Pages

புதன், செப்டம்பர் 24, 2025

39 திபெத் தலாய்லாமாவின் நிழல் முகத்தின் நிஜ அடையாளம்

 



 

அ.பாக்கியம்

 

முகத்தில் புன்னகை.பேச்சில் சமாதானம். உடையில் துறவியின் தோற்றம். மொத்தத்தில் சாந்த சொரூபம். இதுதான் தலாய்லாமாவின் பிம்பம். அவர்களது ஆதரவாளர்களும், அவரை பயன்படுத்தும் ஆதிக்க அரசியல் சக்திகளும் இந்த பிம்பத்தை உலகம் முழுவதும் கட்டமைத்து தங்களது கெட்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறார்கள். தலாய்லாமாவின் உண்மை வரலாறுகளை அறிந்து கொண்டால் இந்த பிம்பங்கள் அனைத்தும் தவிடு பொடியாகி தகர்ந்து விடும்.

ஒரு துறவியின் அடிப்படை அம்சமே வன்முறையை முற்றிலும் எதிர்ப்பதும்,உலகத்தில் வன்முறை நடந்தால் அந்த சம்பவங்களை எதிர்ப்பதும், அமைதியான வழியில் அவற்றை சமூகத்தில் இருந்து அகற்றுவதும் தான் ஆகப்பெரும் பணியாகும். தலாய்லாமாவும் அப்படித்தான் செய்வதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர் வன்முறைக்கு எதிராக எடுத்த சபதங்கள் அனைத்தும் ஒருதலை பட்சமானது மட்டுமல்ல பொய்யானதும் கூட என்று உறுதியாகக் கூற முடியும்.

அவர் நீண்ட காலமாக அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ விடமிருந்து சம்பளம் வாங்கும் பட்டியலில் இருந்தார். நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசுக்கு கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. இவைகள் தவிர தலாய்லாமாவிற்கு என்று தனியாக 1,80,000 டாலர் சம்பளமாக கொடுத்தது அமெரிக்கா. இன்று இந்தத் தொகையின் மதிப்பு 1 கோடியே 53 லட்சம் ஆகும். இந்தத் தொகையை அவர் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளவில்லை என்று அவரது அலுவலகம் அறிவித்தது. அவர் அந்த நிதியை எதற்குப் பயன்படுத்தினார் தெரியுமா? சீன அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடக்கூடிய கொரில்லாக்களுக்கான ஆயுதப் பயிற்சிகளுக்காக அந்த நிதி பயன்படுத்தப்பட்டது. இந்த செயல்பாடானது வன்முறைக்கு எதிராக அவரது சபதத்தில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அகிம்சை ஆதரவாளர் என்ற பொய் பிம்பம்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் சுடுகாடாக மாற்றி வருகிறது. குண்டு மலைகளைப் பொழிந்து குழந்தைகளையும் கொன்று குவிக்கிறது. பட்டினி சாவுகள் காசா முழுவதும் கவ்விப் பிடித்துள்ளது. உலகத்தின் மனசாட்சியை உலுக்கி கொண்டிருக்கும் இந்த கொடூர செயல் தலாய்லாமாவின் மனசாட்சியின் கதவுகளை தட்டவில்லையா என்ற கேள்வி எழுகிறது. கிறிஸ்துவ மதத்தின் தலைமை பீடமாக இருக்கக்கூடிய வாடிகனில் இருந்து மறைந்த போப் பிரான்சிஸ் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்ரேல் காசாவை தாக்கிய பொழுது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் காசா மீது நடத்துவது ஒரு இனப்படுகொலையா என்பதை உலகம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார். இதற்கு முன்பே 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் காசாவின் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை பயங்கரவாதம் என்று போப் பிரான்சிஸ் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். ஆனால் சமாதானத்திற்காக அமெரிக்காவின் ஆசிர்வாதத்துடன் நோபல் பரிசை பெற்ற தலாய்லாமாவிற்கு இதுவெல்லாம் வன்முறையாகவோ மனித குல அழிவாகவோ அவருக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருப்பதை அறியாதவர் போலதான் இன்றைக்கும் அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

1950 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை வியட்நாமில் உக்கிரமான போர் நடைபெற்றது. பிரஞ்சுப் படைகளும் அமெரிக்க படைகளும் வியட்நாம் மக்கள் மீது கந்தகக் குண்டுகளை வீசினார்கள். இந்த போரில் வியட்நாமில் 20 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் வரை மடிந்து போனார்கள். லட்சக்கணக்கான கம்போடியர்களும், லாவோடியர்களும் அமெரிக்க வல்லரசுகளின் இந்த வன்முறை தாக்குதலால் உயிரிழந்தார்கள். வியட்நாம் யுத்தத்தை எதிர்த்து உலகின் மூலைமுடுக்கெல்லாம் மக்கள் கொதித்து எழுந்தார்கள். அமெரிக்காவில் பொதுமக்கள் வீதிகள் தோறும் வியட்நாமை தாக்காதே என்று பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். இந்த யுத்தத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான பௌத்தர்கள் போராட்டங்களில் பங்கு பெற்றார்கள்.

வியட்னாமில் அமெரிக்காவுக்கு எதிராக பௌத்தர்கள் களத்தில் இறங்கி உயிரை மாய்த்துக்கொண்டு போராடினார்கள். கம்யூனிஸ்டுகளும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும் வேறுபாடுகள் இன்றி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமர்புரிந்தனர். ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக உலகமே எழுப்பிய உரத்த குரல் தலாய்லாமாவின் காதுகளுக்கு எட்டவில்லை. இந்தப் போர் எதிர்ப்பில் அவர் பங்கு கொள்ளவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. இதற்கு மாறாக அமெரிக்காவின் யுத்தத்தை ஆதரித்து நின்றார் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும்.

1980 ஆம் ஆண்டுகளிலிருந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்தது. நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்பட்ட ஈராக் என்ற தேசத்தை சுவடுகள் தெரியாமல் சாம்பல் ஆக்கியது. லிபியா என்ற நாட்டை தனது லாபவெறிக்காக வேட்டையாடி மக்களை சாகடித்தது. இந்தக் காலங்கள் முழுவதும் மேற்கண்ட நாடுகளில் அமெரிக்கா பொதுமக்களை கொன்று குவித்து அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதித்தது. ஆனால் நோபல் பரிசு நாயகனான தலாய்லாமா இதைப் பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிட்டது இல்லை. ஒரு சிறு கண் அசைவில் கண்டிப்புகளை கூட செய்யவில்லை என்றால் இவர் வன்முறையை எதிர்க்கிறாரா ஆதரிக்கிறாரா என்று தான் கேள்வி எழுகிறது.

தற்பொழுது இந்திய அரசு தலாய்லாமாவிற்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது. இதன் சூத்திரதாரியாக இருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது தலாய்லாமா பற்றி குறிப்பிட்டதை நாம் கவனிக்க வேண்டும். 2010 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஜம்மு காஷ்மீர் காவல் துறையும், இந்திய துணை ராணுவப் படைகளும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 வயது சிறுவன் உட்பட 117 பேர்கள் கொல்லப்பட்டார்கள். 2010 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு தான் இந்தப் போராட்டங்கள் ஓரளவிற்கு தணிந்தது. அமித்ஷா அப்பொழுது குஜராத்தில் அமைச்சராக இருந்தார். காஷ்மீரின் இந்த படுகொலையை தலாய்லாமா ஒரு போதும் கண்டிக்கவில்லை என்று அமித்ஷா வருத்தப்பட்டுக் கொண்டார்.

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பௌத்தர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். மியான்மரில் இருந்து விரட்டப்பட்டார்கள். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய செய்தியாக இது மாறியது. இவருடன் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி மீதும் கடுமையான விமர்சனமும் இக்காலத்தில் எழுந்தது. ஆனால் சமாதான தூதுவர் தலாய்லாமா மியான்மர் அரசை கண்டிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை கூட தெரிவிக்கவில்லை. எனவே தலாய்லாமா வன்முறை எதிர்க்கக் கூடியவர் என கட்டமைக்கப்பட்ட பிம்பம் இங்கே அம்பலப்பட்டுள்ளது.

திபெத்திய பௌத்தர்கள் எதிர்க்கும் தலாய்லாமா

தலாய்லாமா தான் ஒட்டு மொத்த பௌத்தத்துக்குமே தலைவர் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவர் திபெத்தில் இருக்கக்கூடிய திபெத்திய பௌத்தத்தின் நான்கு பிரிவுகளில் ஒரு பிரிவான துல்கு பிரிவின் தலைவர் ஆவார்.

இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தை தலாய்லாமா நடத்தி வருகிறார். மதத் தலைவரும் அவரே. இந்த அரசின் தலைவரும் அவரே. 2011 ஆம் ஆண்டு அவர் அரசு தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாகவும், அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் அறிவித்தார். ஆனால் அதற்குப் பிறகுதான் அரசியலில் அதிகமாக ஈடுபட்டு வருகிறார் என்பதை அனைவரும் அறிவார்கள். அரசு பதவிக்காக முதல் முதலாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் நாடு கடத்தப்பட்ட அரசின் ஒட்டுமொத்த திபெத்திய வாக்காளர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களையும் சேர்த்து 89,000 மட்டுமே. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 49,000 வாக்குகள் பதிவாகியன. இந்த 49 ஆயிரம் வாக்குகளில் 55 சதவீதம் வாக்குகளை பெற்று அதாவது 27 ஆயிரம் வாக்குகள் பெற்று லோக்சங்க் சாங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதான் இந்தியாவில் உள்ள அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாடுகளால் ஆதரிக்கக் கூடிய நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் நிலை. புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்காவில் வளர்ந்தவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தலைவரும் அமெரிக்காவில் வளர்ந்தவர். குறிப்பாக வெளிநாட்டில் வாழக்கூடிய திபெத்தியர்கள் இந்தியாவை தளமாக கொண்டு செயல்படக்கூடிய விவேத்தீர்கள் தான் அனைத்து அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

தலாய்லாமாவை எதிர்த்து திபெத்திய பௌத்தர்களின் பல பிரிவுகள் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார்கள். தலாய்லாமா மத சுதந்திரத்தை நசுக்குகிறார் என்றும், ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்றும் இந்த பிரிவுகள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். சுதந்திர ஊடகங்கள் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொள்ளக் கூடிய இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஊடகங்கள் தலாய்லாமாவிற்கு எதிராக நடைபெறக்கூடிய இந்தப் போராட்டங்கள் எதையும் சிறு செய்தியாக கூட வெளியிடுவது இல்லை. அவர்கள் தலாய்லாமாவிற்கு சேவகம் செய்வதன் மூலம் ஏகாதிபத்திய நலனை பாதுகாக்க கூடிய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சீனாவிற்கு எதிராக ஒரு சிறிய செய்தி கிடைத்தாலும் அதனை தேசிய சர்வதேச செய்தியாக மாற்றி விடக் கூடியவர்கள். ராய்ட்டர்ஸ், ஏபி, ஏ எஃப், கார்டியன் போன்ற முன்னணி பத்திரிகைகளும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். தலாய்லாமாவிற்காக பிரச்சாரம் செய்வதற்கு சர்வதேச பிரச்சார அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதற்கான நிதிகளையும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் வழங்கி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலாய்லாமாவிற்கு எதிரான இயக்கம்

திபெத்திய பௌத்தத்தின் மிக முக்கிய பிரிவான டோர்ஜோ ஷூக்டன் என்ற பிரிவு தலாய்லாமாவை எதிர்த்து இயக்கங்களை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பைலகுப்பேயில் உள்ள ஷான் காண்டன் மடாலயமும், செர்ப்போம் துறவிகளின் பல்கலைக்கழகமும் இந்த பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களும் உலகம் முழுவதும் தலாய்லாமாவிற்கு எதிரான பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பகுதிக்கு தலாய்லாமா சென்ற பொழுது இந்த பிரிவினர் அங்கு பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். 2014 ஆம் ஆண்டு தலாய்லாமா சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டிசி, ஓஸ்லோ, ரோட்டர்டேம், பிரான்ஸ் போன்ற இடங்களுக்கு சென்றார். ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் அவருக்கு எதிரான போராட்டங்களை நடத்தினார்கள்.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி இங்கிலாந்தில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற அப்சர்வர் என்ற பத்திரிக்கை தலாய்லாமாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடியவர்களை தீவிரவாத அமைப்பினர் என்று முத்திரை குத்தியது. இங்கு போராட்டம் நடத்திய பௌத்தர்கள், புதிய கடம்ப பாரம்பரியம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்ந்து டோர்ஜோ ஷூக்டன் பிரிவினரும் கலந்து கொண்டனர். அப்சர்வரின் பொய் செய்தியை எதிர்த்து இந்த இரு பிரிவினரும் தங்கள் அமைப்புகளுக்கு களங்கம் விளைவித்ததாக பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.

அப்சர்வர் பத்திரிக்கை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத் தினார்கள். அந்தப் பத்திரிக்கை உள்விவிசாரணை குழுவை அமைத்து அதற்கான பதிலை அளித்தது.தலாய் லாமாவின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தினால் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதா? என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர்.

இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் தலாய்லாமா பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். பாசாங்குத்தனம் செய்யக்கூடாது என்ற வாசகங்களை போராட்டங்களின் போது எழுதி வைத்து போராட்டம் நடத்தினர். “பொய்யான தலாய்லாமாவே, போலியான தலாய்லாமாவே” “எங்கள் மத சுதந்திரத்தை கொடுங்கள்” போன்ற கோஷங்களை எழுப்பினார்கள். உலகில் உள்ள கடம்ப மற்றும் ஷூக்டன் பாரம்பரிய நடைமுறைக்கு தவாய்லாமா பிரிவினர் தடை விதித்ததை எதிர்த்து இவர்கள் போராடி வருகிறார்கள். இந்தப் பிரிவினர் மீது தாக்குதலையும் நடத்துவதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக புதிய கடம்ப பிரிவு நசுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் தங்களது மத நம்பிக்கையை கைவிட வேண்டும், தலாய்லாமாவின் நம்பிக்கைக்குள் வரவேண்டும் என்று நிர்பந்தப்படுத்துகிறார்கள். இது மட்டுமல்ல இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், லடாக், சிக்கிம், பூட்டான் போன்ற இடங்களில் இருக்கக்கூடிய ரிம் போச்சு பிரிவை சேர்ந்த திபெத்தியர்கள் தலாய்லாமாவை புறக்கணித்து வருகிறார்கள். தலாய்லாமாவை இந்த மதப் பிரிவை சேர்ந்தவர்கள் பார்க்கக்கூடாது என்ற முடிவோடு எதிர்க்கிறார்கள்.

தலாய்லாமா அவருக்கு எதிரான திபெத்திய பௌத்தத்திற்குள் கடுமையான எதிர்ப்புகளும் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளது. இதை இந்தியா உட்பட சில நாடுகளின் புலனாய்வு பிரிவுகள் எச்சரித்தன. இதனால் தலாய்லாமா மிக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் டச்சு, சிலி நாடுகளுக்கு சென்ற பொழுது அதற்கான பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்தார்கள். அமெரிக்கா உட்பட சில நாடுகள் இந்த எதிர்ப்பிற்கு பின்னால் சீனா இருக்குமா என்ற ஆய்வினை நடத்தி அவ்வாறு இல்லை என்றும் முடிவுக்கு வந்தார்கள். தலாய்லாமாவின் நடவடிக்கைகள் இந்த எதிர்ப்பிற்கு காரணமாக அமைகிறது. மத சுதந்திரத்தைப் பற்றி பேசும் தலாய்லாமா தனது மதத்தில் இருக்கக்கூடிய இதர பல பிரிவுகளை நசுக்கி வருவதை இதன் மூலம் அறிய முடியும்.

துறவியின் பரிவாரங்களில் உறவினர்கள்

சாதாரணமாக அரசியலில் வாரிசுகளை நியமிப்பது அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்திய, தமிழக அரசியல் சூழல் இதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டு. ஆனால் துறவிகளையும் இந்த வாரிசு அரசியலும் அதிகார கைப்பற்றலும் விட்டு வைக்கவில்லை. தலாய்லாமாவும் தனக்கு கிடைத்த நாடு கடத்தப்பட்ட அரசாங்கப் பதவிகளை தனது உறவினர்களுக்கு தாரை வார்ப்பதில் மூழ்கிக் கிடக்கிறார். அவர் பல்வேறு வழிகளில் இதை மூடி மறைத்தாலும் அம்பலத்துக்கு வந்து விடுகின்றது.

நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு பெயர் கசாக் ஆகும். அமைச்சரவையில் மொத்தம் உள்ள ஆறு அமைச்சர்களில் மூன்று அமைச்சர்கள் தலாய்லாமாவின் நெருங்கிய உறவினர்களாக இருந்தனர். இவரது மூத்த சகோதரர் கியாலோ தோண்டப் பல ஆண்டுகள் தலாய்லாமா தலைமையிலான திபெத்திய அரசிற்கு பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். அவரது மைத்துனி ஒருவர் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் திட்டமிடல் குழு உறுப்பினராகவும், சுகாதாரத் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். ஒரு தங்கை சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சராக இருந்தார். அந்த தங்கையின் கணவர் தகவல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் தலைவராக பணியாற்றினார்.

இவர்கள் இருவரின் மகள் நாடுகடத்தப்பட்ட திபெத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தலாய்லாமாவின் மற்றொரு தம்பி தலாய்லாமாவின் தனியார் அலுவலகத்தில் மூத்த உறுப்பினராகவும் இருந்தார். இவருடைய மனைவியும் கல்வி அமைச்சராக செயல்பட்டார். மைத்துனரின் மனைவி வடக்கு ஐரோப்பாவதற்கான திபெத்திய நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும், சர்வதேச உறவுகளின் தலைவராகவும் பணியாற்றுகிறார். இந்தப் பதவிகள் அனைத்தும் தலாய்லாமாவின் குடும்பத்தினர் அபகரித்து வைத்திருப்பதற்கான அடிப்படை காரணம் நாடு கடத்தப்பட்ட அரசாங்கத்தின் சார்பாக சேகரிக்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை பெறுவதற்கும் பயன்படுத்துவதற்கான இடமாக இருப்பதால் இவர்கள் உறவினர்களாக தீபத்திய அரசை பிடித்துக் கொள்கிறார்கள். துறவியின் வன்முறையை கடந்து உறவினர்களின் ஒட்டுமொத்த உறைவிடமாக நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கம் மாற்றப்பட்டுவிட்டது.

அசைவ பிரியரின் சைவ வேடம்

தலாய்லாமா உலகளவில் நன்கு அறியப்பட்டவராக இருக்கலாம். ஆனால் அவரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு என்று பலரும் கூறுகின்றார்கள். உதாரணமாக அவர் சைவ உணவை உண்ணக்கூடியவர் என்று உலகம் முழுவதும் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலைமை வேறானது. அவர் அசைவ உணவை சாப்பிடக்கூடியவர் என்பதுதான் உண்மை. இந்த உண்மை வெளிவந்த பிறகு தலாய்லாமாவால் மறைக்க முடியவில்லை. எனவே அதற்கான மருத்துவ காரணங்களை முன் வைத்தார். தனக்கு எபடைட்டஸ் கிருமி உள்ளதாகவும், இந்த கிருமியின் மூலம் கல்லீரல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சையை பெற்று வருகிறேன். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இறைச்சி உணவை உண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இது ஒரு அப்பட்டமான சமாளிப்பாகும். பல மருத்துவர்களும் கல்லீரல் பிரச்சனைக்கு இறைச்சி சாப்பிடுவது அவசியமானது அல்ல என்றும், அது தவிர்க்கப்பட வேண்டியது என்றும் கருத்தை தெரிவித்தார்கள். ஆனால் தலாய்லாமா சைவம் சாப்பிடக்கூடியவர் மட்டுமல்ல அசைவத்தையும் வெளுத்துக்கட்டுவார் என்பது தான் உண்மையாகும்.

இந்திய மக்கள் தலாய்லாமாவின் நிழல் முகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வன்முறை, உறவினருக்கு சலுகை, இறைச்சி உணவு என அனைத்து விதமான செயல்களையும் செய்து கொண்டிருக்கக் கூடிய ஒருவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அவரின் நிஜ முகம்.

அ.பாக்கியம்

 

திங்கள், செப்டம்பர் 22, 2025

அந்திப் பொழுதில் அறிவார்ந்த கூடுகை



இரவும் பகலும் உரசும் அந்திப் பொழுதில்,

 கள்ளக்குறிச்சியில் தமுஎகச அமைப்பின் சார்பில் மாதம் தோறும் 20 ஆம் தேதி ஒரு வாசிப்பு வட்ட நிகழ்வை நடத்தி வருகிறார்கள். 

இந்த மாதம் 21ஆம் தேதி நான் எழுதிய "நானே மகத்தானவன்'" என்ற புத்தகத்தை வாசிப்பும் விவாதமும் என்ற முறையில் நடத்தினார்கள். 

அறிவார்ந்த பேராசிரியர்களும், களமும் ஞானம் நிறைந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் என பலரும் கூடுதலாகவே கலந்து கொண்டனர். 

புத்தகத்தைப் பற்றி அவர்கள் முன்வைத்த பல்வேறு விதமான கோணங்களை மிக மகிழ்வோடு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

நான் எழுதுகிற பொழுது புரிந்து கொண்டதை விட வெளியீட்டு விழாவில் சான்றோர்கள் பேசியதில் புரிதல் அதிகமாகியது. 

21 ஆம் தேதி கள்ளக்குறிச்சி கூடுகையில் இன்னும் கூடுதலாக பல்வேறு பரிணாமங்களை என்னால் காண முடிந்தது. ஒரு புத்தகத்தை எழுதியவருக்கு இதை விட மன நிறைவான, மகிழ்வான தருணம் அமையாது.

நிகழ்வின் துவக்கமாக பள்ளிச் சிறுமி புத்தகத்தைப் பற்றிய ஒரு குறிப்பு எழுதி வாசித்தது சிறப்பாக இருந்தது.

புத்தகத்தில் சரி பாதி படித்திருக்கிறேன் அவ்வாறு படிக்கிற பொழுது நான் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன். மீண்டு வருவதற்கு சற்று கடினமாகத்தான் இருந்தது. இந்த நூலாசிரியரின் வேலைநாள்  புத்தகத்தையும் படித்து பிரமிப்படைந்தேன் என்று முதலில் பேசிய நண்பர் தெரிவித்தார். ஏழு தலைமுறை என்ற புத்தகத்தின் தொடர்ச்சியாகவே நான் இதை பார்க்கிறேன் என்றார்.

இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தையே நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சுதந்திர தேவி முகத்தை மூடிக் கொண்டு இருப்பதன் அர்த்தம் என்ன என்று கேள்வியோடு அட்டையை மீண்டும் மீண்டும் உற்று நோக்கி அதன் பிறகு புத்தகத்திற்குள் சென்றேன் என்றார். நானும் மேசையில் இருந்த புத்தகத்தின் அட்டையை அவரின் அழுத்தமான வார்த்தைகளில் இருந்து மீண்டும் உற்று நோக்கினேன் புதிய உணர்வுகள் என்னை தீண்டியது.

அடுத்ததாக பேசிய ஆசிரியை இந்த தலைப்பே முதலில் எனக்கு கேள்வியாக இருந்தது. நானே மகத்தானவன் என்று தானே அறிவித்துக் கொள்வது எப்படி சரியாக இருக்கும் என்ற கேள்வியோடு , ஒரு குத்துச்சண்டை விளையாட்டைப் பற்றிய புத்தகம் தான் என்று முதலில் நினைத்தேன் இந்த இரண்டு கேள்விகளோடு உள்ளே நுழைந்த பொழுது கேள்விகளுக்கு விளக்கமும் கிடைத்தது, குத்துச்சண்டை தானே என்பதற்கு விடையாக பெரும் போராட்டம் கண் முன் காட்சியளித்தது என்றார். 

முகமது அலி என்ற பெயர் வர காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டதோடு அந்தப் பெயரை வெள்ளை நிற வெறியர்கள் ஏற்க மறுத்ததையும் அதை ஏற்க வைப்பதற்கான முகமது அலியின் முயற்சிகளும் உணர்ச்சி பொங்க இருந்தது என்றார்

மற்றொரு ஆசிரியை பேசுகிற பொழுது இந்த புத்தகத்தை படித்த பிறகு முகமது அலி என்ற அந்த ஆளுமை தனக்கான சுதந்திரத்தை எல்லா வகையிலும் தானே தீர்மானித்துக் கொண்டான் என்பதை உறுதியாக உணர முடிந்தது என்று உரைத்ததோடு எனது மகனுடன் இந்த புத்தகத்தைப் பற்றி கூட்டாக உரையாடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்த பொழுது எனக்கு மட்டுமல்ல கலந்து கொண்ட அனைவருக்கும் இது மகிழ்ச்சியாக இருந்தது.

பேராசிரியர் பேசுகிற பொழுது ஜாக் ஜான்சன் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற கலவரங்களின் ஊர் பெயர்களாக வருகிறதே என்று கருதுகிற பொழுது கடைசியாக இது தகவல்கள் அல்ல இனவெறிக்கு எதிரான அரசியலை பதிய வைப்பதற்கான தரவுகள் என்பதை உணர முடிந்தது. 

இந்தியாவில் தனிமனித அறிவிற்கு முக்கியத்துவம் இல்லை. சாதி மதம் என்ற பெயராலேயே அடையாளப்படுத்துகிறார்கள். அமெரிக்காவுடன் இந்த அம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்றார். 

மதமாற்றம் விடுதலைக்கான ஒரு வழியா என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான வரலாற்று ரீதியாகவும் பதில்களை ஆசிரியர் கொடுத்துள்ளார். ஆனால் முகமது அலியின் மதமாற்றம் ஒரு எதிர்ப்பின் அடையாளமாக கருப்பின மக்களின் போராட்டத்தில் உந்து சக்தியாக இருந்தது என்பதை வலிமையாக பதிய வைக்கப்பட்டுள்ளது. அங்கே அந்த மதமாற்றத்தின் தாக்கம் இந்தியாவில் அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவியதோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன் என்றார் 

ஜிம் க்ரோ சட்டங்கள் மனு சட்டத்தைப் போன்று இருப்பதை சரியான ஒப்பீட்டில் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு கதாபாத்திரத்தின் பெயரையே சட்டத்திற்கு சூட்டி இருக்கிறார்கள் என்று சொன்னால் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதும் ஒரு நிறவெறி அரசியலால் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

கருத்துப் பரிமாற்றத்தில் ரோசா பார்க், எம்எட்டி , அமெரிக்க கம்யூனிஸ்ட்கள்  நிறவெறிக்கு எதிரான போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்  போன்ற பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்து பேசினார்கள். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஆசிரியை அவர்கள் பேசுகிற பொழுது அமெரிக்காவின் கருப்பின போராட்டங்கள் சம்பந்தமாக சில புத்தகங்களை படித்திருந்தாலும் அவை கருப்பின மக்கள் மீது ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது ஆனால் இந்த நானே மகத்தானவன் என்ற புத்தகம் கருப்பின மக்களின் எதிர் வினைகளைபோராட்ட அலைகளை  உயர்த்தி பிடிப்பதாக இருக்கிறது என்று முத்தாய்ப்பான கருத்தை முன் வைத்தார். 

இன்னும் பலரும் பல அரிய கருத்துக்களையும் கேள்விகளையும் முன் வைத்து விளக்கினார்கள் ஒரு சில பங்கேற்பாளர்கள் இந்த விவாதத்தை கேட்டவுடன் முழுமையாக படித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தையும் குறிப்பிட்டார்கள். 

எனது  ஏற்புரையில் என்னை எழுத்தாளர் என்று குறிப்பிடுகிற பொழுது கூச்சமாக இருக்கிறது என்பதையும், களப்பணியில் கிடைத்த அனுபவத்திலிருந்து தொடர் வாசிப்பில் இருக்கிற அனுபவத்தில் இருந்தும் சில எழுத்துக்களை நான் முன்வைத்து உள்ளேன். நான் புத்தகம் எழுதும் பொழுது கிடைத்த பார்வையை விட இந்த கூடுகை மூலமாக எனது அறிவு விசாலம் அடைந்திருக்கிறது அதற்காக உங்களுக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 விளையாட்டில் வெறுப்பு அரசியல் எப்படி ஊடுருவுகிறது அதை எதிர்த்த போராட்டமாக விளையாட்டுக் களமும்எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற எனது கருத்துக்களையும் முன்வைத்து பேசினேன். 

பங்கேற்பாளர்களின் பார்வையில் புத்தகத்தை அலசியமுறையில் அகமகிழ்ந்து நன்றியை உரித்தாக்கினேன். 

நிறைவாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில உதவி செயலாளர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், களப்பணியாளரும் தீவிரவாசிப்பாளருமான தோழர் ஆனந்தன் அவர்கள் நிறைவுறையாற்றினார். இது போன்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி கலந்துரையாடல் செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை முன்வைத்து இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடப்பதற்கு அடித்தளம் இட்டவர். மாவட்டத்தின் இளைஞர்களையும் மற்றவர்களையும் வாசிக்க வைப்பதில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பங்கேற்பாளர்கள் தோழர் ஆனந்தனை எங்களின் வழிகாட்டி என்று பெருமிதம் அடைகிறார்கள். அவரின் நிறைவான சில கருத்துக்கள் செறிவான  முறையில் இருந்தது. 

கள்ளக்குறிச்சி மாவட்ட தமுஏகச வாசிப்பு வட்டம் மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன் விடை பெற்றோம்.

அ.பாக்கியம்

22.09.25





 

அ. பாக்கியம் எழுதிய ‘நானே மகத்தானவன்

  

பீட்டர் துரைராஜ்

 

[எழுத்தாளர் தொழிற்சங்க தலைவர் கள செயல்பாட்டாளர் தோழர் பீட்டர் துரைராஜ் அவர்கள் வாசகசாலை இணையதளத்தில் எழுதிய புத்தக மதிப்புரை வாசகர்களுக்கு பகிரப்படுகிறது.]

அ. பாக்கியம் எழுதிய ‘நானே மகத்தானவன்’ – பாக்ஸர் முகமது அலியின் போராட்டம் : நூல் வாசிப்பனுபவம் –

 பீட்டர் துரைராஜ் 

கட்டுரை | வாசகசாலை வாசகசாலைSeptember 19, 2025

அ.பாக்கியம் என்ற பெயரை சுவரெழுத்துகளில்தான், முதலில் கண்டேன். அது ஒரு பெண்பெயர் என நினைத்திருந்தேன். ஆனால், ஆடவர் என்பது தெரியவந்தபோது, இயல்பாகவே, ஆர்வம் வந்தது.

 ‘நானே மகத்தானவன்’ என்று அறைகூவல் விடுத்த குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வரலாற்றை, இனவெறிக்கு எதிரான அவரது அரசியல் போராட்டதை அ.பாக்கியம் இந்த நூலில் சொல்லுகிறார். மத்திய வயதைக் கடந்தவர்களுக்கு, முகமது அலியைத் தெரிந்திருக்கக் கூடும்.

 1980- இல் அவர் இந்தியாவிற்கு வருகை தந்தபொழுது, இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரை சந்தித்து இருக்கிறார். இந்தியா கடைபிடித்து வந்த, பாராட்டத்தக்க வெளியுறவுக்கொள்கைகளின் தொடர்ச்சியாக, வெகு மக்கள் அவரை எழுச்சியோடு வரவேற்றிருக்கின்றனர்.

 கறுப்பினத்தைச் சார்ந்த காசியஸ் மார்செல்லஸ் கிளே என்ற இயற்பெயரைக் கொண்டவர் முகமது அலி. அடிமை வியாபாரத்தை கிறிஸ்தவம் பாதுகாத்து வந்தது. தமது உடமையாளர்களின் பெயரை, விடுதலை பெற்ற பின்பும் அடிமைகள் வைத்திருந்தார்கள்.

 இந்த நிலையில் தனது இயற்பெயரை துறந்து, மதம் மாறிய முகமது அலியின் வரலாறு இது. ஒலிம்பிக்கில் கிடைத்த பதக்கத்தை இரண்டு நாட்களாக கழற்றாத முகமது அலி, உணவுவிடுதியில் தனக்கு இடம் மறுக்கப்பட்டதை எதிர்த்து, பதக்கத்தை ஆற்றில் வீசிவிட்டார்.

 ஆணவப் படுகொலைகளும், அதற்கு எதிரான போராட்டங்களும் மூர்க்கமாக நடைபெற்று வரும் இந்தச் சூழலில், ஒரு மார்க்சியவாதியான அ.பாக்கியம் இந்த நூலை எழுதியிருக்கிறார்.

 புலவர் பா.வீரமணி இதற்கு அணிந்துரை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழாவின் போது, ‘முகமது அலி பற்றி ஒரு நூல்தான் வந்துள்ளது, அதுவும் அவரது விளையாட்டுத்திறன் பற்றி வந்துள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார். 

 

இந்தியா வந்த முகமது அலியின் விரலைத் தொட்டு பரவசம் அடைந்ததை அந்த விழாவில் பா.வீரமணி குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும், முகமது அலியைப்பற்றி பேசும்போது அவர் காட்டிய பரவசம், முகமது அலி எத்தகையதொரு தாக்கத்தை இந்த சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை உணர்த்தியது. 

முகமது அலி இறந்த போது (2016) அவரைப்பற்றி, அமெரிக்காவின் ஜேகோபின் என்ற இடதுசாரி இதழில் வந்த கட்டுரையைப் படித்தபிறகு, அ.பாக்கியம் முகமது அலி பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார். 

அப்படி எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். எனவே, ஒருசில இடங்களில் கூறியது கூறல் வருகிறது. எனினும் இந்த நூல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. முகமது அலியின் (1942 – 2016) குத்துச்சண்டை வாழ்வு 39 ஆண்டுகள் என்றால், அதிலிருந்து ஓய்வுபெற்று 35 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் இருந்திருக்கிறார். 

புகழின் உச்சியில் இருந்த காலத்தில் வியத்நாம் நாட்டை எதிர்த்து போராட மறுத்து இருக்கிறார். இதனால் அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டு, விளையாட்டு உரிமம் பறிக்கப்பட்டு, சிறைத்தண்டனை வந்த போது கூட உறுதியான நிலை எடுத்துப் பேசி இருக்கிறார். இவரது உரைகள், மார்டின் லூதர் கிங் போன்ற போராளிகளுக்கு உந்துசக்தியாக இருந்துள்ளன.அமெரிக்க மக்களின் மனசாட்சியை அசைத்துள்ளன. 

ஹிட்லர், முசோலினி போன்றவர்களும் நிறவெறியில் குத்துச்சண்டையை எப்படி பயன்படுத்தினார்கள் என்ற, முகமது அலி காலத்திற்கு முந்தைய வரலாறும் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. கறுப்பின மக்களின் இன்னல்கள், அவர்கள் நடத்திய பலவகையான போராட்டங்களை ஆசிரியர் இந்த நூலில் எழுதியுள்ளார். 

நிறவெறி எதிர்ப்புப் போரில் கம்யூனிஸ்டுகள்’ என்ற கடைசி அத்தியாயம் மிக நன்றாக கோர்வையாக வந்துள்ளது. அமெரிக்காவின் மக்கள் தொகையில் 13.6% உள்ள கறுப்பின மக்கள், பேருந்துகளை புறக்கணித்து 381 நாட்கள் நடத்திய மாண்ட்கோமெரி போராட்டம், கறுப்பின இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட பாலியல் ‘ஸ்காட்ஸ்போரா பாய்ஸ்’ வழக்கு, மால்கம் எக்ஸ் போன்றவர்கள் முதல் சமீபத்தில் நடைபெற்ற ஜார்ஜ் ஃப்ளாயிட் படுகொலை உட்பட பல சம்பவங்கள் இந்த 230 பக்க நூலில் (விலை ரூ.300) சொல்லப்பட்டுள்ளன. 

அந்த காலக் கட்டங்களில் குத்துச்சண்டைகளை எப்படி மக்கள் பார்த்தனர். அவைகளை தமது விடுதலைக் கூறாக கறுப்பின மக்கள் எப்படி மாற்றினர், அதன் தோற்றம், வரக்க உள்ளடக்கம் என பலவற்றையும் வரலாற்று அடிப்படையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். சமையற்காரனையும், தோட்டக்காரனையும் குத்துச்சண்டையில் வெள்ளையின மக்கள் மோதவிட்டதுதான் குத்துச்சண்டையின் ஆரம்ப வரலாறு. 

அமெரிக்கா புலனாய்வு அமைப்பு சிவப்பு பயத்தில் எப்படி நடந்து கொண்டது. கொரியா மீதான அமெரிக்க யுத்தத்தை விமர்சித்த பால் ராப்சன் என்ற நடிகர் எப்படி கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார்.

 மெக்கார்த்தியிசத்தின் நீட்சியான உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் எப்படி வேட்டை நாயாகப் பயன்படுத்தப்பட்டது போன்றவை நன்கு எழுதப்பட்டுள்ளது.

 யுனிசெப், கியூபாவிற்கு பெரும் தொகையை அலி நன்கொடையாகக் கொடுத்துள்ளார். கியூபா நாட்டின் மீது பொருளாதாரத் தடை இருந்த காலத்தில், முகமது அலி அந்த நாட்டிற்குச் சென்று பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தது என்பது எப்படிப்பட்ட அரசியல் கலகம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

 இதனால் உள்நாட்டில் எப்படிப்பட்ட சலசலப்பு ஏற்பட்டிருக்கும்! அது போன்ற சமயங்களில் அவர் பேசியவை, பத்திரிகைகளில் வெளிவந்தவைகளையும் நூலின் ஊடாகத் தருகிறார் ஆசிரியர். மிகுந்த உழைப்பில் இந்த நூல் உருவாகி உள்ளது. 

அ.பாக்கியம் ஏற்கெனவே எழுதியுள்ள ‘வேலை நாள் ஒரு வரலாற்றுப் பார்வை’ நூலை வெளியிட்ட தூவல் பதிப்பகம், இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. 

இதுவரை யாரும் பேசாத பொருள் பொருள் பற்றி பேசியிருக்கிறார் அ.பாக்கியம்.

 

புதன், செப்டம்பர் 17, 2025

சமத்துவ சமுதாயம் நோக்கி

 

தோமஸ் பிக்கெட்டி எழுதிய


சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில், புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவித்த பொழுது .....

தோழர் இரவி 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த் திருக்கிறார். ஆரவாரம் அற்ற அவரது மொழிபெயர்ப்பு பணிகள் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

தாமஸ் பிக்கெட்டின்யின் இந்த புத்தகம் புதிய முறையில் எழுதப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் களமாடுபவர்களும் தொழிற்சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான புத்தகமாக நான் கருதுகிறேன்.

இன்றைய உலகமய சூழலில் தொழிற்சங்கம் பொருளாதார வாதத்திற்குள் சிக்கித் தவிக்கிறது. முதலாளித்துவக் கட்சிகள் தொழிற்சங்கத்தை தொழிலாக மாற்றி வரக்கூடிய செயல்கள், பல தொழிற்சங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

புத்தகத்தை அறிமுகப்படுத்திய கோமதி சங்கர் அவர்கள் மிக முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.

தோழர் பீட்டர் துரைராஜ் அவர்களின் முன்முயற்சியால் 35க்கு மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.

தாமஸ் பிக்கெட்டின்யின் இந்தப் புத்தகம் சொல்லக்கூடிய தீர்வுகளில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் முன் வைக்கக்கூடிய ஏராளமான தரவுகள் மிக முக்கியமான நடைமுறை சார்ந்த முடிவுகள் ஆகும் . தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் முடித்த பிறகு முழுமையான மதிப்புரை எழுதுவேன்.

எதிர் வெளியீடு

விலை 450/=

 

கைத்தட்டி கொண்டே இருக்கிறேன் ........

 



அ. பாக்கியம்

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வெளியிட்ட ஒரு நினைவு மலரில் வாலிபர் சங்கத்தின்  முன்னத்தி ஏர்களிடம் வாழ்த்துச் செய்தி பெறப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த வாழ்த்து செய்திகளில் நான் படித்தது என்றும் நினைவில் நின்றது மட்டுமல்ல சில இடங்களில் தொடர்ந்து பயன்படுத்திய வார்த்தைகளும் ஆகும். முன்னத்தி ஏரில் ஒருவர்  நான் மைதானத்தில் ஓடி முடித்து விட்டேன் தற்பொழுது அடுத்த தலைமுறை ஓடிக்கொண்டிருப்பதை பார்த்து கேலரியில் அமர்ந்து கொண்டு கைதட்டிக் கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தைகளில் அவரது வாழ்த்து செய்தி முடித்திருந்தார். தோழர் அகத்தியலிங்கம் பொறுப்பில் இருந்த பொழுது நான் உட்பட அவருடன் மையப் பணிகளில் இருந்த காலத்தில் இந்த நினைவு மலரை அவரின் முன்முயற்சியால் சிறப்பாக வெளியிடப்பட்டது. அந்த மலரில் பலரின் கருத்துக்களோடு மேற்கண்ட வரிகளை எழுதி இருந்தவர் கே வி எஸ் என்று அன்புடன் அழைக்கக்கூடிய கே வி எஸ் இந்துராஜ் ஆகும்.

திருச்சி மாவட்டத்தின் கட்சித் தலைவர்களின் ஒருவராக திகழ்ந்தவர் மட்டுமல்ல தொடர்ந்து சாத்தியமான அளவு இயங்கிக் கொண்டும் இருக்கிறார்.

 நேற்றைய தினம்(14.09.25)  திருச்சியின்  புறநகர் மாவட்ட பயிற்சி முகாமில் அவரை சந்தித்து பேசியது இதமான நிகழ்வாக அமைந்தது. நான் திருச்சிக்கு வாலிபர் சங்க வேலைகளுக்காக தொடர்ந்து வந்த பொழுதெல்லாம் மாவட்ட அலுவலகத்தில் கலகலப்பான ஒரு மனிதராக இருந்தவர் தோழர் கே வி எஸ் ஆவார்.

அவர் இல்லை என்றால் வெற்றிடத்துடன் திரும்புவதான ஒரு மெல்லிய உணர்வு ஏற்படும். அனைத்தையும் மிக சாதாரணமாக செய்வது மட்டுமல்ல அவருடைய பேச்சுக்களும் அவ்வாறே அமைந்திருக்கும். இளைஞர்கள் கட்சிக்குள் வந்த பொழுது அவர் திருச்சி மாநகர் கட்சியின் செயலாளராக இருந்தார். பல இளைஞர்களை எதிர்கொண்டார். இளைஞர்களின் கிண்டல் கேலிகளை புன்னகையுடன் கடந்து செல்வார். சில நேரங்களில் நான் அவரை சந்திக்கிற பொழுது பாக்கியம் இந்த பயலுகளை சொல்லிவை ரொம்பத்தான் பிரச்சனை பண்ணுகிறார்கள் என்று செல்லமாக கடிந்து கொள்வதும் பதிலுக்கு பல இளைஞர்கள் அவரை நகைச்சுவையுடன் பேசுவதும் நெருக்கத்தை உருவாக்குவதாக இருந்தது. இன்று 73 வயதை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். வாய்ப்புள்ள போது நிகழ்ச்சிகளில் அனைத்திலும் பங்கு பெறுகிறார். அந்த மாவட்ட குழுவும் அவரையும் இதர மூத்த தோழர்களையும் அரவணைப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரோடு சிறிது நேரம் உரையாடினேன்.

திருச்சி மாநகரில் 21 ஆண்டுகள் கட்சியின் இடைக்கமட்டி செயலாளராக பணியாற்றி இருக்கிறார். 1981ம் ஆண்டு முதல் கட்சியின் மாவட்ட குழுவிலும், 1985 முதல் 2022 ஆண்டு வரை மாவட்ட செயற்குழுவிலும் இருந்து பணியாற்றிருக்கிறார்.

தோழர் பி ஆர் சி என்று அன்புடன் அழைக்கக்கூடிய பி இராமச்சந்திரன் அவர்கள் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் செயலாளராக அதாவது புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் திருச்சி புறநகர் திருச்சி மாநகர் இவை அனைத்தும் ஒன்றாக இருந்த பொழுது அதன் செயலாளராக பணியாற்றிய காலத்தில் தோழர் கே வி எஸ் அவர்களை  இயக்கத்தில் ஈடுபடுத்தியதை  நினைவு கூர்ந்தார்.

திருச்சியில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே தோழர் பி ஆர் சி மாவட்ட அளவில் 1972 ஆம் ஆண்டுகளில் ஒன்பது பேர் கொண்ட ஒரு அமைப்புக்குழுவை உருவாக்கினார் அதில் நானும் ஒருவன் என்று குறிப்பிட்டார்.

 தோழர் பி ஆர் சி வாலிபர் அமைப்பை கட்டுவதற்கு திருச்சியில்  விதை போட்டவர் என்பது மட்டுமல்ல அதை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றினார். என்னைப் போன்றவர்கள் வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநில பணிகளில் இயங்கத் துவங்கிய பொழுது அதன் பொறுப்பாளராக இருந்து வழிகாட்டியவர் தோழர். பி ஆர் சி.இதன் தொடர்ச்சியாக தான் 1974 ஆம் ஆண்டு தோழர் பிஆர்சி போன்றவர்களின் முன் முயற்சியால் முதல் ஜனநாயக வாலிபர் சங்கம் மாநாடு திருச்சி முனிசிபல் மண்டபத்தில் நடைபெற்றது என்றும் இந்த மாநாட்டில் தோழர்கள் ஆர். உமாநாத், தணிகைச் செல்வன், தஞ்சை மணியரசன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் முத்துக்கிருஷ்ணன் தலைவராகவும், தோழர் வி பரமேஸ்வரன் செயலாளராகவும், தோழர் கே வி எஸ்  துணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதை நெகிழ்வோடு தெரிவித்தார்.

இந்த ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி #இளைஞர் முழக்கம் என்ற பத்திரிக்கை வெளியிடப்பட்டது.முதல் இதழை தோழர் பிஆர்சி பெற்றுக் கொண்டார். இந்த பத்திரிக்கையை வெளிமாநிலத்தில் இருந்த தமிழ் இளைஞர்கள் உட்பட வாங்கினார்கள்.  பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவாக தோழர் முத்துகிருஷ்ணன், பரமேஸ்வரன், ஜெகதீசன் மற்றும் நான் உட்பட ஆசிரியர் குழுவில் இருந்தேன் என்றும்,  எனக்கு பாசறை செய்திகள் என்று ஒரு பிரிவை ஒதுக்கி அது தொடர்பாக தொடர்ந்து எழுதி வந்தேன் என்பதையும் மன நிறைவோடு கே வி எஸ் அவர்கள் குறிப்பிடு கிறார்கள்.

தோழர்.ஜெகதீசன் தனது வருமானத்தை முழுவதும் கட்சிக்காகவும், வாலிபர் இயக்கத்திற்காகவும் செலவழித்தார் என்பதை நினைவு கூர்ந்தார் .சங்கம் ஆரம்பித்த காலத்தில் மிகப்பெரிய நெருக்கடியான அரசியல் சூழல் இருந்தது என்றும் ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அதனைத் தொடர்ந்து,  அவசர கால நிலை பிரகடனம் என்று நீடித்தது. பத்திரிக்கையை தொடர்ந்து நடத்த இயலவில்லை என்பதையும் தெரிவித்தார்

1977 ஆம் ஆண்டு சோசலிச வாலிபர் முன்னணி கோவை மாவட்டம் இடிகரையில் அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக்குழு ஒன்பது பேர்களில் கே வி எஸ்  ஒருவராக இருந்துள்ளது மட்டுமல்ல அவசர நிலை காலத்தில் பிரிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி மாவட்டத்திற்கு வாலிபர் சங்கத்திற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றியதையும் தெரிவித்தார். அதன் பிறகு நடைபெற்ற மாநாட்டில் வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினராக பணியாற்றியதை கவனப்படுத்தினார்.

கட்சியில் உறுப்பினரான பிறகு திருச்சி வட்டாரக் குழு என்று அமைக்கப்பட்டு அதன் செயலாளராக தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் பணியாற்றி இருக்கிறார். இது எனக்கு புது செய்தியாக தான் இருந்தது. இவர்கள் எல்லாம் கட்சியின் அடிமட்டு அமைப்புகளில் பொறுப்புகளில் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை அறிகிற பொழுது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது.  இவ்வாறு அடித்தள அனுபவம் அற்ற முறையில் வளர்வது இயக்கத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதையும் எனது அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அதன் பிறகு கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப திருச்சி வட்டாரக்குழு இரண்டாக பிரிக்கப்பட்டு திருவரும்பூர் பகுதி,பெல் தொழிற்சாலை, பொன்மலை, ரயில்வே போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வட்டாரக் குழுவிற்கு தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் கிடைக்கும் செயலாளராக தொடர்ந்து செயல்பட்டு இருக்கிறார். திருச்சி மாநகரப் பகுதியை ஒட்டிய வட்டாரக் குழுவிற்கு தோழர்.கஸ்தூரி ரங்கன் அவர்கள் இடைக்கமிட்டி செயலாளர்களாக செயல்பட்டு உள்ளார். இந்த கமிட்டியிலும் தோழர் கே வி எஸ் அவர்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

83 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இடைக்கம்டி செயலாளராக பொறுப்பேற்று 21 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார்.

திருச்சி எரிசாராய தொழிற்சாலையில் 1966 ஆம் ஆண்டு ஒரு தொழிலாளியாக பணியில் சேர்ந்து பணியாற்றினார் என்றும் 1969 ஆம் ஆண்டு சங்கம் அமைத்து அதன் பிறகு சங்கத்தை பலப்படுத்திய பணிகளிலும் , 1973 ஆம் ஆண்டு வேலை நிறுத்தம் 28 நாட்கள் நடைபெற்று அன்றைக்கு இருந்த அரசு வேலை நிறுத்தத்தை உடைத்து பழி வாங்கியது. அதன் பிறகு கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட வரலாற்று எடுத்துரைத்தார்.

1973 ஆம் ஆண்டு முதல் தோழர் பி ஆர் சி அவர்கள் கே வி எஸ் அவர்களை முழு நேர ஊழியராக கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து, அவசரநிலை காலம், ரயில்வே வேலை நிறுத்தங்கள், 77 ஆம் ஆண்டு தேர்தல், 80 ஆம் ஆண்டு தேர்தல  என்று தொடர் பணிகளின் காரணமாக  உடனடியாக முழு நேர ஊழியராக வர இயலவில்லை.

 தோழர் பி ஆர் சி 1980 ஆம் ஆண்டு அவரை ஒரு நேர ஊழியராக கொண்டு வந்ததை நெகிழுடன் குறிப்பிடுகிறார். அத்துடன் கம்பெனி வேலையும் விட்டுவிட்டார்.

தோழர் பி ஆர் சி யை தொடர்ந்து தோழர்.கே. வரதராஜன் தன்னை எவ்வாறு வழிநடத்தினார் என்பதையும் அரசியல் படுத்தினார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

திருச்சி சுமை பணி தொழிலாளர் சங்கப் போராட்டத்தில் ஆறு நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்ததை குறிப்பிட்டார்.

தோழர்.கே வரதராஜன் பொறுப்புகளில் இருக்கிற பொழுது திருச்சியில் நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடிய அரசியல் தலைமை குழு உறுப்பினர்களில் தோழர் பிரமோத் தாஸ் குப்தா தவிர அனைத்து அரசியல் தலைமை குழு உறுப்பினர்களும் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்ததுடன் இந்த கூட்டங்கள் முழுவதும் கட்சி என்னை தலைமை ஏற்க வைத்தது என்பதை மிகப் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார். குறிப்பாக அவசர நிலை காலத்தில் தோழர் பி ஆர் அவர்களின் பொதுக்கூட்டத்தை குறிப்பாக சுட்டிக்காட்டினார்.

தோழர் பிஆர்சி மீதும் தோழர் கே வி மீதம் அளவு கடந்த மரியாதையுடன் தனது ஆசானாகவும் நினைவு கூறுகிறார். தோழர் கே வரதராஜன் கொரோனா இல்லையென்றாலும்  கொரோனா காலத்தில் மரணம் அடைந்தார். மரணம் அடைந்து அவருடைய பூத உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லும் பொழுது அந்த பூத உடலுடன் அவரது மகன் மருமகள் பேரன் ஆகியோர் வாகனத்தில் ஏறி அமர்ந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் தயங்கிய பொழுது உடல்நிலை சரியில்லை என்றாலும் கொரோனா அச்சம் இருந்த சூழ்நிலையிலும் அந்த வாகனத்தில் அனைத்தையும் மீறி ஏறிச் சென்று  பூத உடலை சிதையில் எரிக்கும் வரை இருந்து விட்டு வந்தேன் என்று அந்த தலைவரின் இறுதி நிகழ்வை குறிப்பிடுகிற பொழுது சற்றே உணர்ச்சி வசப்பட்டார்.

தோழர் கே வி எஸ் அவர்கள் தேர்தல் காலத்திலும் கே ஜி எஃப் உட்பட பல இடங்களுக்கு சென்று சென்று பணியாற்றியிருக்கிறார். மாநாடுகளில் சமையல் பொறுப்பில் ஆரம்பித்து பல பொறுப்புக்களை நிறைவேற்றி இருக்கிறார்.

என்னை போன்றவர்கள் அலுவலகத்திற்கு வருகிற பொழுது அவரின் நெருக்கமான, உரிமையான, அரவணைப்பு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருந்தது. நேற்று நான் அவரை சந்தித்து பொழுது அதே உணர்வு என்னை ஆட்கொண்டது.

இந்த உணர்வை வெளிப்படுத்துவதற்காக தான் இந்த பதிவை இங்கு பதிவிடுகிறேன். இதமான சந்திப்பும் உரையாடலில் புதிய உணர்வுகளுடன் அங்கிருந்து புறப்பட்டேன்

அ. பாக்கியம்

நௌஜவான் பாரத் சபா கொள்கையும்-செயல்பாடுகளும்

    அ.பாக்கியம்   வெறுப்பு அரசியலின் அமைப்புகள் தங்களது நூற்றாண்டை போற்றுகிறார்கள். வகுப்புவாத கலவரத்தின் ரத்த ஆற்றில் மிதந்து   நூற...