Pages

செவ்வாய், ஏப்ரல் 07, 2015

சென்னையின் மறுபக்கம்


ஏ.பாக்கியம்
          சென்னை மாநகரம் உருவாகி 375 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. 375 -ம் ஆண்டை சென்னை மாநகராட்சியும், அரசும், பல அமைப்புகளும் கொண்டாடினர். சிறப்பிதழ்களும் வெளியிடப்பட்டது. விரிந்த எல்லைகளையும், உயர்ந்த கட்டிடங்களையும், நீண்ட சாலைகளையும், வாழ்ந்து மறைந்த பிரபலங்களையும், தலைவர்களையும் பறைசாற்றி முடித்துக் கொண்டனர். மொத்தத்தில் மாற்றத்தையும், புறத்தோற்றத்தையும் வெளிப்படுத்தினர். இதற்கு பின்னால் அடித்தளமாக புதைந்து போன மக்களைப் பற்றி மறைத்து, வழக்கம் போல் வரலாற்றில் தனிநபர்களை மட்டும் முன்னிறுத்தினர். சென்னை முதலாளித்துவ அமைப்பு வளர்ச்சியின் அடையாளம். முதலாளித்துவ அமைப்பு வர்க்க மோதலின்றி இருக்க முடியாது. அதுவே, சென்னை நகர வரலாற்றின் மைய்ய அம்சமாக இருந்துள்ளது.

         சென்னையில் தற்போது உள்ள புனித ஜார்ஜ் கோட்டை பகுதியை 1639 –ல் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிராசிஸ்டே என்பவர் வியாபார நோக்கத்திற்காக வாங்கினார். முதலில் பொருட்களின் பாதுகாப்பு கிடங்காக கட்டப்பட்டது. பிறகு கோட்டையாக மாற்றப்பட்டது. அருகில் இருந்த கிராமங்கள் வாங்கப்பட்டு இணைக்கப்பட்டன. கோட்டை வடக்கே வெள்ளையர்களும், வியாபாரம் செய்யும் உள்ளூர் வணிகர்களும், அவர்களுக்கு உதவி செய்ய   “துபாஷி” என்னும் இருமொழி பேசும் மொழிபெயர்ப்பாளர்களும் குடியேறினர். வடக்கே மற்றவர்கள் இருந்தனர். தேவைக்கு ஏற்ப வெள்ளையர்கள் பங்களா கட்டிட “எழும்பூரை” வாங்கி குடியேறினர்.

    வீன சமூகத்தின் அடையாளங்களாக திகழ்கின்றவை முதலில் சென்னையில் உருவாகின. பிரிட்டனுக்கு வெளியே உருவான முதல் நகராட்சி சென்னை நகராட்சி (1688) ஆகும். லண்டன் மாநகர் உட்பட ஏனைய இந்திய பெருநகரங்களுக்கு டிராம்கள் ஓடுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் டிராம்கள் ஓடத்தொடங்கின. மேற்கத்திய பாணி அரசு பொது மருத்துவமனை முதன்முதலில் சென்னை கோட்டையில் 1664 –ல் அமைந்தது. 1856 ஜூலையில் சென்னை - ஆற்காடு இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது.
சென்னை நகரம் பிரிட்டிஷாரால் முற்றிலும் வணிகமயமாகவே உருவாக்கப்பட்டது. மாகாணத்தின் நிர்வாக தலைநகராக வளர்ச்சி பெற்று, சென்னை பல்கலைக்கழகம் 1887 -ல் அமைந்த உடன் கல்வி மைய்யமாக மாறியது. இரும்பு, நிலக்கரி இரண்டுமே மாகாணத்தில் இல்லை. எனவே, மலிவான மின்சாரம் இல்லாததால் கனரக தொழில்கள் வளரவில்லை. சென்னையில் இயங்கிய ஒரே பெரிய தொழில் பஞ்சாலையில் 11,000 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். அடுத்து 1928 –ல் உருவான விம்கோ (றுநளவநச ஐனேயை ஆயவநட ஊடிஅயீயலே) தீப்பெட்டி கம்பெனியில் 800 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.

      சவுத் இந்தியா இண்டஸ்டிரிஸ் நிறுவனம், சென்னையில் நிறுவிய இந்தியாவின் முதல் சிமெண்ட் ஆலையில் 220 பேர்களும், பெரம்பூரில் அமைக்கப்பட்ட மதராஸ் - தென் மராத்தா ரயில்வே கம்பெனியில் 1914 -ல் 5500 தொழிலாளர்களும், 1907 -ல் பேசின் பிரிட்ஜில் அமைக்கப்பட்ட அனல் மின் நிலையத்தில் 400 தொழிலாளர்களும் பணிபுரிந்தனர். 1850 -ல் தங்கசாலையில் அரசு அச்சகத்தில் 1500 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.

        எண்ணெய் சேமிப்பு அமைப்புகளில் 775 ஊழியர்களும், 60 அச்சகங்களில் 5000 ஊழியர்களும், சென்னை குரோம் தோல் பதனிடும் தொழிலில் 5000 தொழிலாளர்களும், சென்னையில் அப்போது இயங்கி வந்த 9000 தறிகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். திருவல்லிக்கேணி, வண்ணார பேட்டையில் பீடித்தொழிலில் (பெரும்பாலும் சிறுவர்கள்) 4000 பேர்கள் பணிபுரிந்தனர்.“முதலாளித்துவம் எங்கிருந்தாலும் அதன் இயல்பு சுரண்டல். மூலதனத்தின் மயிர்கால்கள் அனைத்தும் உழைப்பாளிகளின் இரத்தத்தை உறிஞ்சும் சக்தியுடையது” என்ற மார்க்சின் வார்த்தை சென்னை முதலாளித்துவம் விதிவிலக்கல்ல. இங்கும் பஞ்சாலைகளில் 18 மணிநேரம், அரிசி ஆலைகளில் 20 மணி நேரம், அச்சகத்தில் 22 மணி நேரம் என்று வாரத்தின் ஏழு நாட்களும் தொழிலாளர்கள் கசக்கி பிழியப்பட்டார்கள். சிறுவர்கள்கூட 10 முதல் 14 மணி நேரம் வேலை செய்தனர்.

       வேலை நேரம் மட்டுமல்ல வேலைத்தளமும் வெறுப்பூட்டுவதாக இருந்தது. காற்றோட்டமற்ற, குறுகலான இயந்திரங்களிடையே இடைவெளியற்ற இருட்டறையாக பல தொழற்சாலைகள் அமைந்திருந்தன. குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லை. மண்ணெண்ணெய் கிடங்கு தொழிலாளர்களுக்கு கண் நோயும், அச்சக தொழிலாளர்கள் ஈய நச்சூட்டத்தாலும் பாதிக்கப்பட்டனர். 1935 –ல் தொழிலாளர்கள் நிலை சிறைக்கைதிகளைவிட மோசமாக இருந்தது என்றால் 1918–ல் எப்படி இருந்திருக்கும் என்று வியப்படையச் செய்தது.

        வேலைதளம் மட்டுமல்ல, வாழ்விடம் அதைவிடக் கொடூரமாக இருந்தது. அப்போதைய நிலவரப்படி 1929 –ல் ராயல் கமிஷன் அறிக்கைபடி சென்னை மக்கள் தொகையில் 1,50,000 பேர்கள் 2500 ஓரறையில் வசித்தனர். ஒரு வீட்டில் மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் அடைபட்டுக் கிடந்தனர். மிகவும் ஏழ்மையான தொழிலாளர்கள் சேரிகளில் தென்னங்கீற்று, மண்ணெண்ணெய் டின் தகரம் வேய்ந்த கூரையில் வாழ்ந்தனர். இக்குடிசைகளில் ஒளியும் புகாது, காற்றும் புகாது. சன்னல் கிடையாது. சென்னை நகரில் மக்கள் தொகையில் 33 விடுக்காடு வசித்த இம்மக்களுக்கு மாநகராட்சி வழங்கிய தண்ணீர் தேவையில் 5 விழுக்காடு மட்டுமே. இந்த மோசமான “வசதி” கூட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கிடைக்காமல் தெருவோரங்களில் வாழ்ந்தனர்.

     னவே, வேலைத்தள சூழலும், வாழ்விட நெருக்கடியும், முதல் தலைமுறை தொழிலாளர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மரபுசார்ந்த கிராமப்புற பந்தங்களுக்கு பதிலாக முகம் தெரியாத உறவு, வேகமான பணி, கடுமையான கட்டுப்பாடு, சிறுதவறுகளுக்கு அபராதம் போன்றவை கசக்கச் செய்தது. எனவே, இதிலிருந்து விடுபட முடியாத சூழலில் மாற்றம் நோக்கி பயணித்தனர். பல இடங்களில் போராட்டங்களும் ரகளைகளும் நடந்தன.

     குறிப்பாக 1892 –ல் அச்சுத் தொழிலில் தனிப்பட்ட எதிர்ப்புகள் கடந்து கூட்டுக்கலகங்கள் நடந்தது. 1873 –ல் பக்கிங்காம் ஆலையில் வேலைநிறுத்தம், 1889 –ல் கர்னாட்டிக் ஆலையில் வேலை நிறுத்தம், 1892 –ல் அச்சகத்துறையில் வேலைநிறுத்தம், ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் என தொடர்ந்தன. ஆரம்பத்தில் தனிப்பட்ட எதிர்ப்புகள், பின்னர் கூட்டு ரகளையாக மாறி, பல இடங்களில் வேலை நிறுத்தங்களாக வெளிப்பட்டன.

    மேற்கண்ட் பின்னணியில்தான் பக்கிங்காம் கர்னாட்டிக் பஞ்சாலை தொழிலாளர்கள், டிமலர்ஸ் சாலையில் துணிக்கடை நடத்தி வந்த செல்வகண்பதி செட்டியார், அரிசி மண்டி நடத்தி வந்த இராமலு நாயுடு பங்குபெற்றிருந்த பஜனை மடத்திற்கு சென்றனர். தொழிலாளர்களின் நிலை கருதி இருவரும் அவர்களுக்கு உதவினர்.

         இதன் தொடர்ச்சியாக 1918 -ம் ஆண்டு “சென்னை தொழிலாளர் சங்கம்” அமைக்கப்பட்டது. இதுதான் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் தொழிற்சங்கமாகும். கொந்தளிப்பான சூழலில் ஆரவாரமின்றி சங்கம் அமைக்கப்பட்டது. இதன் பிறகு இச்சங்கத்தில் திரு.வி.க., கேசவபிள்ளை போன்றவர்களும் வழிநடத்தினர். இதனைத் தொடர்ந்து 1918 -ல் சென்னை டிராம்வே தொழிலாளர் சங்கம், 1919 -ல் அச்சக தொழிலாளர் சங்கம், 1920 -ல் இரும்பு மற்றும் பொதுத்தொழிலாளர் சங்கம், 1920 -ல் 3000 துப்புரவு தொழிலாளர் பணிபுரிந்த “ சென்னை நகர துப்புரவு தொழிலாளர் சங்கம்” என்று நாளொரு வண்ணம், பொழுதொரு சங்கம் உருவாகிக் கொண்டே இருந்தது.1920 மார்ச் 21 -ல் “சென்னை மாகாண தொழிலாளர் மாநாடு” நடைபெற்றது. பதினைந்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் இந்த மாநாட்டில் பங்கு பெற்றன. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியமானது.

       சென்னை மாகாண சட்டமன்ற தேர்தலில் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும். சட்டமன்றத்தில் தொழிற்சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். தொழிற்சங்கத்தில் நிர்வாகிகளாக வெளியார் கூடாது என்பதை எதிர்த்தும், விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம், பெண்கள் பணி நிலை ஆய்வு என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

       னிநபர் எதிர்ப்பு, ரகளை, போராட்டம், தொழிற்சங்க அமைப்பாக மாறிய சூழலில் மார்க்சிய கருத்துக்கள் உதித்தன. தோழர் சிங்காரவேலர், கம்யூனிச இயக்க தலைவர்களுடன் தொடர்பை, தொழிற்சங்கத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றனர். 1923 ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி மேதின கொடியினை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஏற்றினார். தொடர்ந்து சிங்காரவேலர் கம்யூனிச கருத்துக்களையும், தொழிலாளர் இயக்கங்களையும் வழிநடத்தினார். 1930ம் ஆண்டுகள் துவங்கிய பல தொழிற்சங்க போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் நடத்தினர். தொழிலாளர்களிடம் இடதுசாரி சிந்தனைகள், சோசலிச சிந்தனைகளை வளர்த்தனர். தொழிலாளர் வர்க்க விடிவு நாட்டு விடுதலையுடன் இணைந்துள்ளது என்பதையும் பிரச்சாரம் செய்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினர். விளைவுகள் விடுதலை போரில் வெளிப்பட்டது.

         விடுதலை காலத்திலும் அதற்கு பிறகும் கம்யூனிஸ்டுகள் தலைமையில் விவசாய எழுச்சி தெலுங்கானாவில் துவங்கி தேபாகா வரையில் நடைபெற்றது. தமிழகத்தில் தென்பரையில் துவங்கி வெண்மணி வரை நீண்டது. இக்காலத்தில் 1965 க்கு பிறகு சென்னையில் மீண்டும் போராட்ட கொதிகலன்கள் உருவாகின. பெஸ்ட் அன்கோ, சதர்ன் ஸ்ட்ச்சுரல், விம்கோ, பின்னி என போராட்டங்கள் 1965 துவங்கி 70 ஆண்டுகள் வரை நடைபெற்றுள்ளன. எனினும், சிம்சன், எம்.ஆர்.எப் போராட்டங்கள் சென்னை தொழிலாளர்களுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.

         சிம்சன் முதலாளி, தொழிற்சங்கம் நிர்வாக ஒப்புதலுடன் இருக்க வேண்டும் என்றும், வெளியார் தலைமை ஏற்க கூடாது என்றும், கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக அனுமதித்தால் தொழிற்சங்க உரிமை ரத்தாகும் என்றும் அறிவித்து அதை அமுலாக்கினார். இதற்காக அனைத்து முதலாளிகளுக்கும் ஒரு புத்தகம் எழுதிக் கொடுத்து அதையே அனைவரும் கடைபிடித்தனர். 1972 -ம் ஆண்டு சிம்சனில் துவங்கிய போராட்டம் இதை தவிடு பொடியாக்கியது.

       தோழர்கள் வி.பி.சிந்தன், பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தன்னெழுச்சி போராட்டங்கள் தோல்வியில் முடியும் என்பதை உணர்த்தி, அமைப்பை நம்பி, வர்க்க ஒற்றுமையை பேணுவித்து, அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து, தொழிலாளர்களை ஒற்றுமையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி சிம்சன் போராட்டத்தை நடத்தினர். “இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என்றவர்களை தொழிலாளர்கள் ஒற்றுமை என்ற  உழைக்கும் கரம் கொண்டு தூக்கி எறிந்தார்கள். சென்னை மாநகரின் ஒரு மூலையில் அமைந்திருந்த மூலக்கடையில் வி.பி.சிந்தன் கொட்டிய குருதி, சென்னை மாநகர முதலாளிகளை வெந்தணலாக சுற்றி வளைத்து, தொழிலாளர்களுக்கு வெளிச்சமாக வழிகாட்டியது.

        னவே, முதலாளிகள், தொழிலாளர்கள் தேர்வு செய்த தலைவர்களை அங்கீகரித்தனர். தொடர்ந்து டிவிஎஸ், வேலன், பால்பண்ணை, பஸ் தொழிலாளர்கள், பின்னி ஸ்டாண்டர் மோட்டார்ஸ் என வர்க்கப் போராட்டத்தின் வார்ப்படமாக சென்னை மாறியது. காலங்களும், கோரிக்கைகளும் மாறிக் கொண்டே இருக்கிறன.

       1996ம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயரில் இருந்து சென்னையாக மாறிய தமிழகத்தின் தலைநகர் இன்று உலக நகரமயமாக்கல் போட்டியில் 37வது இடத்தில் உள்ளது. 2011 செப்டம்பரில் இருந்து 176 சதுர கிலோ மீட்டர் என்பதில் இருந்து மாறி 426 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்திருக்கிறது. 2011 கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை 87 லட்சம்.  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 19 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைந்துள்ளது. பன்னாட்டு தொழிற்சாலைகள், சிறு, குறு மற்றும் பெரும் தொழிற்கூடங்கள் உருவாக்கம், சென்னை நகரை நோக்கி வேலை தேடி குடிபெயரும் மக்கள் எண்ணிக்கையை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. 

       ட்டோமொபைல், பார்மாசூட்டிகல்ஸ், தோல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை பணிகள் சென்னையில் பெருகி உள்ளன. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை பணிகளில் கிட்டதட்ட 4 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தமிழகத்தில் உள்ள 1,700 கம்பெனிகளில் பெரும்பகுதி சென்னையில் உள்ளன. தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதை சார்ந்த தொழில்களில் வேலை செய்வோருக்கு பணி பாதுகாப்பு இல்லை. 

      சென்னையில் மிகவும் லாபம் கொழிக்கும் தொழில், கல்வி வியாபாரம்தான். ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் ஆங்கில பள்ளியை தொடங்கி, வீட்டில் இருந்து சைக்கிளில் வந்த தனியார் பள்ளி தனவான்கள் இன்று விலை உயர்ந்த கார்களில் வலம் வருகின்றனர். ஆனால், இங்கு கழிப்பறை வசதியோ, நல்ல குடிநீரோ கிடைக்காது. கொஞ்சம் முதலீடு; கொள்ளை லாபம்.

        சென்னையில் 38 பெரிய மருத்துவமனைகள், 17 மருந்து விநியோக மைய்யங்கள், 4 நர்சிங் ஹோம்கள், சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவமனைகள் தலா 1 வீதம் உள்ளன. இவை தவிர வார்டு வாரியாக ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. இவை சென்னை மக்களின் தேவைக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் போதிய மருத்துவ வசதிகளோடு இல்லை. போதுமான டாக்டர்களும் இல்லை. சுகாதாரத்தை பேண வேண்டிய மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடு கொடி கட்டிப் பறக்கிறது. அரசு மருத்துவமனைகளின் அவலத்தால், அலட்சியத்தால் தனியார் மருத்துவமனைகள் கொழுத்துக் கொண்டிருக்கின்றன.

          சென்னையின் சாலை போக்குவரத்து 2780 கிலோ மீட்டர். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3531 பஸ்களும், 100 சிறிய பஸ்களும் இயக்கப்படுகின்றன. மக்கள் தொகைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கை உயர்ந்தபாடில்லை. பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதும் இல்லை. கட்டணத்தை மட்டும் உயர்த்தி விடுவார்கள். வாகனங்களின் பெருக்கம், போக்குவரத்து வசதிக்கு ஏற்ப சாலைகள் விரிவுபடுத்தப்படுவதும் இல்லை; பராமரிக்கப்படுவதும் இல்லை. ரோடு போட்டு விட்டு போனதும், யாராவது சென்று சிறுநீர் கழித்தாலே ரோடு சேதமடைந்து விடுகிறது. மழை பெய்தால் கேட்கவா வேண்டும். மழைக்காலத்தில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து தெருக்களில் ஓடும்.
   கர்புற ஏழைகளும், அமைப்புசாரா தொழிலாளர்களும் குவிந்துள்ள சென்னையில் அவர்களது வாழ்விடம் குடிசைபகுதிகளில்தான் அதிகம்,  சென்னை மக்கள் தொகையில் பெரும்பகுதி மக்கள் ஆவணங்களற்றவர்களாக வாழ்கிறார்கள். கோயில் நிலம், நீர்வழி கரையோரம், அரசு நிலம் என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். 1929-ம் ஆண்டு ராயல் கமிஷன் அறிக்கைபடி அன்றைக்கு குடிசையில் வாழ்ந்தவர்கள் சென்னை மக்கள் தொகையில்  33 விழுக்காடு. 2011 -ல் அரசு கணக்கின்படி குடிசையில் வாழ்வோர் 25.6 விழுக்காடு. உண்மையில் இது 40 விழுக்காடு வரையில் இருக்கிறது. அதே போன்று 1929 -ல் ஓரறையில் வாழ்ந்தவர்கள் 25 விழுக்காடு. இன்றும் 2011 -ல் ஓரறை குடியிருப்புகள் 3.5 லட்சம் குடும்பங்கள் அதாவது 25 விழுக்காடை தாண்டி இருக்கிறது. 375 ஆண்டுகளில் அடித்தள மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றம் என்பதை இந்த வாழ்விட விவரங்கள் தெரிவிக்கும். அன்று பஞ்சாலைகளிலும், அச்சகத்திலும், ரயில்வேயிலும் போராட்டங்கள் வெடித்தன. இன்றும் மோடி வித்தைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி பாரம்பரியம் மிக்க பஞ்சாலைகள் முதல் பாக்ஸ்கான் வரை போராட்ட அலைகள் தொடர்கின்றன.


          னவே, நகர்புறத்தில் பெரும்பகுதி மக்கள் குடியிருப்புக்காக, குடிநீருக்காக, மருத்துவத்திற்காக, கல்விக்காக, வேலைக்காக தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நகர்புற வளர்ச்சி சமமின்மையை வளர்த்திருக்கிறது. ஏற்றத்தாழ்வை அதிகரித்திருக்கிறது. பகட்டும் படோடமும், பள பளக்கும் கண்ணாடி மாளிகைக்கு பின்னால் பசியும், பற்றாக்குறையும், குறைந்த கூலிக்கு வேலை செய்யும் மக்கள் நிறைந்திருக்கிறார்கள். இதுதான் சென்னையின் மறுபக்கம் என்பதை வெளிபடுத்தவும் அவர்களின் வாழ்வை உயர்த்திடவும் உழைப்பாளி வர்க்கம் சபதமேற்கிறது.
-ஏ.பாக்கியம்
(16.02.2015 வெளியிடப்பட்ட தீக்கதிர் பொன்விழா சிறப்பு மலரில் வெளிவந்தது)
-
-

சனி, ஏப்ரல் 04, 2015

பாசிசம் அன்றும் - இன்றும் - 8 .


ஏ.பாக்கியம்-
கருப்பு - பழுப்பு - காக்கி - காவி :
       மேற்கண்ட நான்கும் வண்ணங்கள்தான். ஆனால் வரலாற்றில் இந்த நான்கு வண்ணங்களும், இனவெறி, வகுப்புவெறி என்ற ஒரே எண்ணத்தை பிரதிபலித்தது. முசோலினியின் கருஞ்சட்டை கலவரம், ஹிட்லரின் பழுப்புநிற சீருடையின் அடாவடிகள், காக்கி கால் சட்டைகளின் கலாச்சார அணிவகுப்பு, காவிக் கொடியின் வகுப்புக் கலவரங்கள் என்று ஒற்றைத் தளத்தில் இவை செயல்படுபவை.
       எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு பிறகு, 1964 -ல் விஷ்வ இந்து பரிஷத் ஆரம்பிக்கப்பட்டு, இந்து மதத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்றது. அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற 1951 -ல் சியாம பிரசாத் முகர்ஜி தலைமையில் பாரதீய ஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பிறகு பாரதிய ஜனதா கட்சியாக பரிணமித்தது. இதற்கு நான்கு பெரும் தலைவர்கள் தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி, எஸ்.எஸ்.பண்டாரி அனுப்பப்பட்டனர். நூற்றுக்கணக்கான கலாச்சார கல்வி அமைப்புகள் உருவாக்கினர். எனவே, பாசிச சக்திகளை போல் மக்களிடையே ஊடுருவ பல அமைப்புகளை பயன்படுத்தினர். குஜராத்தில் ஆரம்பித்து உத்தரபிரதேசம் வரை தொடர் சங்கிலியாக கலவரங்களை உருவாக்கி தங்களது அமைப்பையும், அமைப்பின் கருத்துக்களையும் வலுவாக்கிக் கொண்டனர். இதன் வெளிப்பாடாகவே இன்று இந்த அமைப்புகளிடம் இந்தியாவின் ஆட்சி சென்றிருக்கிறது.
       பாரதிய ஜனதா கட்சி 1977 - 80 ம் ஆண்டுகளில் ஜனதா கட்சி அரசிலும், 1998 -ம் ஆண்டு சில நாட்களும்,  1999- 2004 ம் ஆண்டுகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றது. தாராளவாத முதலாளித்தவாத ஜனநாயகத்தில் செயல்பட்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இதே சூழலில் தான் முசோலினியும், ஹிட்லரும் தாராளவாத முதலாளித்துவ ஜனநாயகத்தை பயன்படுத்தி கொண்டனர். தற்போது 2014 -ம் ஆண்டு உருவாகியிருக்கிற பாரதியஜனதா கட்சியின் தனிப்பெரும்பான்மையான அரசு மாறுபட்ட சூழலில் ஆட்சி அமைத்துள்ளது.
     முதன்முறையாக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை அதிகமாக கொண்ட ஓர் அரசாக இது அமைந்தள்ளது. இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கார்பரேட் முதலாளிகள் முழுமையான அதிகாரத்தை பெற முடியவில்லை. எனவே, மோடியை அவர்கள் ஒன்றாக சேர்ந்து தேர்வு செய்தனர். மோடியின் வகுப்புவாத வரலாற்றைவிட முடிவெடுக்கும் திறன், திட்டமிட்ட செயல், ஆட்சி நடத்தும் முறை ஆகியவற்றை முன்னிலைபடுத்தி அவருக்கு பின்னால் அணிதிரண்டனர். ஒரு கலவரத்தை திட்டமிட்ட முறையில் செய்வதையே கார்பரேட் கம்பெனிகள் ஆட்சி நடத்துவதற்கு திறமையானவர் என்று மதிப்பீடு செய்தனர்.  ஹிட்லரின் பின்னாலும், முசோலினியின் பின்னாலும் கார்பரேட் முதலாளிகளும், நிலப்பிரபுக்களும், சொத்துடைமை உள்ள உயர் நடுத்தர வர்க்கங்களும் அணிதிரண்டதை போன்று இங்கேயும் அப்படிப்பட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் பாரம்பரியத்தையும், நவினத்தையும் பயன்படுத்துவதுதான பாசிசம் என்று முசோலினி அறிவித்தான். இதற்கான அறிவுஜீவுகளின் வட்டத்தை உருவாக்கினார்கள். இதுவே இன்றைய இந்திய அரசு அமைப்பில் நடைபெற்றுக்கொண்டிக்கிறது.
     முசோலினி கார்பரேட் பொருhளதாரத்தையே பாசிச பொருளாதார கொள்கையாக அறிவித்தார். தொழிற்சங்கங்கள் சட்டவிரோதம், வேலைநிறுத்தம் கிரிமினல் குற்றம் என்று  அறிவித்தார்கள். இந்தியாவிலும் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு பெரும்பாலான தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். வேலை அளிப்பவர் இல்லை என்றால் வேலை செய்பவர் இல்லை.அதாவது முதலாளி இருந்தால்தான் தொழிலாளி என்று கூறி கார்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கான சட்டத்தை இயற்றுகிறார்கள்.
      ஒரே தலைவர், ஒரே பேரரசு, ஒரே மக்கள் என்ற நாசிகளின் கோஷம் ஜெர்மனி மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. இங்கேயும் பாராளுமன்றத்திற்கு மேலே பிரதமர் என்ற கருத்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. அவரது திறமைகள் மட்டும் அனைத்தையும் வழிநடத்தும் என்பதும், அவரது பேச்சுக்களை கட்டாயம் குழந்தைகள் வரை கேட்க வேண்டுமென்ற உத்தரவுகளும், திட்டகமிஷன் கலைப்பு போன்ற நடவடிக்கைகள் இதற்கு உதாரணமாகும். ஒரு தலைவர், அதன் கீழ் பாராளுமன்றம், அதன் கிழ் மக்கள் என்ற பாசிச படிநிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
      பாசிச சக்திகள் பயன்படுத்திய இத்தாலி தூய ஆரியர்களுக்கும், ஜெர்மனி வெள்ளை நிற ஆரியர்களுக்கும் சொந்தமானது மற்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் அல்லது நெருப்பு ஜூவாலைகளிலும் வதைமுகாம்களிலும் கொல்லப்பட்டார்கள். இங்கேயும் இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது என்ற பேச்சுக்களும், செயல்களும் அதிகார மையத்திலிருந்து புதிய வேகத்துடன் புறப்பட ஆரம்பித்துள்ளது.
    பெண்களை இந்தியாவில் தெய்வமாகவும், உயர்வாகவும் மதிப்பதாக கூறிக்கொள்ளும் சங் பரிவாரங்கள் அவர்களை நல்ல மனைவியாகவும், தாயாக மட்டும் இருக்க வேண்டும் என்று போதித்து வருகிறது. பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றி சங் பரிவார தலைவர்களும், சன்னியாசிகளும் வெளிபடுத்துகிற கருத்துக்கள் இதை நிருபிக்கிறது.
      இத்தாலியில் ஸ்லாவ் மற்றும் இதர மொழிகளில் பள்ளிக்கூடம் நடத்துவது மற்றும் பத்திரிகைகள் நடத்துவது  தடைசெய்யப்பட்டது. இங்கே சமஸ்கிருத வாரம் என்ற அறிவிப்புகளும் இந்தியை அதிகமாக பயன்படுத்துங்கள் என்ற அறிவுரைகளும் ஒழிக்கத் துவங்கிவிட்டது. இதர பகுதி மக்களின் கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழித்தது போல் அசிரியர்கள் தினம் உட்பட பல தினங்களின் பெயர்கள் மாற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
      முசோலினி முதலாம் ரோம சாம்ராஜியத்தின் பெருமைகளை பேசியதை போல் இங்கே புராணங்களின் ஆட்சிகளையும், சாணக்கிய தந்திரங்களையும் போற்றி புகழ்வதும், புஷ்பக விமானம்தான் விமான தொழில்நுட்பத்தின் தோற்றம் என்றும் இன்றை கணிதங்களுக்கெல்லாம் வேத கணிதம்தான் அடிப்படை என்றும் பழம்பெருமைகள் மீது மக்களை மயங்கச் செய்கின்றனர்.
       எனவே, 1930 களில் இருந்த பாசிச வடிவம் அதே முறையில் மீண்டும் வெளிப்படாது. ஆனால் வேறு வடிவத்தில் வேறு முகங்களுடன் வேறுபட்ட கோஷங்களுடன் தலைதூக்கும். இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட வகுப்புவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இதுவரையிலான ஆளும் வர்க்கம் கடைபிடித்த கொள்கைகளே அடிப்படையான காரணங்களாகும். எனவே, அதிருப்தி அடைந்த மக்களை தனது வகுப்புவாத கொள்கைகள் மூலம் முதலாளி வர்க்கம் பிரித்தாளுகிறது. உடனடியாக உழைப்பாளி மக்களிடமிருந்து ஆளும் பெரும்முதலாளிகள் தூக்கி எறியப்படுவார்கள் என்ற சூழல் இல்லாவிட்டாலும் அரசின் கொள்கைகள் அப்படிப்பட்ட சூழலை உருவாக்கும். 

        காரணம் இந்தியாவில் பெரும்முதலாளிகளின் எண்ணிக்கையும், சொத்துக்களும் உயர்ந்து கொண்டே போகிறது. பெரும்பகுதி மக்கள் வறுமை, சம்பளமின்மை, வேலையின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடைவெளி அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதன் மூலம் வெடிக்கும் மோதலை அடக்குவதற்காக அல்லது வெகுஜன எழுச்சி ஏற்படாமல் இருப்பதற்காக பாசிசம் புதிய முறையில் கட்டமைக்கப்படுகிறது.
     எனவே, உழைப்பாளி மக்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்க ஒன்றுபடுவது மட்டுமல்ல அரசியல் விழிப்புணர்வுடன், மாற்று கொள்கையுடன், அமைப்பு ரீதியாக அணிவகுப்பது மட்டுமே எதிர்கால இந்தியா உழைப்பாளிகளுக்கான இந்தியாவாக இருக்கும்.
                                             ------------------------ ï.----------------------------

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...