Pages

செவ்வாய், மே 31, 2011

7. நாங்கள் வலிமையானவர்கள்.


       எந்தவொரு சமூக அரசியல் மாற்றங்களுக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கும் இணைஞர்களின் ஆயுதம் தாங்கிய எழுச்சியும், தனிநபர் சாகசங்களும் முன்தேவையாக அமைந்திருக்கிறது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.சமுதாயத்தில் புதிய பொருளாதார அரசியல் வளர்ச்சிப்போக்குகள் உருவாகிறபோது புதியவிதமான பிரச்சனைகள் தலைதூக்குகின்றன.அவற்றிற்கான மாற்று மார்க்கம் உடனடியாக தெரியாதபோது  இதுபோன்ற ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் மற்றும் சாகசங்கள் மூலமாக தீர்வுக்கான தேடல் நடைபெறுகின்றது. இதற்கு ருஷ்யநாட்டு இளைஞர் இயக்க செயல்பாடுகள்  சிறந்த உதாரணமாகும். இக்காலத்தில் (1815-1890) செயல்பட்ட இளைஞர் அமைப்புகளில் இளம் ருஷ்யர்கள் பங்கேற்ற  அமைப்புகள் பலபோக்குகள் அதனுள் இருந்தாலும்  சிறந்த, ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாகவும் முக்கியத்துவம் பெற்ற அமைப்பாகவும் திகழ்ந்தது.
          பத்தொன்பதாம்  நுற்றாண்டின் மிகப்பெரிய நாடாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் ருஷ்யா இருந்தது.அதே நேரத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவும் சட்டம், சட்டமன்றம் எதுவுமற்ற சார் மன்னனிடமே அனைத்து அதிகாரங்களையும் கொண்ட நாடாக ருஷ்யா திகழ்ந்தது.6-ல் 5பங்கு மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டிருன்தனர்.

   உற்பத்தி திறன்மிகவும் குறைவாக உள்ள விவசாயத்தில் அதிகம் விவசாயிகள் ஈடுபட்டிருந்ததாக லெனின் பிற்காலத்தில் ஆய்வு செய்து எழுதினார்.  1833-ல் 43 சதவீத மக்கள் பண்ணை அடிமைகளாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 1859-ல் 66 சதவீதமாக உயர்ந்தது. 1861-ம் ஆண்டு பண்ணைஅடிமைத்தனம் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு ருஷ்யாவில் இயந்திர ஆலைமுதலாளித்துவம் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்தது.

               1865-ம் ஆண்டுக்கும் 1890-ம் ஆண்டுக்கம் இடையில் உள்ள 25 ஆண்டுகளில் பெரிய ஆலைகளிலும் இரயிவேக்களிலும் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 7.7 லட்சத்திலிருந்து 14.3லட்சமாக உயர்ந்தது.அடுததசில வருடங்களில் இது 27 லட்சமாக உயர்ந்தது.ஆலைமுதலாளித்துவத்தின் விளைவாக 1870-ம் ஆண்டுகளுக்கு பிறகு தொழிற்சங்கங்கள் தோன்ற ஆரம்பித்தன.1875-ல் ஒடேஸ்ஸா நகரத்திலும் 1878-ல்பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும் தொழிற்சங்கம் உருவாகியது.1881 முதல் 1886-வரை 5 ஆண்டுகளில் 48-க்கும் மேற்பட்ட வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன.

                        இதே காலத்தில் சார் அரசு அதன தேவைகளை முன்னிறுத்தி அதிகார வர்க்க எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியது.          மறுபுறத்தில் புதிய சூழலுக்கான நிர்வாகிகளின் தேவைகளுக்காக உயர்கல்வி    விவாக்கம் வேகமாக நடந்தது. ருஷ்யாவின் 5 பல்கலை கழகங்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்தது.இம்மாணவர்களில் பெரும்பகுதி நடுத்தர, மற்றும் கீழ்மட்ட மக்கள் பிரிவிலிருந்து வந்தனர். பாரம்பரிய உயர்வர்க்கமும் அதன் தலைமையும் இக்காலத்தில் குறைய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
                        இந்த பின்னனியில்தான் இளைஞர் கலகங்களும் எழுச்சிகளும், அப்புகளும் உருவாகின.1825-ம் ஆண்டு சார் மன்னன் முதலாம் நிக்கோலசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து ருஷ்ய ராணுவத்தில் இருந்த இளம் அதிகாரிகள் குழு பெரும் கலகத்தில் ஈடுபட்டது.அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து இளம் வீரர்கள் கலகத்தில் இறங்கியது மன்னனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.போராட்டம் கடுமையாக அடக்கப்பட்டு ஐந்து இளம் இராணுவ அதிகாரிகளின் தலை கொய்யப்பட்டது.இவர்களை டிசம்பரிஸ்டுகள் என்று அழைப்பார்கள்.

                        டிசம்படிரிஸ்டுகளின் தாக்கம் அடுத்தடுத்த ருஷ்ய சமுகத்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக இருந்தது.இன்றளவும் டிசம்பரிஸ்டுகள் பற்றி நினைவுகூறல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 1830-1860-ம் ஆண்டுகளில் ருஷ்ய சமூகத்தில் தத்துவார்த்த கருத்து மோதல்கள் தீவிரமடைந்தன. 1848-ல் வெளிவந்த கம்யூனிஸ்ட் அறிக்கை இந்த மோதலுக்கு புதிய வழித்தடத்தை திறந்து விட்டது. 

                 பல எழுத்தாளர்கள் சோசலிசத்தை பற்றி சிந்திக்கவும் பேசவும் ஆரம்பித்தனர். பண்ணை அடிமைகள் விடுதலைசெய்வது, அரசின் அதிகாரத்தை குறைப்பது, பத்திரிக்கை சுதந்திரத்தை அனுமதிப்பது போன்ற கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்தனர். இக்கருத்துக்களின் ஊடாக சமூக அவலங்களை எதிர்த்து இளைஞர்களின் அணிதிரட்சி நடைபெற்றது.

திங்கள், மே 02, 2011

நீலக்குறிப்பேடு

  
                                                                 ஏ.பாக்கியம்
              (பாரதி புத்தகாலயம் வெளியிட உள்ள புத்தகத்தை பற்றிய அறிமுகம்)                                      

  நீலக்குறிப்பேடு என்ற இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் புரட்சியாளர் லெனினுடன் வாழ்ந்த உணர்வைப்பெறமுடியும். வாசிக்கும்வரை மட்டுமல்ல வாசித்து முடித்த பிறகும் அந்த உணர்வுகளும், நினைவுகளும் நம்மை விட்டு அகன்றிட மறுக்கும். அத்தகைய சக்தியான படைப்பாக இந்த 
   
    நீலக்குறிப்பேடு என்ற புத்தகம் திகழ்கிறது. இது குறுநாவலா? பயணக் கதையா? குடுப்பச் சித்திரமா? புரட்சிக்குழுக்களின் செயல்பாடுகளா? என்று பிரித்துச்சொல்ல முடியாத அளவிற்கு அனைத்து தன்மைகளையும் உள்ளடக்கிய படைப்பாக இந்த நூல் உள்ளது. 
    
    ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலமாக பல விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.  சில புத்தகங்கள் உணர்வுகளை மட்டும் ஏற்படுத்தும். ஆனால் இந்த நீலக்குறிப்பேடு  இந்த இரண்டுக்குமான இடைவெளியை இல்லாமல் செய்து விட்டது. 

  ருஷ்யாவை 1917-ம் ஆண்டு புரட்சிகர சூழல் என்னும் சூறைக்காற்று சுற்றி  வளைத்திருந்தது. கொடுங்கோல்  ஆட்சி நடத்திய சார் மன்னன் தூக்கியெறியப்பட்டான். முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதியான கெரன்ஸ்கி தலைமையில் ஆட்சிநடைபெற்ற காலம். 

 கெரன்ஸ்கி அரசு தொழிலாளர்களையும், போல்ஷ்விக்குகளையும் கடுமையாக அடக்கியது. லெனினை ஜெர்மன் நாட்டு உளவாளி என்றும், மொடாக்குடியன் என்றும், பெண் பித்தன் என்றும் அவதூறுகளை அள்ளிவீசிய காலம். லெனினை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு சன்மானம் என்று அறிவித்து மோப்பநாய்களையும் வேட்டைநாய்களையும் கொண்டு காடுகழனியெல்லாம் தேடியது. 

  இத்தகைய சூழ்நிலையில்தான் லெனின் பெட்ரோகிராட் நகரத்தை அடுத்துள்ள குக்கிராமத்தில் தலைமறைவு வாழ்க்கைக்கு செல்கின்றார். அக்கிராமத்தில் எமல்யனோவ் என்பவரின் நிலத்தில் புல் அறுக்கும் பின்லாந்து நாட்டு வேலைக்காரனாக வேடமிட்டு  நடத்தும் தலைறைவு வாழ்வை விளக்குவதுதான் இப்புத்தகத்தின் நிகழ்வுகளாகும். 

 லெனின் வாழ்வில் இது சிறுபகுதியாக இருந்தாலும், கொந்தளிப்பு நிறைந்த காலம் என்பதால் வாசகனின் உள்ளத்தில் பெருவெள்ளத்தையும். உணர்ச்சி பிரளயத்தையும் ஏற்படுத்துகின்றது. லெனின் அக்கிராமத்திற்கு ரகசியமாக பயணம் செய்வதே திகிலூட்டுவதாக உள்ளது. 

 லெனினும், ஜுனோவிவ் இருவரும 
படகில் கடந்து செல்லும் 
அந்த பரந்த ஏரியின் நிசப்தமும், 
அதன் பூவிரியும் கரைகளும், 
கால்கள் புதையும் சகதியும், 
மிதமான தென்றலும, 
அசைவற்ற நீரின் நிசப்தமும், 
ஒளியை விழுங்கும் இருளும்  
இரவை போர்த்திக்கொள்ளும்  அமைதியும் 
வாசகனின் லேசான இதயத்தை  கலைத்து படபடப்பை கூட்டுகிறது.

 எப்படி தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டும்? எப்படி மாறுவேடத்தில் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு  பல செய்முறை விளக்கங்களை லெனின் மூலமாக இப்புத்தகம் வழங்குகிறது. பின்லாந்துகாரன் வேடத்திலும் புல்அறுக்கும் கருவிகளுடன் லெனின் எப்போதும் காட்சி தருகின்றார். சூழ்நிலைக்கு ஏற்றவாறு லெனின் துரிதமாக தன்னை தகவமைத்துக்கொள்கிறார். 

 ஈரப்பதம் நிறைந்த சிறிய குடிசை, மழைபெய்தால் ஒழுகும் நிலை, சிறிய வைக்கோல் படுக்கை கொசுக்கடிகளின் வலிகளுக்கும், அதன் ரீங்கார ஒலிகளுக்கும் இடையில் புதிய இடம் என்ற சிறிய வேறுபாடின்றி லெனின் தனது பணிகளில் மூழ்கினார். 

 எமல்யனோவின் குடும்பச் செயல்பாட்டை விவரிக்கின்ற விதம் வாசகனை அக்குடும்பத்தின் அங்கத்தினனாக மாற்றி விடுகின்றது. புரட்சியின் தலைமையகம் தற்காலிகமாக தனது சிறிய குடிசைக்குள் செயல்படுவதை எமல்யனோவும் அவரது மனைவியும் அறிந்தே செயல்பட்டனர். 

 நான்கு மகன்களும் அதுவரை இல்லாத மாறுபட்ட பணிகளில் ஆர்வமாக ஈடுபட்டனர். பாதுகாப்பு அரணாக, தகவல் தொடர்பு நிறுவனமாக ஒற்றர்படையாக, உணவு ஏற்பாடுகளை செய்யும் பிரிவாக துல்லியமாக வேலைப்பிரிவினை செய்து குடும்பமே செயல்பட்டது.

 ஆயுதங்களை எப்போது பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும்? அரசியல்வாதிக்கும் இராணுவ வீரனுக்கும் என்ன வேறுபாடுகள்? தவறான பாதைகளின் விளைவுகள் என்ன? போன்ற பல தந்திரோபாயங்களை விளக்கிட பலபக்கங்கள் தேவைப்படும். ஆனால் இப்புத்தகத்தில் நிகழ்வுகளின் காலத்தையும், களத்தையும் வாசகனின் கண்முன் காட்சிப்படுத்தி நிறுத்துவதால் சில வரிகளே மேற்கண்ட பெரும் கேள்விகளுக்கு விடைஅளித்து விடுகின்றது.

 தலைமறைவு வாழ்க்கையும் துண்டிக்கப்பட்ட இடமும் புரட்சிகரமான பணிகளை செய்வதற்கு தடையாக இருக்க முடியாது என்பதற்கு இப்புத்தகம் லெனின் மூலமாக பல தடயங்களை விட்டுச்சென்றுள்ளது. தனித்த இடத்தில் பரந்த புல்வெளியோடும், நிலவோடும் மட்டுமே உறவாடும  நிலை இருந்தாலும, அனைத்து பத்திரிக்கைகளையும் ரகசியமாக வரவழைத்து அவற்றை லெனினும் மற்றவர்களும் வாசிப்பதன் மூலமாக அன்றைய ருஷ்யாவின் கொதிப்பான நிலையை வாசகனுக்கு விவரிக்கின்றனர். 

 பத்திரிக்கைகளில் வருகின்ற செய்திகளுக்கு தினசரி லெனின் மறுப்புகளை எழுதிவந்தார். அத்துடன் முக்கிய அரசியல் நிலைபாடுகள் பற்றியும் மாறிய சூழல்கள் பற்றியும் லெனின் பிரசுரங்களை எழுதி ரகசியமாக வெளியிட்டார்.
லெனின் தொழிலாளர்களுடன் கலந்துரையாடித்தான் துண்டுபிரசுரங்கள் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். வேட்டைக்காரனுக்கு பயந்து பதுங்கி இருக்கும் மிருகங்கள் போல் தலைமறைவு வாழ்க்கையில் இது சாத்தியமா? லெனின் எப்படி சாத்தியப்படுத்தினார் என்பது இப்புத்தகத்தில்  விளக்கப்படுகிறது. 

  முக்கிய ஊழியர்களை வரவழைத்து மற்றவர்களுடன் உரையாடவிட்டு தான் மாறுவேடத்திலோ,  ஒளிந்திருந்தோ அதைக்கேட்டு நிலைமைகளை புரிந்து கொள்வார்.அதன் பிறகு அதற்கான பதிலையோ விளக்கத்தையோ எழுதுவார்.
லெனினுக்கும் ஜுனோவிவிற்கும் அந்தக் சின்னஞ்சிறிய குடிசைக்குள் நடைபெறும் விவாதங்கள் ருஷ்யாவின் அரசியல் பொருளாதார நிலைமைகளை நமக்கு விளக்குவதுடன் கட்சிக்குள் இருந்த சகலவிதபோக்குகளையும் அறிந்துகொள்ளக்  கூடியதாக உள்ளது.

  உரிய தயாரிப்புகள் இல்லாமல்  எந்த தாக்குதலும் பயன் தராது என்று ஜுனோவிவ் கூறுகின்றார். ருஷ்ய மார்க்சிஸ்ட்களின் நீண்டகால தாயாரிப்புகளை லெனின் எடுத்துரைக்கின்றார். தத்துவ விளக்கங்கள் அரசியலுக்கு உதவாது என்று ஜுனோவிவ் மறுத்துரைக்கின்றார். பிளாட்டோவின் தத்துவாதிகள் அரசாள வேண்டும் அல்லது அரசாள்வோர் தத்துவம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சொற்றொடரை முன்வைத்து லெனின் தத்துவத்தையும் அரசியலையும் இணைக்கின்றார். 

  இவை இரண்டிற்கும் அமைப்பிற்கும் உள்ள அவசியத்தையும் விளக்குகின்றார். பயனற்ற மோதல்கள் தேவையற்ற இழப்புகளை ஏற்படுத்தும் என்று ஜுனோவிவ் அச்சத்தை வெளிப்படுத்துகிறார். இழப்புகள் ஏற்படும் என்பதால் வாய்ப்புகளை பயன்படுத்த தவறவிடக்கூடாது  என்றும் இழப்புகள் நம்மைபோன்ற தனிநபர்களுக்குத்தான் தொழிலாளி வர்க்கத்திற்கு அல்ல என்று லெனின் தனது கருத்துக்களை முன்வைத்து ஏற்கச்செய்கிறார்.

  இந்த விவாதங்களுக்கு இடையே போல்ஷ்விக்குகள் ஆட்சியை பிடித்தால் தொடர்ந்து நடத்தமுடியுமா? வேண்டுகோளுக்கு பதிலாக உத்திரவிடவேண்டும். போராட்டத்திற்கு பதிலாக முடிவெடுத்து அமுலாக்கிட வேண்டும் என்ற கேள்விகள் எழுகின்றது. இந்தக்காலத்தில் லெனின் நேர்த்தியாக குறிப்பெடுத்து எழுதிமுடிக்காமல வைத்திருந்த  அந்த நீலநிற குறிப்பேட்டை அவசரமாக தேடுகின்றார். அதை எழுதிமுடிக்க வேண்டிய தருணம்  என்று நினைக்கின்றார். 

  அரசைப்பற்றிய கருத்துக்களையும் புரட்சியை பற்றிய பார்வையை  வரலாற்று ரீதியான அணுகுமுறைகளையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய தத்துவத்தை மேலும் வளப்படுத்துவதற்கான குறிப்புகளையும் முன்வைத்து புத்தகமாக எழுத ஆரம்பிக்கின்றார். நீலக்குறிப்பேட்டை அவர் தொடர்ந்து தேடுவதும் அதையே இந்த நூலுக்கு தலைப்பாக மாற்றி இருப்பதும் அந்த குறிப்பேட்டின்  முக்கியத்துவத்தையும் அதில் பொதிந்துள்ள தத்துவார்த்த அரசியலையும்  நமக்கு விளக்குகின்றது.

  புரட்சியாளர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு  உரியகவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு லெனின் கடைபிடித்த வழிமுறைகள் புதிய பாடமாக உள்ளது. நடைபயிற்சி, மலைஏறுதல், நீச்சல், குதிரை ஏற்றம், மீன் பிடித்தல் என்று பலமுறைகளை பின்பற்றி உள்ளார்.

 எமல்யனோவின் மவியுடன் உரையாடும்போதும், அவரின் பணிகளை பார்க்கும்போதும் பெண்விடுதலை பற்றி விவாதிக்கின்றார். கடுமையான பணிச்சுமைகளை புதிய கண்டுபிடிப்புகள் மூலமாக குறைக்க முடியும் என்ற கருத்துக்களை முன்வைக்கின்றார். புரட்சிக்கு பிறகு அவரின் பணிகளில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையை உருவாக்குகின்றார்.

 எமல்யனோவின் குடும்பத்தையும் அவரின் குழந்தைகளையும் பார்த்து  லெனின் பெருமிதம்   அடைகின்றார். தனக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லையே என்று ஏக்கம் கொள்கின்றார். குடும்பத்தின் மீதும் அந்த குழந்தைகள் மீதும் லெனின் காட்டும்  அலாதியான உணர்வுகளும்  வாசகனுக்கு லெனினை பற்றிய அனுதாப உணர்வு ஏற்படுகின்றது. அதே நேரத்தில் புரட்சியாளர்கள் குடும்பத்தை  நேசிக்கத் தெரியாதவர்கள் என்ற பொய்யுரைகளுக்கு பதிலாகவும் அமைகின்றது.

  குடும்பத்தை மட்டுமல்ல இயற்கையின் அழகை ரசிப்பதற்கும் தவறவில்லை. அகன்ற ஏரியையும், பரந்த பசுமையான புல்வெளியையும் அடர்ந்த மரங்களையும் இவற்றின் மீது கவிழ்ந்திருக்கும் மேகங்களையும் ரசிக்கும் லெனின் இவற்றை எல்லாம் வர்ணிக்க கார்க்கி என்ற கவிஞன் தன்னுடன் இல்லையே என்று ஏங்குகின்றார். கவிஞர்களுக்கு தனிமை தேவைதான் அதேநேரத்தில் மக்களிடம் இருந்து தனிமைபட்டுவிடக்கூடாது என்கின்றார். சிற்பிக்கு எந்த அளவு கலைகள் முக்கியமோ அந்த அளவு மக்கள் நமக்கு முக்கியம் என்று கருத்துக்களை விரித்துச்செல்கின்றார்.

   நீலக்குறிப்பேடு என்ற இந்தப்புத்தகம் புரட்சிகரமா அரசியல் நடவடிக்கைகளை மையப்படுத்தி இருந்தாலும் எந்தக்கருத்தும் வலிந்து திணிக்கப்பட்டதாக உணரமுடியவில்லை.  கதாபாத்திரங்களின்    வாழ்வினூடாக எழுத்துக்கள் செல்கிறதே தவிர எழுத்துக்களினூடாக கதாபாத்திரங்கள் செல்வது பின்னுக்குச் சென்றுள்ளது.  வாசிப்பு என்ற இன்பத்தினூடே எண்ணற்ற உணர்வுகளை உருவாக்கி உலாவரச் செய்கின்றது இந்த நீலக்குறிப்பேடு. 
                                                         -----------------    

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...