Pages

செவ்வாய், நவம்பர் 14, 2017

குஜராத்: சுவாசிக்க முடியாத சிசுக்கள்.




       குஜராத் கௌரவம் என்ற பெயரில் மோடியும் அமித்ஷாவும் குஜராத்தில் பெரும்விழாக்களை நடத்தினர். ஜப்பான் பிரதமருடன் வீதி வலம் நடத்தினார். புல்லட் ரயில் விடப்போகிறோம் என்று படோடமான பிரச்சாரங்களை செய்தார். இதையெல்லாம் குஜராத்தின் பெருமை என்று பீத்திக் கொண்டு திரிகிறார்கள். மறுபுறத்தில் குஜராத் மக்களின் வாழ்க்கை பிய்ந்துபோய்க் கிடக்கிறது. 
            
                த்திரப்பிரதேசத்தை தொடர்ந்து சமீபத்தில் (அக்டோபர் 27) குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள அன்சாரவில் அரசு மருத்துவமனையில் புல்லட் இரயிலை விட துரிதமாக 18 குழந்தைகள் மூன்றே நாட்களில் இறந்துவிட்டன. சத்துக் குறைவாலும், எடை குறைவாலும் பிறந்த குழந்தைகள் இறந்துவிட்டன. மருத்துவமனை அதிகாரி முதலில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்தார். பிறகு விஷயம் படத்துடன் வெளி வந்தவுடன் மறுக்காமல் ஒத்துக்கொண்டார்.

          குஜராத் தொழில் வளர்ச்சியில் 2-வது இடத்திலும், தனிநபர் வருமானத்தில் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 5-வது இடத்திலும் இருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை இறப்பில் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 17வது இடத்தில் உள்ளது. எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் விகிதத்தில் 25வது இடத்தில் உள்ளது. குஜராத்தைவிட பல சிறிய பின்தங்கிய மாநிலங்கள் கூட பொது சுகாதாரத்தில் இதைவிட முன்னேறி உள்ளன. குஜராத்தில் 1000 குழந்தைகள் பிறந்தால் 33 குழந்தைகள் சிசு நிலையிலேயே இறந்துவிடுகிறது. இது கேரளாவில் 12, தமிழ்நாட்டில் 19, மகாராஷ்டிராவில் 21, பஞ்சாபில் 23 என்ற அளவில் உள்ளது. குஜராத் பெருமை கொண்டாடும் மோடி வகையறாக்கள் சுகாதார வளர்ச்சியில் இந்த மாநிலங்களை விட பின்தங்கி உள்ளன.


                தேசிய அளவில் 35 சதவிகிதம் எடை குறைவுள்ள குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் தேசிய சராசரியை விட அதிகமாக அதாவது 39 சதவிகிதம் எடை குறைவான குழந்தைகள் இருக்கிறது. இவை கேரளாவில் 16 சதம், பஞ்சாபில் 21 சதம், தமிழ்நாட்டில் 23 சதம், மகாராஷ்டிராவில் 36 சதமாக உள்ளது. குஜராத்தைவிட பின்தங்கி இருக்கக்கூடிய மாநிலங்கள் பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மட்டுமே. சிறிய மாநிலமான மிசோராமில் 11.9 சதமும், மணிப்பூரில் 13.8 சதம் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன.

        குஜராத்தின் தனிநபர் வருமானம் 1,22,502 ஆகும். ஜம்மு-காஷ்மீரின் தனிநபர் வருமானம் 60,171 ஆகும். குஜராத்தைவிட சரிபாதி தனிநபர் வருமானம் குறைவாக உள்ள ஜம்மு-காஷ்மீரில் பிறந்த குழந்தைகள் (IMR) இறப்பது 1000த்திற்கு 26 மட்டுமே. தற்போது இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 41 ஆகும். நமக்கு அண்டை நாடான பங்காதேசில் 31, நேபாளில் 29 என்ற அளவில் நம்மைவிட முன்னேறி இருக்கிறது. 

           குஜராத்தில் தொழில் வளர்ச்சி, தனிநபர் வருமானம் என பொருளாதார வளர்ச்சி அடைந்திருந்தாலும் அவை ஏழை மக்களுக்கு சேரவில்லை. அதானிகளும், அம்பானிகளும், அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா போன்றவர்களுக்குத்தான் கோடிகள் குவிந்துகிடக்கிறது. மருத்துவமனைகளிளோ குழந்தைகளின் மரணக் குவியல்கள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. குஜராத்தின் வளர்ச்சி கார்ப்பரேட்டுகளுக்கானது என்பது நிதர்சனமான உண்மையாகிறது.

          மீபத்தில் இந்தியாவில் பொது மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பு அதிகமாகி இருக்கிறது. உத்தரப்பிரதேசம், அசாம், இராஜஸ்தான் என அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதிலிருந்து பொது சுகாதாரத்தை மத்திய அரசு வேகமாக புறக்கணித்து வருகிறது என்பது அம்பலமாகிறது. 

               இந்த ஆண்டு ஜார்கண்ட், ஜாம்ஷெட்பூர் மகாத்மா காந்தி நினைவு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 30 நாட்களில் 52 குழந்தைகள் இறந்தன. உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் பாபா ராகவா தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டு வாரத்தில் 70 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணமடைந்தனர். இந்தியாவின் வளர்ச்சி பற்றியும், வல்லரசு பற்றியும், துல்லிய தாக்குதல் பற்றியும் வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் கூட இதுபற்றி வாய்திறக்க அச்சப்படுகின்றன.
                                                          ------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...