Pages

புதன், மார்ச் 08, 2017

பன்முக பணியில் வாலிபர் சங்கம்


-ஏ.பாக்கியம்
    தமிழகத்தின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு உரிமைக்காக ஒருவார காலம் மாணவர்களும் இளைஞர்களும் தமிழகத்தை எழுச்சி கொள்ள செய்தனர். இளைஞர்களின் எழுச்சிக்கு தமிழகத்தின் உழைப்பாளி மக்கள் உறுதுணையாக இருந்தனர். இந்த எழுச்சி கண்டு மிரட்சி கொண்ட மத்திய மாநில அரசுகள் போராட்ட குணத்தை பொசுக்கிட புறப்பட்டுள்ளார்கள். மத்திய அரசின் தூண்டுதலோடு மாநில அரசும் அதன் காவல்துறையும் அரசியல் சட்டத்தை மீறி அடிப்படை உரிமைகளை காலில் போட்டு மிதித்து காட்டாட்சிக்கு பச்சை கொடி காட்டி வருகின்றனர். இதனால் சமூக பதட்டத்தை உருவாக்கி உழைக்கும் மக்களை உருக்குலைக்க முயற்சிக்கின்றனர். 


    எனவேதான் அமைப்பு ரீதியில் அணிதிரண்டு கொள்கை ரீதியில் செயல்பட்டு வரும் இளைஞர், மாணவர் அமைப்புகளை அழித்து விடலாம் என்று பகல் கனவு கண்டு அவதூறுகளை தமிழக அரசும் காவல்துறையும் பரப்பி வருகிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் சமூக விரோத சக்தி போல் கோவை மாநகர ஆணையர் அமல்ராஜ் பத்திரிக்கை பேட்டியில் பேசியுள்ளார். அவரின் அதிகாரத்தை கடந்த ஆத்திரத்தை முன்னிறுத்திய செயலாக மட்டும் இதை பார்க்க முடியாது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 10வது அகில இந்திய மாநாட்டிற்கு கொடி பயணத்திற்கு தடை விதித்து கொடி பிடிக்க கூடாது என்று அந்த மாவட்ட காவல்துறையும், நிர்வாகமும் கலவரம் செய்துள்ளது. ஆளுவோருக்கும் அரசு நிர்வாகத்திற்கும் ஏன் இந்த மிரட்சி என்று புரிந்து கொள்ள முடியவில்லை. சங் பரிவாரங்களின் மிரட்சியை அவர்களின் அரசியலை தமிழக அரசு சிரமேற்று செயல்படுத்துவதனால் இந்த மிரட்சி வந்திருக்கிறது. சங் பரிவாரங்களை போன்று இந்த இயக்கம் சுதந்திர போராட்டத்தில் காட்டிக் கொடுத்தும் பல நேரங்களில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த இயக்கம் அல்ல. மக்கள் ஒற்றுமையை மதத்தின் பெயரால் கூறு போடும் இயக்கம் அல்ல இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். 


     மாறாக, சுதந்திர போராட்டத்தின் எண்ணற்ற இளைஞர்களின் தியாகத்தின் மீது ஆணிவேரை ஆழப்பதித்துள்ள இயக்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். 1980 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி பஞ்சாப் மாவட்டம் லூதியானா - வில் இந்த இயக்கம் துவங்குகிற போது இந்த கொடியை பகத்சிங்-கின் தோழர்கள் நவஜவான் பாரத் சபா மற்றும் இந்துஸ்தான் சோசலிச குடியரசு இராணுவம் (ழளுசுஹ) என்ற இளைஞர் அமைப்பின் அங்கத்தினர்களின் வாரிசுகளான சிவவர்மா, கிஷோரில்லால் போன்றவர்கள் இந்த கொடியை ஏற்றி வைத்தார்கள். அவர்களால் ஏற்றி வைக்கப்பட்ட கொடியும், நிறைவேற்றப்பட்ட கொள்கையும் இந்திய நாடு முழுவதும் பட்டொளி வீசி படர தொடங்கியது. அனைத்து தடைகளையும் தவிடுபொடியாக்கி, தியாகிகளின் உதிரத்தை உரமாக்கி தேசத்தின் நலனை முன்னிறுத்தி வாலிபர் இயக்கம் வளர்ந்து கொண்டே வருகிறது. இந்த வளர்ச்சியை சங் பரிவார ஆசியுடன் நடைபெறும் நிர்வாகங்களால் அழித்து விட முடியாது. மாணவர், இளைஞர் எழுச்சி கண்டு அச்சமடைந்தவர்கள் தோல்வியடைந்தவர்கள் ஆட்சியை பாதுகாக்க பிச்சை கேட்பவர்கள்தான் சமூக விரோதி, தேச விரோதி என்ற முத்திரையை தூக்கி கொண்டு முடக்க நினைக்கிறார்கள். 


    தேசத்தின் ஒற்றுமைக்காக பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடிய பாரம்பரியம்தான் வாலிபர் சங்கம். பஞ்சாபின் மாநில தலைவராக இருந்த குருநாம் சிங் உப்பல் காளிஸ்தான் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். மாநில செயலாளராக தேர்வு பெற்றால் படுகொலை செய்வோம் என்று தீவிரவாதிகள் மிரட்டிய பொழுதும் தேச ஒற்றுமைக்காக உயிரை இழக்க தயார் என்று பொறுப்பேற்று செயல்பட்ட சோகன்சிங்தேசியும் தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு பலியானார். பஞ்சாபின் தலைவர்களே தேச ஒற்றுமைக்காக பலியானார்கள். அசாமில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உல்ஃபா, போடோ மற்றும் பல அமைப்புகள் இந்திய நாய்களே வெளியேறுங்கள் என்று பிரிவினைவாத கோஷத்தை முன்வைத்த அமைப்புகளை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராடி எண்ணற்ற தலைவர்களை இழந்துள்ளது. (அந்த பிரிவினைவாதிகளின் வாரிசோடு தான் இன்றைய பிஜேபி கூட்டணி வைத்துள்ளது). மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தை தனி மாநிலமாக, தனி நாடாக பிரித்து கூர்காலாந்த் அமைக்க  வேண்டுமென்று பிரிவினைவாத போராட்டம் நடந்தது.
    
     தேசத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராடியது. இந்த ஒற்றுமைக்கான போராட்டத்தில் டார்ஜிலிங்கில் மட்டும் 127 வாலிபர் சங்க தோழர்களை இழந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் தீவிரவாதிகளை எதிர்த்து அன்றும் இன்றும் போராடி கொண்டிருக்கக் கூடிய அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். மதப்பிரிவினையின் அடிப்படையில் அல்ல. மக்கள் ஒற்றுமையின் அடிப்படையில் ஒன்றுபட்ட இந்தியாவின் அங்கம் என தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அகண்ட பாரதம் என்று பேசிக்கொண்டே இந்திய மக்களை துண்டாட துடிக்கும் சங் பரிவாரங்களுக்கு மாறாக இருக்கிற இந்தியாவின் ஒற்றுமைக்காக உயிர்கொடுத்து உதிரம் சிந்தி உடமையை இழந்து மக்கள் மனதிலே இடம்பிடித்து வளர்ந்து கொண்டிருக்கிற இயக்கம் இந்திய ஜனநாயக வாலிர் சங்கம். 


    எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் கல்வி என்ற கோரிக்கையின் மீது கோடிக்கணக்கான இளைஞர்களை ஈர்த்து அணிதிரட்டி வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இயக்கம். 1977 ஆம் ஆண்டு தமிழகத்தின் குமரி முனையிலிருந்து சென்னை கோட்டை வரை வேலை, கல்வி மற்றும் வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட சைக்கிள் பேரணி நடத்தி வெற்றி கண்ட இயக்கம். அப்போதைய முதலமைச்சர் இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் அறிவிக்க அச்சாரமிட்ட இயக்கம் இது. 
             1982 ஆம் ஆண்டு  தமிழகத்தில் சாதிய அணிதிரட்டல், மோதல்கள் அதிகமான பொழுது தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் சாதி மத மாநாடுகளில் பங்கேற்க கூடாது என்று பிரச்சாரமும், போராட்டங்களும் நடத்திய அமைப்பு. பல இடங்களில் தாக்குதல்களும், கைதுகளும் நடந்தபொழுதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. சாதிய சக்திகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. 


        1985 ஆம் ஆண்டு தமிழகத்தில் மருத்துவ கல்வியை தனியாருக்கு தாரை வார்க்க எம்.ஜி.ஆர்.தலைமையிலான அரசு முடிவெடுத்தது. இராமசாமி உடையார் தலைமையில் இராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கொடுக்கும் நிகழ்வு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பொழுது அண்ணாசிலை அருகில் கருப்பு துணி கட்டி நூற்றுக்கணக்கான இளைஞர்களை திரட்டி போராட்டம் நடத்திய இயக்கம். கல்வி கடைச்சரக்காவதை எதிர்த்த போராட்டத்தின் துவக்கமாக இது அமைந்தது. அடுத்தடுத்து நடந்த போராட்டங்களின் மூலமாக இராமச்சந்திரா மருத்துவ கல்லூரி தாமரை என்ற பெயரில் அரசுடைமையாக்கப்பட்டது. (பிறகு அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது).


       1988 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜாக்டீ என்ற கூட்டமைப்பின் மூலம் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். அன்றைய மாநில அரசு அவர்களை வேட்டையாடியது. போராட அனுமதிக்கவில்லை. கூட்டம் கூட்டமாக கைது செய்தது. அவர்களுக்கு ஆதரவாக அவர்களின் கோரிக்கைகளின் நியாயத்தை கருதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் களத்தில் இறங்கியது. சென்னை கோட்டையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன், தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்ட வெற்றிக்கு பேருதவி புரிந்தனர். 


       1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் பஸ் கட்டணத்தை அதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தியது. புதிய ஆட்சி எனவே எதிர்க்க வேண்டாமென்று பல கட்சிகள் வியாக்கியானம் பேசி கொண்டிருந்த சூழலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்தில் இறங்கியது. ஜெ அரசு அடக்குமுறைகளை ஏவி குமரி முதல் சென்னை வரை அனைத்து சிறைகளிலும் பல்லாயிரம் இளைஞர்கள் அடைக்கப்பட்டார்கள். பல சிறைச்சாலைகளில் இளைஞர்களால் தீபாவளி விழாக்கள் கொண்டாடப்பட்டது. வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டையொட்டி நாடு முழுவதும் கொடியேற்று நிகழ்வுகள் நடந்தபொழுது சிறையிலே இருந்தவர்கள் கொடியேற்ற இயலாத நிலையில் இருந்தனர். ஒரு சிறைச்சாலையில் மறியல் கொண்டு சென்ற கொடியை எடுத்து மரக்கிளையில் கொடியேற்றினார்கள். சிறைச்சாலையில் கயிறு கிடைக்காது. உள்ளே வந்த ஒரு இளைஞன் தனது பூ நூலை கழற்றி கொடிக்கயிறாக மாற்றிய நிகழ்வு நெஞ்சை உருக வைத்தது. இத்தனை போராட்டங்களுக்கு பிறகு ஜெயலலிதா அரசு நிபந்தனையின்றி விடுதலை செய்தது மட்டுமல்ல பஸ் கட்டணத்தையும் குறைத்தது. 

         1992 ஆம் ஆண்டு தமிழகத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கிடவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்திடவும், மாவட்ட வாரியாக எந்தெந்த தொழில்களை தொடங்கி வளர்ச்சி ஏற்படுத்த முடியும் என்பதை ஸ்தூலமாக முன்வைத்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி குமரி முனையிலிருந்தும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி கோவையிலிருந்தும் வெள்ளுடை அணிந்து சைக்கிள் பயணம் சுமார் 2500 கிலோ மீட்டர் நூற்றுக்கணக்கான கிராமங்களை கடந்து லட்சக்கணக்கான இளைஞர்களை சந்தித்து ஆகஸ்ட் 28 அன்று கோட்டையை பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.

       1994 ஆம் ஆண்டு மத்திய மாநில அரசுகள் வேலை நியமன தடைச்சட்டத்தை கொண்டு வந்தனர். இதை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பிப்ரவரி 14 அன்று இந்த அரசாணையை எரிக்கும் போராட்டத்தை துவங்கியது. சென்னையில் பாரிமுனையில் துவங்கி குமரி முனை வரை அரசாணை எரிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். 

      தமிழகத்தில் மக்களின் அடிப்படையான பிரச்சனையாக இருந்தது பொது வினியோக முறை. இதில் நடைபெற்ற ஊழல்களை எதிர்த்து மாநிலம் முழுவதும் வாலிபர் சங்கம் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளை முறையாக வழங்குவது கிடையாது. 5000-க்கம் மேற்பட்ட மக்களை திரட்டி புதிய ரேஷன் கார்டுகளை வாங்கி கொடுக்கும் பணியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செய்தது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு லஞ்சம் கொடுக்காமல் ரேஷன் கார்டை வாங்கி கொடுக்க முடிந்தது. சேலத்தில் ரேஷன் கார்டு கொடுப்பதற்காக அதிகாரிகள் ரூபாய் 2 லட்சம் வரை லஞ்சம் வாங்கியிருந்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராடி அந்த லஞ்சப்பணத்தை ரேஷன் கார்டுடன் திரும்ப பெற்றுக் கொடுத்தது.

     மேற்கு வங்கத்தில் இடதுசாரி தலைமையிலான அரசு முதன்முதலாக வேலையில்லா கால நிவாரணத்தை வழங்கியது. அந்த அரசு தொழில் தொடங்க மத்திய அரசு நிதியுதவு செய்ய மறுத்தது. இந்த சூழலில் மாநில அரசு சொந்த மாநிலத்தில் நிதி திரட்டி பக்ரேஷ்வர் மின்திட்டத்தை உருவாக்கியது. இதை உருவாக்குவதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நாடு முழுவதும் இரத்த தானம் செய்து அதன் வருவாயை திட்டத்திற்கு கொடுத்தது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இரத்த தானம் செய்து வங்கத்திற்கு அனுப்பி வைத்தனர். தமிழக அரசு அதை அனுப்ப மறுத்தபொழுது அன்றைய ராஜ்யசபா உறுப்பினர் தோழர் ஏ.நல்லசிவன் அதிகாரிகளை சந்தித்து அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தார். தங்கள் உயிர் சக்தியான ரத்தத்தை கொடுத்து, மனித குலத்தின் தவிர்க்க முடியாத சக்தியான மின் சக்திக்கு உயிர் கொடுத்தார்கள். இப்படி தேசம் முழுக்க வாலிபர் சங்கத்தின் தியாகத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.
சென்னையில் 1986 ஆம் ஆண்டு மார்ச் 23-ல் (பகத்சிங் நினைவு தினம்) வாலிபர் சங்கம் ரத்ததான கழகத்தை ஆரம்பித்து ரத்த தானம் செய்து வரும் இயக்கம் டிஒய்எப்ஐ. 1989ம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டுகள் வரை மாநிலத்திலேயே அதிகளவு இரத்த தானம் செய்த அமைப்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இருந்தது. சென்னையில் அதிக இரத்த தானம் செய்த பணிக்காக பல ஆண்டுகள் அதற்கான விருதை பெற்றுள்ளது. 


அப்போதெல்லாம் ரத்தம் கொடுத்தால் செத்துப் போயிடுவோம் என்ற பயத்தில், அது உண்மையில்லை என்றாலும் கூட, யாருமே ரத்த தானம் செய்ய வரமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நகர்ப்பகுதி குடிசையில் இருந்து குக்கிராமங்களில் உள்ள இளைஞர்கள் வரை நம்பிக்கையூட்டி ரத்த தானம் செய்த அமைப்பு டிஒய்எப்ஐ.


       ரத்த தானம் வழங்கியதில் டிஒய்எப்ஐ தோழர்கள் காக்கி, காவி என்றெல்லாம் நிறபேதம் பார்த்ததில்லை. நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாலிபர் சங்கத் தோழர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். (இது அமல்ராஜுக்கோ, ஜார்ஜிக்கோ தெரியாது?!)

1995 பிப்ரவரி 7 அன்று சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் எதிர்ப்பு இயக்கத்தை டிஒய்எப்ஐ நடத்தியது. இதற்காக 3000 இளைஞர்களை திரட்டி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், காமராஜர் அரங்கத்தில் கருத்தரங்கும் நடைபெற்றது. போதை பொருளை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மிகப்பெரிய மாரத்தான் ஓட்டத்திற்கு டிஒய்எப்ஐ ஏற்பாடு செய்தது. அதற்கு அன்றைய காவல்துறை, போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி மாரத்தான் நடத்த வேண்டாம் என்று சொன்னது. நீதிபதியும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து ஓட்டம் கைவிடப்பட்டு தீர்மானம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. (சட்டத்தை மதித்த... மதிக்கும் டிஒய்எப்ஐ யா சமூகவிரோதி?)

1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 20,000 கண் தானங்கள் செய்வது என்று முடிவு செய்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் 40,000-க்கும் மேற்பட்ட கண்தான பத்திரங்களை தமிழக மருத்துவமனையில் வாலிபர் சங்க மாவட்டக்குழுக்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். அன்றைய தினம் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பள்ளியில் நடைபெற்ற கண்தான நிகழ்ச்சியில் 6000 பத்திரங்களும், செங்கையில் 2500 - க்கும் மேற்பட்ட பத்திரங்களும் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது. 


        தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்ற நடவடிக்கையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பஞ்சாப் தியாகி சோகன்சிங்தேசி நினைவு நாளையொட்டி தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இக்காலத்தில் நட்டு பராமரித்து வந்தது. 
1993 ஆம் ஆண்டு மதுரை மாநகரம் வெள்ளத்தால் மிதந்தது. வைகை வெள்ளப் பெருக்கால் கரையோர வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மீனாட்சிபுரம் உட்பட பல பகுதிகளில் உள்ள வீடுகள் சகதிகளால் மூடப்பட்டது. மக்கள் வீதியில் விக்கித்து நின்றார்கள். 15 நாட்கள் சகதிகளோடு சலைக்காத போராட்டம். சேற்றை அள்ளி சுத்தப்படுத்தி, வீட்டை கழுவி விக்கித்து நின்ற மக்களை குடியேற செய்தது வாலிபர் சங்கம். அதுமட்டுமல்ல சுமார் 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை சேகரித்து மருத்துவ முகாமை நடத்தினர். 
சென்னை கே.கே.நகரில் உள்ள புறநகர் மருத்துவமனை புதர்க்காடுகளாக மண்டி கிடந்தது. நோயாளிகள் சென்றுவர முடியாது. அரசு நிதி ஒதுக்கவில்லை. சுத்தம் செய்ய ஆட்கள் இல்லை. சென்னை மாநகர வாலிபர் சங்கம் 200-க்கும் மேற்பட்ட வாலிபர்களை திரட்டி காடுகளாக இருந்த மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தி மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தி கொடுத்தது. அதிக நிதி ஒதுக்கி மருத்துவமனையை பராமரிக்க போராட்டமும் நடத்தியது. இப்போது அந்த மருத்துவமனை இந்த அளவு செயல்படுவதற்கு இந்த வெள்ளுடை இளைஞர்களின் அர்ப்பணிப்பு அடிப்படையானது. 


     மதுரை இராஜாஜி மருத்துவமனை நிதி இல்லாமல், பராமரிப்பு இல்லாமல் அழுக்குகள் நிறைந்து நோய் பரப்பும் இடமாக காட்சியளித்தது. நிதி ஒதுக்க வேண்டுமென 1995 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி மறியல் நடத்தியது. காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. நூற்றுக்கணக்கான தோழர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். 80 பேர்களுக்கு மேல் (மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் பி.மோகன், மாநில தலைவர் ஏ.பாக்கியம் உட்பட) கைது செய்யப்பட்டு மதுரை சிறையிலே அடைக்கப்பட்டார்கள். அதன்பிறகு மாநில அரசு இராஜாஜி மருத்துவமனையின் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது. தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தது. மருத்துவமனையின் இன்றைய இருத்தலுக்கு வாலிபர் சங்கம் தோழர்களின் உதிரமும் போராட்டமும் காரணமாக அமைந்தது.


        சமூக விரோதிகள் என்று சர்வசாதாரணமாக ஆளுவோர்களும், அவர்களின் எந்திரமாக செயல்படும் அமல்ராஜ்களும் பேசிவிடுகிறார்கள். தமிழகம் முழுவதும் சமூக விரோதிகளின் சவால்களை சந்தித்து மக்கள் போராட்டங்களை நடத்தியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். கள்ளச்சாராயத்தை எதிர்த்து கடலூரில் கடும் போராட்டத்தை நடத்தியது டிஒய்எப்ஐ தான். இதனால் குமார், ஆனந்தன் ஆகிய டிஒய்எப்ஐ தோழர்கள் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது எஸ்.பி ஆக இருந்தவர் சைலேந்திரபாபுதான். எஸ்.பி. ஆபீசிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் நடந்த இந்த படுகொலையில் எஸ்.பி. சைலேந்திர பாபு தலைமையிலான காவல்துறை யாருக்கு சாதகமாக நடந்து கொண்டது என்பதும் ஊரறிந்த ரகசியம். 

சென்னையில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் போதைப் பொருட்கள் விற்பனை நடந்து கொண்டிருந்தது. நடந்து கொண்டும் இருக்கிறது. இவர்களால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பதாலும் பொதுவெளியில் விற்பனை நடைபெறுவதை தவறு என்று காவல்துறையில் புகார் செய்தால் அத்தகவல் அவர்களுக்கு சென்று வாலிபர் சங்க தோழர்களை தாக்குவார்கள். தாக்கியதை புகார் செய்ய சென்றால் ஸ்தல காவல்துறை கள்ளச்சாராய போதைபொருள் விற்பனையாளர்களுக்கே ஆதரவாக நிலை எடுத்து வாலிபர் சங்க தோழர்களை சிறையிலே தள்ளும். சென்னையின் மையப்பகுதியான பெரியமேடு துவங்கி சுற்றுவட்டாரம் முழுவதும் இதற்கு சான்று. சமூக விரோதிகளுக்கும், ஸ்தல காவல் நிலையங்களுக்கும், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் உள்ள பலமான உறவை எதிர்த்து போராடியதால் நூற்றுக்கணக்கான வாலிபர்கள் சிறை சென்றுள்ளனர். யார் சமூக விரோதிகள் என்று இந்த அமல்ராஜ் வகையறாக்கள் இப்போது முடிவு செய்யட்டும். 


மக்கள் ஒற்றுமைக்கான போராட்டத்தில், சமுக விரோதிகளை சமரசமின்றி எதிர்த்த போராட்டத்தில் விருதுநகர் சந்துரு, மண்டபம் முத்து, வியாசர்பாடி ராஜூ, நெல்லை வி.கே.புரம் குமார், குமரி அருமனை சுதாகர் என ஏராளமான தோழர்களை டிஒய்எப்ஐ இழந்திருக்கிறது. இவர்கள் எல்லாம் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக போராடியவர்கள் அல்ல. மக்கள் பிரச்சினைகளுக்காக போராடியவர்கள். அதற்காக மரணத்தை பரிசாக ஏற்றவர்கள். (இது காக்கி கனவான்களுக்கு தெரியாது)


நெல்லை மாவட்டத்தில் நெல்லை நகரை சுற்றிலும் சாதிய மோதல்கள் நடந்து பல மரணங்கள் நிகழ்ந்தது. தொடர்ந்து சிலைகள் தகர்ப்பு, மோதல்கள் என்ற நிகழ்வுகள் மக்களை அச்சுறுத்தின. இந்த பின்னணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆயிரம் இளைஞர்களை வெண்கொடியுடன் அணிதிரட்டி கயத்தாரில் கட்டபொம்மனுக்கு மாலை அணிவித்து நெல்லை வரை பாதையாத்திரை சென்றனர். சாலைகளில் மட்டுமல்ல சாதிக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்கள் வழியாக மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மகத்தான பயணத்தை ஒரே நாளில் நடத்தி முடித்த இயக்கம்.

         2004 டிசம்பர் 26-ல் ஆழிப்பேரலை (சுனாமி) அடித்து நொறுக்கிய போது நிவாரணப் பணிகளில் முழு மூச்சோடு ஈடுபட்டது டிஒய்எப்ஐ. எண்ணூரில் இருந்து சீனிவாசபுரம் வரை ஒரு பகுதி, கடலூரில் இருந்து நாகப்பட்டினம் மற்றும் குமரி வரை மற்றொரு பகுதி என கடலில் அழுகி மிதந்த பிணங்களை தோளில் சுமந்து கரைசேர்த்த தோழர்கள் டிஒய்எப்ஐ தோழர்கள்தான். (இதை படிக்கும் மனிதர்கள் மனம் கசிவார்கள். ‘பிரிடேட்டர்’கள் அல்ல. காரணம் அவர்கள் இரும்பால் ஆனவர்கள்.)

    2015 நவம்பர், டிசம்பரில் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மீட்பு பணி, மருத்துவ உதவி, உணவு வழங்குதல் உள்ளிட்ட நிவாரணப்பணிகளை சென்னை நகரம் முழுக்க செய்தது டிஒய்எப்ஐ. தங்களுடைய வீடுகளில் பலத்த சேதம் இருந்தாலும் அதைவிடுத்து மற்றவர்களுக்காக உயிரை கொடுத்து உதவி செய்தனர் டிஒய்எப்ஐ தோழர்கள். காவல்துறையே நுழைய தயங்கிய இடத்திலெல்லாம் டிஒய்எப்ஐ தோழர்கள் உயிரை பணயம் வைத்து மரணத்தின் வாயிலில் நின்று மக்களை காத்தார்கள்.


       கல்வி என்பதும், எழுத்தறிவு என்பதும் சென்னை மாநகர குடிசை பகுதிகளில் எட்டிப்பார்க்காத சூழ்நிலையில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச இரவு பள்ளியை துவங்கி நடத்தியது டிஒய்எப்ஐ. அப்போது ‘இங்கெல்லாம் வந்து நடத்தாதீங்க, இவனுங்க உருப்பட மாட்டானுங்க’ என்று ஏளனம் செய்தார்கள் காவல்துறை அதிகாரிகள். ஆனால், குடிசை பகுதிகளில் டிஒய்எப்ஐ -ன் கல்வி பணியால் நிலைமை மாறியதை தொடர்ந்து லோக்கல் போலீஸ் ஸ்டேசனில் உள்ள போலீஸ்காரர்கள் ‘இந்த ஊர் மாறியிருக்குன்னா அதுக்கு டிஒய்எப்ஐ தான் காரணம்’ என்று பாராட்டினார்கள். (இது அமல்ராஜிக்கு தெரிய வாய்ப்பில்லை)


      இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அதன் உதயத்திலேயே ஒற்றுமை, தியாகம் என்பதை உள்ளடக்கியிருக்கிறது. தேச ஒற்றுமை, மக்கள் ஒற்றுமை, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் என்ற கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்துகிறது. தெருப்பிரச்சனை முதல் தேசப்பிரச்சனைகள் வரை தீர்த்து வைப்பதில் இளைஞர்களின் பங்கை உரிய காலத்தில் செலுத்தி வந்துள்ளது. போராட்டம் மட்டுமல்ல. சமூக விரோதிகளை எதிர்த்தும், மக்களை பிளவுப்படுத்தும் சாதிவெறி மதவெறி சக்திகளை எதிர்த்தும் போராட்டக் களத்தில் நின்று வருகிறது. சமூக சேவையில் சங் பரிவாரங்களை போல் பிரிவினை பார்க்காமல் இரத்த தானம், கண்தானம், மீட்பு பணிகள், கல்வி பணிகள் என அனைத்திலும் முத்திரையை பதித்து வந்துள்ள இயக்கம். 


      ஜல்லிக்கட்டை முன்வைத்து தமிழகத்தில் வரலாறு காணாத மக்கள் எழுச்சிக்கு வாலிபர் சங்கத்தின் கடந்த கால செயல்பாடும் விழிப்புணர்வு இயக்கமும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது என்பதில் பெருமை கொள்கிறது. நடைபெற்ற எழுச்சியில் வாலிபர்களின் பிரதிநிதியாக சங்கமித்ததில் தனது கடமையை நிறைவேற்றியிருக்கிறது. அச்சம் கொண்ட அரசும், அதன் அடக்குமுறை கருவிகளும், எழுச்சியை அடக்கி விடலாம் என்று எண்ணி எத்தனை முறை முயற்சித்தாலும், அது முடியாது. 
மீண்டும் மீண்டும் போராட்ட அலைகள் பொங்கி எழும். 
அடக்குமுறையாளர்கள் பொசுங்கி போவார்கள்.

ஏ.பாக்கியம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநில தலைவர்
மாவட்ட செயலாளர் சிபிஐ(எம்)
இளைஞர் முழக்கம்.பிப்.2017








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...