Pages

செவ்வாய், டிசம்பர் 12, 2017

அம்மாவின் சட்டமன்ற கட்டிடமும் ஐந்து குடிசை அம்மாக்களின் ஆலோசனையும்

                         ஏ.பாக்கியம்

           

தமிழக சட்டமன்ற கட்டிடம் இடம் நெருக்கடியால் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று முடிவெடுத்து திமுக ஆட்சியில் புதிய சட்டமன்ற கட்டிடம் அரசினர் தோட்டத்தில் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அன்று நடைபெற்ற தேர்தலில் திமுக ஆடசியை இழந்து அதிமுக தலைமையில் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். புதிய சட்டமன்ற கட்டிடத்தை அவர் விரும்பவில்லை. எனவே, இடம் நெருக்கடி இருந்தாலும் பழைய சட்டமன்ற கட்டிடம் பாரம்பரியமான கட்டிடம் என்று பாரம்பரியத்தை பாதுகாக்கக்கூடிய முறையில் அதே இடத்தில் சட்டமன்றத்தை நடத்தினார். 

           இதே பாரம்பரியத்தை நகர்புற ஏழை மக்கள் மீது அவரின் அரசு ஏன் காட்டக்கூடாது. பாரம்பரியமாக குடியிருந்து வரும நகர்புற ஏழைகளையும், குடிசைவாழ் மக்களையும் சென்னையை விட்டு துரத்தக்கூடிய செயலை அவர் தலைமை தாங்கிய இன்றைய அரசு செய்து வருகிறது. தற்போது சென்னை நகரில் அடையாறு, கூவம் நீர்நிலை குடியிருப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிந்தாதரிபேட்டையில் உள்ள ஐந்து குடிசை என்ற பகுதி மக்களை வெளியேற்றுவதில் மாநில அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

             சிந்தாதரிபேட்டை 62வது வட்டத்தில் ஐந்து குடிசை என்று பெயரில் சுமார் 950 குடிசைகள் இருக்கிறது. பலபத்தாண்டுகளுக்கு முன்பு ஐந்து குடிசை என்ற நிலையிலிருந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த 950 வீடுகளில் மாநில அரசு தீப்பிடிக்காத வீடுகள் என்ற முறையில் 350 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. இந்த குடிசைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளது. ஆதார் கார்டு உள்ளது. மின் இணைப்பு உள்ளது. வங்கி கணக்கு உள்ளது. இது போன்ற அரசின் அனைத்து ஆதாரங்களையும் வைத்துள்ளனர். ஆனால் தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற முறையில் இவர்களை அப்பறப்படுத்த அரசு நிர்வாகம் முயற்சிக்கின்றது. நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் அவற்றை அப்புறப்படுத்துவது நியாயமானது.

           இந்த முயற்சியை யாரும் எதிர்ப்பதில் நியாயம் இருக்காது. அதே நேரத்தில் இம்மக்களை 40 கி.மீ தாண்டி பெரும்பாக்கத்தில் குடியமர்த்துவதை மனித உரிமை அடிப்படையிலும், இயற்கை நியதி அடிப்படையிலும் ஏற்று கொள்ள முடியாது. அருகிலேயே வீடு கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தால் எங்கே இடம் இருக்கிறது என்று அதிகாரிகளும் அரசும் ஏழை மக்களை பார்த்து கேள்வி கேட்கிறது. ஆனால் ஐந்து குடிசை மக்கள் இருக்கிற இடத்தை சுட்டகாட்டினால் அந்த இடத்தில்  வீடு கட்டி கொடுக்க மறுக்கிறார்கள். இதோ அதற்கான விவரங்களை அரசிடம் மீண்டும் பாரம்பரிய குடியிருப்பாளர்கள் முன்வைக்கிறோம்.

            ஐந்து குடிசை பகுதியில் தற்போது அரசு கட்டிக் கொடுத்த கல்நார் வீடுகள் உட்பட 950 வீடுகள் உள்ளன. அரசின் திட்டப்படி ஆற்றின் மையப்பகுதியிலிருந்து 50 மீ தூரம் வரை இரு கரைகளிலும் எந்த கட்டுமானமும் இருக்கக்கூடாது என்றும் 50 மீ வரையிலான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் என்றும் திட்டம் உள்ளது. ஆனால் ஐந்து குடிசை பகுதியில் ஆற்றின் நடு பகுதியிலிருந்து குடிசை பகுதி வரை 246 அடி உள்ளது. இதில் 50 மீ போக மீதம் 76 அடி அகல நிலம் உள்ளது. மறுபுறத்தில் சிந்தாதரிப்பேட்டை காவல்துறை சாவடியிலிருந்து நெடுஞ்செழியன் காலனி வரை 800 அடி நீளம் உள்ளது. இந்த இடங்களில்தான் பெரும்பாலான குடிசைகள் உள்ளன.

        எனவே, இந்த இடத்தின் மொத்த அளவு 60,800 சதுர அடியாகும். ஆற்றிலிருந்து 50 மீ க்கு அப்பால் உள்ள இந்த இடத்தில் ஏன் எங்களுக்கு மாடி வீடு கட்டிக்கொடுக்கக்கூடாது என்று அப்பகுதி மக்கள் கேள்விகள் கேட்கிறார்கள். 60,800 சதுர அடியில் கட்டிட பயன்பாடுகளுக்கு பொது இடமாக 20,000 சதுர அடியை அதவாது 33 சதவீதம் இடத்தை ஒதுக்கிவிட்டாலும் மீதி 40,800 சதுர அடி இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 400 சதுர அடி என்று வீடு கட்டிக் கொடுத்தால் கூட தரைத்தளத்தில் 102 வீடுகள் கட்டலாம். எனவே, இதையே செம்மஞ்சேரியில் கட்டியது போல் 8 அடுக்குகள் கட்டினால் 816 வீடுகள் கட்ட முடியும். இப்பகுதி மக்களின் 99 சதவிதம் குடும்பங்களுக்கு இங்கேயே வீடு கொடுக்க முடியும். இந்த ஐந்து குடிசையில் வாழக்கூடிய மக்கள் வானகரம் மீன் மார்கெட்டிலும், சிந்தாதரி  மீன் மார்கெட்டிலும், மீன்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய கூடங்களிலும், சிந்தாதரிபேட்டை சுற்றுவட்டாரத்தில் முறைசாரா தொழிலிலும் ஈடுபடக்கூடியவர்கள்.

           இவர்களின் குழந்தைகள் இங்கிருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். பெரும்பாக்கத்தில் வீடு கட்டிக் கொடுப்பதற்கு ஒரு வீட்டிற்கு ரூ 6.5 லிருந்து 7 லட்சம் வரை (கமிஷன் எவ்வளவு என்று தெரியாது) செலவழிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்குள்ளேயே இதே தொகையில் வீடு கட்டிக் கொடுக்க முடியும் என்று பல நிறுவனங்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளன. மேற்கண்ட 816 வீடுகளை கட்டுவதற்கு ரூ 57 கோடி மட்டும்தான் செலவாகும். (சேகர் ரெட்டி வகையறாக்களிடம் இதை விட பலமடங்கு பணம் இருக்கிறது.) இதை ஏன் அரசு செய்யக்கூடாது என்று அப்பகுதி பெண்கள் கேள்வி கேட்கிறார்கள்.

         ஆற்றின் ஓரத்தில் இவளே பெரிய அடுக்குமாடி வீடுகளை கட்டிக் கொடுக்க முடியாது என்று அரசு அதிகாரிகள் மறுக்க முடியாது. காரணம் ஐந்து குடிசைக்கு அருகாமையிலேயே நெடுஞ்செழியன் என்ற பெயரில் நான்கு மாடி உயரத்தில் பல அடுககுமாடி கட்டிடங்களை இதை குறைவான இடத்தில் குறைவான அளவில் வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். பல பத்தாண்டுகளாக அந்த வீடுகள் பழுதடையாமல் இருக்கிறது. ஆகவே அரசு எந்த காரணத்தை சொல்லியிம் இந்த நியாயமான கோரிக்கையை தட்டிக் கழிக்க முடியாது.

              இதை மீறி அரசு இதை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறது என்றால் அந்த இடத்தை வசதி படைத்தவர்களுக்கு தாரை வார்ப்பதற்காக தயாராகிவிட்டது என்றுதான் அர்த்தம். ஏற்கனவே,  போரூர், சித்ரா தியேட்டர் எதிரில் உள்ள நிலம், சிட்டி சென்டர் உள்ள இடம் ஆகிய இடங்களிலிருந்து நகர்புற ஏழைகள் வெளியேற்றப்பட்ட உடன் அங்குள்ள நிலங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரம்விளக்கு பகுதியில் திடீர் நகரும் இதில் சேரலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சேப்பாக்கம் பகுதியிலேயே பூதபெருமாள் கோயில் தெருவில் உள்ள மக்களுக்கு அருகாமையிலுள்ள காலி இடங்களில் வீடு கொடுக்க முடியும்.

               

இதே போன்று துறைமுக தொகுதிக்குட்பட்ட காந்தி நகர், இந்திரா நகர் பகுதிகளிலும் அடுக்குமாடி வீடுகளை கட்டி கொடுக்க முடியும். இதுதான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அனைத்து மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக் கொண்டால்மட்டும் போதாது. அடித்தட்டு மக்களுக்கு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இது போன்று வெளியேற்றப்படும் ஒவ்வொரு பகுதியிலும் அம்மக்களை குடியமர்த்த இடங்கள்  இருக்கிறது. அதை கண்டுபிடித்து அமுலாக்க வேண்டும்.

தீக்கதிர் 10.12.2017

வியாழன், டிசம்பர் 07, 2017

பாரதிய ஜனதாவும் பத்மாவதியும்

அ.பாக்கியம்



வரலாற்றை திரிப்பது தேசத் துரோக குற்றத்திற்கு சமமானதுஎன்று பாஜ உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். பத்மாவதி படம் எடுத்த பன்சாலி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வரலாற்றை திருத்துவதன் மூலம் தேசத்துரோக குற்றம் இழைத்துள்ளார் என்று உ.பி.யின் பாஜ தலைவர்களில் ஒருவரான அர்ஜூன் குப்தா உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வரலாற்றை திரிப்பதற்கும், தவறாக சித்தரிப்பதற்கும் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பன்சாலிக்கு அரியானா மாநில பாஜ அமைச்சர் விபுல் கோயல் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார்.

வரலாற்றை திரிப்பதற்கும், தவறாக சித்தரிப்பதற்கும் தேச துரோகி பட்டம் சூட்ட முடியும் என்றால் பிரதமர் மோடியில் ஆரம்பித்து பாஜ - சங்பரிவார தலைவர்களுக்குத்தான் முதலில் தேச துரோகி பட்டம் சூட்ட வேண்டும். அந்த அளவிற்கு வரலாற்றை திரிப்பது மட்டுமல்ல : மாற்றி எழுதுவது, மறைப்பது, புரட்டுகளை முன்வைத்து பாடப்புத்தகங்களை நிறைப்பது என பல பணிகளை பாஜ - சங்பரிவாரங்கள் செய்து வருகின்றன.

பொய் வரலாறு உற்பத்தியாளர்கள்
பொய்யிலே கால்படி, புரட்டிலே முக்கால்படி என பொய் வரலாறுகளை உற்பத்தி செய்திட பாஜ - சங் பரிவாரங்கள் பல ஆயிரம் கோடி மூலதனத்தில் உற்பத்தி தொழிற்சாலையை துவக்கியுள்ளன. மேக் - இன் - இந்தியா ஆரம்பித்து தோல்வி அடைந்துவிட்டார்கள். அவர்களால் தொழிலையும் வளர்க்க முடியவில்லை ; வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியவில்லை. எனவே தற்போது மேக்-இன்-ஹிஸ்ட்ரியை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் வரலாற்றைத்தான் அனைவரும் வாங்க வேண்டும் ; பேச வேண்டும் ; எழுத வேண்டும் ; படிக்க வேண்டும் என அதிபயங்கர மிரட்டலுடன் பவனி வருகின்றனர். வரலாற்றை இந்துத்துவா வகுப்பு வெறிக்கு பயன்படுத்தக்கூடிய முறையில் மாற்றி எழுதி வருகின்றனர். இந்த பொய் வரலாறு உற்பத்தி சாலையின் தற்போதைய வெளியீடு, ராஜ்புத் கர்ணிசேனாவின் பத்மாவதி வரலாறாகும். இந்த கர்ணிசேனா மிகப்பெரிய போராட்டம் நடத்துவதற்கோ, கலவரம் செய்வதற்கோ சக்தி படைத்த அமைப்பு அல்ல. ஆனால், ராஜஸ்தான் முழுவதும் கலவரம், படக்குழுவை தாக்குவது, தலைக்கு விலை பேசுவது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பின்னால் பாஜ - சங் பரிவாரங்களின் ஆதரவு இல்லாமல் இவை நடக்காது என்பது ஊரறிந்த உண்மை. ராஜபுத்திர கௌரவம், மக்கள் உணர்ச்சி என்பதை முன்வைத்து மக்களிடையே பிரிவினையை உருவாக்குவதற்கு கர்ணிசேனா என்ற முகமூடி சங் பரிவாரங்களுக்கு தேவைப்படுகிறது.
தற்போது பன்சாலி இயக்கி தீபிகா படுகோன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ராஜபுத்திர கௌரவத்தை சீர்குலைக்கிற எந்த காட்சிகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது. தணிக்கைக்குழுவும் தடை விதிக்கவில்லை. உச்சநீதிமன்றமும் சங் பரிவார அமைப்புகள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இவை அனைத்தையும் விட பாஜ - சங் பரிவாரங்களின் ஊடக குருவான ரிபப்ளிக் அர்னாப் கோஸ்வாமி, இந்த படத்தில் ராஜபுத்திர பெருமை பேசப்படுகிறது, கர்ணிசேனா முட்டாள் தனமாக நடந்து கொண்டு இருக்கிறது என்று சான்றிதழ் அளித்துவிட்டார். அப்படி இருந்தும் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய ராஜஸ்தான் அரசு சட்டத்தை சீர்குலைப்பதற்கு பக்கபலமாக இருக்கிறது. உ.பி உட்பட பல பாஜ அரசுகள் இதே நிலைபாட்டை எடுத்துள்ளன. குஜராத் தேர்தல் மற்றும் பொருளாதார கொள்கையின் தோல்வியால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே இந்த கலவரங்களை சங் பரிவாரங்கள் ஏற்படுத்தி வருகின்றன என்றால் அதில் மிகையில்லை.

ஆதாரமே இல்லை
ராணி பத்மாவதி அல்லது பத்மினி வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மிக குறைவு. மல்லிக் முகமது ஜெயசி என்ற சுஃபி கவிஞரின் படைப்புதான் இப்போது ஆதாரமாக இருக்கிறது. அது ஒரு கதையாடலாகவே நீடிக்கிறது. இதுபோன்ற கதை கட்டமைப்புகள் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டன. இதை அடிப்படையாக வைத்தே வரலாற்று சம்பவங்களும் சொல்லப்படுகிறது. பாஜ - சங் பரிவாரங்கள்  தெரிவிக்கும் பத்மாவதி, சித்தூர் கோட்டையில் முகமது கில்ஜி படையை எதிர்த்து போராடி வீர மரணம் எய்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அல்லது படையால் சூழப்பட்டவுடன் நூற்றுக்கும் அதிகமான பெண்களுடன் தீக்குளித்தார் என்பதற்கும் ஆதாரம் இல்லை. இவை அனைத்தும் மல்லிக்கின் படைப்புகள் மூலமாகவே வெளிப்படுகிறது. பன்சாலியும், பத்மாவதியை சிறுமைப்படுத்துவது போல் எந்த கதையும் அமைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். மேற்கண்ட படைப்புகளை முழுமையான வரலாற்று நிகழ்வாக வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் சிறு துரும்பு கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு கலவரத்தை உருவாக்குவதுதான் பரிவாரங்களின் கொள்கை. இதற்கு பின்னால் மிகப்பெரும் அரசியல் வர்க்க நலன் இருக்கிறது.

வரலாற்று திரிபுகள்
ராஜஸ்தான் மாநில அரசு பள்ளி பாடங்களில் வரலாற்றை திருத்தி தவறான விஷயங்களையும் திணித்து வருகிறது. 2017-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு சமூக விஞ்ஞான பாடத்தில் ஹால்டிகாட் என்ற இடத்தில் 1576-ல் அக்பருக்கும் மகாராணா பிரதாப் சிங்கிற்கும் நடைபெற்ற போரில் அக்பர் தோல்வி அடைந்தார் என்று தலைகீழாக மாற்றி எழுதி விட்டனர். ராணா பிரதாப்சிங் ஒரு வீரம் செறிந்த மன்னன் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. முகலாயர்களுக்கு அடிபணியாமல் போரிட்டார் என்பதும் உண்மை. எனினும் பத்தாயிரம் பேர் கொண்ட முகலாயர் படையுடன் 3400 பேர் கொண்ட ராணாவின் படை வெற்றி கொள்ள முடியவில்லை. போரின் முடிவில் முகலாயப் படையிடம் பிடிபடாமல் ராணா தப்பித்து விட்டார். ஹால்டிகாட் உட்பட கோகுண்டா, கும்பால்மீர் பகுதிகளும் பல ராஜபுத்திர சிற்றரசுகளும் கிழக்கு மேவார் பகுதிகள் முழுவதும் முகலாய ஆட்சிக்கு கீழ் வந்தன. ஹால்டிகாட் யுத்தத்தில் அக்பரின் முகலாய படைக்கு தலைமை ஏற்றவர் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜாமான்சிங் என்ற தளபதி ஆவார். ராணாபிரதாப் சிங்கின் படைக்கு தலைமையேற்றவர் அக்கிம்கான்சூர் என்ற ஆப்கான் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர் ஆவார்.

1579-ம் ஆண்டிற்கு பிறகு அக்பரின் முகலாயர் ஆட்சி இந்தியாவின் பிற பிரதேசங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் மேவாரின் மேற்கு பகுதியில் இழந்த சில பகுதிகளை ராணாபிரதாப்சிங் மீண்டும் பெற்றார். இதை சங் பரிவாரங்கள், இந்து முஸ்லீம் போராக, ராஜபுத்திர கௌரவமாக மாற்ற முயற்சிக்கிறது. மாறுபட்ட மதத்தை சார்ந்தவர்கள் தலைமையேற்று நடைபெற்ற ஒரு போர் என்ற பொது புத்தியை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கின்றனர். இந்த போரில் முகலாயர்களை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை என்றாலும் போரிட்ட பெருமை ராணாபிரதாப் சிங்கின் வீரத்தை சாருமே தவிர இங்கே மதத்திற்கோ, இனத்திற்கோ முக்கியத்துவம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்று ஆசிரியர் சதிஷ்சந்திரா ஹால்டிகாட் போர் என்பது பிரதேச சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான குறிக்கோள் கொண்டது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். பாடப்புத்தகத்திலேயே இப்படி ஒரு புரட்டை செய்பவர்களை தேசத்துரோகிகள் என்று சொல்லலாமா?

சாவர்கர் தியாகியாம்
ராஜஸ்தானில் 10-ம் வகுப்பு சமூக விஞ்ஞான பாடப்புத்தகத்தில் இந்து மகா சபையின் தலைவராக இருந்த வி.டி.சாவர்கர் பற்றி புகழ்ந்து எழுதி உள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காக அவரின் (சாவர்கர்) தியாகத்தை விளக்கிட வார்த்தைகள் இல்லை. அவரைப் போன்ற துணிச்சலான புரட்சியாளர் யாரும் இல்லை. அவர் மட்டும்தான் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார்... அவர் நாடு துண்டாடப்படுவதை தடுக்க பெருமுயற்சி செய்தார் என்று சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு பற்றி, நேருவின் பங்கு பற்றி மேலோட்டமாக ஒருசில வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றை இதைவிட அதிகமாக யாரும் திருத்தி - திரித்து எழுத முடியாது. வி.டி.சாவர்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினார் என்பது வரலாற்று உண்மை. அந்த விபரத்தை பார்ப்போம்..

அந்தமானில் குற்றவாளிகள் குடியேற்றம் என்ற தலைப்பில் கல்வியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசிதழ் வெளியீட்டு அமைப்பால் வெளியிட்ட புத்தகத்தில் நவம்பர் 14, 1913 தேதியிட்ட சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதம் உள்ளது. அதில், ஊதாரித்தனமாக திரிந்த மகன் அரசாங்கம் என்ற பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வதற்காக கதவைத் தட்டுகிறேன் என்று தன்னைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பு 1911-ம் ஆண்டு எழுதிய கருணை மனுவை சுட்டிக்காட்டி, அரசாங்கமானது தனது பயனாளர்களின் பட்டியலில் என்னையும் சேர்த்து என் மீது இரக்கம் காட்டி சிறையிலிருந்து விடுவித்தால், பிரிட்டிஷ் அரசின் மீதான என்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின் வளர்ச்சிக்காக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்வேன். இப்பிரச்சாரமே பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின் வளர்ச்சிக்கான அடிப்படையாக இருக்க முடியும். இரத்த உறவானது மற்ற உறவுகளைவிட வலிமையானது என்பதால், நாங்கள் சிறையில் இருக்கும் வரை, மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷாரின் பாசத்திற்குரிய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இந்திய குடும்பங்களில் உண்மையான சந்தோஷத்தையும், நிம்மதியையும் பார்க்க முடியாது. எங்களை விடுவித்தால் மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும், அரசாங்கத்தின் மீதான நல்லெண்ணத்தையும் ஆர்ப்பரித்து வெளிக்காட்டுவார்கள். பிரிட்டிஷ் அரசின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்ற எனது மனமாற்றமானது, என்னை குருவாக ஏற்றுக் கொண்டு தவறான வழியில் பயணித்து கொண்டிருக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் எண்ணற்ற இந்திய இளைஞர்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டு வரும். என்னுடைய இந்த மனமாற்றமானது உண்மையானதாகவும் மனசாட்சி அடிப்படையிலும் இருப்பதால் இந்த அரசாங்கத்திற்காக எந்த மட்டத்திலும் சேவை புரிவதற்கு தயாராக இருக்கிறேன். வலிமையானவர்கள் மட்டுமே இரக்கம் காட்ட தகுதி படைத்தவர்கள் என்பதால்தான் ஊதாரித்தனமாக திரிந்த மகன் என்ற முறையில் அரசாங்கம் என்ற பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வதற்காக கதவைத் தட்டுகிறேன்என்று கெஞ்சி கூத்தாடி மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் விடுதலை செய்யப்பட்ட பிறகு பிரிட்டிஷாரை எதிர்த்து எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அவர் மட்டுமல்ல அவரின் வாரிசுகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் விடுதலை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மை. சுதந்திர போராட்டத்தின் தலைவர்களாக இருந்த காந்தி, நேரு போன்றவர்களை புறந்தள்ளி, வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி தர மாட்டேன் என்று தூக்குமேடை ஏறிய கத்தார்சிங் சராபா, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், அஷ்வக்குல்லாகான் போன்றவர்களை மறைப்பது தான் வரலாற்று திரிபாகும். போலி வரலாற்றை உற்பத்தி செய்வது பாஜ - சங் பரிவாரங்கள்தான் என்பது இதிலிருந்து புலப்படும்.

ராஜஸ்தானில் 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நேருவின் பெயரை நீக்கிவிட்டனர். அங்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளனர். அவை அனைத்திலும் மோடி அரசின் வெளிநாட்டுக் கொள்கை உட்பட அனைத்து திட்டங்களும் புகழ்ந்து பேசப்படுகிறது. அரசியல் விஞ்ஞானம் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பணமதிப்பு நீக்கம் - வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்று புகழாரம் சூட்டி கருப்பு பணத்தை ஒழித்ததாக பீற்றிக் கொள்கிறது. மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்த வரலாறு மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.

10-ம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தாமரையின் வெற்றி, இந்திய கலாச்சாரத்தின் வெற்றி என்று எழுதி மனப்பாடம் செய்ய சொல்கின்றனர். சுகாதாரம் மற்றும் கல்வி சம்பந்தமான பாடப்பிரிவில் உணவருந்தும் முன் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கவும், சைவ உணவின் பெருமைகளை பேசவும் சொல்லிக் கொடுக்கின்றனர். சங் பரிவாரங்களின் ராஜஸ்தான் ஆட்சி, வரலாற்றை திரிப்பது மட்டுமல்ல ஒட்டுமொத்தமான மனித உணர்வுகளுக்கு எதிராக, வாழ்க்கைக்கு எதிராக பயணித்து கொண்டிருக்கிறது.

முழுவதுமாக அகற்றம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முகலாயர்களை பற்றிய வரலாற்றையும், டெல்லி சுல்தான்களின் ஆட்சி பற்றிய வரலாற்றையும் முழுவதுமாக அகற்றிவிட்டனர். அவர்களால் கட்டப்பட்ட நினைவு சின்னங்ளையும், டெல்லியின் முதல் பெண் அரசி ரசியா சுல்தான் பற்றியும், முதல் செப்பு நாணயத்தை அறிமுகம் செய்த முகமது பின் துக்ளக் பற்றியும், இப்பொழுதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஜி.டி.ரோடு என்று அழைக்கக்கூடிய கிராண்ட் டிரங்க் சாலையை அமைத்தவரும், சாலைகளை மேம்படுத்தியவருமான ஷெர்ஷா - சூரி அரசர் பற்றியும் இந்த மாணவர்கள் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு வரலாற்றை மறைக்கிறார்கள். உத்திரப்பிரதேச மாநில அரசும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதில் முகலாயர்களின் ஆட்சி முன்னோர்களின் ஆட்சி என்று சொல்ல மாட்டோம். கொள்ளையர்களின் ஆட்சி, படையெடுப்பாளர்கள் ஆட்சி என்று சொல்லப்படும் என அமைச்சர்களே அறிவித்து வருகின்றனர்.

ஹிட்லர் மாபெரும் தலைவராம்
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது பல வரலாற்று திரிபுகளையும், குரோதங்களையும் அரங்கேற்றி உள்ளார். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள் ஆகியோர் வெளிநாட்டவர்கள் என்று அப்பட்டமான பொய் மூட்டைகளை பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமல்ல 10-ம் வகுப்பு சமூக விஞ்ஞான பாடப்புத்தகத்தில் ஹிட்லர் மாபெரும் தலைவர் (ழவைடநச ளுரயீசநஅடி) என்று புகழப்படுகிறார். (ஹிட்லரின் வாரிசுகள் அல்லவோ இவர்கள்) பாசிசம் - நாசிசம் புகழ்ந்துரைக்கப்படுகிறது. அதன் சாதனைகள் (?) விளக்கப்படுகிறது. பாசிசத்தால் தேச பக்தி நிலைநாட்டப்பட்டது என்று போதிக்கப்படுகிறது. ஹிட்லர் ஆட்சியின் கீழ் ஜெர்மனியில் அதிகார வர்க்க திறமையும், நிர்வாக திறமையும் போற்றப்படுகிறது. அதே நேரத்தில் பாசிசத்தால் விஷவாயு செலுத்தி மற்றும் வதை முகாம்களில் 60 லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டதை பற்றியோ, தொழிலாளர்கள், இடம் பெயர் தொழிலாளர்கள், ஜெர்மானியர் அல்லாத மற்றவர்கள் வேட்டையாடப்பட்டது பற்றி ஒருவரி கூட இல்லை. (டைம்ஸ் ஆப் இந்தியா செப் 30, 2004). காந்தி பிறந்த மாநிலத்திலேயே காந்தியை பற்றிய பாடங்கள் வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. மேடை தோறும் காந்தியை பற்றி மோடி முழங்கி வருகிறார். ஆனால் குஜராத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேசப்படுகிறது. 

பிள்ளையாரும், பிளாஸ்டிக் சர்ஜரியும்
இதுமட்டுமல்ல, விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிராகவும் கூட மூட நம்பிக்கைகளை முன்வைத்தும் பிரதமர் மோடியே வரலாற்றை தவறான திசையில் வழிநடத்தி செல்கிறார். வேதகாலம் இந்துக்களின் உரிமை என்று முழங்குகிறார். கடந்த நூறாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் அனைத்தும் வேதகாலத்தில் இருந்தது என்று பெருமை பேசுகின்றனர். மரபணு விஞ்ஞானம் வேதகாலத்திலே இருந்தது என்று மோடி, மருத்துவமனை திறப்பு விழாவில் பேசினார். இதற்கு மகாபாரத கர்ணன் உதாரணம் என்கிறார். பண்டைய காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்தது என்றும் அதற்கு விநாயகர் உதாரணம் என்று பேசினார். (றுந றடிசளாயீ பயநேளாத, வாநசந அரளவ யஎந நெந ய யீடயளவஉ ளரசபநசல அரளவ யஎந ளவயசவநன வாந) வரலாற்று திரிபுகளை பிரதமர் இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மகா அலெக்சாண்டரை தோற்கடித்த பெருமை பீஹாரிகளையே சாரும். ஏனெனில், தட்சசீலம் அப்போது பீகாருடன் இருந்தது என்று தேர்தல் காலத்தில் மோடி பேசினார். எனவே வரலாற்று திரிபு தேசத்துரோக குற்றமென்றால் அதை முதலில் செய்த பெருமை பிரதமர் மோடியையே சாரும்.

வரலாற்று அறிவு?
மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன் 2015-ல் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். கணக்கியலில் அல்ஜிப்ராவும், பித்தாகரஸ் சூத்திரத்தை இந்தியர்கள் கண்டுபிடித்தார்கள். வெளிநாட்டு அறிஞர்கள் அதை எடுத்து செல்ல அனுமதி கொடுத்துவிட்டார்கள் என்று பேசியுள்ளார்.

மற்றொரு மத்திய கல்வித்துறை அமைச்சர் சத்யபால்சிங், ரைட் சகோதரர்கள் 1903 ஆம் ஆண்டு விமானத்தை கண்டுபிடிப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே ஷிவ்கர் பாபுஜி தல்படே என்ற இந்திய விஞ்ஞானி விமானத்தை கண்டுபிடித்தார் என்று பறைசாற்றியுள்ளார். இதுதான் நமது மத்திய அமைச்சர்களின் வரலாற்று அறிவு.. அல்ல வரலாற்று திரிபு.

இந்தியாவில் சங் பரிவாரங்கள் ஆட்சி பீடம் ஏறியவுடன் பள்ளிக் குழந்தைகளின் சிந்தனையில் பிரிவினை, வகுப்புவாதம், குரோதம் ஆகிய வன்முறைகளை விதைக்கின்றனர். மனிதர்கள் என்ற மாபெரும் சமூக கட்டமைப்பை உடைக்கிறார்கள். பத்மாவதி படத்தின் மூலம் வரலாற்று திரிபை கண்டிக்கிற சங் பரிவாரங்கள் செய்து வரக்கூடிய வேலைகள் இவைதான்.

வரலாற்றை கடவுளால் கூட அழிக்க முடியாது. ஏனெனில் அத்தகைய சக்தி அவர்களுக்கு இல்லை என்று ஆப்பிரிக்க அறிஞர் அகதான் கூறினார். ஆனால் கடவுளை படைத்தவன் மனிதன் தான். அவனின் அச்சத்தை போக்கவும், வாழ்வை பாதுகாக்கவும் வணங்க ஆரம்பித்து பல கடவுள்களை படைத்தான். தன்னுயிரை பாதுகாக்க படைக்கப்பட்ட கடவுள் உருவங்களை சங் பரிவாரங்கள் கைப்பற்றி கொண்டு மக்களை வேட்டையாடவும் பிரித்தாளவும் செய்கின்றன.

முறியடிப்போம்
தற்போது பாஜ அரசின் பொருளாதார கொள்கை தோல்வி அடைந்துள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் உற்பத்தியாளர்கள், வேலை இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டக்களத்திலே குதித்து விட்டனர். தேர்தல் தோல்வி பயமும் அவர்களை தொற்றிக் கொண்டது. பொருளாதார வளர்ச்சி பற்றி பேசி தொடர்ந்து ஏமாற்ற முடியாது. எனவே உணர்ச்சிகளும், வெறிகளுமே இனி சங் பரிவாரங்களின் மூலதனமாக இருக்கும். நீங்கள் கண்மூடித்தனமாக பின்பற்றும் கும்பலை பெற்றுவிட்டால் வளர்ச்சி ஒரு பிரச்சனை அல்ல (னுநஎநடயீஅநவே டி டடிபேநச யள வடி நெ ளைளரந. றாந லடிர யஎந டெனே கடிடடடிறநசள) என்ற வார்த்தைகள் சங் பரிவாரங்களின் வழிகாட்டியாக அமைந்துள்ளது. வகுப்புவாத துவேஷத்தை தூண்ட, மக்களை பிளவுப்படுத்த, சங் பரிவாரங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அந்த முயற்சிகளை முறியடிப்பது அனைவரின் கடமையாகும்.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...