Pages

புதன், அக்டோபர் 05, 2016

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த மதிகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...!


          இன்றைய தினமணியில் திருவாளர் மதி அவர்களின் கார்ட்டூன் பகுதியில் எழுதியிருப்பது அப்பட்டமான திசை திருப்பலாகும். சீத்தாராம் யெச்சூரியின் ஒற்றை வார்த்தையை வெட்டி  எடுத்து முடிவை அறிவிக்கும் மூர்க்கத்தனமான எழுத்தாகும். மதியுள்ள மனிதர்கள் அனைவரும் மாந்தர்களின் வாழ்வின் மீது பற்று வைத்து சீத்தாராம் யெச்சூரியின் வார்தையை புரிந்து  கொள்வார்கள். குதர்க்க மதி கொண்டவர்கள் தான் திசை திருப்பும் வகையில் அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். 
        
       சீத்தாராம் யெச்சூரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உரித் தாக்குதலை கடுமையாக கண்டித்திருக்கிறது. பதான்கோட் மற்றும் உரி போன்று மீண்டும் தாக்குதல் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் எல்லையோர மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும் பதட்டத்தை தணிக்க இந்திய அரசு ராஜதந்திர ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிக்கை கொடுத்துள்ளது. (We urge upon the Government of India to continue with the diplomatic and political moves to defuse tensions..) இதைத்தான் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் விளக்கியுள்ளார்கள். அதுவும் அரசுக் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திலும் இதை தெரிவித்துள்ளார். சீத்தாராம் யெச்சூரி மட்டுமல்ல இன்னும் சில கட்சிகளும், அரசியல் நோக்கர்களும் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறைக்க முடியாது. 

     மதி அவர்கள் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த சொல்கிறது என்று முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு போடுவது எந்த விதத்தில் அறிவுப் பூர்வமாக இருக்கும். ஏன்? அமெரிக்க அதிபர் ஒபாமா பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் உடனே தலையிட தயார் என்று அறிக்கை கொடுத்தாரே, அந்த அறிக்கை மதியின் கண்களுக்கு படவில்லையா? அமெரிக்கா எப்படி தலையிடும் என்பதற்கான அர்த்தம் புரியவில்லையா? இல்லை, அமெரிக்க சார்பு அவரின் அறிவையும் கண்களையும் மழுங்கடித்துவிட்டதா? 

         மார்க்சிஸ்ட் கட்சி தீவிரவாதத்திற்கு எதிராக அறிக்கை விட்டு வரவேற்பது மட்டுமல்ல களத்திலும் இருந்திருக்கிறது என்பதை மதி உள்ள மனிதர்கள் அனைவரும் அறிந்ததே. அஸ்ஸாமில் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளை எதிர்த்து கடந்த காலத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை இழந்துள்ள கட்சி. இப்போது நடைபெற்ற தேர்தலில் கூட கடந்த கால தீவிரவாதிகளுடன் உறவாடாமல் (உறவாடியவர்கள் பற்றி ஊர் அறியும்) ஆட்சியை விட மக்களும், தேச ஒற்றுமையும்தான் முக்கியம் என்று முடிவெடுத்து செயல்படும் கட்சி. பஞ்சாப்பில் பிரிவினைவாதமும், தீவிரவாதமும் தலைவிரித்து ஆடிய காலத்தில் இன்றைய போலி தேச பக்தர்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்தபொழுது மார்க்சிஸ்ட் கட்சி நூற்றுக்கணக்கான தலைவர்களை இழந்த கட்சி. திரிபுராவில் தீவிரவாதிகளையும், பிரிவினைவாதிகளையும் வெற்றிகரமாக அரசியல் ரீதியாகவும் வென்றெடுத்த கட்சி. காஷ்மீரிலும் தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து எதிர்த்து  போராடிக் கொண்டிருக்க கூடிய இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்க வேண்டும் என்ற முடிவிலும், காஷ்மீர் மக்களின் சுயாதிபத்திய உரிமையும், பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்து போராடி வரக்கூடிய கட்சி என்பதை மதி அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நாட்டை துண்டாட வடகிழக்கு மாநிலங்களை அமெரிக்க ஆதரவுடன் எடுத்த முயற்சிகளை தேசத்திற்கு அம்பலப்படுத்தி இயக்கம் நடத்திய கட்சி. 

        எனவே சீத்தாராம் யெச்சூரியின் ஒற்றை வார்த்தையை துண்டித்து எடுத்து தனது குறிக்கோளை திருவாளர் மதி அவர்கள் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள எத்தனித்திருப்பது திசை திருப்பலாகும். ஒருவேளை டைம்ஸ் நௌ தொலைக்காட்சியின் அர்ணாப் கோஸ்வாமியின் இடத்தை பிடிப்பதற்கு திருவாளர் மதி போட்டியிடலாம். அதற்கு இந்த குறுக்கு வழியை பயன்படுத்துவது என்று முடிவெடுத்துவிட்டால் யார் என்ன செய்ய முடியும்.
 
       எனவே தீவிரவாதியை எதிர்த்த போராட்டத்திலும், பிரிவினைவாதிகளை எதிர்த்த போராட்டத்திலும் மக்கள் ஒற்றுமை காக்கும் போராட்டத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி என்றைக்குமே முன்னிலை வகித்திருக்கிறது என்பதை வரலாறு அறியும். மக்களுக்கு தெரியும்.

 -  ஏ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...