Pages

வெள்ளி, செப்டம்பர் 25, 2015

ஆறாது ஆறாது அழுதாலும் தீராது..


ஏ.பாக்கியம்
     
     தோழர் நாகம்மா.. அதிலும் மதுரை நாகம்மா என்றால் நிறைய பேருக்கு தெரியும். பாட்டாலே இவ்வையத்தை பாலித்திட நினைத்த பாரதியின் வரிசையில் வந்தவர்தான் இவரும். பாடல், ஆடல், நடிப்பு, களப்பணி மூலம் இந்த சமூகம் பாலித்திட பாடுபட்டவர். தோழர் என்.சங்கரய்யாவின் 94வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து சொல்வதற்காக கடந்த ஜூலை 15ம் தேதி சென்னை வந்திருந்த தோழர் நாகம்மா, தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அந்த மங்காத நினைவுகளில் இருந்து சில துளிகள்...
     என் பேரு நாகம்மா. நான் பொறந்தது.. வளந்தது.. வாழ்ந்தது எல்லாமே மதுரைதான். அப்பா மதுரை நகர் கமிட்டி உறுப்பினரா இருந்தாரு. அவர் என்னை கட்சி ஆபீசுக்கு கூட்டிட்டு போவாரு. அப்படித்தான் கட்சி எனக்கு அறிமுகமாச்சு. அங்க கே.பி.ஜானகியம்மா, அவரது கணவர் குருசாமி, என்.சங்கரய்யா, ப.ஜீவானந்தம், சீனிவாச ராவ், பி.ராமமூர்த்தி எல்லாம் வருவாங்க. அவங்களோடவும் எனக்கு பழக்கமாச்சு.

    அப்போ கம்யூனிஸ்ட் கட்சி இளம் தலைவரா இருந்த ஐ.வி.சுப்பையாவுக்கு முறைப்படியான சங்கீதமும் தெரியும். நாட்டியமும் தெரியும். அவர் கட்சி குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளான எனக்கு, சுப்புலட்சுமி போன்றவர்களுக்கு பாட்டுப் பாடவும், நடனமாடவும் பயிற்சி அளித்தார். நாங்கள் கட்சி சார்பாக நடைபெறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு பாட்டுப் பாடி நடனம் ஆடுவோம். பாரதியாரின், ‘‘ஆடுவோமே.. பள்ளுப் பாடுவோமே..’’ என்ற பாட்டு, மதுரை மணவாளன் எழுதிய, ‘‘புவிதனில் புகழ்வளர் இந்திய நாடே பிறிதொன்று எமக்கில்லை ஈடே’’, ‘‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே தோழா.. தோழா’’ போன்ற பாடல்களுக்கு எல்லாம் நடனம் ஆடுவோம். எங்க நடனத்தைப் பார்க்க பெரும் கூட்டம் கூடும். நடன நிகழ்ச்சி முடிந்ததும், என்.சங்கரய்யா, ஜானகியம்மா, செல்லையா போன்ற தலைவர்கள் பேசுவார்கள்.

       கே.பி.ஜானகியம்மா நாடக நடிகை என்பதால் அவரும் எனக்கு பாட்டு, நடனம் எல்லாம் சொல்லித் தந்தார்கள். நானும் அவருடன் சென்று கட்சி மேடைகளில் பாடுவேன். நடனம் ஆடுவேன். அப்புறம் மதுரை மணவாளன் குழுவுல சேர்ந்து எங்கே கட்சி பொதுக்கூட்டம் நடந்தாலும் நாங்கதான் பாடுவோம். அப்ப எனக்கு 14 வயசு இருக்கும். அப்போ எல்லாம் ரேடியோ, ஸ்பீக்கர் எல்லாம் கிடையாது. நாங்கதான் பாடுவோம். அப்படியே 1945 கட்சி உறுப்பினரானேன்.

     1940கள்ல அரிசிப் பஞ்சம் ஏற்பட்டது. மதுரையில் பெரிய பெரிய முதலாளிகள் எல்லாம் அரிசி மூட்டைகளை பதுக்கி வைச்சாங்க. சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவங்க மூலமா, அரிசி மூட்டைகளை பதுக்கின இடம் எங்களுக்கு தெரிஞ்சது. கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க அந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செஞ்சாங்க. இதுல நான், ஜானகியம்மா, மீனாட்சி, என்.சங்கரய்யாவோட மனைவி நவமணியும் கலந்துகிட்டோம். அப்பதான் ரேஷன் முறையை கொண்டு வர கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திச்சு. அதன் பலனாத்தான் வீடு வீடா கணக்கெடுத்து ரேஷன் முறையை கொண்டு வந்தாங்க. அப்பவே ரேஷன்ல அரிசி மட்டும் இல்லாம கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகைகளையும் போட வச்சோம். ரேஷன் முறையை கொண்டு வந்ததுல கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

    அப்போ ஏ.கே.கோபாலன் (ஏகேஜி) மதுரையில் தங்கி இருந்து கட்சி கட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார். ஹார்வி மில்லில் சுமார் 15 ஆயிரம் பேர் வேலை பார்த்தனர். அதில் 5 ஆயிரம் பேர் பெண்கள். அங்கு வேலை பார்க்கும் வாலிபர்களை ஏகேஜி சந்தித்து பேசுவார். அவர்களிடம் புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்வார். படிக்கத் தெரியாதவர்களை வைகை ஆற்றங்கரைக்கு அழைத்துப் போய் வகுப்பெடுப்பார். எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுப்பார். அப்படி ஏகேஜியால் கட்சிக்கு வந்தவர்தான் பாலு. 1946ல எனக்கும் பாலுவுக்கும் ஏகேஜி தலைமையில கல்யாணம் ஆச்சு. அப்ப பாலு கட்சி செயலாளரா இருந்தாரு.

     கல்யாணத்துக்கு பிறகும் மேடையில் பாடுதல், நடித்தல் என கட்சிப் பணிகளில் ஈடுபட்டேன். அப்போ வங்கப் பஞ்சம் பற்றி கே.பி.ஜானகி அம்மா ஒரு நாடகம் தயார் பண்ணாங்க. அதுல நானும் அவங்களும் நடிச்சோம். பல இடங்கள்ல அந்த நாடகத்தைப் போட்டு நிதி வசூல் பண்ணி வங்கப் பஞ்ச நிவாரண நிதிக்கு அனுப்பினோம். கல்யாணம் ஆன 40வது நாள்ல என் கணவர் பாலு, போராட்டத்துல ஈடுபட்டு ஜெயிலுக்கு போனார். ஒரு மாசம் கழிச்ச ரிலீஸ் பண்ணாங்க. திரும்பவும் கொஞ்ச நாள்ல மதுரை சதி வழக்குல அவரை கைது பண்ணாங்க. இந்த வழக்குல பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கேடிகே தங்கமணி, ப.மாணிக்கம்னு நிறைய பேரை கைது பண்ணாங்க. அப்ப ஜானகியம்மாள்தான் எனக்கு ஆதரவளிச்சாங்க. அவங்களோட கட்சிப் பணிகள்ல ஈடுபட்டேன்.

     பெண்களுக்கு என்று ஒரு சங்கம் வேண்டும் என ஜானகியம்மா நினைச்சாங்க.. அப்படி 1973ல உருவானதுதான் ஜனநாயக மாதர் சங்கம். அப்போ மதுரை நகர் தலைவராக சீதாலட்சுமி இருந்தாங்க. நான் பொருளாளராக இருந்தேன். அதன் பிறகு மாதர் சங்க செயலாளராக நான் தேர்வு செய்யப்பட்டேன். பரவலாக பெண்களை அணி திரட்டும் பணியில் நான் ஈடுபட்டேன். கிராமப்புறங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியம் தருவதில்லை. சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன் வைத்து கிராமப்புற பெண்களை திரட்டினேன். நகர்ப்புறங்களில் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடியது. வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக நகர்ப்புற பெண்களை திரட்டினேன். 

        இந்த பிரச்னையை நாடாளுமன்றம் வரையிலும் எதிரொலிக்க செய்தேன். மதுரையில் பல இடங்களிலும் மாதர் சங்க கிளைகளை கட்டினேன். அப்போ பிரேமானந்தா சாமியாருக்கு  எதிராக போராட்டம் நடத்தி அவர் மேலே வழக்கு போடறதுக்கு காரணமே மாதர் சங்கம்தான். மாதர் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டங்களால்தான் அவருக்கு தண்டனையும் கிடைச்சது. இப்ப எனக்கு 87 வயசாகுது. ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு மாதர் சங்கத்துக்கு ஆலோசனை சொல்லிகிட்டு, அதன் இயக்கங்கள்ல பங்கெடுத்துகிட்டு இருக்கேன் என்று அந்தப் பாட்டுக் குயில்.. தன் நினைவுகளில் மூழ்கிப் போனது.

      நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ‘‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே’’ பாடலை சில வரிகள் பாடியது. அதைக் கேட்ட எங்களுக்கு அப்போதும் கண்ணீர் வந்தது. நீங்கள் மறைந்ததை கேட்ட இப்போதும் கண்ணீர் வருகிறது. ஆறாது.. ஆறாது.. அழுதாலும் தீராது தாயே!

- ஏ.பாக்கியம்
6.9.2015 தீக்கதிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...