Pages

வியாழன், ஏப்ரல் 24, 2025

17 வெள்ளை மாளிகையின் கருப்பு அறிக்கையும் சீன அரசின் வெள்ளை அறிக்கையும்

 



அமெரிக்காவில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் சித்தாந்த மோதல் தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். டொனால்ட் ட்ரம்ப் வலுவான சித்தாந்த நிலைபாடுகளை கொண்டிருக்காவிட்டாலும் அவரது குழு சீனாவுக்கு எதிராக சித்தாந்தத்தை வலுவாகப் பயன்படுத்துவோம் என்று அறிவித்திருக்கிறது. இதற்கு அர்த்தம் என்ன? ஜோபைடன் ஆட்சியில் இருக்கிற பொழுது சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு எல்ஜிபிடிக்யூ பிரச்சனை, பெண்களின் உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றை பயன்படுத்தினார். டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவில் உள்நாட்டு கிளர்ச்சிகளை உருவாக்குவதற்கு எடுத்துக் கொண்டிருக்க கூடிய கருவி மதசுதந்திரம் என்ற கருவியாகும். இதற்காக நிதி ஒதுக்கி மதரீதியான மோதல்களை உருவாக்குவது என்பதுதான் இந்த மத சுதந்திரத்திற்கு பின்னால் இருக்கக்கூடிய சித்தாந்தம் ஆகும்.

அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் சீனாவில் மதங்கள் குறித்து  முரண்பாடான பல பிரச்சாரங்களை ஊடகங்களில் தொடர்ந்து செய்து வருகிறார்கள். சீன சமூகத்தில் மதங்களில் எழுச்சி ஏற்பட்டு அதிகமாக மத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்ற பிரச்சாரம் ஒரு பக்கமும், மறுபுறத்தில் மதங்களை செயல்பட விடாமல் அடக்குகிறார்கள், மதவாதிகளை துன்புறுத்துகிறார்கள், சிறைப்படுத்துகிறார்கள் என்ற பிரச்சாரத்தையும் ஏக காலத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு அரசியல் சார்ந்த பிரச்சாரம் என்பதை அனைவரும் அறிவார்கள். 1999 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா, சீனாவில் மத சுதந்திரம் பற்றிய அறிக்கைகளை சீனாவுக்கு எதிராக தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. 2020 ஆம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர அமைப்பு என்ற பெயரில் அமெரிக்க நிர்வாகம் பல நாடுகளில் தலையிடுவதற்கும், மதம் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுகிறது. அதில் ஒன்று சீனாவை குறிவைத்து தாக்குவதாகும். இதற்காக தனிஅறிக்கை தயாரித்து பிரச்சாரம் செய்கிறது. சீனாவில் சமீப காலங்களில் என்ன நடக்கிறது என்பதை இன்று உலகம் அறிய ஆரம்பித்து விட்டதனால் அமெரிக்காவின் பிரச்சாரத்திற்கு பழைய காலத்தில் கிடைத்த மவுசு தற்போது கிடைக்கவில்லை. அதேபோன்று சீனாவிலும் வளர்ச்சிக்கு ஏற்ற மாற்றங்களை செய்வதிலும் முன்னேறி உள்ளனர்.

சீனாவில் மதம் தொடர்பான கொள்கை முடிவுகளில் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றங்களும், மேம்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1977 ஆம் ஆண்டு சீர்திருத்தம் ஆரம்பித்த பிறகு அதுவரை கடைபிடிக்கப்பட்ட மத நம்பிக்கை சுதந்திரக் கொள்கையில் இருந்த தவறுகளை சரி செய்து மாற்றிக் கொண்டனர். 1982 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான தீர்மானம் ஆகும். 1997 ஆம் ஆண்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில்   மதக் கொள்கைகள் அமலான விதம் பற்றி வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக 2004 ஆம் ஆண்டு சீன அரசாங்கம் மதம் தொடர்பாக நடைமுறையில் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான பிரச்சனைகளை அணுகுவதற்கு சட்ட திருத்தங்களையும் விதிகளையும் திருத்தி அமைத்தது. முதல் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை துல்லியமாக ஆய்வு செய்து 2018ஆம் ஆண்டு சீன அரசாங்கம் (State  council of information office) மீண்டும் ஒரு வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள். இன்றைய ஜனாதிபதி ஜி ஜின் பிங் பொறுப்பேற்ற பிறகு மதத்தை ஒடுக்குகிறார்கள் என்ற பிரச்சாரத்தை உச்சபட்சமாக அமெரிக்காவும், ஏகாதிபத்திய நாடுகளும் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சீனாவின் வெள்ளை அறிக்கையே அமெரிக்க வெள்ளை மாளிகையின் பொய்களை தவிடுபொடியாக்கியது. வெள்ளை மாளிகையின் முகத்தில் கருப்பு மை பூசியது.

ஒரு நாத்திக கட்சி ஆட்சிசெய்யும் நாட்டில் மத விசுவாசிகளின் எண்ணிக்கை 1997 இல் 10 கோடி என்பது 2018 ஆம் ஆண்டு 20 கோடியாக அதிகரித்து உள்ளது. இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைக்கு உகந்ததா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சீனாவின் வெள்ளை அறிக்கையை விளக்கிப் பேசிய சீன அதிகாரி ஒருவர் இதுபற்றி எல்லாம் தெளிவாக கூறினார்.  ‘‘மறைந்த பிரதமர் சௌவ் என் லாய் 1950 ஆம் ஆண்டு ஒரு மதிப்பீட்டை செய்தார். அதன்படி சீனாவில் பல கோடிக்கணக்கானோர்  தத்தை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கோயிலுக்கு செல்வதற்கு பதிலாக தங்கள் இதயங்களில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட அனைவரையும் கருத்தில் கொண்டு சுமார் 10 கோடி மத விசுவாசிகள் சீனாவில் இருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தோராயமான எண்ணிக்கைதான் 1997ஆம் ஆண்டு முதல் வெள்ளை அறிக்கை உருவாகும் வரை ஒரு வரையறையாக இருந்தது. அப்போது சீனாவின் மக்கள் தொகை 60 கோடி. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு துல்லியமான முறையில் கணக்கெடுப்புகளை நடத்தி தற்போது சீனாவில் 20 கோடி மதவிசுவாசிகள் இருக்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் மக்கள் தொகை  130 கோடி ஆகும். இந்த மக்கள் தொகை வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை சீனாவில், 10 கோடியில் இருந்து 20 கோடியாக அதிகரிப்பது இயல்பானதுதான்’’ என்றார்.

1998 ஆம் ஆண்டில், மத விவகாரங்களுக்கான தலைமை அதிகாரிகளின் தேசிய மாநாட்டின் அறிக்கை, "சோசலிசத்தின் ஆரம்ப கட்டத்தில், மதம் தொடர்ந்து இருக்கும் என்பது மட்டுமல்லாமல், அது ஓரளவிற்கும் சில அம்சங்களிலும் வளரக்கூடும்" என்று கூறியது. மறுபுறத்தில் சீனாவில் மத விசுவாசிகள் சட்டபூர்மாக வளர்வதற்கு தடை இல்லை என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவில் இருக்கக்கூடிய மசூதிகளை விட 12 மடங்கு அதிகமான மசூதிகள் சீனாவில் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மறுபுறத்தில் சீனாவில் 130 கோடி(2018 ல்) மக்கள் தொகையில் 20 கோடி என்பது மிகச் சிறிய சதவீதமாகும். சமீபத்திய ஆய்வுகள் முதியவர்களும் இளைஞர்களும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கணிசமாக குறைந்து இருக்கிறது என்று தரவுகளை வெளிப்படுத்துகிறது. 2012 ஆம் ஆண்டில் சீன முதியவர்களில் 53 சதவீதம் பேர், வருடத்திற்கு சில முறையாவது மத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 2018 ஆம் ஆண்டு இது 45 சதவீதமாக குறைந்தது. 2021 ஆம் ஆண்டில் இது 35 சதவீதமாக குறைந்து இருக்கிறது என்று சீன பொது சமூக ஆய்வு (CGSS) தெரிவிக்கிறது. இளைஞர்கள் மத்தியில் இது மிகமிக குறைவாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கட்சி உறுப்பினர்களும் மத நம்பிக்கை சுதந்திரமும்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத நம்பிக்கை சுதந்திரக் கொள்கையை அறிவித்து செயல்படுத்துவதினால் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மத சுதந்திரத்தை முழுமையாக நம்பலாம் என்று அர்த்தம் அல்ல. மத நம்பிக்கை சுதந்திர கொள்கை என்பது நாட்டில் இருக்கக்கூடிய குடிமக்களுக்கான உரிமைகள் ஆகும். இது கட்சி உறுப்பினர்களுக்கு பொருந்தாது. சீனாவில் உள்ள சராசரி குடிமகனை போல் அல்லாமல் கட்சி உறுப்பினர் ஒரு மார்க்சிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஒரு இயக்கவியல் பொருள் முதல்வாதியாக, நாத்திகவாதியாக இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மத நம்பிக்கையாளராக இருக்க முடியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர் சேர்க்கை பற்றி கூறுகிற பொழுது, பக்தி உள்ள மத நம்பிக்கையாளர்களையோ அல்லது வலுவான மத உணர்வுகளை கொண்டவர்களையோ அவசர அவசரமாக கட்சியில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இன சிறுபான்மையினர்கள், அடிமட்டத்தில் வாழக்கூடிய கட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே மத நம்பிக்கையில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள். மேலும் அவர்கள் அந்தப் பாரம்பரிய திருமணம் அல்லது இறுதிச் சடங்குகள் அல்லது மத முக்கியத்துவம் வாய்ந்த வெகுமக்கள் விழாக்களில் பங்கேற்க மறுத்தால் அவர்கள் தங்களை துண்டித்துக் கொண்டு தனிமைப்படக்கூடிய நிலைமை உருவாகிறது. எனவே சிறுபான்மையினர் இடையே வாழும் கட்சி உறுப்பினர்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யும் விதிகளை பயன்படுத்துகிற பொழுது, அவர்கள் பொதுமக்களிடமிருந்து துண்டித்துக் கொள்ளாத வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். காரணம் இன சிறுபான்மையர் மத்தியில் மதவிழாக்கள் இனத்துடன் பின்னிப்பிணைந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மதப் பிரச்சினைகளை குறித்து செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிடும்போது தற்போதைய கொள்கையை மீறாமலும் நம்பிக்கை கொண்ட மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமலும் இருக்க விவேகமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது உறுப்பினர்களை தரம் வாய்ந்தவர்களாக மாற்றியதன் மூலமாகத்தான் இதை எல்லாம் வெற்றிகரமாக அமலாக்க முடிந்தது. ஒரு குறிப்பிட்ட பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து ஊழியர்களும் மார்க்சிய மத கோட்பாட்டை முறையாக படிக்கவும், மதப் பிரச்சினையில் கட்சியின் அடிப்படை கண்ணோட்டத்தையும், கொள்கையையும் முழுமையாக புரிந்து கொள்ளவும், மத நம்பிக்கை கொண்ட மக்களுடன் நெருங்கிய உறவுகளை பேணவும், மத விவகாரங்களுக்கான அரசாங்க அமைப்புகளை நாம் வலுப்படுத்த வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களுடைய செயல்பாட்டை வலியுறுத்துகிறது.

கட்சியின் மத கொள்கை மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையின் அறிவியல் தத்துவார்த்த அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கையாகும். இந்தக் கொள்கை ஒரு தீர்க்கமான உத்தி என்பதை அனைத்து கட்சி உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கட்சி வலியுறுத்தி உள்ளது. மதத்தை ஒரு அந்நிய சித்தாந்தம் என்று எளிய முறையில் கையாளக்கூடாது. மேலும் அதன் நேர்மறையான, அர்த்தமுள்ள உள்ளடக்கங்களுடன் நிஜ வாழ்க்கையில் ஆக்கபூர் வமான   பங்கு  வகிக்க முடியும் என்பதை உணர வேண்டும். மதம் ஒரு புற நிலை சமூக நிகழ்வு ஆகும். புறநிலை சட்டத்தின்படி உருவாகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன அரசாங்கமும் சீனாவில் மத நம்பிக்கையாளர்களும், மத அமைப்புகளும், வழிபாட்டு முறைகளும் எந்த மோதலும் இன்றி மக்களின் வாழ்க்கையில் இயல்பான ஒன்றாக நடைபெறுவதற்கு வழி வகுத்துள்ளது. அதே நேரத்தில் பொது வாழ்க்கையிலும், மூடநம்பிக்கைகளைப் பெருக்கக் கூடிய வகையிலும் இருப்பதை தடை செய்துள்ளது. அரசியல் ஆயுதமாக மதத்தை பயன்படுத்தக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறது. சோஷலிச சமூகத்தை நிர்மாணிப்பதில் மதத்தை எவ்வாறு அணுகுவது  என்பதை  திறம்பட சீன கட்சியும் அரசும் வெற்றிகரமாக  கடைபிடித்து வருகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத வட்டாரங்களுடன் நல்ல உறவுகளை பேணுகிறது. அவர்களுடன் ஒருங்கிணைந்த தேசபக்த ஐக்கிய முன்னணி உருவாக்கி அதன் மூலம் மேலும் உறவுகளை பலப்படுத்துகிறது. 1991 முதல் மாநில அளவிலான கட்சித் தலைவர்கள் ஆண்டுதோறும் தேசிய மத குழுக்களின் தலைவர்களுடன் இணைந்து கருத்தரங்குகளை நடத்தி அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இவை தவிர பரஸ்பர புரிதல் நட்புறவை மேம்படுத்தும் வகையில் கட்சி மற்ற அரசாங்கத் தலைவர்கள் நாடு முழுவதும் மதப் பிரமுகர்களுடன் உறவுகளை பேணுவதற்கான அமைப்புகளை நிறுவியுள்ளார்கள்.

சீனாவில் மத விவகாரங்கள் தொடர்பான பணிகள் குறித்து நடைபெற்ற மாநாட்டில் இன்றைய ஜனாதிபதி ஜி ஜின் பிங் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். "சீனாவில் உள்ள மதங்கள் அதிக அளவில் சீன நோக்கு நிலையை கொண்டுள்ளன, மத குழுக்கள் தாய் நாடு, சீன தேசம், சீன கலாச்சாரம், சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன பண்புகளுடன் கூடிய சோசலிசம் ஆகியவற்றின் மீதான தங்கள் அங்கீகாரத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்கள்" என்றார். "மேலும் சீனாவை அனைத்து வகையிலும் ஒரு சிறந்த நவீன சோசலிச நாடாக வளர்த்தெடுக்கவும், தேசிய மறுமலர்ச்சிக்கான சீன கனவை நினைவாக்கவும், மத நம்பிக்கையாளர்களை பொதுமக்களுடன் இணைந்து பணியாற்ற, சிறப்பாக அணி திரட்டவும் வழி காட்டவும் முயற்சிகள் தேவை" என்று குறிப்பிட்டார்.

சீனாவில் மதங்களின் தோற்றம் என்பது உலகின் இதர நாகரிகங்களிலிருந்து தோன்றிய விதத்தில் மாறுபட்டதாக இருந்தது. அந்நிய சக்திகளின் தலையிடுதல் நீண்ட காலம் இல்லாமல் மதக்கட்டமைப்பு உருவானது. மதம் என்பதை விட வாழ்க்கைக்கான நெறிமுறைகள் என்ற அடிப்படையிலேயே கன்பியூஸியம் தாவோயிசம், மென்சியம், போன்ற பாரம்பரிய மதங்கள் செயல்பட்டன. பௌத்தம் உட்பட பிற்காலத்தில் உள்நுழைந்த மதங்களும் சீன மயமாக்க அடிப்படையிலேயே மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதனால்தான் புரட்சிக்கு பிறகு சீனாவில் மதங்களின் மறுபிறப்பு என்ற புதிய கண்ணோட்டம் உருவாகியது. சீனாவில் உலகின் இதரப் பகுதிகளில் நடந்தது போல் பெரும் மத மோதல்கள் எதுவும் தற்போது வரை நடைபெறவில்லை. புரட்சிக்குப் பிந்திய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசு மார்க்சியத்தின்  மதம் தொடர்பான கோட்பாடுகளை சீன நிலைமைக்கு ஏற்ற வகையில் தகவமைத்து வெற்றி நடை போட்டு வருகின்றது.

வியாழன், ஏப்ரல் 17, 2025

16 தேசபக்த மதங்களும் தேச விரோத செயல்களும்

 



மத அமைப்புகளின் நம்பிக்கைகள் தேச எல்லைகளைக் கடந்து இருந்தாலும் ஒவ்வொரு தேசத்தின் எல்லைக்குள் தான் செயல்முறைகள் அமைந்திருக்கும். எனவே மதத்தை அரசியலுக்கு உட்படுத்தி தேசத்தின் பொது நன்மைக்கு எதிராக நிறுத்துவதையும். செயல்படுவதையும் சீன அரசாங்கம் அனுமதிப்பது இல்லை. சீனாவில் மதங்களை வழிநடத்துவதற்கு தேசபக்த மத அமைப்புகளை சீன மக்கள் குடியரசு அமைத்துள்ளது. 1955ஆம் ஆண்டுகளிலேயே இது போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு விட்டன. இந்த தேசபக்த சங்கங்கள் மத நடவடிக்கைகளை இயல்பாக்குவதற்கான உத்திரவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் சீன பௌத்த சங்கம், சீன தாவோயிஸ்ட் சங்கம், சீன இஸ்லாமிய சங்கம், சீன கத்தோலிக்க தேசபக்த சங்கம், சீன கத்தோலிக்க மத விவகாரங்கள் குழு, சீன கத்தோலிக்க பிஷப் மாநாடு, சீன புராட்டஸ்டன்ட் மூன்று சுய தேசபக்த இயக்கம், சீன கிறிஸ்தவ கவுன்சில் என 8 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு செயல்படுகிறது. இவை தவிர மதத் தன்மையைக் கொண்ட பல சமூக குழுக்கள் உள்ளூர் அமைப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் நடத்துவதற்கான செலவுகளை மத அமைப்புகள் எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்ற கேள்வியும் அது எப்படி ஒழுங்கு படுத்தப்படுகிறது என்ற நடைமுறையும் முக்கியமானது. குறிப்பிட்ட அளவு அடிப்படையான விஷயங்களுக்கான செலவுகள் அரசின் உதவி மூலம் நடக்கிறது. அதற்கு மேலான செலவுகளை சமாளிப்பதற்கு ஒவ்வொரு மத அமைப்பும் சுய மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இயல்பாகவே மத அமைப்புக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சொத்துக்கள் இருக்கிறது. இந்த சொத்துக்களில் இருந்து வரக்கூடிய வாடகையை முறையாக நிர்வகித்து செலவு செய்திட வேண்டும். மத விசுவாசிகளிடம் சிறிய அளவு நன்கொடைகளை பெற்றுக் கொள்ளலாம். கட்டாய நன்கொடை வாங்குவது தடை செய்யப்பட்டது.  மத நிறுவனங்கள் உள்ளூரில் வசிப்பவர்களிடம் பெரும் தொகை நன்கொடையாக பெறுகிறபொழுது உரிய அரசுத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

மேற்கண்ட வழிபாட்டுத் தலங்களின் வருவாய் மற்றும் செலவினம் தொடர்பாக மேலும்  திட்டவட்டமான முறையில் செயல்படுவதற்காக 2018 ஆம் ஆண்டு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. மத நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பதற்கும், இலக்கியங்களை வெளியிடவும், மத குருமார்களை பயிற்றுவிக்கவும் நன்கொடைகளை சேகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. புதிய திருத்தத்தின்படி நன்கொடையின் அளவு அதிகபட்சமாக ஒரு லட்சம் யுவான் என்று தீர்மானிக்கப்பட்டது.

2004ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் 2005 ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் சீனாவில் மத நிலமைகளிலும் அதன் சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாறி வருகின்ற சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய விஷயங்களை கையாளுவதற்கு பழைய சட்டங்கள் போதுமானதாக இல்லை. எனவே காலத்தின் தேவை கருதி 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் இன்னும் திட்டவட்டமான முறையில் செயல்படுத்தப்பட்டது. ஆன்லைன் மத விவகாரங்கள் தற்போது புதிய வடிவம் எடுத்து இருந்தது. அவற்றை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தப்பட்டது. மதக் கல்வி மற்றும் மத விழாக்கள் என்ற பெயரால் வரைமுறையற்ற நேரங்களில் நடப்பதை கட்டுப்படுத்தக்கூடிய விதிகளும் கொண்டுவரப்பட்டன. சீன மக்கள் குடியரசில் மத விவகாரங்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு சார்பில் மத விவகாரங்களுக்கான ஐக்கிய முன்னணி பணியகம் என்ற துறை இந்த புதிய சட்ட திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

அதே நேரத்தில் சி பிராந்தியங்களில் சில நபர்கள் அல்லது அமைப்புகள் இன ஒற்றுமைக்கும், சமூகத்தின் நிலைத்த தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்ககூடிய முறையிலும், மதத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர். திருத்தப்பட்ட விதிமுறைகள் இதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது. சட்டரீதியான மத நடவடிக்கைகளை பாதுகாக்கவும், சட்ட விரோதமான நடவடிக்கைகளை தடுக்கவும் இந்த திருத்தத்தின் மூலம் முன்னுரிமை கடமையாக மாற்றப்பட்டது.

கடவுள் சந்தைமயமாவதை கட்டுப்படுத்தல்

பல்வேறு விதமான மாற்றங்கள் சீன சமூகத்தில் முன்னோக்கி நடந்து கொண்டிருந்த பொழுது மதங்களையும் கடவுள் வழிபாட்டையும் வணிகமயமாக்கக்கூடிய செயல்களும் அதிகமாகின. பௌத்தமும் தாவோயிசமும் பந்தளவில் வணிக மயமாக்கலுக்கு பயன்படுத்தப்பட்டது. மிகப்பெரிய அளவு கடவுள் சிலைகளையும் கோயில்களையும் கட்டுவதற்கு பலர் முதலீடு செய்தனர். இதன் மூலம் பணத்தின் மீது குறி வைத்தார்கள். இந்த மத வணிகத்தின் மூலம் கிடைத்த பணத்தை மூலதனச் சந்தைக்கு ஒப்பந்தம் செய்து பங்கு சந்தையில் பட்டியலிட்டினர். மேலும் பௌத்த மற்றும் தாவோயிச கோயில்கள் இல்லாத இடங்களில் மத சேவைகள் என்ற பெயரால் புதிய புதிய நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்து, உண்டியல்களை வைத்து பணத்தை சம்பாதித்தனர். சில பௌத்த துறவிகளும், தாவோயிஸ்ட் குருமார்களும் வணிகமய செல்வாக்கு, புகழ் மற்றும் செல்வத்தை நோக்கி ஓடினார்கள். சாத்தியமான வழிகளில் எல்லாம் இவர்கள், பணம் சம்பாதிக்க முயற்சித்தார்கள்.

சீனத்தின் ஒட்டுமொத்தமான சமூகத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத வணிகமயமாக்கப்பட்ட மத நடவடிக்கைகளை புதிய சட்ட விதிகள் மூலம் அரசு எதிர்கொண்டது. அரசின் 11 துறைகளை ஒருங்கிணைத்து மதத்தின் வணிகமய செயல்களுக்கு எதிராக தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்தது. அது மட்டுமல்ல சட்டபூர்வமான வழக்குகளை தொடுத்து தீர்வுகண்டனர். சட்ட விரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. இந்த புத்தர் சிலைகள் தரமற்ற முறையில் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கட்டப்பட்டது. மத வழிபாட்டு தலங்களை கடந்து சட்ட விரோதமான முறையில் பணம் வசூலிப்பதற்காக நிறுவப்பட்ட இடங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பௌத்த கோயில்களையும், தாவோயிச கோயில்களையும் இணையத்தில் வெளியிட்டு, வணிகமய போலியான கோயில்கள் தடுக்கப்பட்டன.

மதம் வணிகமயமாக்கப்படுவது எவ்வாறு மதத்திற்கும், மத நம்பிக்கைக்கு எதிரானது என்பதை சீன மக்கள் குடியரசு மக்களிடம் பிரச்சாரத்தை எடுத்துச் சென்றது. சட்டங்கள் மட்டும் அனைத்தையும் தீர்த்து விடாது. மக்களிடம் அரசியல் விஞ்ஞான ரீதியில் கருத்துக்களை எடுத்துச் செல்வதும் தீர்வுக்கான வழியாகும். போலியான துறவிகளும், போலியான கோயில்களை உருவாக்கி பணம் சம்பாதித்து அதன் மூலம் சில விசுவாசிகளை ஈர்க்கிறார்கள். இவர்களின் நடைமுறை பௌத்தம் மற்றும் தாவோயிசத்தின் அடிப்படை நலன்களை சேதப்படுத்துகிறது. புகழையும், செல்வத்தையும் தேடுவது மதத்தின் அடிப்படை நெறிகளுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள். இந்த வணிகமயத்தின் மூலமாக மதங்களின் நல்ல நடவடிக்கைகள், அதன் வளர்ச்சிகளும் டைபடுகின்றன. சீன மக்கள் குடியரசு மதத்தின் வணிக மையத்திற்கு எதிராக மிகப்பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு சமூக அமைதியை பாதுகாக்கிறது.

சர்வதேச தன்மை உள்ள மதங்களும் சீன அரசும்

சீனாவில் உள்ள தேசிய மதங்களில் பௌத்தம், இஸ்லாம், கத்தோலிக்கம், புராட்டஸ்டன்ட் ஆகிய மதங்கள் உலக மதங்களாகவும் இருக்கிறது. இவை அனைத்தும் அந்தந்த நாட்டின் சமூகங்களில் விரிவான செல்வாக்கை செலுத்துகின்றன. ஐரோப்பா, வடஅமெரிக்கா, லத்தீன்அமெரிக்கா போன்ற இடங்களில் கத்தோலிக்கமும், புராட்டஸ்ட்டன்டும் பரவலாக உள்ளது. ஜப்பான், தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தம் வலுவாக உள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த மதங்களில் சில மதங்கள் சில நாடுகளில் அரச மதங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நட்பு ரீதியாக சர்வதேச மத தொடர்புகளை தீவிரமாக வளர்ப்பது சீன மக்கள் குடியரசின் கொள்கையாக உள்ளது. அதே நேரத்தில் சில நாடுகளில் உள்ள பிற்போக்குத்தனமான மத குழுக்களை சீன நிலப்பகுதிக்குள் ஊடுருவ செய்து கேடு விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த தேச விரோத வெளிநாட்டு மத சக்திகளை சீனா உறுதியாக தடுத்து வருகிறது.

சீனாவில் உள்ள மதவாதிகள் வெளிநாட்டில் உள்ள மத விசுவாசிகளுடன் பரஸ்பர வருகைகள் மற்றும் நட்பு ரீதியான தொடர்புகளில் ஈடுபடலாம். இதன் மூலம் மதத்துறையில் கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை வளர்க்க முடியும். ஆனால் இந்த தொடர்புகளில் சீனத்தின் மதவாதிகள் சுயாதீனமான, சுயராஜ்ய திருச்சபையின் கொள்கைகளை உறுதியாக கடைபிடிக்க வேண்டும். சீனாவில் உள்ள மத அமைப்புகள் வெளிநாட்டு சர்ச் அமைப்புகள் மூலம் நிதி திரட்டுவது கூடாது. மத நோக்கங்களுக்காக வெளிநாட்டில் இருந்து எந்த மானியத்தையும் பெறக் கூடாது. பெரும் தொகைகளை நன்கொடை வாங்க வேண்டும் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

சீன மத நிறுவனங்கள் 80க்கும் மேற்பட்ட சர்வதேச மத அமைப்புகளுடன் உறவுகளை பராமரித்து வருகிறது. பௌத்தம் மற்றும் தாவோயிசத்தை பின்பற்றுபவர்கள், சர்வதேச மன்றங்களை நடத்தி வருகின்றனர். சீன இஸ்லாமிய சங்கம் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் துருக்கி, மலேசிய நாடுகளில் இஸ்லாமிய கலாச்சார கண்காட்சி, கலைக்கண்காட்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியது. சீனாவில் இருக்கக்கூடிய புராட்டஸ்டன்ட் மதமும் அமெரிக்காவில் இருக்கக்கூடிய புராட்டஸ்டன்ட் மதமும் இணைந்து சீன அமெரிக்க புராட்டஸ்டன்ட் சர்ச் தலைவர்கள் மன்றத்தை நடத்தி உள்ளது. சீன ஜெர்மனி நாடுகளுக்கு இடையே மதங்கள் ஒன்றிணைந்து பல கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன.

வாடிகன் மதபீடமும் சீனாவில் கத்தோலிக்க  மதமும்

2018 ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசுகிற பொழுது பல வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சீனாவில் இருக்கக்கூடிய கத்தோலிக்க மதத்திற்கு வாடிகன் பிஷப்புகளை நியமிப்பது தொடர்பான பிரச்சனையை தொடர்ந்து பலமுறை எழுப்பினார்கள். சீனாவின் அதிகாரி இதற்கான பதிலை தெரிவிக்கிற பொழுது மத உறவுகள் தொடர்பாக வாடிகனுடன் நல்லுறவுகள் பேணப்படுகிறது. தொடர்ந்து பல விஷயங்களில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுகிறது. ஆனால் சீனாவில் இருக்கக்கூடிய கத்தோலிக்க தேவாலயங்களுக்கு பிஷப்புகளை நியமிப்பதற்காக சீன சட்டங்கள் இடம் கொடுக்கவில்லை. "இது தொடர்பாக சீனாவின் அரசியல் அமைப்பு தெளிவான நிபந்தனைகளை கொண்டுள்ளது. சீனாவின் மத அமைப்புகள் மற்றும் விவகாரங்களில் எந்த ஒரு வெளிநாட்டு ஆதிக்கத்திற்கும் உட்பட்டவை அல்ல. இதன் பொருள் எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் சீனாவின் மத விவகாரங்களில் எந்த வகையிலும் தலையிடக்கூடாது. சீன மத வட்டாரங்கள் மத விவகாரங்களின் சுதந்திரம் மற்றும் சுயமேலாண்மை கொள்கையை கடைபிடிக்கின்றன. சீனாவில் கத்தோலிக்கர்களின் மத நடவடிக்கைகளில் மத நம்பிக்கை சுதந்திரம் எந்த விதத்திலும் தடைபடுவது இல்லை’’ என்று பதில் அளித்தார்.

அதே நேரத்தில் வாடிகனுடன் இணக்கத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிவு காணப்படும் என்றும் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவிற்கும் வாடிகனுடன் பிஷப்புகளை நியமிப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுவரை சீனாவில் கத்தோலிக்க மத பிஷப்புகளை அந்த நாட்டின் தேசபக்த மத நிறுவனம் நியமித்து வந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் கூட்டாக நியமிப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்த சரத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சீனாவில் அங்கீகரிக்கப்பட்ட கத்தோலிக்க மதம் சீன தேசபக்த அமைப்புடன் இணைந்துள்ளது. இவை தவிர வாடிகன் போன்ற தொடர்புகளால் மறைமுகமான கத்தோலிக்க அமைப்புகள் செயல்படுவதை வெளிகொண்டுவந்து  அவற்றை சீன சுயாதிபத்திய மதங்களுடன் இணைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஒப்பந்தம் உதவி செய்யும் என்று சீன அரசு கருதுகிறது. இது தற்காலிக ஒப்பந்தம் என்பதை இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் தொடர்பாக சீனாவுடன் நல்லுறவும் நம்பிக்கையும் மேம்பட்டு உள்ளது என்று வாடிகன் திருச்சபை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ஆனால், இன்றும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், சீனாவுக்குள் தலையீடு செய்வதற்காக, வாடிகனின் செல்வாக்கை பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

சீனாவில் அறிவியலுக்கு எதிராக மூடப்பழக்கங்களை வளர்க்கக்கூடிய முறையில், செயல்படும் அமைப்புளும், அந்நிய சக்திகளுடன் சேர்ந்து தேச நலன்களுக்கு விரோதமாக செயல்படும் அமைப்புகளும் தடை செய்யப்படுகிறது. 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு 25 தீய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அமைப்பு பாலூன் காங் அமைப்பாகும். இது சீனாவில் அறிவியலுக்கு புறம்பான சிகிச்சை முறைகளையும், உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய முறையிலும் செயல்பட்டு வந்தது. மேலும் பௌத்தத்தின் பல அம்சங்களை எடுத்துக் கொண்டு தனிநபர் பிம்பத்தை உருவாக்கக்கூடிய செயலில் இறங்கியது. பௌத்த மத அமைப்பு இதற்கு எதிராக பிரச்சாரம் செய்தது. ஒருபுறம், மதவெறியை உருவாக்கி மோதலுக்காக சூழலை உருவாக்கியது. மற்றொரு புறத்தில் ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் இந்த அமைப்பு அங்கு இருக்கும் அரசுகளின் ஆதரவுடன் பயிற்சியாளர்களை, ஆதரவாளர்களை உருவாக்கி சீன அரசுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபட்டது. தொடர்ந்து சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

 

திங்கள், ஏப்ரல் 14, 2025

தோழர் கா. சின்னையா தென் சென்னை கட்சி அமைப்பின் அடித்தளம்.

                                     அஞ்சலி



   1966 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வருகிறார். தனது ஊர்காரரும் தனது தந்தைக்கு  நெருக்கமானவர் சென்னை திருவான்மியூரில் நடத்தி வந்த எஸ்.ஆர்.பி.டூல்ஸ் தொழிற்சாலையில் நிர்வாக பணியில் சேர்ந்தார். நகரத்து வாழ்க்கை ஈடு கொடுக்க முடியாமல் ஓராண்டுக்குள் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு திரும்பி விட்டார். 


அப்பொழுது 1967 ஆம் ஆண்டு புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் கூட்டணியின் சார்பில் தோழர் உமாநாத் போட்டியிட்டார். ஊரில் சுற்றித் தெரிந்த சின்னையா திமுகவினருடன் சேர்ந்து உமாநாத் வெற்றிக்காக தேர்தல் பணியாற்றினார்.


தேர்தல் முடிந்து விட்டது. தொடர்ந்து கிராமத்தில் என்ன செய்வது என்று கேள்வி எழுந்தது வேறு வழியில்லாமல் அதே கம்பெனியில் சேர்வதற்கு தங்கள் ஊரில் இருந்த முதலாளியை சந்தித்து பேசினார். அவர் வசைபாடிவிட்டு சென்னைக்கு வர சொன்னார். சென்னை வந்து அம்பத்தூரில் தங்கி இருந்த பொழுது எஸ்.ஆர்.பி.டூல்ஸ் கம்பெனியிலிருந்து நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்பட்டது. 


ஆனால் தபால் துறையின் கவனக்குறைவால் ஒரு மாதம் கழித்து தான் நேர்காணல் அழைப்பு கிடைத்து. மீண்டும் கம்பெனிக்கு சென்றால் அவரை உள்ளே சேர்க்கவில்லை. எனவே அப்பொழுது விமான நிலையத்தில் வேலைக்கான அழைப்பு வந்து நேர்காணலுக்கு காத்திருந்த பொழுது அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா மரணம் அடைந்து விட்டார் என்பதால் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. 


அதன் பிறகு அம்பத்தூரில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் தற்காலிகமாக வேலை செய்தார். வாழ்க்கை கடினமாக இருந்தது. மீண்டும் எஸ்.ஆர்.பி.டூல்ஸ் தொழிற்சாலைக்குச் சென்று வேலை கேட்ட பொழுது அப்பொழுது முதலாளி வெளிநாடு சென்றதால் நுங்கம்பாக்கத்தில் இருந்த அவரது இல்லத்திற்கு சென்று முதலாளியின் மனைவியை சந்தித்து 1970 ஆம் ஆண்டு மீண்டும் அதே எஸ்.ஆர்.பி.டூல்ஸ் வேலைக்கு சேர்ந்தார். 


சொந்த ஊர் காரர் என்பதால் தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இவர் நிர்வாகத்திற்கு அடி பணிந்து வேலை செய்வார் என்று தான் அவருக்கு இந்தப் பணி கொடுக்கப்பட்டது. 


மரம் சும்மா இருந்தாலும் காற்று இருக்க விடுவதில்லை. அங்கு தொழிற்சங்கம் நிர்வாகத்தின் ஆசைகளை நிறைவேற்றக் கூடியதாகவே இருந்தது. இந்த சூழலில் சோழர் சின்னையா மார்க்சிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்படுத்தி கட்சியில் இணைந்து எஸ்.ஆர்.பி.டூல்ஸ் என்ற தொழிற்சாலைக்குள் ஒரு கிளையும் ஆரம்பித்து விட்டனர். 


இவர்களின் முயற்சியால் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றக்கூடிய வகையில் வேறொரு தொழிற்சங்கத்தை ஆரம்பித்து தொழிலாளர்களை வென்றெடுத்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் அந்த கிளைக்கு தோழர் ஏ.கே.பத்மநாபன் பொறுப்பாக இருந்திருக்கிறார். 

தோழர் சின்னையா அந்த தொழிற்சங்கத்தில் பொருளாளர் பொறுப்பினை வகித்தார். 


பெரும் வேலை நிறுத்தம் செய்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும், கிராஜுவேட்டி, போனஸ் போன்ற அனைத்தும் கிடைக்கச் செய்தனர். முதலாளியால் இந்த சம்பள உயர்வை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பல்வேறு வகையில் அவற்றை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இறுதியில் தொழிற்சாலையை மூடிவிட்டார். 


தொடர்ந்து ஏழு மாதங்கள் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளானார்கள். வேலை நிறுத்தம் பலவீனம் அடைந்தது. ராணிப்பேட்டையில் வேறொரு தொழிற்சாலை ஆரம்பித்து அங்கு உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். 


அங்கு தொழிற்சங்கத்தை ஆரம்பிப்பதற்கு சின்னையா உட்பட பலரும் முயற்சி செய்த பொழுது அவர்கள் அனைவரையும் கைதுசெய்து இரவு முழுவதும் காவல்துறை வாகனத்திலேயே சுற்றிவிட்டு, அவசர கால நிலை என்பதால் உங்களை மிசா சட்டத்தில் அடைக்காமல் இத்தோடு விட்டு விடுகிறோம் என்று அனுப்பி விட்டனர். ஒரே நிபந்தனை இனிமேல் தொழிற்சாலை பக்கம் எட்டிப் பார்க்கக் கூடாது. வந்தால் உங்களைப் பிடித்து மிசாவில் அடைத்து விடுவோம் என்று எச்சரித்தனர். 


ஏழு மாதங்களாக மூடப்பட்ட தொழிற்சாலை திறப்பதற்காக தொழிலாளர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி நிர்வாகத்துடன் தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 


தொழிற்சாலையின் முதலாளி சுப்பிரமணிய செட்டியார் சின்னையா பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டால் நான் பேச்சுவார்த்தைக்கு வர மாட்டேன் என்று அறிவித்து விட்டார். அன்றைக்கு இருந்த தொழிலாளர் நல ஆணையர் தொழிற்சங்கத்தில் இருந்து வந்திருக்கும் ஒருவரை நான் வெளியே போக சொல்ல முடியாது என்று அழுத்தமாக தெரிவித்துவிட்டார். 


சின்னையா பேச்சுவார்த்தையில் இல்லை என்றால் நான் ஆலையை உடனே திறப்பேன். அவர் இருந்தால் தொழிற்சாலையை திறக்க மாட்டேன் என்று அறிவித்தார். நிலைமையை புரிந்து கொண்ட சின்னையா இதர தொழிலாளர்களின் நலம் கருதி பேச்சுவார்த்தைக்கு அவராகவே செல்வதில்லை என்று விலகிக் கொண்டார். 


பேச்சுவார்த்தை முடிவில் தோழர் சின்னையா உட்பட நான்கு சங்க நிர்வாகிகளை மீண்டும் வேலைக்கு சேர்க்க மாட்டேன் என்ற ஒரே நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உடனடியாக கம்பெனியை திறக்கிறேன் என்று சுப்பிரமணிய செட்டியார் அடம்பிடித்தார். 


அனைத்து தொழிலாளர்களின் நலன் கருதி சின்னையா உட்பட நான்கு பேர்களும் வேலைக்கு செல்லவில்லை கம்பெனி உடனடியாக திறக்கப்பட்டது. 


தோழர் சின்னையா வேறு பணிகளுக்காக சில இடங்களில் பணியாற்ற சென்ற பொழுது 1977 ஆம் ஆண்டு கட்சியின் முழு நேர ஊழியராக வரவேண்டும் என்று தோழர் அ.சௌந்தரராஜன் மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகியவர்களின் வேண்டுகோளை ஏற்று முழு நேர ஊழியராக வந்து போக்குவரத்து அரங்கத்தில் பணியாற்றினார். 


அன்றைய தினம் பி ஆர் பரமேஸ்வரன் மாவட்ட செயலாளராக இருந்த பொழுது சின்னயாவை கட்சிப் பணிக்கு பயன்படுத்துவது என்று முடிவு எடுத்து கட்சிப் பணியாற்ற தொடங்கினார். அப்பொழுது ஒன்றுபட்ட சென்னை ஏழு பகுதி குழுக்களாக செயல்பட்டது.  சின்னையா சிந்தாதிரிப்பேட்டை முதல் திருவான்மியூர் பகுதி வரை உள்ள ஒரு நீண்ட தென் சென்னை பகுதி குழுவிற்கு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார். இதற்கு முன்பாக ஒரு அமைப்புக்குழு உருவாக்கப்பட்டு தோழர் எஸ் கே சீனிவாசனை கன்வீனராக கொண்டு தென்சென்னை பகுதி குழு செயல்பட்டது. 


1982 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றுபட்ட சென்னை மாவட்டத்தின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஒரே நேரத்தில் கட்சி செயலாளராகவும் வாலிபர் சங்க மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டார். 1984ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் மாநில பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். 


1987 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சிப் பணிகளுக்கு சென்றார். 1994 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை தெசென்னை என்று இரண்டாக பிரிக்கப்பட்ட பொழுது தென்சென்னை மாவட்ட குழுவின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 2000 ஆண்டு வரை அதன் மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். 


உடல் நலக்குறைவால் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு 2000ம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தென் சென்னை மாவட்ட செயற்குழுவிலும், மாவட்ட குழுவிலும் இருந்து செயல்பட்டார்.

தோழர் சின்னையா நீண்ட காலம் கட்சி மற்றும் வெகுஜன இயக்கப் பணிகளை திறம்பட நடத்தினார். 


தோழர் சௌந்தரராஜன் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பது போல் அவருக்கு தொடர்ந்து உடல் உபாதைகள் இருந்த போதும், இயக்கப் பணிகளில் தொய்வின்றி செயல்பட்டு வந்தார் 1978 ஆம் ஆண்டு முதல் அவரை நான் நன்கு அறிவேன். தொடர்ந்து அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். 


அவர் சிறந்த அரசியல் ஊழியர்,, விமர்சனக் கண்ணோட்டத்துடனும் வர்க்க பார்வையுடனும் அனைத்தையும் அணுகக் கூடியவர். தனக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்வதை தவிர்க்காமல் கடைபிடித்தவர். 


வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த பொழுது மயிலாப்பூர் ரோட்டரி நகரில் அலுவலகம் இருந்தது வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இரவு ஒரு மணி வரை நடைபெறும். அதன் பிறகு பஸ் இல்லாததால் அனைவரும் நடந்தே வீட்டுக்கு செல்வோம். தோழர் சின்னையா அகத்தியலிங்கம் நான் அம்பத்தூர் வேலாயுதம், போன்றவர்கள் நடந்து செல்வோம். ஒரு சிலர்  வட சென்னைக்கு செல்வார்கள். இரவு நடந்து வருவது என்றால் பேசிக் கொண்டு வரக்கூடிய செய்திகள் அனைத்தும் அரசியல் சார்ந்ததாக இருந்ததால் அது ஒரு நடை வகுப்பாகவே மாறிவிடும். 


சின்னையா ஸ்தாபனத்தை கராராக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்ககூடியவர். அவர் கட்சியின் மாவட்ட குழுவில் ஆலோசனைகளை முன் வைக்கிற பொழுது ஒரு திட்டத்தின் நுனி முதல் அடி வரை தெளிவான முறையில் எழுத்து மூலமாக முன்வைத்து விடுவார். 


அந்த முன்மொழிவில் அரைவேக்காட்டுத்தனமோ, அதிகார தோரணையோ இல்லாமல் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறையில் முன்மொழிவுகளை செய்வார்.அவரிடமிருந்துதான் நான் உட்பட பலரும்  ஸ்துலமான முன்மொழிவுகளை வைப்பதற்கு கற்றுக் கொண்டோம். துண்டு பிரசுரங்களையும், அறிக்கைகளையும் நேர்த்தியான முறையில் ரத்தினச் சுருக்கமாக தயார் செய்வதில் கெட்டிக்காரர். 


மாவட்ட செயற்குழுவில் அரசியல் விவாதங்களை ஆழமான முறையில் நடத்துவார். கட்சியின் தோழர்களை வெறும் விமர்சனம் பண்ணுவது, குறை கண்டுபிடிப்பது போன்றவற்றை கடந்து அவர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து விஷயங்களை பேசக்கூடிய ஏராளமான சம்பவங்களை எடுத்துச் சொல்ல முடியும். கட்சியின் ஊழியர்களை இழக்காமல் அவர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 


ஒன்றுபட்ட மாவட்ட செயற்குழுவில் நானும் அவருடன் இருந்தேன். தோழர் லதா முழுநேர ஊழியராக சிஐடியு அலுவலகத்தில் பணிபுரிந்தார். அத்துடன் உழைக்கும் பெண்கள் அமைப்பு, மாதர் சங்கம் போன்றவற்றிலும் பணியாற்றினார்.  கணவன் மனைவி இருவரும் முழுநேர ஊழியர்கள். எனக்கு முழு நேர ஊழியர் ஊதியம் அதிகமாகவும், லதாவிற்கு குறைவாகும் இருந்தது. லதா விற்கு மட்டுமல்ல பெண் முழு நேர ஊழியர்களாக இருந்தவர்களுக்கும் ஊதியம் குறைவாகவே இருந்தது. தோழர் சின்னையா இது எப்படி சரியாக இருக்கும் இரண்டு பேரும் முழு நேர ஊழியர்கள் தான் ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா என்று அப்பொழுது செயலாளராக இருந்த வி எம் எஸ் இடம் கேள்வி எழுப்பி இருவருக்கும் சமமான ஊதியமாக மாற்றினார் அது இதர பெண் முழு நேர ஊழியர்களுக்கும் அமலாகியது.


தேர்தல் வேலைகளை செய்வதில் தோழர் சின்னையா கெட்டிக்காரர். 1984 ஆம் ஆண்டு விபிசி போட்டியிட்ட வில்லிவாக்கம் தேர்தல் உட்பட 1980 ஆம் ஆண்டு பெரம்பூரில் தோழர் முருகையன் போட்டியிட்ட தேர்தல், அதன்பிறகு நடைபெற்ற பல தேர்தலிலும் அவருடைய தேர்தல் தயாரிப்பு பணிகள் மிகவும் பிரபலமானதாகும். 


துவக்கம் முதல் வாக்கு எண்ணிக்கை வரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெளிவான முறையில் எழுதி முடித்து விடுவார். கோவையில் நடைபெற்ற அரசியல் மாநாடு உட்பட பல தேர்தல் பணிகளுக்கு வெளி மாவட்டங்களுக்கு சென்று பணியாற்றி இருக்கிறார். 


சென்னையில் பல இடைக்கமூட்டிகளில் வரக்கூடிய அமைப்பு பிரச்சினைகளில் அகநிலைப் பார்வை இல்லாமல் அணுகக் கூடிய ஒரு செயலாளராக தோழர் சின்னையா செயல்பட்டார். அண்ணாநகர் பகுதியில் கட்சியில் அமைப்பு பிரச்சனைகள் தலைதூக்கிய பொழுது நான் அதன் கன்வீனராக இருந்து செயல்பட்டதுடன் தோழர் சின்னையா பொறுப்பாளராக இருந்து வழிகாட்டினார். 


அப்பொழுது அவர் அம்பத்தூரில் கள்ளிகுப்பத்தில் குடியிருந்தார் இரவு 11 மணி வரை அண்ணா நகரில் பணிபுரிந்து விட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் அவரின் வழிகாட்டுதல் அந்தப் பகுதியில் கட்சியை ஒற்றுமைப்படுத்தி வளர்ப்பதில் எனக்கு உதவியாக இருந்தது. அப்போதைய தென் சென்னை மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் பல பகுதிகளில் மக்கள் செல்வாக்கும் மக்களிடம் அறிமுகமான உள்ளூர் தலைவர்களும் இருந்தார்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள். ஒரு வலுவான செயல் ஒற்றுமையுடன் வளர்ச்சி அடைவதற்கு தோழர் சின்னையாவின் வழிகாட்டுதல் மிக முக்கியமானதாகும். 


சென்னை மாவட்டம் வடசென்னை தென்சென்னை என்று பிரிக்கப்பட்ட பொழுது வடசென்னை வலுவாக இருந்தது. தென் சென்னையில் அந்த அளவிற்கு இயக்கம் இல்லை. எனவே காலப்போக்கில் என்னவாகும் என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. ஆனால் சின்னையா அவர்களின் அரசியல் தெளிவு, தத்துவார்த்த புரிதல், ஸ்தாபன திறமை இவை மூன்றும் இணைந்து  தென்சென்னையிலும் வட சென்னைக்கு நிகரான கட்சியை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்.


அவர் வீட்டில் இருந்த பொழுது கூட முகநூல் மூலமாக அவர் செய்திருக்கக் கூடிய பணி என்பது மிக முக்கியமானது ஒரு வர்க்க உணர்வுள்ள கம்யூனிஸ்ட், எந்தவிதமான பிழைப்புவாதம் இல்லாத கம்யூனிஸ்ட் தனது இறுதி மூச்சு வரை பணியாற்றக் கூடியவன் என்பதை முகநூல் பணிகள் மூலமாக நிரூபித்திருக்கிறார்.


நான் மாவட்ட செயலாளராக செயல்பட்ட பொழுது பெரும்பாலான நேரங்களில் அவரின் எல்லைக்கு உட்பட்டு சிறந்த வழிகாட்டுதலை செய்திருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. சிறந்த வாசிப்பு பழக்கமுடையவர். அவர் நோய்வாய் பட்டு இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் இந்த ஒரு மாதத்தில் அடிக்கடி வரை சந்தித்தேன். கடந்த ஒரு வாரம் எனது மைத்துனர் இதே நோயால் இறந்ததால் இந்தவாரம் மட்டும் சந்திக்க முடியவில்லை. அதற்குள் அவர்நிலை பேசமுடியாத அளவிற்கு சென்றுவிட்டது. 


நேற்றைய தினம் 12/04/25 நானும் லதாவும் அவரை சந்தித்து நீண்ட நேரம் அவருடன்  இருந்தோம். நான் தோழர் வி எம் எஸ் வீட்டிற்கு போகலாம் வாங்க என்று அழைத்த பொழுது வருகிறேன் என்று தலையாட்டினார். நான் வரட்டுமா என்று கேட்ட பொழுது படுத்திருந்தபடியே எனது காலரை பிடித்துக் கொண்டார். நான் கலங்கி விட்டேன். 


நான் சந்தித்த பொழுதும், தோழர் உமாபதியுடன் அவரை சந்தித்த பொழுதும்  பல்வேறு அரசியல் பிரச்சனைகளை பேசினோம். அவரின் நோய்க்குள் செல்வதை தவிர்த்தேன். அவரோ தன் மரணம் உறுதியாகிவிட்டது, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, அடுத்த சில வாரங்களில் வலி அதிகமாகும் பொழுது அதை குறைப்பதற்கான மருந்துகளை மட்டும் எனக்கு கிடைக்க செய்யுங்கள் என்று உமாபதி இடம் கேட்டுக்கொண்டார். 


அதன்படி அதற்கான சில மருந்துகளை நேற்றைய தினம் அரவிந்திடம் கொடுத்தார். எனவே அவர் மரணத்திற்கான காலம் தெரிந்தபிறகும் அதை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் இருந்தார். நான் அவரை சந்தித்த பொழுதெல்லாம் கண்டிப்பாக இது பற்றி முகநூலில் எழுதக்கூடாது என்ற முடிவோடு தான் சந்தித்தேன். 


எது எப்படி இருந்தாலும் தோழர் சின்னையா இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவரின் அமைப்பு பணிகள் ஆழமாக பதிந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் இருக்கிறார்கள். நான் அவரிடம் அடிக்கடி அரசியல் விஷயங்களையும்,தத்துவார்த்த விஷயங்களையும், ஸ்தாபன விஷயங்களையும் விவாதிக்க கூடிய ஒருவனாக இருந்தேன். தற்பொழுது விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் இப்படி இருக்கிறார்கள். தோழர் சின்னையா இப்போது இல்லாத பொழுது அந்த வெற்றிடம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 


சென்னை மாவட்டத்தின் குறிப்பாக தென் சென்னை மாவட்டத்தின் கட்சி அமைப்பாளர்களில் மிக அடித்தளமான முறையில் விளங்கிய சின்னையாவின் இழப்பு பேரிழப்பாகும். 


ஆழ்ந்த அஞ்சலியை உரிக்காக்குகிறேன்.


அ.பாக்கியம

வியாழன், ஏப்ரல் 10, 2025

15 சீனாவில் மதகுருமார்களும் மத வழிபாட்டுத் தலங்களும்

 



மத நம்பிக்கைச் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்ற கொள்கையை கடைபிடிக்கிற ஒரு நாட்டில் மத அமைப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்று கேள்விகள் எழுத்தான் செய்யும். சீன மக்கள் குடியரசு மத நம்பிக்கைக்கும் மத அமைப்புகளுக்குமான வேறுபாடுகளை துல்லியமான முறையில் தெளிவுபடுத்தி உள்ளது. அரசின் அணுகுமுறையும் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்கள் மதப் பணிகளில் ஈடுபடலாமா என்ற கேள்வியும் மிக முக்கியமானதாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத நிபுணர்களின் குழுக்களை உருவாக்கி உள்ளது. இந்த மத நிபுணர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் சீனாவில் உள்ள மதகுருமார்களின் பணிகளை ஒழுங்கமைக்கின்றனர். மதகுருமார்கள் மத்தியில் செயல்படுகின்றனர். மத நிபுணர்களின் மிக முக்கியமான பணி மத வட்டாரங்களில் உள்ள நபர்களை சீன மதக் கொள்கைக்கு ஏற்ற வகையில் வென்றெடுப்பது, அவர்களை ஒன்றிணைப்பது அவர்களுக்கு தேவையான கல்விகளை கற்பிப்பது. இந்த எல்லைக்குள் மத நிபுணர்கள் பணியாற்ற வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் பணியாற்றுகிறார்கள். இவர்களின் மிக முக்கியமான பணி தொழில் முறை மதகுருக்களை கையாள்வதாகும்.

மத குருமார்களின் எண்ணிக்கை அன்றும் இன்றும்

1975 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 59000 தொழில்முறை மதகுருமார்கள் இருந்தார்கள். இது ஒரு குறை மதிப்பீடு என்று கணிக்கப்படுகிறது. காரணம் பௌத்தம் மற்றும் தாவோயிச குருமார்களின் வழிபாட்டு முறைகள் பல்வேறு வடிவங்களில் இருந்ததின் விளைவாக துல்லியமாக எடுத்த எண்ணிக்கை அல்ல என்பதை தரவுகள் தெரியப்படுத்துகின்றன. இவர்களில் பௌத்த துறவிகள் மற்றும் லாமாக்கள் சுமார் 27,000 பேர். தாவோயிச குருமார்கள் 2,600 பேர், இஸ்லாமிய குருமார்கள் 20,000 பேர், கத்தோலிக்க மதகுருமார்கள் 3,400 புராட்டஸ்டன்ட் போதகர்கள் 5,900 என்று எண்ணிக்கையில் இருந்தனர். மத குருமார்களை கையாள்வதற்காக, அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், செயல்பாட்டுக்காகவும், இந்த தரவுகள் தோராயமாக மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில் திட்டங்களை அமலாக்கும் பொழுது அதன் எண்ணிக்கைகள் கூடுதலாக இருப்பதை அறிய முடிந்து. அதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

1997 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு மதம் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஓரளவு இந்த கணக்குகள் சரி செய்யப்பட்டன. இருப்பினும் 2017 ஆம் ஆண்டு நவீன வசதிகளை பயன்படுத்தி அனைத்து விதமான வழிபாட்டு தலங்களையும் வீடுகளில் இருக்கக்கூடிய சிறிய வழிபாட்டுத் தலங்களையும் உள்ளடக்கி விவரங்கள் பெறப்பட்டு 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வெள்ளை அறிக்கை மதம் குறித்து வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ள மத குருமார்களின் எண்ணிக்கையும் மத வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கையும் மிக துல்லியமாக இறுதி செய்யப்பட்டது.

2018 ஆம் ஆண்டு மதம் குறித்த வெள்ளை அறிக்கையின் படி சீனாவில் 20 கோடி (200 மில்லியன்) மத விசுவாசிகள் இருக்கிறார்கள். அனைத்து மதங்களையும் உள்ளடக்கி மொத்தமாக 3,80,000 மத குருமார்கள் உள்ளனர். பாரம்பரிய மதங்கள் என்ற முறையில் பௌத்தம், தாவோயிசம் என இரு மதங்களிலும் மத குருக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பௌத்தத்தில் 2,22,000 குருமார்களும், தாவோயிசத்தில் 40,000க்கும் மேற்பட்ட குருமார்களும் உள்ளனர். சீனாவில் 156 இனக்குழுக்கள் இருந்தாலும் 10 இன குழுக்களில்  இஸ்லாம் மதத்தை நம்புபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்தில் இரண்டு கோடி  மத விசுவாசிகளும் 57,000 மதகுருமார்களும் உள்ளன. கத்தோலிக்க மதத்தில் 60 லட்சம் மத விசுவாசிகளும் 8000 மதகுருமார்களும், புராட்டஸ்டன்ட் மதத்தில் மூன்று கோடியே 80 லட்சம் விசுவாசிகளும் 57,000 மத போதகர்களும் இருக்கிறார்கள். இதைத் தவிர சீனாவில் உள்ளூர் கலாச்சாரங்களையும், மரபுகளையும், பழக்க வழக்கங்களுடன் நெருக்கமான தொடர்புடைய பல நாட்டுப்புற நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து 5500 மத குழுக்கள் மொத்தமாக சீனாவில் இருக்கிறது என்று சீன மக்கள் குடியரசின் அமைச்சரவை தகவல் அலுவலகம் விரங்களை வெளியிட்டுள்ளது

மத குருமார்களுக்கான சமூக பாதுகாப்பு

கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் மதகுருமார்கள் அடக்கப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள், சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்று தினசரி மேற்கத்திய உலக பத்திரிகைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்று ஓங்கி ஒலிக்க வேண்டியுள்ளது. ஒடுக்குமுறை உண்மை என்றால் மத குருமார்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்குமா? தொழில்முறை குருமார்களுக்கு அரசு பொருத்தமான ஊதியத்தை வழங்கி வருகிறது. அது மட்டுமல்ல மத குருமார்களுக்கு எதிராக எத்தகைய தீங்கு இழைக்கப்பட்டாலும் அதை கவனத்துடன் பரிசீலனை செய்து தீர்த்து வைக்கக்கூடிய பணி துரிதமாக கையாளப்படுகிறது.

இருந்தாலும் மதகுருமார்களுக்கு பொருளாதார ரீதியிலான சமூக பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இதற்கு முந்தைய சட்டங்களில் அவை இணைக்கப்படவில்லை. 2010, 2011 ஆம் ஆண்டுகளில் இவர்களுக்கு சமூக பாதுகாப்பு தேவை என்பதற்கான விவாதங்கள் பரவலாக முன்னுக்கு வந்தன. இதன் தொடர்ச்சியாக 2013 ஆம் ஆண்டின் இறுதியில் மத குருமார்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல அமலாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் படி 96.5% மதகுருமார்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும், 89.6 சதவீதம் மதகுருமார்கள் முதியோர் காப்பீட்டு திட்டத்திலும், மற்றும் அனைத்து தகுதி வாய்ந்த மதப் பணியாளர்களும் வாழ்வாதார உதவித் தொகை மூலமாகவும் சமூகபாதுகாப்பு திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.

பொதுவாக தொழில் முறை மதகுருமார்கள் மத விசுவாசிகளுடன் மிக நெருக்கமான ஆன்மீக உறவுகளை வைத்துள்ளார்கள். அது மட்டுமல்ல மக்களின் ஆன்மீக வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வாக்கையும் இந்த மத குருமார்கள் செலுத்துகிறார்கள். மேலும் இந்த தொழில் முறை குருமார்கள் சில நேரங்களில் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். பௌத்த தாவோயி குருமார்கள் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதிலும், சில இடங்களில் விவசாயத்தின் வளர்ச்சியிலும், காடுகளை வளர்ப்பதிலும் ஈடுபடுகிறார்கள். இந்த அம்சத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி கவனத்தில் கொண்டு தான் அவர்களை சீன சமூக வளர்ச்சியோடு இணைப்பதற்கான திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. மார்க்சியம் எந்த இறையியல் உலக கண்ணோட்டத்துடனும் பொருந்தாது என்பதை மார்க்சிஸ்டுகள் அறிவார்கள். ஆனால் அரசியல் நடவடிக்கைகளை பொறுத்தவரை மார்க்சிஸ்டுகள் மக்கள் எந்த மத நம்பிக்கையில் இருந்தாலும் அவர்களை சோசலிசத்தின் நவீனமயமாக்களுக்கான பொதுவான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தேச பக்தி கொண்டவர்களை இணைத்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுகிறார்கள். இதன் ஒரு பகுதி தான் மத நிபுணர்களின் மத பணிகள் ஆகும். இந்த ஐக்கிய முன்னணியில் ஒரு அங்கமாக மதம் சார்ந்த மக்களையும் வென்றெடுப்பது பிரதான பணியாகும் என்பதை புரிந்து கொண்டு மத விசுவாசிகளை கையாளுகிறார்கள்.

வழிபாட்டுத் தலங்களும் அரசின் அரவணைப்பும்

மத நம்பிக்கை சுதந்திரம், மத குருமார்களின் செயல்பாட்டு முறைகள் போன்றவற்றை அமலாக்கக்கூடிய சீன மக்கள் குடியரசு, இந்த மத நடவடிக்கைகளுக்கான வழிபாட்டுத் தலங்களையும் முறைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குகிறது. 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்களின் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல வழிபாட்டு தலங்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதை சீன அரசாங்கம் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் பெரும்பாலும் அமலானாலும் அவற்றில் இருக்கக்கூடிய குறைகளை நிவர்த்தி செய்து 2018 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்வதை முழுமைப்படுத்தி உள்ளார்கள். 2018 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் அமைச்சரவை தகவல் அலுவலகம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி சுமார் 1,44,000 வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இவற்றில் பௌத்த கோயில்கள் 33,500 ஆகும். (இதற்குள்  ஹான் பௌத்த கோயில்கள் 28,000, திபெத்திய பௌத்த லாமாக்கள் 3,800, தேரவாத பௌத்த கோயில்கள் 1,700 ஆகியவை அடங்கும்.) தாவோயிச கோயில்கள் 9,000, இஸ்லாமிய மசூதிகள் 35,000, கத்தோலிக்க தேவாலயங்கள் 98 மறை மாவட்டங்களில் 6000, புராட்டஸ்டன்ட் தேவாலயங்கள் மற்றும் ஒன்று கூடும் இடங்கள் 60,000 என்ற அளவில் இருக்கிறது.

அனைத்து மதங்களுக்கும் வழிபாட்டுத் தலங்களை சமமான முறையில் செய்து கொடுப்பதே அரசின் மத கொள்கையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. பெரிய நகரங்களில், மதநம்பிக்கையாளர்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில், புகழ்பெற்ற கோயில்களும், தேவாலயங்களும், பௌத்த மடாலயங்களும், புதுப்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளிலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மதிப்பைப் பெற்ற புகழ்பெற்ற கோயில்கள் மற்றும் கலாச்சார மையங்களையும் படிப்படியாக சீரமைத்து மேன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதியை அரசே ஒதுக்கீடு செய்கிறது.

வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்தவோ, புதிய வழிபாட்டுத் தலங்களை கட்டவோ கூட்டு நிதி ஆதாரங்களை பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.  கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் கண்மூடித்தனமான முறையில் தேவையற்ற வகையில் கோயில்களை கட்டுவது  தடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அனைத்து மட்டத்திலும் உள்ள அரசாங்கங்கள், மத குழுக்களுக்கு மத வழிபாட்டு தலங்களுக்கு பொது சேவைகள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டது. அதாவது வழிபாட்டுத் தலங்களுக்கு சாலைகள் அமைத்து தருவது, மின்சாரம், நீர், வானொலி வசதிகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்ற அனைத்தும் மத வழிபாட்டு தலங்களுக்கு அரசு செய்து கொடுக்க வேண்டும். நகர்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் நிலங்களை பயன்படுத்துவது தொடர்பான மாஸ்டர் பிளான் தயாரிக்கும்பொழுது இதுவரை மத ஸ்தலங்களுக்கான இடங்கள் சேர்க்கப்படவில்லை. தற்போது புதிய விதிகளின் அடிப்படையில் வழிபாட்டுத் ங்களுக்கான கட்டுமான இடமும் சேர்க்கப்படுகிறது. அதாவது மத நம்பிக்கை கொண்டவர்கள் மத நடவடிக்கைகளுக்கு போதுமான இடத்தை பெற முடியும் என்பதை இந்த திருத்தம் சாத்தியமாக்கி உள்ளது.

வழிபாட்டு முறைகள் அல்லது சடங்குகள் வழிபாட்டு தலங்களிலும் வீடுகளிலும் சட்டத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. வேறு யாரும் இதில் தலையீடு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத் துறையின் ஒப்புதலுடன் வழிபாட்டுத் தலங்களில் கலை படைப்புகள், பூசைக்குரிய பொருட்கள், மேலும் சில பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம். பொதுவாக வீடுகளில் புராட்டஸ்ட்டன்ட் மத போதனை நடைபெறுவது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. சீனாவில் இந்த முறை கொள்கை அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தடையை படிப்படியாக அமலாக்கிட தேசபக்த மத நம்பிக்கையாளர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவற்றை அமலாக்கி வருகிறார்கள்.

வழிபாட்டுத் தலங்கள் சீன அரசாங்கத்தின் மதவிவகாரத் துறையின்கீழ் செயல்படும். ஒவ்வொரு வழிபாட்டு தலத்திலும் நிர்வாகம் ஒழுங்காக நடைபெறுவதற்கு அங்கு உள்ள தொழில் முறை குருமார்கள் பொறுப்பேற்க வேண்டும். மதம் தொடர்பான நிகழ்ச்சிகள், மக்கள் பணிசெய்யக்கூடிய நேரங்களில் நடத்தக்கூடாது. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திகத்தை பிரச்சாரம் செய்தாலும், வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று நாத்திகத்தைப் பற்றி பேசுவதோ, கடவுள் இருப்பு குறித்து சர்ச்சைகளை உருவாக்குவதோ கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. மற்றொரு மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் எந்த ஒரு மத அமைப்பும் அல்லது மத விசுவாசியும் மத சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு வெளியே மதத்தை பரப்புவதோ அல்லது பிரசங்கம் செய்வதோ, இறையியலை பற்றி பிரச்சாரம் செய்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.

மதக் கல்வி, மத இலக்கியம்

சீனாவில் மதக் கல்வி முறை சட்டத்துக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு தரவுகளின்படி சீனாவில் மொத்தம் 91 மதப் பள்ளிகள் உள்ளன. இந்த கல்வி நிலையங்கள் மாநில மத விவகார நிர்வாகத்தால் (SARA) அங்கீகரிக்கப்பட்டு செயல்படுகிறது. இவற்றில் முறையே 41 பௌத்த பள்ளிகளும் 10 தாவோயிஸ்ட், 10 இஸ்லாமிய, 9 கத்தோலிக்க, 21 புராட்டஸ்டன்ட் என்ற எண்ணிக்கையில் இந்த பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் தேசிய அளவில் செயல்படக்கூடிய புகழ்பெற்ற கல்லூரிகளும் அடங்கும். குறிப்பாக பௌத்த அகடாமி, சீன உயர்நிலை திபெத்திய பௌத்த மதக் கல்லூரி, சீன தாவோயிஸ்ட் கல்லூரி, சீன இஸ்லாமிய நிறுவனம், கத்தோலிக்க திருச்சபையின் தேசிய செமினரி, நான்சிங் யூனியன் இறையியல் செமினரி ஆகிய ஆறு தேசிய அளவிலான கல்லூரிகள் உள்ளன. தற்போது 10,000க்கு அதிகமான மாணவர்கள் இந்த மதப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இவற்றின் மூலம் பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 47,000 க்கும் அதிகமாகும்.

மதநூல்களும், இலக்கியங்களும் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டபடி வெளியிடப்படுகின்றன. இவற்றில் வெவ்வேறு மொழிகளில் வெளியிடுவதும், அச்சிடுவதும், ஆடியோ மற்றும் காணொலி என அனைத்து வகைகளிலும் இந்த வெளியீடுகள் நடைபெறுகிறது. இது மத விசுவாசிகளின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளன. பௌத்தம், தாவோயிசம் தொடர்பான நியதிகளை தொகுத்து மிகப்பெரும் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.  திபெத்திய புத்த கோயில்கள் பாரம்பரியமான சூத்திரங்களை வெளியிடுவார்கள். இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்டு 60க்கும் மேற்பட்ட அச்சிடும் இடங்கள் மூலமாக அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது. குர்ஆன் போன்ற இஸ்லாமிய கிளாசிக் சீன, உய்குர், கசாக், கிர்கிஸ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. 17 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய உரைகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் வெவ்வேறு மொழிகளில் 160 மில்லியனுக்கும் அதிகமான பைபிள் பிரதிகள் இக்காலத்தில் சீனாவில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதில் சீன மொழியில் அச்சிடப்பட்ட 80 மில்லியன் பிரதிகளும் 11 இன சிறுபான்மை மொழிகள் மற்றும் தேவாலயங்களுக்கான பிரைலி மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான வழிபாட்டு தலங்கள் வலைதளங்களை தொடங்கியுள்ளன. சீன இஸ்லாமிய சங்கம், சீன மற்றும் உய்குர் மொழிகளில் ஒரு வலைதளத்தை நீண்ட காலமாக நடத்தி வருகிறது. சீனாவில் மதங்களின் வெளியீட்டுக்கும், வழிபாட்டிற்கும் தடை என்று பிரச்சாரம் செய்யப்படும் ஊடகங்களுக்கு இவையெல்லாம் தெரிவதில்லை.

சீன இஸ்லாமிய சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபியாவிற்கு புனித யாத்திரை செல்ல ஏற்பாடு செய்கிறது. இதில் 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 10,000க்கு மேற்பட்டவர்கள் மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள் கிறார்கள்.

தற்போது மத வட்டாரங்களில் இருந்து சுமார் 20,000 முக்கிய நபர்கள் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டிலும், மக்கள் மாநாடுகளிலும், குழுக்களின் அனைத்து மட்டங்களிலும் பிரதிநிதிகளாகவும் உறுப்பினராகவும் இருந்து பொது சேவையில் பணியாற்றுகிறார்கள். மாநில அளவிலான நடைபெறக்கூடிய விவாதங்களிலும், ஜனநாயக முறைகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்று மேற்பார்வை செய்வதிலும் பங்கு பெறுகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் நடைபெற்ற உலக மத மற்றும் ஆன்மீக தலைவர்களின் மில்லினியம் உச்சி மாநாட்டில் சீனாவை சேர்ந்த ஐந்து தேசிய மதங்களின் சார்பில் ஏழு தேசிய மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் குழுவின் தலைவர் பிஷப் பூ வைஷான் உலக அமைதியை பாதுகாப்பதற்கான சீனாவில் உள்ள மதங்களின் திட்டங்களை தெளிவாக முன் வைத்தார்.

மத நம்பிக்கை சுதந்திரத்தை மிகவும் சரியான முறையில் அமலாக்கிக்கொண்டு, மறுபுறத்தில் மதம் அரசியலிலும், கல்வியிலும் கலந்து விடக்கூடாது என்பதில் சீன மக்கள் குடியரசும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மிக நுணுக்கமான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.

 

 

வியாழன், ஏப்ரல் 03, 2025

14. மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் என்ன?



சீன வரலாற்றில் மாற்றங்களின் மகுடமாக 1949 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்த புதிய ஜனநாயக புரட்சி அமைந்தது. புரட்சி, வெறும் வார்த்தைகளோடு வலுவிழந்து போகவில்லை; மாறாக, சீன நாட்டின் பொருளாதார அமைப்பை அடியோடு மாற்றி அமைத்தது.  புரட்டிப் போடப்பட்ட பொருளாதார மாற்றங்களால் அதன் மேல்கட்டுமானமாக இருந்த மதமும் மாற்றங்களுக்கு உள்ளானது. மதஅமைப்புகளுக்குள் சீர்திருத்த சிந்தனையாளர்கள் சிரம் உயர்த்த ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் மதத்தின் முந்தைய ஆளும் வர்க்க வேர்கள் பிடுங்கி எறியப்பட்டது. நிலப்பிரபுத்துவ சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருந்த பௌத்தமும், தாவோயிசமும் சங்கிலியை அறுத்துக் கொண்டு வெளியே வந்தன. சீனத்திலிருந்த கத்தோலிக்க மதம், புராட்டஸ்ட்டென்ட் மதம், இஸ்லாம் மதம் ஆகியவற்றை ஏகாதிபத்தியம் தனது ஏவல் அமைப்பாக நடத்தி வந்தது. இந்த மதங்கள் சீனாவின் சுயாதிபத்ய தன்மையைத் தேடி எழுச்சி கொள்ள ஆரம்பித்தன. அதன் விளைவாக ஏகாதிபத்திய கட்டுப்பாட்டில் இருந்து விடுக்கப்பட்டது. ஒருபுறம் நிலப்பிரபுத்துவ வர்க்கமும், மறுபுறம் முதலாளித்து வர்க்கமும் சீனத்தில் மதங்களை தங்கள் பிடியில் வைத்திருந்தன. அவற்றில் இருந்து மதங்களை விடுவித்தது  அடிப்படையான மாற்றமாகும்.

விடுவிக்கப்பட்ட மத அமைப்புகள் எப்படி செயல்படுவது? மக்களின் மத நம்பிக்கைகளுக்கான செயல்பாட்டு வடிவங்கள் என்ன? என்பன போன்ற கேள்விகளை  புதிய அரசு எதிர்கொண்டது. மதம் என்பது திட்டவட்டமா வகையில்  வெகுமக்கள் தன்மையை கொண்டுள்ளது. மதப் பிரச்சினைகள் ஒரு வரம்புக்கு உட்பட்டு மிகவும் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியது. குறுகிய காலத்தில் அவை அழிந்து போகக் கூடியது அல்ல. சீனாவைப் பொறுத்தவரை மேலும் சில விசேஷமான காரணிகள் இருந்தன. சீனாவின் சில பகுதிகளில் மதம் என்பது இனப்பிரச்சினையுடன் இரண்டறக் கலந்து மதச் சடங்குகளும், நம்பிக்கைகளும், இனங்களின் பழக்க வழக்கங்களும், பிரிக்க முடியாத அளவிற்கு பிணைந்து கிடந்தது. சர்வதேச சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்களாலும் சில காரணிகளாலும் உள்நாட்டில் மத செயல்பாட்டில் தாக்கங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. சீனத்தின் பல பகுதிகளில் வர்க்கப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த இடங்களில் எல்லாம் மதம் குறித்த கேள்விகளை ஊழியர்களும் மக்களும் எழுப்ப ஆரம்பித்தனர். அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான விடைகளை அரசு தேடிக்கொண்டிருந்தது.

1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீர்திருத்த கொள்கைகள் அமலாக்கத்திற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. 1978 ஆம் ஆண்டு அவற்றின் பணிகள் கீழ் மட்டம் வரை கொண்டு செல்லப்பட்டது. 1982 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி மதம் குறித்த ஒரு விரிவான தீர்மானத்தை நிறைவேற்றியது. "நமது நாட்டின் சோலிச காலத்தில் மதப்பிரச்சினை குறித்த அடிப்படை கண்ணோட்டம் மற்றும் கொள்கை" என்று தலைப்பிட்ட அந்த தீர்மானம் இதுவரை இல்லாத அளவு மிக விரிவான வகையில் மதக் கொள்கைகளை உருவாக்கிக் கொடுத்தது. சீன மக்களிடையே உள்ள முரண்பாடுகளில் முதன்மையான முரண்பாடாக மதம் இருக்கிறது என்ற முடிவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வந்தது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் சீன மக்கள் குடியரசு தனது கொள்கைகளை உருவாக்கிக் கொண்டது. கட்சி உறுப்பினர்கள், கட்சி கமிட்டிகள் மதப் பிரச்சினையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான மிகத் துல்லியமான வரையறுப்புகளை தீர்மானம் முன் வைத்தது. "மதப் பிரச்சினையில் குறிப்பான எச்சரிக்கையுடனும் கூர்மையான விவேகத்துடனும் சிந்தனை மிக்க பரிசீலனை தன்மையுடனும் கட்சி உறுப்பினர்களும் கட்சி குழுக்களும் இருக்க வேண்டும்" என்று லெனின் எழுதியதை தீர்மானம் சுட்டிக்காட்டியது. சோலிசம் வந்துவிட்டது; பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மதம் சீக்கிரம் அழிந்துவிடும் என்ற கருத்து மேலோங்கி இருந்தது. இந்த கருத்தை மாற்றுவதற்கான செயலை  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செய்தது. "சோஷலிச அமைப்பு நிறுவப்பட்டதாலும், நமது பொருளாதாரத்திலும், கலாச்சாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டு விட்டதாலும் மதம் விரைவில் வாடிவிடும் என்று நினைப்பது எதார்த்தத்திற்கு மாறானது" என்று தீர்மானத்தின் மையஅம்சமாக முன்வைக்கப்பட்டது.

மத நம்பிக்கை சுதந்திரம்

சீனாவில் மதப் பிரச்சினைகளை அணுகுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்கள் குடியரசும் ஏற்றுக்கொண்ட அடிப்படையான கொள்கை என்பது மத நம்பிக்கை சுதந்திரத்தை மதித்து பாதுகாப்பது என்பதாகும். மத நம்பிக்கையின் சுதந்திரத்தை மதித்தால் மட்டும் போதுமா? மதம் தொடர்பான அமைப்புகள், அதன் சடங்குகள் மற்றும் மதவிசுவாசிகளுக்கான பாதுகாப்பையும் மக்கள் குடியரசு உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த முடிவு புரட்சிக்குப் பிறகு உடனடியாக எடுக்கப்பட்டாலும் 1982 ஆம் ஆண்டு இன்னும் துல்லியமாகவே வரையறுக்கப்பட்டது. இந்தக் கொள்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. மதம் மறைந்து போகும் வரை இந்தக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று ஆணித்தரமான முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்து அமலாக்கி வருகிறது.

இப்போது மத நம்பிக்கை சுதந்திரம் என்ற அடிப்படைக் கொள்கைகளை பார்ப்போம். சீனாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் மதத்தில் நம்பிக்கை கொள்வதற்கும், நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் முழுமையான சுதந்திரம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கலாம். அவற்றில் எந்த ஒரு பிரிவை வேண்டுமானாலும் நம்புவதற்கான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது.  ஒருவர் மத நம்பிக்கையற்றவராக இருந்து மத நம்பிக்கையாளராக மாறுவதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது என்பதைப்போல் மத நம்பிக்கையாளர் ஒருவர் மத நம்பிக்கையற்றவராக மாறுவதற்கும் முழுமையான சுதந்திரம் உண்டு. இதுதான் சீன மக்கள் குடியரசு மத நம்பிக்கை சுதந்திரம் தொடர்பாக அரசியல் சட்டத்தில் சேர்த்து இருக்கக்கூடிய கொள்கையாகும்.

இயக்கவியல் பொருள் முதல்வா அடிப்படையிலான நாத்திகத்தை கடைபிடிக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தலைமையிலான அரசு இந்த மத நம்பிக்கை சுதந்திரத்தை எப்படி அமல்படுத்துவது என்ற சிக்கலான கேள்விகளை எதிர்கொண்டது. முடிவெடுப்பதும், போதனை செய்வதும் மிக எளிதானது. அமலாக்கம் கடினமானது. அதிலும் மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயங்களை அமலாக்குவது எளிதான காரியம் அல்ல. மக்களின் விருப்பத்தையும் தேர்வையும் மாற்ற முடியாது. புறநிலை சட்டம் மற்றும் வரலாற்று உண்மைகளையும் மாற்ற முடியாது. இந்த இரண்டு கொள்கைகளும் சீரற்ற முறையில் அல்ல, கவனமாக பரிசீலித்த பிறகு உருவாக்கப்படுகின்றன.  நாத்திகத்தை கடைபிடிக்கும் கம்யூனிஸ்டுகள் இடைவிடாமல் தங்களது அறிவியல் பிரச்சாரத்தையும் பகுத்தறிவு பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு எந்த தடையும் இல்லை. அவை ஊக்குவிக்கப்படும். அதே நேரத்தில் வெகுமக்களின் ஆன்மீகம் சார்ந்த பிரச்சினைகளை கையாளுகிற பொழுது அவற்றை கருத்தியல் ரீதியாக வென்றெடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நாம் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மக்கள் நாத்திகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பயனற்றது மட்டுமல்ல மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து நிலை உறுப்பினர்களும் இவற்றை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து அமலாக்கியது.

சீனாவில் நாத்திகக் கொள்கைகளை கடைபிடிக்கக் கூடிய கட்சி ஆட்சியில் இருப்பதால் அவை ஆத்திகக் கொள்கைகளுக்கு எதிரான செயல்பாடுகள் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய வரலாற்று காலகட்டத்தில்  மத நம்பிக்கை சுதந்திர கொள்கை அறிவிக்கிற பொழுது சீன மக்களிடையே மதம் தொடர்பான பிரச்சனைகள்தான் முதல்நிலை முரண்பாடு என்று அறிவித்தது. நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் ஒப்பீட்டு அளவில் இரண்டாம் பட்சமானது என்பதை கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். நாத்திக மற்றும் ஆத்திகம் இடையிலான வேறுபாடுதான் பிரதான வேறுபாடு என்று கருதி கம்யூனிஸ்டுகள் ஒருதலைபட்சமாக நாத்திக கருத்துக்களை திணிக்க ஆரம்பிக்கக் கூடாது. இது கட்சிக்கு மட்டுமல்ல வெகுமக்களையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்த வேறுபாடுகளை பிரதான முரண்பாடாக மாற்றினால் மதவெறி மேலோங்கி சோலி நிர்மாணத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். மத நம்பிக்கையாளர்களுக்கும் மத நம்பிக்கைற்றவர்களுக்கும் அரசியல் பொதுவானது. பொருளாதாரப் பிரச்சினைகள் பொதுவானது. இந்த இரண்டிலும் இருக்கக்கூடிய பொதுத் தன்மைகளை கவனத்தில் எடுக்க வேண்டும். கட்சியின் அடிப்படைப் பணி அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதாகும். இந்த ஒன்றிணைப்பின் மூலமாகத்தான் ஒரு நவீன சக்திவாய்ந்த சோலிச அரசை கட்டியெழுப்ப முடியும் என்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிச, லெனினிச கோட்பாட்டின் அடிப்படையில் மதநம்பிக்கை சுதந்திர கொள்கையை உருவாக்கி உள்ளது. இதுதான் மக்களின் நலன்களுடன் உண்மையாகவே ஒத்துப் போகிறது. இதுவே சரியான கொள்கை என்று  முடிவெடுத்து களத்தில் இறங்கியுள்ளனர்.

ஒரு கேள்வியின் இரு அம்சங்கள்

சோலிச சமூக கட்டமைப்பில் ஒரே நேரத்தில் எதிர்மறைகளின் இரு அம்சங்களை கையாள வேண்டி இருக்கிறது. ஒரு புறத்தில் மக்களின் மத நம்பிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். இது மக்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமைகள் ஆகும். அதே நேரத்தில் மக்கள் மதத்தை நம்பாமல் இருக்கவும் மத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கவும் பிரச்சாரத்தை நடத்த வேண்டும். இந்த இரண்டையும் ஏக காலத்தில் சீன மக்கள் குடியரசு செய்ய வேண்டிய புறச்சூழல் ஆகும். இது மிகவும் நுணுக்கமான முறையில் அமலாக்க வேண்டிய செயல். தரம்வாய்ந்த, மதங்களின் வரலாற்றை அறிந்த, சிறந்த ஊழியர்களால் மட்டுமே இதை செய்து முடிக்க முடியும். ஒரு கேள்விக்கு எதிர் எதிரான இரு அம்சங்களை கையாள வேண்டி இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த முடிவை பெரும் பகுதி சிறப்பான முறையில் அமலாக்கி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத நம்பிக்கை உள்ள மக்களை வென்றெடுப்பதற்கு என்ன வழி என்ற கேள்விகள் எழுகிறது. அது உத்தரவு மூலமாகவோ, நிர்பந்தம் மூலமாகவோ சாத்தியமில்லை என்பதை மார்க்சிய சித்தாந்தம் தெளிவுபடுத்தி உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி அறிவியல் கல்வியை பரப்புவது, மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் மூலமாக மத நம்பிக்கையாளர்களை வென்றெடுக்க முடியும். இது மட்டும்தான் எதிர்காலத்தில் மக்கள் மத நம்பிக்கையிலிருந்து வெளிவருவதற்கு காரணமாக அமையும் என்பதை சீன மக்கள் குடியரசு தெளிவுபடுத்தி அமலாக்கி வருகிறது.

மத நம்பிக்கை சுதந்திரம் என்றால் அவற்றை எப்போதும் எந்த இடத்திலும் எந்த வடிவத்திலும் மனம் போன போக்கில் பயன்படுத்தலாம் என்ற நடவடிக்கைகளுக்கு சீனாவில் அனுமதியில்லை. மத நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரமான தேர்வுதான் மத நம்பிக்கை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, சீனாவில் உள்ள மதங்கள் அரசு நிர்வாகத்திலோ, நீதித்துறை விவகாரங்களிலோ, பள்ளிக்கூடங்களிலோ, பொதுக்கல்வியின் பாடத்திட்டங்களிலோ தலையிடக்கூடாது என்பது கட்டாயமான சட்டமாகும். மிக முக்கியமான அறிவியல் பூர்வமான நடவடிக்கை என்பது,  குழந்தைகள், சிறார்கள் ஆரம்பத்தில் எந்த மதத்தையும் அவர்களாக தேர்ந்தெடுப்பதில்லை என்பது அனைவரும் அறிந்தது. 18 வயது வந்த பிறகுதான் அவற்றை தேர்ந்தெடுக்க முடியும் என்பதும் அறிவியல்பூர்வமானது. ஆனால் மதவாதிகள் குழந்தை பிறந்தவுடன் அதைச் சடங்குகளில் ஆரம்பித்து சுடுகாடு செல்லுகிற வரை மத நம்பிக்கை சங்கிலிகளால் அல்லது மத அமைப்புகளின் சங்கிலிகளால் கட்டி போடுகிறார்கள். இது இயற்கைக்கு விரோதமானது என்பதை கவனத்தில் கொண்டு செயற்கையான முறையில் சிறார்கள் மீது மதம் தொடர்பான போதனைகளை திணிக்க கூடாது என்றும் 18 வயது வரை உள்ளவர்களை வழிபாட்டுத் தலங்களில் உறுப்பினராக சேர்க்கக்கூடாது என்றும் சட்டம் இயற்றி உள்ளது. தேச ஒற்றுமை, இன ஒற்றுமைக்கு எதிராக மதம் எவ்வித செயல்களிலும் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபட்டால் அவை தண்டனைக்குரிய குற்றமாகும்.

சோலிச கொள்கைகளை கடைபிடிக்கும் அரசின் கீழ், மத நம்பிக்கைகள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளை, நடைமுறை சடங்குகளை சாதாரணமாக நடத்துவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு மதத்தை ஊக்குவிக்கவும் மற்றொரு மதத்தை புறக்கணிக்கவும் சோஷலிச அரசு அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது என்று தெளிவாக செயல்படுகின்றனர். மத அமைப்புகள் சோலிச அமைப்பை எதிர்க்கக் கூடாது என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது.

 

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....