Pages

சனி, ஏப்ரல் 04, 2015

பாசிசம் அன்றும் - இன்றும் - 8 .


ஏ.பாக்கியம்-
கருப்பு - பழுப்பு - காக்கி - காவி :
       மேற்கண்ட நான்கும் வண்ணங்கள்தான். ஆனால் வரலாற்றில் இந்த நான்கு வண்ணங்களும், இனவெறி, வகுப்புவெறி என்ற ஒரே எண்ணத்தை பிரதிபலித்தது. முசோலினியின் கருஞ்சட்டை கலவரம், ஹிட்லரின் பழுப்புநிற சீருடையின் அடாவடிகள், காக்கி கால் சட்டைகளின் கலாச்சார அணிவகுப்பு, காவிக் கொடியின் வகுப்புக் கலவரங்கள் என்று ஒற்றைத் தளத்தில் இவை செயல்படுபவை.
       எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு பிறகு, 1964 -ல் விஷ்வ இந்து பரிஷத் ஆரம்பிக்கப்பட்டு, இந்து மதத்தை ஒன்றுபடுத்த வேண்டும் என்றது. அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற 1951 -ல் சியாம பிரசாத் முகர்ஜி தலைமையில் பாரதீய ஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்டு பிறகு பாரதிய ஜனதா கட்சியாக பரிணமித்தது. இதற்கு நான்கு பெரும் தலைவர்கள் தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி, எஸ்.எஸ்.பண்டாரி அனுப்பப்பட்டனர். நூற்றுக்கணக்கான கலாச்சார கல்வி அமைப்புகள் உருவாக்கினர். எனவே, பாசிச சக்திகளை போல் மக்களிடையே ஊடுருவ பல அமைப்புகளை பயன்படுத்தினர். குஜராத்தில் ஆரம்பித்து உத்தரபிரதேசம் வரை தொடர் சங்கிலியாக கலவரங்களை உருவாக்கி தங்களது அமைப்பையும், அமைப்பின் கருத்துக்களையும் வலுவாக்கிக் கொண்டனர். இதன் வெளிப்பாடாகவே இன்று இந்த அமைப்புகளிடம் இந்தியாவின் ஆட்சி சென்றிருக்கிறது.
       பாரதிய ஜனதா கட்சி 1977 - 80 ம் ஆண்டுகளில் ஜனதா கட்சி அரசிலும், 1998 -ம் ஆண்டு சில நாட்களும்,  1999- 2004 ம் ஆண்டுகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற்றது. தாராளவாத முதலாளித்தவாத ஜனநாயகத்தில் செயல்பட்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இதே சூழலில் தான் முசோலினியும், ஹிட்லரும் தாராளவாத முதலாளித்துவ ஜனநாயகத்தை பயன்படுத்தி கொண்டனர். தற்போது 2014 -ம் ஆண்டு உருவாகியிருக்கிற பாரதியஜனதா கட்சியின் தனிப்பெரும்பான்மையான அரசு மாறுபட்ட சூழலில் ஆட்சி அமைத்துள்ளது.
     முதன்முறையாக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை அதிகமாக கொண்ட ஓர் அரசாக இது அமைந்தள்ளது. இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கார்பரேட் முதலாளிகள் முழுமையான அதிகாரத்தை பெற முடியவில்லை. எனவே, மோடியை அவர்கள் ஒன்றாக சேர்ந்து தேர்வு செய்தனர். மோடியின் வகுப்புவாத வரலாற்றைவிட முடிவெடுக்கும் திறன், திட்டமிட்ட செயல், ஆட்சி நடத்தும் முறை ஆகியவற்றை முன்னிலைபடுத்தி அவருக்கு பின்னால் அணிதிரண்டனர். ஒரு கலவரத்தை திட்டமிட்ட முறையில் செய்வதையே கார்பரேட் கம்பெனிகள் ஆட்சி நடத்துவதற்கு திறமையானவர் என்று மதிப்பீடு செய்தனர்.  ஹிட்லரின் பின்னாலும், முசோலினியின் பின்னாலும் கார்பரேட் முதலாளிகளும், நிலப்பிரபுக்களும், சொத்துடைமை உள்ள உயர் நடுத்தர வர்க்கங்களும் அணிதிரண்டதை போன்று இங்கேயும் அப்படிப்பட்ட நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் பாரம்பரியத்தையும், நவினத்தையும் பயன்படுத்துவதுதான பாசிசம் என்று முசோலினி அறிவித்தான். இதற்கான அறிவுஜீவுகளின் வட்டத்தை உருவாக்கினார்கள். இதுவே இன்றைய இந்திய அரசு அமைப்பில் நடைபெற்றுக்கொண்டிக்கிறது.
     முசோலினி கார்பரேட் பொருhளதாரத்தையே பாசிச பொருளாதார கொள்கையாக அறிவித்தார். தொழிற்சங்கங்கள் சட்டவிரோதம், வேலைநிறுத்தம் கிரிமினல் குற்றம் என்று  அறிவித்தார்கள். இந்தியாவிலும் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு பெரும்பாலான தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பற்ற சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். வேலை அளிப்பவர் இல்லை என்றால் வேலை செய்பவர் இல்லை.அதாவது முதலாளி இருந்தால்தான் தொழிலாளி என்று கூறி கார்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கான சட்டத்தை இயற்றுகிறார்கள்.
      ஒரே தலைவர், ஒரே பேரரசு, ஒரே மக்கள் என்ற நாசிகளின் கோஷம் ஜெர்மனி மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. இங்கேயும் பாராளுமன்றத்திற்கு மேலே பிரதமர் என்ற கருத்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. அவரது திறமைகள் மட்டும் அனைத்தையும் வழிநடத்தும் என்பதும், அவரது பேச்சுக்களை கட்டாயம் குழந்தைகள் வரை கேட்க வேண்டுமென்ற உத்தரவுகளும், திட்டகமிஷன் கலைப்பு போன்ற நடவடிக்கைகள் இதற்கு உதாரணமாகும். ஒரு தலைவர், அதன் கீழ் பாராளுமன்றம், அதன் கிழ் மக்கள் என்ற பாசிச படிநிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
      பாசிச சக்திகள் பயன்படுத்திய இத்தாலி தூய ஆரியர்களுக்கும், ஜெர்மனி வெள்ளை நிற ஆரியர்களுக்கும் சொந்தமானது மற்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் அல்லது நெருப்பு ஜூவாலைகளிலும் வதைமுகாம்களிலும் கொல்லப்பட்டார்கள். இங்கேயும் இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது என்ற பேச்சுக்களும், செயல்களும் அதிகார மையத்திலிருந்து புதிய வேகத்துடன் புறப்பட ஆரம்பித்துள்ளது.
    பெண்களை இந்தியாவில் தெய்வமாகவும், உயர்வாகவும் மதிப்பதாக கூறிக்கொள்ளும் சங் பரிவாரங்கள் அவர்களை நல்ல மனைவியாகவும், தாயாக மட்டும் இருக்க வேண்டும் என்று போதித்து வருகிறது. பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் பற்றி சங் பரிவார தலைவர்களும், சன்னியாசிகளும் வெளிபடுத்துகிற கருத்துக்கள் இதை நிருபிக்கிறது.
      இத்தாலியில் ஸ்லாவ் மற்றும் இதர மொழிகளில் பள்ளிக்கூடம் நடத்துவது மற்றும் பத்திரிகைகள் நடத்துவது  தடைசெய்யப்பட்டது. இங்கே சமஸ்கிருத வாரம் என்ற அறிவிப்புகளும் இந்தியை அதிகமாக பயன்படுத்துங்கள் என்ற அறிவுரைகளும் ஒழிக்கத் துவங்கிவிட்டது. இதர பகுதி மக்களின் கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழித்தது போல் அசிரியர்கள் தினம் உட்பட பல தினங்களின் பெயர்கள் மாற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
      முசோலினி முதலாம் ரோம சாம்ராஜியத்தின் பெருமைகளை பேசியதை போல் இங்கே புராணங்களின் ஆட்சிகளையும், சாணக்கிய தந்திரங்களையும் போற்றி புகழ்வதும், புஷ்பக விமானம்தான் விமான தொழில்நுட்பத்தின் தோற்றம் என்றும் இன்றை கணிதங்களுக்கெல்லாம் வேத கணிதம்தான் அடிப்படை என்றும் பழம்பெருமைகள் மீது மக்களை மயங்கச் செய்கின்றனர்.
       எனவே, 1930 களில் இருந்த பாசிச வடிவம் அதே முறையில் மீண்டும் வெளிப்படாது. ஆனால் வேறு வடிவத்தில் வேறு முகங்களுடன் வேறுபட்ட கோஷங்களுடன் தலைதூக்கும். இந்தியாவில் சுதந்திர போராட்ட காலத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட வகுப்புவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு இதுவரையிலான ஆளும் வர்க்கம் கடைபிடித்த கொள்கைகளே அடிப்படையான காரணங்களாகும். எனவே, அதிருப்தி அடைந்த மக்களை தனது வகுப்புவாத கொள்கைகள் மூலம் முதலாளி வர்க்கம் பிரித்தாளுகிறது. உடனடியாக உழைப்பாளி மக்களிடமிருந்து ஆளும் பெரும்முதலாளிகள் தூக்கி எறியப்படுவார்கள் என்ற சூழல் இல்லாவிட்டாலும் அரசின் கொள்கைகள் அப்படிப்பட்ட சூழலை உருவாக்கும். 

        காரணம் இந்தியாவில் பெரும்முதலாளிகளின் எண்ணிக்கையும், சொத்துக்களும் உயர்ந்து கொண்டே போகிறது. பெரும்பகுதி மக்கள் வறுமை, சம்பளமின்மை, வேலையின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடைவெளி அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதன் மூலம் வெடிக்கும் மோதலை அடக்குவதற்காக அல்லது வெகுஜன எழுச்சி ஏற்படாமல் இருப்பதற்காக பாசிசம் புதிய முறையில் கட்டமைக்கப்படுகிறது.
     எனவே, உழைப்பாளி மக்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்க ஒன்றுபடுவது மட்டுமல்ல அரசியல் விழிப்புணர்வுடன், மாற்று கொள்கையுடன், அமைப்பு ரீதியாக அணிவகுப்பது மட்டுமே எதிர்கால இந்தியா உழைப்பாளிகளுக்கான இந்தியாவாக இருக்கும்.
                                             ------------------------ ï.----------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...