Pages

செவ்வாய், மார்ச் 01, 2016

போராடினோம்.. வென்றோம்.. தொடர்ந்து போராடுவோம்

ஏ.பாக்கியம்
சிபிஐ (எம்) மாநிலக்குழு உறுப்பினர்

             அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன அந்த மரணத்தை... வணிக மய மருத்துவத்தின் மரண சாட்சியாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கும் அந்த துயரத்தை... அமுதா.. சென்னைவாசிகளின், தீக்கதிர் வாசகர்களின் நெஞ்சை சுட்ட பெயர்... உடல் மெலிய மருத்துவம் பார்க்கச் சென்றவரை லட்சக்கணக்கில் பணத்தை பறித்துக் கொண்டு, உருக்குலைத்து அனுப்பினார்கள். உடல் மெலிய வழி கேட்டவருக்கு, சுடுகாட்டுக்கு வழி சொன்னார்கள். அமுதாவின் மரணத்திற்கு காரணமான டாக்டர் மாறன் என்பவருக்கு டாக்டர் தொழில் செய்ய தடை விதித்திருக்கிறது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்.

அமுதா ஒரு பிளாஷ் பேக்

    சென்னை தி.நகரில் உள்ளது பாரதிராஜா மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் டாக்டர்கள் நடேசன், மாறன். இவர்கள், பணம் காய்க்கும் மரமாகத்தான் மனிதர்களை பார்க்கும் மனோபாவம் கொண்டவர்கள். சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியை சேர்ந்த கௌரி சங்கரின் மனைவி அமுதா(35), தெரியாத்தனமாக இவர்களிடம் போய் சிக்கி கொண்டார். உடல் மெலிய சிகிச்சை பெறுவதற்காக 01.08.2014 அன்று அமுதா, பாரதிராஜா மருத்துவனைக்கு செல்கிறார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறிய டாக்டர்கள் நடேசன் மற்றும் மாறன், இதற்காக ரூ.5 லட்சம் செலவாகும். ரூ.3 லட்சம் அட்வான்ஸ் தர வேண்டும் என்றனர். வியாபாரம் பேசி முடிக்கப்பட்டது. 11.08.2014ல் அறுவை சிகிச்சை, 14.08.2014ல் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமானதாக தெரியவில்லை. ஆனாலும், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்கு சென்றதில் இருந்து அமுதாவிற்கு தொடர்ந்து வயிற்று வலி, மார்பு வலி நீடிக்கவே மீண்டும் 26.08.2014 ல் மருத்துவர்கள் நடேசன், மாறனிடம் அழைத்து சென்றனர். 

           
அவர்கள் ஒன்றுமில்லை, 10 நாள்கள் பிசியோதெரபி செய்தால் சரியாகிவிடும் என ஆலோசனை வழங்கி சிகிச்சையளித்தனர். அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து சீழும், நீரும் வெளியேறியது. 31.08.2014ல் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதன் முடிவில் மீண்டும் இரண்டாவது தடவையாக அமுதாவிற்கு அதே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். 10.09.2014ல் எல்லாம் சரியாகிவிட்டது.. போங்க என்று அனுப்பினர். ஆனால், இம்முறை உணவை வாயால் உட்கொள்ளும் நிலையில் அமுதா இல்லை. அதனால், வயிற்றில் உணவு செல்வதற்காக துளை போட்டு, உணவை குழாய் மூலமாக செலுத்த வேண்டிய கருவிகளுடன் வீட்டிற்கு அனுப்பினர். அடுத்த 10 நாட்களில் மீண்டும் அமுதாவுக்கு வலியும், இதர உபாதைகளும் ஏற்பட்டன. 

         அமுதா துடிப்பதை தாங்க முடியாமல், அவரை அழைத்து சென்று விஆர்ஆர் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். இந்த பரிசோதனை முடிவோ அடுத்த அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்தது. நடேசனும், மாறனும் அமுதாவின் கணவரை அழைத்து, எங்களுக்கு கட்ட வேண்டிய பாக்கி ரூ.1.75 லட்சத்தை கட்டினால், அமுதாவை அப்போலோவில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்போம். அந்த அறுவை சிகிச்சைக்கு தனியாக ரூ.10 லட்சம் செலவாகும் என்றனர். ஒவ்வொரு முறையும் பல லட்சங்களை முன்வைத்தே அமுதவின் உயிர் விலை பேசப்பட்டது. நடேசன், மாறன் முடிவின்படி அப்போலோவில் சேர்த்து ரூ. 9 லட்சம் பணம் கட்டி அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சையின் முடிவில் அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. நடேசன் மற்றும் மாறன் தலைமையில் நடந்த முதல்அறுவை சிகிச்சையிலேயே அமுதாவின் வயிற்றுக்குள் காட்டன் துணியை வைத்து தைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை ஆபத்தான நிலைக்கும் அதுதான் காரணம் என்று தெரியவந்தது.

         மீண்டும் அமுதாவின் உயிரை காப்பாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. உயிர் காக்க மறு அறுவை சிகிச்சை செய்ய ரூ.70 லட்சம் செலவாகும் என்றார்கள். அமுதாவின் குடும்பம் நடேசனையும், மாறனையும் அணுகியது. நடந்த தவறுக்கு நாங்கள் செய்த அறுவை சிகிச்சைதான் காரணம் என்றது. அப்போது ஒரு நாடகத்தை நடேசன் அரங்கேற்றினார். ரூ.5 கோடிக்கு காசோலை கொடுத்தனர். நாங்கள் சொல்லும் தேதியில் காசோலையை வங்கியில் செலுத்துங்கள் என்று கட்டளையும் இட்டனர்.

         வலி தாங்காமல் துடித்த அமுதாவை உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்காக மீண்டும் மருத்துமனையில் சேர்த்தனர். அந்த மருத்துவமனைக்கு பணம் கட்ட வேண்டும் என்பதால், காசோலையை வங்கியில் போடலாமா என்று கேட்பதற்கு பாரதிராஜா மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினர். ஒரு மாதம் கழித்து போடுங்கள் என்று பதில் வந்தது. மீண்டும் அணுகியபோது இன்னும் ஒரு மாதம் கழித்து போடு என்றனர். காசோலை காலாவதி ஆகும் தேதி வரை காத்திருக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். காலம் கடந்தது. அமுதாவின் உயிர் ஊசலாடியது. இனியும் பொறுக்க முடியாது என்ற எண்ணத்தில், பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தபோது, 5 கோடி ரூபாய்க்கு ஆசையா..? உனக்கு 5 ஆயிரம் கூட தர முடியாது. இத்தனை மாசம் முடிஞ்சிடுச்சி.. இனி உன்னால் என்ன செய்ய முடியும்? என்று அடித்து விரட்டாத குறையாக குரைத்து விரட்டினர். 

           அமுதாவின் கணவர் கௌரி சங்கர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தையும், மார்க்சிஸ்ட் கட்சியையும் அணுகினார். முறைப்படி, சட்டப்படி மாதர் சங்கம் மனு கொடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி அமுதாவின் உயிரை காக்க வேண்டுகோள் விடுத்தது. மருத்துவமனை நிர்வாகம் தடாலடியாக மறுத்தது. அரசு நிர்வாகமோ, நடேசன், மாறன்களுக்கு ஆதரவாக இருந்தது. போராடுவதை தவிர வேறு வழில்லை என முடிவெடுத்த மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்கம், அமுதாவுக்கு நியாயம் கேட்டு 11.3.15 அன்று மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன. போராட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று காவல்துறைக்கு, அரசியலில் செல்வாக்கு உள்ள சில  கொள்கை வியாபாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அமுதாவின் உயிரை காக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்கள் உயிருக்கு விலைபேச பணக்கொள்ளைக்கு துணை நின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் வெகுஜன அமைப்புகளும் அமுதாவுக்கு துணையாக நின்றன.

              இறுதியாக  தடைகளை கடந்து போராட்டம் நடைபெற்றது. குற்றவாளிகளுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுத்தது. நியாயவாதிகளை கைது செய்து காவலில் வைத்தது. இறுதியாக அந்த துயரம் நிகழ்ந்தே விட்டது. இதயமற்றவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் அமுதா 19.5.15 அன்று இறந்து விட்டார். 10 மாத மரண பயணத்துக்கு அன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அமுதாவின் கணவர், குழந்தைகள், குடும்பத்தினர் கதறி துடித்தனர். கண்ணீர் விட்டனர். அமுதாவின் வீடு இருந்த தெருவே சோகத்தில் மூழ்கியது.

               வலுவான போராட்டம் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் அமுதா இறந்தார் என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவரது கணவர் கௌரி சங்கர் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆளுங்கட்சி ஆதரவு, அதிகார பலம், பண பலத்தை கொண்டு கௌரி சங்கரை மருத்துவமனை நிர்வாகம் மிரட்டியது. மார்க்சிஸ்ட் கட்சி வலுவான போராட்டம் நடத்தியது. பின்னர் நீதி மன்ற உத்தரவின்பேரில் டாக்டர் மாறன், டாக்டர் நடேசன், டாக்டர் புஷ்பராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் புகார் அனுப்பப்பட்டது. 
        
         தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர், டாகடர் மாறன் மீதான புகாரை விசாரித்து அவர் தவறான சிகிச்சை அளித்ததை உறுதி செய்தனர். இதையடுத்து டாகடர் மாறன் ஓராண்டு டாகடர் பணி செய்வதற்கு தடை விதித்து மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பதிவேட்டிலிருந்தும் அவர் பெயர் நீக்கப்பட்டது. இது மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர்ந்த போராட்டத்திற்கு கிடைத்த ஓரளவு வெற்றியாகும். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அமுதாவின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் துணை நிற்கும். இந்த போராட்டம் அமுதாவிற்கு மட்டுமல்ல.. பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும்தான். யாரும் வணிகமய மருத்துவத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும்தான்.


பெட்டி செய்தி

எல்லாமே மார்க்சிஸ்ட் கட்சிதான்

       அமுதாவைப் பற்றி பேச்செடுத்தாலே கணவர் கௌரிசங்கர் நொறுங்கிப் போய் விடுகிறார். பாக்கெட்டில் வைத்திருக்கும் அமுதாவின் போட்டோவை எடுத்துப் பார்த்து, அழத் தொடங்கி விடுகிறார். அமுதாவின் மரணத் துயரம் மனதைவிட்டு நீங்காத நிலையில் இருந்த அவர் நம்மிடம் கூறியதாவது:

         மருத்துவமனை நிர்வாகம் என்னை பல வழியிலும் மிரட்டியது. நான் எங்கெங்கோ போய் முட்டி மோதிப் பார்த்தேன். எனக்கு யாருமே உதவி செய்யல. இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க முன் வரல. மார்க்சிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், டிஒய்எப்ஐதான் எனக்காக, என் குடும்பத்திற்காக, என் குழந்தைகளுக்காக போராடினாங்க.. அவங்கல்லாம் யாருன்னே எனக்கு தெரியாது.

          பாரதிராஜா ஆஸ்பத்திரி முன்னாலே முற்றுகைப் போராட்டம் நடந்தப்ப, ஒருத்தங்க கைக்குழந்தையோட வந்து கலந்துகிட்டு அரெஸ்ட் ஆனாங்க.. அவங்க என் சொந்தக்காரங்க இல்ல. அவங்க யாருன்னே எனக்குத் தெரியாது.. (இதைச் சொல்லும்போது கவுரிசங்கரின் குரல் கம்முகிறது. விட்டால் அழுதுவிடுவார் போல் இருந்தது. அவர் குறிப்பிட்ட.. கைக்குழந்தையுடன் கைதான தோழரின் பெயர் ஐஸ்வர்யா. இவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஆயிரம்விளக்கு பொருளாளர். புஷ்பா நகர் சிபிஐ(எம்) பெண்கள் கிளை செயலாளர்.)

           போலீஸ்ல புகாரை வாங்க மறுத்தப்ப.. போஸ்ட் மார்ட்டம் பண்ண மறுத்தப்ப மட்டுமல்ல, எல்லா சூழ்நிலையிலும் மார்க்சிஸ்ட் கட்சிதான் எனக்கு பக்க பலமா இருந்துச்சு.. இத்தனைக்கும் நானோ, என் குடும்பத்த சேர்ந்த யாருமே மார்க்சிஸ்ட் கட்சியோட உறுப்பினரோ, ஆதரவாளரோ கூட இல்ல.. அவங்க எல்லாம் எனக்கு ஆறுதலா இருந்தாங்க.. என்னை சரியான முறையில் வழி நடத்துனாங்க..

            டாக்டர்கள் நடேசன், மாறன், புஷ்பராஜ் மேல நான் புகார் கொடுத்தேன். மருத்துவ கவுன்சில் டாக்டர் மாறன் மேலதான் நடவடிக்கை எடுத்திருக்குது. இது எனக்கு ஓரளவுக்கு திருப்திதான். இவங்க 3 பேர் மேலேயும் போலீஸ் சாதாரண பிரிவுல வழக்கு பதிஞ்சப்ப.. மருத்துவ கவுன்சில் நடவடிக்கைக்கு பிறகு கிரிமினல் வழக்கு பதிவு செய்வோம்னு சொன்னாங்க. இப்ப கேட்டா, வழக்கு கோர்ட்ல இருக்கு. கோர்ட் டைரக்ஷன்படிதான் நாங்க நடவடிக்கை எடுப்போம்னு சொல்றாங்க.. என் மனைவியை அநியாயமா கொன்னுட்டாங்க.. அவங்க மரணத்துக்கு கோர்ட் மூலம் எனக்கு நீதி கிடைக்கும்னு நம்பறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

தீக்கதிர் 1.3.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...