Pages

வியாழன், நவம்பர் 10, 2022

அமெரிக்காவில் இலாபம் ஈட்டும் தனியார் சிறைகள் மனித உரிமைகளை மீறுகின்றன:

2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்த சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.



அமெரிக்க தனியார் சிறைகளில் உள்ள கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளா கின்றனர்.

மேலும் புலம்பெயர்ந்தோர் அடைக்கப்பட்டுள்ள தனியார் தடுப்பு சிறைகள் நிலைமை மோசமாக உள்ளது.

  2019 ஆம் ஆண்டில், 1,16,000 ( பிப். 4, 2021 அன்றைய ஐக்கிய நாடுகள் செய்திகள்)   அமெரிக்கக் கைதிகள் தனியாரால் இயக்கப்படும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது மொத்த கைதிகளில் 16 சதவிகிதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.



2021 ஆண்டு செப்டம்பர் வரை மெக்ஸிகோ எல்லையில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை அமெரிக்க அதிகாரிகள் தடுப்புச் காவலில் வைத்துள்ளனர். 

அவர்களில், 45,000 குழந்தைகள் உட்பட, 80 சதவீதம் பேர் தனியார் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான தடுப்பு சிறைகள்  தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டு இயக்கப்படுகின்றன.  செலவுகளைக் குறைப்பதற்கும், லாபத்தை அதிகரிப்பதற்கும், தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு  குறைந்தபட்ச தரங்கள் இல்லாமல்  கட்டமைக்கின்றன. இதன் விளைவாக மோசமான,  கடுமையான உள் சூழல் ஏற்படுகிறது.

அரசின் கண்காணிப்பு குறைபாடுகளால்  தடுப்பு சிறைகளில் வசதிகள் குறைவாகவும், குழப்பமான நிர்வாகம் நடப்பதற்கும்,மனித உரிமைகளை மீண்டும் மீண்டும் மீறுவதற்கும் வழிவகுக்கிறது.

அதே நேரத்தில் கைதிகளுக்கு பல்வேறு அளவு, உடல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்துகிறத.

சீனாவின் மாநில கவுன்சில் தகவல் அலுவலகம் 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கையை திங்களன்று வெளியிட்டது. இதில் மேற்கண்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Profit-driven private prisons in U.S. violate human rights: report
https://xhnewsapi.xinhuaxmt.com/share/news?id=667612689260544&showType=3019&utdId=89f79739c7e4ac0d4926bb08bc7e6458&version=3.1.0&projectSource=0&clientMarket=google

வெள்ளி, நவம்பர் 04, 2022

"கழிசடை" கவர்னர்.


இப்போது கேரள முதல்வரின் மீது மீண்டும் தங்கக் கடத்தலை கையில் எடுப்பேன் தலையிடுவேன் என்று கழிசடைத்தனமான களத்தில் இறங்கி உள்ளார் கேரள கவர்னர் ஆதி முகமது கான்.

தனது பதவி வெறும் சம்பிரதாயமான தகுதி என்பதை மறந்துவிட்டார்.அவருக்கு இருக்கும் சுதந்திரமான அதிகாரங்களுக்கு எல்லைகள் உண்டு என்பதையும் அதை மீறினால் மற்றவர்கள் தலையிடுவார்கள் என்பதையும் அவர் புரிந்து கொள்ளவில்லை.

நிதி அமைச்சர் தனது மகிழ்வுக்கு ஏற்றபடி நடக்கவில்லை நீக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். முதலமைச்சர் பினராய் விஜயன் அன்புக்கு பஞ்சமில்லை என்று பதில் அளித்து விட்டார்.

பின்னர் துணை வேந்தர்களை வெளியேற்ற முயற்சி செய்து ராஜினாமா கோரி கடிதம் வழங்கினார். யாரும் ராஜினாமா செய்யவில்லை. அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்தார். யாரும் பதில் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் துன்புறுக்கக் கூடிய முறையில் கவர்னர் நடக்க கூடாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இப்போது மத்திய புலனாய்வு அமைப்புகள் பலமுறை விசாரணை செய்தும் ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பிறகும் அதை கையில் எடுப்பேன் என்று கவர்னர் புலம்புகிறார.

பாஜக தலைவர்கள் எழுப்பும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கவர்னர் எழுப்புகிறார். இவர் RSS-ன் அடமான பொருளாக இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேற ஆதாரம் தேவையில்லை.

கும்மணம் ராஜசேகரன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது பாஜகவின் ஊடகத் துறை தலைவராக இருந்த ஹரி எஸ் கர்த்தா இப்போது ஆளுநரின் கூடுதல் தனி உதவியாளராக இருக்கிறார்.

இந்த கர்த்தாவை நியமித்தது மாநில அரசுதான். ஆனால் இது18. 01.2019 மாநில ஆளுநரின் பரிந்துரையின் அடிப்படையில் நடைபெற்றது. எனவே இவர் பாஜகவின் ஊது குழலை வாயிலே வைத்துக் கொண்டு ஊதிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சியாகும்.

உ.பி.யை விட கேரளா சிறந்த மாநிலம் என்று சொன்னால் அது என்ன தேச துரோகமா. கடந்த தேர்தலின் போது யோகி ஆதித்யநாத் கேரளாவை இழிவு படுத்தி அறிக்கை வெளியிட்டார். கேரள மக்கள் யோகி ஆதித்யநாத்தின் கருத்தை விமர்சித்தார்களே தவிர கவர்னரை யாரும் விமர்சிக்கவில்லை.

இப்போது உ.பி. விட  கேரளா சிறந்த மாநிலம் என்று பாலகோபால் சொன்னால் தேசத் துரோகம் என்று கவர்னர் முத்திரை குத்துவது புத்தி கெட்ட காரணத்தினால் தான்.


கேரளா போதைப் பொருட்களின் தலைநகரம் என்று ஆளுநர் குற்றம் சாட்டுகிறார் ஒரு பத்திரிக்கையாளரின் சந்திப்பில் இந்த முட்டாள்தனத்தை அவர் வெளிப்படுத்தினார். எந்த தகவல் அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார் என்று விளக்கவில்லை. எரிச்சலில் எரிந்து விழுகிறார்.
இந்திய அரசு வெளியிட்ட விபரங்கள் கூட ஆளுநரின் கருத்துக்கு முரணாக உள்ளது.

இந்தியாவிலேயே போதைக்கு எதிரான செயல்களை நடத்துகிற மிக முன்னுதாரணமான மாநிலம் கேரளா. இங்கு நடைபெறும் போதைக்கு எதிரான செயல்கள் கண்டு கவர்னர் ஏன் பொறாமைப்படுகிறார். இந்த விஷயத்திலும் கேரளா உ.பி. யை விட மிக மிக முன்னிலையில் இருக்கிறது.

தற்போது கேரளாவுக்கு இருக்கும் ஒரே வருமானம் மது மற்றும் லாட்டரி என்ற முட்டாள்தனமான கருத்தை கவர்னர் முன் வைத்துள்ளார்.

இந்திய அரசின் புள்ளிவிவரப்படி ஆரிப் முகமது கானின் சொந்த ஊரான உ.பி.யில் நிலையை விட கேரளாவின் நிலை மேம்பட்டது.ஜிஎஸ்டி வரிக்குப் பிறகு கேரளா அரசுக்கு லாட்டரி மூலம் கிடைக்கும் லாபம் விற்பனை வரியில் மூன்று சதவீதம் மட்டும் தான் என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.

மதுவிலும் மிக மிக குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. மதுவிலும் ஆற்றிலும் இன்றைய அரசு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. எத்தனை ஆட்சி மாறினாலும் இந்த நிலை கேரளாவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் கேரளா தேசிய சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. அரசியல் செயல்முறை மூலம் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் மலையாளிகள் அனைவரும் இதை நினைத்து பெருமை கொள்ள உரிமை உண்டு என்பதை ஆர் எஸ் எஸ் என் அடிவருடியாக இருக்கும் ஆரிப் முகமது கான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆளுநரின் மிரட்டல் கேரளாவில் பலிக்காது என்று முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடுமையாக  எச்சரித்து உள்ளார்.







வியாழன், நவம்பர் 03, 2022

மாறிவரும் உலகத்திற்கு சீனாவின் பங்களிப்பு.



சீனாவின் வளர்ச்சி மாதிரியை மற்ற நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்யாது, மற்ற நாடுகளிலிருந்து மாதிரிகளை இறக்குமதி செய்யாது;  மற்ற நாடுகள் தங்கள் மாதிரிகளை சீனா மீது திணிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம்;  ஒவ்வொரு நாடும் அதன் சொந்த சூழ்நிலைக்கு ஏற்ற நவீனமயமாக்கலுக்கு அதன் சொந்த வழியை ஆராய வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 20வது தேசிய காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சன் யெலி கூறினார்.


சீன நவீனமயமாக்கல் என்பது அமைதியான வளர்ச்சியின் நவீனமயமாக்கலாகும்.  நாங்கள் போர், காலனித்துவம் மற்றும் கொள்ளை போன்ற பழைய பாதையில் நடக்கவில்லை. ஆனால் அமைதி, வளர்ச்சி மற்றும் வெற்றி-வெற்றி ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நாங்கள் நடந்து கொள்கிறோம்," என்று சன் கூறினார், ஒவ்வொரு நாடும் அமைதியான வளர்ச்சி மாதிரியை தொடர முடியும் என்று சீனா நம்புகிறது.


உலகம் கோவிட்-19, பொருளாதார மந்தநிலை மற்றும் மோதல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.  வளர்ந்து வரும் அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளின் பின்னணியில், சீனா உலகத்துடனான தனது உறவுகளை  மேம்படுத்தி வருகிறது.


"மனிதகுலத்திற்கு இன்னும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க சீன மக்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் கைகோர்த்து செயல்பட தயாராக உள்ளனர்" என்று ஜி கூறினார்.


கடந்த 10 ஆண்டுகளில், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய மொத்த நாடுகளின் எண்ணிக்கை172 லிருந்து 181 ஆக அதிகரித்துள்ளது.


"நாங்கள் 113 நாடுகள் மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் கூட்டாண்மைகளை நிறுவியுள்ளோம்.உலகம் முழுவதும் நண்பர்களை உருவாக்கி, உலகளாவிய கூட்டாண்மை வலையமைப்பை ஏற்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.


   கடந்த 10 ஆண்டுகளில், ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஐந்து கண்டங்களில் உள்ள 69 நாடுகளுக்கு 42 முறை விஜயம் செய்து, 100க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்களை உள்நாட்டி ல் சந்தித்து சீனாவின் கூட்டாண்மைக்கு ஒரு பெரிய அடித்தளத்தை உருவாக்கியுள்ளார்.


சீனாவால் முன்மொழியப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) ஒரு சர்வதேச பொது முன்முயற்சியாகவும்,  உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான தளமாகவும் மாறியுள்ளது.


தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின்படி, ஜூலை 2022 இறுதிக்குள், சீனா 149 நாடுகள் மற்றும் 32 சர்வதேச அமைப்புகளுடன் 200க்கும் மேற்பட்ட BRI ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.


உலக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான சீனாவின் முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ஒரு வருடத்திற்கு முன்பு முன்வைத்த Global Development Initiative (GDI) ஆகும்.

கோவிட்-19 தொற்றுநோயால் உலகளவில் ஏற்பட்ட பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கு  செப்டம்பர் 21, 2021 அன்று ஐநா பொதுச் சபையில் மெய்நிகர் உரையில் சீன அதிபர் ஜி முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.  ஜி தனது அறிக்கையில் உறுதியளித்தது போல், "நாம் பொருளாதாரத்தை புத்துயிர் பெற வேண்டும் மற்றும் மிகவும் வலுவான, பசுமையான மற்றும் சமநிலையான உலகளாவிய வளர்ச்சியை தொடர வேண்டும்."


நிலையான வளர்ச்சிக்கான  ஐநா சபையால் முன்மொழிக்கப்பட்ட  திட்டத்தை  விரைவுபடுத்த உதவும் முதன்மை முயற்சியாக, சீனா முன்வைத்த உலக வளர்ச்சிக்கான முயற்சி என்ற திட்டம் உதவி செய்யும். முன்னுரிமைப் பகுதிகளில் வறுமைக் குறைப்பு, உணவுப் பாதுகாப்பு, COVID-19 தடுப்பூசிகள், வளர்ச்சிக்கான நிதி, காலநிலை மாற்றம் மற்றும் பசுமை மேம்பாடு, தொழில்மயமாக்கல், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை இந்தத் திட்டத்தில் அடங்கும். 


GDI ஆரம்பம் முதல் சர்வதேச சமூகத்தால் அன்புடன் வரவேற்கப்படுகிறது.  100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்த முயற்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. அதே நேரத்தில் 60 க்கும் மேற்பட்டோர் ஜனவரி 2022 இல் ஐநாவில் சீனாவால் தொடங்கப்பட்ட GDI நண்பர்கள் குழுவில் இணைந்துள்ளனர்.


சீனாவும், சர்வதேச பங்காளிகளும் இணைந்து விவசாயம், கல்வி, கோவிட்-19 எதிர்ப்பு கொள்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் பலதரப்பு ஒத்துழைப்பிற்காக நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளனர்.


ஒரு மாதத்திற்கு முன்பு, செப்டம்பர் 21, 2022 அன்று, நியூயார்க்கில் ஐநா பொதுச் சபை அமர்வை ஒட்டி நடைபெற்ற GDI நண்பர்கள் குழுக்களின் அமைச்சர்கள் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மேலும் ஏழு நடைமுறை நடவடிக்கைகளை அறிவித்து வெளியிட்டார்.  GDI திட்டக் குழுவின் முதல் பட்டியல், 50 உறுதியான ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் 1000 மேலும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்படுகின்றன.

புதன், நவம்பர் 02, 2022

"யாரையும் விட்டு விடாதீர்கள்."




இந்த வருடம் அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் சபை உலக நாடுகளுக்கு அறிவித்த கருப்பொருள்தான் "யாரையும் விட்டு விடாதீர்கள்".

பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கும் முயற்சியில் உலகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

தொற்று நோய், சர்வதேச உறவுகளில் ஏற்பட்டிருக்கிற மோதல்கள், தீவிர வானிலை மாற்றம், போன்ற காரணிகள் உலகின் உணவு பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

ஐநா சபை அறிக்கையின்படி உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 2021-ல் 828 மில்லியனாக உயர்ந்து உள்ளது. இது உலக மக்கள் தொகையில் சுமார் 10% ஆகும்.

உலகப் பொருளாதாரம் மேம்பட்டிருந்தாலும் 2030-ம் வருடம் மேலும்  670 மில்லியன் மக்கள்  பட்டினியை எதிர்கொள்வார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணத்தினால் ஐக்கிய நாடுகள் சபை இந்த வருடத்தின் கருப்பொருளாக "யாரையும் விட்டு விடாதீர்கள்" என்பதை தேர்வு செய்துள்ளது.

உலகின் உழைப்பாளி மக்களை சூறையாடி பெறும் நிறுவனங்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் மோடி, பைடன், சுனாக் போன்றவர்கள் இதைப் பற்றி கவலைப்பட போவதில்லை.

மக்கள் சீனம் உணவு பாதுகாப்பை முக்கிய கொள்கையாக ஏற்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை ஆதரித்து எதிர்வினை ஆற்றியுள்ளது.

உணவு பாதுகாப்பு என்பது எல்லா மக்களுக்கும் எல்லா நேரங்களிலும் போதுமான பாதுகாப்பான சத்தான உணவுகள் கிடைப்பதற்கான சமூக மற்றும் பொருளாதார உத்தரவாதத்தை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். அது மக்களின் உணவு விருப்பங்களையும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் சீனம் உணவு பாதுகாப்பு பற்றி தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்கு 25 சதவீதம் தானியங்களை சார்ந்தே இருக்கிறது. உணவு பாதுகாப்பில் தானியங்கள் முக்கிய பங்கு வைக்கிறது. 

சீனாவின் தானிய உற்பத்தி 2015 ஆம் ஆண்டு 650 மில்லியன் டன் களிலிருந்து 682. 85 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.

சீனாவில் 140 கோடி மக்களும் ஒரு வருடம் முழுவதும் உண்ணக்கூடிய அளவிற்கு அரிசி மற்றும் கோதுமைகளை இருப்பு வைத்துள்ளது. 

சீனா உலகின் மிகப்பெரிய தானிய உற்பத்தியாளர். மூன்றாவது மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர். சோயா சோளம் மற்றும் பயிர் விதைகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு.

சீனா மக்களின் உணவு பாதுகாப்பை பற்றிய அதிக கவலை கொண்டுள்ளது எனவே உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு பயிரிடப்படும் நிலத்தின் பரப்பை விரிவாக்கம் செய்கிறது இயந்திர மயமாக்கலை மேம்படுத்தி வளர்ச்சியில் கூடுதல் முதலீடுகளை செய்கிறது. உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய நாடாக சீனா இருக்கிறது.

அதே  நேரத்தில் சீனா உலக மக்களின் பசியை போக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்கிறது. இதற்கான உறுதியை அளித்துள்ளது. உணவு விநியோகத்தில் சர்வதேச ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதற்காக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இணைந்து தெற்கு தெற்கு ஒத்துழைப்பு என்ற அறக்கட்டளை நிதியை நிறுவி நிதி உதவி செய்து வருகிறது.

சீனா மலரும் நாடுகளில் 25 விவசாய திட்டங்களை தொடங்கியுள்ளது அந்த திட்டப் பகுதிகளில் பயிர்களின் விளைச்சலை 30 முதல் 60% வரை உயர்த்தி உலக அளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு பலனை அளித்துள்ளது.

உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழில்நுட்பங்களை ஊக்கிவிக்கும் உதவிகளை செய்துள்ளது. 140 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் விவசாய பரிமாற்றங்களை நடத்தி வருகிறது.

சீனாவின் விவசாய வல்லுநர்கள் பல்வேறு நாடுகளின் துறைகளில் செயல்பட்டு உள்ளூர் விவசாயிகளின் சிறந்த வாழ்க்கையை உருவாக்க உதவி வருகிறார்கள். 

சீன நாட்டின் விவசாயத் துறை கண்டுபிடித்த கலப்பின அரிசி அறுபதுக்கு மேற்பட்ட நாடுகளில் 8 மில்லியன் ஹெ்டேர்களில் வளர்ந்து வருகிறது. சராசரி வருட மகசூல் உள்ளூர் அரிசியைவிட ஹெக்டேருக்கு  2 டன்கள் அதிகமாக மகசூல் செய்யப்படுகிறது.

வளரும் நாடுகளுக்கு 30 ஆயிரம் கண்களுக்கு அதிகமான அளவில் தானியங்களை அவசர மனிதாபிமான உதவியாக சீனா வழங்கியுள்ளது.

உள்ளூர் மக்களின் உணவு பாதுகாப்பையும் உலக மக்களின் பசியை போக்குவதற்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவின் முயற்சிகள் வெல்லட்டும்.

 அ.பாக்கியம்







வியாழன், செப்டம்பர் 29, 2022

பகத்சிங் ஒரு புரட்சிகர அமைப்பாளன்

 


1907 ஆம் ஆண்டு  செப்டம்பர் 28 பஞ்சாப் மாநிலம் லாகூருக்கு அருகில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில் உள்ள பாங்கா என்ற கிராமத்தில் பகத்சிங் பிறந்தார்.பகத்சிங்கை ஒரு வன்முறையாளன் என்று சிலரும், புரட்சிக்காரன் என்று பலரும் கூறுகின்றனர். பகத்சிங்கின் நடைமுறை செயல்களில் வேண்டுமானால் சில குறைகள் இருக்கலாம். அவரின் நோக்கத்தை - விடுதலை தாகத்தை - இலட்சிய வேகத்தை யாராலும் குறை கூற முடியாது. பகத்சிங் இந்தியாவின் மாபெரும் புரட்சிக்காரன் மட்டுமல்ல.. புரட்சிகரமான அமைப்புகளையும் உருவாக்கியவர். சுதந்திர போராட்டக் காலத்தில் 1925 – 31க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளை பரிசீலித்தால் பகத்சிங்கைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களும், அவரின் செயல்பாடுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக இந்தக்கட்டுரையில் பகத்சிங்கால் உருவாக்கப்பட்ட அமைப்புகள் பற்றியும் அதன் செயல்பாட்டு முறைகளையும் மட்டும் இந்தக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பகத்சிங் என்ற இளைஞனைப் பற்றி இந்த தேசம் அறிந்திருக்கும். அறியாமலும் அனேகம் பேர் இருக்கக்கூடும். ஆனால், பகத்சிங்கை அறிந்திருக்கும் சிலர்கூட அவர் ஒரு வெடிகுண்டு வீச்சாளர் என்ற தவறான கருத்தோடு நின்றுவிடுகின்றனர். அவர் ஒரு வீர புருஷன் மட்டுமல்ல; விடுதலை வேட்கையை வேகமாக வெளிப்படுத்தியவர். விரைவில் சுதந்திர தாயகத்தை தரிசிக்க புதிய பாதையை தேடியவர். அதற்காக அவர் செய்தது தீவிரமான செயல்கள் மட்டுமல்ல.. இந்திய இளைஞர்களை அணிதிரட்ட அமைப்புகளை உருவாக்கி, அதற்கு தலைமை ஏற்று வழி நடத்தியவர் பகத்சிங். அவர் முயற்சி எடுத்து உருவாக்கிய அமைப்புகளில் ‘‘நவ ஜவான் பாரத் சபா’’ என்ற அமைப்பு பிரதானமானது. இந்த சங்கம் பகிரங்மாக செயல்படக்கூடிய வெகுமக்கள் அமைப்பாக இருந்தது. இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம் அமைக்கவும் பகத்சிங் காரணமாக இருந்தார்.

            1920ம் ஆண்டுகளில் முதல் உலக யுத்தம் முடிந்தவுடன் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியாவில் அதுவரை கண்டிராத அளவில் மக்கள் எழுச்சியை எதிர்கொண்டனர். கிலாபத் இயக்கம், ஜாலியன்வாலாபாக், ஒத்துழையாமை இயக்கம், சௌரி சௌரா சம்பவம் என மக்கள் எழுச்சி தொடர்ந்தது. அதோடு ரஷ்யப் புரட்சியை தொடர்ந்து ஏற்பட்ட நம்பிக்கையின் தாக்கமும் இருந்தது.  இந்தச் சூழலில் காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தை திடீரென திரும்பப் பெற்றதால் வெகுண்டெழுந்த மக்கள் குறிப்பாக இளைஞர்கள் விரக்தியுற்றனர். 

காங்கிரஸ் தலைமை ஒத்துழைப்பு – ஒத்துழையாமை, சுயராஜ்யம் - டொமினியன் அந்தஸ்து என இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக் கொண்டு இருந்தது. இக்காலத்தில் 1922ம் ஆண்டுக்குப் பிறகு மக்களிடம் சோர்விம் அவநம்பிக்கையும் மேலோங்கி இருந்தது. மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தீவிர வேட்கையுடன், தீவிரவாத தேச பக்தர்கள் பலர், பல்வேறு அமைப்புகளை பல இடங்களில் உருவாக்கி மாற்றுப் பாதையை தேடினார்கள். இச்சூழலில்தான் நவ ஜவான் பாரத் சபாவும் உருவானது.

                    1926 மார்ச் மாதம் நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை தனது 19-வது வயதில் பகத்சிங் உருவாக்கினார். அந்த அமைப்பு சுதந்திர போராட்ட வீரர் சத்தியபால் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது என்ற தகவல் இருந்தாலும் வரலாற்று ஆதாரப்படி பகத்சிங் சொந்த முயற்சியால் இது தொடங்கப்பட்டது என்றே தெரியவருகிறது. பகவதி சரண் வோரா, தன்வந்தி மற்றும் பலர் இதை உருவாக்க பகத்சிங்கிற்கு உதவி புரிந்தனர். இதன் முதல் செயலாளர் பகத்சிங், தலைவர் ராமகிருஷ்ணா, கொள்கை பரப்பு பிரச்சார செயலாளர் பகவதி சரண் வோரா என நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அன்றைய சூழலில் இடதுசாரி மனோபாவம் கொண்ட காங்கிரஸ் தலைவர்கள் சைபுதீன் கிச்சுலு, சத்தியபால், கேதர்நாத் சேகல், லாலா பிண்டி தாஸ் போன்றவர்கள் இந்த அமைப்பை உருவாக்க ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கினர்.

அமைப்பின் நோக்கம்:

சமூக மேம்பாடு மற்றும் அரசியல் நிலைகளை அந்த அமைப்பின் நோக்கமாக வரையறுத்தனர்.

சுதேசி பொருட்களை வாங்குவது; தேக ஆரோக்கியத்தை காப்பது; சகோதரத்துவம் வளர்ப்பது; இந்திய மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படச் செய்வது. 

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் தலைமையில் முழுமையான விடுதலை பெறுவது. 

இந்திய இளைஞர்களின் இதயத்தில் தேசபக்தி மற்றும் இந்திய ஒற்றுமை உணர்வை உருவாக்குவது.

வகுப்புவாத சக்திகளின் கருத்துக்களுக்கு மாற்றாக, தொழிலாளர் விவசாயி தலைமையில் பூரண விடுதலை என்ற கருத்தை நோக்கி மக்களை அணிதிரட்டுவது.

தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணி திரட்டுவது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டுமல்ல.. அனைத்து ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்தும் நாட்டை விடுவிப்பது என்ற வகையில் தங்கள் அமைப்பின் கொள்கை பாதையை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர்.

வகுப்புவாதத்திற்கு எதிராக பகத்சிங் கடுமையாக போராடினார். நவ ஜவான் பாரத் சபாவில் உறுப்பினர் ஆவதற்கு முன்னால், ‘‘என் சமூக நலனை விட இந்த நாட்டின் நலனை முன்னிறுத்தி செயல்படுவேன்’’ என உறுதிமொழி ஏற்க வேண்டும். பெரும் தலைவர்களாக இருந்தால் கூட அவர்கள் வகுப்புவாத செயல்பாட்டில் ஈடுபட்டால் நவ ஜவான் பாரத் சபா கடுமையாக விமர்சனம் செய்தது. தீவிர தேசியவாதியான லாலா லஜபதிராய், பின்னாட்களில் இந்து மகாசபையுடன் நெருங்கி செயல்பட்ட போது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக, பகத்சிங் அதிகமாக மதித்த தலைவர் லாலா லஜபதிராய் ஆவார். ஆனால் அவரின் வகுப்புவாத அணுகுமுறையை பகத்சிங் கடுமையாக சாடினார். மக்களிடையே சமபந்தி இயக்கம் நடத்தி பல தரப்பட்ட மக்களை ஒன்றுபடுத்தும் வேலையை நவ ஜவான் பாரத் சபா செய்தது. காங்கிரஸின் சர்வ மதத்தையும் தாஜா செய்யும் போக்கை நவ ஜவான் பாரத் சபா எதிர்த்தது. சுதந்திரம், மதச்சார்பின்மை, சோசலிசம் அல்லது மக்கள் பங்குபெறும் பொருளாதாரம் என்ற கோஷத்தை நவ ஜவான் பாரத் சபா முழங்கியது.

களப்பணியில் :

               நவ ஜவான் பாரத் சபா தனது கொள்கைகளை வரையறுத்த பின்பு நடவடிக்கையிலும் இறங்கியது. லாகூரில் புரட்சியாளர் கத்தார்சிங் சராபா நினைவு தினத்தை அனுஷ்டித்தனர். லாகூர் பிராட்லக் மண்டபத்தில் அவரின் படத்தை திறந்து வைத்து பகத்சிங் மற்றும் பகவதி சரண் வோரா ஆகியோர் பேசினார்கள். அதேபோல் லாகூரில் இளைஞர்களை அணிதிரட்டி வங்க புரட்சியாளர் பூபேந்திரநாத்தை அழைத்து, ‘‘மேற்கில் இளைஞர்கள் இயக்கம்’’ என்ற தலைப்பில் பேச வைத்தனர்.

முதல் தாக்குதலும் முடிவற்ற போராட்டமும்:

1926 மார்ச் முதல் 1927 மார்ச் வரை சபாவின் செயல்பாடுகள் லாகூர் நகரையும் அதைச் சுற்றியுமே இருந்தது. ஆனாலும் இதன் செயல்பாடும் இதற்கு கிடைக்கும் மக்கள் செல்வாக்கும் பிரிட்டிஷ் அரசின் கண்ணை உறுத்தியது. தீவிர அரசியல் போராட்டத்தையும், கம்யூனிச கருத்துக்களையும்  உள்ளடக்கி யதாக இந்த அமைப்பு இருக்கிறது என்று  வெள்ளை அரசாங்கம் பார்த்தது. 1927 ஜூலையில் தசராவிழாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பை பயன்படுத்தி நவ ஜவான் பாரத் சபாவை ஒழித்துக் கட்ட வெள்ளை அரசு திட்டம் தீட்டியது. நவ ஜவான் பாரத் சபாவின் அமைப்பாளரும் இளைஞர்களை கவர்ந்தி ழுத்துக் கொண்டிருந்தவருமான பகத்சிங் மீது பழியை போட்டு அவரைக் கைது செய்தது. இதன்மூலம் மக்களிடம் நவ ஜவான் பாரத் சபாவுக்கு இருந்த செல்வாக்கை சீர்குலைத்து விடலாம் என்று வெள்ளை அரசாங்கம் நினைத்தது.  சபா, கடுமையான பின்னடைவை சந்தித்தது என்றாலும், பிரிட்டிஷ் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை. பகத்சிங் மிக உயர்ந்த அளவு ஜாமீன் தொகை செலுத்தி (ரூ.80000) விடுதலை பெற்றார்.


1928 மார்ச் மாதம் லாகூரில் ‘தேசியவாரம்’ சபாவால் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஃபிலிப் பிராட், எஸ். ஏ. டாங்கே இருவரும் பங்குபெற்று இந்திய விடுதலை பற்றி எழுச்சிமிகு உரையாற்றினார்கள். அடுத்து கிருதி கிசான் கட்சியின் சார்பில் 1928 ஏப்ரல் 11 முதல் 13 வரை ஜாலியன் வாலாபாக்கில் இளைஞர்கள் மாநாடு நடத்த விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. மாநாடு நடக்கும் சில தினங்கள் முன் பகத்சிங், சோகன்சிங் ஜோஷை சந்தித்து இந்த மாநாட்டில் நவ ஜவான் பாரத் சபாவும் பங்கெடுப்பது பற்றி விவாதித்து, சபாவும் பங்கெடுப்பது என்று முடிவாயிற்று. இந்த மாநாட்டிற்கு லாகூரில் சபா உறுப்பினராக இருந்த கேதர்நாத் சேகல் தலைமையில் இளைஞர்கள் மாநாடு கூடியது. மாநாட்டில் அமைப்பு பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அமைப்பு இனிமேல் ‘‘பஞ்சாப் மாநில நவ ஜவான் பாரத் சபா’’ என்று அழைக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இதன் தலைமையகம் லாகூரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு மாற்றப்பட்டது. புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது; பல வழிகளிலும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளை திரட்டுவது என கொள்கையில் சில ஷரத்துக்களை சேர்த்தனர். அமைப்பை மாவட்ட, வட்ட, கிராம அளவில் விரிவுபடுத்த திட்டங்களைத் தீட்டினார்கள்.

ஜாலியன் வாலாபாக் மாநாட்டிற்கு பின்பு விவசாயிகள் மத்தியில் நவ ஜவான் பாரத் சபா தனது வேலைகளை தீவிரப்படுத்தியது. பஞ்சாபில் கோதுமை சாகுபடி நடக்காததை கண்டித்து விவசாயிகளை அணிதிரட்டி போராடியது. 1928 மே 23 லாகூரில் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தை நடத்தியது. இதில் காங்கிரசில் இருந்த தீவிரவாத தலைவர்கள் சத்தியபால், மஜீத், கேதர்நாத் சேகல் போன்றவர்கள் பங்கு கொண்டு பேசினார்கள். விவசாயிகளின் போராட்டத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்தாலும் மக்களை அணிதிரட்டக் கூடிய வேலையையும் கூலி விவசாயிகளை இதில் பங்கு பெறச் செய்ததும் நவ ஜவான் பாரத் சபாதான் செய்தது.

1928 செப்டம்பரில் லியால்பூரில், விவசாயிகள் தொழிலாளர்கள் மாநாட்டை சபா நடத்தியது. இதில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஸ்பார்ட், பிராட்லி மற்றும் டாங்கே நவ ஜவான் பாரத் சபாவின் தலைவர் கேதர்நாத் சேகல், சோசலிச சிந்தனையாளர் ஷபில்தாஸ் ஆகியோர் பேசினார்கள். வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அறைகூவல் விடுத்தனர்.

1928 நவ ஜவான் பாரத் சபாவால் ‘‘ருஷ்ய வாரம்’’ கொண்டாடப்பட்டது. இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சோவியத்தை ஆதரித்தும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றினர். இந்தியாவில் முதலாளித்துவத்தை அழித்து விவசாய தொழிலாளர் தலைமையில் அரசை அமைப்போம் என்று சபதம் ஏற்றனர்.

இதே காலத்தில் இளைஞர்களுக்கு அரசியல் கல்வி போதிக்கும் பிரசுரங்களை வெளியிட்டனர். இந்த கல்வி குழுவிற்கு லாகூர் தேசிய கல்லூரி முதல்வராக இருந்த ஷபில் தாஸ் பொறுப்பாக இருந்தார். லாகூரில் நவ ஜவான் பாரத் சபா செயல்படுவதற்கும், இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்று, சோசலிச கருத்துக்கள் பரவுவதற்கும் முக்கிய காரணமாக அவர் இருந்தார்.

1928 ஜூன் மாதம் பகத்சிங் மற்றும் சுகதேவ் முயற்சியால் அமைந்த லாகூர் மாணவர் சங்கம் சார்பில் ‘‘மாணவர் வாரம்’’ கொண்டாடப்பட்டது. இதில் ‘‘இளைஞர்களுடன் சில வார்த்தை’’ என்ற பிரசுரத்தை அச்சிட்டு வெளியிட்ட சபா, தேச விடுதலைப் போராட்டத்தில் மற்ற பல நாடுகளை போல் இங்கும் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்று அறை கூவி அழைத்தது.

இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம்:

சபாவின் செயல்பாடுகள் வளர்ந்து வருகிற சூழலில் பகத்சிங், சோசலிச கருத்துக்களை அறியவும் புரிந்துகொள்ளவும் தொடங்கினார். அதே நேரத்தில் இந்தியாவின் இதர பகுதியிலும் இளைஞர்களை அணிதிரட்ட சிந்தித்து உத்தரபிரதேசம் நோக்கி தனது கவனத்தைத் திருப்பினார் அங்கு ஏற்கனவே சில குழுக்கள் செயல்பட்டு வந்தன.

ராம் பிரசாத் பிஸ்மில், ஜோகோஷ் சட்டர்ஜி, சசீந்திரநாத் சன்யால்  ஆகியோர் கான்பூரில் 1924ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தித்து இந்துஸ்தான் குடியரசு சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். ஆயுதப் புரட்சியின் மூலமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது, இந்திய ஐக்கிய குடியரசை அமைப்பது போன்றவற்றை லட்சியமாக அறிவித்தனர். இச்சங்கத்தின் முதல் நடவடிக்கையாக சந்திரசேகர் ஆசாத் தலைமையில் லக்னோவிற்கு அருகிலுள்ள காகோரி கிராமத்தில் ரயில் மீது தாக்குதல் சம்பவம் நடந்தது.  அரசின் பணம் ரயிலில் செல்வதை எடுத்து தங்களது ஆயுதகொள்முதலுக்கு பயன்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினர். இதற்கு பணநடவடிக்கை ( ) என்று பெயரிட்டனர். இதைத்தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு சுமார் 25 பேரை கைது செய்தது. சந்திரசேகர் ஆசாத், குண்டன் லால் இருவரும் தப்பிச்சென்றனர். அஸ்வக்ஹுல்லாகான், ராம் பிரசாத்பிஸ்மில், ரோஷன்சிங், ராஜேந்திரலகிரி தூக்கிலிடப் பட்டனர். 4 பேர் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். 17 பேருக்கு நீண்ட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் செயல்பாடு பலவீனம் அடைந்தது.

இந்த அமைப்பை புதியமுறையில் புனரமைக்கவும் அகில இந்திய அமைப்பாக உருவாக்கவும் பகத்சிங் முயற்சித்தார். உத்தரப் பிரதேசத்திலிருந்து பிஜய் குமார் சின்கா, சிவவர்மா, ஜெய்தேவ் பஞ்சாபிலிருந்து பகத்சிங், பகவதி சரண் வோரா, சுகதேவ் ஆகியோர் முயற்சி செய்து 1928 செப்டம்பர் 8, 9 தேதிகளில் இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம் என்ற அமைப்பை டெல்லி கோட்லா மைதானத்தில் உருவாக்கினார்கள். இதன் கொள்கையாக சோஷலிசத்தை ஏற்றுக் கொள்வது என்பதை பகிரங்கமாக அறிவிக்க முடிவு செய்தனர். வங்கம் தவிர இதர பிரதேசத்தில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தலைமறைவாக இருந்த சந்திரசேகர் ஆசாத் குண்டன் லால் உட்பட பலரும், இந்த அமைப்பின் உருவாக்கத்திலும், கொள்கை உருவாக்கத்திலும்  பங்குகொண்டனர். அமைப்பின் மத்திய கமிட்டியில் கூட்டு செயல்பாடு கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த அமைப்பை உருவாக்குவதற்கு பகத்சிங் எடுத்த முயற்சி மிக முக்கிய பங்காக இருந்தது. பகத்சிங்கின் செயல் தளம் இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு இதை நோக்கி கூடுதலாக நகர்ந்தது.

1928-ம் ஆண்டில் சைமன் கமிஷன் வருகையையொட்டி நாடு தழுவிய அளவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. சைமன் கமிஷனில் ஒரு காங்கிரஸ்காரர் கூட இல்லை என காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. இந்திய மக்கள் தகுதியை அளப்பதற்கு பிரிட்டிஷ் அரசுக்கு எந்த அருகதையும் இல்லை என அறிவித்து நவ ஜவான் பாரத் சபா எதிர்த்தது.

1928 அக்டோபர் 26 அன்று முடிவெடுத்து 30ம் தேதி லாகூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்தது. 29ம் தேதி, காவல்துறை அதிகாரி மக்கள் கூடுவதற்கு தடை விதித்தார். இதையும் மீறி மக்கள் கூடினார்கள். மக்கள் எழுச்சி கண்டு காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கு கொண்டது. கூடியிருந்த கூட்டத்தின் மீது காவல்துறை கொடூரமாக தடியடி நடத்தியது. இதில் பலர் படுகாயமடைந்தனர். லாலா லஜபதிராய் தலையில் படுகாயம் அடைந்து அடுத்த பதினைந்தாவது நாளில் மரணமடைந்தார். இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் சபா, பொதுக் கூட்டங்களை நடத்தியது. டிசம்பர் 16 1928 அன்று லாகூரிலும், அமிர்தசரஸிலும், ‘காகோரி’  தினத்தை சபா அனுஷ்டித்து புரட்சியாளர்களை கௌரவித்தது. 

அடுத்த நாள் காலை டிசம்பர் 17ம் தேதி அன்று லாலா லஜபதிராய் மரணத்திற்கு காரணமான அதிகாரி சௌந்தர் மற்றும் ஒரு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். லஜபதிராய் மீதுள்ள மதிப்பாலும், தேசத்தின் மீதுள்ள பற்றாலும் பகத்சிங் இதை செய்தார். இதையொட்டி 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

நவ ஜவான் பாரத் சபா தனது தொடர் நடவடிக்கையால் விரிவாகிக் கொண்டே வந்தது. 1928-ல் உத்தரபிரதேசத்தில் மீரட், கராச்சி, சிந்து போன்ற இடத்திலும் மற்றும் ஜலந்தரிலும் சபாவின் அமைப்புகள் உருவாகி எழுச்சியுடன் செயல்பட ஆரம்பித்தது. இந்த சூழலில்தான் பிரிட்டிஷ் அரசு, சுதந்திரப் போரை நசுக்கும் வகையிலும், தொழிற்சங்க உரிமைகளை முடக்கவும் இரு மசோதாக்களை 1929 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வேலையில் ஈடுபட்டது. ஆக்ராவில் இருந்த பகத்சிங் உடனடியாக லாகூர் சென்று சுகதேவுடன் ஆலோசனை நடத்தி இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்க மத்திய கமிட்டி கூட்டத்தை கூட்டி தனது ஆலோசனையை கூறினார்.

மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் உயிர்ச்சேதமற்ற முறையில் வெடிகுண்டை நாடாளுமன்றத்தில் வீசுவது; இதை செய்து முடித்து தப்பிக்காமல் கைதாகி நீதிமன்றத்தில் நமது கருத்தை வெளிப்படுத்துவது; இருவர் செல்வது என முடிவாகியது. 

இரண்டு நாள் விவாதித்து முடிவெடுத்தனர். 1929 ஏப்ரல் 8ம் தேதி இரு மசோதாவும் நிறைவேறுகிறது என கவர்னர் ஜெனரல் அறிவிக்கிற போது பகத்சிங்கும், பட்டுகேஸ்வரதத்தும் குண்டு வீசினார்கள். இதையொட்டி கைது செய்யப்பட்டனர்.

  லாகூர் சிறைச்சாலையில் ஏராளமான புரட்சியாளர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர்.  பகத்சிங் சிறைக்கு சென்றபிறகு அரசியல் கைதிகளுக்கான உரிமைகோரி பகத்சிங் தலைமையில் அரசியல் கைதிகள் அணிதிரட்டப்பட்டு உண்ணாவிரதம் நடைபெற்றது. 1929 ஜூனில் நவ ஜவான் பாரத் சபா சார்பில் லாகூரில், அமிர்தசரஸில் உண்ணாவிரதத்தின் வெற்றிக்காக பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் பகத்சிங்கின் தந்தை சர்தார் கிஷன் சிங் கலந்து கொண்டு பேசினார்.

நவ ஜவான் பாரத் சபா அகில இந்திய அளவில் பகத்சிங் மற்றும் பட்டு கேஸ்வர தத் தினத்தை அனுஷ்டிக்க அறைகூவல் விட்டது. உண்ணாவிரதம் ஊர்வலம் பொதுக்கூட்டம் என மக்கள், இளைஞர்கள் திரளாக பங்குபெற்றனர். 1929 டிசம்பர் 29ல் லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை சுகாசினி நம்பியார் தலைமை தாங்கினார். உண்ணாவிரதம் இருந்து மறைந்த ஜதீன் தாசுக்கு வீர அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சமரச போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

1930-ல் காந்தி சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது அதில் சபா, இளைஞர்களை ஈடுபடச் செய்தது. பஞ்சாப் காங்கிரஸ் கட்சி 1930 பிப்ரவரியில் உண்ணாவிரதம் அனுஷ்டித்தது. இதில் சபாவும் கலந்துகொண்டு லாகூர் சதி வழக்கு நிதி திரட்டியது; காங்கிரஸ் இதை எதிர்த்தது.

1930 மார்ச் 20 நவ ஜவான் பாரத் சபா ‘மீரட் தினம்’ அனுஷ்டித்தது. பிரிட்டிஷ் அரசு, கம்யூனிஸ்டுகள் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்ததை கண்டித்து இந்த தினத்தை கடைபிடித்தனர். ஊர்வலம், பொதுக்கூட்டம், நிதி வசூலும் நடத்தினர்.

இந்த நடவடிக்கைகள் மூலம் நவ ஜவான் பாரத் சபாவிற்கு மக்கள் செல்வாக்கு பெருகியது. காங்கிரஸ் கட்சி என்ன முடிவெடுத்தாலும் பஞ்சாபிலும் மற்றும் உத்தரபிரதேசத்தின் ஒரு பகுதியிலும் மக்கள் சபாவின் பின்னால் அணி திரண்டனர். இது பிரிட்டிஷ் அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பிரிட்டிஷ் அரசு 1930 ஜூன் 23 அன்று நவ ஜவான் பாரத் சபாவை தடை செய்தது. அதன் அலுவலகங்களை சோதனையிட்டு தலைவர்களை கைது செய்தது.

இதைத்தொடர்ந்து 1930ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி மக்கள் போராடினார்கள். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி, நவ ஜவான் பாரத் சபா சார்பில் ‘மனு கமிட்டிகள்’ அமைக்கப்பட்டன. அந்த கமிட்டிகள் சார்பில் சுமார் 15 மாவட்டங்களுக்கும் மேல் மக்களிடம் 3 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் மனுக்களை பெற்று வெள்ளை அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்தனர்.  1931 பிப்ரவரி 17ம் தேதி பகத்சிங் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பஞ்சாப் குறிப்பாக லாகூரில் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. ஏராளமான மக்கள் திரண்ட, சுமார்  15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடிய கூட்டங்களில் தலைவர்கள் பேசினார்கள். பகத்சிங் உள்ளிட்ட 3 பேரையும் விடுதலை செய்ய அவர்கள் வலியுறுத்தினார்கள். நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் அதிகமாகியது. ஆனாலும் வெள்ளை அரசு புரட்சியாளர்களை தீவிரமாக அடக்கியது. அதற்கு காங்கிரஸ் தலைமையும் ஆதரவாக இருந்தது. கடைசியில் 1931 மார்ச் 23 அன்று பகத் சிங் உட்பட மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

இக்காலத்தில் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, பகத்சிங் உள்ளிட்ட மூன்று பேரையும் தூக்கிலிடக் கூடாது என காந்தி கோரிக்கை வைத்திருந்தால், மூன்று பேரையும் மரண தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். ஆனால், காந்தி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சட்ட மறுப்பு இயக்கத்தை ஒத்தி வைப்பது; அரசியல் கைதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தவிர மற்றவர்களை விடுவிப்பது என்று ஒப்பந்தம் போட்டார். இதை நவ ஜவான் பாரத் சபா மட்டுமல்ல.. காங்கிரஸ் தலைவர்களே கடுமையாக விமர்சித்தனர். இதனால் 1931 மார்ச் 25 காங்கிரஸ் மகா சபைக்கு வந்த காந்திக்கு நவ ஜவான் பாரத் சபா கருப்புக் கொடி காட்டியது. அதேநேரத்தில் நவ ஜவான் பாரத் சபா மாநாடு நேதாஜி தலைமையில் கூடியது; காங்கிரஸ் தலைமையை இந்த மாநாடு கண்டித்தது.

1931 ஏப்ரல் 28-ல் நவ ஜவான் பாரத் சபாவின் பஞ்சாப் தலைவர்கள் லாகூரில் சந்தித்தனர். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு கமிட்டி அமைத்தனர். அது உழைப்பாளிகள் இல்லம், கூட்ட அரங்கம், நூலகம் கட்டவும், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்யவும் திட்டமிட்டது. இந்த திட்டத்தை கூட காந்தி ஏற்கவில்லை.

இதன்பிறகு நவ ஜவான் பாரத் சபாவின் செயல்பாட்டு தளம் சுருங்கியது; சூழல்களும் மாறிவிட்டன. மாற்றுக் கொள்கையில் தெளிவின்மை; நடுத்தர வர்க்க இளைஞர்களின் குணாம்சம்; தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடு ஆகியவை சபாவின் பலவீனத்திற்கு காரணமாக அமைந்தது.

மகாத்மா காந்திக்கு சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு பேரும் புகழும் இருந்ததோ அதே அளவிற்கு பகத்சிங் இருக்கும்போது அவருக்கு பேரும் புகழும் இருந்தது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமையா குறிப்பிடுகின்றார். அப்படிப்பட்ட பகத்சிங், சிறை வாழ்க்கை காலத்தில் தனிநபர் வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என உணர்ந்து மக்களை திரட்டி போராட இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த நோக்கத்துடனே சிறையில் இருந்தபடி நவ ஜவான் பாரத் சபாவை இயக்க ஆரம்பித்து வழிகாட்டினார். ஜனங்களுக்காக நடத்தப்படும் புரட்சி பொதுஜனங்களை திரட்டி நடத்தப்படவேண்டும் என்று அறைகூவி அழைத்தார்.

பகத்சிங் ஒரு சிறந்த புரட்சியாளன் மட்டுமல்ல.. புரட்சியை நடத்துவதற்கு அமைப்பு அவசியமானது; அந்த அமைப்பிற்கு கொள்கை மிக அவசியமானது; அந்த கொள்கையை நிறைவேற்றுவதற்கு மக்கள் சக்தியை வென்றெடுப்பது மிக மிக அவசியமானது என்பதை உணர்ந்து தனது குறுகிய கால வாழ்க்கையில் மிகப் பெரும் சாதனையை நிகழ்த்தி சென்றிருக்கிறார்.

89 இனம், இனக்குழு, தேசம் குறித்த மார்க்சிய கண்ணோட்டம்

  அ.பாக்கியம் காரல் மார்க்ஸ் , ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் இருவரும் மனித சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் மூல...