Pages

செவ்வாய், டிசம்பர் 12, 2017

அம்மாவின் சட்டமன்ற கட்டிடமும் ஐந்து குடிசை அம்மாக்களின் ஆலோசனையும்

                         ஏ.பாக்கியம்

           

தமிழக சட்டமன்ற கட்டிடம் இடம் நெருக்கடியால் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று முடிவெடுத்து திமுக ஆட்சியில் புதிய சட்டமன்ற கட்டிடம் அரசினர் தோட்டத்தில் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அன்று நடைபெற்ற தேர்தலில் திமுக ஆடசியை இழந்து அதிமுக தலைமையில் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். புதிய சட்டமன்ற கட்டிடத்தை அவர் விரும்பவில்லை. எனவே, இடம் நெருக்கடி இருந்தாலும் பழைய சட்டமன்ற கட்டிடம் பாரம்பரியமான கட்டிடம் என்று பாரம்பரியத்தை பாதுகாக்கக்கூடிய முறையில் அதே இடத்தில் சட்டமன்றத்தை நடத்தினார். 

           இதே பாரம்பரியத்தை நகர்புற ஏழை மக்கள் மீது அவரின் அரசு ஏன் காட்டக்கூடாது. பாரம்பரியமாக குடியிருந்து வரும நகர்புற ஏழைகளையும், குடிசைவாழ் மக்களையும் சென்னையை விட்டு துரத்தக்கூடிய செயலை அவர் தலைமை தாங்கிய இன்றைய அரசு செய்து வருகிறது. தற்போது சென்னை நகரில் அடையாறு, கூவம் நீர்நிலை குடியிருப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிந்தாதரிபேட்டையில் உள்ள ஐந்து குடிசை என்ற பகுதி மக்களை வெளியேற்றுவதில் மாநில அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

             சிந்தாதரிபேட்டை 62வது வட்டத்தில் ஐந்து குடிசை என்று பெயரில் சுமார் 950 குடிசைகள் இருக்கிறது. பலபத்தாண்டுகளுக்கு முன்பு ஐந்து குடிசை என்ற நிலையிலிருந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த 950 வீடுகளில் மாநில அரசு தீப்பிடிக்காத வீடுகள் என்ற முறையில் 350 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. இந்த குடிசைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளது. ஆதார் கார்டு உள்ளது. மின் இணைப்பு உள்ளது. வங்கி கணக்கு உள்ளது. இது போன்ற அரசின் அனைத்து ஆதாரங்களையும் வைத்துள்ளனர். ஆனால் தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற முறையில் இவர்களை அப்பறப்படுத்த அரசு நிர்வாகம் முயற்சிக்கின்றது. நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் அவற்றை அப்புறப்படுத்துவது நியாயமானது.

           இந்த முயற்சியை யாரும் எதிர்ப்பதில் நியாயம் இருக்காது. அதே நேரத்தில் இம்மக்களை 40 கி.மீ தாண்டி பெரும்பாக்கத்தில் குடியமர்த்துவதை மனித உரிமை அடிப்படையிலும், இயற்கை நியதி அடிப்படையிலும் ஏற்று கொள்ள முடியாது. அருகிலேயே வீடு கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தால் எங்கே இடம் இருக்கிறது என்று அதிகாரிகளும் அரசும் ஏழை மக்களை பார்த்து கேள்வி கேட்கிறது. ஆனால் ஐந்து குடிசை மக்கள் இருக்கிற இடத்தை சுட்டகாட்டினால் அந்த இடத்தில்  வீடு கட்டி கொடுக்க மறுக்கிறார்கள். இதோ அதற்கான விவரங்களை அரசிடம் மீண்டும் பாரம்பரிய குடியிருப்பாளர்கள் முன்வைக்கிறோம்.

            ஐந்து குடிசை பகுதியில் தற்போது அரசு கட்டிக் கொடுத்த கல்நார் வீடுகள் உட்பட 950 வீடுகள் உள்ளன. அரசின் திட்டப்படி ஆற்றின் மையப்பகுதியிலிருந்து 50 மீ தூரம் வரை இரு கரைகளிலும் எந்த கட்டுமானமும் இருக்கக்கூடாது என்றும் 50 மீ வரையிலான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் என்றும் திட்டம் உள்ளது. ஆனால் ஐந்து குடிசை பகுதியில் ஆற்றின் நடு பகுதியிலிருந்து குடிசை பகுதி வரை 246 அடி உள்ளது. இதில் 50 மீ போக மீதம் 76 அடி அகல நிலம் உள்ளது. மறுபுறத்தில் சிந்தாதரிப்பேட்டை காவல்துறை சாவடியிலிருந்து நெடுஞ்செழியன் காலனி வரை 800 அடி நீளம் உள்ளது. இந்த இடங்களில்தான் பெரும்பாலான குடிசைகள் உள்ளன.

        எனவே, இந்த இடத்தின் மொத்த அளவு 60,800 சதுர அடியாகும். ஆற்றிலிருந்து 50 மீ க்கு அப்பால் உள்ள இந்த இடத்தில் ஏன் எங்களுக்கு மாடி வீடு கட்டிக்கொடுக்கக்கூடாது என்று அப்பகுதி மக்கள் கேள்விகள் கேட்கிறார்கள். 60,800 சதுர அடியில் கட்டிட பயன்பாடுகளுக்கு பொது இடமாக 20,000 சதுர அடியை அதவாது 33 சதவீதம் இடத்தை ஒதுக்கிவிட்டாலும் மீதி 40,800 சதுர அடி இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 400 சதுர அடி என்று வீடு கட்டிக் கொடுத்தால் கூட தரைத்தளத்தில் 102 வீடுகள் கட்டலாம். எனவே, இதையே செம்மஞ்சேரியில் கட்டியது போல் 8 அடுக்குகள் கட்டினால் 816 வீடுகள் கட்ட முடியும். இப்பகுதி மக்களின் 99 சதவிதம் குடும்பங்களுக்கு இங்கேயே வீடு கொடுக்க முடியும். இந்த ஐந்து குடிசையில் வாழக்கூடிய மக்கள் வானகரம் மீன் மார்கெட்டிலும், சிந்தாதரி  மீன் மார்கெட்டிலும், மீன்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய கூடங்களிலும், சிந்தாதரிபேட்டை சுற்றுவட்டாரத்தில் முறைசாரா தொழிலிலும் ஈடுபடக்கூடியவர்கள்.

           இவர்களின் குழந்தைகள் இங்கிருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். பெரும்பாக்கத்தில் வீடு கட்டிக் கொடுப்பதற்கு ஒரு வீட்டிற்கு ரூ 6.5 லிருந்து 7 லட்சம் வரை (கமிஷன் எவ்வளவு என்று தெரியாது) செலவழிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்குள்ளேயே இதே தொகையில் வீடு கட்டிக் கொடுக்க முடியும் என்று பல நிறுவனங்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளன. மேற்கண்ட 816 வீடுகளை கட்டுவதற்கு ரூ 57 கோடி மட்டும்தான் செலவாகும். (சேகர் ரெட்டி வகையறாக்களிடம் இதை விட பலமடங்கு பணம் இருக்கிறது.) இதை ஏன் அரசு செய்யக்கூடாது என்று அப்பகுதி பெண்கள் கேள்வி கேட்கிறார்கள்.

         ஆற்றின் ஓரத்தில் இவளே பெரிய அடுக்குமாடி வீடுகளை கட்டிக் கொடுக்க முடியாது என்று அரசு அதிகாரிகள் மறுக்க முடியாது. காரணம் ஐந்து குடிசைக்கு அருகாமையிலேயே நெடுஞ்செழியன் என்ற பெயரில் நான்கு மாடி உயரத்தில் பல அடுககுமாடி கட்டிடங்களை இதை குறைவான இடத்தில் குறைவான அளவில் வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். பல பத்தாண்டுகளாக அந்த வீடுகள் பழுதடையாமல் இருக்கிறது. ஆகவே அரசு எந்த காரணத்தை சொல்லியிம் இந்த நியாயமான கோரிக்கையை தட்டிக் கழிக்க முடியாது.

              இதை மீறி அரசு இதை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறது என்றால் அந்த இடத்தை வசதி படைத்தவர்களுக்கு தாரை வார்ப்பதற்காக தயாராகிவிட்டது என்றுதான் அர்த்தம். ஏற்கனவே,  போரூர், சித்ரா தியேட்டர் எதிரில் உள்ள நிலம், சிட்டி சென்டர் உள்ள இடம் ஆகிய இடங்களிலிருந்து நகர்புற ஏழைகள் வெளியேற்றப்பட்ட உடன் அங்குள்ள நிலங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரம்விளக்கு பகுதியில் திடீர் நகரும் இதில் சேரலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சேப்பாக்கம் பகுதியிலேயே பூதபெருமாள் கோயில் தெருவில் உள்ள மக்களுக்கு அருகாமையிலுள்ள காலி இடங்களில் வீடு கொடுக்க முடியும்.

               

இதே போன்று துறைமுக தொகுதிக்குட்பட்ட காந்தி நகர், இந்திரா நகர் பகுதிகளிலும் அடுக்குமாடி வீடுகளை கட்டி கொடுக்க முடியும். இதுதான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அனைத்து மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக் கொண்டால்மட்டும் போதாது. அடித்தட்டு மக்களுக்கு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இது போன்று வெளியேற்றப்படும் ஒவ்வொரு பகுதியிலும் அம்மக்களை குடியமர்த்த இடங்கள்  இருக்கிறது. அதை கண்டுபிடித்து அமுலாக்க வேண்டும்.

தீக்கதிர் 10.12.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...