Pages

சனி, டிசம்பர் 31, 2022

மொராக்கோ முன்னேறுமா? ஆப்பிரிக்க கால்பந்தாட்டம் ஒரு பார்வை. அ.பாக்கியம்

நாக் அவுட் சுற்றில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை தோற்கடித்து கால் இறுதிக்கு வடக்கு  ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ அணி முன்னேறி உள்ளது.


லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் மட்டும் குரோஷியாவுடன் சமன் செய்து, மற்றொரு பலம் வாய்ந்த ஐரோப்பிய அணியான  பெல்ஜியம் அணியை தோற்கடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி மொரோக்கோ மக்களை உறைய வைத்துள் ளது.

இந்த வெற்றி அதிர்ஷ்டத்தால், தற்செயலால் கிடைத்தது அல்ல. இளம் விளையாட்டு வீரர்களை பயிற்றுவித்து சாதித்த வெற்றியாகும் .

ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து இதுவரை ஒரு அணியும் அரை இறுதிக்கு முன்னேறவில்லை. மொராக்கோ அரை இறுதிக்கு சென்றால்  ஆப்பிரிக்க கால்பந்தாட்டத்தின் ஒரு மைல் கல்லாக அமையும்.

இதற்கு முன்பு 1990 ல் கேமரூன், 2002ல்
செனகல் , 2010ல் கானா 2022 இல் மொரோக்கோ என்று நான்கு அணிகள் மட்டும் தான் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி வந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு கானா உருகுவே அணியுடன் மோதிய பொழுது கானா அடித்த பந்தை உருகுவே நாட்டு நட்சத்திர வீரர் சொர்ஸ் கேவலமான முறையில் கையால் தடுத்து கானாவின் அரை இறுதி கனவை தகர்த்தெறிந்தார்.

இப்பொழுது மொராக்கோ ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கால்பந்தாட்ட பிரதிநிதியாக அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற ஆவல் கால்பந்து ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

உலக கால்பந்து போட்டியில் இதுவரை 13 ஆப்பிரிக்க நாடுகள் கலந்து கொண்டு உள்ளன. கேமரூன் (8) மொராக்கோ (6) நைஜீரியா (6) டுனிசியா(5)  அல்ஜீரியா(4)
கானா (4) ஐவரி கோஸ்ட் (3) எகிப்து (3) செனகல்(3) தென் ஆப்பிரிக்கா (3) அங்கோலா (1) காங்கோ (1) டோகோ (TOGO) (1) என்ற விகிதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

1934 ஆம் ஆண்டு முதல் முதலாக எகிப்து அணி ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொண்டது.

அதன் பிறகு 36 ஆண்டுகள் கழித்து 1970 ஆம் ஆண்டு மொரோக்கோ அணி உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்டது.

கால்பந்தாட்டத்தில் தொழில்நுட்பம் என்பது ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவிற்கு வளர்ந்து விட்டது. ஐரோப்பிய அணிகள் தொழில்நுட்ப ஆட்டத்தை முன்னிறுத்தி, தென் அமெரிக்கா அணிகள் அழகியல் ஆட்டத்தை முன்னிறுத்தி, ஆப்பிரிக்க அணிகள் உடல் வலுவை முன்னிறுத்தி களம் இறங்குகிறார்கள்.

1982 ஆம் ஆண்டுகளில் இருந்து நான் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தை பார்த்து வருகிறேன். பொதுவாக அழகியல் ஆட்டம் குறைந்து இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

மந்திர கால் மரடோனா முதல் ஐரோப்பாவின் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் ஆட்டம் அழகியல் சார்ந்ததாக இருக்கும். பிரேசில் நாட்டின் ரொனால்டோ,ரொனால்டினோ ஆகியோர்களின் உடல் மொழிகள் காணக் கிடைக்காத காட்சிகளாக மைதானங்களில் நடந்து கொண்டிருக்கும். ராபர்ட் டு கார்லோ சின் தொலைவில் இருந்து பந்தை கோல் கம்பத்திற்குள் செலுத்தும் நிகழ்வுகள் இதுவரை இந்த ஆட்டத்தில் கிடைக்கவில்லை. அடுத்தடுத்து நடைபெறுவதில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.

தற்பொழுது ஐரோப்பிய அணிகளில் அவ்வாறு கண்டுபிடிப்பது அரிதாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் எம்பாபே, ஜிரெட், தென் அமெரிக்காவின் மெஸ்ஸி பிரேசில் நாட்டு வீரர்கள் சிலரிடம் அழகியல் தன்மை மேலோங்கி இருக்கிறது.

ஆப்பிரிக்க நாட்டு வீரர்கள் ஐரோப்பிய கிளப்புகளில் இப்பொழுது கலக்கி வருகிறார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது. பாலன் டி ஓர்(Ballon d'Or ) என்ற பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்டு சர்வதேச கால்பந்து ஆட்டத்தின் உயரிய விருதாக மாறி இருக்கக்கூடிய விருதுக்கு போட்டியிட கூடிய அளவுக்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் முன்னேறி வருகிறார்கள்.

இருந்தும், அந்த நாட்டின் பொருளாதார நிலைமை ஐரோப்பிய நாடுகளைவிட, தென் அமெரிக்கா நாடுகளைவிட, வெகு தொலைவில் உள்ளது. கால்பந்தாட்ட அமைப்புகள் நிதி பற்றாக்குறையில் எப்பொழுதுமே சிக்கித் தவிக்கிறது. பிரான்ஸ் நாட்டின் கால்பந்தாட்ட கழக 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் 257.0 மில்லியன் டாலர் ஆகும். ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டு 2020 ஆம் ஆண்டு கால்பந்தாட்ட கழகத்தின் பட்ஜெட் 12 .7 மில்லியன் டாலர் மட்டுமே.

மற்றொரு காரணம் மிகக் குறைவான அணிகளே உலகக் கோப்பைக்கு வர முடிகிறது. 1998 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க கண்டத்திற்கு ஐந்து அணிகள் என்று ஒதுக்கப்பட்டது. அவற்றில் மூன்று அணிகள் மட்டும் தான் அப்போது தரம் வாய்ந்ததாக இருந்தது என்றால் உள்ளே நுழைவதற்கு மிகப்பெரிய கடினமாக இருந்தது...

2026 ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா மெக்ஸிகோ இணைந்து உலகக் கோப்பை கால்பந்து போட்டியே நடத்த இருக்கிறார்கள். அந்த போட்டியில் 32 அணிகளுக்கு மாறாக 48 அணிகள் என்று உயர்த்தப்பட உள்ளது. இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவது காரணம் நீண்ட கால திட்டமிடல் என்பது ஆப்பிரிக்க கால்பந்தாட்ட கழகத்திடம் இல்லை. குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக் கான திட்டமிடல் தேவை. திடீரென தோன்றி வெற்றி பெற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் நட்சத்திர வீரர்களை நம்பி மட்டும் களத்தில் இறங்க முடியாது என்பதை கற்று உணர்ந்திருக்கிறார்கள் அதில் சில மாற்றங்களும் தேவைப்படுகிறது.

மைதானத்தில் மன அழுத்தம் ஆப்பிரிக்க வீரர்களுக்கும் ,ஆசிய வீரர்களுக்கும் வெற்றி பெறுவதற்கு ஒரு தடையாக இருக்கிறது.
பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாட்டின் வீரர்கள் பந்தை எடுத்தவுடன் அதன் போக்கிலேயே பதட்டப்படாமல் கொண்டு செல்கிறார்கள்.

இதற்கு மாறாக ஆப்பிரிக்க விளையாட்டு வீரர்கள் பந்து கிடைத்தவுடன் அதன் மீது அழுத்தம் செலுத்தி பதட்டப்படும் நிலை ஏற்படுகிறது.இதற்கான பயிற்சி தேவை என்று விளையாட்டு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆப்பிரிக்கா விளையாட்டு கழகங்கள் பயிற்சியாளர்களுக்கான முதலீட்டையும், விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சிக்கான முதலீட்டையும், அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

ஆப்பிரிக்க விளையாட்டு வீரர்களின் இந்த முன்னேற்றம் மிக பிரமிக்க தக்கது. நாட்டின் அணிக்காக மட்டுமல்ல,ஐரோப்பிய நாட்டில் நடக்கக்கூடிய அனைத்து கிளப்களிலும் ஆப்பிரிக்க நாட்டு வீரர்களின் அசத்தலான ஆட்டம் மற்றவர்களை ஈர்க்கத் துவங்கி உள்ளது.

ஆப்பிரிக்காவின் மொராக்கோ தற்போது மைதானத்தில் மட்டுமல்ல கால்பந்து விழாவில் மக்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறது.

அடுத்து நடைபெறக்கூடிய கால் இறுதியில் புதிய பலத்துடன் களமிறங்கி உள்ள போர்ச்சுகள் அணியை தோற்கடித்து முன்னேறுமா என்ற கேள்வி இருந்தாலும் பலரிடம் மொராக்கோ வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.
அ.பாக்கியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...