Pages

வியாழன், ஜூலை 03, 2025

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

 



1948 மே 14

சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பென் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதயமாகிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார். 19 ஆம் நூற்றாண்டு வரை உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற தேசம் இருக்கவில்லை. ஒரு தேசம் என்று வரையறுத்தால் தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருளாதார நடவடிக்கை, கலாச்சாரம், ஒரே மொழி, நிரந்தர வாழ்விடம் என்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் மேற்கண்ட வரையறைக்குள் தொழிற்படாத ஒரு நாடாகத்தான் இஸ்ரேல் என்ற நாடு இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு தரவுகளின் படி 31 லட்சம் யூதர்கள் 102 நாடுகளில் இருந்து வந்தவர்கள். 51 மொழிகளை பேசக்கூடியவர்கள். உணவு, சமூக உறவு, மொழி, பண்பாடு, வரலாற்று இணைப்பு என விஷயங்களில் வேறுபட்டவர்கள். இதற்கு காரணம் என்னவென்றால், இஸ்ரேல் என்ற நாடு இயல்பாக உருவாகவில்லை என்பதுதான். அது ஏகாதிபத்திய சக்திகளால் சியோனிஸ்ட் கொள்கை உடையவர்களால் திணிக்கப்பட்டது. டேவிட் பென் குரியன் அறிவிக்கிற பொழுது, ‘‘இன்று முதல் எம்மக்கள் இஸ்ரேலியர்கள் என்று அழைக்கப்படுவார்கள்; எம்மதம் யூத மதம்’’ என்று கூறினார்.

தொன்மை வரலாறும் – புனைவுகளும்

மேற்காசிய பிரதேசங்களில் தொன்மைக் காலம் தொட்டு மனிதர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றைய நாடுகளின் பெயர்களையோ, இனக்குழுக்களின் பெயர்களையோ, தொன்மைக்கால மனிதர்கள் மீது திணிப்பது அறிவியல் பார்வை ஆகாது. வரலாறு நெடுகிலும் மனிதர்களிடையே இனகுழுக்கள் கலப்பு, பண்பாடு கலப்பு, மொழிகளின் கலப்பால் ஏற்பட்ட வளர்ச்சி என மனித குலங்கள் வளர்ந்து வந்திருக்கிறது. அவ்வாறுதான் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள யூதர்களாக இருந்தாலும் சரி, அரேபியர்களாக இருந்தாலும் சரி பல்வேறு இனக் குழுக்கலிருந்து பெருக்கமடைந்து காலப்போக்கில் வளர்ந்தவர்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. நெபால் என்பவர் நடத்திய டி.என். ஆய்வில் இஸ்ரேலியர்/பாலஸ்தீன அரேபியர்கள் மற்றும் யூதர்களிடையே கணிசமான மரபணு ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பதை கண்டறிய முடிந்தது. ஆனால் சியோனிஸ்டுகள் அறிவியல் ஆய்வு என்ற பெயரால் யூத இனம் தனி இனம்,தூய்மையானது என்று புனைவுகளை கட்டமைக்கின்றனர். இது போன்றுதான் முசோலினி இத்தாலிய இனத்தூய்மைவாதத்தை முன்வைத்தார்.

யூத மதத்தை தோற்றுவித்த ஆப்ரஹாம் பிறப்பதற்கு 46 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்தனர். பாலஸ்தீனத்தில் முதலாவதாக குடியேறிய இனக்குழுக்கள் அமோரியர்கள், ஹராமியர்கள் ஆவார்கள். இந்த குடியேற்றம் பொது ஆண்டுக்கு முன்பு (கிமு) 3500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. பொஆமு (கிமு) 3000 ஆண்டுகளில் அரேபிய இனக்குழுவான கானானியர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள். பொஆமு (கிமு) 1800 ஆம் ஆண்டுகளில் மெசபடோமியாவின் உர் பகுதியிலிருந்து ஆபிரஹாம் தனது இனத்துடன் புறப்பட்டு ஜெருசலேம் வந்தார். அங்கிருந்த ஜப்பூசிய மன்னன் ஆபிரஹாம் இனத்தவர்களுக்கு இடளித்தார். ஆபிரஹாம் மரணத்திற்கு பிறகு இவர்கள் எகிப்திற்கு சென்றனர். எகிப்தில் பாரோ மன்னர்களால் 400 ஆண்டுகளுக்கு மேல் அடிமைப் படுத்தப்பட்டார்கள்.

பொஆமு (கிமு) 1250 இல்லீரியா என்ற இடத்தைச் சேர்ந்த பிலிஸ் தினியர்கள் கானான் தெற்கு பகுதியை கைப்பற்றி பிலீஸ்தீனம் என்று பெயரிட்டனர். பிலிஸ்தினியர்களும், கானானில் இருந்த இனக்குழுவும் இணைந்து பாலஸ்தீன இனமாக உருவானது. எகிப்தில் 400 ஆண்டுகள் அடிமையாக இருந்த யூத இனத்தவர்கள் அதற்கு எதிராக கலகம் செய்து மோசஸ் என்பவர் தலைமையில் புறப்பட்டு 40 வருடம் பாலைவன வாழ்க்கையை மேற்கொண்டார்கள். மோசஸ் இறந்த பிறகு யூதர்களின் பனிரெண்டு இனக்குழுக்கள் இணைந்து ஜோஸ்வா தலைமையில் பாலஸ்தீன நாட்டின் கிழக்குப் பகுதியை கைப்பற்றினார்கள். இந்த மோதல்கள் 200 வருடங்களுக்கு மேல் நீடித்தது. இதன் பிறகு பொஆமு (கிமு) 932 வரை இந்தப் பகுதியை யூத இனக்குழுக்களின் அரசர் சாலமன் ஆட்சி செய்தார். அவர் இறந்த பிறகு  நிலைமை மாறியது.

பாலஸ்தீனப் பிரதேசத்தை ஒரு குறிப்பிட்ட இனமோ, பேரரசோ நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சி செய்ததாக பழங்கால வரலாறு இல்லை. பொஆமு 721இல்சீரியர்கள் பாலஸ்தீனத்தை கைப்பற்றினார்கள். பொஆமு 587இல் பாபிலோனியர்கள் இப்பகுதியை வென்று யூதர்களை சிறைபிடித்து சென்றனர். பொஆமு 538 இல் பெர்சிய மன்னன் சைப்ரஸ் இப்பகுதியை கைப்பற்றி யூத பெண்களை மணந்து மீண்டும் யூதர்களை வரவழைத்தார். பொஆமு 332 இல் அலெக்சாண்டர் இப்பகுதியை கைப்பற்றினார். இவர் காசா பகுதியை கைப்பற்றுவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டார். அந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்தது. பொஆமு 63இல் ரோமப் படைத்தளபதி போம்பே பாலஸ்தீனத்தை கைப்பற்றினார்.

பொஆ (கிபி) 70 ரோம பேரரசர் டைடஸ் யூதர்களை ரோமுக்கு அடிமைகளாக கப்பல்களில் பிடித்து சென்றார். பொஆ(கி.பி.)135இல் ரோம தளபதி மீதமிருந்த யூதர்களை விரட்டி அடித்தார். ரோமானிய பேரரசர் கான்ஸ்டாண்டின் தி கிரேட் பொஆ (கிபி) 4ம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்தை ரோமானிய பேரரசின் ஆதிக்க மதமாக மாற்றினார். அதன் தொடர்ச்சியாக அவர் கைப்பற்றி இருந்த மேற்காசிய பகுதியையும் பாலஸ்தீனம் உட்பட கிறிஸ்தவ மதம் திணிக்கப்பட்டது. யூதர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைகளால் வெளியேறினார்கள். கிபி 638 இல் கலீபாமர் பாலஸ்தீனத்தை வென்றார். 1099 ம் ஆண்டு ஐரோப்பிய சிலுவைப்படை பாலஸ்தீனத்தை கைப்பற்றியது. 1187ஆம் ஆண்டு மீண்டும் முஸ்லிம் படை பாலஸ்தீனத்தை கைப்பற்றி சலாவுதீன் ஆட்சி ஏற்பட்டது. 1229ம் ஆண்டு ஜெர்மன் சிலுவைப்படை ஜெருசலேமை கைப்பற்றியது. 1517 இல் துருக்கி ட்டோமான் பேரரசர் பாலஸ்தீனத்தை கைப்பற்றி 400 ஆண்டுகள் வைத்திருந்தார். 1917 இல் முதல் உலகப்போர் முடிவில் பாலஸ்தீன பகுதி இங்கிலாந்து மற்றும் பிரான்சின் கைவசம் வந்து

சியோனிச சித்தாந்தம்        

சியோனிசம் என்பது 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் யூதர்களுக்கு மத்தியில் தோன்றியது. யூதர்களுக்கான இன கலாச்சார தேசியவாத இயக்கமாக இது முன்னெடுக்கப்பட்டது. 1840 ஆம் ஆண்டுகளில் யுகோஸ்லாவாகிய நாட்டைச் சேர்ந்த யூதர் அல்கலே, 1861இல் ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த யூதர் ஸ் கனிஷர், 1862 இல் மோசஸ், 1882இல் ரஷ்யாவின் லியோ பென்ஸ் கார் போன்றவர்கள் சியோனிச சித்தாந்தங்களை பிரச்சாரம் செய்து வந்தனர். 1896 ஆம் ஆண்டு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த யூதர் தியோட ஹெர்செல் சியோனிச இயக்கத்தை அரசியல் படுத்தினார். யூதர்களுக்கு தனிநாடும், தனி அரசும் தேவை என்பதை பிரகடனமாக வெளியிட்டார். பிரிந்து கிடந்த யூதர்களை ஒன்று திரட்ட ஆரம்பித்தார். 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா உட்பட பல பகுதிகளில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களை பயன்படுத்தி சியோனிசம் என்ற அமைப்பையும் யூதர்களுக்கான தனிநாடு, தனிஅரசு என்ற கருத்தையும் நிலை நிறுத்தினார்.

சியோனிசம் உருவாக்கிட அதாவது யூத நாட்டை உருவாக்கி முதலில் பல்வேறு இடங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. துருக்கி, கென்யா, உகாண்டா, சைப்ரஸ், சினாய், இத்தாலியின் திரிபோலி, மொசாம்பிக், காங்கோ போன்ற பிரதேசங்களில் ஒரு பகுதியை யூத நாடாக உருவாக்க திட்டமிட்டார்கள். இறுதியில் யூதர்கள் அதாவது சியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தை தேர்வு செய்தார்கள். காரணம் கடவுளுடன் இணைப்பதற்கான ஒரு சில வரிகளை விவிலிய நூலில் (பைபிள்) கண்டெடுத்தனர்.

விவிலிய நூல் பழைய ஏற்பாட்டின் படி அத்தியாயம் 15 பிரிவு 18 இல் நைல் நதிக்கும் ஜோர்டான் மேற்கு பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசம் ஆபிரஹாம் வழித்தோன்றல்களுக்கு கொடுக்கப்பட்டது என்ற வார்த்தைகளின் அடிப்படையில் இதற்கான கதைகள் உருவாக்கப்பட்டது. கிமு 1800 ஆம் ஆண்டுகள் மெசபடோமியா நகரம் கடவுள்களால் ஹீப்ரு இன மக்களுக்கு கொடுக்கப்பட்டது என்றும் ஆபிரஹாம் அங்கு தனது இனக்குழுக்களுடன் இடம்பெயர்ந்தார். அதன் பிறகு எகிப்து நாட்டின் கானான் பகுதிக்கு கால்நடைகள் மேய்ப்பதற்கான வாழ்க்கையை தொடங்கினார்கள். இக்காலத்தில் ஆபிரஹாம் இறந்தார். அவரின் உடலை ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரையில் புதைத்தனர். ஆபிரஹாமின் இறப்புக்குப் பிறகு ஹீப்ரு இனக்குழுவினர் 400 வருடங்கள் எகிப்தில் அடிமையாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து கி.மு 1250 ஹீப்ருக்கள் மோசஸ் தலைமையில் தப்பிச்சென்று 40 ஆண்டுகள் வரை பாலைவன வாழ்க்கையை மேற்கொண்டனர். மோசஸ் இறந்த பிறகு ஜோஸ்வா இந்த இனக்குழுவிற்கு தலைமை தாங்கினார். ஹீப்ரு மன்னர்கள் டேவிட் மற்றும் சாலமன் புகழ்பெற்றவர்கள்.  சாலமன் மன்னர் சியோன் குன்றின் மீது யாகோவா கடவுளுக்கு கோவில் கட்டினார்.பொஆ 70 ஆம் ஆண்டு படை எடுப்பால் இக்கோவில் இடிக்கப்பட்டது. இப்பொழுதும் ஜெருசலேமின் யூத குடியிருப்புகளுக்கு கீழே பத்தடி ஆழத்தில் இந்த கோவிலுக்கான சுவர்கள் உள்ளது. இதைத்தான் யூதர்களின் அழுகைச்சுவர் என்று அ

அது மட்டுமல்ல சீயோன் மலை என்பது ஜெருசலேமில் உள்ளது. சீயோன் எபிரேய பைபிள்களில் பயன்படுத்தும் ஒரு சொல். எபிரேய மொழி பொஆமு முதலாம் நூற்றாண்டுவரை யூதர்கள் பயன்படுத்திய மொழியாகும. அதன் பிறகு வழக்கொழிந்துபோய்விட்டது.யூதர்கள் பாபிலோனியாவிற்கு நாடு கடத்தப்பட்ட காலத்திலிருந்து இந்த மலையை தங்களின் பூர்வீகமாக கருதி வருகின்றனர்.

யூதர்கள் ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் அரசு அமைப்பதற்கான தார்மீக உரிமை மட்டுமல்ல, வரலாற்று உரிமையும் இருக்கிறது என்ற நம்பிக்கைதான் சியோனிசத்தின் அடிப்படையாகும். யூதர்கள் அல்லாதவர்கள் மத்தியில் வாழ்ந்த யூதர்களிடம் ஊடுருவிய வேறு அடையாளங்களை சியோனிஸ்டுகள் அழிக்க முற்பட்டனர். யூத கலாச்சாரத்தில் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முயற்சிகளை மேற்கொண்டனர். சியோனிச உருவாக்கத்தோடு சேர்ந்து யூத இனக்குழு பழமையானது, அதுதான் பாலஸ்தீன பகுதியில் வாழ்ந்தது என்பதற்கான இன அறிவியலை கட்டமைக்க முயற்சி செய்தனர். இந்தக் கருத்து உருவாக்கம் யூத அடையாளத்திற்கான புதிய கட்டமைப்பை கொடுத்தது. இஸ்ரேலிய நிலத்திலிருந்து யூதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான இனவழிக் கதைகளையும் உருவாக்க முடிந்தது.

புதிதாக ஒரு இடத்தை கைப்பற்றுவதற்கான குடியேற்றத்தை நடத்துகிற பொழுது, உழைப்பை கைப்பற்றுதல் என்ற கோட்பாட்டை முன் வைத்தனர். பிரத்தியேகமாக யூத உழைப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவது என்ற கோட்பாடு பாலஸ்தீனத்தில் யூத நிலத்தை உத்திரவாதப்படுத்துவதற்கு உதவி செய்வது. 100 சதவீத யூத உழைப்பு என்ற பிரத்தியேகமான திட்டத்தையும், அதிக உற்பத்தி திறன் கொண்ட பொருளாதார அடிப்படையில் தூய்மையான யூத குடியேற்றத்தை உருவாக்க திட்டமிட்டனர். புலம்பெயர்ந்த யூதர்கள் பல நாடுகளில் இடைத்தரகர்களாகவும் தொழிலாளர்களாகவும் இருந்தனர். அவ்வாறு யூத நாட்டில் இல்லாமல், உருவாக்கப்படும் யூத நிலத்தில் தொழில், விவசாயம், சுரங்கம், போன்ற அடிப்படை துறைகளை வளர்ப்பது என்றும் இதற்கு யூத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது என்ற சியோனிச கருத்துக்கள் உருவாக்கப்பட்ட யூத குடியேற்றங்களில் கடைபிடிக்கப்பட்டது.

சியோனிஸ்ட்களின் முயற்சிகளுக்கு பிரிட்டன் பக்கபலமாக இருந்தது மட்டுமல்ல... பிரிட்டனுக்கும் யூதர்களுக்கான தனி நாட்டை அமைத்துக் கொடுப்பதற்கான அரசியல் தேவை இருந்தது. எனவே பிரிட்டன் 1840 ஆம் ஆண்டுகளில் இருந்து மேற்காசிய நாடுகளின் இயற்கை வளங்களின் மீது தனது கவனத்தை செலுத்தி வந்தது. மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட அரசியலின் நிலையற்ற தன்மை, பொருளாதார நெருக்கடிகள், மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் எண்ணெய் வளங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் விளைவாகவே பாலஸ்தீன பகுதி யூதநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

சியோனிசம்∶ பாசிசத்தின் மறு வடிவம்

 

முன்னுரை: 




பாசிசத்தின்  மறு வடிவமாக சியோனிசம் உருவெடுத்து பாலஸ் தீனத்தை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. ஹிட்லர், முசோலி னியின் மறுபிறப்பாக இஸ்ரேலின் பெஞ்சமின்  நெதன்யாகு காட்சியளிக்கிறார். 

சியோனிசத்தின்  நரவேட்டை நடவடிக்கைகளுக்கு உலக ரவுடிகளான அமெரிக்காவும் பிரிட்டனும் ரத்த காட்டேரிகளாக மாறி சியோனிசத்தின் உந்து சக்தியாகவும் ஆயுத உணவுகளை அள்ளிக் கொடுப்பவர்களாகவும் மாறி இருக்கிறார்கள். 

இஸ்ரேலின் ராணுவம் அமெரிக்க - பிரிட்டன் ஆயுதங்களுடன் பாலஸ்தீனத்தில் நடத்தி வரக்கூடிய இனப்படு கொலையை தங்களுடைய மேலாதிக்கம் நிலைநாட்டப்படுவதாக கருதி குதூகலித்து வருகிறார்கள். பாலஸ்தீன மக்கள் குண்டு மழைகளுக்கு இடையிலும், துப்பாக்கி குண்டுகளை மார்பிலே ஏந்தியும், சியோனிச ராணுவ டாங்கிகளை எதிர்கொண்டும் நிராயுதபாணிகளாக போர் புரிந்து வருகிறார்கள். எத்தனை இடர்பாடுகளை  சியோனிச ராணுவம் ஏற்படுத்தினாலும் புதை குழியிலிருந்து எழுந்து வருவது போல், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் மீண்டும் பாலஸ்தீன மக்கள் எழுந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். 

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பித்த போர் எட்டு மாதங்களைக் கடந்து அதாவது 230 நாள்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதல் 200 நாட்களைக் கடந்த பொழுது காசா பகுதியில் 15,000 குழந்தைகள் உட்பட 37,953 பேர் கொல்லப்பட்டிருக் கிறார்கள். 87266 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காணாமல் போய் உள்ளனர். சுமார் 19 லட்சம் காசா மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதமாகும். ராபா, காசாவில் உள்ள ஒரு பகுதி. இந்தப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் நிர்மூலமாக்கியது. இடம்பெயர்ந்த வர்களில் பெரும்பகுதி அதாவது 14 மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். இங்கு 4000 பேருக்கு ஒரு கழிவறை தான் உள்ளது. இங்குள்ள 307 பள்ளிகளில் 288 பள்ளிகள் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. 34 மருத்துவமனைகளில் 31 மருத்துவமனைகளை தரைமட்டமாக்கிவிட்டனர். ராபா, மக்கள் வாழத் தகுதியற்ற நகரமாக மாற்றப்பட்டாலும் பாலஸ்தீன மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா பகுதியில் உள்ள 62  சதவீத வீடுகள் அதாவது 2,90,820 வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள் ளன. இந்தப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு 10 பள்ளிக்கூடங்களிலும் 8 பள்ளிக்கூடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டு விட்டன. 26க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தரைமட்டம் ஆக்கப்பட்டு விட்டன. மற்றவை கடும் சேதம் அடைந்திருக்கிறது. 

உயிரிழந்த மக்களின் உடல் உறுப்புகளை இஸ்ரேல் ராணுவம் திருடுகிறது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளால் காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் உணவுப் பொருட்களை தடுப்பது, மருந்து பொருட்களை கொடுக்க மறுப்பது என மிக சாதாரணமாக அனைத்து மனித உரிமைகளையும் மீறிக் கொண் டிருக்கிறது. 

அமெரிக்கா, பிரிட்டனின் ஆதரவு பெற்ற  சியோனிசத்திற்கு ரத்த வெறி அடங்கவில்லை; அதே நேரத்தில் பாலஸ்தீன மக்களின் விடுதலை வேட்கையை  அடக்கவும் முடியவில்லை.

ஹமாஸ் அமைப்பை துடைத்தெறியும் வரை யுத்தம் தொடரும் என்று பெஞ்சமின் நெதன்யாகு கொக்கரித்தார். 8 மாதங்கள் ஆன பிறகும் அவர் எண்ணம் பலிக்கவில்லை. இஸ்ரேலிய இராணுவம் தளர்வு கண்டிருப்பதை பல செய்தி ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதோடு மிக மோசமான சவால்களையும் அது எதிர்கொள்ள வேண்டி உள்ளது.  ஆள் பற்றாக்குறையால் சோர்வடைந்து இருப்பதும், ராணுவத்தை விட்டு வெளியேறுவதும் அதிகமாகி உள்ளது. இஸ்ரேலிய ராணுவ பத்திரிக்கையாளர் அமீர் ராஃபா போர்டு எழுதுகிற பொழுது, இஸ்ரேல் ராணுவத்தில் தலைமை பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. வீரர்களின் உடல் மற்றும் மனசோர்வு, தீக்காயங்கள் போன்றவை ராணுவத்தினரை கவலை கொள்ள செய்து நிலைகுலைய வைத்திருப் பதாக குறிப்பிடுகிறார். 

அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி  644 ராணுவ வீரர்கள் இறந்ததாகவும் 3703 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் இது மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.  ஏப்ரலில் மட்டும் 7200 வீரர்கள் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கணக்கில் காட்டப்பட்டதைவிட பல மடங்கு அதிகமாக இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் இறந்துள்ளனர் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலஸ்தீனியர்களின் தாக்குதல்கள் இஸ்ரேலிய ராணுவத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேலிய செய்தி தளமான ‘ஒய்நெட்’ (Ynet) தகவலின் படி இஸ்ரேலிய ராணுவ பணியில் உள்ள அதிகாரிகள் 42 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெரியவந்துள்ளது. போரின் போது மன உறுதி அதிகமாகும் என்ற கணிப்பு பொய்யாகிவிட்டது. விமானத்தில் இருந்த பாராசூட் மூலம் குதித்து சண்டையிட பயிற்சி பெற்ற  பாராட்ரூப்ஸ் (paratroops) வீரர்கள் 30க்கும் அதிகமானோர் கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் வேலை செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இப்படி எண்ணற்ற செய்திகள் இஸ்ரேல் ராணுவத்தை பற்றி வெளியாகி இருக்கிறது. இதிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தில் உள்ளவர்களுக்கு காஸாவில் யுத்தத்தை தொடர்வதில் ஆர்வம் இல்லை என்பது வெளிப்படுகிறது. 

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக யுத்தத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். 30 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் நெதன்யாகு உள்நாட்டில் ராணுவ டாங்குகளை தனியாருக்கு கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் செய்துள்ளார் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. அவர் பதவி இழந்த மறுநிமிடம் அந்த நாட்டு சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட சபையில் 64 பேர் அவருக்கு ஆதரவளிப்பதால் தப்பி பிழைத்து வருகிறார். ஒருபுறத்தில் நெதன்யாகுவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் இஸ்ரேலில் தொடர்ந்து நடைபெறுகிறது. மறுபுறத்தில் இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் மரணம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சூயஸ் கால்வாய் வழியாக இஸ்ரேலுக்கு வருகின்ற கப்பல்களை ஹைதி இயக்கத்தினர் வழிமறித்து தாக்குகின்றனர். இதனால் ஐரோப்பிய பொருளாதரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் ஹிஸ்புல்லா படையினர் புகுந்துள்ளனர். எகிப்து பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினர் எதிர்த்து நிற்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் 2000 கிலோமீட்டர் நீளத்திற்கு ரத்த நாளங்களை போன்ற சுரங்கப்பாதைகளை ஹமாஸ் இயக்கத்தினர் நிறுவி இருப்பது மிக முக்கியமானது. வடக்கு தெற்கு செங்கடல் என எல்லா பக்கமும் இஸ்ரேல் சூழப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள 20 ஆயிரம் ராணுவ வீரர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் தனக்கு ஆதரவாக முழுமையாக செயல்படுவார் என்ற நம்பிக்கையில் இந்த போரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நீட்டிக்க விரும்புகிறார்.

மறுபுறத்தில் உலக நாடுகளில் இருந்து இஸ்ரேல் தனிமைப்படும் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறது. அமெரிக்காவும் இதிலிருந்து தப்பிப்பதற்காக சில பூச்சாண்டி வேலைகளை செய்து நடுநிலை வேஷம் போட்டுக்கொண்டு பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக பம்மாத்து காட்டிக்கொண்டு இருக்கிறது. 

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யாததை முன்வைத்து உலக நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 2024 மே 10 தேதி அன்று கூடிய ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகளின் கூட்டமைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் கூட்டப்பட்ட அவசர ஐநா சபை கூட்டத்தில் 193 நாடுகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 143 நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், அர்ஜென்டினா உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. ஐநா சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியது. இஸ்ரேல் கோபமடைந்து தீர்மான நகலை கிழித்துப் போட்டு விட்டது. 

இதுவரை அமெரிக்காவின் சொல்படி நடந்து கொண்டிருந்த ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள், அதிலிருந்து மாறுபட்டு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக அறிக்கை வெளியிட்டன. நார்வே நாட்டுப் பிரதமர் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது; தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பாலஸ்தீனத்திற்கு உள்ளது. இஸ்ரேலுடன் சமாதானத்தை ஏற்படுத்த இது உதவும் என்ற நம்பிக்கையில் சுதந்திர பாலஸ்தீன அரசை எங்கள் நாடு அங்கீகரிக்கும் என்று தெரிவித்தார். 

அதேபோல, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ``தன் நாட்டு மக்களின் பெரும்பான்மை உணர்வை எதிரொலிக்கும் வகையில் பாலஸ்தீனத்தின் அரசு அங்கீகரிக்கப்படும். இந்த முயற்சி நீதி, சமாதானம், ஒத்திசைவு போன்ற வார்த்தைகளில் இருந்து செயலுக்கு நகர்ந்திருக்கிறது!" எனக் கூறினார். அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், ``இரு நாடுகளின் தீர்வு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் மற்றும் அவர்களின் மக்களுக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான ஒரே நம்பகமான பாதை! இன்று அயர்லாந்து பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கிறது என அறிவித்துவிட்டார்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர், மூன்று நாடுகளையும் கடுமையாக எச்சரித்தார். விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று பயமுறுத்தினார்.

இப்படி, உலக நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான நிலையை எடுத்த சூழலில்,  இஸ்ரேலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court -ICC) கொண்டுபோய் தென் ஆப்பிரிக்கா நிறுத்தியுள்ளது. இஸ்ரேல், போர் குற்றவாளி என்று தென் ஆப்பிரிக்கா வழக்கை தொடுத்துள்ளது. 

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  தலைமை வழக்கறிஞர் கரீம் கான், ``காஸா மீதான போர் மூலம் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை பட்டினி போட்டது; வேண்டுமென்றே அவர்கள்மீது தாக்குதல் நடத்தியது; உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு இணங்க வேண்டிய கடமையிலிருந்து இஸ்ரேல் தப்ப முடியாது!" எனக் கண்டனம் தெரிவித்தார். 

அதேபோல, ``ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும் கொலை, பிணைக்கைதிகளை பிடித்தல், சித்ரவதை செய்தல் உள்ளிட்டப் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக் கின்றனர்" என இருதரப்பின் மீதும் கடுமையான குற்றங்களை சுமத்தி, தொடர்ந்து போர் குற்றங்களை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரன்ட் கோரினார். அவரின் கோரிக்கையை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றன. அதேநேரம் இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்கா நாடுகள் கடுமையாக எதிர்த்தன.

பிரிட்டன் வீட்டு வசதி துறை அமைச்சர் மைக்கேல் கோ, ‘‘ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. இஸ்ரேல் ஒரு நாடு. அது தன் மக்களை பாதுகாக்க முயற்சிக்கிறது. இரண்டையும் சமமாக பார்க்கக்கூடாது’’ என்று இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு வக்காலத்து வாங்குகிறார்.

இஸ்ரேல் 1948 இல் சட்டவிரோதமாக துப்பாக்கி முனைகள் மீது பாலஸ்தீனத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு நாடு. ஹமாஸ் தேசிய ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாலஸ்தீனிய மக்களின் நியாயமான ஆயுதமேந்திய எதிர்ப்பின் ஒரு வடிவமாக உள்ளது. இதை பிரிட்டன் அமைச்சர் தலைகீழாக மாற்றிப் பேசுகிறார்

ஒடுக்கப்பட்டவர்களின் நியாயமான எதிர்ப்பிற்கும் ஒடுக்குமுறையாளரின் அநியாய மற்றும் இனப்படுகொலை வன்முறைக்கும் இடையில் எந்த சமத்துவமும் இருக்க முடியாது என்பதை அந்த மந்தி(ரி)யால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதையேதான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் வேறு வார்த்தைகளில் வாந்தி எடுத்திருக்கிறார். இஸ்ரேலிய பிரதமருக்கு கைது வாரன்ட்  கேட்பது சிறுபிள்ளைத்தனமானது என்று அவர் சீறியிருக்கிறார்.  உலக ரவுடியான அமெரிக்காவுக்கு தொடர்ந்து ஒத்தாசை செய்து வரும் இஸ்ரேலுக்கு ஜோ பைடன் பரிவு காட்டுவது இயல்பானதுதான்.

எது எப்படியோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்  தலைமை வழக்கறிஞர் கரீம் கான், இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக கைது வாரன்ட் கோரியிருப்பது உலக அளவில் பேசு பொருளாகி விட்டது. இதன் மூலம் இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட விடாமல் இஸ்ரேல் அச்சுறுத்தி வந்திருக்கிறது. நீதிமன்ற அதிகாரிகளை இஸ்ரேலிய உளவுத்துறை மிரட்டுவது, தகவல் தொடர்புகளை கைப்பற்றுவது, தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் போன்றவற்றை இடைமறித்து இடையூறு செய்வது போன்ற குடைச்சல்களை தொடர்ந்து கொடுத்து வந்தது. தற்போது ஐசிசியின் தலைமை வழக்கறிஞர், இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரன்ட் கோரியிருப்பதன் மூலம் சரியான ஆப்பு வைக்கப் பட்டுள்ளது.

 

பாலஸ்தீனத்தில் நடைபெறக்கூடிய கொடூரமான தாக்குதல்களை சில ஊடகங்கள் மட்டுமே வெளிப்படுத்துகின்றன. பல ஊடகங்கள் வெளிப்படுத்துவது இல்லை. அவை அமெரிக்க ஆதரவு நிலையில் இருந்து செயல்படுகின்றன. இஸ்ரேலிய இராணுவத்தின் பலவீனங்களை அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் வெளியிடாததோடு இஸ்ரேலுக்கு எதிராக நடைபெறக்கூடிய போராட்டங்களையும் இருட்டடிப்பு செய்கிறார்கள். சமூக வலைதளங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்தை வெளியிடாமல் தடுக்கப்படுகிறது. முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவைகளை நடத்தும் மார்க் சக்கர்பெர்க் ஒரு யூதர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நடத்தும் பில் கேட்ஸ் ஒரு யூதர். பெப்சி கோக் நிறுவனங்கள், லேவி ஜீன்ஸ் போன்றவைகள் யூதர்களால் நடத்தப்படக் கூடியது ஆகும். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் இரண்டு கட்சிகளுக்கும் நிதிகளை அள்ளிக் கொடுப்பவர்கள். அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இரு கட்சிகளுக்குமே இவர்களின் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. யூதர்களை எதிர்த்து பேசினால் அமெரிக்க ஜனாதிபதிகளையே அம்பலப்படுத்த கூடிய அளவுக்கு பொருளாதார பலம் படைத்தவர்களாக ஜியோனிச ஆதரவாளர்களான யூதர்கள் இருக்கிறார்கள். 

ஆனாலும், இன்று இந்தியா போன்ற சில நாடுகளைத் தவிர உலகம் முழுவதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் பள்ளி குழந்தைகளில் ஆரம்பித்து கல்லூரி மாணவர் வரை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 45 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர். 1250 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடன் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்று அந்த கல்வி நிறுவனங்களை இஸ்ரேலியர்கள் மிரட்டி உள்ளார்கள். ஆனாலும், பட்டமளிப்பு விழாவில் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி வந்து மாணவர்கள் பட்டத்தை பெறுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போன்றவர்களின் பொது நிகழ்வில் கூட எதிர்வலைகள் எழுந்துள்ளன. இந்த செய்திகள் வெளியாகாமல் ஊடக மற்றும் சமூக வலைதள உரிமையாளர்கள் தடுக்கின்றனர். டிக் டாக் போன்ற செயலிகள் மூலமாக இன்று இது வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் கூட பிரபலமான பத்திரிகைகள் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் கொடுமைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவது இல்லை.  உலக ஏகாதிபத்தியத்தையே எதிர்த்து, ஊடக ஏக போக அடக்கு முறைகளை எதிர்த்து பாலஸ்தீன மக்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

 

***

இந்த சூழலில்தான் அறிஞர் வெ. சாமிநாத சர்மா எழுதிய ‘‘பாலஸ்தீனம்’’ என்ற நூலை பாரதிய புத்தகாலயம் மறு வெளியீடாக கொண்டு வந்துள்ளது. தமிழ்கூறும் நல்லுலகிற்கு வெ. சாமிநாத சர்மாவைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர் ஒரு தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். “பிளாட்டோவின் அரசியல்”, “சமுதாய ஒப்பந்தம்”, கார்ல் மார்க்ஸ், “புதிய சீனா”, ”பிரபஞ்ச தத்துவம்” என்று வாழ்க்கை வரலாறு நூல்கள், வரலாற்று நூல்கள், அரசியல் நூல்கள் என்று 75க்கும் அதிகமான நூல்களை தமிழுக்கு தந்திருக்கிறார். உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழர்களுக்கு தந்தவர் அவர்.

வெ.சாமிநாத சர்மாவின், ‘‘பாலஸ்தீனம்’’ என்ற நூல் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்ற பதிப்பகத்தால் 1939 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரங்கோனில் (இன்றைய யாங்கூன்) வெளியிடப்பட்டுள்ளது. உள்ளங்கைக்குள் ஒட்டுமொத்த உலகம் மட்டுமல்ல… பிரபஞ்சத்தை அடக்கி விடக்கூடிய தகவல் தொழில்நுட்ப புரட்சி உச்சத்தில் இருக்கும் காலம் இது. ஆனால், மிக மிக குறைவான தகவல்களை மட்டுமே பெற வாய்ப்புள்ள காலகட்டத்தில் அறிஞர் வெ.சாமிநாத சர்மா, பாலஸ்தீன பிரச்சனையை அதன் வரலாறு, பண்பாடு, அரசியல், பொருளாதார வளம், ஏகாதிபத்திய தலையீடு என்ற அம்சங்களுடன் வர்க்க ரீதியான பார்வைகளையும் உள்ளடக்கி ‘‘பாலஸ்தீனம்’’ என்ற நூலை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. 1938 ஆம் ஆண்டுகள் வரை பாலஸ் தீனத்தின் பிரச்சினைகளை ஆய்வு செய்து கொடுத்துள்ளார். பாலஸ்தீன நிலப்பகுதி எப்படி இருந்தது? யார் யார் ஆதிக்கம் செய்து பேரழிவை ஏற்படுத்தினார்கள் என்பதில் ஆரம்பித்து லண்டனில் நடைபெற்ற சமரச மாநாடுகள் வரை இந்த நூலில் கொண்டு வந்திருக்கிறார்.  

இன்று பல்வேறு விதமான தகவல்கள் நமக்கு எளிதில் கிடைத்தாலும் சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர் அன்றைய நிலைமைகளை விளக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நூலின் விவரங்களை இந்த முன்னுரையில் விவரிப்பது பொருத்தமாக இருக்காது. அறிஞர் சாமிநாத சர்மாவின் எழுத்துக்களில் அவற்றை வாசித்து உள்வாங்குவது தான் பொருத்தமாக அமையும். அவர் தனது முன்னுரையில் (முன்னணி என்று குறிப்பிட்டுள்ளார்) முடிக்கிற பொழுது "வெளிநாட்டு விவகாரங்களில் தமிழர்களாகிய நாம் இன்னும் அதிகமான சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கோரிக்கை" என்று முடிக்கிறார். 


***

1938ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற விஷயங்களை சுருக்கமாக இங்கே நாம் கவனத்தில் கொள்வது இந்த நூலை வாசிப்பதற்கு உதவி செய்யும். அவற்றை பார்ப்போம்…

 

பிரிட்டிஷார் மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்தை அரபு பகுதியில் நிலை நிறுத்துவதற்கு ஜியோனிசம் என்ற இஸ்ரேல் தேவைப்பட்டது. அவர்களின் முழு ஆதரவுடன் சியோனிஸ்டுகள் மூன்று விதமான திட்டங்களை வகுத்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தனர். 1920 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியேற்ற அவசர சட்டத்தை பயன்படுத்தி இதை நிறைவேற்றினர். 1926 ஆம் ஆண்டு நாலு சதவீதம் நிலங்களை வாங்கினார்கள். 1936 இல் ஐந்து சதவீத நிலங்களை வாங்கினார்கள். இது 1945 இல் 6 சதவீதமாகவும் 1948 இல் 8.6 சதவீதமாகவும் அதிகரித் தது. நிலத்தை வாங்கியதோடு, தங்கள் நிலத்தில் அரேபியர்கள் வேலை செய்யக்கூடாது என்று தடை விதித்து அவர்களை வெளியேற்றி னார்கள்.இரண்டாவதாக பெருங்குடியேற்றங்களை உருவாக்கி னார்கள். 

 

1903 பாலஸ்தீனத்தில் 25 ஆயிரம் யூதர்கள் இருந்தார்கள். இந்த எண்ணிக்கை  1914 இல் 40 ஆயிரமாக உயர்ந்து. 1923 இல் மக்கள் தொகையில் பன்னிரண்டு சதவீதமாக மாறினர். அதன் பிறகு  மக்கள் தொகையில் 1928 இல் பதினாறு சதவீதமாகவும் 1939இல் 30 சதவீத மாகவும் 1945 இல் 32 சதவீதமாகவும் குடியேற்றங்களை அதிகப் படுத்தினர். மூன்றாவதாக சியோனிச அமைப்புகளால் உருவாக்கப் பட்டிருந்த தீவிரவாத படைகள் மூலம் அரபு மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் கலவரம் செய்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றி னார்கள். 

இந்தப் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்துக்கு உள்ளே இஸ்ரேலை உருவாக்குவது என்ற முறையில் ஒரு கமிஷனை அமைத்தார்கள். 1947 ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டிஷ் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக்குழுவில் ஆஸ்திரேலியா, கனடா, செக்கோஸ்லோவேகியா, கௌதிமாலா, இந்தியா, ஈரான், நெதர்லாந்து,  பெரு,  ஸ்வீடன், உருகுவே, யுகோஸ்லோவேகியா ஆகிய 11 உறுப்பு நாடுகள் இருந்தன. இந்தக் குழுவில் இருந்த  7 உறுப்பினர்கள் இரு நாடாக பிரிப்பதற்கான ஆலோச னைகளை கொடுத்தனர். இந்தியா, ஈரான், யுகோஸ்லோ வேகியா ஆகிய மூன்று நாடுகள் ஒரே நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தின. ஆஸ்திரேலியா நடுநிலை வகித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைப்படி 1947ம் ஆண்டு நவம்பர் 29 அன்று ஐ.நா. பொது சபையில் தீர்மான முன்மொழிவு பெற்று மொத்தம் இருந்த 58 நாடுகளில் 37 நாடுகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தன. 9 நாடுகள் நடுநிலை வகித்தன.

1948 மே 14 அன்று சியோனிச அமைப்பு அதன் முக்கிய தலைவர் டேவிட் பென் கொரியன் இஸ்ரேல் இன்று முதல் தனி நாடு என்று அறிவித்தார். அவர் அறிவித்த அன்றே அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ்.ட்ரூமன் இஸ்ரேல் அரசை அங்கீகரித்தார். 1949 மே 11 அன்று தான் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலை அங்கீகரித்தது. 

ஐ.நா.சபையின் ஆலோசனைப்படி 43 சதவீதம் நிலம் அரபுகளுக் கும், 56 சதவீதம் நிலம் இஸ்ரேலுக்கும் ஒதுக்கப்பட்டது. ஒரு சதவீத நிலமான ஜெருசலேம் ஐ.நா. சபையின் கட்டுப்பாட்டில் 10 ஆண்டுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அரேபியர்கள்(பாலஸ்தீனர்கள்) இதை ஏற்க மறுத்தனர். இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்ட 56 சதவீத நிலப்பகுதியில் ஐந்தரை லட்சம் அரபுக்களும் நாலு லட்சம் யூதர்களும் இருந்தார்கள். பாலஸ்தீனத்திற்கு ஒதுக்கப்பட்ட 43 சதவீத நிலப்பரப்பில் ஏழரை லட்சம் அரபுக்களும் ஒரு லட்சம் யூதர்களும் இருந்தார்கள். 

1948 மே 14ல் இஸ்ரேல் தனி நாடு என்ற அறிவிக்கப்பட்ட உடனேயே இஸ்ரேல் தன் படைகள் மூலமாக பாலஸ்தீனர்கள் வாழும் கிராமங்கள்  மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள மக்களை வெளியேற்றினர். பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கினார்கள். இந்த காலகட்டத்தில் மட்டும் ஏழு லட்சம் அரேபியர்கள் தங்கள் நிலத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் வசிப்பிடங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. சரி பாதியாக இருந்த நிலப்பகுதியை இஸ்ரேல் படிப்படியாக ஆக்கிரமித்து இன்று 20,770 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. பாலஸ்தீனம் மேற்கு கரை மற்றும் காசா பகுதி என சுருக்கப்பட்டு 6020 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக மாறிவிட்டது. இந்த குறைவான நிலப்பகுதியில் பெரும்பாலான இடங்களை இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமித்து உள்ளன. 

அரபு நாடுகள் இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்கவில்லை. 1948,1953,1967,1973 ஆகிய வருடங்களில் இஸ்ரேல்-அரபு யுத்தம் நடைபெற்றது. இஸ்ரேல், அமெரிக்க பிரிட்டிஷ் ஆதரவுடன் அரபு நாடுகளை வெற்றி கொண்டு பாலஸ்தீனத்தை மேலும் ஆக்கிரமித்தது. 

இதற்கிடையில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக 1957 இல் யாசர் அராபத் அல்-ஃபதா என்ற கட்சி ஆரம்பித்தார். அதன் பிறகு பாலஸ்தீன விடுதலை இயக்கம் - பி எல் ஓ (Palestine Liberation Organization -PLO) என்ற அமைப்பை உருவாக்கினார். இதற்கு தனியாக இராணுவ பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. 1973-74 இல் கூட்டப்பட்ட அனைத்து அரபு நாடுகள் பங்கேற்ற அரபு உச்சிமாநாட்டில், பாலஸ்தீன மக்களின் ஒரே சட்ட பூர்வமான  பிரதிநிதியாக பி எல் ஓ அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது .இதையடுத்து பி எல் ஓ அமைப்பு ஐ.நா. சபைக்கு பார்வையாளராக அழைக்கப்பட்டது. பி எல் ஓ வில் 13 க்கும் அதிகமான அமைப்புகள் உள்ளன. ஹமாஸ் இதன் உறுப்பினராக இல்லை. 

1987 ஆம் ஆண்டு யாசர் அராபத் தலைமையில் பி எல் ஓ அமைப்பு ‘‘இன்டிஃபாடா’’  என்ற இயக்கத்தை தொடங்கி 7 ஆண்டுகள் வரை இடைவிடாத கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதனால், எண்ணற்ற அழிவுகளும் உயிர் சேதங்களும் ஏற்பட்டாலும் போராட்டங்கள் ஓயவில்லை.

1988 ஆம் ஆண்டு யாசர் அராபத் பாலஸ்தீனத்தை தனி நாடு என்று அறிவித்தார். இதனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் கடும் கோபம் கொண்டு யாசர் அராபத்தை மூர்க்கமாக எதிர்க்கத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளராக கலந்து கொள்ளக்கூடிய யாசர் அராபத்துக்கு விசா வழங்க  அமெரிக்கா  மறுத்துவிட்டது. இதனால் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தை ஜெனிவாவில் நடத்தி யாசர் அராபத்தை கலந்து கொள்ள வைத்தனர். 

1993 ஆம் ஆண்டு நார்வே நாட்டிலுள்ள ஒஸ்லோ என்ற இடத்தில் இஸ்ரேல் பிரதமர் இட்சாக் மற்றும் பி எல் ஓ தலைவர்களில் ஒருவரான  முகமது அப்பாஸ் இடையே  பேச்சு வார்த்தை துவங்கி நடைபெற்று கடைசியாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது ஓஸ்லோ ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. இதன்படி இஸ்ரேல்  பாலஸ்தீனியர்களின்

பிரதிநிதியாக பி எல் ஓ வை ஏற்றுக் கொண்டது. இந்த ஒப்பந்தம் பாலஸ்தீனிய சுய அரசாங்கத்தை மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் படிப்படியாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

 

பாலஸ்தீன அதிகார சபை பாலஸ்தீன பகுதியில் நிறுவப்பட்டது. மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் பி எல் ஓ பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு, பி எல் ஓ, இஸ்ரேல் அரசை முதன்முறையாக அங்கீகரித்தது. ஆனாலும் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மீறியது. பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜெருசலேம் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது.

 

ஓஸ்லோ ஒப்பந்தத்தை பாலஸ்தீன மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக ஹமாஸ் அமைப்பு இதை எதிர்த்ததோடு, தேர்தலில் வெற்றி பெற்று காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இஸ்ரேல் இதைவெற்றியை  ஏற்கவில்லை. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கும் பி எல் ஓ விற்கும் மோதலை உருவாக்கி குளிர் காய நினைத்தது. ஆனால் அதன் எண்ணம் பலிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய முறையில் தொடர்ந்து போராடி வந்து கொண்டிருக்கிறது. 

இந்தப் பின்னணியில் தான் ஹமாஸ் அமைப்பை அழித்தே தீர வேண்டும் என்ற கொலை வெறியுடன் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி காசா பகுதியை இடுகாடாக்கி வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கு இன்று வரை ஒப்புதல் அளிக்கவில்லை. அரபு நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இஸ்ரேல் என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகக் கொடூரமான அடியாளை தயார் செய்து ஏவிக் கொண்டிருக்கிறது. 

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அரபு நாடுகளையும் ஆப்பிரிக்க நாடுகளையும் சூறையாடி வருகின்றனர். இக்காலத்தில் சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்கா ஆதிக்கத்திற்கு எதிராக வளர்ந்து பன்முக உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த புவிசார் அரசியலில் அமெரிக்கா தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக இஸ்ரேலை ஆதரித்து வருகிறது. 

 

இந்த ஏகாதிபத்திய நாடுகள் ஏன் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் அதற்கான 1920 ஆம் ஆண்டுகளில் என்ன தேவை ஏற்பட்டது? 1938 ஆம் ஆண்டுகளில் என்ன தேவை ஏற்பட்டது? என்பதை எல்லாம் அறிஞர் சாமிநாத சர்மா அவர்கள் இந்த புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். அது மட்டுமல்ல இஸ்ரேலின் சியோனிச கொள்கைகளையும் அதன் முதலாளி வர்க்க நலன்களையும் அரபு பகுதியில் எப்படி செயல்படுத்தினார்கள் என்பதை வர்க்க ரீதியான உதாரணங்களுடன் அறிஞர் சாமிநாத சர்மா விளக்கி இருக்கிறார். 

 

1939 ஆம் ஆண்டு வெளிவந்தாலும் வரலாற்றின் அரசியலை, சமாதான போர்வையில் நடக்கும் யுத்தங்களை தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறார். இந்த நூலை வாசிப்பது பாலஸ்தீன பிரச்னை பற்றிய புரிதலை மேலும் மேம்படுத்தும். 


 அ.பாக்கியம்

வியாழன், ஜூன் 26, 2025

26 உய்குர்∶ வரலாறும் வளர்ச்சியும்




சீனாவின் மதத்தைப் பற்றி எழுதி முடிக்கிற பொழுது உய்குர் இன மக்களின் பிரச்சனையை எழுதாமல் முடிக்க முடியாது. காரணம் மதமும் இனமும் இரண்டறக் கலந்து இருக்கக்கூடிய பிரச்சனை இது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பது போல், சீனாவில் பல இடங்களில் இனக்குழுவும், மதமும் பழக்கவழக்கங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். து மட்டுமல்ல, இன்றைய சீன விரோத சக்திகளால் குறிப்பாக அமெரிக்காவால் புவிசார் அரசியலில் முன்னெடுக்கப்படுகிற பல புள்ளிகளில் மத்திய ஆசியாவின் முக்கிய புள்ளியாக உய்குர் இனப் பிரச்சனை இருக்கிறது.

சீனாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு அமெரிக்கா ல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதோடு, பல்முனை தாக்குதல்களையும் தொடுத்து வருகிறது. தைவான் ஜலசந்தியில் யுத்தத்தை உருவாக்குவது, தென் சீனக்கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டை சீனாவுக்கு எதிராக தூண்டிவிடுவது, இந்தியாவின் எல்லைப்புறங்களில் முரண்பாடுகளுக்கு கொம்பு சீவிவிடுவது போன்று சீனாவுக்கு எதிராக  பல செயல்களில் அமெரிக்கா ஈடுபடுகிறது.  இதேபோன்று சீனாவில் உள்நாட்டு கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் ஆட்சியாளர்களை பலவீனப்படுத்தவும் பல நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. ஹாங்காங் தன்னாட்சி பிரதேசத்தில் போராட்டங்களை தூண்டி விடுவதும், தியான்மென் சதுக்கத்தில் எடுத்த முயற்சிகளும் ஜனநாயக மீட்பு என்ற போர்வையில் அமெரிக்கா நடத்திய நாடகம் ஆகும். சீனாவில் மத சுதந்திரம் இல்லை என்று கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பை அமெரிக்கா தூண்டி விடுகிறது. இதற்கு போப் ஆண்டவரை கருவியாக பயன்படுத்தவும் முயற்சிக்கிறது.

இதேபோன்று வடமேற்கு சீனாவில் இருக்கக்கூடிய உய்குர் இன மக்களின் பிரச்சனைகளை முன் வைத்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் தூண்டி விடுகிறார்கள். சீனாவில் உய்குர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள். அவர்களின் உரிமைகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் ஈரான், ஈராக், லிபியா, ஏமன், பாலஸ்தீனம், சிரியா உட்பட எண்ணற்ற நாடுகளில் இஸ்லாமிய மக்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து வருகிறது. எனவே இவர்களின் மனித உரிமை, மத சுதந்திரம் அனைத்தும் தங்களுக்கு ஆதரவான, மக்களை சுரண்டுவதற்கான அமைப்பை உருவாக்குவதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

ய்குர் என்றால் என்ன?

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஜின்ஜியாங் மாநிலம். இந்த மாநிலத்தில் உய்குர் இன மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள். ஆனால் துருக்கி மொழிகுடும்பத்தை சேர்ந்த உய்குர் மொழியை பேசக்கூடியவர்கள். துருக்கி, உஸ்பெக்,கசன் கலந்து உய்குர் உருவானது. வரிவடிவத்திற்கு அதாவது எழுதுவதற்கு அரபிக் மொழி வடிவத்தை பயன்படுத்துகின்றனர். வேறுசில இடங்களில் வாழக்கூடிய உய்குர் இன மக்கள் லத்தின் வடிவத்தை பயன்படுத்து கின்றனர்.  1949 ஆம் ஆண்டு வரை அதாவது புரட்சி வெற்றி பெறுகிற வரை இது ஜின்ஜியாங் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. இங்கு உய்குர் மக்கள் அதிகமாக வாழ்ந்ததால் அவர்களின் தனித்தன்மையை பாதுகாப்பதற்கா சீன மக்கள் குடியரசு 1955 ஆம் ஆண்டு ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி மாநிலம் என்று இதன் பெயரை மாற்றியது. அது மட்டுமல்ல... அதற்கான திட்டங்களையும் உருவாக்கியது.

இந்த மாநிலம் யுரேசிய கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சீனாவில் இருக்கக்கூடிய மாகாணங்களில் மிகப் பெரியது. சீன நிலப்பரப்பில் ஆறில் ஒரு பகுதியை இந்த மாநிலம் மட்டும் கொண்டுள்ளது. சுமார் 1.6649 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது. இந்த மாநிலத்தின்  மற்றொரு முக்கியத் தன்மை சீனாவின் மொத்த எல்லைப் புறத்தில் 5700 கிலோ மீட்டருக்கு அதிகமான நீளம் உள்ள எல்லையை இந்த மாநிலம் பெற்றுள்ளது. மொத்த எல்லையில் கால்பங்கு எல்லை இந்த மாநிலத்தில் மட்டும் வருகிறது. மற்றொரு குறிப்பிடத்தக்க புவிசார்ந்த அம்சம் மங்கோலியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு நாடுகளின் எல்லைப்புறங்கள் இந்த மாநிலத்தை ஒட்டி உள்ளன. அது மட்டுமல்ல இந்த பகுதி பண்டைய காலத்திலிருந்து சீனாவின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது.

உய்குர் இன மக்கள் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவின் பொதுவான பகுதியிலிருந்து தோன்றியவர்கள். இவர்கள் கலாச்சார ரீதியாக துருக்கிய இனக்குழுக்களில் இருந்து உருவானவர்கள். உய்குர் என்பது பண்டைய இனக்குழுக்களின் பெயர்களை குறிக்கக்கூடியது. 19ஆம் நூற்றாண்டில்தான் இம்மக்களுக்கு உய்குர் என்ற பெயர் பொதுவாக வழங்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளியான இந்தியா மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவின் என்சைக்ளோபீடியா என்ற கலைக்களஞ்சியம் உய்குர் மக்கள் துருக்கிய பழங்குடியினர்களில் மிகவும் பழமையானவர்கள் என்று பதிவு செய்வதுடன், இவர்களின் முன்னோர்கள் சீன டார்டோரியன், ஜின்ஜியாங் பகுதியில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. சீன மக்கள் குடியரசு தெரிவித்திருப்பது போல் இந்தப் பிரதேசம் பண்டைக்காலம் முதல் சீனாவின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள் பல உள்ளன.

உய்குர் மக்கள் பற்றியும், அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் பொது ஆண்டுகள் 4 மற்றும் 5 நூற்றாண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உய்குர் மக்கள் காலங்காலமாக இஸ்லாமிய மக்களாக இருக்கவில்லை. 15ஆம் நூற்றாண்டு வரை இவர்களின் பெரும்பாலானோர் பௌத்த மதங்களை தழுவியவர்களாக இருந்தார்கள். 10ம் நூற்றாண்டில் தான் ஒரு பகுதியினர் இஸ்லாம் மதத்தை ழுவ ஆரம்பித்தனர். 16ஆம் நூற்றாண்டில் பெரும் பகுதி உய்குர் மக்கள் இஸ்லாமிய மதத்தை ழுவினார்கள். இந்த நிகழ்வுகள் 17ஆம் நூற்றாண்டு வரை நடந்து கொண்டுதான் இருந்தது. 17 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு உய்குர் மக்களின் பிரதான அடையாளமாக இஸ்லாம் மதம் மாறியது. இதற்குப் பிறகு இம்மக்களின் கலாச்சாரம், அவர்களின் அடையாளம் அனைத்திலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்தது. இக்காலத்திலிருந்து இம்மக்கள் அதற்கு முந்தைய பௌத்த மரபு வழியிலான செயல்களை துண்டித்துக் கொண்டனர்.

ஜின்ஜியாங் மாநிலத்தில் உள்ள தாரிம் வண்டல் படுகையில்தான் இம்மக்களில் 80 சதவீதம் பேர் வாழ்கிறார்கள். இந்தத் தாரிம் படுகை தக்கல்மான் பாலைவனம் முழுவதும் சிதறி கிடக்கக்கூடிய சோலைவனமாகும். இது ஒரு வளமானபடுகை. சுமார் 8,88,000 கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கி உள்ளது. வடமேற்கு சீனாவில் மிகப்பெரிய படுகைகளில் ஒன்று. இவை தவிர உய்குர் மக்கள் தலைநகர் உரும்கியிலும், அதிகமாக வாழ்கிறார்கள்.

1765 ஆம் ஆண்டு மஞ்சு வம்சத்தினர் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் பொருளாதாரக் கொள்கையும், அடக்கு முறையும் ஜின்ஜியாங் மாநிலத்தை கடுமையாக பாதித்தது. இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. பெரும்பாலும் உய்குர் இன மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மன்னர் அந்தப் போராட்டங்களை கடுமையாக அடக்கினார். போராட்டக்காரர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டார். ஆண்களை தூக்கில் போடுவதும், பெண்களையும் குழந்தைகளையும் அடிமையாக்கிடவும் உத்தரவிட்டார். இது உய்குர் மக்கள் மத்தியில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தின.

1911 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு புரட்சிக்கு பிறகு சீனாவை ஆட்சி செய்த கோமிங்டாங் கட்சி, சீனாவில் உள்ள ஒட்டுமொத்தமான முஸ்லிம் மக்களுடன் இணைத்து உய்குர் மக்களையும் பார்த்தனர். இதற்கு முன் ஆட்சி செய்த மஞ்சு அரசாங்கமும் இவர்களை இஸ்லாமிய மக்களின் ஒரு பிரிவாக மட்டுமே பார்த்தனர். இந்நிலையில், 1944 ஆம் ஆண்டில் சீனாவில், யுத்த பிரபுக்களின் ஆட்சி நடைபெற்றது. பல்வேறு மாகாணங்களில் யுத்த பிரபுக்கள் அந்தந்த பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதன் ஒரு தொடர்ச்சியாக ஜின்ஜியாங் மாநிலத்தில் மூன்று நான்கு மாவட்டங்களை இணைத்து உய்குர் மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியை கிழக்கு துர்கிஸ்தான் குடியரசு என்று அறிவித்து யுத்த பிபுக்கள் ஆட்சி நடத்தினர். இந்த அறிவிப்பிற்கு உய்குர் மக்களிடம் எதிர்ப்பு இருந்தது. ஒரு பகுதியினர் சீன குடியரசை ஆதரித்தனர்.

இதே காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மாவோ தலைமையில் நடந்த சீனப் புரட்சி, பல பிரதேசங்களை விடுவித்து மக்கள் விடுதலைப் படையின் கீழ், சோவியத்துக்களாக அமைத்து வந்தது. ஜின்ஜியாங் பகுதியில் உள்ள யுத்த பிபுக்களை தோற்கடித்து சிஞ்சியான் பகுதியில் மக்கள் விடுதலைப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதற்கான சோவியத்துக்களையும் அறிவித்தார்கள்.

1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மாவோ தலைமையில் நடந்த புரட்சி வெற்றி பெற்று சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டது. ஜின்ஜியாங் பிரதேசம் சீனாவின் ஒரு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் உய்குர் மக்கள் அதிகமாக வாழ்வதால் அவர்களின் இனத்தை அங்கீகரிக்கக் கூடிய வகையில் 1955 ஆம் ஆண்டு ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசம் என்று பெயர் மாற்றப்பட்டது. சீன மக்கள் குடியரசு சிறுபான்மை மக்களுக்கான சிறப்பு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தது.

 

சோவியத் வீழ்ச்சியும் இனக்குழு எழுச்சியும்

1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு இனவாதங்கள் பரவலாக தலைதூக்கியது. சோவியத் நாட்டிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்ட இன மோதல்களால் பல நாடுகள், பல துண்டுகளாக மாறின. ஏகாதிபத்திய நாடுகள் இந்த மோதல்களை அதிகப்படுத்தி ஏற்கனவே துண்டான நாடுகளை மேலும் பல துண்டுகளாக உடைத்து தங்களது பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்குவதற்கான களமாக மாற்றிக் கொண்டன. இந்த சகுனி வேலையை சீனாவிலும் தொடங்கின.  சீனாவின் எல்லைப்புற மாகாணமான உய்குர் மக்களை தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராடத் தூண்டின. அவர்களின் போராட்டத்திற்கான  அனைத்து உதவிகளையும் செய்தன. கிழக்கு துர்கிஸ்தான் என்ற நாட்டிற்கான வடிவத்தை உருவாக்கி பிரிவினைவாத கோஷத்தை ஏகாதிபத்திய  நாடுகள் உயர்த்திப் பிடித்தன.

இதற்காக கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. சீனாவில் ஒரு சுதந்திரமான கிழக்கு துர்கிஸ்தானை நிறுவ வேண்டும் என்று இந்த அமைப்பு அறிக்கைகளை வெளியிட்டு மக்களை அணி திரட்டியது. இது மட்டுமல்ல துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் இருந்தும் தீவிரவாத குழுக்களை இவர்களோடு இணைக்க கூடிய வேலைகளையும் செய்தார்கள். பிரிவினைவாத இயக்கமான கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை மிகவும் போர்க்குணம் மிக்க மக்கள் இயக்கம் என்று அமெரிக்கா பாராட்டியது. சீனா உட்பட உலக நாடுகள் பலவும், இந்த பயங்கரவாத இயக்கத்தை கண்டித்த பொழுது, அமெரிக்கா வேறு வழியில்லாமல் பயங்கரவாத பட்டியலில் இந்த இயக்கத்தை சேர்ப்பதாக அறிவித்தது. ஆனால், அமெரிக்கா தனது வெளியுறவுத் துறையில் உள்ள பயங்கரவாத பட்டியலில் இந்த அமைப்பை சேர்க்கவில்லை. காரணம் அந்த அமைப்பிற்கான  எல்லா உதவிகளையும் வெளியுறவுத்துறை செய்து கொண்டிருந்தது. இந்த மக்கள் சட்டபூர்வமாக போராடுகிறார்கள்; இவர்களை சீன அரசாங்கம் அடக்குகிறது என்று பிரச்சாரம் செய்து பிரிவினைவாதிகளுக்கு கலவரத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தனர். இதன் விளைவாக அடுத்தடுத்த கலவரங்கள் நடந்து கொண்டே இருந்தது.

கலவரமே பிரிவினை இயக்க கலாச்சாரம்:

சீனாவில் உய்குர் மக்களிடம் வஹாபிஷம் என்று பொதுவாக அறியப்படும் தீவிர பழமைவாத இஸ்லாமிய விழுமியங்களின் வடிவம் ஒருபோதும் இருந்ததில்லை. இப்பொழுதும் இருக்கவில்லை. இம்மக்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருமானம் ஈட்டக் கூடியவர்கள். அவர்கள் இஸ்லாமிய மதத்தின் அணுகுமுறைகளிலும் நடைமுறைகளிலும் மிதமானவர்கள். இவர்களது உலக கண்ணோட்டங்கள் மதச்சார்பற்றவைகளையும் உள்ளடக்கியவைகளாக இருக்கிறது. இப்படிப்பட்ட மக்களை வன்முறை பாதையை நோக்கி பிரிவினை இயக்கம் இழுக்க முயற்சித்தது. பிரிவினைவாதிகளின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் இந்த மக்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை.

ஜின்ஜியாங் மாநிலம் மத்திய ஆசியாவின் புவிசார் அரசியலின் மையப் புள்ளியாக இருந்தது. இந்த மாநிலம் வளமான பகுதிகளையும் மலைப்பாங்கான இடங்களையும், பாலைவனங்களையும் எண்ணெய், எரிசக்தி வளங்களையும் எட்டு நாடுகளின் எல்லைப்புறங்களையும் தன்னகத்தே கொண்டு இருப்பதால் இவற்றை தனி நாடாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் சீனா உட்பட ஒட்டுமொத்த மத்திய ஆசிய நாடுகளை கபளீகரம் செய்ய முடியும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசைப்பட்டது.  அதற்காக பிரிவினைவாதிகளை உருவாக்கி, அவர்களுக்கு உதவி செய்து, கலவரங்களை நடத்தியது.

1991 ஆம் ஆண்டில் இந்த பிரிவினைவாத இயக்கம் சில கலவர முயற்சிகளை மேற்கொண்டது. 1997 ஆம் ஆண்டு குல்ஜா என்ற இடத்தில் பிரிவினைவாத இயக்கம் நடத்திய கலவரத்தில் சிலர் கொல்லப்பட்டனர். 50 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இதே ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி பிரிவினை வாதத்தை சித்தாந்த ரீதியாக ஏற்றுக் கொண்ட ஒரு படை ஜின்ஜியாங் மாநிலத்தின் தலைநகர் உரும்கியில் கலவரத்தை உருவாக்கியது.

1989 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற தியான்மென் சதுக்க போராட்ட மாதிரியில் ஒரு கலவரத்தை 20 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் தேதி ஜின்ஜியாங் மாநிலத்தின் தலைநகர் உரும்கியில் நடத்த திட்டமிட்டார்கள். இங்கு நடத்தப்பட்ட பிரிவினைவாதிகளின் தாக்குதலால் உலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது. இந்த நகரத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் நூற்றுக்கணக்கான இடங்களில் காவல்துறையினர், பொதுமக்கள் மீது தாக்குதலை தொடுத்தனர்.  அரசு அலுவலகங்களையும், குடியிருப்பு வளாகங்களையும் சூறையாடினர். இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 197 பேர்,  படுகொலை செய்யப்பட்டார்கள். 1700 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். 331 கிடங்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 1325 வாகனங்களையும் பொதுமக்களின் சொத்துக்களையும் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவில் ஒட்டுமொத்த சேதாரத்தை பிரிவினைவாதிகள் ஏற்படுத்தினார்கள். ஜின்ஜியாங் மாநிலத்தின் அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் உய்குர் மக்களின் ஆதரவுடன் இந்த பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டெடுத்தது. பிரிவினைவாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லை.

இந்த நிகழ்வுக்கு முந்தைய 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் தலைநகரத்தில் உலகமே வியந்து பார்க்கும் அளவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சீர்குலைப்பதற்கான மிகப் பிரம்மாண்டமான திட்டங்களை உருவாக்கி அமலாக்குவதற்காக முயற்சி செய்யப்பட்டது. சீன மக்கள் குடியரசு இதை முறியடித்து விட்டது.

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி இந்த மாநிலத்தின் எச்சென் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இதே ஆண்டு ஜூன் மாதம் ஒரு விமானத்தை கடத்துவதற்கான முயற்சியில் பிரிவினைவாதிகள் ஈடுபட்டனர். அதை விமான பணியாளர்களும், பயணிகளும் முறியடித்தனர். 2013 ஆம் ஆண்டு ஷான் ஷான் மாவட்டத்தில் உள்ளூர் அரசாங்கக் கட்டிடங்களை வெடிவைத்து தகர்க்கும் நாச வேலையில் பிரிவினைவாதிகள்  ஈடுபட்டனர். இதில், 27 பேர் மரணமடைந்தனர். இதே வருடம் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியான்மன் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்திருக்கிற நேரத்தில் 31 பெட்ரோல் டேங்கர்கள் மூலமாக பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். 2014 ஆம் ஆண்டு மே மாதம் ஜின்ஜியாங் மாநிலத்தின் தலைநகர் உரும்கியில் பிரிவினைவாதிகள் வெடிகுண்டு வீசியதில் 30க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 90க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதே ஆண்டு புனித போர் என்ற அறிவிப்பை செய்து பிரிவினைவாதத்தை எதிர்த்த இஸ்லாமிய மதத் தலைவர்களையும் அறிஞர்களையும் ஆசிரியர்களையும் படுகொலை செய்தார்கள். சர்வதேச பத்திரிகைகளிலும் சீன அரசாங்கத்தின் அறிக்கைகளிலும் இவையெல்லாம் வெளிவந்த செய்திகளாகும். 1990 முதல் 2016 வரை மதவெறி தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் ஆயிரத்துக்கும் அதிகமான தாக்குதலை நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தார்கள் என்பதை சீன அரசாங்கம் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அ.பாக்கியம்

புதன், ஜூன் 18, 2025

ஈரான் அணுசக்தியின் வரலாறும் அமெரிக்க வஞ்சகமும்

 


அ. பாக்கியம்

இன்று 18.06.25. வெளிவந்துள்ள செய்தியில் ஈரான் இதுவரை ஒரு அணுகுண்டு கூட தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அமெரிக்காவின் உளவுத்துறை ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்றும் 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சிகளைகூட ஈரானின் உச்ச தலைவர் கமேனி அங்கீகரிக்கவில்லை என்று அறிக்கை கொடுத்துள்ளது. உளவுத்துறையின் உயர்ந்த அதிகாரியான கப்பார்ட், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்றும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் கூடுதலாக இருக்கிறது என்பது மட்டும்தான் தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்த அறிக்கை பற்றி டொனால்ட் ட்ரம்ப், எனக்கு உளவுத்துறை அறிக்கை பற்றி கவலை இல்லை,( I don’t care what she said,”) நான் முடிவெடுத்து விட்டேன். இஸ்ரேலின் தலைவர் நேதயான்குவும் நானும் ஒரே இடத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துவிட்டார். அமெரிக்காவும் இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதலை ஆரம்பிக்கப் போகிறோம் என்பதுதான் இதற்கான அறிகுறியாகும். அவர்கள் அணுகுண்டை தயாரிக்கவில்லை என்றாலும் அணுகுண்டை தயாரிப்பதற்கான அருகில் இருக்கிறார்கள் எனவே அவர்களை தாக்குவோம் என்று இஸ்ரேலும், டிரம்பும் அறிவித்து தாக்குதலை நடத்துகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு இதுவரை இல்லாத அளவு எதிர் தாக்குதலை ஈரான் நடத்தி இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேல் இப்படி ஒரு பேரழிவை இதுவரை சந்தித்தது இல்லை.

உலகில் அணு ஆயுத நாடுகள்:

ஈரான் நாடு மட்டும்தான் அணுகுண்டு மூலம் ஆபத்து ஏற்படுத்த இருக்கிறது என்று அமெரிக்க பிரச்சாரங்கள் உலாவந்து கொண்டிருக்கிறது. பூமியில் உள்ள நாடுகளில் ஒன்பது நாடுகள் அணுஆயுதங்களை சொந்தமாக தயாரித்து ராணுவ தாக்குதலுக்கு ஏற்ற வகையில் பொருத்தி வைத்திருக்கிறார்கள். ரஷ்யா(5449), அமெரிக்கா(5277), சீனா(600), பிரான்ஸ்(290), பிரிட்டன்(225), இந்தியா(180), பாகிஸ்தான்(170), இஸ்ரேல்(90), வடகொரியா(50) ஆகிய 9 நாடுகள் ஆகும். இந்த ஒன்பது நாடுகள் தவிர இத்தாலி (25) துருக்கி(20) பெல்ஜியம்(15) ஜெர்மனி(15) நெதர்லாந்து(15) ஆகிய ஐந்து நாடுகளும் அமெரிக்காவிடமிருந்து அணுஆயுதங்களை  வாங்கி வைத்துள்ளன. பெலாரஸ்(வெளியிடவில்லை) நாடு ரஷ்யாவிடம் இருந்து அணுஆயுதங்களை வாங்கி வைத்துள்ளது. இந்த 15 நாடுகள் தவிர அமெரிக்காவின் கூட்டணிகள் மேலும் 28 நாடுகளில் அணு ஆயுதங்களை தாக்குதலுக்கு ஏற்ற வகையில் பொருத்தி வைத்துள்ளது. மொத்தமாக 43 நாடுகளில் அணு ஆயுதங்கள் இப்போது இருக்கிறது. இஸ்ரேலில் மட்டும் 200க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் ராணுவ ஆயுதங்களில் பொருத்தி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கிறது என்பது உலகம் அறிந்த செய்தி. தோராயமாக 12,331 ஆயுதங்கள் உள்ளன இவற்றில் 9600க்கும் மேற்பட்டவை செயலில் உள்ள ராணுவ இருப்புகளில் உள்ளன என்று விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் விஞ்ஞானிகள் 2025 ஆம் ஆண்டு அணுசக்தி படைகளின் நிலையை பற்றி கூறுகிறது பொழுது இவற்றை தெரிவித்து இருக்கிறார்கள். பனிப்போர் காலத்தை ஒப்பிடும்பொழுது அணு ஆயுதங்கள் குறைந்து இருப்பதற்கான தகவல்களையும் தெரிவிக்கிறார்கள். வருங்காலத்தில் இது அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்கள்

இத்தனைக்கு மத்தியிலும் ஈரான் மட்டும் அணு ஆயுத ஆபத்தை உருவாக்கும் என்று சொல்வதற்கு பின்னால் இருக்கக்கூடிய புவிசார் அரசியலை இதற்கு முன் எழுதிய கட்டுரையில் விலக்கி இருக்கிறேன்.

ஈரானின் அணுசக்தி கொள்கை

ஈரான் அணு சக்தியை ஆக்கபூர்வமான வழிகளில் மட்டுமே பயன்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது, வந்துள்ளது. இன்றும் அதே நிலைப்பாட்டை தான் சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்து வருகிறது. 1950 ஆம் ஆண்டுகளில் ஈரான் அறிவியல் ரீதியாகவும், தொழில் துறையிலும் வளர்ச்சி அடைய தொடங்கி இருந்தது. நாட்டை மேலும் தொழில்மயம் ஆக்குவதற்கு அணு சக்தி அவசியமாக தேவைப்பட்டது. மின்சாரம் உட்பட பல தேவைகளை அணுசக்தியின் மூலம் உருவாக்க முடியும் என்று இதர நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு அணுசக்தி வளர்ச்சிக்கு ஆர்வம் காட்டினார்கள். 1953ஆம்ஆண்டு முகமதுமெசாடேக் ஆட்சி கவிழ்க்கப் பட்டவுடன், ஈரான் அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. இந்த ஆட்சி கவிழ்க்க உதவி செய்த அமெரிக்க ஜனாதிபதி ஐசெனோவர் 1957 ஆம் ஆண்டு அமைதிக்கான அணுசக்தி கொள்கையை அறிவித்தார். ஈரான் அன்றைய தினம் இந்தக் கொள்கையை முழுமையாக ஆதரித்தது. எனவே ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்திற்கு அணுசக்தி உருவாக்க வேண்டும் என்று அன்றைய மன்னரும் முக்கிய அரசியல் தலைவர்களும் கருதினார்கள்.

ஈரான் அணுசக்தியின் தந்தை

இந்தப் பின்னணியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த அக்பர் எடமெட் என்ற மின் பொறியியல்,லை இயற்பியல் மற்றும் எம்எஸ்சி பட்டங்களை முடித்த ஒரு விஞ்ஞானி சுவிட்சர்லாந்தில் உள்ள கல்லூரியில் ஆராய்ச்சி பொறியாளராக பல ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் ஒரு அணு விஞ்ஞானி என்பதால் சுவிட்சர்லாந்து நாட்டின் அணுக்கரு பாதுகாப்பு குழுவின் தலைவராக 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். 1960 ஆம் ஆண்டுகளில் ஈரான் மன்னர் ஷா மேற்கத்திய பாணியில் பல நடவடிக்கைகளை ஈரானில் எடுத்து வந்தார். மன்னர் ஷாவின் சிலர் அம்சங்கள் அக்பர் எடமெட்  கவனத்தை ஈர்த்த து. எனவே அவர் 1965 ஆம் ஆண்டு ஈரானுக்கு திரும்பினார். அன்றைய ஈரான் நாட்டு பிரதமருடன் ஒரு ஆலோசனையை நடத்தி ஈரானுக்கு என்று தனியான அறிவியல் ஆராய்ச்சி துறை தேவை என்பதையும், அதற்கான ஒரு அமைப்பை நிறுவவேண்டும் என்று முன்மொழிந்தார். அப்பொழுது பிரதமராக இருந்த அமீர் அப்பாஸ் ஹூவைடா இந்த ஆலோசனை ஏற்றுக்கொண்டார். நாட்டில் ஏராளமான கார்பன் வளங்கள் இருந்த பொழுதும், ஈரான் நாட்டுக்கு என்று சொந்தமாக எண்ணெய் தொழில் கிடையாது. இது வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என்று அவர் கருதினார். ஈரானில் இருந்த என்னை கம்பெனிகள் முழுவதும் ஆங்கிலோ ஈரானிய நிறுவனமான பிரிட்டிஷுக்கு சொந்தமாக இருந்தது. எனவே ஈரானின் வளர்ச்சிக்கு மின்சாரம் அவசியம். மின்சாரத்திற்கு அணுசக்தி அவசியம். அணுசக்திக்கு ஈரானின் தனித்துவமான அணுக் கொள்கை தேவை என்று முன்மொழிந்தார்.

ஈரான் அரசு 1968 ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் அறிவியல் மற்றும் உயர்கல்வி அமைச்சகத்தின் ஆராய்ச்சிக்கான துணை அமைச்சராக எடமெட் ஈரான் நியமித்தது 1972 ஆம் ஆண்டு இவர் லண்டனுக்கு பயணம் செய்து அணுசக்தி தொடர்பான விவரங்களை அறிந்து கொண்டது மட்டுமல்ல, ஈரான் மன்னர் அணுசக்தி குறித்த வளர்ச்சிக்கு எந்த அளவு ஆர்வமாக உதவி செய்கிறார் என்பதையும் எடுத்துரைத்து வந்தார். இதே காலத்தில் ஈரானில் எண்ணெய் வருவாய் மூலம் கிடைத்த நிதியை அணு சக்திக்கான திட்டங்களை உருவாக்குவதற்கு செலவழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இதற்காக அக்பர் எடமெட் ஐ உடனடியாக இந்த பணியில் இறங்க அழைத்தார்கள். ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த அக்பர் ஈரானில் உருவாக்கப்பட்ட புதிய அணுசக்தி அமைப்பின் தலைவராக மன்னர் நியமித்தார். மேலும் ஈரானின் திட்டமிடல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு ஈரானின் துணைப் பிரதமராகவும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இந்த உயர் அதிகாரங்கள் மூலம் அணுசக்தி துறைக்கான அதிக நிதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வதற்கும், அதன் வரவு செலவுகளை அரசாங்கத்திற்கு கொடுக்கத் தேவையில்லை, கருவூலத்திற்கு ஒப்படைத்தால் போதும் என்ற அதிகாரத்தையும் அவரால் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதன் விளைவாக அணு சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான பணிகள் தீவிரம் அடைந்தன.

அமெரிக்க வஞ்சகம் ஆரம்பம்

ஈரான் ஆக்கப்பூர்வமான முறையில் அணுசக்தி பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்ததினால் 1970 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதே காலத்தில் இந்தியா 1974 மே மாதம் அணுகுண்டு சோதனை நடத்தி ஒரு அணு ஆயுத நாடாக தன்னை உயர்த்திக் கொண்டது. இன்னும் சில நாடுகளும் அணுகுண்டு சோதனைகளை நடத்தியதனால் ஈரான் மக்களிடமும் ஆட்சியாளர்களும் இயற்கையாகவே அணுசக்தி வளர்ச்சிக்கு அந்நிய நாடுகளை சார்ந்தே இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் 1970 ஆம் ஆண்டு கையெழுத்து போட்டு இருப்பதால் குறைந்தபட்சம் செறிவூட்டும் யுரேனியத்தை வைத்துக் கொள்வதற்கு உரிமை இருக்கும் என்று ஈரான் அரசு கருதியது.

ஆனால் நிலைமை தலைகீழாக மாறியது. அமெரிக்கா யுரேனியம் செறுவூட்டலை நீங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. ஈரானில் செறிவூட்டல் தொழில் நுட்ப திட்டத்தை உருவாக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. இதற்கு மாற்றாக ஈரான் அணுசக்தியின் சர்வதேச கூட்டமைப்பிலிருந்து தனக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அன்றைய மன்னர் அமெரிக்க சார்பில் இருந்ததால் வேறு வழி இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஈரானின் முதலீடுகளை அந்நிய நாடுகள் நோக்கி இருக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக அமெரிக்கா மேற்கத்திய நாடுகளை நோக்கி ஈர்க்க வேண்டும் என்பதுதான் திட்டம். எனவே ஈரான் மன்னரும் அதற்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு அணுசக்தி துறையில் முதலீடுகளை செய்தார். ஈரானில் இருந்த விஞ்ஞானிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இது பெரும் விரக்தியை ஏற்படுத் தியது.

இதனால் அக்பர் எடமெட் பிரிட்டனுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி ஈரான் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள். 1977ஆம் ஆண்டு ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் பிரிட்டனில் உள்ள அணுசக்தி துறைகளில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டும். அதற்கு ஈடாக பிரிட்டனின் அணுசக்தி துறை 1984 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அணு உலைகள் என்று 20 அணு உலைகளை கொடுத்து விடும். இது 1994 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று முடிவாகியது. இப்போதும் ஈரானுக்கான அணுசக்தி மின்சாரம் தயாரிக்க யுரேனிய செறிவூட்டலை கொடுக்கவில்லை. அதற்கு மாறாக நீங்கள் பணத்தை எங்கள் அணுஉலையில் முதலீடு செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு அணு உலை தயாரித்து தருகிறோம் என்று தான் முடிவாகியது. பிரிட்டன் ஒப்பந்தப்படி 1994 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க கூடிய அணு உலைகளை கொடுக்க வேண்டும் என்பதும் இது ஈரானின் எரிசக்தி சேவையில் மூன்றில் ஒரு பங்காக அமையும் என்றும் முடிவாகியது.

புரட்சியால் தடைபட்டு போன திட்டங்கள்

1978 ஆம் ஆண்டு இத்திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்தத் திட்டத்தின் தலைவர் பதவியை அக்பர் எடமெட் ராஜினாமா செய்தார். நிர்வாக சீர்குலைவு மற்றும் ஊழல் காரணமாக அரசு அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இதே காலத்தில் ஈரானில் மன்னர் ஷாவுக்கு எதிராக அனைத்து மக்களும் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக 1979 ஆம் ஆண்டு கொமேனி தலைமையில் இஸ்லாமிய புரட்சி மன்னரின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு புதிய ஆட்சி பொறுப்புக்கு வந்தது. புதிய அரசாங்கம் அணுசக்தி திட்டங்கள் அனைத்தும் பண விரயம் மேலை நாட்டு முறைகள் என்று கைவிட்டு விட்டது. அணுசக்தி துறையின் தந்தை என்று அழைக்கப்பட்ட அக்பர் எடமெட் பிரான்சுக்கு சென்று விட்டார். 1984 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அவரை மீண்டும் அழைத்த பொழுது வர மறுத்துவிட்டார்.

1980 முதல் 1988 வரை சுமார் 8 ஆண்டுகள் ஈரான் ஈராக் யுத்தம் நடைபெற்றது. இக்காலகட்டத்தில் ஈரானின் அரசவைத் தலைவர்கள் அணுசக்தியின் தேவையை அவசியம் என்று உணர்ந்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல அணு விஞ்ஞானிகளை விடுவித்து அணுசக்தி திட்டங்களை முன்னெடுத்தார்கள். அமெரிக்கா ஈராக்கிற்கு ஆயுதம் கொடுத்து உதவி கொண்டு இருந்த சூழலில், ஈரானை அணுசக்தி முன்னேற விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக தனது பிடியை இறுக்கியது. அணு ஆயுதத்தால் உலக மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சாத்தான் வேதம் ஓதியது. இதற்கான இதற்கான அடுத்தடுத்த சில சம்பவங்களையும் முன் வைத்தார்கள்.

1979 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் முள்று மயில் தீவு என்ற இடத்தில் அணுமின் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு அதனுடைய உள் வட்டாரங்களில் கதிர்வீச்சுகள் காணப்பட்டது. இது ஒரு கடுமையான விபத்தாக கருதப்பட்டது. 1986 ஆம் ஆண்டு செர்னோபியில் ஏற்பட்ட பெரும் விபத்து அணுசக்தி தொடர்பான அச்சத்தை உருவாக்கியது. அமெரிக்கா தனக்கு எதிரான நாடுகளை அணுசக்தி தயாரிக்க கூடாது என்பதற்காக இந்த விபத்துக்களை பெரும் பிரச்சாரமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஈரானின் இஸ்லாமிய குடியரசின் அணு ஆயுத பாதுகாப்பு என்பது மன்னர் ஷா காலத்து கொள்கையில் இருந்து மாறுபட்டதாக இருக்கவில்லை. அதையே தான் பிரதிபலித்தது. ஆனாலும் அமெரிக்கா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஈரான் ஆயுத தயாரிப்பில் முன்னேறுவது மட்டுமல்ல பிரச்சனை, பொருளாதார ரீதியாக அமெரிக்காவிற்கு எதிராக இருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை. 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா ஈரானுக்கு எதிராக செய்து வரக்கூடிய செயல்கள் அனைத்தும் ஈரானிய தலைவர்களிடம் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏன் கணிசமான பதட்டங்களையுமே உருவாக்கியது.

இயற்கையாகவே அமெரிக்கா எதிர்ப்புணர்வு இதனால் மக்களிடமும் உருவாகியது. ஆகவே 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈரானிய தேசிய வாதி என்று கருதப்பட்ட மஹ்மூத் அஹ்மதிநெஜாத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக 2013 ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். இவர் சித்தாந்த ரீதியாக ஒரு தேசியவாதியாக இருந்தது மட்டுமல்ல, ஈரானின் அணுசக்தி திட்டத்தில் வலுவான ஆதரவாளராகவும் இருந்தார். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உட்பட பல நாடுகளை கடுமையாக விமர்சித்தார். அணு பரவல் தடைச் சட்டத்தின் பிரிவு நான்கில் உள்ள சரத்தை மேற்கோள் காட்டி ஈரானுக்கு யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை உள்ளது என்று அறிவித்தார். இவரின் பேச்சுக்கள் அனைத்தும் தேசிய உரிமைகள் பற்றியதாக மாறியது. இதனால் ஈரானின் உள்ளேயும் ஈரானுக்கு வெளியேயும் இவருக்கு ஆதரவு கிடைத்தது. அமெரிக்கா,  பிரிட்டன்,இஸ்ரேலும் ஆகிய நாடுகளுக்கு 1951 ஆம் ஆண்டு முகமது மெசாடேக் எண்ணெய் உரிமைகளை தேசியமயமாக்கிய செயல் நினைவுக்குவந்தது. அது மட்டுமல்ல ஈரானில் பூஷேரில் ஒரு மின் உற்பத்தி நிலையம் ஜெர்மனியர்களால் கட்டப்பட்டு கைவிடப்பட்டதை ரஷ்யர்கள் கட்டிக் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். எனவே மீண்டும் ஈரானின் அணுசக்தி விஷயத்தை சர்வதேச அணு சக்தி முகமை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 2012 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியது.

 

தெளிவும்,நிலையும் இல்லாத டிரம்ப்

ஈரானுடன் அமெரிக்க  முரண்பாடுகள் முற்றிக் கொண்டிருந்ததால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க கொள்கைகளில் சில இலக்குகளை தீர்மானித்தார். இவர் 2009 முதல் 2017 வரை அமெரிக்காவில் 44 வது ஜனாதிபதியாக இருந்தார். எனவே ஈரானுடன் பேச்சு வார்த்தை நடத்தி 2015 ஆம் ஆண்டு கூட்டு (the joint comprehensive plan of action)  செயல்திட்டத்திற்கு உட்படுவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த பேச்சு வார்த்தைகளை பின்னடைவு செய்வதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலிய ஆதரவாளர்களும் பல சதிதிட்டங்களை தீட்டினார்கள்.

2018 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த டொனால்ட் ட்ரம்ப் தான்தோன்றித்தனமான முடிவுகளை அறிவித்துக் கொண்டே இருந்தார். ஈரானுடன் நடைபெற்ற அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒரு தலைபட்சமாக வெளியேறி ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார். மீண்டும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்தவுடன் பல அதிரடி அறிவிப்புகள் செய்தார். மார்ச் மாதம் ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்தார். ஈரானும் இது பொதுவெளியில் அறிவிக்கப்பட்டாலும் இவற்றை நிராகரிக்கவில்லை. பேச்சுவார்த்தை தயாராக இருந்தது.

 

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்க ஈரான் பேச்சு வார்த்தைகள் முதல் சுற்று ஓமானின் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் ஒப்பந்தம் செய்வதற்கான மூன்று அம்சங்களை முடிவு செய்தார்கள்.

1 ஈரான் தற்காலிகமாக யுரேனிய செறிவூட்டலை 3.67 சதவீதம் குறைத்துக் கொள்வது என்றும், அதற்கு ஈடாக, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள நிதி முடக்கத்தை தளர்த்துவது, கச்கா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப்பது.

2. ஈரான்  உயர்மட்ட யுரேனிய செறிவுகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும், சர்வதேச அணுமுகமை மீண்டும் ஆய்வுகளை தொடங்குவதற்கும் ஈரானில் வேறு ஏதேனும் அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்கள் இருந்தால் அவற்றை நெறிமுறை படுத்துவதற்குமான திட்டங்களை உருவாக்குவது.

3. இதன்படி அமெரிக்க காங்கிரஸ்  அணுசக்தி ஒப்பந்தத்தை அங்கீகரித்து ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதும், ஈரானில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால் அவற்றை மூன்றாவது நாட்டிற்கு மாற்றுவது என்றும் முடிவாகியது.

          இந்தப் பேச்சு வார்த்தையின் இரண்டாவது சுற்று ரோம் நகரத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது இஸ்ரேலிய விமானப்படைகள் ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்துவதற்கான பயிற்சிகள் நடைபெறுகின்றன என்ற தகவல் கிடைத்தது. எனவே இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலின் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்பதை காட்டியது. இதனால் பேச்சு வார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது. மறுபுறத்தில் ஈரானில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பூஜ்ஜியம் சதவீதமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பின்னணியில் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் எந்த யுரேனியத்தையும் செறிவூட்ட நான் அனுமதிக்க மாட்டேன் என்று அச்சுறுத்தி பேசினார். காரணம் இஸ்ரேலின் எதிர்ப்பாகும். அனேகமாக இஸ்ரேலில் தாக்குதலுக்கு அமெரிக்கா ஏப்ரல் மாதமே பச்சைக்கொடி காட்டிவிட்டது. இது டிரம்ப் நிர்வாகத்தில் இருந்த வஞ்சக நடவடிக்கையாகும்.

ஜூன் ஒன்பதாம் தேதி ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸ்மாயில் பகாயி ஓமான் வழியாக ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார். ஈரான் குறித்து நெதயாகுன்வுடன் பேசியதாகவும், நேர்மறையான நல்ல முன்னேற்றம் அடைந்ததாகவும் டிரம்ப்  கூறினார். ட்ரம்ப் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, ஜூன் 12-ம் தேதி இஸ்ரேலிய தாக்குதல் நடக்க இருப்பதாக ஊடகத்தில் செய்திகள் கசிந்தன. அடுத்த நாள் இஸ்ரேல் அதாவது ஜூன் 13ஆம் தேதி தாக்குதலை நடத்தியது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கும், ஈரானை தாக்குவதற்கும் இஸ்ரேலுக்கு பச்சைக்கொடி காட்டுகிற முறைகளிலும், பிறகு ஈரானை எச்சரிப்பதும், என மாறி மாறி எந்த திட்டவட்டமான கொள்கையின் அடிப்படையிலும் டொனால்டம் இந்த விஷயத்தை அணுகவில்லை. எதையும் கணிக்க முடியாத நபர் என்று அவரைச் சொல்லுவதை விட புவிசார் அரசியலில் இஸ்ரேலுடன் இணைந்து வளைகுடா நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது தான் உகந்தது என்ற முடிவின் அடிப்படையில் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். பாலஸ்தீன படுகொலைகளுக்காக பேசாதவர் இஸ்ரேலின் பாதுகாப்புகளை உலகத்தின் பாதுகாப்பு போல் உச்ச குரலில் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்.

ஈரானின் அணுசக்தி கொள்கை என்பது ஆக்கபூர்வமான பணிகளுக்கு தான் என்பதை கடைசி வரை கடைபிடித்தார்கள். பல நாடுகள் அணுகுண்டு சோதனைகள் வைத்திருந்த பொழுதும் ஈரான் அது பற்றி கவலை கொண்டாலும் அந்த தயாரிப்பில் இறங்கவில்லை. உக்ரைனிலும் அணு உலைகள் இருக்கிறது ஆனால் அது தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துகிறது. ஈரான் முழுக்க முழுக்க அணுசக்தி மற்றும் எரிசக்தியில் அமெரிக்காவை சார்ந்து தான் இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்து நிற்பது தான் மிகப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஏப்ரல் 12ஆம் தேதி அமெரிக்க ஈரானுக்கு இடையில் நடைபெற்ற அணுசக்தி செறிவூட்டும் ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் ஜூன் 13ஆம் தேதி தாக்குதலை நடத்துவதின் வஞ்சகத்தை புரிந்து கொள்ள முடியும். போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பிரச்சனை அல்ல, பேரழிவுகளின் வெளிப்பாடாக இந்தப் போர் இருக்கும். இஸ்ரேல் இதுவரை காசாவை அழிக்க முடியவில்லை, லேபனானை, சிரியாவை, ஈராக்கின் ஒரு பகுதியை, ஏமனின் அவுத்தியை அழிக்க முடியவில்லை. அதுபோல் ஈரானும் எதிர்ப்பு சக்தியின் தொடர்ச்சியாக இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

அ. பாக்கியம்

 

 

இஸ்ரேல்: திணிக்கப்பட்ட தேசம்-1

  1948 மே 14 சியோனிச இயக்கத்தைச் சேர்ந்த டேவிட் பெ ன் குரியன் இன்று முதல் இஸ்ரேல் என்ற நாடு உதய மா கிறது என ஆரவாரத்துடன் அறிவித்தார் ....