Pages

செவ்வாய், ஜூலை 02, 2024

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9




பாக்கியம்

இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது. சீனாவின் வேகமான வளர்ச்சி அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் உலக மக்களின் முன்னேற்றத்திற்கு சீன வளர்ச்சி தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. பொருளாதாரத் துறை, அறிவியல் துறை, விண்வெளித் துறை, தொழில்நுட்பத்துறை என அனைத்து துறைகளிலும் சீனாவின் முன்னேற்றம் வெகு வேகமாக ஏற்படுகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கது விண்வெளி ஆய்வில் ஏற்பட்டிருக்க கூடிய முன்னேற்றம். இதுகுறித்து, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி தெரிவித்த கருத்துக்களில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். 


மூச்சடைக்கும் முன்னேற்றம்: 

அமெரிக்க விண்வெளி  துறையின் கமாண்டர் ஜெனரல் ஸ்டீபன்  வைட்டிங் (Stephen Whiting)) சீனாவின் விண்வெளி திட்டம் "மூச்சடைக்கும் வேகத்தில் முன்னேறுகிறது" என்று குறிப்பிட்டுள்ளா். அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த ஆண்டு சந்திரனின் மிகவும் தொலைதூரத்தில் உள்ள இடத்தில் சீனா ஒரு விண்கலத்தை இறக்கி உள்ளது. இதுவரை அமெரிக்காவோ மற்றவர்களோ செய்யாத செயலை சீனா சாதித்து உள்ளது. 2024 ஆம் ஆண்டு 100 சுற்றுப்பாதைகளுக்கான விண்கலங்களை சீனா செலுத்த உள்ளது. 2023 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளும் சேர்ந்து அனுப்பிய விண்கலங்களோடு ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை சரிபாதி ஆகும். இதிலிருந்தே சீனாவின் விண்வெளி முன்னேற்றத்தை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். விண்வெளித்துறையில் சீனாவின் இந்த அசுர வளர்ச்சிக்கு அமெரிக்காவின் முட்டாள்தனமான ஒரு நடவடிக்கைதான் காரணம் என்றும் அவர் தன் கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். சீனாவின் விண்வெளி திட்ட வளர்ச்சி அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை பின்னுக்கு தள்ளி வருகிறது என்ற உண்மையை உலகம் அறிந்து கொண்டு வருகிறது. 



விண்வெளி திட்டத்தில் அமெரிக்கா பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது. அதை வைத்துக்கொண்டு இதர நாடுகளை மேலாதிக்கம் செய்தது என்பதையும் மறக்க முடியாது. இந்த வளர்ச்சிக்கு ஒரு சீன விஞ்ஞானியின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது என்பதை மேலே குறிப்பிட்ட அமெரிக்க இராணுவ அதிகாரி தெரிவிக்கிறார். அந்த விஞ்ஞானியின் பெயர் கியான் சூசென்(Qian Xuesen) என்பதாகும். 1911ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் பிறந்த அவர், 1935 ஆம் ஆண்டு அவர் தனது இளங்கலை இயந்திர பொறியியல் பட்டத்தை அங்கு முடித்த பிறகு அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு அவர் எம்ஐடி-ல் (Massachusetts institute of technology) வானூர்தி பொறியியல (Aeronautical engineering) முதுகலை பட்டத்தை பெற்றார். பின்னர் கால்டெக்கில் (CALTECH) காற்றியக்கவியல் (aerodynamics)மற்றும் கணிதத்தில் முனைவர் பட்டத்தை பெற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து அங்கு இணை பேராசிரியராக மாறினார். 

அவர் நாசாவின் புகழ் பெற்ற ஜே பி எல் என்று அழைக்க கூடிய ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வகத்தை(Jet propulsion Laboratory) வேறு சிலருடன் இணைந்து உருவாக்கினார். இதன் மூலம் தான் முதல் அமெரிக்க விண்கலம் எக்ஸ்ப்ளோரர்-1 ஜுபிடர்-c ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவரால் உருவாக்கப்பட்ட ஜேபிஎல் நாசாவின் மிகச்சிறந்த  விண்கலங்களை உருவாக்கி அனுப்பி வருகிறது. இரண்டாம் உலக யுத்தகாலத்தில் கியான் சூசன் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையில் ஆலோசனை நிபுணராக பணியாற்றினார். பாதுகாப்புத் துறையின் கர்னல் பதவிக்கு சமமான முறையில் இருந்தது. போரின் போது  நேச நாடுகளால் பயன்படுத்தப்பட்ட பலவிதமான ஏவுகணைகளை கியான் உருவாக்கி வெற்றிக்கு உதவினார். இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மன் தோல்வியடைந்த பிறகு ஜெர்மன் விஞ்ஞானிகளை விசாரிக்கவும் அவர்களை அமெரிக்க ஏவுகணை திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டது. அந்தப் பணியில் கியான் சூசன் ஈடுபடுத்தப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நிரந்தர குடியிருப்பதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. 

 

சிவப்பு பயம் (Red Scare):

இந்தப் பின்னணியில் 1949 ஆம் ஆண்டு மாசேதுங் தலைமையில் சீனாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. ரஷ்ய புரட்சிக்கு பிறகு ஏற்பட்டது போல் மீண்டும் சிவப்பு பயம்(RED SCARE) அமெரிக்காவிற்கு ஏற்பட்டு விட்டது. அதன் தாக்கம் அமெரிக்காவில் வரக்கூடாது என்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது. ஒரு வருடம் கழித்து அமெரிக்கா, கியான் சூசென்னை கம்யூனிச அனுதாபி என்றும் அவர் உளவு பார்த்தார் என்றும் குற்றம்சாட்டியது. அவர் 1938-ல் கலிபோர்னியாவில் பசடேனா கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார் என்றும், அமெரிக்காவிலிருந்து கால் டெக் கல்வியாளர்களுடன் வெளிப்படையாக இணைந்து செயல்பட்டார் என்றும் குற்றம்சாட்டியது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர், சீனா மற்றும் ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாகவும், அமெரிக்கா குற்றச்சாட்டு பட்டியல் வாசித்தது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே கியான் சூசன் மறுத்தார். ஆனாலும் கியான்  மற்றும் அவரது குடும்பத்தாரும் சந்தேகத்தின் அடிப்படையில் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சூசன் ராக்கெட் மற்றும் ஏவுகணை பணிகளில் ஈடுபடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டு அவரும் அவரது குடும்பத்தாரும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.  

மரணம் வரை மன்னிக்கவில்லை 

20 ஆண்டுகாலம் அவர் வாழ்ந்த மற்றும் பணிபுரிந்த ஒரே இடம் அமெரிக்கா. அந்த நாட்டின் விண்வெளி துறை வளர்ச்சிக்கு தான் ஆற்றிய பங்கை கூட கணக்கில் எடுக்காமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் சந்தேகத்தின் அடிப்படையில் கொடூரமான முறையில் வெளியேற்றப்பட்டதை கியான் சூசனாலும் அவரது குடும்பத்தாரும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடும் கோபத்திற்கு உள்ளானார்கள். அமெரிக்காவை விட்டு வந்த பிறகு தன் மரணம் வரை அவர் அமெரிக்காவை மன்னிக்கவே இல்லை. 2009 ஆம் ஆண்டு தனது 97வது வயதில் அவர் மரணம் அடைந்தார். 1955 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் பல்வேறு விதமான அழைப்புகளையும் நிராகரித்தார். அது மட்டுமல்ல… மேற்கத்திய பத்திரிகையாளர்கள் பலமுறை அவருடன் நேர்காணல் நடத்த வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளைகூட அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

சீனாவிற்குச் சென்ற பிறகு சீனாவின் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டார். 1970ஆம் ஆண்டு சீனாவால் ஏவப்பட்ட முதல் விண்கலத்திற்கு மிக முக்கிய பங்காற்றினார். ஏவுகணை தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றினார். சீனாவின் ராக்கெட்டின் தந்தை என்றும் தேசிய வீரராகவும் போற்றப்பட்டார்.

அமெரிக்க கடற்படையின் 51வது செயலாளர் அமெரிக்க ராக்கெட் மற்றும் ஏவுகணை உந்து உற்பத்தி நிறுவனமான ஏரோஜெட்டின் தலைவருமான டான் கிம்பால் (Dan Kimball) கியான் சூசனை அமெரிக்காவுக்கு வரவழைக்க, அங்கேயே தங்க  வைப்பதற்கான பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை. இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்தபோது,  ‘‘இந்த நாடு (அமெரிக்கா) செய்த முட்டாள்தனமான செயல் அது. அவருக்கு என் அளவுக்குகூட  கம்யூனிச சிந்தனை இருந்தது இல்லை. நாங்கள் அவரை கட்டாயப்படுத்தி ஒரு எல்லைக்கு கொண்டு சென்றுவிட்டோம். அதனால்தான் அவர் எங்களுக்கு எதிரானவராக மாறிவிட்டார்’’ என்றார். 

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் சீனாவில் ஏற்பட்ட புரட்சி அமெரிக்காவை கதிகலங்க வைத்து விட்டது. 

முதல் சிவப்பு பயம் 1917-1920 ஆண்டுகளில் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. சோவியத் யூனியன் போல் இங்கு ஒரு புரட்சி ஏற்படும் என்று அஞ்சினார்கள். 1919 ஆம் ஆண்டு அதாவது சோவியத் புரட்சிக்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவில் 3600 க்கு மேற்பட்ட வேலை நிறுத்தங்கள் நடைபெற்றது. இவையெல்லாம் அமெரிக்காவின் சிவப்பு பயத்தை அதிகரித்தது. எனவே கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவில் இருப்பவர்களின் வீடுகளை கைப்பற்றி விடுவார்கள், தேவாலயங்களை இடித்து விடுவார்கள், அமெரிக்க சமூகத்தை மாற்றி அமைத்து விடுவார்கள் என்று பிரச்சாரங்களை கட்டவிழ்த்து, கம்யூனிஸ்டுகளையும், முற்போக்காளர்களையும், ஜனநாயகவாதி களையும் நிறவெறிக்கு எதிராக போராடக் கூடியவர்களையும் வேட்டையாடியது.  

இரண்டாவது சிவப்பு பயம் 1949 சீன புரட்சிக்கு பிறகு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. 1957 வரை இதை தீவிரமாக அமலாக்கினார்கள். அமெரிக்க செனட்டர் ஜோசப் ஆர் மெக்கார்த்தி என்பவர் கம்யூனிஸ்ட்டுகளை அழித்து ஒழிப்பதற்கான திட்டங்களை உருவாக்கினார். இதற்கு மெக்கார்த்திசம் என்று பெயர். இந்த சிவப்பு பயத்தால் தான் சீன விஞ்ஞானி கியான் சூசன் வேட்டையாடப்பட்டார். 


மனித குலத்திற்கான சீன விண்வெளி சாதனைகள்: 

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப் பட்டிருந்த ஸ்டீபன் வைட்டிங் தெரிவித்த விண்கலத்தின் பெயர் Chang'e-6 ஆகும். இது சந்திரனின் வெகு தொலைவில் உள்ள தெற்கு பகுதியில் இறக்கப்பட்டது. இந்த விண்கலம் மூலமாக 1935.3 கிராம் எடையுள்ள மண் மற்றும் பாறைகள் கொண்ட கனிமங்களை சீன விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். இதற்கு முன்பு சீனா Chang'e- 5 விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் மூலம் 204.3 கிராம் எடையுள்ள பொருட்களை பெற்றது. அந்தப் பொருட்கள் சந்திரனின் அருகில் இருந்த தூசிகளாகும். அவற்றைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். தற்போது கொண்டு வந்துள்ள சந்திரனின் மாதிரிகள் இன்னும் தனித்துவமான அறிவியல் முக்கியத்துவத்தை உடையது. சந்திரனின் பரிணாமத்தையும் சந்திரனைப் பற்றிய நமது புரிதலையும் மேம்படுத்துவதற்கான அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. சந்திரனில் உள்ள வளங்களை ஆய்வு பண்ணுவதற்கு இந்த கனிம வருகை மிக முக்கிய பங்காற்றும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

2030 ஆம் ஆண்டுக்குள் சந்திரனின் தென்துருவத்தில் ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க வேண்டும் என்று 2019 ஆம் ஆண்டு சீனா திட்டமிட்டது. மேலும் சந்திரனை முழு ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்காக லாங் மார்ச் ராக்கெட் சேஞ்ச் விண்கலங்கள், லேண்டர்கள், ரோவர்கள் போன்றவற்றை சந்திரனில் இறக்கியது.

முதல் விண்கலம் Chang'e-1 2007 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது. இது நிலவை முழுமையாக ஸ்கேன் செய்து அனுப்பியது. இரண்டாவது விண்கலம் 2010 ல் அனுப்பப்பட்டது. சந்திரனை இன்னும் விரிவான முறையில் படம் எடுத்து அனுப்பியது. மூன்றாவது விண்கலம் 2013 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. இது சந்திரனில் தரை இறங்கியது. நான்காவது விண்கலம் 2018ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது இந்த விண்கலம் யூடு-2 என்ற லேண்ட் ரோவரை சந்திரனில் தரையிறக்கி நடமாட விட்டது. ஐந்தாவது விண்கலம் 2014ஆம் ஆண்டு செலுத்தப்பட்டது. தற்போது செலுத்தியுள்ள ஆறாவது விண்கலம் சீனாவின் நீண்ட காலத்திட்டமான சந்திரனின் தென்துருவத்தின் அருகில் ஒரு சந்திர ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும். 2026 இல் ஏழாவது விண்கலத்தை செலுத்துவதன் மூலம் தென் துருவத்தில் உள்ள அனைத்து வளங்களையும் ஆய்வு செய்திட முடியும். எட்டாவது விண்கலத்தை 2028 ம் ஆண்டு செலுத்த உள்ளது. இது இது சந்திரனின் தொழில்நுட்பங்களை சரி செய்து வளங்களை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் அழைப்பும் ஓநாய் சட்ட திருத்தமும்:    

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள கனிமங்களை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்ள சீனா விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது மட்டுமல்ல… தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கிறது. அமெரிக்காவுடன் விண்வெளி ஒத்துழைப்பில் சீனா எப்போதுமே திறந்த மனப்பான்மையை கடைப்பிடித்து வருகிறது. அமெரிக்காவுடன் புவி அறிவியல் விண்வெளி அறிவியல் ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கான பணிக்குழுவை சீனா நிறுவி உள்ளது. மேலும் சிவில் விண்வெளி ஒத்துழைப்பு குறித்த உரையாடலுக்குமான குழுவையும் அமைத்துள்ளது. செவ்வாய் கிரக ஆய்வுகளில் இருந்து சுற்றுப்பாதை தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு முறைமையிலும் சீனா நிறுவியது. 

ஆனால் இவற்றை தடுக்கக்கூடிய முறையில் அமெரிக்கா ஓநாய் சட்டதிருத்தம் (wolf amendment) கொண்டு வந்தது. இந்த சட்டம் சீனாவுடன் அமெரிக்காவின் நாசா (national aeronautics and space administration) விண்வெளி திட்டத்தில் ஒத்துழைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று தடை விதித்தது. தற்போது உலகில் அனைத்து மக்களுக்குமான விண்வெளி ஆய்வுகளை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா சுயநலத்தின் அடிப்படையில் தடையாக இருக்கிறது. தனது மேலாதிக்கம் தகர்ந்து விடும் என்ற அச்சத்தில் செயல்படுகிறது

அமெரிக்கா தனது சுயநலத்திற்காக பல நேரங்களில் விவாதிக்க தயாராக இருக்கும். சீனா 2018 ஆம் ஆண்டு chang'e-4 அனுப்பி யுடு 2 (Yutu- 2) என்ற இதன் லேண்ட்ரோவரை சந்திரனில் இறக்கியது. டிசம்பர் 7ஆம் தேதி இறக்கப்பட்ட இந்த லேண்ட் ரோவர் டிசம்பர் 12ஆம் தேதி தனது சுற்றுப்பாதை செயல்பட துவங்கியது. இதுவரை மிக நீண்ட நாட்கள் சந்திரனில் செயல்படக்கூடிய லேண்ட் ரோவர் இதுதான். இன்றும் செயல்பட்டு வருகிறது.  

இதற்கு முன்பு சோவியத் யூனியன் அனுப்பிய லூனோ கோட் (Lunokho-1) ரோவர் 321 நாட்கள் தொடர்ந்து சந்திரனில் செயல்பட்டது. 2018 ஆம் ஆண்டு சீனா அனுப்பிய இந்த ரோவர் 2022 ஆம் ஆண்டு ஜனவரி வரை ஆயிரம் மீட்டர் அதாவது 3300 அடி பயணித்து உள்ளது. சந்திரனின் உள்ள இந்த யுடு-2 ரோவர் தனது பயணத்தின் போது வரலாற்று தடங்களை அழித்து விடுமோ என்று அமெரிக்கா அச்சப்படுகிறது. எனவே அது பற்றி விவாதிக்க தயார் என்று தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள். 1969இல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் தடம் நிலவில் இருக்கிறது. இது பற்றி குறிப்பிடுகிற பொழுது சீனாவின் மூத்த  ஆராய்ச்சியாளர் லி ஹாங்போ ஆம்ஸ்ட்ராங்கின்  கால் தட அடையாளம் பற்றி அமெரிக்க குழு கவலைப்பட தேவையில்லை. அவைகளை பாதுகாக்க கூடிய வேலைகளையும் சீனா செய்யும் என்று தெரிவித்தார்.

அமெரிக்கா, சீனாவை விண்வெளித் திட்டத்தில் சேர்க்கக்கூடாது என்று தொடர்ந்து தனிமைப்படுத்தி வரும் நிலையில் சீனா தன்னந்தனியாக விண்வெளி சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. தற்போது சீனாவின் டியாங் யாங் விண்வெளி நிலையம் விண்வெளியில் பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு சீனாவும் ரஷ்யாவும் இணைந்து சந்திரனில் தளத்தை உருவாக்க போவதற்கான திட்டத்தை அறிவித்தனர். மேலும் இரு நாடுகளால் உருவாக்கப்பட்டு வரும் சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையத்தில் திட்டத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தனர். சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பெலாரிஸ், அஜர் பைஜான், வெனிசுலா, பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலைய ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை தடுக்கும் வகையில் அமெரிக்கா ஆர்ட்டெமி திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.  

அமெரிக்காவின் விண்வெளி திட்டம் மல்டி மில்லியனர்களின்  குடியேற்றத்திற்கான திட்டமாக இருக்கிறது. சீனாவோ மனிதகுல வளர்ச்சிக்கான பாதையில் விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்து செல்கிறது. 

 

. பாக்கியம் 

சிபிஐஎம் மாநில குழு உறுப்பினர்

 

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...