சமூகத்தைப் பாதுகாக்கவா?மாற்றி அமைக்கவா? என்பதை பொறுத்துதான் இவர்களது சிந்தாந்தங்கள் தீர்மானிக்கப் படுகின்றன.

   வரலாறு நெடுகிலும் காலத்தின் தேவைக்கேற்ப இளைஞர்கள் தங்களது தியாகத் தடத்தை ஆழப் பதித்துள்ளனர். அதிலும் காலச் சக்கரத்தை முன்னோக்கி செலுத்திட்ட ஏராளமான  இளைஞர் அமைப்புகள் உலகம் முழுவதும் செயல்பட்டது. மாற்றத்தின் மகுடமாகத் திகழ்ந்த ஐரோப்பா தொடங்கி அண்மைக்கால ஆப்பிரிக்கா வரை இளைஞர் இயக்கம் எழுச்சியுடன் இயங்கியுள்ளது. 18ம்நூற்றாண்டு இறுதியிலும் 19-ம்நூற்றாண்டு துவக்கத்திலும்இளைஞர்களின்எழுச்சியும்இளைஞர்களுக்கான அமைப்புகளும் உருவாகினாலும் 14ஆம்  நுற்றாண்டிலேயே சிறு சிறு குழுக்கள் செயல்படத்  துவங்கின. ஒவ்வொருநாட்டின்,  பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்ப இந்த இயக்கங்கள் வெளிப்பட்டன. இவ்வியக்கங்கள் தோன்றுவதற்கான சமூக அடித்தளம் என்ன என்பதைக் காண்போம்.
                                                                                                                                         தொடரும்

புதன், மார்ச் 02, 2011

உணவுச்சட்டம்:பம்மாத்து பரிந்துரைகளும் பாசாங்கு மறுப்புரையும் !


                                      ஏ.பாக்கியம்             
(பிப்ரவரி மாத தமிழ் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்தது)

         உலகமக்கள்தொகை1970ம்ஆண்டுகளில்இருந்ததைவிடஇரட்டிப்பாகிஉள்ளது.ஆண்டுதோறும் 8கோடி பேர்கள் இணைகிறார்கள். இன்று இரவு உலகின்சாப்பாட்டுமேசையில்219000வாய்கள்நம்முடன்இணைவார்கள்.அவர்களில்பெரும்பாலோர் காலியானதட்டுக்களால் வரவேற்கப்படுவார்கள்.நாளை மேலும் 219000 வாய்கள் நம்முடன் இணையும்.இந்த வளர்ச்சி  விவசாயிகளின் திறமைக்கும் நிலம் மற்றும் நீராதாரத்திற்கும் கடும் சுமையாக அமையும்.
  பொருளாதார செயல்கள் மற்றும் மனித செயல்பாட்டின் காரணமாக மீளமுடியாத அளவிற்கு ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும் உணவுநெருக்கடியை உற்பத்திசெய்துள்ளது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.எது எப்படி இருந்தாலும் மனிதகுலம் இந்த  நெருக்கடியை துரிதமாக சந்தித்து தீர வேண்டும்.இதை விவாதிப்பதிலேயே பல ஆண்டுகள் வீணாகிவிட்டது. அதிக நச்சுவாயுக்களை வெளியிடும் அமெரிக்கா உலமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க மறுக்கிறது.அவர்கள் முன்வைக்கிற தீர்வுகள் அனைத்தும் பணக்காரர்களையும், வளர்ந்த நாடுகளை சார்ந்துமே இருக்கிறது.
    கோதுமை, சோயாபீன்ஸ், சோளம்,அரிசி,தானியங்கள், பருப்பு வகைகள் தான் உலக சத்துணவின் அடித்தளமாகும், இவை பருவநிலை மாற்றத்தால் கடுமையான அளவு பாதித்துள்ளது. சேமிப்பை மீண்டும் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு குறைந்து வருவது உலகில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.பலநாடுகளில் பிரச்சனைகளை தீவிரமாக்கி நிலையற்ற தன்மையை ஏற்படுததி உள்ளது. 80க்கும் மேற்பட்ட மூன்றாம் உலக நாடுகள்  பட்டினி சாவை எதிர்நோக்கி உள்ளது.2008-விட 2011ம் ஆண்டு உலகம் கடும் உணவு நெருக்கடியை சந்திக்கும் என்று பன்னாட்டு அமைப்புகள் 
தெரிவித்துள்ளது.          
                                                         ( பிடல் காஸ்ட்ரோ-கிரான்மா, ஜன.19,31-2011)



உணவு பாதுகாப்பு பற்றி பேசும் இந்தி ஆட்சியாளகள் மேற்கண்ட அம்சங்கள்ளை கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் மத்தியஅரசு அனைவருக்கும் உணவுகிடைக்கும்வகையில்உணவுப்பாதுகாப்புச்சட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல்வாக்குறுதியை கொடுத்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் வரவே, அரசு மற்றும் அரசுசாரா நிபுணர்களைக்கொண்டு உணவு பாதுகாப்புச்சட்டம் உருவாக்க ஆலோசனை வழங்கிட தேசிய ஆலோசனைக்குழுவை சோனியா காந்தி தலைமையில் அமைத்தது.
  இக்குழுக்கூடி ஏற்கனவே ஒரு ஆலோசனையை கொடுத்தது. அந்த ஆலோசனைக்கு  பரவலாக எதிர்ப்புகள் வரவே, மீண்டும் ஆறு சுற்றுக்குமேல் விவாதித்து, கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். இந்த பரிந்துரைகள் உணவு பாதுகாப்பிற்கா?அல்லது கொடுத்த வாக்குறுதிகளை ஒப்பேத்துவதற்காக என்பது புரிபடவில்லை!
  நாட்டு மக்களை முன்னுரிமைப்பிரிவு, பொதுப்பிரிவுமற்றும் விலக்கல்(நுஒஉடரனநன) என்று பிரிதுள்ளது. இந்த விலக்கல் பிரிவில் கிராம புறத்தில் உள்ள பத்துசதம் மக்களும்,  நகர்புறங்களில் உள்ள 50 சதம் மக்களும் அடங்குவர். அதாவது மொத்தம் 25 சதம் மக்கள்.  மீதியுள்ள 75 சதம் மக்களை முன்னுரிமை, பொது என்று பிரித்து  அவர்களுக்கு உணவு பாதுகாப்பை சட்டப்படி உத்திரவாதப்படுத்தலாம் என்று பரிந்து ரைக்கப் பட்டுள்ளது.
   அதாவது 2011-12ல் முன்னுரிமை பிரிவில் கிராமப்புறத்தில் உள்ள 46 சதம் மக்களையும், நகர்புறத்தில் 28 சதம் மக்களையும் குறிவைத்து  அவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி ரூ.3/- க்கும், கோதுமை ரூ.2/- க்கும்  தினைவகைகள் (கேழ்வரகு/கம்பு) ரூ.1/-க்கும் கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை கூறியுள்ளது. பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கு கிராமப்புறத்தில் 44 சதம் மக்களுக்கும், நகர்புறத்தில் 22 சதம் மக்களுக்கும் மாதம் 20 கிலோ அரிசியை அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையில் (அளயீ) 50 சதத்திற்கு மிகாமல் கொடுக்கவேண்டும், என்று கூறியுள்ளனர். மேற்கண்டவற்றை 2011-12 மற்றும் 2013-14 ல்  நிறைவேற்றிட வேண்டும் என கால அளவை பரிந்துரைத்துள்ளது. இதற்காக 55.59 மில்லியன்  டன் உணவு தானியங்களும் 79931 கோடி மானியமும் தேவைப்படும் என்று தேசிய ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது.  இந்த பரிந்துரை களைத்தான் பிரதமர் நியமித்த நிபுணர்குழு இது சாத்தியமில்லை என்று மறுத்துள்ளது. முதலில் இந்த ஆலோசனைகள் பற்றிய விஷயங்களை காண்போம்.

   உரிமையா?வாக்குறுதியா?
     முதலில்,  அனைவருக்கும் உணவு சட்டப்படியானதாக மாற்ற வேண்டும் என்பதை இந்த பரிந்துரைகள் கவனத்தில்கொள்ளவில்லை. அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு, விரும்பும் வகையில், பாதுகாப்பான முறையில், சத்துநிறைந்த, சுறுசுறுப்பும், நலமும் நிறைந்த, வாழ்வு நடத்த தேவையான உணவை அளிப்பதுதான் உணவு பாதுகாப்பாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை உணவுபாதுகாப்பு பற்றி விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி அரசியல் சட்ட பிரிவு 21-ல் உள்ள வாழ்வதற்கான உரிமை  என்பது  உயிருடன் வாழ்வது மட்டுமல்ல சுயமரியா தையுடன் வாழ்வது என்பதும், அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவைக ளுடன் வாழ்வது என்பதுதான் வாழ்வதற்கான உரிமைஎன்பதற்கு அர்த்தம் என்று விளக்கமும், தீர்ப்பும் அளித்துள்ளார். மேற்கண்ட வற்றை அப்படியே  அமலாக்கவேண்டும் என்று நாம் ஆசைப்பட வில்லை. இதில் அடிப்படையாக இருக்கிற பட்டினிச்சாவை தடுக்ககும், உணவை அனைவருக்கம் வழங்கிட பரிந்துரைக்கவேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள். இதைவிடுத்து, மக்களை கூறுபோட்டு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான் உணவுப்பாதுகாப்பு என்பது இச்சட்டத்தின் நோக்கத்தை  அடிப்படையையே தகர்ப்பதாகும். நீர்த்துப்போகச்செய்யும். இந்தியாவில் மட்டுமா இந்தப்பிரச்சனை ? இல்லை. ஏற்கனவே 24 நாடுகளுக்குமேல் இந்த உணவு பாகாப்பை அடிப்படை உரிமையாக்கியுள்ளனர். ஏன் அரசியல் சட்டத்திலேயே சேர்த்துள்ளனர். ஞிபல நாடுகளில் ஊட்டச்சத்தையும், வாழ்க்கைத்தரத்தையுமே சட்டமாக்கி உள்ளனர் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

பெருமாள் அல்ல பெத்தபெருமாள்!
    இரண்டாவதாக , தேசிய ஆலோனைக்குழுவின் பரிந்துரைகள்  புதிதல்ல. ஏற்கனவே, மத்திய அரசு வறுமைக்கோட்டிற்கு(க்ஷஞடு) கீழே என்றும், மிகவும் வறுமையில் வாழ்வோருக்கு அந்தோதயா அன்னதான திட்டம் (ஹஹலு) என்றும் வறுமை கோட்டிற்கு மேலே (ஹஞடு) என்று மூன்றாக பிரித்து முதல் இரண்டு பிரிவிற்கு மட்டுமே மானியத் தில் உணவு  வழங்கியது. வறுமையாளர் எண்ணிக்கை யையும் மத்திய அரசே தீர்மானித்தது. இதற்கான  உணவு தானியங்களை மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கனர். ஹிதனால் பெரும் சுமையை மாநில அரசு ஏற்கவேண்டி இருந்தது. தற்போது இந்த தேசிய ஆலோசனைக்குழு  இதையே முன்னுரிமை, பொதுப்பிரிவு என்று பெயர் மாற்றி உள்ளது. பெருமாள், பெத்தபெருமாள் ஆன கதையாக பிபிஎல் முன்னுரிமை என்றும் ஏபிஎல் என்பதை பொதுப்பிரிவாக மாற்றி உள்ளது. இடையில் தொலைந்து போனவர்கள்  அந்தோதயா அன்னதான திட்டப்பயனாளிகள் 2.05 கோடி குடும்பங்கள் ஆகும்.
   மூன்றாவதாக, தேசிய ஆலோனைக்குழுவின் உண்மையான நோக்கம்  வறுமைக்கோட்டிற்கு  கீழே உள்ளவர்களுக்கு  மட்டுமே பொதுவினியோக முறையை செயல்படுத்துவதாகும். காரணம் 2004-05 புதிய மதப்பீட்டின்படி சுரேஷ் டெண்டுல்கர் குழு திட்டக்குழுவிற்கு சமர்ப்பித்த ஆய்வில் கிராமப்புறத்தில் 41.8 சதமும், நகர்ப்புறத்தில் 25.7 சதம் மக்களும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் என்று அறிக்கை சமர்பித்துள்ளனர். இதை மத்திய அரசின்  உணவு அமைச்சகம் ஏற்றுக்கொண்டு நடடிவக்கை எடுக்கபடும் என்று அறிவித்து விட்டது. சோனியா தலைமையிலான குழு கொடுத்துள்ள முன்னுரிமை பிரிவு கிராமப்புறத்தில் 46 சதம், நகர்புறம் 28 சதம் என்பதும் இதற்குச் சமமானதே. ஊணவு அமைச்சகம் அமுலாக்கலாம் என்று முடிவெடுத்ததை மீண்டும் பரிந்துரைப்பதுதான் உணவு பாதுகாப்புச்சட்டமா? என கேட்கத்தோணுகிறது. இதில் உள்ள வேறுபாடு என்னவென்றால் ஏற்கனவே அந்தோதயா அன்னதான திட்டத்தில்  2 கோடியே 5 ஆயிரம் குடும்பங்கள் ரூ.2/-க்கு 35 கிலோ உணவு தானியங்களை  வாங்கினர். தற்போது அவர்களும் ரூ.3/- விலை கொடுத்து வாங்கவேண்டும் என்பதுதான்  ஒரே வேறுபாடு.

கொடுப்பது இருக்கட்டும் இருப்பது என்ன?
   நான்காவதாக,  தற்போது 75 சதம் மக்களளுக்கு இந்த பரிந்துரைகள் உள்ளடக்கியதாக இருக்கிறதே இது நல்ல பரிந்துரை தானே என்று கேட்கலாம்? உண்மை என்ன? 1996-ம் ஆண்டு மத்திய அரசு பிபிஎல் / ஏபிஎல் என் சட்டத்தைக்கொண்டுவந்தாலும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அனைவருக்குமானபொதுவிநியோக முறையை கைவிடாமல் அமல் படுத்திவருகின்றனர். தற்போது சுமார் 11 கோடியே 30 லட்சம் பிபிஎல் குடும்ப அட்டைகள் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே சுமார் 60 சதமான மக்கள் பயன் அடையக்கூடியதாகும். தேசிய ஆலோசனைக்குழு முன்வைத்துள்ள முன்னுரிமை பிரிவில் 9 கோடியே 80 லட்சம் குடும்பங்களே பயனடைய முடியும். ஏற்கனவே 60 சதமான பயனாளிகள் பயனடையும் நிலையில் கூடுதலாக 15 சதம் மக்களை சேர்ப்பது மட்டும் உணவுபாதுகாப்மை உத்திரவாதப்படுத்த உதவாது.
     ஐந்தாவதாக, அனைவருக்குமான உணவு பாதுகாப்பை பற்றி கவனத்தில் கொள்ளாதது மட்டுமல்ல, பல அறிஞர்கள், அமைப்புகள் வலியுறுத்திய குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உணவு பாதுகாப்பை பரிந்துரைகளில் தேசிய ஆலோசனைக்குழு சேர்க்காதது மிகப்பெரிய பலவீனமாகும்.
     ஆறாவதாக, தேசிய ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ள முன்னுரிமைப் பிரிவு, பொதுப்பிரிவு என்று வகைப்படுத்தி கணக்கெடுப்பது கடினமானது ஆகும். ஏற்கனவே, நமது நாட்டில் கணக்கெடுப்பது குழப்பமானது. துல்லியம், தோராயம் என்ற வரம்புக்குள் அடங்காத பல கணக்குகள் உள்ளன. உதாரணமாக வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் கணக்குமுறையில் நான்குவிதமான புள்ளி விபரங்கள் உள்ளது. நான்கு விதமான கணக்குழுகளை எடுத்ததும் அரசு நிறுவனங்கள்தான். மத்திய அரசு 28சதம், தேசிய மாதிரி ஆய்வு மையம் 40 சதம், ஊரக வளர்ச்சித்துறை 50 சதம், அர்ஜீன்சென்குப்தா 77 சதம் என்று அறிக்கை கொடுத்துள்ளனர். மேலும் கிராமப்புறத்தில் 10 சதம் மக்களையும், நகர்புறத்தில் 50 சதம் மக்களையும் விலக்குவதன் மூலம் எவ்வளவு நிதியை மிச்சம்பிடிக்கப்போகிறார்கள்? இப்படி கூறுபோடுவதன் நோக்கமே பெரும்பகுதி மக்களை பயனாளிகள் வட்டத்திலிருந்து வெளியேதள்ளுவதுதான்.ஏழை மக்களுக்கு உணவளிப்பதாக கூறிக்கொண்டு பெரும்முதலாளிகளுக்கும். வர்த்தக சூதாடிகளுக்கும் சந்தையை விட்டுவிடும் நோக்கம் இதில் உள்ளது.

அனைவருக்கும் உணவு பாதுகாப்பும் - எர்னஸ்ட் எங்கல்ஸ் விதியும்.
மாறாக அனைவருக்குமான பொது விநியோக முறையை அமலாக்கினால், தேசிய அலோசனைக்குழு பரிந்துரைத்துள்ள 25 சதம் மக்களைவிட அதிகமான மக்கள் பொருட்களை வாங்காமல் இருக்கலாம். உதாரணமாக கேரளாவில் குறிப்பிட்ட மக்களுக்கான பொது விநியோகமுறை (கூஞனுளு) அமலாகும் முன்பு  அனைவருக்குமான பொது விநியோகமுறை இருந்தது. அப்போது மிகவும் குறைந்த அளவு வருமானம் இருந்தவர்கள் பொது விநியோக முறையை 71 சதம் பயன்படுத்தினர். ரூ.3000/-க்குமேல் வருமானம் இருந்தவர்கள் 6 சதம் மட்டுமே பொது விநியோக முறையை பயன்படுத்தினர். தமிழகத்தில் அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை வாங்குவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர். (வாங்காதவர்க ளின் பெயர்களில் கணக்கெழுதி ஆளும் கட்சியினர் அரிசி கடத்துவதற்கு  அப்பாவி மக்கள் எப்படி பொறுப்பேற்கமுடியும்).
   பொருளாதார அறிஞர் எர்னஸ்ட் எங்கல்சின் கோ-எஃபிசியன்ட் விதியின் அடிப்டையில் ஒருவரின் வருவாயில் 30சதத்திற்குமேல் உணவிற்கு செலவிட்டால் அது நெருக்கடியான வாழ்வு என்கிறார்.தென்கொரியாவில் இது 2010ம் ஆண்டில் ஒருவரின் வருவாயில் உணவுக்கான செலவு 13.3 சதமாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இதுவே அதிகம் என்று விபரம் கூறுகிறது. சீனாவில் இது 37 சதம் என்ற நிலை உள்ளது. அமெரிக்காவில் ஒருவரின் வருவாயில் 20 சதம் பொழுதுபோக்கிற்காக செலவிடப்படுகிறது. இந்தியாவில் 90 சதமான மக்கள் தங்கள் வருவாயில் 90 சதத்தை உணவிற்காக செலவிடுகின்றனர். கல்வி,மருத்துவம்.இருப்பிடம்.உடை அனைத்தும் மீதி பத்து சதத்தில் எப்படி சாத்தியம்? இங்கு உணவு பாதுகாப்பு குறிப்பிட்ட மக்களுக்கு என்று எப்படி கணக்கு எடுக்க முடியும்? இந்தியா விவசாய நாடு, விவசாயம் சார்ந்த மக்கள் அதிகம். பழங்குடி மக்களும், கூலி விவசாயிகளும், முறைசாரா தொழிலாளர்களும் மக்கள் தொகையில் கணிசமான பகுதி ஆகும். எனவேதான் இது ஏழை நாடல்ல, ஏழைகளின் நாடு என்பர். இங்கு அனைவருக்கு மான உணவுப் பாதுகாப்பை சட்டப்பூர்வமாக உத்திரவாதப் படுத்துவதுதான் உரிய மக்கள் பயனடைய உதவும். இதற்கு மாறாக வகைப்படுத்தி பிரித்திட எடுக்கும் முயற்சி இந்த சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் நோக்கம் கொண்டதாகும். இதையேதான் இந்தக் குழுவில் இருந்து மாற்றுக்கருத்துக்கொண்ட பொளாதார அறிஞர் உணவு பாதுகாப்பை எளிய முறையில் அமலாக்க கிடைத்த வாய்ப்பு தவறவிடப்படுகிறது என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

காலுக்கு செருப்பா? செருப்புக்கு காலா?
மேற்கண்ட பரிந்துரைகளைத்தான் அமலாக்கம் குறித்து ஆய்வு நடத்திட பிரதமர் நியமித்த நிபுணர்குழு இது சாத்தியமில்லை என்று மறுத்துள்ளனர். தேசிய ஆலோசனைக்குழு கூறியுள்ளபடி இதற்கு 55.59 மில்லியன் டன் தானியங்கள் போதாது. 63.98 மில்லியன் டன் தானியங்கள் தேவை. இத்துடன் மற்ற திட்டங்களுக்கு 8 மில்லியன் டன்னும், அத்தியாவசிய இருப்புக்கு 2 மில்லியன் டன்னும் மொத்தம் வருடத்திற்கு 73.98 மில்லியன் டன் தேவைப்படும். இந்த அளவு கொள்முதல் செய்தால், பொதுச்சந்தை குலைந்துவிலையேற்றம் ஏற்படும், மேலும் இதற்காக 92,060 கோடி மானியம் கொடுக்க வேண்டும், இது நிதிச்சுமையை உருவாக்கும் என்று இக்குழு தலைவர் ஆர்.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். மற்றொரு உறுப்பினர் தற்போதைய கொள்முதல் நிலையை கணக்கில் எடுத்தால் (2011-12ல் 56.35 மில்லியன் டன், 2013-14ல் 57.61 மில்லியன் டன்) 2039ல் தான் இந்த தேசிய ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்க இயலும் என்று கூறி உள்ளார். எனவே, குழு பரிந்துரைத் துள்ள முன்னுரிமை பிரிவை மட்டும் அமலாக்கலாம் என்று கூறியுள்ளனர். அதாவது வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் உணவு பாதுகாப்பு, மற்றவர்களுக்கு சந்தையோ? சவக்குழியோ? என்று அறிவிப்புதான் மிச்சம்.
    அதிகம் கொள்முதல் செய்வதால் விலைகள் உயரும் என்று கூறுவது, மக்களையும், ஊடகங்களையும் குழப்புவதற்கான நடவடிக்கையே. கொள்முதல் செய்ததை கிடங்குகளில் வைத்தாலோ அல்லது பதுக்கிவைத்தால் தானே விலை உயரும். விநியோகம் செய்தால் பொதுச்சந்தையிலும் விலை கட்டுக்குள் இருந்ததாகத்தானே வரலாறு நிருபித்துள்ளது. தற்போது கொள்முதல் செய்வதை கூடுதலாக்குவது சாத்தியமில்லை என்பதும் தவறான வாதமாகும். தற்போது  அதிகபட்சமாக 6 கோடி டன்வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உணவு தானிய உற்பத்தியில் 30 சதம் மட்டுமே ஆகும். மேலும் இரண்டு கோடி கொள்முதல் செய்வதை தடுப்பது எது? உணவு பாதுகாப்புச்சட்டம் என்றால் உணவு உற்பத்தியை பெருக்குவது, கொள்முதலை அதிகரிப்பது, பொவிநியோகத்தை மேம்படுத்துவதுடன் தொடர்புடையது. இதைவிடுத்து உணவு இல்லை எனவே இது சாத்தியமில்லை என்பது செருப்புக்கு ஏற்றவகையில் காலை வெட்டுவதுநிபுணர்குழுவின் யோசனையாக உள்ளது.

பணம் இல்லையா?
நிதிச்சுமை அதிகமாகும் என்று கூறுவது உண்மைதான், ஆனால் அது தாங்கமுடியாத பெரும் தொகை அல்ல. பல செலவுகளுடன ஒப்பிட்டால் இத்தொகை மிகமிக சிறியதுதான். இதற்காக 92060 கோடி ஒதுக்குவது  அதிகம் என்று நிபுணர் குழு கூறுகிறது.இந்தியாவில் நடைபெற்றுள்ள  மெகா ஊழல்களுடன் ஒப்பிட்டால் இது கடுகினும் சிறியது. சுவீஸ் வங்கியில் உள்ள 21 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால் இது பூதக்கண்ணாடிவைத்து பார்க்கும் அளவு சிறியது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்த 5 லட்சம்கோடி சலுகைகளை வைத்துப்பார்த்தால் இது கண்ணுக்குத் தெரியும் கடலை பருப்பு அளவுதான்.
    பொது விநியோக முறைக்கு என்று ஒதுக்கப்படுகிற மானியம், அதாவது நுகர்வோர் மானியம் தற்போது விலைபொருட்களுக்கான ஆதார விலைக்கும், கொள்முதலுக்கும், சேமிப்பு கிடங்கிற்கும் செலவிடப்படுகிறது. இந்த மானியத்தை பெரும் செலவாக மொத்தமாக கூறுவது அபத்தம். நுகர்வோருக்கான மானியத்தை நுகர்வோருக்கு பயன்படுத்த வேண்டும்.
    எனவே, இந்தியா உணவு உற்பத்தியை பெருக்கிட, விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும், அதற்கு அரசின் முதலீட்டை விவசாயத்தில் அதிகப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்திய மக்களின் உயிர்களை பாதுகாக்க ஆரோக்கியம் நிறைந்த மனிதவளத்தை பாதுகாத்திட, அனைவருக்குமான உணவு பாதுகாப்புச்சட்டத்தை தாமதமின்றி கொண்டு வந்து,நிறைவேற்றிஅமலாக்கிடவேண்டும்.                                                                                                                    

                                                                                                                                   ஏ.பாக்கியம்           

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...