Pages

வெள்ளி, ஜூலை 03, 2015

விலையில்லா மரண நிலையம்






                                ஏ.பாக்கியம்

சென்னை தியாகராய நகர் (தி.நகர்) பேருந்துநிலை யத்திற்கு‘விலையில்லா மரண நிலையம்’ என பெயர் மாற்றம் செய்துவிட்டால் பொருத்தமாக இருக்கும். தமிழகத்தில் எத்தனையோ விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் மிக அதிகமாகவும் எந்தவித அடையாளச் சான்றுகளும் இல்லாமல் எளிதாக அடிக்கடி கிடைப்பது விலையில்லா மரணம்தான். அதுவும் தி.நகர் பேருந்து நிலையத்தில் போதும் போதும் என்ற அளவிற்கு கிடைக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம்தான் கடந்த ஜூன் 26ம் தேதி நடந்தது.


    அமுதா என்ற 46 வயது பெண்மணி, பிளஸ் 2 முடித்த தனது மகனை கல்லூரியில் சேர்த்துவிட்டு             தி.நகர் பேருந்து நிலையத்தில் பணிபுரியும் தனது கணவரை பார்க்க வந்தார். கூடவே அவருடைய மகளும், பேத்தியும் வந்திருந்தனர். மகளையும், பேத்தியையும் முன்னே அனுப்பி விட்டு, அமுதா பின்னே சென்றபோதுதான் அந்த விபரீதம் நடந்தது. பேருந்து நிலையத்தின் உள்ளே  ஒரு பேருந்தை கடந்து செல்ல முயன்றபோது இரு பேருந்திற்கு இடையில் அமுதா மாட்டிக் கொண்டார். இரு பேருந்துகளின் இடையில் அமுதா, சுருள்போல் சுழற்றி எடுக்கப்பட்டார். பயணிகளின் கூக்குரலைவிட வேகமாக அமுதாவின் ஒரு எலும்பு விடாமல் அத்தனை எலும்புகளும் நொறுங்கின. உள்ளுறுப்புகள் சின்னாபின்னமாகி சிதைந்தன. கண்ணிமைக்கும் நொடியில் மரணம் சம்பவித்து விட்டது.

    அம்மா என்று மகள் கதற.. பாட்டி என்று பேத்தி கதற.. வந்து போகும் பேருந்துகளின் இரைச்சலில் அந்த கதறல் மற்றவர்களுக்கு கேட்டது. ஆனால், அதிகார வர்க்கத்தினர் கேளாக் காதினராகத்தான் இருந்தனர். உயிர் வலியில் இருந்து அமுதா விடைபெற்றுக் கொண்டார். ஆனால், அந்த வலி அனைத்தும் அவரது குடும்பத்தினருக்கு போய் சேர்ந்து விட்டது.

     கல்லூரியில் சேர்ந்த மகன், மேலும் இருமகள்கள், உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் என  நால்வரின் வாழ்வை சுமந்த அமுதா, நான்கு பேர் சுமந்து செல்லும்படி ஆக்கப்பட்டார்.  தி.நகர் பேருந்து நிலையம் அடுத்த சில நிமிடங்களில் சகஜ நிலைக்கு மாறியது.  சம்பவத்தை பார்த்தவர்கள் தங்களுக்கான பேருந்தில் ஏறி பயணித்து விட்டனர். புதிய பயணிகளில் காதுகளில் ஏதோ ஆக்சிடென்ட்டாம் என்ற வார்த்தைகள் மட்டும் அரசல் புரசலாக விழுந்தது. அதற்கு பின்னார் வந்தவர்களுக்கு அதுவும் தெரியாது.

பொல்லாப்பில் மாட்டாத பொதுப்புத்தி;
         ஆனால், தங்கள் பேருந்து வராததால் காத்திருந்த சில பயணிகள், இங்க இப்படித்தான் அடிக்கடி நடக்குது. யாரு கேட்கறது என்று முணுமுணுத்தனர்.  வழக்கமாக அங்கு பேருந்து ஏற வரும் ஒருவர், போன வாரம் ஒரு பெரியவர் இப்படித்தான் இறந்தார் என்று கூறி அமுதாவுக்கும் சேர்த்து அனுதாபப்பட்டார்.  பேருந்து நிலைய ஊழியர்களும் சில காவலர்களும் இது நான்காவது விபத்து என்று பட்டியலிட்டனர்.  நடவடிக்கை எடுக்கவேண்டிய  அதிகாரிகள் இது அந்தப் பெண்மணியின் தவறு, அடுத்து அந்த ஓட்டுநரின் தவறு என்று தீர்ப்பு சொல்லிவிட்டு தங்கள் பணிக்கு திரும்பி விட்டனர்.

      பேருந்து நிலையத்திலும் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் தொடர் விபத்து ஏற்படுவதற்கும் அப்பாவி உயிர்கள் பலியாவதற்கும் என்ன காரணம் என்று அவர்கள் சிந்திக்க தயாராக இல்லை. அனைத்து விபத்துக்களுக்கும் காரணம் இறந்தவரும், ஓட்டுநரும் மட்டுமே என்ற காரணத்தை அவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள் என்பதால், மற்றதை பற்றி அவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

சகஜமான சம்பவங்கள்
    நான்கு வருடத்திற்கு முன்பு காளிதாஸ் (47) என்ற ஓட்டுநர் இரு பேருந்துகளுக்கிடையில் சிக்கினார். அவரின் மார்பெலும்புகள் நொறுங்கின. ஒரு மாதம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. கடந்த 23.01.2012 அன்று கணபதி என்ற முதியவர் மீது  பேருந்து ஏறி அவரின் கால் முறிந்துவிட்டது. மருத்துவமனையில் உயிருக்கு போராடினார். கடந்த 19.11.2013 அன்று மற்றொரு முதியவர் மீது ஜி18 பேருந்து ஏறி அந்த இடத்திலேயே நசுங்கி இறந்தார். கடந்த 2014ம் ஆண்டும் இதே போன்ற ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. கடந்த 19.06.2015 அன்று காலை 9 மணிக்கு ஆதம்பாக்கம் பணிமனையை சேர்ந்த பேருந்து, தி.நகர் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்தபோது பெரியவர் ஒருவர் நசுங்கி  செத்துவிட்டார். தற்போது கடந்த 26ம் தேதி (ஜூன் 26) மாலை 5.45 மணிக்கு அமுதாவுக்கு அதே கதி ஏற்பட்டுவிட்டது. இந்த உயிர் பலிக்கெல்லாம் யார் காரணம்? யார் பொறுப்பேற்பது?

        கடந்த 2012 -ம் ஆண்டு கணபதி என்பவர் இறந்தபோதே, இந்த மரணக் கணக்கு தொடரக் கூடாது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பத்திரிகைகளில் எழுதினார்கள். ஆனால், அரசும், அதிகாரிகளும் இதுபோன்ற கொடூரமான மரண கணக்கு தொடர, கமா போட்டுக் கொண்டு வருகிறார்கள். இதுவரை நிகழ்ந்த மரணங்கள், விபத்து குறித்து, விபத்து பிரிவுக்கு சென்று கேட்டால் விவரம் தர மறுக்கின்றனர். மேலே நாம் குறிப்பிட்டுள்ளவை பத்திரிகையில் வெளியான சில செய்திகள் மட்டும்தான்.

 கொள்ளாத வாயில் கொள்ளிக்கட்டை?

    சென்னை மாநகரில் பேருந்து நிலையத்துடன் கூடிய பணிமனை திருவான்மியூர், தி .நகர், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர், வடபழனி, மந்தைவெளி இவற்றுடன் தற்போது இணைந்துள்ள பெசன்ட் நகர், ஆதம்பாக்கம் என ஒன்பது பணிமனைகள் உள்ளன. இவற்றில் குறிப்பாக தி.நகர் பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் தேவையும் கூட்டமும் அதிகரித்த அளவுக்கு அரசின் கவனமும், அக்கறையும் இதன் மீது இல்லை. இதனால், தி.நகர் பேருந்து நிலையம் மரண பேருந்து நிலையமாக மாறியுள்ளது.

   இரண்டு ஏக்கர் பரப்பளவு உள்ள பேருந்து நிலையத்தில் மூன்று நேரக்காப்பாளர் அலுவலகம் உள்ளது. பயணச்சீட்டு அலுவலகம், பணிமனை அலுவலகம், பெண் ஊழியர்கள் ஓய்வறை, ஆண் ஊழியர்கள் ஓய்வறை, விரைவு போக்குவரத்து கழகத்தின் பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், இவை தவிர, மாதாந்திர பஸ் பாஸ் எடுப்பதற்கான பெரும் வரிசை என பெரும் பகுதி இடம் இதற்காக போய்விட்டது. மீதமுள்ளவற்றில் மக்கள் காத்து நிற்பதற்காக மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் போதுமானதாக இல்லை. அதனால், பேருந்து வருகிற இடத்திலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது.   

            அலுவலகங்களுக்கான நிலப்பரப்பு போக மீதமுள்ள இடத்தில் 35 முதல் 40 பேருந்துகள் மட்டும்தான் நிறுத்த முடியும். திநகர் பேருந்து நிலையத்தில் 84 பேருந்துகள் உள்ளன.  ஆனால், எத்தனை பேருந்துகள் வந்து, நின்று போகின்றன தெரியுமா? தெரிந்தால் அதிர்ச்சியாக இருக்கும். 400 பேருந்துகள் 2290 முறைகள் வந்து செல்கின்றன. அதாவது 12 மணி நேரம் என கணக்கிட்டால் கூட மணிக்கு 190 பேருந்துகள் நிமிடத்திற்கு 3 பேருந்துகள் உள்ளே வந்து செல்கின்றன. 
       விபத்து நடக்கிற காலை, மாலை நேரத்தில் இந்த வருகை அதிகம். 35 பேருந்துகள் நிற்கிற இடத்தில் 85 அல்லது 90 பேருந்துகள் வந்து செல்ல வசதி உள்ள இடத்தில் இத்தனை பேருந்துகளும், ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்லும் நிலை உள்ளது. இந்த நெருக்கடியைப் போக்க, நெரிசலைப் போக்க அரசும் அதிகாரிகளும் எவ்வித முயற்சிகளையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எத்தனை எத்தனை உயிர்கள் நசுங்கினாலும், எங்கள் பேருந்து சக்கரம் நிற்க கூடாது. வருமானம் குறையக்கூடாது என்பதில் கறாராக இருக்கின்றனர்.

டீசல் சிக்கன விபத்து ;

    தற்போது நடைபெற்ற விபத்திற்கு முழுக்க ழுழுக்க அரசு மற்றும் அதிகாரிகள்தான் மூலக்காரணம் ஆவார்கள். அடுத்தடுத்து நடைபெற்ற இரு விபத்ததுக்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் பயிற்சிப் பள்ளி மாணவர் ஓட்டுநர்கள் ஆவார்கள். அவர்கள் பயிற்சி முடித்து பணிக்கு செல்லும் முன்பாக டீசல் சிக்கன பயிற்சி என்ற  இலக்கை முடிப்பதற்காக  கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு லிட்டர் டீசலுக்கு 5.5 கி.மீ. ஓட்டி காட்ட வேண்டும். இதை முடிததால் தான் அவர்கள் முழு ஓட்டுநர்கள் என்று சான்றுகள் கொடுத்து பணிக்கு அனுப்புவார்கள். 

    இது மக்கள் உயிரோடு விளையாடும் ஒரு ஆபத்தான பயிற்சி. மரண விளையாட்டாகும். டீசல் சிக்கனம் என்றால் ஆக்சிலேட்டரை அடிக்கடி அழுத்தக்கூடாது. பிரேக் அழுத்தினால் ஆக்சிலேட்டரை அழுத்த வேண்டும். இதனால் பிரேக் அழுத்துவதை குறைத்துக் கொள்வார்கள். இதனால் விபத்து நேர்கிறது. வேலை என்ற வாழ்க்கைப் போராட்டம் ஓட்டுநருக்கு. மக்கள் உயிரைவிட அரசுக்கு  டீசல் முக்கியம். 

    கடந்த 2012 -ம் ஆண்டு தி.நகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விபத்தையொட்டி 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த பகவந்த் என்ற ஓட்டுநர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர்,பேருந்தின் பிரேக் பிடிக்கும் சக்தியை 35 முதல் 40 சதம் வரை இருக்கும் அளவில் வைக்கின்றனர். எந்த ஒரு வண்டிக்கும் பிரேக் பிடிக்கும் திறன் 70 சதம் இருந்தால்தான் பாதுகாப்பானது என்று கூறியிருக்கிறார். ஒரு சில லிட்டர் டீசல் சிக்கனத்துக்கு ஆசைப்பட்டு, பல உயிரைப் பறிக்கும் அரசு மற்றும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது? போக்குவரத்து ஊழியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்தால், கத்துக்குட்டி டிரைவர்களை வைத்து அப்பாவி உயிர்களை பலி வாங்கும் அரசுதானே இது?

     டீசல் சிக்கனத்திற்கு மற்றொரு சொந்த அனுபவம். 13.06.2015 வேலூரிலிருந்து கூட்டம் முடித்து இரவு 8.30 மணிக்கு ஏசி பேருந்தில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தன.  காவேரிபாக்கம் ஊருக்கு முன்னால் வந்தவுடன் பேருந்தின் பின் பகுதியில் இருந்த 7 பேர்கள் வந்து ஏசி வரவில்லை என நடத்துனரிடம் தெரிவித்தனர். அவர் ஓட்டுநரிடம் கூறினார். ஏதோ கையைவிட்டு துழாவிவிட்டு இப்ப ஏசி வரும் என்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தனர். இப்போது நடத்துனரே இங்கும் அங்கும் சிலவற்றை தொட்டுப் பார்த்தார். ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடும் என்ற சினிமா லாஜிக்  போல் இப்பபோய் உட்காருங்க ஏசி வரும் என்றார். மீண்டும் வரவில்லை. இதனால் சூடான பயணிகள் ஒரு கட்டத்தில் வண்டியையே நிறுத்தி விட்டனர்.

        அப்போது பயணிகளில் ஒருவர், ஏசியில் கோளாறு இல்ல சார். நிர்வாகத்தில கோளாறு சார் என்றார். அவரே தொடர்ந்தார்.. நீங்கள் வண்டியில் ஏறி உட்கார்ந்தபோது குளு குளு என்று இருந்திருக்குமே.. அப்ப மட்டும் மிஷின் ரிப்பேர் இல்லையா? டீசல் மிச்சம் பிடிக்க ஏசியை குறைக்கணும். அதற்கு ஏற்றவகையில் செட்டப் செய்வார்கள். அவ்ளோதான் சார்.. வண்டிய எடுக்க சொல்லுங்க.. சீக்கிரம் வீடு போய் சேர வேண்டும் என்றார். ஏசி பேருந்தில் டீசல் சிக்கனம, வேர்வையும் வெக்கையும் ஏற்படுத்தும். ஆனால், பிரேக் திறனை குறைத்தால் பல நூறு மக்களின் உயிரைக் குடிக்கும். அரசுக்கும் அதிகாரிகளுக்கும், வெக்கையில் வெந்தால் என்ன? சக்கரத்தில் நசுங்கி செத்தால் என்ன,? எங்களுக்கு தேவை டீசல் இல்லாமல் வண்டி ஓட வேண்டும.  நக்குற நாய்க்கு செக்கா இருந்தா என்ன? சிவலிங்கமா இருந்தா என்ன? நாக்குக்கு எண்ணெய் வேண்டும் அவ்வளவுதான்.

உள்ஓட்டுநர்கள் ஒழிப்பு?

     தி.நகரில் உள்ள பணிமனை சுமார் 90 வண்டிகளுக்கு டீசல் பிடிப்பதற்கும், உள்ளே வந்த வண்டிகளை ஒழுங்காக எடுத்துவிடுவதற்கும் 25 ஓட்டுநர்கள் இருந்தனர். சிக்கனம் என்ற பெயரால் நிர்வாகம் இந்த பதவிகளை ஒழித்து விட்டது. தற்போது உள்ளே வருகிற வண்டிகளை எடுத்து ஒழுங்குபடுத்திவிட காலையில் இரு ஓட்டுநர்களும் மாலையில் இரு ஓட்டுநர்களும் உள்ளனர். நிமிடத்திற்கு மூன்று பேருந்துகளை எங்கே எடுத்து விடுவது. அவர்களும் ஆளுங்கட்சியை அனுசரித்து ஓரம்போய் ஓய்வெடுக்க சென்றுவிடுகின்றனர். எனவே பேருந்தில் வருகிற ஓட்டுநரும் நடத்துனரும் நிற்க இடம் இல்லாத நிலையில் குறிப்பிட்ட முறையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில், வேகவேகமாக இயற்கை கடனை முடித்து பதட்டத்தில் வண்டியை எடுக்கும்போது மக்களின்.. பயணிகளின் நிலைமையை எணணிப் பாருங்கள்?

இடவசதியை ஏற்படுத்தாமை:

     40 பேருந்துகள் நிற்கிற இடத்தில் 400 பேருந்துகள் இயக்குவது, தி.நகரில் உள்ள 85 பேருந்துகள் மொத்தம் 680 முறை வந்து போகக்கூடிய இடத்தில் 2290 முறைகள் வந்து போகும் நிலை உருவான போதும் அதிகாரிகள் இடவசதி மாற்று ஏற்பாடுகள் பற்றி சிந்திக்காததுதான் தொடர் விபத்திற்கு காரணம் ஆகும். தி.நகரில் பெரிய பெரிய வணிக நிறுவனங்களுக்கெல்லாம் வானுயுர கட்டிடம் கட்டுவதற்கு இடம் கிடைக்கிறபோது பேருந்து நிலையத்திற்கு இடம் இல்லை என்பது மக்கள் உயிரை மதிக்காத அரசு என்பதற்கு எடுத்துக்காட்டு.

        தி.நகர் பேருந்து நிலையத்தின் காட்சிகள் அச்சமூட்டுவதாகவே இருக்கும், பேருந்து நிலையத்தின் உள்ளே மக்கள் கூட்டம் நிற்கும். உறுமிக் கொண்டு உள்ளே வரும் பேருந்தை கண்டு மக்கள் இங்கும் அங்கும் ஓடும்போது மறுபக்கத்தில் ஒரு பேருந்து வரும். மீண்டும் இந்தப்பக்கம் ஓடிவருவார்கள். மொத்தத்தில் அந்த நிமிடத்தில் அது எமவாகனமாக தோற்றமளிக்கும். அங்கிருக்கும் அதிகாரிகள் சவக்கிடங்கு ஏஜன்ட்டுகளாக காட்சி அளிப்பார்கள்.

தொழில்முறை அணுகுதல் விஞ்ஞான பார்வை:

     விபத்துக்களை தடுப்பதற்கான ஒரு தொழில்முறையிலான அணுகுமுறை இல்லை என்று அரசு போக்குவரத்து துறை தலைவராக இருந்த எஸ்.ஏ.விஜயகுமார் தெரிவிக்கிறார். விபத்து ஓட்டுநரின் குற்றமா இல்லையா என்று பார்ப்பதைவிட இதை தவிர்க்க முடியுமா முடியாதா என்று விஞ்ஞான ரீதியில் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்.

    சென்னை ஐஐடி போக்குவரத்து பொறியியல் துறை தலைவராக இருந்த திரு.தமிழரசன், ஓட்டுநர்கள் பாதுகாப்பாக ஓட்டினால் சிறிது வருமானம் குறையும். எனவே இதற்கான அளவுகோல் மாற வேண்டும். ஓட்டுநர் திறன் என்பது சுத்தமான முறையில் வருமானத்துடன் இணைத்து பார்க்க கூடாது. பொதுப்போக்குவரத்து சமூக கடமை என்று கருதி இயக்காவிடில் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று கூறுகின்றார்.

      காளிதாஸ், கணபதி, அமுதா போன்றவர்களின் பட்டியலில் இன்னும் பலரும் சேராமல் இருக்க வேண்டுமா? தி.நகர் பேருந்து நிலையம் மரண நிலையமாக மாறிக் கொண்டிருப்பதை தடுக்க வேண்டுமா? தமிழக அரசும் போக்குவரத்து துறையும் மக்கள் உயிர்பறித்து பணம் சம்பாதிக்கும் தொழிலை கைவிட்டு மக்கள் நலன் கருதி போக்குவரத்து இயக்கப்பட வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை நீக்கப்பட வேண்டும். பேருந்துகளை ஒழுங்காக பராமரிப்பது, உதிரி பாகங்கள் வழங்குவது நடைபெற வேண்டும். தி.நகர் பேருந்து நிலைய  தொடர் விபத்திற்கு டீசல் சிக்கனம், உள்ஓட்டுநர் ஒழிப்பு, இடப்பற்றாக்குறையும் இதற்கான அதிகாரிகளுமே பொறுப்பு.

      யாரோ 4 பேர் செத்தால் நமக்கென்ன என்று இருக்க முடியாது. தினமும் பேருந்தில் பயணிக்கும் பல லட்சக்காணக்கான பயணிகளில் நாமும் அடக்கம். நகர வாழ்வில் நாமும் இந்த மரண நிலையங்களை சந்தித்துதான் ஆகவேண்டும். அந்த மரண பட்டியலில் (ஹிட் லிஸ்ட்) நமது பெயர்களும் இடம் பெற்றிருக்கிறது. நமக்கு எதுக்கு பொல்லாப்பு என்று ஒதுங்கினால், இந்த மரண பட்டியலில் இருந்து நாமும் நமது குழந்தைகளும் தப்பிக்க முடியாது.

      விலையில்லா மரணத்துக்கு முடிவு கட்ட வேண்டுமானால், நமது உயிரை துச்சமாக மதிக்கும் அரசு மற்றும் அதிகாரிகளின் ஆணவத்தை அடக்க வேண்டும். அதற்கான அணிவரிசையில் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும்.
ஏ.பாக்கியம்
மாநிலக்குழு உறுப்பினர்.
தீக்கதிர் 03.07.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...