Pages

சனி, டிசம்பர் 31, 2022

அழைப்பும் அண்ணாநகர் உழைப்பும். அ.பாக்கியம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதி குழுவின் புதிய அலுவலக திறப்பு விழாவின் அழைப்பிதழை அதன் பகுதி செயலாளர் மகேந்திரவர்மன் கொடுத்து நிகழ்ச்சிக்கு அழைத்த பொழுது அகமகிழ்ந் தேன். அப்படி ஒரு பொறுப்பை வகித்ததும், அங்கு ஆற்றிய பணிகளும் நினைவுக்கு வந்து அசைபோட ஆரம்பித்தேன்.

அறிவு என்பது செயல்முறை அறிவு, படிப்பறிவு என்று இரு வகை உள்ளது. படிப்பறிவு மறந்து போகக்கூடியது. செயல் முறை அறிவு நீடித்து நிற்கக்கூடியது. அதனால்தான் விஞ்ஞானம், பொறியியல் படிப்புகளில் செயல்முறைகள் கடைபிடிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு மறக்காமல் இருக்கிறது என்று எழுத்தாளரும் இப்போதைய தலைமைச் செயலாளருமான இறையன்பு பேசி கேட்டிருக்கிறேன்.  இந்த அழைப்பு செயல்முறை அறிவு அதாவது நினைவுகளை அசைபோடு வைக்கிறது. கட்டிடம் கட்டுவதற்கு சாரக்கம்பு போல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடாமல் நினைவில் வைத்து அழைத்தமைக்கு நன்றி பாராட்டுகிறேன்.

தோழர் செல்வம் தனது வீட்டை கட்சியின் அலுவலகமாக பயன்படுத் திக்கொள்வதற்கு, அவற்றை தயார் செய்து கொடுத்ததற்கும் அவருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். நெருக்கடியான காலத்தில் பலரும் கொடுக்க தயங்கும் சூழலில் தோழர். ஏ.பி. செல்வம் கொடுத்திருப்பது சிறப்புக்குரி யது..

நான் அண்ணா நகர் பகுதியின் அமைப்புக்குழு கன்வீனராக 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டேன். சில மாதங்கள் கழித்து தா.பி. சத்திரத்தில் வெண்மணி படிப்பகத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, தோழர் செல்வம் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கட்சியை பற்றி பேசினார்.

ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் குடியிருந்த அவர் சென்னைக்கு வந்து டெய்லர்  சாலையில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டு சுகுமார், சீனிவாசன் ஆகியோரிடம் அறிமுகப்படுத்தி படிப்படியாக இயக்கத்திற்குள் வந்தார். இன்றும் செயல்பாட்டில் இருப்பது மகிழ்வை தருகிறது.

அண்ணா நகரில்  டி.பி சத்திரம், மண்டபம் சாலை, எம்.எம்.டி. காலனி, புல்லாபுரம், இயக்கத்தின் அடித்தளமாக இருந்தாலும் அமைந்தகரை, நமச்சிவாயபுரம், நேருபூங்கா, சாஸ்திரிநகர்  போன்றவற்றிலும் இயக்கம் இருந்தது.

வாலிபர் சங்கத்தின் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றிய காலத்தில் அண்ணாநகர் முழுமைக்கும் சென்று இருந்தாலும், 2005 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு குழு கன்வீனராகவும், ஒருமுறை பகுதி செயலாளராக இருந்து பணியாற்றி உள்ளேன். தோழர் சின்னையா பொறுப்பாளராகவும் நந்தகோபால் மாவட்ட செயலாளராகவும் இருந்தனர். தோழா சின்னையா அம்பத்தூர்  கள்ளிகுப்பத்தில் குடியிருந்தார். தனது உடல்நிலை சரியில்லாத பொழுதும் தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் அமைப்பு கூட்டங்களுக்கு வந்து இருந்து கூடுதலாக வழி காட்டினார். இரவு வெகு நேரமானாலும் நிகழ்வில் இருந்து விட்டு 12 மணிக்கு மேல் கள்ளிகுப்பம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரின் வழிகாட்டுதல் அண்ணா நகர் கமிட்டியின் மேம்பாட்டிற்கு பேரு உதவியாக இருந்தது.

ஒப்பிட்ட அளவில் அண்ணாநகர் பகுதியில் மக்களிடம் அறிமுகமான உள்ளூர் தலைவர்கள் அதிகமாக இருக்கிற பகுதியாகும். தற்போது இயக்கத்தில் இருக்கக்கூடிய தோழர்களில் டிபி சத்திரத்தில் சுகுமார், மண்டபம் சாலையில் சீனிவாசன், அமைந்த கரையில்  ராஜன், எம்.எம்.டி. காலனியில் மகேந்திரவர்மன்,நேரு பூங்கா, சாஸ்திரி நகரில் ஆறுமுகம், எம். ஏச். காலனி நடுவாங்கரை B. சுந்தரம் நமச்சிவாய புரத்தில் வெங்கட், சேகர், போன்ற தோழர்கள் இருக்கிறார்கள். சத்தியநா தன் பகுதி செயலாளராக ஆரம்ப காலத்தில் செயல்பட்டார்.

உள்ளூர் அளவில் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பதில் இயக்கம் உயிரோட்டமாக இருப்பது மட்டுமல்ல அதற்கு தலைமை ஏற்கும் தோழர்கள் எண்ணற்ற இன்னல்களையும் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

தோழர் இந்திரா, ஓசான்குளம் கிருஷ்ணன் இருவரும் மரணம் அடைந்த பொழுது, உள்ளூர் தலைவராக இருந்து ஆற்றிய பணிகளும் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் குறிப்பிட்டு முகநூலில் எழுதியிருக்கிறேன். அந்த இரண்டு பதிவுகளையும் ஆயிரக்கணக்கான தோழர்கள் படித்து பகிர்ந்து கொண்டார்கள். செயல்முறை அறிவற்ற தலைமை முழுமை அடையாது.

இந்தப் பகுதிகளில் தொடர்ந்து மக்கள் இயக்கத்தை உள்ளூர் பிரச்சனைகளை எடுத்து செயல்படக்கூடிய கிளைகளாகவும் தோழர்க ளாகவும் இருந்தனர். பகுதி அளவில் இயக்கத்தை அடையாளபூர்வ மாக நடத்துவதற்கு மாறாக, கிளை அளவில் உள்ளூர் இயக்கங்கள் போராட்ட வடிவத்தில் அதிகமாக நடைபெற்று உள்ளது. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல இயக்கங்கள் இருந்தாலும் ஒருசில இயக்கத்தின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு கடந்து செல்கிறேன்.

2007 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கான மாமன்ற தேர்தல் நடைபெற்றது. டிபி சத்திரத்தை உள்ளடக்கிய பட்டியலின மக்களுக்கான தனி வார்டில் 69 வது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

தோழர் எஸ் சரஸ்வதி (ஜனநாயக மாதர் சங்கத் தலைவர், சட்ட உதவி மையத்தின் தலைவர், ரிசர்வ் வங்கி ஊழியர், மறைந்த .ரா வரதராசனின் துணைவியார்) வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் 2006 ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரும் அளவிற்கு பதட்டமும் மோதலும் நிறைந்த தேர்தலாக அது இருந்தது. தேர்தல் காலத்தில் ஒவ்வொரு நாளும் கொதிப்பான சூழல்தான் நிலவியது.

இதற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 69 ஆவது வட்டத்தில் தோழர் சுகுமார் போட்டியிட்டு 3150 வாக்குகளை பெற்று மிக சொற்ப வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்தார். எனவே ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கடும் போட்டியாளராக கருதினார்கள். தோழர்கள் சுகுமார் சீனிவாசன் உட்பட பகுதி முழுவதும் இருந்த ஊழியர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டனர். நானும் சில இரவுகள் மன்றத்திலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாக்குப்பதிவு நாளன்று வன்முறையும் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதும் பரவலாக நடந்தது. புனித ஜார்ஜ் பள்ளியில் தோழர்கள் சுகுமார் சீனிவாசன் மற்றும் வாக்குச்சாவடி முகவராக இருந்த தோழர்கள் ஆளுங்கட்சியின் தாக்குதலை துணிச்சலுடன் எதிர்கொண்டு நின்றனர். பள்ளி வளாகத்துக்கு வெளியே வாக்குச்சாவடிகளை கைப்பற்ற கூடியவர்கள் ஆயுதங்களுடன் இருந்தனர். மோதல் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியது. வழக்கம் போல் காவல்துறை வேடிக்கை பார்த்தது.

தோழர் சரஸ்வதி அப்போது சென்னை மாநகர காவல் துறை ஆணையராக இருந்த  லத்திகா சரண் அவர்களை தொடர்பு கொண்டு புகார் செய்ததால் அவர் நேரடியாக வந்து  விரட்டியடித்து மோதலை தவிர்த்தார். வாக்கு எண்ணிக்கை இடமும் கைப்பற்றப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு அவர்கள் ஒதுக்கியிருந்த வாக்கு எண்ணிக்கை சுமார் 600 ஆகும்.

மார்க்சிஸ்ட் கட்சி உரிய புகார் அளித்தும் அழுத்தம் கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் வழக்கு தொடுத்தும் பலவார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்தப்பட்டது. மறு தேர்தல் நடந்தபோது மீண்டும் தில்லுமுல்லுகள் சற்று குறைவாக நடந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு சுமார் 1600 ஓட்டுக்கள் கிடைத்தன.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மாநகராட்சி  உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 69 ஆவது வட்டத்தில் பெண்களுக்கான பொதுத் தொகுதியாக அறிவித்த பிறகு தோழர் இந்திரா அவர்களை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக நிறுத்தியது. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தில்லு முல்லுகளும் கெடுபிடிகளும் இருக்கத்தான் செய்தது இருந்தாலும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தோழர் இந்திரா 2600 வாக்குகளை பெற்றிருந்தார்.

மார்க்சிஸ்ட் கட்சி பலமாக இருந்த டிபி சத்திரத்தில் 1050 வாக்குகளும் மண்டபம் சாலையில் 500 வாக்குகளும் அமைந்த கரையில் 400 வாக்குகளும் கூடுதலாக கிடைத்தது.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்திருந்த திமுகவின் சார்பில் ஆற்காடு வீராசாமி அவர்கள் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அண்ணாநகர் பகுதி தோழர்களின் பணிகள் அனைத்து வட்டத்திலும் வீடு பிரச்சாரம், தெருமுனை பிரச்சாரம், கலைக் குழு பிரச்சாரம், வேட்பாளர் பிரச்சாரம் என்று அனைத்தையும் ஈடு கொடுக்கக்கூடிய முறையில் செயல்பட்டது கட்சியின் செல்வாக்கை உயர்த்தியது.

 

அண்ணா நகர் பகுதி மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகளுக்கு கிளை வாரியான போராட்டங்களை உள்ளூர் தலைவர்கள் தோழர்கள்,முன்முயற்சி எடுத்தனர்.

எம் எம் டி காலனியில் சமூக நலக்கூடத்தை அபகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட பொழுது தோழர் மகேந்திரவர்மன் தலைமையில் கிளை தோழர்கள் போராடி வெற்றி பெற்றனர். சமூக நலக்கூடத்தை அரசே கட்டி அதன் திறப்பு விழாவிற்கு  மகேந்திரவர்மனையும் அழைத்துத்தான் திறந்தார்கள். அந்தப் பகுதி மக்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சியால் தான் இந்த சமூக நலக்கூடம் மக்களுக்கு கிடைத்தது என்று அறிந்து  கொண்டார்கள்.

அதே பகுதியில் தபால்நிலையம் அமைப்பதற்கும் கோஆப்டெக்ஸ் அமைப்பதற்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இவற்றை தனியார்கள் கைப்பற்றி விற்பதற்கான முயற்சி செய்த பொழுது போராட்டங்கள் நடத்தியதோடு, சட்ட ரீதியாகவும் முயற்சி எடுத்து பாதுகாத்து இவை இரண்டும் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பகுதியில் இருந்த பொதுநூலகம் செயல்படுத்தப்படாமல் நூலாம்படை பின்னி கிடந்தது. இதற்காக போராட்டம் நடத்தி ஒரு சிறந்த நூலகமாக மாற்றி செயல்பட வைத்ததில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் நின்று போராடியது வெற்றியும் பெற்றது.

அதே பகுதியில் முகமது சதக் பள்ளியில் ஒரே நாள் பல மடங்கு கட்டண உயர்வை ஏற்றினார்கள். ஒரு கோடி ரூபாய் என்ற அளவுக்கு கட்டண உயர்வு சென்றது. இவற்றை எதிர்த்து உடனடி மறியல் சாலைமறியல் நடத்தி அரசு அதிகாரிகளை வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தி கட்டணங்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டது.

இங்கு இருக்கக்கூடிய மாருதி பள்ளி தனியார் பள்ளியாக இருந்தாலும் பல நூறு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நிலத்தின் தாவா இருப்பதினால் மாணவர்களின் படிப்பை சீர்குலைக்கக்கூடிய முறையில் தலையீடுகள் இருந்ததை எதிர்த்து போராட்டங்களை நடத்தி மாணவர்களின் படிப்பை தொடரச் செய்தனர். 2015 ஆம் ஆண்டு மாநில மாநாடு நடைபெற்ற பொழுது எம் எம் டி கிளை மூலமாக மக்கள் மத்தியில் சில வாரங்களில் 1.45 லட்சம் ரூபாய் வசூல் செய்ய முடிந்தது என்றால்  மக்களோடு இருந்த தொடர்புகளும் இயக்கங்களும் தான்.

தற்போது இயக்கத்தில் இருக்கக்கூடியவர்களில் தோழர் மகேந்திரன் வர்மன், சுந்தர், கௌதமன், அகஸ்டின், மரியா, ஆசாத்நகர் குமார்,  பன்னீர்செல்வம், ரவிகல்யாண், கோபால் ஜெய்பிரகாஷ், விஜயன், உஷா, மணிமேகலை, ராம்ஜி, ராம்குமார், கோட்டி,யோகி, பிரகாஷ், நீண்டகால தோழர்.சண்முகம், போன்ற தோழர்கள் நான் இருந்தகாலத்தில்  பணிகளை முன்னெடுத்தனர்.

டிபி சத்திரத்தில் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து போராடி மக்கள் ஆதரவு பெற்ற பகுதியாகும். பட்டா கேட்டு பொதுமக்களை திரட்டி போராடியது.  சிதிலமடைந்து போயிருந்த குடிசை மாற்று வாரிய வீடுகளை  புதுப்பிக்க கோரி தொடர் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது, குடிநீர் தொட்டிக்கான இடத்தை அபகரிக்க முயற்சித்த ஆளும் கட்சியினர், சமூக விரோதிகள் எதிர்த்து மக்களை திரட்டி போராடி பாதுகாத்து, குடிநீர் தொட்டி கட்ட வைத்தது, மார்க்கெட் பகுதியை சீரமைக்கும் பணியை செய்தது, அண்ணா சமூகக் கூடம் செயல்படாமல் கிடந்ததை போராட்டங்கள் நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து இடித்து விட்டு புதிதாக கட்டச் செய்தது, டிபி சத்திரம் உள்பகுதியிலிருந்து செல்லக்கூடிய நுழைவாயிலை புனித ஜார்ஜ் பள்ளியின் நிர்வாகம் மூடியதை இடித்து தள்ளி வழி ஏற்படுத்தியது, ஆரம்பத்தில் மது கடைக்கு எதிராக நடத்திய சக்தி மிக்க போராட்டம் போன்றவைகளின் தொடர்ச்சியாக மேற்கண்ட இயக்கங்களை நடத்திய பொழுது மக்கள் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறியது. தோழர்கள் சுகுமாஇர், இந்திரா, பாபு, லெனின் தாஸ் பீட்டர் கோபி சரவணன், ஆபெல் பாபு, செந்தில்குமார், மறைந்த தோழர் வேல்முருகன்,ஊழியராக இருந்து இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர்.

மண்டபம் சாலையில் வாட்டர் டேங்க் சாலை எப்பொழுதுமே குண்டும் குழியுமாக இருக்கும். அரசு நிர்வாகம் கண்டுகொள்ளாததால் விபத்துக்கள் நடந்து வண்ணமும் உயிர்பலிகள் தொடர்ந்த வண்ணமும் இருக்கும். இதை எதிர்த்து மக்களை திரட்டி மறியல் நடத்தி கைதாகி சிறைப்பட்டு இறுதியில் நிரந்தரமாக சிமெண்ட் சாலை அமைத்து தீர்வு காணப்பட்டது. மண்டபம் சாலை ஊருக்குள் வருவதற்கு நடந்து வந்தால் கால்வாய் தடையாக இருக்கும் எனவே இரண்டாவது தெருவில் சிறிய பாலம் கட்ட சொல்லி நடத்திய போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனர்.

தற்போது மண்டபம் சாலையில் இருக்கக்கூடிய விளையாட்டு திடலின் இடத்தை மெட்ரோ வாட்டர் அபகரிக்க முயற்சி எடுத்தது. இளைஞர்களையும் பொதுமக்களையும் திரட்டி அபகரிப்பை தடுத்து விளையாட்டு திடலை பாதுகாத்து இன்றும் செயல்படுவதற்கு மண்டபம் சாலை மார்க்சிஸ்ட் கட்சி காரணமாக இருந்தது.  மண்டபம் சாலை கிளையில் ரேஷன் கடை அமைப்பதற்கான போராட்டத்தை நடத்தி ரேஷன் கடை அமைக்கப்பட்டது. வருடம் தோறும் கலை விழாக்கள் நடத்தி மக்களை ஈர்க்கக்கூடிய கிளையாக இருக்கிறது. இந்தக் கிளையில் தோழர்கள் P.சீனிவாசன்  B.சீனிவாசன், சத்தியன், மகி, கிருஷ்ணா  தேவராஜன் ரமேஷ் பழனி, கண்ணன் மற்றும்ரமேஷ் வெங்கடேசன் போன்றவர்கள் இயக்கத்தை முன்னெடுத்தனர். 1982 ஆம் ஆண்டு நான் வாலிபர் சங்கத்தின் மேற்கு சென்னை பகுதி  செயலாளராக  செயல்பட்ட பொழுது அயனாவரம் மேட்டு தெருவில் வாலிபர் சங்க கிளை கூட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்க தலைவராக இருந்து மறைந்த திருவேங்கடம் முயற்சியால் கூட்டம் நடத்தப்பட்டது.

தோழர் கே கிருஷ்ணன் அதில் என்னை கலந்து கொள்ள செய்து கிளை அமைப்பை ஏற்படுத்த அனுப்பினார். கிளை அமைப்பு உருவாக்கப்பட்டு தோழர் .எல்.மனோகர் (தற்போது ஆட்டோ சங்கத் தலைவராக இருப்பவர்) கிளை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். வியாசர்பாடி, பெரியமெடு இரு இடங்களை கடந்து மூன்றாவது ஒரு இடத்தில் இந்த மேட்டுத்தெரு கிளை என்பது உருவாகியது. மூலமாக பாரத மணி சங்கர் ஆகியோர் இணைந்து மண்டபம் தெருவில் கிளை அமைக்க அழைத்தார்கள். அங்கு கிளை அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தோழர் சங்கர், ஐயப்பன், டேவிட் ஆகியோருடைய முன்முயற்சியால் யுவராஜ் மூலம் கிளை உருவாக்கப்பட்டது என்ற நினைவுகளும் இதை பதிகிற பொழுது வந்து போகிறது. தோழர் டேவிட் முக்கிய நபராக இயக்கத்தில் இருந்தார்.

மனித உடலில் முதுகெலும்பு வெளியில் தெரியாமல் நிமிர்ந்து நிற்கவும் பின்பக்கம் சாய்ந்து விடாமலும் இருப்பது போல் தோழர் டேவிட் அண்ணா நகரில் பணியாற்றினார்.

வாழ்நாள் முழுவதும் சென்னையில் வாழ்ந்து தனது 81 வது வயதில் கேரளா சென்று திருச்சூர் மாவட்டத்தில் தனது 83 வது வயதில் மரணம் அடைந்தார். கட்சிக்காக நீண்ட காலம் தனது வீடும் கடையும் இணைந்து இருந்த பகுதியை கொடுத்திருந்தார்.

சடை முடியுடன் வளர்ந்த தாடியும் காக்கி முழுக்கால் சட்டையும் அணிந்து கொண்டு சன்னியாசி தோற்றத்தை போல் காட்சி தருவார். அவருடைய பேச்சு திக்கி திக்கி இருந்தாலும் பேசும்பொழுது வார்த்தைகளுக்கு இடையில் இடைவெளி இருந்தாலும் சிந்தனை சீராகவும் கருத்துக்கள் தெளிவாகவும் இருக்கும் இறக்கும் வரை தனது கட்சித் தொழிலை நடத்தி தான் உயிர் வாழ்ந்தார்

அமைந்தகரைப் பகுதியில் தோழர் எம் ராஜன் பெரிய மேட்டிலிருந்து குடியேறி மதனகோபால் உதவியுடன் வாலிபர் சங்க கிளையை உருவாக்கினார் நான் அந்த கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அதன் பிறகு அமைந்த கரையில் இயக்கம் கட்டுவதில் பிரதான பங்கு வகித்தார். அமைந்தகரையில் மின்சாரம் தடைபடுதல் எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி காரணமாக இருந்தது. சாலை வசதி குடிநீர் வசதி ஆகியவற்றுக்கான தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். நீர்வழி கரையோர வீடுகளை இடிப்பதற்கு எதிராக போராட்டங்களை நடத்தி நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டது. மாற்று இடங்களுக்கான போராட்டமும் வலுவாக நடத்தப்பட்டது. தோழர் ராஜன் பங்களிப்பு தனிநபராக இருந்தாலும் சோர்வற்றதாக இருந்தது. இதன்முலம் இயக்கம் வளர்ந்தது. இவருடன் தோழர்.பாலசுந்தரம் வயது முதிர்ந்தாலும் ஈடுகொடுத்து வேலைசெய்தார். தங்கராஜ் தேவேந்திரன் லிங்கம் மற்றும் சில தோழர்கள் இயக்கத்தை முன்னெடுத்தனர்.

பொண்ணுவேலுப்பிள்ளை தோட்டத்தில் பாதாள சாக்கடை மின்சார வசதி சாலை வசதி பட்டா கேட்ட போராட்டம் ஆகிய போராட்டங்ககள் தொடர்ச்சியாக வலுவாக நடத்தப்பட்டது. எம் எம் காலனியில் குடியிருப்பு இடிக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தப்பட்டது. இதேபோன்று என் எஸ் கே நகரில் குடியிருப்பு பிரச்சினைகளுக்கான போராட்டம் நடுவங்கரை மூவேந்தர் நகர் எம்ஜிஆர் காலனி போன்ற இடங்களில் அடிப்படை பிரச்சினைகளுக்காகவும் குடியிருப்பு அகற்றுவதற்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தை உருவாக்கியது. தடுத்து நிறுத்தியது.

பிபி தோட்டம் என் எஸ் கே நகர் நடுவாங்கரை அரும்பாக்கம் ஆகிய இடங்களில் கிளைகளை உருவாக்கியதில் தொடர் முன் முயற்சிகளை தோழர் பி சுந்தரம் எடுத்தார். பல புதிய தோழர்களை இந்தப் பகுதியில் இயக்கத்துக்குள் கொண்டு வந்தார். இவருடன் பிபி தோட்டம் பழனி திருவேங்கடம் கோவிந்தராஜ் முனிவேல் குமரவேல், இவரகளுடன் உதயகுமார்இ என் எஸ் கே நகரில் மார்ச்சான் நடுவாங்கறையில் ஞானசேகர் சுரேஷ் அரும்பாக்கத்தில்  மறைந்த பிச்சைமுத்து பெரியசாமி முனி வேல் போன்ற தோழர்கள் இயக்கத்தை முன்னெடுத்தனர்.எம்.எச் காலனியில் மீண்டும் கிளையை உருவாக்கி அந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகளை போராட்டமாக மாற்றி இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பணியினை அந்தப் பகுதியில் குடியிருந்து ஆரம்பத்தில் இயக்கம் கட்டிய தோழர் B. சுந்தரம் மீண்டும் முன்னெடுத்தார். கோகுல் இளங்கோவன் லோகநாதன் செல்வம் போன்றவர்கள் அந்தப் பணியுடன் இணைந்தனர்.

தற்போது ஆயிரம் விளக்கு பகுதியில் இணைந்திருக்கிற நமச்சிவாயபுரம் பகுதியில் அடிப்படை பிரச்சினைகளுக்கான போராட்டங்கள், தொடர்ச்சியாக தட்டிகள் வைப்பது, இரவு பள்ளிகள் நடத்துவது, சமூக விரோத செயல்களுக்கு எதிராக போதைப் பழக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய பணிகளை திறம்பட செய்ததுடன் மேற்கு நமச்சிவாயபுரத்தில் கிளைகளை உருவாக்கக்கூடிய பணியையும் செய்தனர். இதேபோன்று திருவேங்கடபுரத்தில் கிளையின் சீரான செயல்பாடுகள் இருந்தது தோழர்கள் ரவீந்திர பாரதி, வெங்கட், சேகர், செல்வி, செல்வம், ராஜா,  முரளி, ஆனந்தன், ராஜ்குமார், மறைந்த தோழர் விஜய் ஆனந்தம் போன்ற தோழர்கள் இயக்கத்தை முன்னெடுத்தனர்.

இப்போது எழும்பூர் பகுதியில் இணைந்திருக்க கூடிய அன்றைய 72 வது வட்டம் நேரு பார்க், சாஸ்திரி நகர் புல்லாபுரம், ஓசன் குளம் ஆகிய இடங்களில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை புதுப்பிக்க கோரியும், மின்சார வசதி,சாலை வசதி குடிதண்ணீருக்கான இயக்கங்கள், குறிப்பாக சாஸ்திரி நகரில் காவலர் தங்கும் விடுதி மூலமாக ஏற்பட்ட பொது வழி அடைப்பு ஆகியவற்றை எதிர்த்த போராட்டங்கள் நடத்தி இயக்கம் வெற்றி பெற்றது.

தோழர் ஆறுமுகம், மணி, குப்பு ஆரோக்கியராஜ், நாகராணி, தாஸ், சாஸ்திரி நகர் முனுசாமி ரமேஷ்  புல்லாபுரம் பி பி ஸ்ரீனிவாசன், லாசர் மறைந்த தோழர் மோசஸ் ஓசான் குளத்தில் உசேன் மறைந்த தோழர் கிருஷ்ணன் போன்றவர்கள் இயக்கத்தை முன்னெடுத்தனர். தோழர் ஆறுமுகம் மற்றும் கிளை தோழர்கள் மூலமாக தாஸ்புரம், ஸ்டாலின் நகர் போன்ற இடங்களில் புதிய கிளைகள் அமைக்கப்பட்டது.

தேர்தல்கள் மற்றும்  மக்கள் பிரச்சனைகளுக் காக நடத்திய போராட்டங்கள் மக்கள் மத்தியில் இயக்கத்திற்கான செல்வாக்கை உயர்த்தியது. பல ஊழியர்களை உருவாக்கியது. அப்போதைய மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தை அண்ணாநகர் பகுதி குழு அமைந்தகரை புல்லாரெட்டி அவன்யூவில் நடத்தியதும் பொதுக்கூட்டத்திலேயே மேற்குவங்க சாதனைகளை விளக்கி மிகப்பெரிய கண்காட்சிகளை வைத்ததும மக்களை ஈர்த்தது.

அண்ணா நகர் பகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இடதுசாரி இயக்கம் மக்கள் மத்தியில் அறிமுகமான பகுதி. மக்களோடு தொடர்புள்ள உள்ளூர் தலைவர்களை தன்னகத்தே கொண்டுள்ள பகுதி அந்தப் பகுதியில் மேலே குறிப்பிட்டவை நான் கலந்து கொண்ட, நானும் இணைந்து இருந்த இயக்கங்களை மட்டுமே.எனது நினைவில் இருந்த, தற்போது இயக்கத்துடன் தொடர்பில் உள்ள தோழர்களின் பெயர்களை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

அண்ணா நகர் பகுதி குழு அலுவலகம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தோழர் ஜீவாவின் இடத்திலும், நியூ ஆவடி சாலையில் தோழர் டேவிட் அவர்களின் இடத்திலும் எம் எம் டி காலனியிலும் செயல்பட்டு வந்தது. அதன் பிறகு டிபி சத்திரத்தில் வெண்மணி படிப்பகத்தில் இயங்கி வந்தது.இந்தப் பகுதியில் இடதுசாரி இயக்கத்தையும் வெகுஜன அமைப்புகளையும் முன்னெடுப்பதற்கு தோழர் செல்வம் அவர்கள்  கொடுத்துள்ள அலுவலகம் உதவிடும்.

.பாக்கியம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...